சனி, 28 ஜூன், 2025

99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? 100. அருத்த சாத்திரம் பொதுவான நீதி நூலா? – இலக்குவனார் திருவள்ளுவன்



 (சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 தொடர்ச்சி)

  • அருத்த சாத்திரம் சனாதன தருமத்தைத்தான் கூறுகிறது. ஆனால் அது மக்களுக்குரிய நல்லொழுக்கமல்ல.

நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என அருத்த சாத்திரம் கூறுகிறது. தமிழ் நெறியோ பிறன் மனை விழையாமையையும் கற்பொழுக்கத்தையும் வலியுறுத்துகிறது.

மரம் முதலியவற்றால் இரவில் இலிங்கங்களைச் செய்து வைத்து, இது பூமியைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றிய சுயம்புலிங்கம் என்று எல்லோருக்கும் அறிவித்து அதற்குத் திருவிழா முதலியவற்றைச் செய்யுமுகமாக மக்களிடமிருந்து பொருளை ஈட்டல் வேண்டும். கடவுள், மரம் முதலியவற்றில் தெய்வம் வீற்றிருக்கிறது என மக்களை நம்ப வைப்பதற்காக, மேற்கூறிய மரங்களில் பருவமல்லாத காலத்தில் மலர், கனி என்னும் இவற்றைத் தோற்றுவித்துத் தெய்வத்தின் அருளால் ஏற்பட்டதாகக் கூற வேண்டும். இரவில் சித்த உருவினர் சுடலை முதலியவற்றிலுள்ள மரங்களில் அரக்கர்  வேடம் பூண்டு தங்கியிருந்து, நாள்தோறும் ஒவ்வொரு மனிதனை எனக்கு உணவாக அளித்தல் வேண்டும். இன்றேல் அனைவரையும் ஒரே நாளில் கொன்றுவிடுவேன் என்று எல்லாரும் அறியுமாறு கூறி அங்ஙனம் அரக்கன் கூறினதாகவும் விளம்பரப்படுத்தல் வேண்டும்.

இவ்வாறு கூறும் அருத்த சாத்திரத்தை நல்லொழுக்க நூலாக ஏற்க முடியுமா? இச்சனாதனத்தை நாம் புறக்கணிக்க வேண்டாவா?

  • அருத்தசாத்திரத்தைப் பொறுத்தவரை சனாதன நீதியான குல தருமமே நீதியாகும். பிராமணன் எந்த கைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது. அரச தருமம் நால்வகைப்பட்ட வருணாசிரம தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது. நெஞ்சு பொறுக்காத வஞ்சகச் செயல்களைச் செய்ய வழி கூறுவதே அருத்த சாத்திரம். பிற சனாதன நூலைப்போல் இச்சனாதன நூலும் வேரறுக்கப்பட வேண்டியதே! தமிழ் இலக்கியங்களிலிருந்து கடன் வாங்கி நல்ல கருத்துகளை இடம் பெறச்செய்ததால் மட்டுமே இதனைப் போற்றத்தக்கதாகக் கருதக் கூடாது.
  • (தொடரும்)

வெள்ளி, 27 ஜூன், 2025

29.06.2025 நீயா நீனா நிகழ்வில் தலை காட்டுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

      27 June 2025      அகரமுதல



மேற்கோள் முதலிய தேவைக்கேற்ப தமிழை ஆங்கிலத்தில் ஒலி பெயர்ப்பு முறையில் எழுதுவது இயற்கையே. ஆனால், தமிழைச் சுருக்கி ஆங்கில எழுத்துகளில் எழுதும் தங்கிலீசு முறையை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் அதற்கு எதிர்ப்பானவர்களை மறு தரப்பாகவும் கொண்டு இந்நிகழ்விற்கான ஒளிப்பதிவு ஏறத்தாழ இரவு 9.00 மணி முதல் மறுநாள் யாமம் 3.00 மணி வரை நடைபெற்றது.

நானும், தொண்டினையே புனைபெயராகக் கொண்ட தமிழாசான், தமிழ்மீட்சிப்பாசறை கார்த்திக்கு, தமிழ்மொழிக் காப்பாளர் ஆறு கதிரவன், திரைக்கவிஞர் பார்வதி மீரா முதலான சிலரும் அழைப்பின் பெயரில் பங்கேற்றிருந்தோம்.

நீயா நானா’ நிகழ்வின் சிறப்புகளுக்கு ஒரு சான்றாக இதனைக் கொள்ளலாம். இயக்குநர் திலீபனும் கூடுதல் இயக்குநர் ஐயப்பன் முதலான இயக்குநர் குழுவினரும் கல்விக்குழு முதலிய குழுவினரும் சண்மதி, அசய், முதலிய செய்தியாளர் குழுவினரும் பிற குழுவினரும் மிக முயன்று சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். 6 மணி நேரப்பதிவை 2 மணி நேரமாகத் திறம்படச் சுருக்கும் தொகுநர் தேன்ராசு முதலிய குழுவினரும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். நிகழ்வினை மக்களிடம் கொண்டு செல்ல நூறுபேர் உழைக்கின்றனர். இவர்களைத் தவிரத் தொழில்நுட்பக் குழுவினரும் உள்ளனர். இந்நிகழ்ச்சியின் ஆக்குநர் மெர்க்குரி கிறிசுட்டியானாவிற்கும் பாராட்டுகள்.

தன் பேச்சுமுறையாலும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாங்கினாலும் அவையைக் கட்டுப்படுத்தும் திறத்தாலும் கருத்துகளாலும் மக்களிடம் நற்பெயர் எடுத்து வரும் கோபிநாத்தின் தொகுத்தல் பணியும் சிறப்பாக உள்ளது.

ஆனால், இந்த நிகழ்வின் பொழுது தமிங்கிலம் அல்லது தமிழ்ங்கிலீசின் தீமையை எடுத்துரைக்கப் போனாலே “மொழிப்பற்று, தூய தமிழ், மொழிக்கொலை, வரலாறு என்றெல்லாம் பேசி அவர்களை மிரட்டாதீர்கள். பாவம் சின்னக் குழந்தைகள்” என்று சொல்லி மொழிக்கொலைகளுக்கு எதிராக வாதிட வந்தவர்களை அடக்கியதுதான் ஏனென்று தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே நான், “பேச இசைவு தந்தால்தான் பேச வேண்டுமா? இடையிலே குறுக்கிடலாமா” எனக் கேட்டேன். “எந்தத் தடையும் கிடையாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். தலைப்பு குறித்து என்ன வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை” என்றுதான் சொன்னார்கள். ஒருவேளை தமிழில் எழுதினால் இழிவாக எண்ணுவார்கள், மூதாட்டியாக எண்ணுவார்கள் என்பனபோல் பேசப்பட்ட தங்கள் செயலைச் சரியானது எனக் கருதும் மொழிக்கொலையின் அவலத்தை மக்கள் உணர வேண்டும் என்பதற்தாகவே அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி போல் இதனை நடத்தினாரா என்று தெரியவில்லை. தன் பெண்ணிற்கு வெண்பா எனப் பெயர் சூட்டித் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்திய அவர் தமிழ்ப்பற்று மீது ஐயமில்லை.  பங்கேற்பாளர்களைப் போல் தங்கள் மொழிக்கொலை சரியே எனக் கருதுவோருக்கு விடையிறுக்கும் வகையிலாவது தமிழ்க்கொலைக்கு எதிரானவர்களுக்குச் சம வாய்ப்பு தந்திருக்கலாம்.

நிகழ்வினைப் பார்க்கும்பொழுது இது தெரியாமல் இருக்கலாம். எனினும் மொழிக்கொலை ஈடுபாட்டாளர்களால் தமிழ்நாடு நாம் நினைப்பதுபோல் அல்ல, அதைவிடமோசமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை தரும் உண்மை.

நிகழ்வினைப் பார்க்க அன்புடன் வேண்டுகிறேன்.

‘அருஞ்சொல்’ என்னும் தளத்தில் ‘தமிங்கிலத்தைப் பெருமிதமாகப் பேசுங்கள்’ (24.11.2021) என ஒரு கட்டுரை வந்திருந்தது. இப்படிப்பட்ட தற்குறிகள் பெருகிக் கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே – அதைத்

தொழுது படித்திடடி பாப்பா! – பாரதியார்

உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக!

 விடுதலைப் போராளி சுப்பிரமணிய சிவா : ஞானபாநு, செட்டம்பர், 1915

தமிழில் பேசுக!  தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!

– தமிழ்ப்போராளி சி.இலக்குவனார்

நாட்டு நிலையை உணருவதற்கு வாய்ப்பளித்த விசய் தொலைக்காட்சிக்கு நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்

      27 June 2025      கரமுதல



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி)

மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a mourian document? by Mark Mcclish)

இதில் அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து நூலல்ல, இதன் ஆசிரியராகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சந்திர குப்புத மன்னரின் அமைச்சர் அல்லர், அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சிலரால் தொகுக்கப்பெற்றது இந்நூல் என அவர் இதில் நிறுவியுள்ளார்.

அருத்தசாத்திரத்தைக் கெளடில்யன் என்பான் எழுதினான் என நூலில் இடைச்செருகல் உள்ளது. சாணக்கியன், கெளடில்யன் ஆகிய பெயர்கள் வெவ்வேறு கோத்திரத்திற்கு உரியன. எனவே, இருவரும் ஒருவரல்லர் என்பதே உண்மை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சாணக்கியன் தன்னை அவமதிப்புச் செய்ததால் கூந்தலை முடித்து உறுதி எடுத்து அதன்படி நந்த பரம்பரையை அழித்து மெளரியப் பேரரசை நிறுவினான் என்பது முழுக்கட்டுக்கதை எனவும் அறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர்.

அருத்த சாத்திரம் குறித்துக் கற்பனையான வரலாறு படைத்து பரப்பப்பட்டதால், மூல நூலைப் படிக்காமல் கற்பனைக் கதையைப்படித்து விட்டு இதனை உலகின் முதல் வரலாற்றுக் களஞ்சியம் என்றும் தெற்காசியாவின் முதல் அரசறிவியல் நூல் என்றும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அருத்த சாத்திரம் குறித்த மிகுதியான பாராட்டுரைகளை நாம் காணலாம். அனைத்தும் கதைகளை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டடமே!

இடைச்செருகலுக்கு முன்னதாக, அருத்த சாத்திரத்திற்கும் மெளரியப் பேரரசின் காலத்திற்கும் தொடர்பு உள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை.

ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூல்களில்தான் அருத்த சாத்திரம்பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. ஏறத்தாழ பத்து நூல்களில் அருத்த சாத்திரம்பற்றிய குறிப்பு இருப்பினும் எதிலும் இந்நூல் சாணக்கியனால் எழுதப் பெற்றது என்ற குறிப்பு இல்லை.  நூலாசிரியரின் மற்றொரு பெயர் விட்டுணு குப்(பு)தர். இவர் குப்(பு)த பரம்பரையைச் சேர்ந்தவர் அல்லர். எனவே, இதுவும் பொய்.

மனுநூல் அருத்தசாத்திரத்திற்குப் பின்னர் எழுதப் பெற்றதாக மக்குளீசு கூறுகிறார். ஆனால், இந்நூலில் மனுவிற்கும் நன்றி தெரிவிக்கும் இடைச்செருகல் உள்ளது. மக்கள் மாண்பிற்கு மாறான ஒழுக்கக் கேட்டினை வலியுறுத்தும் மனுவுடன் தொடர்பு படுத்துவதில் இருந்தே அருத்த சாத்திரம் உயர்ந்த நூலல்ல என்பது புலனாகும்.

அருத்த சாத்திரத்தில் சில குறட் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதனால் திருவள்ளுவர் அருத்த சாத்திர நூலாசிரியருக்குக் கடன்பட்டுள்ளார் என வரலாற்று உணர்வில்லாதவர்களும வரலாற்றை மறைக்க எண்ணுபவர்களும் கூறி வருகின்றனர். திருக்குறள் காலத்தால் முந்தையது என்னும் பொழுது அதிலிருந்துதானே அருத்தசாத்திர ஆசியர் கருத்துகளைக் கையாண்டிருப்பார். இரண்டையும் ஒப்பிட்டுப் பேரா.ப.மருதநாயகம், ‘வடமொழி ஒரு செம்மொழியா’ என்னும் நூலில் விரிவாக ஆராய்ந்து அருத்த சாத்திரம் திருக்குறளுக்குக் கடன்பட்டுள்ளது என நிறுவியுள்ளார்.

இவ்வாறு நூலாசிரியர் பெயர், காலம், கருத்துகளில் கற்பனைகளைப் புகுத்தியுள்ள இந்நூல் அனைவக்கும் பொதுவான கருத்துகளையும் கூறவில்லை.

இறைமாட்சி, தெரிந்து தெளிதல், உழவு, ஒற்று, தூது முதலான பல அதிகாரங்களில் உள்ள திருக்குறட் கருத்துகளை அருத்தசாத்திரத்தில் காணலாம். எனினும் சமற்கிருத நூல்களுக்கே உரிய பண்பாடற்ற செய்திகளையும் காணலாம். இதன் நீதி என்பது மனுநூல்போல் வருண அடிப்படையிலான  அநீதியேயாகும். பெண்களை இழிவுபடுத்தியும் தாழ்த்தியும் பேசுவதே இந்நூலின் சிறப்பு.

  • (தொடரும்)

வியாழன், 26 ஜூன், 2025

94. பிராமணர்களை மட்டும் உயர்த்திச் சொல்வதாகக் கூறுவது தவறானது என்கிறார்களே!+95. சனாதன நூல்கள் நல்ல கருத்துகளையே கூறவில்லையா? + 96. இடைச்செருகல் கருத்துகளைத்தான் பரப்புகிறார்களா?- இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி)

சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96

  • பின்வரும் சனாதனக் கருத்துகளைப் பாருங்கள். பொய்யான கருத்தை மக்களிடையே பரப்பி உண்மை என நிறுவ முயலும் சனாதனவாதிகளின் செயலைப் புரிந்து கொள்வீர்கள்.

பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும்.

பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான்.

பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அவ்வுணவு மீது ஆசை கொள்ளும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன்; அவன்அதைச் சீரணிக்க இயலாது.

பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான்.

பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள்.

அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள்.

தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும உலகத்துக்குச் செல்வதில்லை.

அக்கினி பிராமணர்களது வழிகாட்டி. சோமன் அவர்களின் உறவினன்.

பிராமணர்களைச் சபிப்பவர்களை அழிப்பவன் இந்திரன்.

பிராமணனை இம்சிக்கும் மக்கள் அடியோடு அழிகிறார்கள்.

பிராமணனது சரம் நாகம் போலும் நஞ்சு தோயும் அம்பைப்போலும் அதிபயங்கரமானது. அதனால், அவர்களைப் பழிப்பவனைத் துவம்சம் செய்கிறான்.

 அவி என்னும் சூரியன் தன் இருவரிசைப் பற்களின் இடையில் வைத்து அங்கிரசனது மகனான பிராமணனை நாசமாக்கும் மக்களை அரைத்துவிடுவான்.

பிராமணன் மீது துப்பும் மக்கள் முடியை உண்டு உதிரநதி நடுவே உட்காருபவர்களாவார்கள்.

பிராமணனுக்கு எதிரான நாடும் அரசும் பாழாகும்.

பிராமணனை அழிக்கும் அரசை 8 பாதங்கள் 4 கண்கள் 4 வாய்கள் 4 மோவாய்கள், 4 காதுகள் 2 காதுகள் உள்ளவள் அலறச் செய்வாள்.

பிராமணனை எந்த அரசில் இம்சை செய்கிறார்களோ  அந்த அரசாங்கம், ஓட்டையுள்ள படகில் நீர் பாய்ந்து அதனை மூழ்கச் செய்வதுபோல் துன்பம் பாய்ந்து அழிந்து விடும்.

பிராமணனை இம்சிப்பவன் இருக்குமிடத்தில் மழை பொழிவதில்லை.

  • சனாதன கருத்துகளை விரும்பாத நன்கு படித்த ஆரியர்களும் பிறரும் தமிழ், பிராகிருதம் முதலான பிற மொழி இலக்கியங்களில் இருந்து நல்ல கருத்துகளை இடைச்செருகல்களாகச் சேர்த்து உள்ளனர். அத்தகைய நல்ல கருத்துகளைத்தான் ஆரிய நூல்களைச் சிறந்த நூல்களாக் காட்ட மேற்கோள்களாகத் தெரிவித்துப் பரப்புவர். ஆரிய நூல்களில் இல்லாத கருத்துகளையும் இருப்பதாகக் கூறிப் பரப்புவர். இவற்றை எல்லாம் நீக்கிப் பார்த்தால் மனித நேயமற்ற சனாதன நூல்கள் எங்ஙனம் நல்ல கருத்துகளைக் கூறும் என்று எதிர்பார்க்க முடியும்?
  • சமற்கிருதத்திலுள்ள மூத்த இலக்கண நூல் பாணிணி எழுதிய அட்டாத்தியாயி. இதனை இல்லாத கற்பனையான சொற்களை உருவாக்கி எழுதியுள்ளதாக மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் பேரா.முனைவர் ப.மருதநாயகம் ‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என்னும் தம் நூலில் எழுதியுள்ளார். அருத்த சாத்திரம் எழுதியதாகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கௌடில்யர் என்பதும் கற்பனையே என்கிறார்கள். எனவே, மூலநூலில் இல்லாத சிறப்புகளை இடைச்செருகல்களாகப் புகுத்துவதே ஆரியர்களின் தொடக்கக் காலத்தில் இருந்தே உள்ள உத்தி.

அடுத்து வரும் இரு விடைகள் காண்க.

புதன், 25 ஜூன், 2025

? 93. காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

     25 June 2025      கரமுதல



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி)

  • ஒழுக்கம் அற்றவர்கள் காயத்திரி மந்திரம், நரசிம்மர், ஆஞ்சநேயர் போன்ற கடவுளரைப்  பூசித்தால் அவர்கள் கோபம் கொண்டு விடுவார்கள் என்றும், அவர்களால் கெடுபலன்கள் விளையும் என்றும் எழுதி வைத்துப் பரப்புகிறார்கள். ஒழுக்கம் அற்றவர்கள்தானே சொல்லக்கூடாது; பிற சாதியில் உள்ள ஒழுக்கமானவர்கள் சொல்லலாமே என்றால், பிராமணர் அல்லாதவர் என்ற சமற்கிருதத் தொடரைத்தான் தமிழில் இவ்வாறு தவறாக மொழி பெயர்த்துள்ளனர். எனவே, பிராமணர்க்கும் அல்லாதவர்க்கும் வெவ்வேறு நீதி கூறும் நூல்களை நாம் புறக்கணிக்க வேண்டாவா?  இவற்றை யெல்லாம் நாம் எங்கே பயன்படுத்துகிறோம் என்கிறீர்களா? பல்வேறு இணையத்தளங்களிலும் மின்னிதழ்ப் பக்கங்களிலும் இவை பகிரப்பட்டுள்ளன. இந்தப்பரப்பலுக்குத் தடை விதிக்காமல் நாம் அவற்றை மதிக்கவில்லை என்று சொன்னால் பொருளாகாது. எனவே, ஆரிய நூல்களில் இல்லாத நல்ல கருத்துகள் உள்ளனபோல் தவறாக விளக்குநருக்கும் மொழி பெயர்க்குநருக்கும் தண்டைன வழங்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது.

காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம்.  இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை அடைய முடியும். பிறர் அவரை அண்டி அவர் மூலமாக  அவர் தரும் அளவுஅறிவு பெறவேண்டும் என்றாகிறது. அறிவு வளர்ச்சிக்கும் சாதியை அளவுகோலாகக் கூறும் ஒரு நூலைச் செவ்விலக்கியம் என்று தவறாகப் பரப்பி வருகிறார்கள்.  மக்களிடையே  பாகுபாடு காட்டும் இத்தகைய நூல்களை அவ்வாறு சொல்வது  மனித நேயத்திற்கு எதிரானதாக  அமையாதா? எண்ணிப்பாருங்கள். .(இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி, சமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை)

மனுவின் கொள்கைபடி சூத்திரர்கள் அறிவுரை அல்லது கல்வி பெற தகுதியற்றவர்கள். புனித நூல் விவரங்களை அவர்களுக்கு அறிவிக்க உயர் சாதியினர் முற்படக் கூடாது. சூத்திரர்கள் முன்னர் வேதங்களை ஒதுவதும் கூடாது.

எனவே, இப்பாகுபாட்டை வலியுறுத்தும் உபநிடதங்களை அனைவருக்கும் பொதுவாக இருக்கும் தகுதியற்ற நூல்களை  நாம் எங்ஙனம் சிறந்த நூல்களாகப் போற்ற முடியும்?

“மேலான பொருளாழம் மிக்க இந்த உபநிடத்தைச் சான்றோர்களின் அவையிலோ சிரார்த்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத்தருகிறது” என்பது ஒரு பாடலில் பொருள். ஆனால், மூலச்சமற்கிருத நூலில் பிராமணன் படித்தால் என்றுதான் உள்ளது.

எனவே, பிராமணன் படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆதலினால் பிராமணர் அலலாதார் யாரும் படிக்க முயலாதீர்கள் என நூலிலேயே தெரிவித்து விட்டனர். பொதுவாக நூலின் இறுதியில் அந்நூலைப்படிப்பவர்க்கு என்ன பயன் கிடைக்கும் என்று சொல்வது வழக்கம். அது பொதுவாகத்தான் தமிழ் நூல்களில் இருக்கும். ஆனால், சமற்கிருத நூலில் பிராமணனுக்குத்தான் பலன் கிடைக்கும் என்றுதான் உள்ளது. சனாதனத்தின் சாதி வேறுபாட்டை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

“வாழும் மக்களுக்குக் கல்வி, கண்ணெனவே போற்றப்பட்டு வந்துள்ளது.  ஆண் பெண் சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற கொள்கையே நாட்டில் நிலவியது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார் (இலக்கியம் கூறும் தமிழர் கல்வி -சங்கக் காலம்)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

(திருவள்ளுவர், திருக்குறள் 392)

என வாழும் உயிர்க்குக் கல்வி என்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்பதே தமிழ் நெறி.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 396)

என மாந்தர் அனைவருக்குமே பாகுபாடின்றிக் கல்வி கற்க உரிமையுண்டு என்பதுதான் தமிழ் நெறி.

தமிழ்நெறியோர் பிராமணர்க்கு மட்டுமே கல்வி எனக் கூறும் சனாதனத்தை எதிர்க்காமல் வேறு என்ன செய்ய இயலும்?

  • (தொடரும்)

செவ்வாய், 24 ஜூன், 2025

92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி)

  •  
  • இது மிகவும் தவறான கருத்து என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இருப்பினும் ஒன்றைக் கூறுகிறேன்.
  • கணவர்மனைவியை அடிப்பதில் தவறில்லை(மனுதர்மம்) என்பது சனாதனம். இதனை வெளிப்படுத்தும் தீர்ப்பு ஒன்றைப் பாருங்கள்.
  • “என் கணவர் அடித்துத் துன்புறுத்துவதால், அவரிடம் இருந்து மணவிலக்கு வழங்க வேண்டும்” எனக் கோரி, பெண் ஒருவர் தொடுத்த வழக்கில், கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா, “குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விசயங்களைக், குழந்தைகளின் நலன் கருதிப், பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்’ எனத்  தெரிவித்தார் (ஆகட்டு/செட்டம்பர் 2022).

“எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148).

  • ஆரியநூல்கள் பிராமணர்க்கு முதன்மையும் தலைமையும் கொடுக்கின்றன என்பதை அவற்றைப் படிப்போர் அறிவர்.  ஆனால் இவற்றை மறைத்து விட்டு, இவை ஒழுக்கமானவர்களைத்தான் போற்றுவதாகப் பொய்யுரை தருகின்றனர். வருண வேறுபாடுகளையும் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் பிராமணன் ஆகின்றான், பிறப்பினால் அல்ல எனப் பொய்யான விளக்கம் தருகின்றனர். ஒழுக்கம்தான் அடிப்படை என்றால் தலையில், முகத்தில், தோளில், காலில் பிறப்பதாகக் கூறி அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது ஏன்? இவ்வாறு பொய்யான விளக்கங்கள் அளித்து ஆரிய நச்சுரைகளை நல்லுரைகளாகக் காட்டுவோருக்கும் அத்தகைய நூல்களை வெளியிடுவோருக்கும், அத்தகைய விளக்கவுரைகளுக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அத்தகையோருக்குச் சான்றாக கட உபநிடதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் சிலவற்றைப் பார்ப்போம்.

“தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்”  என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி.  ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது.

 இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான அவனது அஃதாவது  வீட்டு உரிமையாளனது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச்செல்வம் கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன” என்று மொழி பெயர்ப்பில் தரப்படுகிறது.

 இதற்கு விளக்கமாக, “தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை விருந்தோம்ப வேண்டியது – உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்கா விட்டால் எல்லாச் செல்வமும் அழியும். அதே வேளையில் உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது” என உள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் தூயவர்களைத்தானே போற்றுகின்றது. இதில் என்ன தவறு. உயர்ந்த கருத்தாக உள்ளதே என எண்ணத் தோன்றும்.

ஆனால் கட உபநிடதம் என்னும் மூலச் சமற்கிருத நூலில் “பிராமணர்களைப்(ப்ராக்மணோபேணாவிட்டால் பிள்ளைச் செல்வம்கால்நடைச் செல்வம் அழியும்அவன் செய்த எல்லா நற்செயல்களின் பயன்களும் இல்லாமல் போகும்” என்றுதான் கூறுகிறது.

மற்றொரு பாடலிலும் பிராமணன் என்னும் சொல் வழிபாட்டிற்குரியவன் என்றும்  தூயபாலன் என்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா இடங்களிலும் பிராமணன் என மூல நூலில் உள்ள இடங்களில் எல்லாம் திரித்துக் கூறப்பட்ட மொழிபெயர்ப்புகளையே நாம் காணலாம். இவற்றின் அடிப்படையில் அந்நூற்கருத்துகளைப் போற்றும் அறியாதவர்களையும் காணலாம்.

பிராமணர்களை உயர்த்திக் கூறும் சாதிப் பாகுபாட்டு நூல் எங்ஙனம் போற்றுதற்கு உரியது ஆகும்? என்பதை நாம் உணரவேண்டும். மூல நூலில் பிராமணன் என உள்ளதை வேண்டுமென்றே தமிழில் தூயவன் எனக் குறிப்பிட்ட அநீதியைத் தட்டிக் கேட்பார் யாருமில்லையா? அதே நேரம், தூயவர்களைப் போற்றல்போலும், மறுபுறம் பிராமணர்கள் தூயவர்கள் என மறைமுகமாக வலியுறுத்துவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பின் மூலம் தவறான கருத்தைப் பரப்பும் அழிமதியர்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வரும் பிராமணனை நல்லவனாகக் கூறிப் போற்ற வேண்டும் எனச் சொல்வதன் மூலம் பிறர் நல்லவர் அல்லர் எனக் கூறுகின்றது. இதன் மூலம் பிராமணர்க்கு அடிமையாக இருக்க மூளைச்சலவை செய்கிறது கட உபநிடதம்.

பிராமணனுக்குத் தகுதி யில்லாத பொருள்களை, பசுக்களை, பிறவற்றைத் தானமாகக் கொடுப்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைவான் என்றும் கடஉபநிடதம் கூறுகிறது. தானம் கொடுப்பதாக இருந்தால் யாவர்க்காயினும் தரமான தகுந்தவற்றையே கொடுக்க வேண்டும் என்றால் நல்ல கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பிராமணனுக்குத் தகுதி யில்லாத பொருள்களை வழங்கினால் நல்லுலகம் கிடையாது. நரக உலகம்தான் செல்வான் என்பது பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது அல்லவா?

இவை எல்லாம் காலக்கடவுளான எமன், நசிகேதன் என்னும் சிறுவனுக்குக் கூறுவதாக உள்ளன. ஆகக் கடவுளே பிராமணனைப் போற்றச் சொல்கிறார் என்றால் நாம் அதைக் கேட்க வேண்டும் என்றுதானே அப்பாவி மக்கள் எண்ணுவர்.

புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது.

காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம்.  இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் பொய் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை அடைய முடியும். பிறர் அவரை அண்டி அவர் மூலமாக  அவர் தரும் அளவுஅறிவு பெறவேண்டும் என்றாகிறது.அறிவு வளர்ச்சிக்கும் சாதியை அளவுகோலாகக் கூறும் ஒரு நூலை நாம் செவ்விலக்கியம் என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் அது மனித நேயத்திற்கு எதிரானதாக  அமையாதா? எண்ணிப்பாருங்கள்.

“யாகங்களைச் செய்பவனுக்கு ஆண்களை மயக்குகின்ற தேவலோகப் பெண்களைத் தருகிறேன்” என ஒரு பாடலில் உள்ளது. பல பெண்களைத் தருவதாகக் கூறுவதிலிருந்தே இது கற்பொழுக்கத்திற்கு எதிரான நூல் எனலாம். இத்தகைய உடநிடதங்களை நாம் எப்படிப் போற்ற முடியும்? .(இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதிசமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை)

  • (தொடரும்)