செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கருத்துத்திணிப்பு வன்முறையாளர்கள் – யார்….? மாணவர்களா ..? வி.சி. தலைவர் திருமாவா? வன்னி அரசுக்கு இராவணன் பதில்

பதிந்தவர்_குயிலி on February 15, 2010
பிரிவு: கட்டுரைகள், பிரதானச்செய்திகள்

தமிழகத்தில் தன்னுயிர் ஈந்து எழுச்சியூட்டிய எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகளும் அதன் தலைவர் தொல்.திருமாவும் செய்த அக்கிரமங்களை நான் எழுதிய கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பாக நீண்ட கட்டுரையை வரைந்துள்ளார். அது விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் பிரச்சார (பரப்புரை) கட்டுரையாக அமைந்துள்ளது.

அதில் அவர் திராவிட அரசியலுக்கு மாற்றான அமைப்பாக வளர்த்து வருவதாக பெருமைப்பட்டுள்ளார். ஈழப்பிரச்சினையில் வி.சி. மட்டுமே 25 ஆண்டுகளாக போராடுகிறது என்றும் கொத்து கொத்தாய் சிறுத்தைகளைப்போல் யார் சிறை சென்றார்கள் என தம்பட்டம் அடித்துள்ளார்.
இறுதியாக எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்னவென்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் “மாணவர்கள் பெயரில் ரவுடித்தனம் செய்த சில பேர்வழிகள்.” என குறிப்பிடுகின்றார்.

மேலும் “தலைவர் பழ.நெடுமாறன் , வைகோ, வெள்ளையன், நல்லக்கண்ணு ஆகியோரோடு எங்கள் தலைவர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் காத்திருக்கின்றார். அப்போது “ யாரோ தகராறு செய்கிறார்கள் முத்துக்குமாரை சுமந்து வரும் வண்டி நடு ரோட்டிலேயே நிற்கிறது” என்று சொன்ன போது அண்ணன் வைகோ அவர்களும் எங்கள் தலைவரும் ஒரு சேர “இது தவறானது உடனே போய் வாகனத்தை இழுத்து வாருங்கள் என சொன்ன போது நானும்(வன்னி அரசு) சிலரும் அங்கே போய் சொல்லிப்பார்த்தோம் யாரும் எழுவதாக தெரியவில்லை, இயக்குநர் சேரன், ராம் ஆகியோர் கெஞ்சிப்பார்த்தார்கள் மறியலில் ஈடுபட்டோர் எழவில்லை, கல்லூரிகளை திறந்தால்தான் நாங்கள் எழுவோம் என்றார்கள். அப்பொழுது நான் இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து அரசியல் பண்ணுவது சரியா..? நாம் எல்லோரும் அமைதியாக முத்துக்குமரனை எரியூட்டிய பின் கோபாலபுரத்தையோ அறிவாலயத்தையோ முற்றுகையிடுவோம் அதற்கு நீங்கள் தயாரா..? என கேட்டேன். ஆனால் யாரும் அதற்கு பதில் சொல்லாமல் “ கல்லூரிகளை உடனே திறந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம் என்று மீண்டும் மீண்டும் கத்தி அடம்பிடித்தனர். அரசு எந்திரத்தின் யதார்த்தத்தை கூடப்புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் பேசி என்ன பயன்..? ஆகவே வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன்” மூலக்கொத்தளத்தில் காத்திருந்த தலைவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின் முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்பட்டது……………” என தொடர்கிறார்.

நாம் கேட்கும் கேள்விகள் இதுதான் “ திருமாவிடமும் வைக்கோவிடமும் யாரோ தகராறு செய்கிறார்கள் முத்துக்குமரனை சுமந்து வரும் வண்டி நடுரோட்டில் நிற்கிறது என சொன்னபோது இருவரும் ஒரு சேர இது தவறானது உடனே போய் வாகனத்தினை இழுத்து வாருங்கள் என்று சொன்னதாக குறிப்பிடும் வன்னியரசு அவர்களே உங்கள் தலைவருக்கு தமிழக அரசு கல்லூரி விடுதிகளை காலவரையற்று மூடியதால்தான் மாணவர்கள் போராடுகிறார்கள் என்ற செய்தி தெரியுமா..? தெரியாதா..?

தெரிந்திருந்தால் மாணவர்கள் பக்கம் நின்று போராடாமல் போனது ஏன்..? எழுச்சித்தமிழன் முத்துக்குமார் உடலை எரியூட்டியபின் போராடலாம் என்று மாணவர்களிடம் கூறினேன் என்றீர்களே..

எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் மரண சாசனத்தினை படித்துப்பார்த்தீர்களா நீங்கள்……?

“என் உடலை காவல் துறையினர் அடக்கம் செய்துவிட முயலும் விடாதீர்கள் என் பிணத்தைக் கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தை கூர்மைப்படுத்துங்கள்” என்று எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் இறுதி சாசனத்தில் கூறியுள்ளார்.

இதனைத்தானே மாணவர்களும் பின்பற்றினார்கள் , கல்லூரி விடுதியை திறக்கவும் மாணவர்கள் போராட்டம் தொடரவும் எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் சொன்ன வழியில் அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தினார்கள், இதற்கு பொதுமக்களும் ஆதரவு தந்தார்கள்.
அந்தப் போராட்டத்தை உடைத்து அரசு இயந்திரத்துக்கு நன்றி விசுவாசம் காட்டியதைத்தான் துரோகம் என்கிறோம்.

காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும் விடாதீர்கள் என்றார் எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் நீங்களோ காவல் துறைக்கு பதிலாக தமிழர் விரோத காங்கிரஸ் அரசின் கூலிப்படை போல் எழுச்சித்தமிழனின் உடலை களவாடி தமிழர் எழுச்சியை சீர் குலைத்துவிட்டீர்கள்.

இன்னும் விளக்கமாக கேட்கிறோம் எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் இறக்கும் தருவாயில் அண்ணன் பிரபாகனிடம் உடனடியாக தகவல் கொடுங்கள், திருமாவளவனுக்கு தகவல் கொடுங்கள் என்று உங்கள் தலைவரை குறிப்பிட்டார் என பெருமைப்படும் தோழர் வன்னி அரசுவே அந்த எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் எழுச்சியை உங்கள் தலைவர் நீர்த்துப்போகவைக்க முன் வரிசையில் நிற்கலாமா……………….?

எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் தனது உடலை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்துங்கள் என்றுதானே சொன்னார்.

திருமாவிடம் ஒப்படையுங்கள் என்று சொல்லவில்லையே…… அதை மீறி மாணவர்களிடம் இருந்து விசி யினர் ரவுடித்தனம் செய்து முத்துக்குமரன் உடலை கைப்பற்றினீர்கள்…? இது தமிழர் எழுச்சிக்கு செய்த துரோகம் இல்லையா…? ஊர் நாட்டாண்மை செய்ய திருமாவுக்கு என்ன தகுதியுள்ளது. வைகோவும் சேர்ந்துதான் சொன்னார் என்றால் மதிமுக காரர்கள் மாணவர்களை அடிக்க வரவில்லையே..

வன்னி அரசு அவர்களே வாக்குமூலமாக தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் “அரசு எந்திரத்தின் யதார்த்தத்தினை கூடப்புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் பேசி என்ன பயன்..? ஆகவே வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன்” என்கிறார்.

மாணவர்களிடமிருந்து எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் உடலை கைப்பற்ற சொன்ன சக்தி யார்…….?

எதற்காக வைகோ, ராமராஸ், நெடுமாறன், வெள்ளையன் போன்றவர்கள் அமைதியாக இருந்த பொழுது தனது அடியாட்கள் மூலம் எழுச்சித்தமிழன் முத்துக்குமார் உடலை கைப்பற்ற திருமா துடித்தார்……….?

இப்படிப்பட்ட தமிழ் இனத்துரோகத்தினை சுட்டிக்காட்டினால் எங்கள் திருமா ஊருக்கு வெளியே இருந்த சேரி மக்களை பொதுத்தளத்திற்கு கொண்டுவந்ததோடு பொதுத்தளத்தில் அதிகாரப்பங்கீட்டு யுத்தம் நடத்திவருபவர். என குற்றம் சொல்வதா..? என திசைமாற்றுகின்றார் வன்னி அரசு.

எங்கள் குற்றச்சாட்டின் மற்றொன்று சேரி மக்களை விடுவிக்க திருமா செய்தது என்ன…….? எல்லா பகுதிகளிலும் சேரி மக்கள் விடுதலை பெற்றுவிட்டனரா……..? இன்னும் மலத்தினை வயில் திணிப்பதும், ஊருக்குள் சுவர் கட்டுவதும், பாலியல் வன்முறைகள் என சேரிமக்கள் படும்பாட்டை ஒய்யார வாழ்வை எட்டிய திருமா எப்படி அறிவார்..?

இது ஒரு புறம் இருக்கட்டும்……..

ஈழமக்களையும் தமிழக மீனவர்களையும் கொன்றுக்குவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழகம் கொதித்த பொழுது காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டு நாங்கள் காங்கிரசை நாங்கள் புல் பூண்டு இல்லாமல் ஆக்குவோம் என அன்றே பேசினோம் என்று கட்டுரை வரைவது நகைப்பாக உள்ளது.

செயலலிதாவை ஒரு போதும் ஈழ விடுதலைக்கு ஆதரவானவர்கள் என்று மாணவர்கள் ஒரு போதும் கருதியதில்லை ஆனால் காங்கிரசை எதிர்க்கும் போது பலன் அடைபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நாம் காங்கிரசை ஒழிப்பதில் உள்ள நோக்கத்தினை புரிந்துகொள்ளாமல் அவர்கள் பயனடைகிறார்களே என ஓலமிடுவது அரசியல் வியாபாரமில்லையா……..?

எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் ஈழமக்களுக்கு குறிப்பிட்டதைப்போல “தாய்த்தமிழகம் உணர்வுப்பூர்வமாக உங்கள் பக்கம்தாம் நிற்கிறது, வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே” என்றார். விசி கட்சித்தலைவர் திருமாவளவனையும் சேர்த்துத்தான் எழுசித்தமிழன் முத்துக்குமரன் சொல்லியுள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் ரவுடித்தனம் செய்துவிட்டு மாணவர்கள் போர்வையில் ரவுடிகள் என குறிப்பிடுவதா…? மாணவர்கள் போராட்டத்தினை மற்றவர்கள் ஆதரிக்க கூடாதா..?

“இன்றைக்கு திராவிட அரசியலுக்கு மாற்றாய் வளர்த்தெடுக்கபடுகிற அரசியல் தமிழ் தேசிய அரசியல். அந்த அரசியலை முழு வீச்சாய்ப் பரப்பிவருபவர் திருமாவளவன் தான்” என குறிப்பிடுகிறார் வன்னி அரசு.

இது வியப்பாகவும் நகைப்பாகவும் உள்ளது. திராவிட அரசியலுக்கு எதிரான தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பவர் திருமாவா..? சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் நக்கிப்பிழைக்கும் இவர் திராவிட கட்சிகளுக்கு மாற்றா….?

இந்திய தேசிய அரசியலில் கரைந்து போன மண்திட்டு (விடுதலைச்சிறுத்தை தலைவர் திருமா) தமிழ் தேசியத்தை வளர்க்க இயலுமா?

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம் பூனை அதே போல சேரி மக்களையும் தமிழக மக்களையும் தமிழீழ மக்களையும் ஏமாற்றிவிட்டோம் என்று திருமா கனவு காணவேண்டாம்.

தமிழ் இனத் துரோகத்திற்கு மாணவர்படை முடிவு கட்டியே தீரும், திருமா அன்று எங்கிருப்பார்…? இப்பொழுது போல் தில்லியில்தான் இருப்பார்………..

தொடரும்……….

[ மீனகம் தளத்தினருக்கு , கடந்த ஓராண்டாக எங்கள் நெஞ்சில் அடைத்திருந்த உண்மைகளை உங்கள் தளத்தின் வாயிலாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது முதல் கட்டுரையை வெளியிட்ட உங்கள் தளத்துக்கு பல நெருக்கடிகள் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தமிழக மாணவர்களின் மனதில் இருப்பதை இம்மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். வாய்ப்பிருந்தால் இக்கட்டுரையை வெளியிடுங்கள். வெளியிடவில்லையென்றாலும் கவலையில்லை.

நன்றி

இராவணன் ]

[வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே,

ஆரோக்கியமான விவாதங்களுக்கும், ஆதாரபூர்வமான செய்திகளுக்கும் எமது மீனகம் தளத்தில் என்றும் இடமுண்டு.

--- மீனகம் ]

தொடர்புடையவை:

துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணனின் கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பு

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்

(Visited 292 times, 292 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக