திங்கள், 15 பிப்ரவரி, 2010

குறவஞ்சி நாட்டிய நாடகம் ஓர் மீள்பர்வை
கலையாக்க நடவடிக்கைகள் சமூக அறிக்கையோடு இணைந்த தொழிற்பாடுகளாயிருத்தல் தவிர்க்க முடியாததாக இருக்கும். சமூகத்திலே மேலாண்மை செலுத்துவோரது கருத்தியல்களுக்கு இசைந்த வகையிலே கலையாக்கங்கள் ஒருபுறம் தோன்றுதலான துருவப்பாட்டு நிலைகள் பல்வேறு வீச்சுகளிலே காணப்படுதலும் இயல்பு. விவசாயச் சமூக அமைப்பும் அதன் அடிப்படையிலான மரபுகளையும் சடங்குகளையும் கலைகள் வாயிலாகக் கட்டிக் காக்கும் மரபும் மேலாண்மைக் கலைப் புலத்தின் தேவைகளாக இருந்தன. மறுபுறம் சமூகத்தின் அடிநிலை மாந்தர்கள் தமது உணர்ச்சிகளை வெளியிட தமக்குரிய உபாயங்களைப் பயன்படுத்துகையில் முரண்பாடான கலை வடிவமைப்புக்கள் சமாந்தரமாக இயங்கிய வண்ணமிருக்கும். இத்தகைய தோற்றப்பாடு "தள முரண் வீச்சுக்கள்' எனப்படும். தமிழ்க் கலை மரபில் சமூக நிலை மேலாண்மை செலுத்தியோர் செவ்விய இசையையும், செவ்விய ஆடலாகிய பரத நடனத்தையும் தமது மரபுக் காப்புக்குரிய வடிவங்களாக்கினர். சமூகத்தின் அடிநிலை மாந்தர்கள் நாட்டார் இசை, நாட்டுக் கூத்து முதலியவற்றைத் தமக்குரிய வடிவங்களாக்கினர். இவ்வாறான துருவங்கள் தேவை கருதி சில சந்தர்ப்பங்களில் ஒன்றிணைக்கப்படுதல் முரண்பாடுகளின் சங்கமமாயிற்று. தமிழ்க் கலைபரப்பில் இவ்வாறான முரண்பாடுகளின் சங்கமத்தை குறவஞ்சி இசை நாட்டிய நாடகங்களிலே காணமுடியும். குறவஞ்சி இசை நாட்டிய நாடகங்களில் செவ்விய இசைப் பாடல்களும் நாட்டுப் பாடல்களும் இணைக்கப்பட்டிருக்கும். அமைப்பியல் நிலையில் இத்தகைய இணைப்பு நிகழ்ந்தாலும் அவை தனித்தனி மங்களாகப் பிரிந்த செயற்படும்.

முரண்நிலை இணைப்புடன், முரணுறு பாத்திர அமைப்பும் குறவஞ்சி இசை நாட்டிய நாடகங்களிலே காணப்படும். மன்னர்களும், வள்ளல்களும் என்றவாறான பாத்திரங்களும் குறவன், குறத்தி என்ற பாத்திரங்களும் சமூக முரணுறு பாத்திரங்களின் தொகுப்பை புலப்படுத்தும். சரபேந்திர பூபாலக் குறவஞ்சி குமாரலிங்கர் குறவஞ்சி முதலியவை மேற்கூறிய பண்புகளைப் பொருத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட குறவஞ்சி நாடகத்தில் இந்தப் பண்புகள் காணப்பட்டன.

திருக்குற்றாலக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சீ, கபாலீசுவரர் குறவஞ்சி, காங்கியேன் குறவஞ்சி, செந்தில் குறவஞ்சி என்றவாறு கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட குறவஞ்சிகள் பல எழுந்தன.

குறவஞ்சி நாடகத்தின் முற்பகுதிகளாக காப்புப் பாடல், தோடயமங்களம், தலைவன் பவனி, தலைவி வருதல், தலைவியின் வருகை, தலைவியின் உள வெளிப்பாடுகள், பாங்கி வருதல் முதலியவை செவ்விய இசை தழுவி வருதல் சமூக மேலாண்மைக் குழுவினருக்குரிய இசை அமைப்பியலைக் காட்டுகின்றது. குறத்தி வருகை, குறத்தி ஊர்வளம் கூறல், குறி சொல்லுதல், சிங்கன் குழுவனோடு வேட்டைக்கு வருதல், வலை விரித்தல், குறத்தியின் பிரிவு முதலியவை சமூகத்தின் அடித்தள மக்களின் உணர்வுகளோடு கூடிய மெட்டுக்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய விடுதலைப் போராட்டம் பண்பாட்டு விடுதலையையும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்ட வேளை பரத நடன உட்பட பாரம்பரியமான கலை வடிவங்கள் மீட்புக்கு உள்ளாக்கப்பட்டன. பரத நடனத்தை மீட்டெடுத்தவர்கள் தமிழக சமூக அமைப்பில் வேலாண்மை செலுத்திய பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்ததுடன், ஆங்கிலக் கல்வி வாயிலாகப் பெற்ற தாராண்மைவாதக் கருத்தியலின் வீச்சுக்கும் உட்பட்டிருந்தனர். சமூகத்தில் மேலாண்மை செலுத்தியவர்களின் இறுதி உறைந்த கருத்துக்களை வலியுறுத்தவும், அதேவேளை ஆடற்கலை வழியாக அடிநிலை மாந்தரைச் சித்தரிக்கும் தாராண்மை இயல்பை வெளியிடுவதற்கும் பொருத்தமான வடிவமாக குறவஞ்சி நாட்டிய நாடகம் அமைந்தது. இந்த ஈடுபாடு பரத நடனத்துக்கு "அழகு மிக்க அருங்கலை' என்ற அந்தஸ்தைக் கொடுப்பதற்குத் துணை நின்றது. ஆனால் மக்களது சிந்தனைகளில் அடிப்படைக் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அந்தக் கலை மீட்பு துணை நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறவஞ்சி நாட்டிய நாடகப் பாடல்களின் இருவேறு துருவ நிலைகள் காணப்படுதலை திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களைப் பகுப்பாய்வு செய்வதன் வாயிலாகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இரு வேறு துருவங்கள் என்று கூறும் பொழுது ஒரு துருவமாக மேலாண்மை மக்கள் இயல்பும், மறுதுருவமாக அடிநிலை மாந்தர் இயல்பும் அமைந்தன.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் தலைவி வசந்தவல்லி வருவதைக் குறிக்கும் பாடல் வருமாறு:"வங்காரப் பூஷணம் பூட்டித் திலகந்தீட்டி மாரனைக் கண்ணாலே மருட்டிச் சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி தெய்வாரம்பை போலவே வந்தாள்' மேற்குறித்த பாடலின் ஒவ்வோர் அடியிலும் இடம்பெறும் சந்த வல்லியின் அலங்கார நிலைகள் நிலப்பிரபுத்துவ மேலாண்மைப் பெண்ணிலை இயல்பின் அலங்கரிப்பு வருணனைகளாக அமைந்திருத்தலைக் காணலாம். தொடர்ந்து வரும் குறத்தி குறி சொல்லும் பாடலில் சமூக அடித்தட்டு மாந்தரின் இயல்பு நிலைகள் பளிச்சீடு கொள்கின்றன. "என்ன குறியாகிலும் நான் சொல்லுவேன் அம்மே சதுர் ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே மன்னர்கள் மெச்சுகிற வஞ்சி நான் அம்மே என்றன் வயிற்றுக்கித்தனை போதும் கஞ்சிவார் அம்மே' அடிநிலை மாந்தரிடத்துக் காணப்படும் எதிர்ப்போரை வெல்லும் வைராக்கியமும், எளிமைநிலை உணர்வும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. அடுத்து வரும் பின்வரும் காலச் சொற்கட்டுகள் அடிநிலை மாந்தரின் உணர்வு வீச்சுக்களை சுட்டுவனவாக அமைந்துள்ளன. "குங்கு தக்கிட்ட குங்கு தக்கிட்ட

குங்கு தக்கிட்ட தகிட தாம் குங்கு தக்கிட்ட தகிட தாம் குங்கு தக்கிட்ட தக்கிட தை...''

அடிநிலை மாந்தர்களின் தொடர்ச்சியான உடலுழைப்புக்கும் சந்த வடிவமைப்புக்கும் தொடர்புகள் காணப்படுகின்றன. கடின உடலுழைப்பின் போது உடலின் பெரும் தசை நார்களுக்கும் நுண்தசை நார்களுக்குமிடையே நிகழும் அசைவுகளை மொழி வடிவிலே வெளிப்படுத்துவதற்குச் சந்தங்களும், தாளச் சொற்கட்டுக்களும் துணை நிற்கின்றன. சமூக அடித்தள மாந்தர்களின் இவ்வகை அசைவுகளைப் பரத நடனத்தில் எடுத்தாழும் பொழுது ஆடல் விறுவிறுப்புப் பெறுகின்றது. சமூகத்தில் மேலெழுந்தவர்களின் உணர்வுகள் அபிநயங்களாகவும், உடல் நிலை அழுத்தங்கள் குன்றிய வாழ்க்கையின் இயல்பினைக் காட்டும் மென்போடக்குடைய அசைவுகளாகவும் ஆடல்களாகவும் வெளிப்படும்.

பரத நடனம் மேற்குறித்த மேற்போக்கினையும் விறுவிறுப்பையும் உள்ளடக்கியிருத்தல் இரு துருவ இணைப்பைக் காட்டுகின்றது. திருமதி ருக்மணி அம்மையார் அவர்களது குறவஞ்சி நாட்டிய நாடக ஆற்றுகை தொடர்பான கருத்தியலாக்கத்தில் அவரது கணவர் திரு. அருண்டேலின் செல்வாக்கு இழையோடியிருந்தது.

ஆங்கிலப் பண்பாட்டிலே தோன்றிய தாராண்மை வாதத்தினதும், மனித நேயத்தினதும் செல்வாக்கு திரு. அருண்டேலிடத்து ஆழப் பதிந்திருந்தமையும், அத்தகைய கருத்தியல் இந்தியாவின் செவ்விய கலைகளையும், நாட்டார் மரபுகளையும் தழுவி அவற்றை உயர் குழாத்து நிலையில் நின்று பராமரிக்கும் அணுகுமுறை சமூகத்தை அடியோடு மாற்றியமைக்கும் இயல்பைக் கொண்டிராது, பாரம்பரியங்களை மனிதநேயம் மற்றும் தாராண்மைக் கோட்பாடுகளின் அடிப்படைகளில் பராமரிப்புக் கொள்ள வைத்தது. உயர் குழாத்தினதும் கலைச் செயற்பாடு குறிப்பிட்ட கால கட்டத்திலே கலை ஈடுபாடு கொண்டவர்களுக்குக் காட்டுருவாக () விளங்கியமையால் திருமதி ருக்மணி அருண்டேல் அம்மையாரைத் தொடர்ந்து நடன ஆசிரியர்களான கே. என். தண்டாயுதபாணி பிள்ளை, வழுவூர் இராமையாபிள்ளை, திருமதி கமலா, கலாநிதி பத்மா சுப்பிரமணியம் அடையாறு கே. இலட்சுமணன், கலைச்செல்வர் இணுவை ஏரம்பு சுப்பையா, மகா வித்துவான் இணுவை என். வீரமணி ஐயர் முதலியோர் குறவஞ்சி நாட்டிய நாடக ஆற்றுகைகளில் ஈடுபட்டனர். இந்த வகையான காட்டுருப் பின்பற்றல் இன்று வரை பரத நடனத்துறையிலே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக