சனி, 4 ஜூன், 2011

English word spelling competition: ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டி: அமெரிக்கா வாழ் இந்தியச் சிறுமிக்குக் கோப்பை

தமிழ்ச் சொல் ஒலிப்பிற்குத்  தமிழக அரசு இது போல் உலகளாவிய போட்டி நடத்தலாமே! அல்லது தினமணி இத் தொண்டினை ஆற்றலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டி: 
அமெரிக்கா வாழ் இந்திய சிறுமிக்கு கோப்பை
First Published : 04 Jun 2011 01:09:59 AM IST

ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்புப் போட்டியில், வியாழக்கிழமை வென்ற கோப்பையுடன் சுகன்யா ராய். இவர் அமெரிக்காவின் சௌத் அபிங்டன் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த
வாஷிங்டன், ஜூன் 3 : அமெரிக்காவில் நடந்த ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டியில், அமெரிக்கா வாழ் இந்திய சிறுமி சுகன்யா ராய் கோப்பை வென்றுள்ளார்.அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டியில் பரிசு பெறுவதை பெருமையாக கருதுகிறார்கள். இந்த ஆண்டுக்கான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இறுதிச் சுற்றுக்கு, 13 பேர் தகுதிப் பெற்றனர். இதில், பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்திய மாணவி, சுகன்யாராய் முதல் பரிசை வென்றார். அவர் அங்குள்ள அபிங்டன் ஹைட்ஸ் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2009 மற்றும் 2010 ஆம் நடந்த போட்டிகளிலும் சுகன்யா ராய் பங்கேற்று முறையே, 12 மற்றும் 20வது இடத்தை பிடித்துள்ளார். மலையேற்றம், பனி சறுக்கு உள்ளிட்டவை அவரது பொழுதுபோக்கு ஆகும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, அமெரிக்கா வாழ் இந்திய மாணவர்களே முதல் பரிசை வென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thamizh marraige for American bride : தமிழ்மறை முழங்கக் காதலனைக் கரம் பிடித்த அமெரிக்கப் பெண்!


தமிழ் முறையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் வாழ்க! தமிழ் முறையில் திருமணம் செய்வித்த குடும்பத்தினர் வாழ்க! வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

/ தமிழே விழி! தமிழா விழி!
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தமிழ்மறை முழங்க காதலனை கரம் பிடித்த அமெரிக்கப் பெண்!
19:32 AM IST


தமிழ்மறை முழங்க காதலனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கப் பெண் ஒக்சானா.
கோவை, ஜூன் 3: கோவையில் தமிழ்மறை முழங்க காதலனை திருமணம் செய்து கொண்டார் அமெரிக்கப் பெண்.கோவை சர்வோதய சங்க முன்னாள் செயலர் வி.பி.தண்டாயுதம் மகன் செந்தில்குமரன், பி.இ.,பட்டதாரி. அமெரிக்காவில் புளோரிடா அட்லாண்டிகா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., மற்றும் எம்பிஏ முடித்து டெக்ஸôஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அங்கு, பணியாற்றிய ஆசிரியை ஒக்சானா அவருக்கு அறிமுகமானார். இருவரும் காதலித்தனர்.திருமணம் செய்து கொள்ள விரும்பிய இருவரும், தங்கள் வீட்டின் சம்மதத்தை எதிர்பார்த்து ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தனர். காந்திய சிந்தனைவாதியான தண்டபாணி, தன் மகன் விருப்பத்துக்கு இடையூறு செய்யாமல், அதே சமயம், இந்து முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். காதலி ஒக்சானாவின் தந்தை ரோமன் ஜாபியாச், தாயார் நாடியா ஜாபியாசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். ரோமன் ஜாபியாச், நியூஜெர்சி மாநிலத்தில் மோர்ரிஸ் நகர ரோமன் சபிஹாச் கவுன்சிலராக இருக்கிறார். இவரது மூதாதையர்கள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த இரு தலைமுறைகளாக அமெரிக்காவில் வசிக்கின்றனர்.இருவீட்டார் சம்மதம் கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக கோவையில் நடைபெற்றன. இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து பெண் வீட்டார் கோவை வந்தனர். கோவை பத்மாவதியம்மாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திருமண விழா நடைபெற்றது. ஒக்சானா, சிவப்பு கைநெசவு கதர் பட்டுச் சேலையுடுத்தி தமிழ் மணப் பெண்ணாக மணமேடையில் காத்திருந்தார். மணமகன் பட்டுவேட்டி, பட்டுச் சட்டை மிளிர வந்து தாலிகட்டத் தயாரானார். மங்கல இசையுடன் தமிழ்மறை ஓத, சக்தி குழுமங்களின் தலைவர் நா.மகாலிங்கம் மங்கல நாண் எடுத்துக் கொடுக்க மணமகளுக்கு அதை அணிவித்தார் மணமகன்.மணமக்கள், தமிழறிஞர்கள் மா.ரா.போ.குருசாமி, இருசுப்பிள்ளை உள்ளிட்டோரிடம் ஆசிபெற்றனர்.தனது திருமணம் குறித்து ஒக்சானா கூறுகையில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமண முறை நேர்த்தியாகவும், கலகலப்பாகவும் அமைந்திருந்தது என்றார்.

வெள்ளி, 3 ஜூன், 2011

labourer became doctor: a fact: மருத்துவர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல..உண்மை.

உழைத்து முன்னேறும்  மருத்துவர் தேவேந்திரனுக்கும் அவர்  குடும்பத்தினருக்கும் பாராட்டுகள். அவருக்குப்பிறர் உதவியை என்றும் நினைவில் கொண்டு தானும் பிறருக்கு எப்பொழுதும் உதவ வேண்டும் என்னும் மனப்பான்மை நிலைக்க வேண்டும்.பிறருக்கத் தூண்டுதலாக அமையும் வண்ணம் எழுதி உள்ள செய்தியாளர் இராசாவிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்


கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

- அ.ப.இராசா -

From delhi also: dinamani editorial about delhi edition: இனித் தில்லியிலிருந்தும்...

அருமையான நோக்கங்கள். சிறப்பாக  இவற்றை நிறைவேற்ற வாழ்த்துகள். நல்ல தமிழில் தில்லிப் பதிப்பு வெளி வரவேண்டும்; அங்குள்ளவர்களின் செய்திகளுக்கும் படைப்புகளுக்கும் முதன்மை அளிக்க வேண்டும்.  இணையப் பதிப்பிலும் இடம்பெற வேண்டும். 
பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும் அன்புடனும் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இனி தில்லியிலிருந்தும்...

First Published : 03 Jun 2011 12:40:33 AM IST

Last Updated : 03 Jun 2011 05:20:36 AM IST

தலைநகர் தில்லியிலிருந்து "தினமணி'யின் எட்டாவது பதிப்பு இன்று வெளியாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கனவாக இருந்த முயற்சி இன்று நனவாகி இருக்கிறது.தலைநகர் புது தில்லியில் பத்திரிகை அலுவலகங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட பகதூர் ஷா சஃபர் மார்க் சாலையில், தமிழில் தினமணியின் பெயர்ப் பலகையுடன் ஓர் அலுவலகம் இயங்குவதை, சாலையில் வாகனங்களில் போவோரும் வருவோரும் அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அவர்களது விழிகளில் தெரியும் வியப்பு, நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது.தலைநகர் புது தில்லியில் தமிழில் பெயர்ப் பலகையுடன் தனது அலுவலகத்தை நிறுவியிருக்கும் முதல் தமிழ் நாளிதழ் என்கிற பெருமையையும் உங்கள் தினமணி அடைந்திருக்கிறது. அந்தப் பெயர்ப் பலகையைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஏற்படும் பூரிப்புக்கு அளவே இல்லை.தினமணி தனது தில்லி பதிப்பைத் தொடங்க இருக்கிறது என்கிற செய்தியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமிடம் தெரிவித்தபோது, அவர் கேட்ட கேள்வி இதுதான்- ""தில்லியில் "தினமணி' நாளிதழின் பதிப்பை வெளிக்கொணர்வதன் நோக்கம் என்ன? இதன் மூலம் நீங்கள் அடைய இருக்கும் குறிக்கோள்தான் என்ன?''அந்தக் கேள்விக்கு பதில் தயாராகவே இருந்தது. தில்லி பதிப்பைத் தொடங்குவதற்கு எங்களுக்கு நான்கு காரணங்கள் இருந்தன. தில்லியில் தினமணியின் பதிப்பைத் தொடங்குவதன் நோக்கம் நிச்சயமாக விளம்பரங்களை வாங்கிக் குவித்து வருமானத்தைப் பெருக்குவதற்காக அல்ல என்பதில் ஆசிரியர் குழு மட்டுமல்ல, நிர்வாகமும் தெளிவான கருத்துடன்தான் இருந்து வந்தது. தில்லியில் மட்டும் ஏறத்தாழ 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், இந்தத் தமிழ்க் குடும்பங்களில் பல தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசும் வழக்கத்தையே கைவிட்டு விட்டனர். பெருவாரியான குடும்பங்களில், பள்ளியில் இந்தியையோ, ஆங்கிலத்தையோ பாடமொழியாக எடுத்துக் குழந்தைகள் படிப்பதால் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதைக்கூட விட்டுவிட்ட நிலைமை.ஆரம்பத்தில், தமது குழந்தைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதையும் படிப்பதையும் பெருமையாகக் கருதும் பல பெற்றோர்கள், அவர்கள் பெரியவர்களான பிறகுதான் தாங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழியாம் தமிழில் பயிற்சி அளிக்காமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்துகிறார்கள். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி தில்லிவாழ் தமிழர்களின் இல்லங்களில் "தினமணி' போன்ற தரமான தமிழ் நாளிதழ் ஒன்று இருப்பதுதான் என்று நாங்கள் கருதினோம்."தினமணி' நாளிதழை தினந்தோறும் பார்க்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் இது என்ன மொழி என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாதா, எழுத்துக் கூட்டித் தமிழ் படிக்கக் கற்றுக் கொள்ளாதா, தேமதுரத் தமிழில் பேசும், படிக்கும் இன்பத்தை அனுபவிக்காதா எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிடாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. "தினமணி'யின் தில்லி பதிப்பு வெளிக்கொணர்வதற்கான முதல் காரணம் இதுதான்.இரண்டாவதாக, தில்லிவாழ் தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கிறார்கள். தில்லியில் மட்டும் ஏறத்தாழ 14 தமிழ்ச் சங்கங்கள் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த தில்லிவாழ் தமிழர்களின் பிரச்னைகளை முன்னிறுத்த, இவர்களுக்காகக் குரல் கொடுக்க நிச்சயமாக தேசிய நாளிதழ்களோ, தொலைக்காட்சிச் சேனல்களோ முன்வரப் போவதில்லை. அந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர் தம் பிரச்னைகளை முன்னிறுத்தித் தீர்வு காண, தில்லிவாழ் தமிழர்களை இணைக்கும் ஒரு பாலமாக, இவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது நிகழ்வுகளை, தனிப்பட்ட சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக "தினமணி' பணியாற்ற வேண்டும் என்பதுதான் தில்லி பதிப்புக்கான இரண்டாவது காரணம்.தமிழகத்தின் குரலை தலைநகர் தில்லியில் எதிரொலிக்கவும்,தமிழர்தம் உணர்வுகளை தேசியத் தலைநகரில் பிரதிபலிக்கவும் புது தில்லி அரசியல் நிகழ்வுகளை மட்டுமல்லாமல், மத்திய அரசிடமிருந்து பெறக்கூடிய சலுகைகளையும், வாய்ப்புகளையும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வழிகோலுவதும்தான் "தினமணி' நாளிதழின் தில்லி பதிப்புக்கான மூன்றாவது நோக்கம்.செய்தி ஆசிரியர், தலைமை நிருபர் உள்ளிட்ட ஒரு முழுநேர ஆசிரியர் குழுவே "தினமணி'யின் தில்லி பதிப்பு அலுவலகத்திலிருந்து செயல்படுவதால், தேசிய ஆங்கில நாளிதழ்களுக்கு இணையாகத் தலைநகர் நிகழ்வுகள் தினமணியின் எல்லா பதிப்புகளிலும் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் இனிமேல் தலைநகரில் பிரதிபலிக்கும். பொறுப்பான பதவிகளில் இருக்கும் தலைநகர்த் தமிழர்கள் நமது பிரச்னைகளுக்குத் தீர்வு காண "தினமணி' நாளிதழின் செய்திகள் காரணமாக இருக்கும்.நாடாளுமன்றம் செயல்படும் நாள்களில், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுக்கு "தினமணி' தில்லி பதிப்பு முன்னுரிமை கொடுத்து வெளியிடும்போது, நமது மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் அந்தப் பிரச்னைகளுக்காகக் குரலெழுப்ப வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளும், மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழக அமைச்சர்களும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து, நல்லது செய்தால் அதைப் பாராட்டி மகிழ்ந்து, தவறுகள் செய்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டி தனது கடமையைச் செய்து, தமிழ்ப் பணியுடன் சமுதாயப் பணியையும் "தினமணி' இந்தப் பதிப்பின் மூலம் தமிழகத்திற்குச் செய்யும் என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். இதுதான் தில்லி பதிப்புக்கான நான்காவது காரணம்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் பத்திரிகைப் பணியில் தனது 80-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் "தினமணி' இன்று தனது 8-வது பதிப்பைத் தொடங்குகிறது. அன்றும் இன்றும் என்றும் "தினமணி' என்பது வாசகர்களின் நாளேடாகத்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் உங்களுடன் "தினமணி' ஆசிரியர் குழுவும் "தினமணி' நாளிதழின் அடுத்த கட்ட வளர்ச்சியில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது.மகாகவி பாரதி கூறுவார், "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்... வாழிய பாரத மணித்திரு நாடு'' என்று. பாரதியின் 13-வது நினைவு நாளன்று அந்த மகாகவியின் சுதந்திர தாகத்தையும் சமத்துவக் கொள்கைகளையும் பரப்பும் நோக்கத்துடன் பிறந்த நாளிதழ் "தினமணி'. அந்தப் பாதையில் பீடு நடை போட்டு இந்தியத் தலைநகரில் தடம் பதிக்கும் இந்த வேளையில், "தினமணி' நாளிதழுக்கு அடித்தளமிட்ட நிறுவன ஆசிரியர் "பேனா மன்னன்' டி.எஸ். சொக்கலிங்கத்தையும், நீண்டநாள் ஆசிரியர் - 44 ஆண்டுகள் - ஏ.என். சிவராமனையும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.மகாகவி பாரதி வகுத்த பாதையில், அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டையொட்டி தேசியச் சிந்தனையுடனும், தமிழின உணர்வுடனும் "தினமணி' நாளிதழின் அடுத்த கட்டப் பயணம் உங்கள் வாழ்த்துகளுடனும் நல்லாதரவுடனும் தொடர்கிறது...

Ready for enquiry to probe war crimes- singala military: போர்க் குற்றப்புகாரை விசாரிக்கத் தயார்: இலங்கை ப் படைத்தளபதி றிவிப்பு

சிங்கள அரசைப் பொருத்தவரை பொதுமக்கள் என்றால் சிங்கள மக்கள். தமிழ் மக்கள் அனைவருமே விடுதலைப் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள். விசாரணை என்ற பெயரில் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்த நாடகமா? பன்னாட்டு மன்றத்திற்கு உண்மையிலேயே மனித உரிமைகளிலும் மனித நேயத்திலும் அக்கறை  இருப்பின், ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்னும் அற உணர்வு  இருப்பின், தானே விசாரணை மேற்கொண்டு தண்டிக்க வேண்டும்.பயங்கரவாத அரசுகளின் கையாட்களைக் கொண்ட
 மன்றம் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. எனவே, உலக மனித நேயர்கள் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


 
போர் குற்றப்புகாரை விசாரிக்கத் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு
 

First Published : 03 Jun 2011 01:37:45 AM IST


கொழும்பு, ஜூன் 2: இலங்கை ராணுவத்தின் மீது கூறப்படும் சில குறிப்பிட்ட போர் குற்றப்புகார் குறித்து விசாரிக்கத் தயார் என்று அந்நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார்.÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, பிடிபட்ட தமிழர்கள் பலரை மிகக் கொடூரமாக சித்தரவதை செய்து இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ராணுவ வீரர்கள் கொலை செய்துள்ளனர். இதற்கான விடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போரில் இருதரப்புமே போர்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளது. ஐ.நா. சபையில் இலங்கை போர் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அதற்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அந்த நாடு தனிமைப்படுத்தப்படும்.இதனை எப்படியாவது தடுத்த நிறுத்தி விட வேண்டுமென்று இலங்கை அதிபர் ராஜபட்ச முயன்று வருகிறார்.இந்நிலையில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றைப் பற்றி விசாரிக்க தயாராக இருப்பதாக இலங்கை ராணுவ தலைமை லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:போரின் போது இலங்கை ராணுவம் பொதுமக்கள் யாரையும் கொலை செய்யவில்லை. அப்படி யாராவது கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்களது உறவினர்கள் முன்வந்து எங்களிடம் புகார் தரலாம். அது குறித்து விசாரணை நடத்தப்படும். ராணுவத்தின் மீது குறப்பட்டுள்ள சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாராகி வருகிறோம் என்றார் அவர்.

Delhi: Biogases for buses: அனைத்து அரசுப் பேருந்துகளையும் பயிர்வளியில் இயக்கத் திட்டம்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அனைத்து அரசு பஸ்களையும் பயோகேஸில் இயக்கத் திட்டம்

First Published : 03 Jun 2011 02:45:38 AM IST


புது தில்லி, ஜூன் 2: தில்லியில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் விரைவில் பயோ கேஸ் மூலம் இயக்கப்படவுள்ளன.கேஷோபூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பயோகேஸ் தயாரிக்க சுவீடன் அரசுடன் தில்லி அரசு உடன்பாடு செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளது.இதிலிருந்து தயாரிக்கப்படும் பயோகேஸ் மூலம் தில்லியில் உள்ள அரசு பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பயோகேஸ் தயாரிக்கப்படவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் தயாரிக்கப்படும் பயோகேஸில் மீத்தேன் வாயுவின் அடர்த்தி 60 சதவீதம் இருக்கும். இதனை சிஎன்ஜி வாயுவாக ஆக்க மீத்தேனின் அடர்த்தி 90 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும். உலகிலேயே பயோகேஸ் மூலம் அரசு பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவது தில்லியில்தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.இந்த திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான 50 சதவீத நிதியை சுவீடன் அரசும் எஞ்சிய தொகையை தில்லி அரசும் தரவிருக்கின்றன. இந்தத் திட்டம் வரும் செப்டம்பரில் தொடங்கக்கூடும் எனத் தெரிகிறது.இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தலாம் என மாற்றத்தக்க மின்உற்பத்தி நிர்வகிப்பு மையம் யோசனை தெரிவித்து அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. 2010-ல் சுவீடன் அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள துவாரகா, கேஷோபூர், காரனேஷன் பார்க், ஓஹ்லா ஆகிய இடங்களில் உள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுவீடன் நாட்டு நிபுணர்கள் 3 மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இவற்றில் கேஷோபூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் பயோகேஸ் தயாரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மற்ற இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மிக பழையவை அல்லது பயன்படாதவை என நிராகரிக்கப்பட்டன.இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றால் தில்லியில் உள்ள 17 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் பயோகேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தில்லியில் இயக்கப்படும் அரசு பஸ்களின் பெரும்பாலான பஸ்களின் சிஎன்ஜி தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படக்கூடும் என்கின்றனர் அதிகாரிகள்.ஒவ்வொரு சிஎன்ஜி வாயு ஆலை அருகிலும் சிஎன்ஜி வாயுவை நிரப்பும் லாயங்களை அமைக்க வேண்டியதுதான் உடனடியான தேவை. கேஷோபூர் காய்கறி மார்க்கெட்டில் வீணாகும் திடக்கழிவுகள் அடர் சிஎன்ஜி வாயு தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

Students admission increased in Dilli (delhi) thamizh kalvi kazhaga palligal: தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
வாழ்த்துகள்.http://dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=426394&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 தமிழக அரசு உடனடியாக இப்பள்ளிகளுக்குத் தேவையான பொருளுதவிகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளும் வழங்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

First Published : 03 Jun 2011 04:56:19 AM IST

தில்லி தமிழ்க் கல்விக் கழக சி.பி.எஸ்.இ. பள்ளியின் முகப்புத் தோற்றம்.
புது தில்லி, ஜூன் 2: புது தில்லியில் உள்ள தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் இயங்கிவரும் 7 பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. இத்தகவலை அதன் செயலர் ஆர்.ராஜூ தெரிவித்தார்.தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) சார்பில் தில்லிவாழ் தமிழர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் வகையில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. புதுதில்லியில் உள்ள லோதி வளாகம், ஜனக்புரி, மந்திர் மார்க், ஆர்.கே.புரம், மோதி பாக், பூசா ரோடு, லக்ஷ்மிபாய் நகர் ஆகிய 7 இடங்களில் இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்தப் பள்ளிகள் குறித்து ராஜு கூறியது: பள்ளிகளின் வளர்ச்சிக்காக முதல்வர்கள், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் ஆகியோர் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினோம். புதிய கற்பித்தல் முறைகள் பற்றியும், மாணவர்களை ஆசிரியர்கள் அக்கறையுடன் அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தோம்.ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பது தாமதமாவதைத் தடுக்க உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தில்லி அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏசிபி, எம்ஏசிபி போன்ற சலுகைகள் பள்ளியைச் சேர்ந்த பலருக்கும் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இதைப் போக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது.இதையடுத்து, ஆசிரியர்களின் ஈடுபாடு அதிகரித்தது. இவ்வாண்டு நடைபெற்ற தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி கழக நிதியிலிருந்து எடுக்கப்படவில்லை. எங்கள் பள்ளிகளில் படித்துச் சென்ற முன்னாள் மாணவர்களே இச்செலவுகளை ஏற்றுச் செய்து வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் நிதி நிலையும் சீரடைந்து வருகிறது. கேரளம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநில அரசுகள் தில்லியில் அமைந்துள்ள அம்மாநில மொழி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. அதே போன்று தமிழக அரசும் நிதி அளிக்க வேண்டும் என்றார் அவர். இது குறித்து தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் லோதி எஸ்டேட் பள்ளியின் முதுநிலை தலைமையாசிரியை வி.மைதிலி கூறியதாவது:பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ், முதல் மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. 9-ம் வகுப்புக்கு மேல்தான் விருப்ப மொழியாக பிற மொழிகளைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை புதிய பாடமுறைகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோடை விடுமுறையில் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கணினி வகுப்பு, ஆங்கில பேச்சுமொழிப் பயிற்சி, கலை மற்றும் கைவினைப் பயிற்சி, இசை ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நவோதயா, கேந்திரீய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வகையில் கல்வித் தரத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 7 பள்ளிகளிலும் புதிய மாணவர்களின் சேர்க்கை 750 முதல் 1000 வரை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்றார் அவர்.

வியாழன், 2 ஜூன், 2011

New delhi edition of dinamani from june 3rd: ஜூன் 3-ம் தேதி முதல் தில்லியிலிருந்தும் "தினமணி'!

தமிழ்க்கவிஞரின் நினைவுநாளில் பிறந்த தினமணியின் தலைநகரப் பிறப்பைத் தமிழகத் தலைவரின் பிறந்த நாளில் வைத்துள்ளீர்கள். ஆனால். அவர் பதவியில்  இருந்திருந்தால்  இதனைக் கூறியே விளம்பரப்படுத்தி  இருப்பீர்கள். இப்பொழுது சொல்ல மாட்டீர்கள்.  இருப்பினும் தலைநகரத் தினமணி நிலைத்து வாழ வாழ்த்துகள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஜூன் 3-ம் தேதி முதல் தில்லியிலிருந்தும் "தினமணி'!

First Published : 02 Jun 2011 03:50:23 AM IST


புதுதில்லி, ஜூன் 1: தேசியத் தமிழ் நாளிதழான "தினமணி', தனது 8-வது பதிப்பை புதுதில்லியில் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.  மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 13-வது நினைவு தினமான செப்டம்பர் 11, 1934 அன்று பிறந்த தினமணி, தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தருமபுரி ஆகிய இடங்களிலிருந்து வெளிவருகிறது. வரும் ஜூன் 3-ம் தேதி புது தில்லியிலிருந்தும் வெளிவர இருக்கிறது.  அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு புதுதில்லி ரஃபி மார்க்கில் உள்ள "கான்ஸ்டிட்யூஷன் கிளப்' அரங்கத்தில் நடைபெற இருக்கும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தினமணி புது  தில்லிப் பதிப்பின் முதல் இதழை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட, நீண்ட நாள் தில்லிவாசியும், மூத்த குடிமகனுமான பட்டாபிராமன் பெற்றுக் கொள்கிறார்.  தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.  மறுநாள் ஜூன் 4-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு புதுதில்லி ரஃபி மார்க்கிலுள்ள மாவ்லாங்கர் அரங்கத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம், "தினமணி' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கிறது. "இன்றைய ஊடகங்களின் போக்கு போற்றத் தக்கதே! மாற்றத் தக்கதே!' என்பது பட்டிமன்றத்தின் விவாதப் பொருளாகும்.

புதன், 1 ஜூன், 2011

free supply of rice shceme: இலவச அரிசி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

மத்திய அரசு எல்லாத்திட்டங்களுக்கும் இந்திப் பெயர்களைச் சூட்டுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயரிலேயே அதனை அழைக்க வேண்டும். சில திட்டங்களுக்கான தமிழ்ப்பெயரை மத்திய அரசு ஏற்று இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும். இதில் குறிப்பிட்டுள்ள அந்தியோதயா, அன்னயோசனா என்பவை தனித்தனித்திட்டங்கள். ஏழையர் திட்டம் என்றும்   எளியோர் திட்டம் என்றும் தமிழில் குறிப்பிட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

First Published : 01 Jun 2011 11:21:59 AM IST

Last Updated : 01 Jun 2011 12:44:11 PM IST

சென்னை, ஜூன்.1: குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.அரிசி பெறத் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே இலவச அரிசித் திட்டத்துக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்துக்கான உத்தரவினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இலவச அரிசித் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். நியாயவிலைக் கடையில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கி அவர் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 32 ஆயிரத்து 571 நியாயவிலைக் கடைகளில் அரிசி பெற்றுவரும் 1 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 482 குடும்ப அட்டைதாரர்களும் ஒவ்வொரு மாதமும் அவரவர்களுக்குரிய அரிசி முழுவதையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரத்து 268 அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.இலவச அரிசி வழங்கும் திட்டத் தொடக்க விழாவில் உணவுத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

List of authors of nationalised books: நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் அறிஞர்கள் பட்டியல்


நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் அறிஞர்கள் பட்டியல்


வ.எண்     நூலாசிரியர் பெயர்                             ஆண்டு 
1.        விடுதலைக்கவி பாரதியார் (1967க்கு முன்)
2.        சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
(அ) விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் 1984
(ஆ) பிற அனைத்து நூல்களுக்கும் 2006
3.        பாவேந்தர் பாரதிதாசன் 1990
4.        பேரறிஞர் அண்ணா 1995
5.        பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995
6.        தேவநேயப் பாவாணர் 1996
7.        மறைமலையடிகள் 1997
8.        திரு.வி.க. 1998
9.        திரு. கல்கி 1998
10.     கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998
11.     திரு. திரு. ப. சீவானந்தம் 1998
12.     நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998
13.     திரு. வ.உ. சிதம்பரனார் 1998
14.     திரு. ஏ.எசு.கே. அய்யங்கார் 1998
15.     திரு. வ.இரா. (வ. இராமசாமி அய்யங்கார்) 1998
16.     நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998
17.     திரு. கா.மு. செரீப் 1998
18.     திரு. பரலி சு. நெல்லைப்பர் 1998
19.     திரு. வ.வே.சு. ஐயர் 1998
20.     காரைக்குடி சா. கணேசன் 1998
21.     திரு. ச.து.சு. யோகி 1998
22.     திரு. வெ. சாமிநாத சர்மா 2000
23.     கவிஞர் முடியரசன் 2000
24.     தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 2000
25.     திரு. சாமி சிதம்பரனார் 2000
26.     பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 2001
27.     திரு. புதுமைப்பித்தன் 2002
28.     திருமதி. கு.ப.சேது அம்மாள் 2002
29.     நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் 2004
30.     திரு. க.நா. சுப்பிரமணியம் 2004
31.     திரு. ந. பிச்சமூர்த்தி 2004
32.     புலவர் குழந்தை 2006
33.     பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) 2006
34.     திரு. கா.சு. பிள்ளை 2006-2007
35.     புலவர் குலாம் காதிறு நாவலர் 2006-2007
36.     திரு.தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் 2006-2007
37.     முனைவர் சி. இலக்குவனார் 2006-2007
38.     மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 2006-2007
39.     திரு.தி.ச.அரங்கநாதன் (தி..ர) 2006-2007
40.     திரு. நாரண துரைக்கண்ணன் 2006-2007
41.     முனைவர் மா. இராசமாணிக்கனார் 2006-2007
42.     முனைவர் வ.சு.ப. மாணிக்கம் 2006-2007
43.     புலவர் கா. கோவிந்தன் 2006-2007
44.     திரு. சக்தி வை. கோவிந்தன் 2006-2007
45.     திரு. தெ.பெ. மீனாட்சி சுந்தரனார் 2006-2007
46.     திரு.த.நா. குமாரசாமி 2006-2007
47.     திரு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2006-2007
48.     திரு. ம. சிங்காரவேலர் 2007 - 08
49.     தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2007 - 08
50.     திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் 2007 - 08
51.     திரு. கி.வா. சகந்நாதன் 2007 - 08
52.     திரு. ஔவை துரைசாமி பிள்ளை 2007 - 08
53.     திரு. அ.ச. ஞானசம்பந்தனார் 2007 - 08
54.     திருக்குறளார் முனுசாமி 2007 - 08
55.     உவமைக்கவிஞர் சுரதா 2007 - 08
56.     திரு. சாவி 2007 - 08
57.     திரு. மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் 2007 - 08
58.     திரு. தீபம் நா. பார்த்தசாரதி 2007 - 08
59.     திரு.எசு.எசு. தென்னரசு 2007 - 08
60.     திரு.சி.பி. சிற்றரசு 2007 - 08
61.     திரு.ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007 - 08
62.     திரு.டி.கே. சீனிவாசன் 2007 - 08
63.     திரு. இராம. அரங்கண்ணல் 2007 - 08
64.     கவிஞர் வாணிதாசன் 2007 - 08
65.     கவிஞர் கருணானந்தம் 2007 - 08
66.     திரு. மருதகாசி 2007 - 08
67.     சலகண்டபுரம் ப. கண்ணன் 2007 - 08
68.     கவிஞர் பெரியசாமித்தூரன் 2008 - 09
69.     பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 2008 - 09
70.     பண்டித க. அயோத்திதாசர் 2008 - 09
71.     திரு. ஆபிரகாம் பண்டிதர் 2008 - 09
72.     திரு. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008 - 09
73.     முனைவர் இரா.பி. சேதுப்பிள்ளை 2008 - 09
74.     மகாவித்வான் இரா. இராகவையங்கார் 2008 - 09
75.     திரு. உடுமலை நாராயண கவி 2008 - 09
76.     திரு.கு.மு.அண்ணல் தங்கோ 2008 - 09
77.     திரு. ஔவை தி.க. சண்முகம் 2008 - 09
78.     திரு. விந்தன் 2008 - 09
79.     திரு. இலா.ச. இராமாமிர்தம் 2008 - 09
80.     திரு. வல்லிக்கண்ணன் 2008 - 09
81.     திரு.நா. வானமாமலை 2008 - 09
82.     கவிஞர் புதுவைச் சிவம் 2008 - 09
83.     திரு.அ. இராகவன் 2008 - 09
84.     திரு.தொ.மு.சி. இரகுநாதன் 2008 - 09
85.     திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் 2008 - 09
86.     முனைவர் ந. சஞ்சீவி 2008 - 09
87.     திரு. முல்லை முத்தையா 2008 - 09
88.     கவிஞர் எசு.டி. சுந்தரம் 2008 - 09
89.     கவிஞர் மீரா 2008 - 09
90.     பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 2008 - 09
91.     புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008 - 09
92.     திரு.சு. சமுத்திரம் 2008 - 09
93.     திரு. கோவை இளஞ்சேரன் 2008 - 09
94.     பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008 - 09
95.     பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008
96.     குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 2009 - 10
97.     பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 2009 - 10
98.     பம்மல் சம்பந்தனார் 2009 - 10
99.     திரு.அ. சிதம்பரநாதன் செட்டியார் 2009 - 10
100.  திரு.மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை 2009 - 10
101.  திரு.தொ.மு. பாசுகரத் தொண்டைமான் 2009 - 10
102.  திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 2009 - 10
103.  முனைவர் ச. அகத்தியலிங்கம் 2009 - 10
104.  பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009 - 10
105.  திரு. புலியூர்க் கேசிகன் 2009 - 10
106.  திரு.வை.மு. கோதைநாயகி 2009 - 10
107.  திரு. சின்ன அண்ணாமலை 2009 - 10
108.  திரு.என்.வி. கலைமணி 2009 - 10
109.  கவிஞர் முருகு சுந்தரம் 2009 - 10
110.  புலவர் த. கோவேந்தன் 2009 - 10
111.  திரு. அ.க. நவநீதக்கிருட்டிணன் 2009 - 10
112.  திரு. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 2009 - 10
113.  பேரா.மு. இராகவையங்கார் 2009 - 10
114.  பூவை.எசு. ஆறுமுகம் 2009 - 10
115.  பேரா. வையாபுரிப்பிள்ளை 2009 - 10
116.  இராய சொக்கலிங்கம் 2009 - 10
117.  திருமதி. இராசம் கிருட்டிணன் 2009-10 (சிறப்புத் தேர்வு)
118.  திரு. மணவை முசுதபா 2009-10 (சிறப்புத் தேர்வு) 
119.  பேரா. அ.மு. பரமசிவானந்தம் 2010 -2011
120.  பேரா. அ. கிருட்டிணமூர்த்தி 2010 -2011
121.  பேரா. எசு. எம். கமால் 2010 -2011
122.  ப. இராமசாமி 2010 -2011
123.  பேரா. இர. சீனிவாசன் 2010 -2011
124.  வ.சு. செங்கல்வராய பிள்ளை 2010 -2011
125.  கவிஞர் வெள்ளியங்காட்டான் 2010 -2011
126.  நெ.து. சுந்தரவடிவேலு 2010 -2011
127.  முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 2010 -2011
128.  மயிலை சிவமுத்து 2010 -2011
129.  காழி சிவகண்ணுசாமி பிள்ளை 2010 -2011
130.  கே.பி.நீலமணி 2010 -2011
131.  கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் 2010 -2011
132.  அ.திருமலை முத்துசாமி 2010 -2011
133.  எசு. நவராசு செல்லையா 2010 -2011
134.   திரிகூட சுந்தரம் 2010 -2011
135.   பேரா. சுந்தர சண்முகனார் 2010 -2011
136.   தஞ்சை இராமையாதாசு 2010 -2011
137.   கவிஞர் தாராபாரதி 2010 -2011
138.   அருதனக்குட்டி அடிகளார் 2010 -2011
139.  சரோசா இராமமூர்த்தி 2010 -2011
140.  அ. சீனிவாசன் 2010 -2011


Pictures in common places are rubbed: இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்

நடுநிலையுடன் செய்தி எழுதியுள்ள செய்தியாளருக்குப் பாராட்டுகள்.ஓவியக் கலை வளர்ச்சிக்கும் நகரின் அழகிற்கும் எதிரான நடவடிக்கையை நிறுத்த முதல்வர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்போம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, கோவை மாநகர சாலையோர சுவர்களில் தமிழர் பாரம்பரியம், வாழ்க்கை முறை, கலாசாரத்தை புதிய தலை முறையினருக்கும் புரிய வைக்கும் வகையில், அழகுமிகு ஓவியங்கள் வரையப்பட்டன. ரசிக் கும்படியான ஓவியங்களை அதி. மு.க.,வினர் அழித்து, அரசியல் விளம்பரங்களால் அலங்கோலமாக்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில், கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. செம்மொழி மாநாட்டுக்காக உற்சாகமாக கோவை தயாராகிக் கொண்டிருந்தது. சாலை மேம்பாடு, பாலங்கள் விரிவாக்கம், நடைபாதை, புதிய விளக்குகள், பூங்காக்கள் என கோவை நகரிலும், நகரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்தன. பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், ஒரே ஆண்டில் சில மாதங்களில் வேக, வேகமாக நடந்தன. செம்மொழி மாநாடு, எந்த காரணத்துக்காக நடத்தப்பட்டிருந்தாலும் அதனால் கோவை நகரம் பயன் அடைந்ததை யாராலும் மறுக்க முடியாது. அந்த மாநாட்டுக்காக, தனியார் தொழில் அமைப்புக்குச் சொந்தமான இடத்திலும் தனியாரிடத்திலும் நடந்த மேம்பாட்டுப் பணிகள் சர்ச்சைக்குரியவை. ஆனால், நகரை அழகுபடுத்த அப்போதைய தி.மு.க., அரசு எடுத்த முயற்சிகள் பலராலும் வரவேற்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகத்தான் கோவை நகரிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சுவர்களிலும், தனியார் சுவர்களிலும் சங்க இலக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. தற்காலத் தலைமுறைக்கு நமது மண்ணின் மகிமையையும், கலைகளின் மேன்மையையும் விளக்கிய அந்த ஓவியங்களில் அரசியல் சார்புடைய எந்தக் குறிப்புகளும் இடம் பெறவில்லை. உதாரணமாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களைப் பற்றிய ஓவியங்கள் பல இடங்களில் வரையப்பட்டு, தமிழ் நிலங்களைப் பற்றிய தகவல்களை தற்போதுள்ள இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறின.

அவை அழகாக இருந்தன என்பதை விட, அந்தச் சுவர்களை அசிங்கப்படாமல் பாதுகாக்கவும் உதவின. அது மட்டுமின்றி, நகரம் முழுவதும் கட்டுப்பாடின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியின் தடயங்களை அழிப்பதற்கான முயற்சியாக, செம்மொழி மாநாட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் அ.தி.மு.க.,வினரால் அழிக்கப்படுகின்றன. வடகோவை மேம்பாலத்தில் இருந்த ஓவியங்கள் அழிக்கப்பட்டு, அங்கு முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்துவதாக அரசியல் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதேபோல, நகரின் பல பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அ.தி.மு.க.,வினரின் வாழ்த்து விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. அத்துடன், கட்டுப்பாடற்ற வகையில், "பிளக்ஸ் பேனர்'களும் விதிகளை மீறியும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், புதிய ஆட்சிக்கு வாழ்த்துச் சொல்வதற்காகவும் வைக்கப்பட்ட இந்த பிளக்ஸ் பேனர்களில் பெரும்பாலானவை அகற்றப்படவே இல்லை. அதையும் விட, அமைச்சர் வேலுமணியை வரவேற்று வைக்கப்பட்ட "பிளக்ஸ் பேனர்'களின் எண்ணிக்கையும், அதன் பிரமாண்டமும் ஜெ.,பிறந்த நாள் விழாவுக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களையும் மிஞ்சுவதாக இருந்தன.

மிகவும் குறுகலான ஆத்துப்பாலம்-உக்கடம் ரோட்டிலும் கூட, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றுவதற்கு காவல்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் முன் வராத நிலையில், இவற்றால் ஏராளமான சிரமங்கள் ஏற்படுகின்றன. இப்போதே இப்படி என்றால், இனி வரும் நாட்களில் இந்த விதிமீறல் எந்த அளவுக்குப் போகுமோ என்ற பயம், கோவை மக்களிடம் இப்போதே எழுந்து விட்டது. அரசியல் சுயலாபத்துக்காக செம்மொழி மாநாட்டை நடத்தியதாகக் குற்றம்சாட்டும் அ.தி.மு.க.,வினர், அதனால், நகருக்குக் கிடைத்த நன்மைகளை நினைவு கூர்ந்து, அதையும்விட தங்களது ஆட்சிக்காலத் தில் கோவை நகருக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், நகரை அழகுபடுத்தவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து, நகரை அலங்கோலமாக்குவது சரியல்ல என்பது மக்களின் கருத்து. கலையும் கனவுகள் : தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தையும், சமச்சீர் கல்வியையும் புறக்கணித்த அ.தி.மு.க., அரசு, கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, இன்னும் பணிகளே துவங்காத செம்மொழிப் பூங்கா, காந்திபுரம் பல அடுக்கு மேம்பாலங்களை அமைப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஒரு வேளை பாலம் கட்டப்பட வாய்ப் பிருந்தாலும், சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா என்பது கலைந்து போன கனவுதான்.

- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-06-01 00:59:56 IST Report Abuse
யாரு இந்த வேலு மணி குஞ்சு மணிக்கி தம்பியா?? இல்ல அண்ணனா?? வேலுமணி உன்ன மாதிரி ஆளுங்க நாலா தான் கட்சி பேரே கெட்டு குட்டிசுவரா போகுது... கொஞ்சம் அடக்கி வாசி...ஆட்சிக்கி வருவதற்கு முன்னாடி வரைக்கும் கூழ கும்மிடு போடுறீங்க வந்ததுக்கு அப்புறம் உங்க வேலைய காமிக்க ஆரமிச்சுடுறீங்களே .... இது நியாமா?? இப்படியெல்லாம் பன்னநீங்கன்னா அடுத்த முறை கவுத்துடுவாங்க... அப்புறம் பட்ட நாமம் தான்...

Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-06-01 00:47:12 IST Report Abuse
எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தி.மு.க தான்... இவர்களை யார் சுவர்களில் கிறுக்க சொன்னது?? அவனவனக்கு இருக்கிற வேலையில் இவர்கள் சுவற்றில் செய்து வைத்து இருக்கிற கிறுக்கு வேலைகளை மெனக்கெட்டு யாரேனும் படிப்பார்களா?? அது மட்டும் இல்லாமல் இது போன்ற செயல்கள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்கள் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.... இந்த அமைச்சர் சொம்புகளுக்கு ஒரு சின்ன advice "நீங்க என்ன தான் சொம்பு அடிச்சாலும் (சுவற்றில் பந்தா காண்பிப்பது, பெரிய கட்டுஅவுட்டர்கள் வைப்பது) அம்மா உங்களுக்கு ஆப்பு வெக்கணும்னு நெனசிட்டங்கன்னா வெக்காம விட மாட்டாங்க அத மொதல்ல நீங்க புரிஞ்சிக்கணும்.." அதற்கும் மேலாக மக்கள் உங்களுடைய அடவடிதனதையும், அட்டூழியங்களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்... இப்பொழுதிலிருந்தே திருந்த பாருங்கள் இல்லையென்றால் மக்கள் உங்களை பிச்சை எடுக்க வைத்து விடுவார்கள் ஜாக்கிரதை!!!

unmai - chennai,இந்தியா
2011-06-01 00:43:55 IST Report Abuse
ஓட்டு போட்ட மக்களுக்கு.. மாமா பிஸ்கோத்து..

K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
2011-06-01 00:40:18 IST Report Abuse
செம்மொழி மாநாட்டிற்காக அவினாஷி ரோடில் பதிக்கப்பட்ட டைல்ஸ் பெயர்ந்து அலங்கோலமாக உள்ளது.ரோட் மீடியன் டைல்சும் உதிர்கின்றன.நடை பாதைகள் திரும்ப காலை பதம் பார்க்கின்றன.முறை கேடுகள் விசாரிக்க பட வேண்டும்.

VIVASAYI - Salem,இந்தியா
2011-06-01 00:17:10 IST Report Abuse
திமுக வுக்கு எதிராக விழுந்த ஓட்டுக்களை எல்லாம் தனதென நினைத்து தவறான பாதையில் செல்லாதீர்கள்.

R Kannan - Indore,இந்தியா
2011-06-01 00:16:30 IST Report Abuse
அம்மா என்று எழுதுவதால் சுவர் அழகு பெறுகிறது. தமிழ் எழுத்துக்கள் அர்த்தம் பெறுகின்றன. தமிழுக்கு மதிப்புக்கூடுகிறது. தமிழர் தம் கலாச்சாரம் பெருமை அடைகிறது. கருமம்.