ஞாயிறு, 21 மார்ச், 2010

விரிவான செய்தி
 
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம்

19 March, 2010 by admin

இயக்குநர் ராம்.
முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

ஜனவரி 29
வியாழக் கிழமை

நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).

அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.

மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்)

நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.

பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக்கூறினார். நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.

”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.

2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்.

4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.

திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார். மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.

நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.

முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.



ஜனவரி 30
வெள்ளிக் கிழமை

மெல்ல அந்த இரவு விடிந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் புரட்சிகர இளைஞர் முன்னணி பெரியார் தி.க
தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி மக்கள் கலை இலக்கியக் கழகம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)

புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம், போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள். கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.
ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” - திரு.பழ.நெடுமாறன்.
திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.
திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.

“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ் ”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட - திரு.திருமாவளவன். திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”, தலைவர்களை. இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார்.

திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு. “விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”. நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர். பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை.

திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே. திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ பேச முயற்சி செய்தார்.

”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.
”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ கூட்டத்திற்கு முன் வாசித்தார்.
மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.

மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.
கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார். தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.

முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.
தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.
வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.

ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.
இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .



ஜனவரி 31
சனிக்கிழமை

மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.

நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.

3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.

3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார். அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.

ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர், மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.

அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.
பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.

முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது, ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.

மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.
நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.

அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.

அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ”புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது, புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார். அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார்.

எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது. ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும், எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார். இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.

நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்.



ராம்


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 6313





விளம்பரங்கள்










© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக