வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

சரிவின் விளிம்பில் சாகசக் கலை!



சிரிப்பும், வியப்பும் ஏற்படுத்தும் பொழுதுபோக்கு அம்சமாகத் திகழ்பவை சர்க்கஸ். மனிதர்களை மாமிச உணவாகப் பார்க்கும் சிங்கம், உருவத்தில் பெரிதான யானை, பறக்கும் கிளிகள்,குதிரைகள் என அத்தனை விலங்குகளையும் நண்பர்களாக்கும் ம(த)ந்திரம் தெரிந்தவர்கள் சர்க்கஸ் கலைஞர்கள். செயற்கையான ரப்பர் மூக்குகளுடன் வலம் வரும் சர்க்கஸ் கோமாளிகளின் வேடிக்கையைக் கண்டு பிஞ்சுக் குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதைப் பார்க்க முடியும். உலகின் பல நாடுகளிலும் விரும்பிப் பார்க்கப்படும் சர்க்கûஸ தங்களின் பிரதான தொழிலாகக் கொண்ட லட்சக்கணக்கானோர் உள்ளனர். அந்தரத்தில் இறக்கையின்றிப் பறந்து வயிற்றுப் பசியை ஆற்றும் இக்கலைஞர்களுக்கு ஒரே இடத்தில் நிலையான வாழ்க்கை என்பது கானல் நீரே. சினிமா ரசிகர்களைக் கூட தன்வயப்படுத்தி திரையரங்குகளுக்கே, சர்க்கஸ் சவால் விட்ட காலமுண்டு. விலங்குகளின் விசித்திரக் கீழ்ப்படிதலை மட்டுமன்றி தீப்பொறி வளையத்துக்குள் பாயும் பெண்களின் வீரதீர சாகசங்களும் மாணவ, மாணவிகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயங்களாயிருந்தன. மாற்றுத் திறனுடையோராய் பிறப்பவர்களுக்குக் கூட வேலைவாய்ப்பு வழங்கும் கேந்திரமாக சர்க்கஸ் திகழ்ந்தது. அறிவியல் வளர்ச்சியால் அழிவுப் பாதையை நோக்கிப் பயணிக்கும் பல கிராமத்து விளையாட்டுகளைப் போல சர்க்கஸ் கலையும் அதலபாதாளத்துக்குச் சரிந்து கொண்டிருக்கிறது. விலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் சர்க்கஸ் குழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்தியாவில் தற்போது 8 பெரிய சர்க்கஸ் கம்பெனிகளே செயல்படுகின்றன. இவர்கள் தவிர பிரம்மாண்ட விளம்பரங்களைத் தேடிக் கொள்ள இயலாமல் முக்கியத் திருவிழாக்களை மட்டுமே நம்பி 30-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் குழுவினர் தமிழகத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்துக்காக சில சிறிய சர்க்கஸ் குழுக்கள் சாகச விளையாட்டுகளுடன், ஆடல்-பாடல் போன்றவற்றை புகுத்திய போதும் அவை விலங்குகளின் சாகசத்திற்கு ஈடுகட்டுவது போல் இல்லை. இதனால் மக்களின் பாராமுகம் அதிகரித்தது. இத்தொழிலால் பசியாறி வந்த பல கலைஞர்கள் வேறு பணிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கூடார வாழ்க்கை கூட கேள்விக்குறியாகியுள்ளதால், சர்க்கûஸ நம்பியிருக்கும் மாற்றுத்திறனுடையோர் பலர் வாழ்வில் எதிர்நீச்சல் போட மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலும் தம்பதி சகிதமாக சர்க்கஸில் ஈடுபடுவோர் அதிகமிருப்பதால், தாம் பெற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி அவர்கள் அடையும் வேதனையைச் சொல்ல வார்த்தைகளில்லை. மற்றொருபுறம் புத்தகப் புழுக்களாக மாறிவரும் இன்றைய குழந்தைகளுக்குப் பயனுள்ள, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பொழுதுபோக்கு அம்சம் (சர்க்கஸ்) கிடைப்பதற்கு அரிதாகி வருகிறது. சமூக நன்னெறிகளை விட ஆபாசத்தையும், வன்முறையையும் தற்போது அதிகளவில் மனதில் பதியச் செய்யும் சில சினிமாக்களுக்கு கூட அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.அதே நேரத்தில் அழிவை நோக்கிப் பயணித்து வரும் இந்த சாகச விளையாட்டுக் கலையின் பக்கமும் சிறிது பார்வையைத் திருப்பலாம். சலுகைகளுக்காக ஏங்குவதையும், முகாம் அமைக்கும் ஊர்களில் அடிப்படை வசதிகளுக்காக இலவச அனுமதியோடு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளை "கவனிக்க' வேண்டிய நிலையையும் அரசு தடுக்கத் தவறினால் இன்னும் சில ஆண்டுகளில் சர்க்கஸ் என்பது இல்லாமலே போய்விடும். நாட்டில் உள்ள குடிமக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும், எந்தத் தொழிலைச் சார்ந்திருந்தாலும் அவர்களால் வாழ்க்கை நடத்த முடியாத சூழல் தொற்றிக்கொள்ளும் வேளையில் தோள் கொடுத்தும், தாங்கிப் பிடித்தும் வாழ்க்கைக்கு உதவ வேண்டியது அரசின் கடமை.கிராபிக்ஸ் உள்ளிட்ட அறிவியல் மாயைகள் உதவியின்றி மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உழைப்பால் மட்டுமே அரங்கேறும் சர்க்கஸ் கலையை அழிவின் விளிம்பில் இருந்து காக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கஸ் குழுக்களை நடத்துபவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி, தளவாடப் பொருள்களை வாங்க மானியம், அரசு விதிக்கும் பல்வேறு வகையான வரிகளில் இருந்து விலக்கு அளிப்பது போன்றவை தேவையானது. மேலும், முகாம்களை இடமாற்றும் போது ஆகும் போக்குவரத்துச் செலவு சுமையைக் குறைக்க ஏற்பாடு செய்து கொடுக்கலாம். ஊர் ஊராகச் சென்று தங்களின் உடலை வருத்தி மக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பொது விநியோகத் திட்டத்தில் முகாம் நடைபெறும் ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்க சிறப்பு அனுமதியை அரசு அளிக்கலாம். சர்க்கஸில் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கு தீவனங்களையும், மாதம் ஒருமுறை கால்நடை மருத்துவர்களை அனுப்பி விலங்குகளை பரிசோதனை செய்வதோடு தேவையான மருந்துகளையும் அரசு இலவசமாக வழங்கலாம். சர்க்கஸ் குழுக்களுக்கு மிகவும் "ஷாக்' அடிக்கும் பிரச்னையாக இருப்பதே மின்கட்டணம்தான். விவசாயிகளுக்கு வழங்குவதைப் போல சர்க்கஸ் கலைக்கும் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றலாம். இவை அனைத்துமே அரசின் பல்வேறு பெரிய நலத்திட்டங்களோடு ஒப்பிடுகையில் சிறுதுளி போன்றதே. ஆகவே, இத்தகைய சலுகைகளை அரசு வழங்க முன்வந்தால் சர்க்கஸ் உரிமையாளர்கள் இன்னும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வருவார்கள். சமூகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாக பொழுதுபோக்கு அம்சம் புத்துயிர் பெற அரசு உதவ வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.
கருத்துக்கள்

இப்படி யாரும் அரசிற்கு அறிவுறுத்த மாட்டார்களா என நீண்ட நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். கட்டுரையாளருக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். அரசு வட்டரங்குக் கலையை ஊக்கப்படுத்த முன்வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 4:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக