வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை

அகரமுதல

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்:

கணியம் அறக்கட்டளை

அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை
  • Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
  • comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
  • wikisource.orgதளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளுக்குத் தேவையான கட்டற்ற கணியம் (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.
தன்னார்வலர்களே  இத்தகு முயற்சிகளுக்குப் பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்குச் சிறந்த வெளியை ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.
 நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம்தம்மிடம் உள்ள 1,165 மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்]   சீருருவில்  உள்ள சொல் ஆவணங்களைக், கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்குத் தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.
மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கு, அதற்கான தட்டச்சுச் செலவின் ஒரு பகுதி   நன்கொடையாக உரூபாய் 5 இலட்சம் அளிப்பதாக இசைந்தோம்; இரண்டு மாதக் கால வாய்ப்பு கேட்டுள்ளோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாகத் தருகிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 உரூபாய் /பக்கம்].

நன்கொடை வேண்டுகோள்

இரண்டு மாதங்களில் உரூபாய் 5 இலட்சம் நன்கொடை பெறுதல் என்பது பெரும் பணிதான். ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை எட்டப் பேருதவி புரியும்.
தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள் அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

வெளிப்படைத்தன்மை

வங்கி விவரங்கள்

கணியம் நிறுவனம்(Kaniyam Foundation);  க/எண் : 606 1010 100 502 79; இந்திய யூனியன் வங்கி / Union Bank Of India, மேற்குத் தாம்பரம், சென்னை; குறியீடு IFSC – UBIN0560618 
நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
 தொடர்புக்கு:
 த. சீனிவாசன் – 9841795468 ; அன்வர் – 8124782351 (பகிரி எண்)

இலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி


அகரமுதல

மாசி 11, 2050  சனிக்கிழமை  பிப்பிரவரி, 23,  2019
மாலை  6 மணி 
இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
இலக்கியச்     சிந்தனை 584 :  
அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை)
 சிறப்புரை  :  புதுவை இராமசாமி 
குவிகம் இலக்கிய வாசல் 47
 “கதை கேட்கலாம் வாங்க “
கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு

 அகரமுதல

இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு
மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 
மாலை 06.30
பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் 
முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
தலைமை :  முனைவர் தெ ஞானசுந்தரம்  
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன் 
கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி 
 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி 
தகுதியுரைசெல்வி யாழினி  

உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன் 

சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி

அகரமுதல

உலகத் தமிழர் பேரவை

சந்திக்கும் தமிழர் உலகம்
 இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002.
மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 
 மாலை 04.30 மணி
சிறப்புரை :
தமிழும் – சீன மக்களும்
உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு)
(கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்)
நிகழ்ச்சி நடுவர்:
திரு. அக்கினி
(உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்)
செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க:https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t
உலகத் தமிழர் பேரவை, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018, தமிழ்நாடு தொலைபேசி : +91-98416 88937 / +91-89460 97054 +91- 7904576115http://www.worldtamilforum.com

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்

மாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019
பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை
உலகத்தாய்மொழி நாளில்
உலகத்தமிழ்க்கழகம் நடத்தும்
தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்
தொடக்கவுரை: பழ.நெடுமாறன்

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்

அகரமுதல

அனைத்துலக 17 ஆவது

முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்

 

தொடக்கவிழா : கொழும்புத் தமிழ்ச்சஙு்கம், கொழும்பு – வைகாசி 13, 2050 / 25.05.2019

நிறைவு விழா:

நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அரச்சலூர், ஈரோடு

ஆடி 01, 2050 / 27.07.2019


முனைவர் மு.கலைவேந்தன்

திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு 613 204

பேசி 04362 260711;  94867 42503; 

mukalaiventhan@gmail.com

திங்கள், 18 பிப்ரவரி, 2019

மாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி

மாணவர்களும் பகுத்தறிவும்

தோழர்களே!
 உங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்லன். நான் எவ்வாறு  ஏதாவது பேசுகிறேன் என்றால், அவை எல்லாம் இப்போது படிப்பு என்று சொல்லப்படுகிறதன் மூலமாய் அறிந்து பேசப்படுகிறது என்பதும் இல்லாமல் என்னுடைய பட்டறிவால் பிறருடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாகஆராய்ந்து கண்ட, பெற்ற பட்டறிவுகள் மீதுதான் அதன் பேரால்தான் எனக்குச் சரியென்று தோன்றுகிற செய்திகளைப் பேசுகிறேன். இந்தப்படி நான் பேசுகிற செய்திகளைச், சொல்லுகிற செய்திகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு வார்த்தை சொல்லவில்லை.  சொல்வதை மட்டும் கேளுங்கள்.
மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்; இந்தக் கருத்துகளைப் பற்றி ஆராயுங்கள். எந்தவித தங்குதடையும் இல்லாமல் தாராளமாக எண்ணத்தைச் செலுத்தி ஆராயுங்கள். நீங்கள் சிறுவர்களாய் இருப்பதால் மற்றவர்களுடனும் கலந்து மற்றவர்கள் கருத்தையும் தெரிந்து, பிறகு சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.
எந்த செய்தியைப் பற்றி யார் சொன்னாலும், அது எப்படிப்பட்ட செய்தியாகஇருந்தாலும், எப்பேர்ப்பட்ட பெரியவர் சொன்னதாக இருந்தாலும் மக்கள் அதை ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்பதாக வள்ளுவர் தம்முடைய குறளில் இரண்டொரு பாட்டுகளில் வலியுறுத்தி கூறி வருகிறார்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு  என்கிறார்.
அதோடு நின்று விடவில்லை;
எப்பொருள் எத்தமைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்பதாகக் கூறியிருக்கிறார்.
ஒரு சங்கதி, பொருள், அது எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அது நம்முடைய அறிவுக்கு அடங்கியதாய், அது நமக்குத் தெளிவானதாய் இருந்தால் ஒழிய, அதை ஏற்றுக் கொள்வது என்பது கூடாது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது; அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப் படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள். இந்த அறிவு என்பதானது உலகத்தின் எல்லா  உயிரினங்களுக்கும் பொதுத் தன்மையானது ஆகும். ஆனால், அந்தப்படியான அறிவில் அதற்கு ஏற்ப தரத்தில், தன்மையில்தான் வித்தியாசம் இருக்கிறது. இரும்பு என்பது ஒன்றுதான்; ஆனால், அதிலிருந்து பல வெவ்வேறான பொருள் செய்யப்பட வில்லையா? அதுபோலத்தான் குறிப்பாக மனித அறிவுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனித அறிவு என்பது ஆழ்ந்து சிந்திக்கும் படியான, இது ஏன்? இது எப்படி? என்று ஆராய்ச்சி செய்யும் படியான தன்மையில் உள்ளது ஆகும். அதைப் போலவே மற்ற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் இல்லாத அறிவுச் சக்தி சில குறிப்பிட்டவற்றில் இருந்து வருகிறது.
இந்த நாட்டில் ஒரு சாதி பல ஆயிரம் ஆண்டுகளாக உயர்ந்த சாதி, தென்னமரத்தளவு உயர்ந்த சாதி, இன்னொரு சாதி கீழ் சாதி; இந்தத் தன்மையில் இருந்து வருகிறது.
சாதாரணமாக எறும்பு போன்ற உயிரினங்களுக்கு இனிப்புப் பண்டம் எங்கிருந்தாலும், எவ்வளவுதான் மூடி மறைக்கப்பட்டு வைத்திருந்தாலும், பண்டம் இருக்கிற இடத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு உரிய மூக்கு இருக்கிறது. அதேமாதிரி கழுகு மேலே எவ்வளவு தூரத்தில் பறந்து கொண்டிருந்தாலுங்கூட கீழே இருக்கிற சிறு உயிரினமும் அதனுடைய கண்ணுக்குத் தெரியுமளவுக்கு அவ்வளவு கூர்மையாக இருக்கிறது. இதுபோலவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்தன்மை உண்டு தான். ஆனால், மனிதனுக்கு மட்டும்தான் ஆராய்ச்சி, சிந்தனைப் பண்பு, சக்தி உண்டு. அதன் காரணமாகவே மனிதன் நாளுக்கு நாள், காலத்துக்குக்  காலம் மாறுதல் பெற்று வருகிறான். மிருகங்களுக்கு அப்படிப்பட்ட மாறுதல் தன்மை இல்லை. 1,000 வருடங்களுக்கு முன் ஒரு காக்கை எப்படியிருந்ததோ, எப்படி வாழ்ந்ததோ, எப்படி கூடு கட்டிக் கொண்டதோ அதைப் போலத்தான் இன்றும் அதைப் போலவே தான் 1,000 வருடங்களுக்கு முன் நிர்வாணமாக இருந்த மிருகங்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அதாவது அவற்றின் தன்மையும், அறிவும் ஒரு தன்மைக்கு – அளவுக்குத்தான் கட்டுப்பட்டது. மனிதனுடைய அறிவுக்கு எல்லை என்பது இல்லாததால், முதலில் காட்டுமிராண்டியாய், மலை, குகை, மரங்களில் வசித்து வந்த மனிதன் இன்று பல துறைகளிலும் நாகரிகம் பெற்றவனாய், வசதி பெற்றவனாய் விளங்குகிறான்.
மனிதன் நமக்குத் தெரிய 100 ஆண்டுகளுக்கு முன் சிக்கி முக்கிக் கல் மூலமாக நெருப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தான். ஆனால், இன்றைக்கு நெருப்புக் குச்சி, மின்னடுப்பு மூலமாகவெல்லாம் நெருப்பு உண்டாக்குகிறான். எப்படி இந்த மாறுதல், முற்போக்கு ஏற்பட்டது? மனிதன் தன்னுடைய அறிவைத் தாராளமாகச் செலுத்தி ஆராய்ந்ததன் காரணமாகத் தான், இப்போது நாம் எத்தனையோ அதிசய அற்புத விஞ்ஞான வசதிகளைக் காண்கிறோம்.
இந்தப்படி அற்புத அதிசயங்கள் கண்டு பிடிக்கப்பட்டது எல்லாம் நம் நாட்டில் அல்லாமல் மற்ற நாடுகளில்தான் இந்த அதிசயப் பொருள்கள் என்பவற்றில் நாம் கண்டுபிடித்தது என்பது ஒன்று கூட இல்லை. நாம் கண்டுபிடித்தது எல்லாம் மேலே ஏழு லோகம், கீழே ஏழு லோகம் என்று தான்.
ஏன் என்றால், மற்ற நாடுகளில் எல்லாம் அறிவுக்குச் சுதந்திரம்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நம் நாட்டிலோ அறிவுக்கு ஒரு துறையில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் இன்னொரு துறையில் அடக்கப்பட்டு விடுகிறது.
ஏதோ ஓர் அமைப்பு, அந்தப்படியான அமைப்பின் காரணம் தங்களுக்கு ஆதாயம்என்று கருதுகிற சிலர், மனிதன் அறிவு வளர்ந்து விடுமேயானால், இந்த அமைப்பு ஒழிந்து போய், தங்கள் ஆதாயமான வாழ்வு பறிபோய் விடும் என்கிற கருத்தில் இந்த அமைப்பு மாறாமல் இருக்கும்படியான தன்மையில் வைத்திருக்கிறார்கள். நமக்கும் இது அவர் சொன்னதாயிற்றே; இது கடவுள் சொன்னதாயிற்றே என்கிற பயத்தில் அந்தக் காரியத்தில் சிந்திக்கவே முடிவதில்லை. அதனால்தான், இந்த நாட்டில் ஒரு சாதி பல ஆயிரம் ஆண்டுகளாக உயர்ந்த சாதி, தென்னமரத்தளவு உயர்ந்த சாதி, இன்னொரு சாதி கீழ் சாதி; இந்தத் தன்மையில் இருந்து வருகிறது.
எனவேதான், மற்ற துறையில் நம் அறிவைச் செலுத்துவது போலவே எல்லாத் துறைகளிலும் நம்முடைய அறிவைத் தாராளமாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு, நம்முடைய நாட்டிலே அறிவு இரட்டையாட்சி புரிகிறது. சாணியை சாப்பிட மறுக்கும் மனிதன், அதை சாமியாகக் கும்பிடுகிறான்; சாம்பல் மேலே பட்டால் கோபிக்கும் மனிதன் அதே சாம்பலைச் சாமியின் திருநீறு என்று பூசிக்கிறான். இந்த இரட்டையாட்சி ஒழிய வேண்டும்.
(23.9.1953 அன்று ஈரோடு மகாசனப் பள்ளியில்
 தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
(எல்லாத் துறைகளிலும் நம்முடைய அறிவு தாராளமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை விளக்கியும் சொற்பொழிவு ஆற்றினார்.)
உண்மை பிப்.16-28,2019