சனி, 3 ஆகஸ்ட், 2019

வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?

வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வரும் ஆடி 20/ 05.04.2019 அன்று நடைபெற உள்ளது. இங்கே முதன்மைப் போட்டி அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும்தான்.
ஆரணி சொக்கலிங்கம் சண்முகம் ஆகிய ஏ.சி. சண்முகம், தான் தலைவராக இருந்து நடத்தும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வேட்பாளர் என்றே இவரைக் கூறலாம். எம்ஞ்சியார் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்,  மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி முதலானவற்றின் மூலம் பொதுக்கல்வியும் மருத்துவக் கல்வியும் பரவுவதற்குப் பணியாற்றுகிறார்.
முதலில் தான்  சேர்ந்திருந்த அ.தி.மு.க.வின் சார்பில் 1984 இல் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர். 2014 இல் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை யிழந்தவர்.
எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து தொழில் நடத்துவோர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், கல்வி நிலையங்களின் நிறுவனர் என்ற முறையில் மக்களுக்குத் தொண்டாற்றிச் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர்.  செல்வச்செழிப்பும் அதனால் வரும் செல்வாக்கும் இவருக்குத் துணை நிற்பவை. எனினும்  இவையே இவரை எளியோரிடம் பழகுவதில் இருந்து விலக்கி வைப்பதால்  தொண்டர்களால் அணுக முடியாதவர் என்ற அவப்பெயருக்கும் ஆளாகிறவர்.
1984 இல் 52விழுக்காட்டளவில் வாக்குகள் பெற்று வெற்றி எய்தியவர். 2014 மக்களவைத் தேர்தலில் 59,393 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியைத் தவறவிட்டவர். அப்பொழுது பா.ச.க. சார்பில் போட்டியிட்டபொழுது  தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க., இந்திய சனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரசு ஆகியவை இணைந்த கூட்டணியில் போட்டியிட்டார். 
இப்போதைய தேர்தலில் இந்த அணியில் இருந்த ம.தி.மு.க., இந்திய சனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரசு ஆகியவை தி.மு.க. கூட்டணியில் உள்ளன. அ.தி.மு.க., த.மா.க. புதிய தமிழகம் இணைந்துள்ளன. மாறிச்சென்றுள்ள கட்சியினருக்குக் கிடைக்கும் வாக்குகளைவிட இவ்வணியைத் தலைமைதாங்கும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பேரளவானது. எனவே, அ.தி.மு.க.வின் செல்வாக்காலும் தனிப்பட்ட செல்வாக்காலும் இவர் வெற்றி வாயிலில் எளிதில் நுழையலாம்.
தான் வெற்றி பெற்று அமைச்சராகும் கனவில் சண்முகம் உள்ளார். இதனை மறைமுகமாகத் தன் பேச்சில் வெளிப்படுத்துகிறார்.
“எதிர்க்கட்சி வரிசையில் மேலும் ஒருவர் சேர்வதால் என்ன பயன்? தான் வெற்றி பெற்றால் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி)உடன் உள்ள நெருக்கத்தால் தொகுதிக்கு நல்லன ஆற்ற முடியும்” என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடையே விதைக்கிறார். தொகுதியில் வெற்றிபெற்ற பின்னர் பொதுவாகச் செயல்படவேண்டியது மக்கள் சார்பாளர் கடமை. அதுபோல் ஆட்சி அமைத்ததும் கட்சிச் சார்பின்றி அனைத்துத் தரப்பாரின் நலன்களுக்காகப் பாடுபடவேண்டியது ஆளுங்கட்சியின் கடமை. ஆனால், இந்தக் கடமையைப் பா.ச.க.  ஆற்றாது எனத் தமிழிசை முதலான தலைவர்கள் பேசுவதுபோல் இவரும் பா.ச.க. .வின் உண்மை முகத்தை உணர்த்துகிறார்.
ஆனால், மக்கள் தவறுகளைக் களைவதற்குத் துதிப்பவர்களைவிட மிதிப்பவர்களையே விரும்புகின்றனர். ஆளுங்கட்சியின் நல்லிணக்கக் கூட்டணியில் இருந்தால்  தொகுதிக்குத் தேவையானவற்றிற்காகக் குரல் கொடுக்க முடியாது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தால் நாட்டின் அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியும் என்பது மக்கள் நம்பிக்கை.
 சண்முகம் தோற்றால் அ.தி.மு.க.வின் தோல்வியாகக் காட்டும் பா.ச.க.  இவரின் வெற்றியைத் தன் வெற்றியாகப் பறைசாற்றும். எனவே, இவர் வெற்றிபெறுவதற்கு எல்லா வகையிலும் பா.ச.க.  பின்னணியில் முயல்கிறது. மத்தியத் துறைகள் மூலம் அடக்கியும் அச்சுறுத்தியும் எதிர்க்கட்சிகளைப் பணிய வைக்கும் பா.ச.க. வேலூரில் அந்த உத்தியின் மூலமே எதிர்க்கட்சியின் வெற்றியைத் தடுக்க முயல்கிறது. ஆனால், பா.ச.க.  எந்த அளவிற்கு இத்தேர்தலில் ஒதுங்கி யிருக்குமோ அந்த அளவிற்குச் சண்முகம் மிகுதியான வாக்குகளைப் பெறுவார். இவரின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்.
ஒற்றை நாடு, ஒற்றை ஆட்சி என்ற இலக்கை நோக்கி நடைபோட்டு நாடு முழுவதும் பா.ச.க. ஆட்சியே இருக்க விரும்பும் அதன் போக்கு மக்களின் எதிர்ப்புகளுக்குத்தான் உள்ளாகிறது. அஞ்சலகப் பணிகளுக்கான தேர்வு மொழியிலிருந்து தமிழ் முதலான அனைத்துத் தேசிய மொழிகளையும் நீக்கி இந்தித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்ப்பிற்குப் பின்னர் இதனை நிறுத்தியுள்ளது. முவ்விலக்கு(முத்தலாக்கு) தடைச்சட்டத்தால் இசுலாமியர் வாக்குகளை அதிமுக குறைந்த அளவு பெறுவதற்கான வாய்ப்பே உள்ளது. இவைபோன்ற பா.ச.க.வின் மதவெறிச் செயல்களும் இந்தி, சமற்கிருதத் திணிப்புகளும்  அதற்கு மட்டுமல்ல, அதன் கூட்டாளிகளுக்கும் வேட்டு வைப்பதாக உள்ளது. இச்சூழலில் பா.ச.க.  ஆதரவாளர் வெற்றி பெற்றால் வாய்மூடித் தன் செல்வத்தைப் பெருக்க மட்டும் வழி வகுத்துக்கொள்வார் என மக்கள் எண்ணுகின்றனர்.
தி.மு.க. வெற்றி பெற்றால் அதன் வன்முறைத் தேரோட்டத்தை நிறுத்தி முட்டுக்கட்டை போட உதவும் என எண்ணுகின்றனர்.
எப்படித் தேசிய சனநாயகக் கூட்டணியில் சண்முகம் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்லப்படுகிறாரோ அதுபோல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்டாலும் தி.மு.க.கூட்டணி என்று சொல்லப்படுபவர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்து.
 மண்ணின் மைந்தர், நல்லன செயலாற்ற விரும்பும் துடிப்பான இளைஞர், சிறுபான்மையர் காவலர் என்றெல்லாம் பரப்புரை மேற்கொண்டு இவருக்கு வாக்குகள் திரட்டப்படுகின்றன. உண்மையில் சிறுபான்மையினரில் பெரும்பான்மையர் வாக்கு இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
கதிர் ஆனந்து, முதுகலை வணிக ஆட்சியியல் (எம்.பி.ஏ.) பட்டத்தைப் பால்டுவின் வாலசு பல்கலைக்கழகத்தில் (Baldwin Wallace University) பெற்றவர். கிங்சுடன் பொறியியல் கல்லூரி, கிங்சுடன் பன்னாட்டுக் கல்விக்கழகம்    கிங்சுடன் பதின்நிலைப்பள்ளி ஆகியவற்றை நடத்திக் கதிர் ஆனந்தும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். எனினும் தந்தையின் வழியில் அரசியலுக்கு வந்துள்ளார்.
இவர் தந்தை துரை முருகன் தி.மு.க.வில் முதன்மைச்செயலர், துணைப்பொதுச்செயலர்  முதலான பல பொறுப்புகளை வகித்து இப்பொழுது பொருளாளராக இருப்பவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மக்கள் செல்வாக்கைப் பெற்றவர். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். நகைச்சுவைப் பேச்சாலும் புள்ளி விவரங்களை அள்ளித் தெளிப்பதாலும் மாற்றுக் கட்சியினரையும் கவர்ந்தவர். எனவே, கதிர் ஆனந்து கட்சிக்குப் புதியவர் என்றாலும் தந்தையின் செல்வாக்காலும் தி.மு.க.வின் செல்வாக்காலும் வெற்றிப்பாதையில் நடைபோட வாய்ப்பு உள்ளவர்.
இவ்விருவர் தவிரப் போட்டியிடும் முதன்மையான கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி. இக்கட்சி வேட்பாளர் தீபலட்சுமி வாகை சூட வாய்ப்பில்லை என்றாலும் புதிய வாக்காளர்களிடமும் இளைஞர்களிடமும் பெண்களிடமும் கணிசமான வாக்குகள் பெறுவார். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் ஒரு பகுதி வேட்பாளர்களை வாக்குகளைக் கவரும் வாய்ப்பு உள்ளது.  இக்கட்சி முன்னேற்றத்திற்கான முத்திரையைப் பதிக்கும்.
புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கியதும், “கடந்தமுறை இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு இரட்டை இலைச்சின்னத்தில் ஒதுக்கீடா?” என அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல் தி.மு.க.வின் வேட்பாளராகக் கதிர் ஆனந்து துரைமுருகன் அறிவிக்கப்பட்டதும் “தொகுதியைப்பற்றி அறியாதவருக்கா ஒதுக்கீடு” எனத் தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரை வேட்பாளராக அறிவித்தாலும் இத்தகைய சலசலப்பு எழுவது இயற்கையே! கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பொழுது பல ஊர்களில் அமைச்சர்களையே ஊருக்குள் விடவில்லை. எனினும் அ.தி.மு.க.தான் அங்கெல்லாம் வெற்றி பெற்றது. எனவே, சிலரின் எதிர்ப்பு அடிப்படையில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக அமையும் விருப்பு வெறுப்பு அடிப்படையில் நாம் இதனைத் தெரிவிக்கலாம்.
பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு உள்ள சண்முகம், வெற்றிக்கனியைக் கதிர் ஆனந்திடம் பறிகொடுக்கவே வாய்ப்பு உள்ளது.காரணம் பா.ச.க.வின் தமிழக நலன்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரான செயல்பாடுகளே! இவற்றிற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் காலூன்ற எண்ணும் பா.ச.க. தமிழ் நலத்தில் தன் மனத்தை ஊன்ற வேண்டும்.
விற்பனைக்கு ஆளாகாத வாக்குகளும் ஊழலற்ற தேர்தலும் நடைபெற்றால்தான் மக்கள் வெற்றி பெற்றதாகக் கருத முடியும். அதற்கான வாய்ப்பு இல்லாதவரை எங்கே தேர்தல் நடந்தாலும் அங்கே வாக்காளர்கள் வெற்றியைப் பறிகொடுப்பவர்களாகவே உள்ளனர். எனவே, வழக்கம்போல் வேலூரிலும் தோற்கப்போவது மக்களே! மக்களே! மக்களே!
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர். (திருவள்ளுவர், திருக்குறள், 653)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

குவிகம் இல்லம் – அளவளாவல்

அகரமுதல


ஆடி 19, 2050 / 04.08.2019 மாலை வ.00

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

திருமதி எம்.இராசேசுவரி

திரு எசு.வி.இராசகோபாலன்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

45ஆம் ஆண்டு கம்பன் விழா, சென்னை


அகரமுதல

ஆடி 24-26, 2050 – 9-10,08,2019

ஏ.வி.எம்.இராசேசுவரி திருமண மண்டபம்

இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர்

சென்னை 600004

கம்பன் கழகம், சென்னை


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 12 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

12

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 338)
கூட்டிற்கும் அக்கூட்டில் இருந்து அதைத் தனித்துவிட்டுப் பறந்து செல்லும் பறவைக்கும் உள்ள தொடர்புதான் உடலுக்கும் உயிருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
மறுபிறவியில் நம்பிக்கை உள்ள சமயவாதிகள் உடலிலுள்ள உயிர் குறித்து மீண்டும் வேறு உடலில் புகும் என்பதுபோன்ற கருத்துகளைக் கூறுகின்றனர். ஆனால், அறிவியலாளர்கள் மறுபிறவிபற்றிக் கூறுவதில்லை. உடலறிவியலைச் சிறப்பாகக் கூறும் அவர்கள் உடலைவிட்டுப் பிரிந்த உயிரை ஆராய்வதில்லை. திருவள்ளுவரும் மீண்டும் உயிர் எங்கு தங்கும் என்றெல்லாம் ஆராயாமல் பிரிந்து செல்வதை மட்டும் கூறுகிறார்.
‘குடம்பை’ என்பதை மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர் முதலான உரையாசிரியர்கள் ‘கூடு’ என்கின்றனர். பரிதி, பரிமேலழகர் ‘முட்டை’எனப் பொருள் கொண்டு முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வருவதைக் கூறுகின்றனர். முட்டையிலிருந்து வெளியே வருவது குஞ்சுதானே தவிர, பறவை அல்ல.
 தமிழ்ச்செம்மல் வ.உ.சிதம்பரனார், இக்குறள் “உடம்பை விட்டு உயிர் நீங்கும் தன்மை யையே கூறுகின்றது; உடம்போடு உயிர் தோன்றுதலையாவது, உடம்பினுள் உயிர் மீண்டு புகாமையையாவது கூற வந்ததில்லை; முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப் பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கே யன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று; முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டது மில்லை. கேட்டது மில்லை” என முட்டை என்று கூறுப்படுவதை மறுக்கிறார். அதுபோல், உடம்பைக் கூடு என்று சொல்வதுதான் மரபே தவிர, முட்டை என்று சொல்வதில்லை எனத் தண்டபாணி தேசிகர் முட்டை என்பதை மறுக்கிறார்.
முட்டை யிலிருந்து பறவை வெளியே வருவது வாழ்வின் தொடக்கம். சாவு என்பது வாழ்வின் முடிவு. இரண்டையும் பொருத்துவது ஏற்க இயலாதது என்றும் அறிஞர் கூறுவர்.
குடம்பை என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 20 இடங்களில் கூடு என்னும் பொருளில்தான் வருகிறது.
ஆனால், சிலர் இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை, இரண்டும் நிலையாமையைத்தான் கூறுகின்றன என இரண்டையும் ஏற்கும் வகையில் கூறுகின்றனர்.
திருவள்ளுவர் கூடு, பறவை என்று சொல்லாமல் முறையே குடம்பை, புள் ஆகிய கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறார். நிலையாமையை வலியுறுத்தவே உயிர் வாழ்க்கை நிலையாமையைக் கூட்டிற்கும் பறவைக்கும உள்ள தொடர்பு மூலம் நமக்கு விளக்குகிறார்.
வாழ்க்கை நிலையில்லாததுதான். ஆனால், போர் வெறியாலும் இன, மத வெறியாலும் சிறிது காலமேனும் நிலைத்து நிற்கும் வாய்ப்பு உள்ள உயிர்களை நிலையில்லாத் தன்மைக்குக் கொண்டு சென்று அழிப்போர் இவ்வுலகில் இன்னும் உள்ளனரே!
                          

– இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி,  02.08.2019

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா

 அகரமுதல


நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும்

நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர்
இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள் என்ற நூல் குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனும் திறனாய்வு உரை நிகழ்த்தினர்.
இந்நூல்களைத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. தாலின் வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகையில், தமிழ் மொழிக்காக வாழ்ந்தவர் புலவர் மா.நன்னன், அகமும் புறமும் தூய்மை மிக்க நேர்மையாளர். திமுக இளைஞர் பாசறையில் பங்கேற்றுத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்தவர் மா.நன்னன். திமுக அரசு அவருக்குப் பெரியார் விருது, திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்தது. என நினைவுகூர்ந்தார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழா நிறைவுரையாற்றினார். செல்வன் அ.கவின் நன்றி கூறினார். விழா தொகுப்புரையைத் திருமதி. ஒளவை தமிழ்ச்செல்வன் வழங்கினார்.
முன்னதாக மருத்துவர் ந.அண்ணலின் நினைவாகத் தமிழ் வழியில் பயின்று தமிழ் மொழிப் பாடத்தில் பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் அந்தந்தப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற எட்டுப் பள்ளிகளில் படித்த பதினாறு மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றுகளும் மொத்தம் தொகை உரூ. 5000 வீதம் 16 பேருக்கு மொத்தம் உரூ. 80,000த்தை, தளபதி மு.க.தாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
புலவர் மா.நன்னன் நினைவாகச் சாதி மறுப்பு – தன்மதிப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்கள் தா.பிரபாகரன் – பி.ஏமா மாலினி, மு.சண்முகப்பிரியன் – வி.விசித்திரா, கு.செல்வேந்திரன் – செ.புவனேசுவரி, வ.சோபன்பாபு – இராதிகா, சா.கிசோர் குமார் – க.வெண்ணிலா ஆகிய இணையர் ஐவரைப் பாராட்டி ஒவ்வோர் இணையருக்கும் உரூ. 10,000 வீதம் மொத்தம் உரூ. 50,000 வழங்கி சிறப்பித்தார் தமிழர் தலைவர்.
ந.பார்வதியின் பெற்றோர் ஆறுமுகம் – சானகி இணையர் நினைவுப் பரிசு உரூ.10,000 பூம்புகார் சிறீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு வழங்கப்பட்டது.
மா.நன்னன் அவர்களின் பெற்றோர் மாணிக்கம் -மீனாட்சி அவர்கள் நினைவுப்பரிசு இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு மொத்தப் பரிசு தொகை ரூ. 10,000உம் சான்றுகளும் வழங்கப்பட்டன.இரா.செம்மல் நினைவாக மருத்துவ உதவி நிதி உரூ. 1,00,000மும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் முதலான பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 11 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

11

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.( (திருவள்ளுவர், திருக்குறள் 335)

   “நாவை அடக்கி விக்கல் எழுந்து இறப்பு நெருங்கும் முன்னே நல்வினைகள் செய்ய வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர்.
   சுருங்கி விரிந்து சீராக இயங்கும் மறுகம்(உதரவிதானம்), சுருக்கதிர்ச்சியால் கீழிறங்கித் தொண்டை வழியாகக் காற்றை உள்ளிழுக்கிறது. அப்பொழுது காற்று குரல்வளையினை இடிக்கிறது. அப்பொழுது ‘விக்’ என ஒலி வருவதால் விக்கல் எனப் பெயர். விக்கல் நேரும்பொழுது நொடிப்பொழுதினும் குறைந்த காலத்தில் மூச்சு நிற்கும். இதே விக்கல் போன்று மரணம் நெருங்கும் பொழுது நாக்கு அடங்கும் செயல் ஏற்படுகிறது. அவ்வாறு நாவை அடக்கி விக்கல் மேல்எழுந்து மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
   நவராசு செல்லையா என்பவர், “நாச்செற்று – வார்த்தை தடித்து, வி – நிச்சயம்; குள் = கொடுமை” எனத் தவறான பொருள் விளக்கம் அளித்துப் புத்துரை என்ற பெயரில் பொருந்தா உரையை வழங்கியுள்ளார்.
   பிறர், நாவடங்கி உயிர் அடங்கும் முன்னரே நற்செயல்கள் புரிய வேண்டும் என விளக்குகின்றனர். இதனையே திருவள்ளுவர் முன்னரும் வலியுறுத்தி உள்ளார்.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (திருக்குறள் 36)
முதுமை வரும் அன்றைக்குப்பார்த்துக் கொள்வோம், பிற்காலத்தில் நற்செயல் செய்வோம் என்று எண்ணாமல் உடனே அறச்செயல் புரிக! அதுவே அழிவுக்காலத்தில் அழியாத் துணையாக வரும் என்கிறார். 
  இந்த உண்மையுடன் மற்றோர் உண்மையையும் நாம் புரிந்து கொள்ளலாம். செயல் விரைவைக் குறிப்பதற்காகத் திருவள்ளுவர் விக்கல் என்னும் அறிவியல் செயல்பாட்டை நமக்குக் கூறி விரைவாக நல்வினைகள் ஆற்றுமாறு வலியுறுத்துகிறார்.
  இறப்பிற்குப் பின்னர் செயல்பட இறந்தவர் இருக்க மாட்டாரே! இறப்பிற்கு முன்னர்தானே வினை ஆற்ற முடியும். எனவே, இறப்பிற்கு முன்னர் என எண்ணாமல், இருக்கும் பொழுது விக்கல் செயல்பாட்டினும் விரைவாக நற்செயல் செய்ய வேண்டும்.
மொழி, இனம் காக்க ஒவ்வொருவரும் நல்வினை புரிந்தால், உலகம் சிறந்தோங்கும் அல்லவா?

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி,  01.08.201

புதன், 31 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

 10

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334)
“நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர்.
இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர்.
நாள் என்பதைத் திருவள்ளுவர் 20 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். வாள் என்பதை 6 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார்.
இரவுப்பொழுதும் பகற்பொழுதும் இணைந்த கால அளவே நாள் என்பது. இந்த நாளே வாரமாகத், திங்களாக, ஆண்டாக அளப்பதற்கு அடிப்படையாகிறது. எனவே, நாள் என்பதைக் காலத்தை அளக்கும் அளவுகோல் என்று சொல்லலாம். இந்தச் சிறு அளவுகோலே வாழ்நாளைச் சிறுகச் சிறுக அறுத்துக் குறைக்கிறது எனத் திருவள்ளுவர் விளக்குகிறார்.
நாள் என்பதை இரவு எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர். செ.சொ.பி.பேரகரமுதலியில் ‘நடுநாள் யாமம்’ முதலான சொற்கள் அடிப்படையில் நடுநாள் இரவு என்று விளக்கம் உள்ளது. இவர்கள் மாலை 6.00 முதல் மறுநாள் காலை 6.00 வரை நாள் எனத் தவறாகக் கணக்கிடுகின்றனர். நாவலர் சோமசுந்தரபாரதியார் விளக்கியுள்ளதுபோல், முன்னைத்  தமிழர்கள் நண்பகல் 12.00 தொடங்கி மறுநாள் நண்பகல் 12.00 வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டுள்ளனர். இதில் பாதிப்பொழுதாகிய இரவை அரைநாள் எனக் குறித்துள்ளதை – முழுநாளில் பாதி எனச் – சரியாகப் புரிந்து கொள்ளாமல்  அரை நாள் என்றால் இரவில் பாதி, நாள் என்றால் இரவு என்று தவறாகச் சொல்லி விட்டனர்.
மேற்குறித்த குறள்போல் நாள் கணக்கைக் குறிப்பிடும் மற்றொரு குறளும் உள்ளது.
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்ந்த விரல் (திருக்குறள் 1261)
“அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து கண்களும் ஒளி இழந்து அழகு கெட்டன; அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்தன” எனக் கணவன் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி கவலைப்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளில் வாள் என்பது ஒளி என்னும் பொருளில் வந்துள்ளது.
பால்கணக்கை எழுதுவற்குச் சுவரில் கரிக்கோடு கிழித்து எண்ணும் பழக்கம் இன்று கூடச் சிற்றூர்களில் உள்ளது. தாள்கள் அல்லது மாதச்சீட்டு உள்ள நாட்காட்டிகளில் ஏதேனும் கணக்கைக் குறிக்கக் கோடு போட்டுக் கணக்கு பார்க்கும் பழக்கம் நகரிலும் உள்ளது.  கால அறிவியலின் கூறாகிய நாளைக் கணக்கிடுவது பற்றித் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலஅறிவியலைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் நமக்கு நிலையாமையை உணர்த்தியுள்ளார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 31.07.2019