சனி, 18 ஏப்ரல், 2020

“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.

அகரமுதல

“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூல்
இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்ய வாய்ப்பு!

“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரால் எழுதப்பெற்றது. இது குறித்து அவர்,
தம் வாழ்நாளெல்லாம் தமிழ்நலனுக்காகப் போராடிப் புகழுடல் எய்திய செந்தமிழரிமா சி.இலக்குவனார் அவர்களின் தமிழ்ப்பணி இன்னும் முறையாகப் போற்றப்படவில்லை. 2013-ஆம் ஆண்டு நாடெங்கும் தமிழியக்க நூற்றாண்டு விழாக்கள்  நடத்தியவேளையிலும் அவ் விழாக்களில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.தெளிந்த அறிவுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சம் என்பதே காரணம்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இத்தகைய தவறு நேரவிருந்தது. மன்னை நடராசன் கவனத்திற்குக் கொணர்ந்து கடைசிநேர இடைச்செருகலாகப் பேராசிரியர் பற்றிய உரை சேர்க்கப்பட்டது. அந்த நேரம் எழுதிய கட்டுரை ”தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” மன்னை நடராசன் அவர்களால் அவரது ‘புதிய பார்வை’ இதழில் வெளியிடப்பட்டது. அக் கட்டுரையுடன் இலக்குவனார் நூற்றாண்டு விழாக்களில் ஆற்றிய எழுத்துரைகளும் இணைத்து “தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” என்னும் கிண்டில் வெளியீடாக வெளியிட்டுள்ளேன்.
எனத் தெரிவித்துள்ளார்.
தனித்தமிழ்ப் பணிகளுக்கு வழிகாட்டி வேண்டும் என்போரும் தனித்தமிழ் இயக்கக் கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் உறுதுணையாய் இந்நூல் அமையும்.
கிண்டில் உறுப்பினர்கள் இதனை வழக்கம்போல் படித்திட இயலும். பிறருக்கு விலை 2 அமெரிக்கப் பணம் அல்லது 154 இந்தியப் பணம். எனினும்
 19/4/20 ஞாயிறு & 20/4/20 திங்கள் இரு நாள்களும் யார் வேண்டுமாயினும் இலவசத் தரவிறக்கம்  செய்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்துக் கொள்ளலாம்.
இணைப்பிற்கு

https://www.amazon.com/dp/B0876DLZQ3

அல்லது அமேசான் தளம் சென்று நூலின் பெயர் அல்லது நூலாசிரியர் பெயர்வழித் தேடினாலும் புத்தகம் கிடைக்கும்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்

அகரமுதல

தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 


 இந் நிலவுலகிற் பழமைக் காலந் தொட்டு இன்றுகாறும் வழங்கிவரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்னர் ஒருமுறை விளக்கிக் காட்டினாம். மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்துபோயின, பல சின்னூறாணடுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன. பல புதுமையுற்றுப் பிறந்தன. பழமையும் புதுமையும் ஒருங்குடைய ஒரு மொழியை அவற்றினிடத்தே காண இயலாது. மற்று தமிழ் மொழியோ பழமைக்குப் பழமையுமாய்ப் புதுமைக்குப் புதுமையமாய்த் தன் இயல்பு பிறழாது, ஏறக்குறைய முந்நூறு நூறாயிரம் மக்களினிடையே உலாவி வருகின்றது. இங்ஙனம் இது பண்டுதொட்டே உயிரொடு விளங்கி வருதலின், முற்காலத்தில் வழங்கிய மொழிகளின் சொற்கள் சிலவும் பிற்காலத்தில் நடைபெறும் மொழிகளின் சொற்கள் சிலவும் இதன் கண்ணே கலந்து காணப்படுதல் இயற்கையே யாம். யாங்கனமெனின்; நீண்டகாலம் உயிரோடிருக்கும் ஒருவன் பல நாடுகளிலுஞ் சென்று முயலுந் தொழின் முயற்சியும் மிகுந்த சுறுசுறுப்பும் உடையவனாயிருந்தால், அவன் தனதிளமைக் காலத்தில் தன்னோடிருந்து இறந்து போனவர் வைத்த பொருள்களிற் சிலவற்றையுந், தனது பிற்காலத்தில் தன்னோடிருப்பவர் வழங்கும் பண்டங்களிற் சிலவற்றையுங் கையாள நேர்வதுபோல, உயிரொடு சுறுசுறுப்பாய் உலவிவருந் தமிழ்மொழியுந் தான் வழங்கிய பண்டை நாளில் வழங்கி யிறந்த ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளின் சில சொற்களையும், இஞ்ஞான்று தன்னொடு சேர்ந்துலாவும் ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளின் சில சொற்களையுந் தான் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றது.
இன்னும் இதனை விளக்கிக் காட்டல் வேண்டின், உயர்ந்த மலை முகட்டில் என்றும் நீர் ஊறும் ஒரு சுனையிலிருந்து இடையறாது ஓடிவரும் ஓர் அருவிநீருக்குத் தமிழ்மொழியை ஒப்பிட்டுச் சொல்லலாம்; இனி இவ்வருவிநீர் ஓடிவரும் இடையிடையே சுரப்பின்றிச் சேறும் நீருமாய் நிற்குங் குளங்குட்டைகட்கு வழக்கில் இல்லாத ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளையும், இன்னும் அவ்வழியின் கீழே இருபாலும் ஆங்காங்குப் புதிது தோன்றித் தனித்தனியே ஓடும் யாறுகளுக்கு ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளையும், இவ் யாறுகளிலிருந்து பிரிந்து வந்து அவ்வருவியொடு கலக்குஞ் சிறுசிறு கால்களின் நீருக்கு அம்மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலக்குஞ் சில சொற்களையும் ஒப்பாகச் சொல்லலாம். பன்னெடுங் காலமாக வறளாது ஓடிவருந் தமிழருவியானது தான் வரும் வழியிலுள்ள ஆரியம் முதலான பழைய குளங் கூவல்களிற் சென்று அவற்றின் சொற்களாகிய நீரையுந் தன்னொடு கலப்பித்துப் புதியவாக்கிப் பின்னும் இடையிடையே தண்கண் வந்து கலக்கும் பின்றைக்காலத்துச் சொற்களாகிய சிறு கால்களின் நீரையுந் தன்னுருவாக்கித் தன்னை வழங்கும் மக்கட்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றது.
இனி, ஒரு மொழியின்சொற்கள் மற்றொரு மொழியில் வந்து கலக்கவேண்டுவதுதான் என்னையென்று வினாவினால்; ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் நாட்டையும் தம் இனத்தாரையும் விட்டு நீங்காமல் இருக்கும் வரையில், அவர் தாம் இருக்கும் நாட்டின்கண்ணே பிறமொழி பேசும் பிறநாட்டார் வந்து சேராதிருக்கும் வரையில், அவர் பேசும் மொழியில் அயல்மொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு இடமேயில்லை. அங்ஙனமின்றி அவர் பல நாடுகளையும் அந்நாடுகளிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் போய் கண்டும், அவர் நாட்டுப் பண்டங்களைத் தாம் விலைகொண்டும், தம்நாட்டுப் பண்டங்களை அவர்கட்கு விற்றும், அவர்தம் வழக்கவொழுக்கங்கள் சிலவற்றைத் தாங் கைப்பற்றியும், தமக்குரிய சிலவற்றை அவர் கைப் பற்றுமாறு தந்தும், ஒருவரது நாகரிகத்தை ஒருவர் பின்பற்றியும் ஒழுகும் உயர்ந்த அறிவும் உயர்ந்த நடையும் வாய்ந்தவர்களா யிருந்தால் அவர் பேசும் மொழியில் மற்ற மொழிச்சொற்கள் புகுந்து கலவாமல் இரா. ஆகவே, இம்முறையால் நோக்குமிடத்துப் பலவகையாலும் உயர்ந்த நாகரிகவாழ்க்கை யுடையராய் விளங்கிய தமிழ் மக்கள் வழங்கிவந்த தமிழிற் பிறமொழிச் சொற்கள் சில வந்து கலக்கலானது இயற்கையேயா மென்பது உணரப்படும்.
அங்கனமாயிற், பழைய காலத்தில் றமிழ் மக்கள் அயல் நாட்டவரொடு சென்று அளவளாவும் நாகரிக முதிர்ச்சி உடையரா யிருந்தா ரென்பதற்குச் சான்று என்னை யெனின்; இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுமே ஒரு பெருஞ் சான்றாமென்க. அருமை பெருமையிற் சிறந்த இவ் வொருநூலை ஒரு சிறிது உற்றுநோக்குவார்க்கும்; இந்நூல் எவ்வளவு பழமை யுடையதாய் இருக்கவேண்டு மென்பதும், மிகப் பழையநாளிலே இவ்வுயர்ந்தநூலை எழுதிய ஆசிரியரோடு ஒருங்கிருந்த தமிழ் முதுமக்கள் எத்துணைச் சிறந்த அறிவும் நாகரிகமும் வாய்ந்தவராய் யிருந்திருக்கவேண்டுமென்பதும் அவர் உள்ளத்திற் பதியாமற்போகா. இந்நூலின்கண் உள்ள “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை“ என்னுஞ் சூத்திரத்தாற் பண்டைத் தமிழ்மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டுத் தம் மனைவி மக்களையும் நாட்டையும் விட்டுக் கடல் வழியே மரக்கலன்களில் ஏறித் தொலைவான நாடுநகரங்களிற் சென்று சேர்வரென்பது பெறப்படுகின்றது. தமிழர்கள் கடல்தாண்டிச் சென்று வேற்றுநாடுகளிற் பொருள்முயற்சி செய்த்ததுபோலவே, வேற்று நாட்டவரும் தமிழ்நாட்டிற் போந்து பல முயற்சிகளை நடத்தினாரென்பது ஈபுருமொழியில் எழுதப்பட்ட பழைய விவிலிய நூலினால் இனிது விளங்குகின்ற தன்றோ?
காவிரிப்பூம்பட்டினத்திற் கரிகாற்சோழன் என்னும் வேந்தர்பெருமான அரசாண்டபோது, பல்வேறு மொழிகள் வழங்கிய பலவேறு தேயத்தாரும் அந் நகரத்தினிடத்தே போந்து கலந்திருந்து பல தொழின்முயற்சி நடத்தினமையும்; கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தமையும்; இமயம் மேரு முதலிய மலைகளிலிருந்து பொன்னும் மணியும், மேற்கணவாய் மலைகளிலிருந்து சந்தனைக்கட்டை அகிற்கட்டைகளுந். தென் கடலிலிருந்து முத்துகளுங், கீழ்க்கடலிலிருந்து பவளங்களுங், கங்கையாற்றிலிருந்து அதன் பொருள்களும், இலங்கை பருமா என்னும் நாடுகளிலிருந்து அவற்றின் விளைபொருள்களும் அந்நகரத்தில் வந்து விலயானமையும், இற்றைக்குச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட பட்டினப்பாலையிலும், அதற்குச் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றவல்லவோ? கிரேக்க நாட்டிலுள்ள யவனர்கள் தமிழ்நாட்டிற் போந்து தமிழ அரசர்களின் கீழ்ப் பல அலுவல்கள் பார்த்தமை பெருங்கதை, முல்லைப்பாட்டு முதலான பழந்தமிழ்ப்பாட்டுகளில் நன்கு குறிக்கப்ட்டிருக்கின்றது. இங்ஙனம் பண்டைநாளில் தமிழ்நாட்டார் அயல்நாடுகளிலும் அயல்நாட்டார் தமிழ் நாடுகளிலும் போந்து ஒருவரோடொருவர் அளவளாவியிருந்தமை இனிது புலப்படுதலின் வேற்று நாட்டவர்க்குரிய மொழிகளின் சொற்களிற் சில தொன்றுதொட்டே தமிழிற் புகுந்து வழங்கவாயின என்று உணர்தல் வேண்டும். இவ்வாறு நேர்ந்த கலப்பின் றன்மையை ஆராய்ந்து உணர்வார்க்குத் தமிழர் பண்டைக்காலத்திலேயே நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்பது புலனாகும்.
(தொடரும்)
மறைமலை அடிகள்,  தனித்தமிழ் மாட்சி

புதன், 15 ஏப்ரல், 2020

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4

–    9.0.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10
            தனிமனிதன், தன் அளவில் வறுமை ஒழிப்புக்கு எவற்றை, எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றித் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளவற்றை இங்குக் காணலாம்.
9.1.0.அக்குறள்கள்:
            92, 221, 222, 223, 225, 226, 227, 228, 230, 231
9.2.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு
1.மனமகிழ்ச்சியுடன் வறியவர்க்கு வழங்குதல்
2.ஏழைகளது வறுமை ஒழிக்கத் தேவையான ஒன்றைக் கொடுத்தல் 
3.மேல்உலகம் இல்லை எனச் சொன்னாலும் ஏழைகளுக்குக் கொடுத்தல்
4.”ஏதும் இல்லை” எனும் துன்பச் சொல் சொல்லாமல் கொடுத்தல்
5.வறுமை ஒழிப்பு முயற்சியில் ஒன்றாக ஏழைகளது பசியைத் தீர்க்கும் பேராற்றலைக் கொண்டு வாழ்தல்  
6.செல்வம் ஏழைகளின் பசி தீர்க்கவே என உணர்ந்து ஈதல்
7.ஏழைகளோடு உணவைப் பகிர்ந்து அளித்துத் தானும் உண்ணல் 
8.ஏழைகளின் வறுமை ஒழிப்புக்குப் பயன்படும் வகையில் தேவை யாவை கொடுத்து இன்புறுதல்
9.ஈயா நிலைத் துன்பம், சாவுத் துன்பத்தினும் கொடியது என உணர்ந்து இடைவிடாது ஈதல்  
10.புகழ் தரும்படி உண்மை சார்ந்து ஈதல்
10.0.0.குடும்ப அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10
            கொடுமை பல செய்யும் வறுமையின் வேரறுக்கக் குடும்பங் களின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் வறுமை ஒழிப்பில் குடும்பங்கள் எவற்றைச் செய்ய வேண்டும் என்பதையும் பன்முக ஆய்வுத் திறனார் திருவள்ளுவர் வரை யறுத்துள்ளார். அவை கீழே அளிக்கப்பட்டுள்ளன.
10.1.0.அக்குறள்கள்:
             42, 43, 44, 81, 83, 84, 85, 86, 90, 1107
10.2.0.குடும்ப அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் – தொகுப்பு
 1.துறவர்கள், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோர்  வறுமையைப் ஒழித்தல் 
2.தென்புல அகதிகள், விருந்தினர்கள், உறவர்கள் ஆகியோரை    வறுமையிலிருந்து காத்தல்
3.ஏழை, எளியோருடன் உணவைப் பகிர்ந்து அளித்து உண்ணல்  .
4.விருந்தினர்கட்கு விருந்து அளித்தல், வேண்டிய உதவிகளைச் செய்தல்
5.விருந்தினர்களுக்கு நாள்தோறும் விருந்து அளித்துக் காத்தல் 
6.முகமலர விருந்தினர்கள் விரும்பும் நல்ல விருந்து அளித்தல் 
7.விருந்து அளித்தபின் மீதி உணவை உண்ணும் விருந்து ஓம்பல்
8.வந்த விருந்தினர்க்கு விருந்து அளித்துவிட்டு, இனி வரும் விருந்தினர்களை எதிர்பார்த்துக் காத்திருத்தல்
9.வருத்தும் பசியால் வாடி வரும் விருந்தினர் முகம் கோணாமல் விருந்து அளித்துக் காத்தல்
10.தம் உழைப்பால் கட்டிய வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் ஏழை களோடு பகிர்ந்து அளித்து உண்டு இன்புறுதல்
11.0.0.சமுதாய அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10
            சமுதாயத்தார்கள் தங்களது வறுமையின் வேரினை அறுத்து வீழ்த்த வேண்டும்; மற்றவர்களது வறுமையின் வேர்களையும் அறுத்து வீழ்த்த வேண்டும்.
அவற்றிற்கு என்ன என்ன செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்து, அழகாகத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார். அவற்றை  இங்கு அறியலாம்.
11.1.0.அக்குறள்கள்:
            212, 216, 217, 218, 322, 480, 1005, 1054, 1057, 1067
11.2.0.சமுதாய அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு
1.முயன்று சேர்த்த எல்லாப் பொருள்களையும் தகுதியான வறிய வர்களுக்குக் கொடுத்தல்
2.பொதுக்கொடை விருப்பத்தோடு செல்வத்தை உலகத்தார் பசி தீர்க்கப் பயன்படக் கொடுத்தல்
3.பெரும்தன்மையர் செல்வம் உலகத்தார் நோய் தீர்க்கப் பயன்படக் கொடுத்தல்
4.கொடைக்கு வழிஇல்லாக் காலத்தும் பொதுக்கொடை செய்தல் 
5.உணவைப் பல உயிர்களோடும் பகிர்ந்து உண்ணல்
6.செல்வம் நிலையற்றது; அது பெற்றால், வறுமை ஒழியும்படி நிலையான அறச் செயல்களைச் செய்தல்
7.சம வாய்ப்பு வாய்க்கும்படி பொதுக்கொடை செய்தல்
8.தேடிய கோடிப் பொருள்கள் எல்லாம் கொடுப்பதற்கும் தாம் துய்ப்பதற்கும் என உணர்தல்
9.வறியர்களது வறுமையை ஒழிக்கப் பொருள் கேட்டுப் பெறுதல் கொடுத்தலுக்குச் சமம். ஆதலால், அத்தகு அறத்தைச் செய்தல்
10.வறியவர்களைக் கண்டு எள்ளி நகையாடாது, முகமலர்ந்து பொதுக்கொடை செய்தல்
12.0.0.நாட்டு அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10
ஒரு நாட்டு ஆட்சியர் தமது நாட்டு மக்களைத் துன்புறுத்தும்   கொடிய வறுமையிலிருந்து காக்க வேண்டும். செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். பிற நாடுகளில் நிலவும்  வாட்டும் வறுமை யையும் ஓட்ட வேண்டும்.
இவற்றை எல்லாம் நுட்பமாக — திட்பமாகச் சிந்தித்துப் பார்த் திருக்கின்றார் நுண்ணறிவர் முப்பாலார். அச்சிந்தனைகளை உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் முப்பாலில் பதிவுகளாகத் தந்துள்ளார்.
அச்சிந்தனைகளை உலக நாடுகள்  அனைத்தும் தலைமேற் கொண்டு கடைப்பிடியாகக் கொண்டால் எங்கும் எப்போதும் வறுமை என்னும் வருத்தும் பெருங்கொடுமையின் வேர் அறுபடும்;  வறுமை, வறுமையுற்று வீழும். வளமை வாழும். அத்திருவள்ளு வப் பதிவுகளை இனி இங்குக் காண்போம். 
12.1.0.அக்குறள்கள்
            381, 385, 390, 554, 555, 558, 582, 731, 732, 733
பேராசிரியர் வெ.அரங்கராசன்
 முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்
 கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
          கோவிற்பட்டி — 628 502

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!




பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!

உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார்.
திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார்.
ஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 71 நூல்களாக வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழக அரசு ஆங்கிலம் முதலான 22மொழிகளில் பெயர்த்து வெளியிட்டசிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.சாகித்திய அகாதமியின் தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
அகில இந்திய வானொலி நிலையத்தின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.
தினமணி கதிர், கல்கி, கலைமகள், அமுதசுரபி முதலான இதழ்கள்நடத்திய வரலாற்றுப்புதினம், சிறுகதை, குறும்புதினம் முதலான போட்டிகளில் பங்கேற்றும் முதல் பரிசுகள் பெற்றுள்ளார்.
மலேசியாவில் 2005இல் நடைபெற்ற உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டின் உலகச் சிறுகதைப்போட்டியிலும் 2007இல் பாரிசு தமிழ்ச் சங்கம் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு  நடத்திய அனைத்துலகச் சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு வென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநில எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரே முதல்பரிசு பெற்று வாகை சூடினார்.
ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியத்தில் இவரைப்பற்றிய மதிப்பீட்டுக்கட்டுரையைச் சேர்த்துள்ளது.
தமிழக அரசின் அண்ணா விருது, நற்கதை நம்பி, பொற்கிழி விருது, புதிய இலக்கியச் செல்வர், எழுத்துவேந்தர் முதலான பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பெற்றுள்ளன.
தமிழக அரசின் +2 ஆம் வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.
இறுதிச்சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதா் 3-ஆம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. இருப்பினும் மகுடைத் தொற்றினால் உள்ள கட்டுப்பாடுகளால் பங்கேற்பதைத் தவிர்க்கவும். தொடா்புக்கு 8903433292.
பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் மறைவிற்கு அகரமுதல மின்னிதழும், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ்அமைப்புகளும், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், ஆகியனவும் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமணி, தமிழ் விக்கிபீடியா
00
முகநூல் பதிவு:
என் அன்பிற்குரிய என்மீது அன்பு கொண்ட ஐக்கண்/அய்க்கண் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய சந்திப்புகளில் மறக்க முடியாத ஒன்று. மாநிலக்கல்விக்கருவூலத்தின் வெளியீடுகளில் படைப்பாளர்கள் பிழைகளுடன் எழுதுவதைச் சுட்டிக் காட்டினேன்(1992). அப்போதைய இயக்குநர் முனைவர் இரஞ்சன்தாசு அதற்கு என்ன செய்யலாம் என்றார்.  அவர்களுக்கு ஒரு பட்டறை நடத்தி அவர்களைக் கொண்டே திருத்தச் செய்யலாம் என்றேன். அதன்படி குமரியில் பட்டறை நடந்தது. அப்பொழுது என் தமிழ்ச்செயலாக்கப் பணிகளை அறிந்தவரும் அங்கே என் தமிழ்க்குரலைப் பாராட்டியவருமான எழுத்தாளர் ஐய்க்கண், “தமிழ், தமிழ்நாட்டில் முழுமையாகச் செயல்பட, திருவள்ளுவனை ஒரே ஒருநாள் முதல்வராக ஆக்கினால் போதும். நம் நாடு உண்மையில் தமிழ்நாடாக விளங்கும்” என்றார். அவர் மகன் அரசியலுக்கு வர அப்போதைய அமைச்சர் பொன்னையனைப் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது அவருடன் பேசியுள்ளேன். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என அனைத்துத்துறைகளிலும் நூல்கள் எழுதி விருதுகள் பெற்ற படைப்பாளியின் மறைவிற்கு அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!