சனி, 7 ஜூன், 2025

? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி)

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன்; பசியினால் இளைத்தே

வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;

ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!

(திருவருட்பா- 3471)

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.   (திருக்குறள் – 226)

பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது தமிழ் நெறி. அப்பொழுது இந்து மதம் என்ற ஒன்றே தமிழ்நாட்டில் இல்லை. வேண்டுமென்றே தமிழ் நெறியை ஆரியநெறியாகத் திரிக்கும் ஆரிய வாதிகளின் பொய்க்கூற்றே இது.

அருட் பண்பில் சிறந்து விளங்கியவர் தமிழர். ‘அருளுடைமை’ என ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் வழங்கியுள்ளார்.

அன்பு பெற்ற மகவாகிய அருள் அறியாதவரிடத்தும் அனைத்து உயிர்களிடத்தும் தோன்றுவதாகும். 

“அன்பு தொடர்புடையாரிடத்து காட்டப்படும் பற்று; அருள் என்பது தொடர்பில்லாத பிற உயிர்களிடத்தும் பரந்து செல்லும் கருணை அல்லது இரக்கக் குணம் ஆகும். இது பிற உயிர்களின் துயர் போக்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் இழையாமை, பிற உயிர்களைக் கொல்லாமை ஆகிய பண்புகளைக் குறித்து நிற்கும்” என அருள்குறித்துக் குறள் திறன் விளக்குகிறது.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை (திருக்குறள் 244)

என்கிறார் திருவள்ளுவர்.

எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனாக இருக்கத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

பயிர்களுக்கும் உயிர் உண்டு எனத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்மக்கள் உணர்ந்திருந்ததைத் தொல்காப்பியம் உணர்த்தும். எனவே, உயிர் என்பது மக்கள் உயிரையும் விலங்கின பறவையின உயிரையும் மட்டுமல்லாமல்  பயிர் உயிரையும் குறிக்கும்.

ஓருயிருக்குத் துன்பம் நேரும் பொழுது அதனைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகக் கருதி அருளுள்ளம் கொண்டு கலங்குவர் உயிர்களை நேசிப்பவர்கள் என அறிஞர்கள் விளக்குவர்.

 உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், 10

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,

கடாஅ யானைக் கலி மான் பேகன்,

  என மயிலுக்குப் போர்வை கொடுத்த வையாவிக் கோப்பெரும் பேகன் பாராட்டும் உலகம் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் குறித்துப் பாராட்டியுள்ளது.

சுரும்பு உண நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்

பறம்பிற் கோமான் பாரி

எனச் சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் குறிப்பிடுகிறார்.

படர்வதற்குக் கொழுகொம்பின்றி வாடிய முல்லை கொண்டு வருந்திய மன்னன் பாரி, தான் வந்த தேரையே அம்முல்லைக்கொடிக்கு வழங்கியதை வரலாறு சொல்கிறது.

கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக

 எனச் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த வள்ளலார் இராமலிங்க அடிகளைச் சனாதனவாதியாகக் கூறுவது கொடுஞ்செயலாகும்.

வழி வழி வரும் தமிழ் மரபின் அடிப்படையிலேயே வள்ளலார், வாடிய பயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடும் தன் வேதனையைத் தெரிவிக்கிறார். இதனைச் சனாதனமாகச் சொல்வது அறிவின்மையா? அல்லது மெய்யின்மையா? என்பதை மக்கள் உணர்வர்.  இதனைத் தமிழ் கூறும் சனாதனம் என்பார் கடைந்தெடுத்த கயமைத்தன்மை மிக்கவர் என்பதன்றி வேறென்ன சொல்வது?

சனாதனம் பிராமணருக்குப் பிச்சை அளித்தால் புண்ணியம்; மேலுலகம் கிடைக்கும்  என்றும் பிற வருணத்தாருக்குப் பிச்சை இட்டால் மேலுலகம் கிடைக்காது; நரகம் கிடைக்கும் என்றும் கூறுகிறது.

வேறுபாடின்றிப் பசித்தோரின் பசியாற்றச் சொல்லும் தமிழ் நெறிக்கும் அதனை வலியுறுத்தும் வள்ளலாருக்கும் சனாதனத்திற்கும் தொடர்பு இல்லையே.

மேலும், இந்த வருணாசிரமத்திற்கு எதிராகத்தான் – சனாதனத்திற்கு எதிராகத்தான்  – திருவள்ளுவர்

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. (திருக்குறள் 222)

என்கிறார்.

(தொடரும்)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன்



(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 தொடர்ச்சி)

நட்பூ  இணைய இதழ், 2/2011

வெள்ளி, 6 ஜூன், 2025

60.தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா? + 61.திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர். – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 தொடர்ச்சி)

அல்ல! அல்ல! அல்ல!

இந்தியாவெங்கும் சமற்கிருத எதிர்ப்பு காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறது. பிற மொழிகளில் உள்ள  சமற்கிருத அறிஞர்களே, சமற்கிருதத்தின் பொய்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்.

பிராகிருத மொழியினர் எந்த அளவிற்குச் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் என்பதற்குச் சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

பிராகிருத காவியத்தை வணங்குவோம் ! அம்மொழியில்

கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம்

சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்! யார்

அம்மொழியில் காவியம் படைத்தார்களோ

அவர்களையும் கொளுத்துவோம்.!

– பேராசிரியர் முனவைர் ப.மருதநாயகத்தின், ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும் நூலிலிருந்து (தரவு: அ.கார்த்திகேயன், பிராகிருத மொழியில் மொழி உணர்ச்சி)

தமிழர்கள் சமற்கிருத இலக்கியங்களைக் கொளுதத வேண்டும் என்று கூறவில்லை. அவற்றிலுள்ள மனித வேறுபாட்டுக் கருத்துகளையும் அறமற்ற கருத்துகளையும்தான் எதிர்க்கின்றனர். சமற்கிருத நூல்களிலேயே சமற்கிருத எதிர்ப்பைக் காணலாம். சான்றாக ‘மிருச்சகடிகா’ என்னும் சமற்கிருத இலக்கியத்தில் மூக்கணாங்கயிறு கட்டாத எருமை கனைப்பதுபோல் சமற்கிருத மொழி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். எனவே, தமிழர்கள் கண்மூடித்தனமாக எதிர்க்க விலலை என்பதையும நமக்கு அழிவு ஏற்படுத்தக் கூடியவற்றையே எதர்க்கின்றனர் என்பதையும் உணரலாம். ஆகவே சனாதன எதிர்ப்பு என்பது சமற்கிருத வெறுப்பினால் கூறப்படவல்லை என்பதையும் மனிதக் குலத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காவே என்பதையும் நாம் உணர்ந்து எதிர்ப்பாளர் அணியில் இணைந்து எதிர்க்க வேண்டும்.

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

     (திருமந்திரம்- 252)

இதனைச் சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே!

  • இறை இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் கூறப்படும் தமிழ் நெறிகளை வேதத்துடன் தொடர்பு படுத்தித் தவறான விளக்கத்தைப் பரப்புவதே சில தரப்பார் வழக்கம். அப்படித்தான் இதற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

‘இனியவை கூறல்’ என ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் திருக்குறளில் வழங்கியுள்ளார்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.   (திருக்குறள் 97) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

நற்  பயனைத் தரக்கூடிய நற் பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கேட்போருக்கு மட்டுமல்லாமல் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவை என்கிறார் அவர். இக்கருத்துகளுக்கு இடந் தராத சனாதனம் என்பதே ஆரிய வழி முறை என்னும் பொழுது தமிழ்ச் சனாதனம் என்பது எப்படிப் பொருந்தும்? தமிழ்நெறிகளை எல்லாம் ஆரியமாகக் கூறுவதுதான் ஆரியவாதிகளின் வழக்கம். அப்படித்தான் இங்கும் கூறப்பட்டுள்ளது. ஆரியத்தைச் சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் தமிழ்நெறியை ஆரியமாகத் திரித்துக் கூறுகின்றனர்.

(தொடரும்)

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன்



(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி)

               2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம்.

மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார்.

மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,
      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)
என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என
     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி : 355)
என்றும் மலையைப் போன்ற அகலமும் உயரமும் உடைய மாடிக்கட்டடங்கள்
என,
     மலைபுரை மாடத்து(மதுரைக்காஞ்சி : 406)
என்றும் மாடிக்கட்டடங்கள் வரிசையாக அமைந்திருந்தன என்பதை,
     நிரைநிலை மாடத்து அரமியந் தோறும் (மதுரைக்காஞ்சி : 451)
என்றும் கூறுகிறார். இந்த அடி மூலம் நாம் மொட்டை மாடி எனக் கூறும் மேல்மாடியில், நிலா முற்றம் இருந்தது என்பதையும் தெரிவிக்கின்றார்.

மலையைப் போன்றும் முகில் அமைந்துள்ளது போன்றும் உயரமான மாடிக்கட்டடங்கள் இருந்தன என்பதைப் புலவர் (இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்) பெருங்கௌசிகனார்
     மலையென மழையென மாட மோங்கி (மலைபடுகடாம் : 484)
நகரங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவிக்கிறார்.

புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மாடிக்கட்டடங்களால் மாண்புற்ற நகர் என்னும் சிறப்பை,
     மாடமாண்நகர் (அகநானூறு : 124.6)
என்னும் தொடரில் தெரிவிக்கிறார். (அறுவை வாணிகன் – துணி வணிகர்)

புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், வானைத் தொடும்அளவிற்கு நீண்டு உயர்ந்த வீடுகள் இருந்தமையை,
     விண்பொரு நெடுநகர் (அகநானூறு : 167.4)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார். (நெடுநகர்- உயரமான மாளிகைகள்)

உயர்ந்த மாளிகைகள் காவலுடன் இருந்தன என்றும் புவலர் மதுரை மருதன் இளம்நாகனார்,
     கடிமனை மாடம் (அகநானூறு : 255.16)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார்.

மாடிக்கட்டடங்களை உடைய முதிய ஊராகிய மதுரை எனப் புலவர் மதுரைத் தத்தங்கண்ணனார்,
மாட மூதூர் (அகநானூறு :   335.11)
என்னும் தொடரில் விளக்குகிறார்.
புலவர் நக்கீரர், மாடிக்கட்டடங்கள் மிகுந்த தெருக்களை உடைய கூடல்மாநகர் என மதுரையை,
     மாடமலி மறுகின் கூடல் (அகநானூறு :   346.20)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மாடங்கள் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு வெண்மைகயாக இருந்தன; உச்சியில் நிலா முற்றங்கள் இருந்தன என்பதைப் புலவர் மருதன் இளநாகனார்,
     ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்

  (கலித்தொகை : 96.19)

என்னும் அடியில் விளக்குகிறார்.

சங்கப்புலவர்கள் கூடி உலக மக்கள் நாவில் நடமாடும் தமிழை ஆயும் மதுரையைக் குறிப்பிடும் பொழுது நீண்ட மாடங்களை உடைய மாநகர் எனப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ,
      நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்

(கலித்தொகை : 35.17)

என்கிறார். இவ்வரி மூலம் உலகோர் பேசும் மொழியாகத் தமிழ் இருந்துள்ளதையும் தொன்றுதொட்டே சங்கம் வைத்துத் தமிழ் ஆய்ந்த புகழுக்கு உரியது மதுரை என்பதும் தெளிவாகின்றது.

நீண்டு உயர்ந்த தூண்களை உடைய மாடங்கள் உடைய மாளிகைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
     நெடுங்கால் மாடத்து (பட்டினப்பாலை : 111)
என்னும் தொடரில் விளக்குகிறார். மழைமுகில்கள் மோதும்அளவிற்கு வளமனைகள் உயர்ந்து இருந்தன என்று அவரே,
     மழைதோயும் உயர்மாடத்து (பட்டினப்பாலை : 145)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

வளைந்து உருண்ட தூண்களையும்  உயராமான வாயில்களையும் உடைய வளமனைகள் எனக் குறிப்பதன் மூலம் உயரமான வளமனைகள் இருந்தமையை,
      கொடுங்கால் மாடத்து நெடுங்கடை (பட்டினப்பாலை :  261)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

பெரிய நிலைகளை உடைய மாடங்கள் நிறைந்த உறந்தை நகரை அவரே,
     பிறங்குநிலை மாடத் துறந்தை (பட்டினப்பாலை : 285)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மலையின் மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல, வளமனைகளின் உச்சியில்  காற்றால் வீசும் கொடிகள் அசைகின்ற தெரு, எனக் குறிப்பதன் மூலம், மலைபோல் உயரமாக, முகில் செல்லும் அளவிற்கு உயர்ந்த மாடங்கள்
உள்ள வளமனைகள் இருந்தன எனப் புலவர் பரணர்,
     வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
     வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்

(பதிற்றுப்பத்து : 47.3)

வியாழன், 5 ஜூன், 2025

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

 




எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416)

தமிழே விழி!                         தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம்

இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

வைகாசி 25, 2056  ஞாயிறு 08.06.2025  காலை 10.00 மணி

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

“தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்

பேரா.மரு.மு.செம்மல்,

முதன்மை மதியுரைஞர் , ஓர் உரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்

மரு. த,அறம், தகஇபெ மாநிலப் பொதுச்செயலாளர்

என்னூலரங்கம்

நூலாய்வு : எழுத்தாளர் பாரி முடியரசன்

நிறுவனர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்

இலக்குவனார் திருவள்ளுவன் நூல்:

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்

நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றி: முனைவர் மா.போ.ஆனந்தி