ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்: கே.வீ.தங்கபாலு



சென்னை, பிப்.13: காங்கிரஸ் - தி.மு.க.வின் வெற்றிக் கூட்டணி வலிமையோடு எதிர்காலத்திலும் தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உறவைப் பிரிக்க பல்வேறு நிலைகளில் சூழ்ச்சி உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2004}ம் ஆண்டு ஏற்பட்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி இன்றும் தொடர்கிறது. இந்தக் கூட்டணி நல்லுறவோடு நாளையும் தொடரும் என்பதுதான் உண்மை.
இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மாநில அளவில் நானும், முதல்வர் கருணாநிதியோடு ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சிறந்த கூட்டணியாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசு ஆற்றி வரும் சாதனைகள் ஒருபக்கம், முதல்வர் கருணாநிதி தலைமையிலான மாநில அரசின் சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் ஒருபக்கம் என்று சாதனைகளை உருவாக்கி வரும் வெற்றிக் கூட்டணியாக இந்தக் கூட்டணி உள்ளது.
எனவேதான், மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்தியா முழுவதும் காங்கிரஸýக்கும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கும் வாக்கு வங்கி உயர்ந்துகொண்டே வருகிறது.
காங்கிரஸின் வாக்கு வங்கி உயர்ந்து வரும் யதார்த்த உண்மை நிலையை முன் வைக்க விரும்பாத சில ஏடுகள், காங்கிரஸ் - தி.மு.க. வாக்கு வங்கி குறையும் என்று தவறான கருத்துகளை வெளியிடுகின்றன.
கருணாநிதி, அரசியலில் நீண்டகால அனுபவமிக்க தலைவர். அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பது தி.மு.க.வினர் மட்டுமல்ல, தோழமைக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் உள்பட அனைவரும் விரும்புகின்றனர்.
எதிர்காலம் என்பது காங்கிரஸ், தி.மு.க., முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளடங்கிய கூட்டணிக்குத்தான் உண்டு; அதி.மு.க. போன்ற மற்ற கட்சிகளுக்கு கிடையாது.
மக்களிடையே அவர்களுடைய பிரசாரம் எடுபடாது. இதற்கு மாறாக எழுதப்படும் ஆரூடம் நிச்சயம் பலிக்காது.
வாக்கு வங்கி உயர்வால், காங்கிரஸ் } தி.மு.க. கூட்டணி பலமிக்க கூட்டணியாக உருவாகி வருகிறது. எதிர்காலமும் இது தொடரும்.
இதற்கு இடையூறு செய்திட யார் முயற்சித்தாலும் அவர்கள் தோல்வியைப் பெறுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் தங்கபாலு.

கருத்துக்கள்

தான் தலைவராக இருக்கும் வரையும் அடுத்த தேர்தல் அறிவிப்புவரும் வரையும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். காங்.விலகினால் அதற்கு இழப்பு ; தமிழ் நாட்டிற்கு நன்மை. இந்தி எதிர்ப்புப்போரின் போது மாணவர்களைக் கொலைஆயுதங்களால் தாக்கிய காங். தமிழ் ஈழ விடுதலைப் போரின் பொழுது தடைசெய்யப்பட்ட கொலை ஆயுதங்களையும் தொழில்நுட்ப வீரர்களையும் வழங்கிப் பேரினப்படுகொலையில் ஈடுபட்ட காங்கிரசை நம் மக்கள் ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள். எனவே தான் கலைஞர் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லை. காங்கி.யை விட்டுத் திமுக விலகினால் வலிவு பெறும்; பொலிவு பெறும். நாடும் மக்களும் நலம் பெறுவர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/14/2010 1:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக