சனி, 21 ஜூன், 2025

86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி)

  1. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் மதப் பகைவர்கள் அல்லர். உண்மையில் சொல்லப்போனால் மதம் செம்மையாக இருக்க வேண்டும், மதத்தைப் பின்பற்றுவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதாக இருக்க வேண்டும், நன்னெறியில் வாழ வழி காட்ட வேண்டும், அனைவரையும் சமமாகக் கருதும் உணர்வை உண்டாக்குவதாகக் கோட்பாடுகள் இருக்க வேண்டும் என நன்மத நம்பிக்கை உள்ளவர்களே. ஆதலின் இவற்றிற்கு எதிரான வாழ்க்கை முறை உள்ள சனாதனத்தை எதிர்க்கிறார்கள்.

அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட  ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று சொல்லி விடுவார்கள். எனவே, வட இந்து என்றும் தமிழ் இந்து அல்லது தென்னக இந்து என்றும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு சொன்னால்தான் தென்னிந்துக்களுக்கு வட இந்துக்களின் சனாதனம் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தென்னிந்துக்களுக்குக் கடவுள் ஒன்றே, ஆனால், பல்வேறு உருவங்களாக வரையறுத்து வணங்குகின்றனர், பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் உதவ வேண்டும், அன்னதானம் அனைவருக்குமே அல்ல, பிராமணர்களுக்கு மட்டும் என்னும் வட இந்துக்கொள்கை இவர்களுக்கு உடன்பாடில்லை, இல்லாதவர்க்கு உதவ வேண்டும் என்பது தென்னவர் கொள்கை, பிராமணர்க்கு மட்டுமே உதவ வேண்டும் என்பதே வடவர் கொள்கை. எனவே வட இந்துக் கொள்கை எதிர்ப்பாளர்களை ஒட்டு மொத்த மத எதிர்ப்பாளர்களாகச் சிலர் கருதுகிறார்கள். வடவர் என்பதை வட இந்துவில் மேலாதிக்கம் கொண்ட பிராமணர் என்றே தெளிவாக அறிய வேண்டும். தென்னவர் கொள்கை என்பது தமிழ் நெறி. எனவே, இந்து மதத்தில் உள்ள இந்த முரண்பாடும், தென்னவருக்கு இருக்கும் ஒத்துப்போதல் உணர்வும்  வெளிப்படையான எதிர்ப்பிற்குத் தடையாக உள்ளது. ஆனால் இவற்றில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கருதுபவர்களும் நல்லிணக்க உணர்வாளர்களும் மதப் பகைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். அதேபோல்தான் சனாதனக் கேடுகளைச் சுட்டிக்காட்டும் மத நம்பிக்கையாளர்கள், இந்து மதப்பகைவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

தமிழர்கள் மட்டுமல்லர். இந்துவாகத் திணிக்கப்பட்ட  மண்ணின் மதத்தினருக்கும் சனாதனம் என்பது விரும்பாத ஒன்றே. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம், பிற  அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் இந்து சமயம் என்பதற்குள் இந்திய அரசு அடக்கி விட்டது. இவற்றுள் ஆரியத்தை எதிர்க்கும் பெளத்தம் முதலியவற்றையும் அடக்கியதுதான் விந்தை. முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத ஒவ்வொருவரும் சட்டப்படி இந்து ஆவார் என்பதுதான் கொடுமை. இவ்வாறு இந்துவாகத் திணிக்கப்பட்ட இவர்களில் பெரும்பான்மையருக்குச் சனாதனத்தின் மீது வெறுப்புதான் உள்ளது. எனவே, சனாதன எதிர்ப்பு இந்தியா  முழுமையும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. எனினும் இந்துக்களாகவே அறிமுகப்படுத்தப்பட்டு வாழும் புதிய தலைமுறை யினருக்குச் சனாதனம் குறித்து விருப்போ வெறுப்போ இல்லை.

தவறாக வரையறுக்கப்பட்டவாறு சனாதனம் என்பதை இந்து எனக் கருதாமல் பார்த்தால் சனாதன எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நாட்டுச் சமயங்களை உரியவாறே குறிக்கவும் எல்லாரையும் இந்துக்களாகக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசியல் யாப்பு திருத்தப்பட வேண்டும்.

  • (தொடரும்)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) : அன்றே சொன்னார்கள் 55 : இலக்குவனார்திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-16 தொடர்ச்சி)

கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.
கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.  அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து 1662 இல் கிறிசுடோபர் ரென் (Christopher Wren) என்னும் அறிவியலறிஞர் முதலில் வாளியக மழைமானியைக் (tipping-bucket rain gauge) கண்டுபிடித்தார். மழை வளைமானி (udometer), என்பனபோல் பல்வகை மழைமானிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை எல்லாம் பேரளவினதாகவே இருந்தன. சைமன் (George James Symons) என்னும் அறிவியலறிஞர் 1863 இல் பிரிட்டன்  வானிலை ஆராய்ச்சிக் கழகத்திற்குத் (British meteorological society) தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 1890 வரை மைக்கேல் பாசுடர் வார்டு (Colonel Michael Foster Ward) என்பார் துணையுடன் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானியை உருவாக்குவதற்காகப் பல்வகை ஆய்வுகளை மேற்கொண்டார். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இப்பொழுது பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானி உருவாக்கப்பட்டது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மழையை அளப்பதற்கான சிறிய கருவியை – மழைமானியைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளனர்; அவற்றை உயரமான வீடுகளிலும் பொருத்தி இருந்துள்ளனர் என்பது சிறப்பான வானிலைஅறிவியல் செய்தி அல்லவா?
கட்டடங்கள் அமைக்கும் பொழுது நீண்ட முடியை உடைய கவரிமான் (நெடுமயிர் எகினம்), குறுங்கால்களை உடைய அன்னம் ஆகியவை தாவித்திரியும்  அகன்ற பரப்பு உடையதாக வாசலின் முகப்பில் முன்னிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர் நக்கீரனார்,


நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோடு உகளும் முன்கடை(நெடுநல்வாடை : 91-92)
என்கிறார்.
கட்டடத்தின் மண்தள முகப்பைக் கூறும் ஆசிரியர் அதன் உயர் பரப்பான மேல்நிலை முற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பணம் (நெடுநல்வாடை : 95-96)

இவ்வரிகள் மூலம், நெடிய மாடியின் உயர்தளமாக, வெண்ணிலவின் ஒளியில் மகிழும் வண்ணம் அமைக்கப்பட்ட நிலா முற்றத்தில் (மொட்டைமாடியில்) மீனின் வாய்போன்று பகுக்கப்பட்டு-பிளக்கப்பட்டு- அமைக்கப்பட்ட அம்பணம் என்னும் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். (இதில் நிறைந்து வழிந்து கீழே விழும் மழைநீர் ஓசை அருவி ஓசைபோல் இனிமையாய் இருப்பதைக் கூறுவதற்காக இதனை இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் நக்கீரனார்.)
ஆமைவடிவில் உள்ள முகத்தல் அளவைக் கருவிக்கு   அம்பணம் என்று பெயர். அந்த அளவில் சிறியதாக உள்ள மழைமானிக்கும் அம்பணம் என்று பெயரிட்டுள்ளனர். எனவே, பிற நாட்டார் தொட்டி, வாளி போன்ற அளவில் மழை நீர்  சேர்த்து மழை அளவை அறிந்திருந்த காலத்திற்கு முன்னரே நம் தமிழ் முன்னோர், சிறிய அளவிலான மழைமானியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் அதனை  உயரமான வீடுகளில் பயன்படுத்தும் வண்ணம் பொதுமக்களும் அதன் பயன்பாட்டு முறையை அறிந்திருந்தனர் என்பதும் கட்டடக் கலையுடன் இணைந்த வானிலை ஆராய்ச்சி அறிவியல் கலையாகிறது. கணந்தோறும் மாறும் வானிலையையும் ஆராய்ந்தறிந்த வண்டமிழர்  வஞ்சகர் மனநிலையை அறியாமல் நம்பக்கூடாதவர்களை நம்பி அழிந்து கொண்டுள்ளனரே! என்னே அவலம்!

வெள்ளி, 20 ஜூன், 2025

85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!



(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி)

  1. 4.1.2023 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடி வட்டம் ஆதனூரில் இவ்வூரில் பிறந்த  நந்தனார் குருபூசை நிகழ்ச்சி நடந்தது. இங்குதான் ஆளுநர் இரா.ந.இரவி 100 பட்டிலினத்தவருக்குப் பூணூல் அணிவித்துள்ளார். நந்தனாரைத் தீயில் இறக்கி அதன் மூலம் அவர் புனிதமானதாகச் சனாதனவாதிகள் கூறுவதுபோல், பட்டியலின மக்கள் பூணூல் அணிந்ததால் புனிதமானதாகச் சனாதனவாதி ஆளுநர் இரா.ந.இரவி கூறுகிறார். அவரே தன்னைச் சனாதனவாதி என்று கூறுவதால் இவ்வாறு கூறுவது இழித்துரைப்பதாகாது. இதுதான் அனைவரையும் சமமாகக் கருதும் சனாதனம் என்கிறார். பூணூல் அணிவதால் உயர்வடையலாம் எனக் கூறுவதுதான் சனாதனம். பூணூல் அணிவித்ததன் மூலம் பட்டியிலினத்தவரை மோட்சம் அடைய வைத்ததாகவும் சனாதனவாதிகள் கூறுகின்றனராம். இதன் மூலம் பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்னும் சனாதனத்தை வலியுறுத்துகிறார் அவர்.

பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்னும் பாரதியார் சாதி வெறியில் இவற்றைச் செய்யவில்லை. பிராமணன் மட்டும்தான் பூணூல் போட வேண்டுமா? எல்லாரும் போடலாம் எனக் கூறுவதற்காக உணர்ச்சி வயப்பட்டு செய்த செயல் இது. எனினும் பூணூல் அணிந்தவன் உயர்ந்தவன் என்பது இழிவை உயர்த்தும் சனாதனம் ஆகும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  “பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதருமத்தின் பேதத்தினை ஆளுநர் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா? ” என்கிறார்.

அமைச்சர் பொன்முடி, “பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார். இதற்கு ஏன் ஆளுநர்” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“நந்தனார், கோயிலுக்குச் சென்றதால்தான் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் மூடப்பட்டுக் கிடக்கிறது. இன்றும் தெற்கு வாசல் திறக்கப்படாமல் உள்ளது. பூணூல் அணிவிக்கப்பட்ட 100 பழங்குடியினரையும் அந்த வாசல் வழியாக ஆளுநர் உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாமே” என்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம். இதன் மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர்களைக் கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வி.சி.க.வைச்சேர்ந்த  சிந்தனைச் செல்வன், “புராணங்களில் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் செயல்படுத்திக் காட்டுவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவரும் தீயில் விழுந்து எழுந்து புனிதமடையவில்லை. நந்தன் மட்டும் நெருப்பில் விழுந்து எழுந்ததால்தான் புனிதமடைகிறார், அவருக்குப் பூணூல் அணிவிக்கப்படுகிறது என்று கூறி, இப்போதும் அதைச் செய்தால் எப்படி ஏற்க முடியும்?” என்கிறார்

“பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா?” என்கிறார் தோழர் மருது.

இவ்வாறு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவை யாவும் மக்கள் குரலே.

ஆனால், பிராமணர்களை மட்டும் உயர்த்துவதை மறைக்கும் வகையாகப் “பிராமணத்துவம் பிறப்பினால் வருவது அல்ல, ஒழுக்கத்தினால் வருவது.” எனப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சொல்வதன் மூலம் பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் உயர்ந்து அந்நிலை அடைந்தார்கள் என்று மாயையையும் உருவாக்குகிறார்கள். எல்லா ஒழுக்கவான்களும் பிராமணர்கள் என்றால் பிற வருணத்தார் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதானே பொருள்.

  • (தொடரும்)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 : அன்றே சொன்னார்கள் 54 – இலக்குவனார் திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 15 தொடர்ச்சி)


கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம்.

வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90)

வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ படக்கூடாது. எனவே யானை மீது அமர்ந்து வெற்றிக் கொடியைப் பிடித்தால் வரும் உயரத்திற்குக் கோபுர வாயில் அமைக்கப்பட்டது. மலையைக் குடைந்து திறந்தவெளி உருவாக்குவதுபோல் (குன்று குயின்று அன்ன) அமைக்கப்பட்ட அகலமும் உயரமும் உடையதாக வாயில் அமைந்தது. எல்லா வகைப் பொருளும் வந்து குவிக்கப்படும் வளமைக்கு எடுத்துக்காட்டான (திருநிலை பெற்ற) குற்றமற்ற சிறப்பினை உடைய  முன்றிலை அமைத்து அதில் மணலைக் கொண்டு வந்து பரப்பினர்.

வெற்றிக் கொடியை யானை மீது உயர்த்திப் பிடித்து உலா வரும் மரபைப் பிற புலவர்களும் கூறி உள்ளனர்.

கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
(புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து : 52.1)
மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி வரைமிசை
அருவியின் வயின் வயின் நுடங்க (ஆசிரியர் கபிலர் : பதிற்றுப்பத்து :69:1-2)
உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
(ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் : பதிற்றுப்பத்து : 88:17)
கோல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்
(புலவர் நெட்டிமையார் : புறநானூறு : 9:7)

மலையைக் குடைந்து முனிவர் இருப்பிடம் அமைக்கப்பட்டதை ஆசிரியர் மாங்குடி மருதனார்

குன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளியும் (மதுரைக்காஞ்சி:470) எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இங்கு அவ்வாறு குறிப்பிட்டது கற்பனை யல்ல என்பதையும் மலையைக் குடைந்து திறந்த வெளி அமைப்பது போன்ற அகலமும் உயரமும் உடைய வாசல்கள் முன்பு அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உழைப்பாலும் இயற்கையாலும் வணிகத்தாலும் பெறும் செல்வங்களுடன் பகைவர் போர்க்களத்தில் விட்டுச் செல்லும் யானைகளும் பகை நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் குதிரைகள், பசுக்கள், செல்வங்கள்  முதலானவையும் தோழமை நாட்டினர் திறையாகச் செலுத்தும் செல்வங்களும் எனப் பல்வகைச் செல்வங்கள் வந்து குவியும் இடம் ஆதலின், செல்வமாகிய திருநிலை பெற்றது எனக் கூறியுள்ளார். ஆசிரியர் மாங்குடி மருதனாரும்

கங்கைஅம் பேரியாறு கடல்படர்ந் தாங்கு
அளந்து கடையறியா வளம்கெழு தாரம் (மதுரைக்காஞ்சி 696-697)
என்கிறார்.

எனவே, பல்வகை வளங்களும் குவிப்பதற்கு ஏற்ற வகையில் முகப்பு இடத்தையும் வாசலையும் அகலமாகவும் உயரமாகவும் அமைத்திருந்தனர் என்பது சரிதான்.

தனி வீடுகளில் விழா அல்லது சிறப்பு நாட்களில் வீட்டின் முன்புறம் மணல் பரப்பும் பழக்கமும் இப்பொழுதும் உள்ளது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து (தருவித்து) முற்றத்தில் பரப்புவது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பழக்கமாக  இருந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆசிரியர் மாங்குடி மருதனார்,

தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்காஞ்சி 684)

(அரிஞிமிறு – வண்டுகளும் ஞிமிறுகளும்) என்கிறார்.
ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்,

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் (மணிமேகலை : 1:50-51)

என்கிறார்எனவே, வீடுகளில் மட்டும் அல்லாமல் அகலமான வீதிகளிலும் மன்றங்களிலும் மணல் பரப்புவதும் அவ்வப்பொழுது பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.

எனவே, வீடுகளின் முன்பக்க முற்றங்களில் மணலைக் கொண்டு வந்து பரப்பும் அளவிற்கு ஒவ்வொரு வீடும் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டு இருந்துள்ளன.

உயரமான, அகலமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள வரிகள் மூலம் அறிந்த நாம், பிற சிறப்புகளை அடுத்துக் காணலாம்.

நட்பு இணைய இதழ் ஏப்பிரல் 30, 2011

வியாழன், 19 ஜூன், 2025

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்



சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௨ – 422)

 தமிழே விழி!                                                             தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம்

இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :

https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆனி 08, 2056  ஞாயிறு 22.06.2025  காலை 10.00 மணி

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

தமிழும் நானும்  – ஆளுமையர்கள்

ஆய்வாளர் மும்பை சாக்கிரட்டீசு கணேசன்

குறள் நெறியாளர் சதுரை ஆ.தி.பகலவன்

நூலாய்வு:

திருவாட்டி மும்பை பாரதி கணேசன்

சாக்கிரட்டீசு கணேசனின் நூல்

“வள்ளுவத்தில் நூலறிவும் பேரறிவும்”

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி

83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? 84.சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி)

சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே!

சனாதனம் என்பது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் பொழுது சனாதன இசுலாம் என்றெல்லாம் சொல்வது பிற சமயத்தவரையும் இழிவு படுத்துவதாகும்.

அனைவரையும் பாகுபடுத்தாத இழிவுபடுத்தாத தூய உள்ளத்திற்கு எதிரான சனாதனத்தைத் தூய என்ற அடைமொழிப் பொருளாகக் கூறுவதும் கொடுமைதான்.

உண்மையான பொருளுக்கு அதன் தீமை உணர்ந்து எதிர்ப்பு வருகையில் இல்லாத நல்ல பொருள்கள் இருக்கின்றன எனக் கற்பிதம் செய்து மக்களை ஏமாற்றுவது ஆரியர் வழக்கம். அதற்கிணங்கவே இப்போதும் தூய்மையான என்பதுபோன்ற பொருள்களைத் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்தகைய பொய் விளக்கத்தில் அறிவுள்ள மக்கள் நம்ப மாட்டார்கள். சனாதனுக்கு எதிரான திருக்குறளையும் பிற சமயங்களையும் சனாதனமாகத் திரித்துக் கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள். எனவே, இத்தகைய விளக்கங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல் தூர எறிய வேண்டும்.

வானவில் க.இரவி, செயக்குமார், சீனிவாசன் பி.ஆர்.மகாதேவன், அரவிந்தன் நீலகண்டன், பிரம்மரிசியார், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சோபனா இரவி, இளங்கோ பிச்சாண்டி, கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், எல்.முருகன், வ.மு.முரளி, காம்கேர் கே.புவனேசுவரி, தருமபூபதி ஆறுமுகம், இராமகிருட்டிணன், சிவசங்கரன், பத்துமன், கோதை சோதிலட்சுமி, செங்கோட்டை சிரீராம், பி.ஆர்.மகாதேவன், ஆர்.என்.இரவி, சத்துகுரு சக்கி வாசுதேவு, மரபின்மைந்தன் முத்தையா, கோவை இராதாகிருட்டிணன், கே.சி.சவர்லால், நந்தலாலா, பி.ஏ.கிருட்டிணன், சடாயு, பா.இந்துவன், திருநின்றவூர் இரவிகுமார், ச.சண்முகநாதன், கோ.ஆலாசியம், ப.கனகசபாபதி, வேதா சிரீதர், பால.கௌதமன், வித்தியா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருட்டிண.முத்துசாமி, சி.எசு.பாலாசி, செ.செகன், எசு.எசு.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், இராசசங்கர் விசுவநாதன், சுவாமி விமூர்த்தானந்தர், கோ.சேசா, என்.ஆர்.சத்தியமூர்த்தி, எசு.ஆர்.சேகர், நீதிபதி சேசசாயி, சந்தீபு ஆத்துவர்யூ, இராம் மாதவு, நிர்மலா சீதாராமன், வ.ச.சிரீகாந்து, குரு.சிவகுமார் ஆர்.இராசசேகரன், வைரவேல் சுப்பையா, மாதா அமிர்தானந்தமயி, தேவி, ஏகநாத்து இரானடே, டேவிட்டு ஃபிராலே சுவாமி சின்மயானந்தர்,சுவாமி அபேதானந்தர், இராமகிருட்டிணர்,  சாய்பாபா முதலிய பலரும் சனாதனத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளனர். அனைத்திலும் அடிப்படையாக உள்ளமை இங்கே நாம் பார்த்துள்ள தொன்மை, சமத்துவம் முதலியவற்றிற்கான விளக்கங்கள்தாம். அவற்றை மீண்டும் தெரிவிப்பின் கூறியது கூறலாகும் என்பதால் இங்கே எடுத்துரைக்கவில்லை. இவர்களுள் சிலர் மழுப்பலாக எழுதியுள்ளனர். இருப்பினும் சனாதனம் என்பது தீங்கானது என்பதும் அதற்கான விளக்கங்கள் தவறானவை என்பதுமே உண்மை.

(தொடரும்)