சென்னை, பிப்.3: ""மக்கள் ஏற்றுக் கொண்டால் நாளையே தமிழ் வழிக்கல்வியை தமிழக அரசு கொண்டுவரும்'' என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் "சென்னை அறிவியல் திருவிழா' புதன்கிழமை தொடங்கியது.விழாவில் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தும், பெண் விஞ்ஞானிகள், அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கியும் அமைச்சர் பொன்முடி பேசியது:மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளர்ந்தால்தான் அறிவியல் துறையில் நாம் முன்னேற முடியும். இங்கே பேசிய சென்னை அறிவியல் நகரத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன், ""மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்ச்சி வேண்டும்'' என்றார். அறிவியலில் மட்டுமல்ல அரசியல், சமுதாயம், குடும்பம் என்று எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வேண்டும். அப்போதுதான் முன்னேற்றம் ஏற்படும்.அறிவியல் துறையில் இந்தியா பெரிய அளவில் ஏன் முன்னேறவில்லை? என்று கேட்டால் விஞ்ஞானிகள் ஒரே வரியில் "அரசியல்வாதிகள்' என்று சொல்வார்கள்.என்னைக் கேட்டால், தாய்மொழியில் கல்வி கற்காதவரை அறிவியலில் முன்னேற்றம் ஏற்படாது என்பேன். தாய்மொழி கல்வியின் மூலம் சீனா இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வருவது சாதாரணமான விஷயம் அல்ல. மக்கள் ஒப்புக் கொண்டால் நாளையே தமிழ் வழிக் கல்வியை தமிழக அரசு கொண்டு வரும். மக்களின் எண்ணங்களை ஒட்டியே அரசு முடிவெடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் எனது குழந்தை ஆங்கிலத்தில் படிப்பது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டுவார்கள்.நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை, பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும். எனக்கும் சேர்த்துதான் இதைச் சொல்கிறேன்.கல்வித் துறையில் மாற்றத்தைக் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காகவே செயல்முறை கல்வி, சமச்சீர் கல்வி, தாய்மொழிக் கல்வி ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறோம்.ஆரம்பக் கல்வியில் மாற்றம் ஏற்பட்டால்தான் உயர்கல்வி சிறப்பாக இருக்கும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஆய்வு மனப்பான்மை வளரும். அறிவு ரீதியாக வளர்ச்சி அடைய தாய்மொழிக் கல்வியும், வியாபார ரீதியாக முன்னேற்றம் அடைய தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளை தமிழில் கொண்டுவர அரசு தயாராக உள்ளது. அதனைச் செயல்படுத்த பல்கலைக்கழகங்களும், அறிஞர்களும் முன்வர வேண்டும் என்றார் பொன்முடி.விருதுகள்: விழாவில் டாக்டர் சாரதா கணேசன் (மருத்துவம்), விஜயலட்சுமி புருஷோத்தமன் (மனையியல்), வசந்தா பட்டாபி (உயிர் அறிவியல்), ஜி.எஸ். விஜயலட்சுமி (சுற்றுச்சூழல் அறிவியல்) ஆகியோருக்கு "தமிழக வாழ்நாள் மகளிர் அறிவியலாளர் விருது'ம், ச. மீனா, ரா. ரெங்காலட்சுமி (வேளாண்மை அறிவியல்), ஏ. புரட்சிக்கொடி, பொ. உமாதேவி (உயிர் அறிவியல்), ரீட்டா ஜான் (இயற்பியல்) ஆகியோருக்கு "தமிழ்நாடு இளம் மகளிர் அறிவியலாளர் விருதும்', டாக்டர் சொக்கலிங்கம் (மருத்துவம்), நெல்லை சு. முத்து (விண்வெளித் துறை), எச். ராஜா (தாவரவியல்), டாக்டர் மீனாட்சி சுந்தரம் (கால்நடை அறிவியல்) ஆகியோருக்கு "தமிழ் அறிவியல் எழுத்தாளர் விருதும்' வழங்கப்பட்டது.இதுதவிர 9, 10, 11}ம் வகுப்பு மாணவர்களுக்கு "மாணவர் அறிவியல் அகாதெமி விருதுகளும்' வழங்கப்பட்டன. விருதுகளையும், சான்றிதழ்களையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.சென்னை அறிவியல் நகரத்தின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் பி. ஐயம்பெருமாள், உயர்கல்வித் துறை செயலர் கணேசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
2/4/2010 3:20:00 AM
வெட்கம்! வெட்கம்! வெட்கம்! தமிழ் வழியாகப்படித்தால் வேலைவாய்ப்புஎன்ற சூழலை அரசு உருவாக்கினால் இன்றைக்கே தமிழ் வழிக்கல்வியில் பிள்ளைகளைச் சேர்க்க மக்கள் ஆயத்தமாக உள்ளனர் என்பதை அறிந்தும் பொறுப்பைத் தட்டிக் கேட்கலாமா?.மக்கள் விருமபித்தான் மதுக்கடைகளை நடத்துகிறார்களா? அப்படியே மக்கள் தமிழ வழிக் கல்விக்கு வரவேற்பு தரவில்லை என்றால் அதற்கான சூழலை உருவாக்க வேண்டியது கல்வித்துறை யின் பொறுப்பு அல்லவா? தமிழ்வழிக் கல்விக்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்ள இருந்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டுவழாவிலாவது அவரது மாண வரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கட்டாயத் தமிழ வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவாராக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்