சனி, 1 அக்டோபர், 2022

தருமபுரம் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா

 அகரமுதல


தருமபுரம் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா

இசைப் பேரறிஞர் திருமுறைக் கலாநிதி

அரசவைக் கலைஞர்

தருமபுரம் ப.சுவாமிநாதன் அவர்களின்

நூற்றாண்டு விழா

புரட்டாசி 20-22, வெள்ளி, சனி, ஞாயிறு, 2053 / 07, 08,09.10.2022

நல்வாழ்வு திருமண மண்டபம், இராயப்பேட்டை, சென்னை 14புதன், 28 செப்டம்பர், 2022

அரசியல் வகுப்பு 97, தோழர் தியாகு

 அகரமுதல


புரட்டாசி 11, 2053 புதன் 28.09.2022 இரவு 7.00

தமிழ்நாடு இனி – தோழர் தியாகு

இணைய வழிக் கூட்டம்பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! – பழ.தமிழாளன்

 அகரமுதல
பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்  

                  பகலவனே !

1.

மனுநூலை  நம்பவைத்து  மக்களையே

            மடமைதனில்  ஆக்கி  வைத்த

    மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத்

         தோலுரித்த மாண்பின்  மிக்கோன்

பனுவலெனும்  வேதத்தின் முடக்காற்றை

          மணக்காதே  வைத்த  பெம்மான்

     பிறப்பதனில் சாதிகண்டு  பரமனுச்சி

                   அமர்ந்திருந்த  ஆரி  யத்தை

நுனிநாவாம்  பகுத்தறிவின்  அம்பாலும்

                    கோலாலும்  வென்ற  வீரன்

      நற்றமிழத்  தன்மானம்  பகுத்தறிவால்

             ஆரியத்தை விரட்டி  வைத்தோன்

தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின்

                       மூச்சுக்காற்  றாக  மாறித்

   தமிழ்நாடு  முழுமைக்கும்  வீசிஉயிர்

                  அளித்திட்ட   அரிமா  தேர்க !

2.

தொண்ணூற்று  நான்காண்டு  தரைய

             தனில்  உயிரோடு வாழு  மட்டும்

     சுடர்முகத்தின்  அரிமாபோல்  துடிப்பு

           நிறை  இளைஞன்போல்  தொண்டு செய்தோன்

பண்ணிசைக்கு  மயங்குகிற  மாஞாலத்

            துயிரெல்லாம்  மயங்கல்  போல

     பைந்தமிழ  மக்களையே  பகுத்தறிவு

        உரைவீச்சால்  கவர்ந்த சான்றோன்

அண்ணாவை அவர்பின்னே அணியணி

        யாய்த்  தம்பிகளை ஈர்த்த பெம்மான்

     அறிவாய்தம்  எடுத்தேதீ  ஆரியத்தை

             அண்டாதே  விரட்டி  வைத்தோன்

பெண்களது  மாநாட்டில்  பெரியாரென்

                   பட்டமது  சூட்டப்  பட்டோன்

     பெண்களெல்லாம்  விடுதலையைப்

          பெறுவதற்கு  நாடோறும்  உழைத்த  வேங்கை !

3.

கலைஞரையும்  தன்னருகே  கவர்ந்துவைத்துத்

          தொண்டுக்குத்  துணையாய்க் கொண்டோன்

              காரிருளாம் மடமைதனைக் மதப்புரட்டைக் 

                 கதிரொளிபோல்  அழித்த  தீரன்

இலைபெரியார்  என்றாலும்  எண்ண

                 முறை எழுத்தாக்க  நூல்க   ளெல்லாம்    

இடிவிழுந்த  மரம்போல  ஆரியத்தை

            இரிந்தழிய  வைத்தல்  காண்க

தலைகவிழ்ந்த ஆரியத்தைத்  தமிழ்நாட்டில்

            தழைக்காதே  வைத்த  வீரன்

    சாதிமதத்  தீண்டாமைச்  சுவரிடித்து

       வரலாற்றில்  ஒளிர்வோன்  பாதை

தலைமையுற்றுத் தமிழினமே  திகழ்வதற்குப்

              பெரியாரின்  தடத்தைப்   பற்றித்    

தவறாது  நடப்பதுவே  தந்தைபெரி

                      யாருக்கு  நாம்செய்  நன்றி !

                 புலவர் பழ.தமிழாளன்,

          இயக்குநர்—பைந்தமிழியக்கம்,

                    திருச்சிராப்பள்ளி.

உ.வே.சா.வின் என் சரித்திரம் 9

 

அகரமுதல(உ.வே.சா.வின் என் சரித்திரம், 8 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 6
என் தந்தையார் குருகுலவாசம்

“எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைப்பிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பியிருக்கிறேன். அவர் என் விசயமாக உள்ளத்தே கொண்டிருந்த கவலையை நான் முதலில் அறிந்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில் உணர்ந்து உருகலானேன். அவரிடம் எனக்கு இருந்த பயபக்தி வரவர அதிகரித்ததே யொழியக் குறையவில்லை.

இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச் சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு இலௌகிகத்தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவபக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது. அவருடைய ஆசாரசீலமும் சிவபூசையும் பரிசுத்தமும் சங்கீதத் திறமையும் அவரைத் தெய்வமாக எண்ணும்படி செய்தன. அவருக்கு என்பாலுள்ள வாத்சல்யம் வெளிப்படையாகத் தோற்றாது. அவரது உள்ளமாகிய குகையிலே அது பொன்போற் பொதியப்பட்டிருந்தது. அதன் ஒளியைச் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன்.

என் தந்தையாருடைய இயல்பான பெயர் வேங்கட சுப்ரமணிய ஐயரென்பது; வேங்கட சுப்பையரென்றே அது மருவி விட்டது. அவரது பெயர் முன்னோர்களின் பெயரானமையின் வீட்டிலுள்ளவர்கள் அதைக் கூறமாட்டார்கள். அதனால் “சாமி” என்றே அவரை அழைத்து வந்தனர். என்னுடைய தந்தையாருக்கு இளைய சகோதரர் ஒருவர் இருந்தார். இவருக்கு சிரீநிவாசையரென்பது முதற்பெயர். சாமி என்று என் தந்தையாரை அழைத்த காரணம் பற்றி அவரை யாவரும் ‘சின்னசாமி’ என்று வழங்கலாயினர். அவருக்கு அதுவே பெயராக நிலைத்துவிட்டது. என் தந்தையாருக்கு ஒரு தமக்கையார் இருந்தார்.

என் தந்தையாருக்கும் சிறிய தந்தையாருக்கும் இளமையில் என் பாட்டனாரே வடமொழியையும் தமிழையும் கற்பித்தார். என் பாட்டியார் சங்கீதப் பழக்கம் உடையவராதலின் அவருடைய அம்சம் என் தந்தையாரிடமும் இருந்தது. அவருக்குச் சங்கீதத்தில் இளமை தொடங்கியே விருப்பம் உண்டாகி வளர்ச்சி யடைந்து வந்தது.

என் தந்தையாருக்கு உபநயனம் ஆயிற்று. பாட்டியாருக்கு அவரைச் சங்கீதத் துறையில் ஈடுபடுத்த வேண்டுமென்ற அவா இருந்து வந்தது. தம்முடைய அம்மானாகிய கனம் கிருட்டிணையர் உடையார்பாளையம் சமசுதானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து சிறப்படைந்திருந்தமையின் அவரிடமே தம் மூத்த குமாரரை ஒப்பித்துக் குருகுலவாசம் செய்யும்படிவிடலா மென்று எண்ணினார். என் பாட்டனாரும் இதற்குச் சம்மதித்தார். என் தகப்பனாருக்கோ சங்கீத அப்பியாசத்தில் இருந்த ஆவல் சொல்லும் அளவினதன்று. தமக்கு வாய்க்கப்போகிற குரு தாய்வழியினர் என்று தெரிந்தபோது அவரோடு சுலபமாகப் பழகலாமென எண்ணி மிக்க சந்தோசத்தை அடைந்தார்.

“சாமி, எங்கள் மாமாவைப் பற்றி நீ நன்றாகத் தெரிந்துகொண்டிருக்க மாட்டாய். அவரால் திருக்குன்றத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு பெருமை உண்டாயிருக்கிறது தெரியுமா? அவருக்கு இதுவரையில் நல்ல சிசுயன் ஒருவனும் கிடைக்கவில்லை. நீ அவரிடம் சாக்கிரதையாகப் பழகி அவர் மனம் குளிரும்படி நடந்து வந்தால் அவருடைய வித்தை முழுவதும் உனக்கு வராவிட்டாலும் முக்காற் பங்காவது வரும். சங்கீதத்தில் அவருடைய மார்க்கமே தனி. அதை நீ கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் நீயும் கியாதியை அடைவாய்” என்று என் பாட்டியார் கூறினார். அவ்வாறு கூறுகையில் அவர் தம்முடைய குமாரரும் பிற்காலத்தில் ஒரு சமசுதானத்தில் பலரும் பாராட்டும் வண்ணம் சங்கீத வித்துவானாக இருந்து விளங்குவதாகப் பாவித்திருக்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தன் மகனைப் பற்றி இவ்வாறு காணும் கனவுகளுக்குக் கணக்கு உண்டோ?

ஒரு நல்ல நாளில் என் பாட்டியார் தம் அருமைப் புதல்வரை அழைத்துக்கொண்டு உடையார்பாளையம் சென்றார். தன் அம்மானிடம் தம் குமாரரை ஒப்பித்துத் தம் கருத்தையும் கூறினார். கனம் கிரு்டிணையர், “அடே, ஏதாவது பாடு பார்க்கலாம்” என்றார். என் தந்தையாருக்கு என் பாட்டியார் கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்கள் சிலவற்றைக் கற்றுக் கொடுத்திருந்தார். அவற்றில் ஒன்றை என் தந்தையார் பாடிக் காட்டினார். அது சுவர சுத்தமாக இருந்தது கண்ட கிருட்டிணையர், “உன் பிள்ளைக்குச் சாரீரம் இருக்கிறது; நீயும் கொஞ்சம் சொல்லித் தந்திருக்கிறாய். முன்னுக்கு வருவான்” என்று கூறினார்.

“மாமா, உங்களிடம் இவனை ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவனுக்கு ஒரு குறையும் இல்லை” என்றார் பாட்டியார். “

எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இவனுக்குத் தேக புசுட்டிதான் போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும். உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்” என்று கிருட்டிணையர் கூறினார்.

“நமக்குச் சொந்தக்காரராக இருப்பதனால்தான் நம்முடைய தேக சௌக்கியத்தைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்லுகிறார்” என்று எந்தையார் நினைத்துக் கொண்டார். ஆனால் உண்மை வேறு.

கனமார்க்க சங்கீதம் எல்லோராலும் சாதித்துக்கொள்ள இயலாதது. யானையின் பலமும் சிங்கத்தின் தொனியும் இருப்பவர்களே அதை முற்றும் கடைப்பிடிக்கலாம். கனம் கிருட்டிணையருக்குச் சரீரவன்மையும் சாரீரபலமும் நன்றாகப் பொருந்தியிருந்தன. அதனால் அவர் அந்த மார்க்கத்தில் நல்ல சாதனை பெற்றார். சங்கீத வித்துவான்கள் சாரீரத்தை மாத்திரம் பரீட்சை செய்து பார்ப்பார்கள். கனமார்க்க சங்கீத வித்துவானாகிய அவர் சரீரத்தையும் சாரீரத்தையும் ஒருங்கே பார்த்தார். இரண்டு வன்மையும் சேர்ந்தால்தான் தம்முடைய வழி பிடிபடுமென்பது அவர் தம் அநுபவத்திற் கண்டதல்லவா?

“இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புசுட்டிப்படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாகக் காப்பாற்றிக் கொண்டால் போதும்” என்று என் பாட்டியார் சொல்லிச் சில நாள் அங்கே தங்கியிருந்து பிறகு விடை பெற்று உத்தமதானபுரம் போய்ச் சேர்ந்தார்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! – தோழர் தியாகு

 

அகரமுதல
ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்!

தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி  வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று. 

ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து உள்வாங்கியிருக்கிறோமா?

1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் எனப்படும் இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கையின் படி இந்திய அமைதிப் படை ஈழத்தில் கால்பதித்த போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு புதிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.  இந்திய வல்லரசின் அரசியல்-இராணுவத் தலையீட்டினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையையும் தலைவர் பிரபாகரனின் சுதுமலைச் சாற்றுரை தெளிவாக உணர்த்தியது. ஆனால் மக்கள்? 

இந்தியாவைத் தங்களின் பண்பாட்டுத் தாயகமாக அவர்கள் எண்ணிப்  பழகி யிருந்தார்கள்.  தமிழீழ மக்களும் தமிழ்நாட்டு மக்களும் ஒருகொடியில் பூத்த இருமலர்கள், தொப்பூழ்க்கொடி உறவுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் இனப் பாசத்தையும் இந்தியப் பேரரசின் இனப் பகையையும் வேறுபடுத்திப் பார்க்கின்ற தெளிவு ஈழ மக்களுக்கு இல்லை. ஈழத்து அறிஞர்கள் சிலருக்கே இல்லை – அன்றும் இல்லை, இன்றும் இல்லை! 

சிறிலங்கா வேறுதமிழீழம் வேறு என்று புரிந்து கொண்டவர்களுக்குஇந்தியா வேறுதமிழ்நாடு வேறு என்று விளங்கவில்லை.  

சிங்களப் பேரினவாதத்தைப் பகையாகக் கருதி எதிர்த்துப் போராடி வந்த மக்கள் இந்தியப் படையை  அப்படிப் பார்க்கவில்லை. ஆனால் இந்திய அரசின் உண்மையான உள்நோக்கத்தை மக்களுக்கு விரைவாகவும் உடனடியாகவும் உணர்த்த வேண்டிய தேவையை நிறைவு செய்வதாகத் திலீபனின் பட்டினிப் போர் அமைந்தது. இந்திய வல்லரசியத்தின் அமைதி முகத் திரையைப் பட்டினிக் கூர்வாளால் கிழித்துப் போட்டு பகையைப் பகையென்று காட்டினார் திலீபன். அது இந்திய மயக்கம் எனும் நோய்க்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.  

திலீபன் தமிழீழ விடுதலைக்காகக் கருவியெடுத்த ஆய்தப் போராளி. ஆனால் அரசியலின் நீட்சிதான் போர் என்ற தெளிவு புலிகளுக்கு இருந்தது. ஆய்தப் போராட்டத்தின் இடையில் குறுக்கிட்ட தடையை நீக்க அவர்களால் அரசியல் வழியில் அறப் போராட்டத்தையும் திறம்பட நடத்த முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது திலீபனின் போராட்டம்.

உண்ணாநோன்பிருந்து ஒரு தேசம் விடுதலை பெற முடியாது என்ற தெளிவு திலீபனுக்கு இருந்தது. அவர் விடுதலைக்காக நோன்பு நூற்றவர்  அல்லர் என்பதை அவரது போராட்டக் கோரிக்கைகளிலிருந்தே அறியலாம்.      

திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும் இராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்க் காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

சிங்களப் பேரினவாதம் இந்த ஒப்பந்தத்தையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக் கூடியது என்பதை இந்தியாவுக்கு உணர்த்தவும், இந்தியப் படையெடுப்பின் உண்மை நோக்கத்தைத் தமிழீழ மக்களுக்கு உணர்த்தவும் திலீபன் ஊனுருக்கி விளக்கேற்றினார் என்பதே உண்மை.

ஐந்து கோரிக்கைகளுக்காகப் போராடும் போதே தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக் குறிக்கோளில் அவர் குறியாக இருந்தமைக்குப் பட்டினிக் களத்திலிருந்து அவர் ஆற்றிய உரைகளே சான்று. 

ஒவ்வொரு முறையும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதாய் செய்தி பரவும் போதும் கூட்டத்தினரிடையே மகிழ்ச்சி பொங்கியது. திலீபன் காப்பற்றப்பட்டு விடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஒவ்வொரு முறையும் கிடைத்தது ஏமாற்றம்தான்.

திலீபனின்  போராட்டம் தமிழீழ மக்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தமிழீழப் பரப்பெங்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களைத் தொடங்கியிருந்தனர். நல்லூர் வீதியில் மக்கள் கூட்டம் உச்சம் தொட்டது. யாழ்க் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு மறித்துத் தமிழர்கள் மறியல் போராட்டம் தொடங்கினார்கள். திலீபன் விரும்பிக் கேட்கும் பாடலான “ஓ..மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா! உன் பாதணிகளை எனக்குத் தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா!” எனும் பாடல் உண்ணாவிரதக் களத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தின் கண்ணீருக்கு இடையில், மக்கள் நாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கினார்கள். திலீபனின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது! 

அணு அணுவாகச் சாவை நெருங்கிக் கொண்டிருந்தார் திலீபன். காந்தியின் தேசம் அகிம்சைக்கு மதிப்பளித்துக் கோரிக்கைக்கு செவி கொடுக்கும் என நம்பியிருந்த தமிழர்களின் எண்ணம் தகர்ந்து போயிற்று. ஈழத்தமிழர்களைக் கண்ணீரில் மிதக்க விட்ட திலீபனின் போராட்டம் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. 

உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ஆம் நாள்  1987 செட்டம்பர் 26 காலை 10:48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. 265 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி முடித்து விடை கொடுத்துச் சென்றிருந்தார் திலீபன்உயிர் தமிழீழ விடுதலைக்குஉடல் மருத்துவக் கல்விக்குஎன்ற முறையில் திலீபனின் முடிவு அமைந்தது

அமைதிப்படை அதிகாரிகள் எச்சரித்த போதும் இராசீவ் காந்தியின் இந்திய அரசு திலீபனின் பட்டினிப் போராட்டத்தை அலட்சியம் செய்தது என்பதைக் கட்டளைத் தளபதி  அர்கிரத்து சிங்கு தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். சுருங்கச் சொன்னால் திலீபனைச் சாகடித்தது  இந்தியாதான்! திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில் “இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

திலீபனின் வாழ்வை விடவும் வலிமையானது அவரது சாவு! இந்திய ஆக்கிரமிப்புப் படையைத் தமிழீழ விடுதலைப்புலிகள் விரட்டியடித்த வெற்றியின் வேர்களில் திலீபனின் மகத்தான ஈகம் உரம் சேர்த்தது என்றால் மிகையன்று. 

இத்தனைக்குப் பிறகும் இந்திய வல்லரசின் மோடி வித்தைகள் தொடர்வதன் சான்றுதான் ஐநாவில் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எதிராக இந்தியா நடத்தி வரும் ‘13 வகை’ புவிசார் அரசியல் சூதாட்டம். இந்தியாவின் சூதும் வாதும் புரியாமல் அது ஆட்டுவித்தபடி  ஆடிக் கொண்டிருக்கும்  தமிழீழத் தலைமைகள் ஆனாலும், புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் ஆனாலும், அவர்களுக்கெல்லாம் திலீபனின் போராட்டமும் ஈகமும் சொல்லும் சேதிஇந்தியாவிடம் எச்சரிக்கைஎப்போதும் எச்சரிக்கை!

–  தோழர் தியாகு

https://youtu.be/x9ZQmalPzA4

தியாக தீபம் திலீபன் அவர்களைப் பற்றித் தோழர் தியாகுவின் நேர்காணல்.