சனி, 31 மே, 2025

42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்

 




(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி)

  • பிராமணர்கள் தங்கள் தெருவில் பிற சாதியினர் குறிப்பாக ஆதித் தமிழர்கள் நுழையத் தடை விதித்திருந்தனரே! இவ்வாறு தடை செய்தவர்கள் இந்து மதத்தின் பெயராலேதான் செய்துள்ளனர்.

பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம்.

1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை, ஆகவே, அவரைக் கொன்றது தவறில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

ஆளுநர், நந்தனார் குருபூசை விழாவில்தான் இவ்வாறு பேசியுள்ளார். நந்தனார் வகுப்பாரைச் சிதம்பரத்தில் கோயில் இராச வீதிகளில்கூட நுழையத் தடை விதித்திருந்தனர். பின்னர் கடவுளே தில்லை வாழ் பிராமணர் கனவில் வந்து நந்தனாரை உள்ள நுழைய விடுமாறு சொல்லியும் தீக்குளித்துத்தான் செல்ல வேண்டுமென்று பிராமணர் தெரிவித்து விட்டனர். பின்னர் கடவுளே இவ்வாறு சொன்னதாகவும் தீக்குளித்து பிராமண வடிவம் பெற்று முப்புரிநூலணிந்து தன்னைக் காண வருமாறும் தில்லை நாதரே சொன்னதாகக் கதை கட்டி விட்டனர். அவ்வாறு தீக்குளிக்கச் செய்து சாகடித்து விட்டனர். பின்னர் அவர் தீக்குளித்துச் சிவந்த உருவம் பெற்று பிராமணராக மாறிக் கருவறைக்கு வழிபடச் சென்றதாகவும் கருவறையில் கடவுளுடன் ஒளி வடிவில் ஐக்கியமாகி விட்டதாகவும் கூறினர். வள்ளலார் இராமலிங்க அடிகளாரையும் தீயூட்டிக் கொன்றுவிட்டு இறைவனுடன் கலந்து விட்டதாகக் கதை கட்டினர். கடவுளை வணங்கவும் பிராமணர்க்கே தகுதி எனவும், எனவேதான் நந்தனாரைக் கடவுள் பிராமணவடிவில் வரச்சொன்னதாகவும் சொல்லிப் பிராமணப் பிறப்பை உயர்த்தினர்.

எனவே, இத்தகைய கொடுங்கேடுகள் இந்துசமயத்தில் இருப்பதை ஒத்துக் கொண்டு இவற்றிற்கு எதிராகப் போராடி அனைவருக்கும் சம உரிமை தரும் சமயமாக அதனை மாற்ற அவர் தொண்டாற்றுவாராக!

  • உயர்வு தாழ்வே சனாதனத்தின் அடிப்படை என்பதை இங்குள்ள பல கருத்துகள் மூலம் விளக்கியுள்ளோம். எனினும் அண்மை நிகழ்வு ஒன்றைச் சொல்வது காலங்காலமாக சனாதனம் நீடித்துள்ளதையும் எனவே அதை விரட்டி யடிப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்  என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றப்  புதிய கட்டடத்தில் செட்டம்பர் 19-22 நாட்களில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. (18.09.அன்று பழைய கட்டடத்தில் நிறைவு அமர்வாக நடைபெற்றது.) இறுதி நாளன்று  தெற்குத் தில்லி உறுப்பினர் இரமேசு பிதுரி உரையாற்றினார். அப்பொழுது சமாசுவாடிக்கட்சியின் உறுப்பினர் குன்வர் தேனிசு அலி குறுக்கிட்டுப் பேச முயன்றார். அவரும் நாடாளுமன்ற உறுப்பினர்தான். எனினும் இசுலாமியராயிற்றே! எனவே, அவர் எப்படிக் குறுக்கே பேசுவது எனச் சினம் கொண்டார். எனவே, “ஏய், நுனித் தோலை நீக்கியவனே, மாமா பயலே,” என்றெல்லாம் மிகக் கடுமையான சொற்களால் வசைபாடினார். அவைத்தலைவர் நிறுத்துமாறு கூறியும் மீண்டும் மீண்டும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வரவேற்புடன் வசை மழை பொழிந்துள்ளார். இதுதான் சனாதனம்.  இவர்களைத் திருத்த ஆளுநர் முயலட்டும். மாறாகச் சனாதனத்தை உயர்வானதாகத் தவறான பரப்புரை மேற் கொள்ள வேண்டா.

  • சனாதனம் பிராமணர்களை உயர்த்தி அவர்களின் நலன்களுக்காக ஓரவஞ்சனைச் செயற்பாட்டுடன் உள்ளமையால் அவரகளுக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். இழிவாகக் கருதப்படுகின்ற பிறருக்குத் தேவையில்லை.

தோற்றம் என ஒன்று இருந்தால் அழிவு என ஒன்று இருக்கத்தான் செய்யும். இப்பொழுதே பல இடங்களில் அழிந்து வரும் சனாதனம் விரைவில் முற்றிலுமாக அழியும் என்பதே உண்மை.

வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – அன்றே சொன்னார்கள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்



(புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – தொடர்ச்சி)

  கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல் அக்கோளின்  ஒளிவிடும் வெள்ளை நிற அடிப்படையில் தமிழர்கள் அதற்கு வெள்ளி எனப் பெயரிட்டனர்.


 பிற கோள்களையும் விண்மீன்களையும் விட வெள்ளி மிகுதியும் ஒளியுடையது என்பதை
வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர் வர (பதிற்றுப்பத்து :24 : 23)
என்னும் வரியில் புலவர் பாலைக் கௌதமனார் கூறுகிறார். (வயங்கு-விளங்குகின்ற)
முல்லைப் பூவின் நிறத்தை வெள்ளியின் ஒளியுடன் ஒப்பிட்டுப் புலவர் மாங்குடி மருதனார்
வெள்ளி அன்ன ஒள் வீ       (மதுரைக்காஞ்சி 280)
என்கிறார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் சுண்ணாம்பு வெள்ளியைப் போல் வெள்ளையாக இருக்கும் என்பதை
வெள்ளி அன்ன விளங்கும் சுதை  (நெடுநல்வாடை : 110)
என்கிறார்.

வெள்ளி போன்று விளங்கும் பூங்கொத்து
வெள்ளி அன்ன விளங்கு இணர் (நற்றிணை : 249: 3)
எனப் புலவர் உலோச்சனாரால் சொல்லப்படுகிறது. (இணர்-பூங்கொத்து)
மிகுந்த வெண்நிறமாகிய வெள்ளிக்கோள் ஏறு என்னும் ஓரையைச் (இடபராசி) சேருகிறது என்பதைப் புலவர் நல்லந்துவனார்  
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர (பரிபாடல் : 11: 4)
என்கிறார். இவை யெல்லாம் வெள்ளிக்கோளின் நிறம் பற்றிய விளக்கங்கள் ஆகும்.

இது மாலையில் இரவு அரும்பும் பொழுதும் காலையில் பொழுது விடியும் பொழுதும் தோன்றும். விடியற்காலையில் தோன்றுவதால் விடிவெள்ளி என்று கூறுவர். இதனையும் புலவர்கள் தெரிவித்துள்ளனர்.


இருள் செறிந்த விடியற்காலையில் விரிந்த கதிர்களுடன் வெள்ளி முளைப்பதைப் புலவர் முடத்தாமக்கண்ணியார்
விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்  (பொருநராற்றுப்படை 70-71)என்கிறார்.

பறவைகள் குரல் எழுப்பிப் பறக்கும் விடியற்காலைப் பொழுதில் வெள்ளி தோன்றுவதைப் புலவர் கல்லாடனார்
 வெள்ளி தோன்ற புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல்        (புறநானூறு : 385: 1-2)
எனக் குறிப்பிடுகிறார். 

விடியலில் வெள்ளி வானத்தில் எழுந்தது என்பதை
வெள்ளியும் இருவிசும்பு ஏர் தரும் (புறநானூறு 397 : 1)
எனப் புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் கூறுகிறார்.


வைகறையில் திங்களின் நிலவொளி மறைந்து வெள்ளி தோன்றியது எனப் புலவர் திருத்தாமனார்,
மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர (புறநானூறு 398 : 1)
என்னும் அடியில் கூறுகிறார்.

‘வைகுறு மீன்’ எனப் பெரும்பாணாற்றுப் படையும் (318:17)
அகநானூறும் (17:21)  வைகறையில் தோன்றும் கோள் என்பதைக்
கூறுகின்றன.

வைகறையில் எழுந்து விடிவெள்ளியின் தோற்றம் கண்டு காலத்தை உணர்ந்து குளித்தனர் என்பதை,
’விளக்குறு வெள்ளி முளைத்து முன்தோன்ற
. . . .        . . . . .            . . . .
தெளித்தலைத் தண்ணீர் குளித்தனன் ஆடி’
எனப் பின்னர் வந்த பெருங்கதை (1:53:81. .86) கூறுகிறது. இதுபோல் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு பயணம் தொடங்குதல் முதலிய பல நிகழ்வுகள் நடந்தமையைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.


வெள்ளி கிழக்கே தோன்றும் என்பதைக்
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் (நற்றிணை: 230: 4)
என்கிறார் புலவர் ஆலங்குடி வங்கனார்.
   குணக்குத்தோன்று வெள்ளி  (நற்றிணை 356 : 9)
எனப் புலவர் பரணரும் கூறுகிறார்.

வெள்ளி இடம் மாறித் தோன்றினாலும் வழக்கத்திற்கு மாறாகத் திசை மாறி நகர்ந்தாலும் தீமை விளையும் என்பது எல்லா நாட்டு மக்களின் நம்பிக்கை. அதுபோல், வெள்ளி தென்திசை தோன்றுமாயின் நாட்டில் கொடிய பஞ்சம், வறுமை முதலிய துன்பங்கள் வந்து எய்தும் என நம்பினர். ஆனால், குடி மக்கள் நலம் நாடும் செங்கோல் ஆட்சியில் இதனால் எத்தீமையும் விளையாது எனக் கோள் (கிரகங்கள்) ஆட்சியை விடக் கோல்ஆட்சியைப் பெரிதும் போற்றினர் தமிழ் மக்கள். அதற்கிணங்கப் புலவர்  வெள்ளைக்குடி நாகனார், வெள்ளி தெற்கே தோன்றி இன்னலை விளைவிப்பதாக இருந்தாலும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிச் சிறப்பாகவே இருக்கும் என்பதை
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறநானூறு 35.7)
குறை வராமல் நிறைவளம் கொண்ட நாடு எனப் போற்றுகிறார்.

இளங்கோ அடிகளும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் : 10 : 103)
வறட்சி இன்மையை விளக்குகிறார்.

புலவர் கபிலரும் பாரியின் ஆட்சிச் சிறப்பைப் பாடும் பொழுது
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்   (புறநானூறு 117.2)
பாரிமன்னனின் செங்கோல் ஆட்சியால் சிறப்பு மிக்கதாக உள்ளதாகக் கூறுகிறார்.

வெள்ளி தென்திசையில் தங்குதல் வறட்சியின் அடையாளம் என்பதைப் புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை  (புறநானூறு : 388 : 1-2)
என்கிறார்.

வெள்ளி மழைக்கோள் என அழைக்கப் பெறும். எனவே, தெற்கே அது தங்கும் காலம் மழைவளம் இன்றி வறட்சி ஏற்படும் எனக் கண்டறிந்து உள்ளனர்.
(பள்ளம் – நீர்நிலை; வாடிய – /விளையும் வயல்களும் நீர்நிலைகளும்/ வற்றிய; பயனில்காலை- பயனற்ற பஞ்சக்காலம்)

செவ்வாயும் வெள்ளியும் அருகே இருந்தால் மழை பெய்யாது.  அவ்வாறில்லாமல் மழை வேண்டும் வயல்களுக்கு வேண்டியவாறு மழைபெய்து வளம் மிகுந்த நாடு எனப் புலவர் குமட்டூர்க்கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நாட்டுச் சிறப்பைக் கூறும் பொழுது

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப  (பதிற்றுப்பத்து 13 : 25-26)
என்கிறார்.
(அழல் – செவ்வாய்; மருங்கு – அருகே; புலம்-மழை தேவைப்படும் நிலப்பகுதிகள்)

 வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி(பதிற்றுப்பத்து :24.24) என்னும் புலவர்பாலைக் கௌதமனார், வெள்ளிக் கோளின் நிலையை விளக்குகிறார்.
(வறிது – சிறிது; இறைஞ்சிய – சாய்ந்த; மழைக்கோளாகிய வெள்ளி வடக்கே தாழ்ந்தால் மழை ஏற்படும்; தெற்கே எழுந்தால் மழையின்மை ஏற்படும்.)
மழைக்கோளாகிய வெள்ளி தென்திசையில் தெரிவது தீய நிகழ்வின் முன்னறிவிப்பு; மழையின்மையை உணர்த்தும். எனினும், அவ்வாறு,

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்  (பட்டினப்பாலை : 1-2)

சோழவேந்தன் திருமாவளவன் ஆட்சியில் காவிரி வற்றாது எனப்
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறியுள்ளார்.
(வசைஇல்-குற்றம் இல்லாத; வயங்கு-விளங்குகின்ற)
இயற்கைச் சீற்றத்திலும் மக்கள் நலம்நாடும் செங்கோலாட்சி அப்பொழுது நடைபெற்றுள்ளது. இப்பொழுது …..?

நட்பூ இதழ் 2011

வெள்ளி, 30 மே, 2025

41. சமநீதி வழங்குவதே சனாதனம். உயர்வு தாழ்வு கற்பிப்பது சனாதனம் அல்ல என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் பொய்யும் மெய்யும் 38-40 – தொடர்ச்சி)

கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் நம்பக்கூடியவர்களும் இருப்பார்கள் என்று பொய்களை முரசறைவோர் இருக்கத்தான் செய்கின்றனர்என் செய்வதுபின்வரும் மனு கூறும் விதிகளைப் பாருங்கள். பிறகு முடிவெடுக்கலாம். நீதியில் மட்டுமல்ல நீதி வழங்கும் பொறுப்பிலும் பிராமணருக்கு ஒரு நீதி பிறருக்கு வேறொரு நீதி என்பதை உணரலாம்.

பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு 8. 20)

பெண்கள் புணர்ச்சி விசயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விசயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை” ( மனு  8. 112)

 நீதித் தலங்களில் பிரமாணம் செய்ய (உறுதி யெடுக்க) வேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்குக் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும். (மனு 8. 113, 115)

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். (மனு 8 . 270)

சூத்திரன் பிராமணர்களின் பெயர், சாதி இவற்றைச் சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்” ( மனு 8. 271)

பிராமணனைப் பார்த்து, “நீ இதைச் செய்ய வேண்டும்”, என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (மனு 8. 272)

சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும். (மனு  8. 281)

பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு  பிராமண ரல்லாதாரைக் கொன்றவனுக்குப் பாவமில்லை. (மனு  8.349)

சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்.” (மனு  8.30)

சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால்  துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும். (மனு 8. 374)

பிராமணன் மற்ற வருணத்தார் பெண்களைப் புணர்ந்தால் அது தருமம். (மனு 8.13)

பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். (மனு 8. 380)

அரசன் சூத்திரனைப் பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்குப் பணி விடை செய்யும்படிக் கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். (மனு 8. 410)

பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான். (மனு 8.413)

பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான். (மனு 8. 417)

சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எசமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. – மனு அத்தியாயம் 9 சுலோகம் 416.

பிராமணனால் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை. (மனு 8.155)

பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளைப் பிராமணன் தம் விருப்பப்படிக் கொள்ளையிடலாம். (மனு  9. 248.

பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். (மனு 9. 319)

பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவ னாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ் செய்தால் அவனைச் சூனியம் செய்து ஒழிக்க வேண்டும். (மனு 9.320)

சூத்திரனுக்குப் பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றைப் பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. (மனு 11. 12)

அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் செபித்தால் போதுமானது. (மனு 11 .132)

சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனே யாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். மனு 10 . 75)

பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய சீவனத்துக்குக் கொடுக்கப்படும். (மனு 10. 125)

மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதரும சாத்திரத்தால் என்ன தருமம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். ( மனு  2. 7)

மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனைத் தண்டிக்கவும். ( மனு 8. 358 )

கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனுக்கு ஒரு வருடக் காவலும் சொத்துப் பறிமுதலும் தண்டனைகள்.  இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக!  ( மனு 8.  374)

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர்; ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர். (மனு 9. 3)

(தொடரும்)

புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – அன்றே சொன்னார்கள் 33 – இலக்குவனார்திருவள்ளுவன்

 




(திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – தொடர்ச்சி)

புதன் கோளுக்கு ஆங்கிலத்தில் மெர்க்குரி எனப் பெயர். மெர்க்குரீஇசு(Mercurius) என்னும்  இலத்தீன் சொல்லில் இருந்து இச் சொல் உருவானது. மெர்க்குரி எனப்படும் புதன் கோள் வணிகக்கடவுளாகவும் தூதுத் தேவதையும் மைய்யாவின் (Maia) மகனுமாகும். கிரேக்க, உரோமன் தொன்மக்கதைகள் போன்றுதான் ஆரியக்கதையும் இயற்கைக் கோள்களைத் தெய்வப் பிறப்பாக அல்லது தேவதைகளாகக் கற்பனைச் சிறகெடுத்துச் சொல்லப்படும். பின்னர் ஆரியத்தாக்கத்தால் கோள்களைப் பற்றிய மூடக் கதைகள் தமிழிலும் இடம் பெற்றிருந்தாலும் தொடக்கத்தில் அறிவியல் அடிப்படையில்தான் உண்மைகளை உணர்ந்து தெரிவித்துள்ளனர்.

புதனுக்குத் தூதன் எனத் தமிழில் பெயர் இருப்பதும் இதனைத் தூது தேவதையாக மேலைநாட்டினர் கருதுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. இரண்டிற்கும் அடிப்படைக் காரணமே புதனின் விரைவான இயக்கம்தான். தூதன் விரைவாகச் செல்ல வேண்டுமல்லவா?

புதன், கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே கடு வெப்பமாகவும் இருக்கும். இதன் நிறம் சாம்பல். சூரியன் அருகில் உள்ளதால் தோன்றும் தோற்றத்தைக் கொண்டு செம்மஞ்சள் என்பாரும் உள்ளனர். ஆனால், புதனுக்குப் பச்சை என்றும் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். பச்சை என்பது நிறமாக இருப்பின், -சனியின் நிறம் கருப்பு, செவ்வாய் நிறம் சிவப்பு என அறிந்து இருந்தமையால் – ஆய்தற்குரியது. பச்சை என்றால் புதிய என்னும் பொருளும் உண்டு. எனவேதான் பிறந்த பருவத்தில் உள்ள  குழந்தையை நாம் பச்சைக் குழந்தை என்று சொல்கிறோம். அந்த வகையில் பெயர் அமைந்திருக்கலாம் என்பதை விளக்க விரும்புகிறேன். வெள்ளி  சூரியன் மறையும் பொழுதும் தோன்றும் பொழுதும் தெரியக் கூடியது. முதலில் வெள்ளியைக் கண்டுபிடித்துள்ளனர் தமிழர்கள். வெள்ளி போன்றே புதனையும் அந்தி அல்லது வைகறைக் காலத்தில் – சூரியன் மறைகின்ற அல்லது தோன்றுகின்ற காலத்தில் – பின்னர் அறிந்துள்ளனர். அஃதாவது, கீழ்வானில் சூரியன் தோன்றுவதற்குச் சற்று முன்பாகவும் மேற்குவானில் சூரியன் மறைவதற்குச் சற்றுப்பின்பாகவும் புதன் மங்கலாகத் தோற்றம் அளிக்கும். புதன் வேகமாகச் சுழல்வதாலும் சூரியன் அருகே உள்ளதாலும் முதலில் புலப்படாமல் பின்னரே புலப்பட்டிருக்கிறது. எனவே, வெள்ளி போன்றே குறிப்பிட்ட நேரங்களில் தெரியும் புதன் கோளைக் கண்டறிந்தவர்கள் புதிய விடிகோள் என்பதால் பச்சை எனப் பெயர் இட்டிருக்கலாம்.

இதனை அறிவன் என்றும் கூறுவர். கரிய கோளான சனியைக் கரியன் எனக் கூறியது போல் காண்பதற்கு அரியது ஆன இதனை அரியன் எனக் கூறி இச்சொல் அறியவனாக மாறி அறிவனாகச் சுருங்கி இருக்கலாம். புதனைப் புத்தியுடன் தொடர்பு படுத்தி அறிவுடையவன் என விளக்கம் கூறுவது தவறாகும். இத்தவறான புரிதலின் அடிப்படையில்தான் அறிஞன், மதிமகன், மேதை முதலான பெயர்களில் புதன் அழைக்கப்பட்டுள்ளது(பிங்கல நிகண்டு: பா 231). புதவு என்பது வாயிலைக் குறிக்கும். சூரியனைச் சுற்றி உள்ள மண்டிலத்தில் சூரியனுக்கு அடுத்ததாகச் சூரிய ஒளி பரவும் இடத்தின்  வாயில்போல் அமைந்துள்ளதால் புத் என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படையில் புதன் எனப் பெயர் வந்திருக்கலாம்.

 மரபு தொடருவதற்கு வாயிலாகப் பிறக்கும் மகன் அல்லது மகள், புதல்வன் அல்லது புதல்வி என அழைக்கப்படுகின்றனர் அல்லவா? இவை போன்று சூரிய மண்டிலத்தின் வாயில் போல் அமைந்துள்ளதை உணர்த்தும் புதன் என்னும் சொல் அறிவியல் உண்மையை உணர்த்தும் தமிழ்ச் சொல்லாகும்.


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழியும் அறிவியல் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இங்கு பொன் என்பது வெள்ளியைக் குறிக்கும்.(வெள்ளியின் மற்றொரு பெயர் வெண்பொன் என்பதாகும்.) இதனைக் கதிரவன் ஒளியில் காண்பது அரிது. இவ்வாறான சூழலில் வெள்ளியைக் காண முடிந்தாலும் கதிரவனுக்கு மிக அருகில் உள்ளதால் புதனைக் காண இயலாது என்னும் உண்மையைக் கூறியுள்ளதால் நம் முன்னோரின் வான நூல் அறிவு வியக்கத் தக்கதாகும்.

எத்தனை எத்தனை அறிவியல் உண்மைகள் நம்மிடையே மூடநம்பிக்கைப் போர்வையில் மறைக்கப்பட்டு உள்ளனவோ!.

வியாழன், 29 மே, 2025

38. சனாதனத் தருமத்தில் தீண்டாமைக்கு இடமில்லை(ஆளுநர் இரவி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்பது அறிவிலித்தனம் 40. சனாதனத்திற்கு ஆதரவாக நாடே கொந்தளிக்கிறது.- பொய்மைகள்



    (சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி)

    • இவ்வாறு சனாதனத்தில்/இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று பலர் பிதற்றி வருகிறார்கள். மனுவில் தீண்டாமை என்னும் சொல் இடம் பெறாதிருக்கலாம். ஆனால் அது கூறும் கருத்துகள் எல்லாம் தீண்டாமைதானே!

    சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241)

     சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி (மனு 8. 22)

    தொடாதே என்றால் தீண்டாதே என்றுதானே பொருள். இவையெல்லாம் தீண்டாமை இல்லாமல் வேறு என்னவாம்?

    கிமு 300 மற்றும் கிபி 400க்கு இடைப்பட்டவை சாதகக் கதைகள். அவற்றில் தொகுதி 4.391 இல், உயர்சாதிப்பெண்கள் இருவர் தீண்டத்தகாதக் கீழ்ச் சாதிப்பெண்கள் இருவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர்களைப் பார்த்த கண்களைக் கழுவிக் கொண்டார்களாம். பார்வையால் கூடத் தீண்டாக் கொடுமை இந்துமதத்தில் இருந்ததற்கு இதுவே சான்று.

    சிலர் இப்போது தீண்டாமை இல்லை என்பார்கள். தீண்டத்தகாதவர்களுடன் உறவு வைப்பதாகக் கூறித்தானே பல காதலர்கள் கொலை செய்யப்படுகின்றனர். 

    பிராமணப் பெண்கள் பலர் வீட்டில் வீட்டுவேலை பார்க்கும் பணிப்பெண் கொல்லைப்புறம் சென்று பாத்திரங்களைத் துலக்கி விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் வீட்டு அம்மா அவற்றைக் கழுவி உள்ளே கொண்டு செல்வார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்த பின் இது குறைந்தாலும் பலர், பணிப்பெண்கள் கழுவிய பாத்திரங்களைத் தீட்டு என்று சொல்லி மீண்டும் கழுவித்தான் பயன்படுத்துகின்றனர்.

    (தொடரும்)