பேரறிஞர் அண்ணாவால் விரட்டியடிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமல் இருக்கும் காங்கிரசைச் சுமந்து கொண்டு காத்துக் கொண்டு இருக்கிறோம். விளம்பரங்களில் பேரறிஞர் படத்தைப் போட்டு அவர் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டா என்பதற்காகக் குடும்பத்தினர் படங்கள்தான் போட்டுக் கொள்கிறோம். இளைஞர் அணியை ஊக்குவிப்பதாகக் கூறிக் கொண்டு பேரறிஞர்அண்ணாவுடன் தொடர்புடையவர்களை ஓரங் கட்டுகிறோம. இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படும் பொழுது தேர்தலில் ஈடுபடுகிறார் எனப் பெருந்தலைவர் காமராசரைத் தாக்கிப் பேசிய பேரறிஞர் அண்ணாவின் நினைவைத் தூக்கி எறிந்து விட்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் தோன்றாத் துணைவன் காங்கிரசைத் தோளில் சுமக்கிறோம். இவற்றை யெல்லாம் தொண்டர்கள் நினைக்கக் கூடாது என்பதற்காகக் கட்சியினரைக் கொத்தடிமைகளாக வைத்துள்ளோம். இளைய தலைமுறையினரிடம் பேரறிஞர் பற்றியும் தமிழின எழுச்சி பற்றியும் மறந்தும் பேசுவதில்லை. இந் நினைவு நாளிலாவது மனச் சான்று விழித்து மாறினால் நல்லது என உள்மனம் நினைக்கலாம். பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/3/2010 2:44:00 AM