இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையான பெல் நிறுவனம் ஹைதராபாத்தில் நடத்திய தேர்வில் 60 சதவீதம் தமிழக மாணவர்கள் பெற்றதாக கருதி தெலங்கானா
சென்னை, பிப்.18: பாரத மிகு மின் நிறுவனத்தின் (பெல்) ஆள்சேர்ப்புத் தேர்வில் பங்கேற்க சென்ற தமிழக இளைஞர்கள் 20 பேர் ஹைதராபாதில், தெலங்கானா ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டு சென்னை திரும்பிய இளைஞர்கள் மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் இது குறித்து வியாழக்கிழமை புகார் அளித்தனர்.இது குறித்த விவரம்: ஹைதராபாதில் உள்ள பெல் நிறுவனத்தில் தொழிலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. ஐ.டி.ஐ. பயிற்சி முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் 15-ம் தேதி வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததாம். இதனால் எழுத்துத் தேர்வில் பங்கேற்ற தமிழக இளைஞர்கள் ஹைதராபாதில் உள்ள பெல் நிறுவனக் குடியிருப்பில் தமிழக ஊழியர் ஒருவரின் வீட்டில் தங்கினர். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி 15-ம் தேதி அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, தேர்வு முடிவை தெரிந்துக் கொண்டு தமிழகம் திரும்பலாம் என நினைத்து தமிழக இளைஞர்கள் அங்கேயே தங்கினராம். கடந்த 17-ம் தேதி இவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு பெல் நிறுவன தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களில், தெலங்கானா கோரிக்கையை தீவிரமாக ஆதரிப்பவர்கள் என்று கூறப்படும் சுமார் 80 பேர் வந்தனராம். தெலங்கானா ஆதரவாளர்கள் தமிழக இளைஞர்களை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினராம். பின்னர் அனைவரையும் விரட்டி அடித்தனராம். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய தமிழக இளைஞர்கள் ரயில் மூலம் வியாழக்கிழமை காலையில் சென்னை வந்து சேர்ந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் அனைவரும் மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஹைதராபாதில் நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து புகார் அளித்தனர். ""எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் நேர்முகத் தேர்வுக்கு மீண்டும் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்'' என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தயாநிதி தெரிவித்தார். கமிஷனர் பதில்: ""பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரியபடி அவர்கள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.
கருத்துக்கள்
ஒருமைப்பாடு பேசுபவர்களும் தன்னாட்சி குறித்து அவ்வப் பொழுது நினைவுபடுத்திக் கொள்பவர்களும் சந்தித்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 3:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
2/19/2010 3:49:00 AM