சனி, 19 மார்ச், 2016

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! – சி.இலக்குவனார்
தலைப்பு-குறளைத்தமதாக்கிக்கொள்ள வில்லை- சி.இலக்குவனார் : thalaippu_kuralaithamadhaakkikollavillai_S.Ilakkuvanar

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை!
வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும்.
குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று சிலருக்குஏன் உயர்ந்த சமயத் தலைவர்களுக்குக்கூடஉண்மையான பொருள் தெரியவில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் குறளைக்கும் குறளுக்கும் பொருள் புரியாமல் குறள் என்பது கோள் சொல்லக்கூடியது என்று கருதி மக்களிடத்தில் உரைத்தும் வருகிறார்கள்.
  மன்பதையில் சாதிப்பாகுபாடும் அரசியல் கட்சிகள் பாகுபாடும் வலிமை பெற்று நிற்கின்றன. பாகுபாடுகள், வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து எல்லாரும் இன்புற்று வாழ வேண்டுமானால் மக்கள் அனைவரும் குறள்நெறியைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும்.
பேராசிரியர் சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்1 இதழ்18):
ஆவணி 17,1995: 1.9.64

தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது! – பேரா.சி.இலக்குவனார்
தலைப்பு-தொல்காப்பியம் பயிலாமல் மாளுதல்  கூடாது - சி.இலக்குவனார் : thalaippu_tholkaappiyampayilaamal_maalakkuudaadhu_S.Ilakkuvanar

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது
  தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும். தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும். கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். தொல்காப்பியம் கற்றுத் தூய தமிழக வரலாறும் பண்பாடும் அறிவோம்.
பேரா.சி.இலக்குவனார் :
குறள்நெறி (மலர்1 இதழ்18):
ஆவணி 17,1995: 1.9.64

காடு என்னும் பெயருடைய பல ஊர்கள் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

   காடு - kaadu_forest

காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என்று வழங்குகின்றது. நெல்லை நாட்டில் பச்சையாற்றுப் போக்கிலுள்ள களக்காடு என்ற ஊர் மிகப் பழமை வாய்ந்தது. களாச் செடி நிறைந்திருந்த இடம் களக்காடு என்று பெயர் பெற்றது. தென்பாண்டி நாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையேயுள்ள நெடுஞ்சாலையில் பச்சையாற்றின் கரையில் பாங்குற அமைந்துள்ள களக்காடு என்னும் ஊர், மலை வளமும் நதி வளமும் உடையதாக விளங்குகின்றது.

– சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை :
தமிழகம் ஊரும் பேரும்
தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan