சனி, 11 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 31 : ஏ. எம். கே. (9)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 30 தொடர்ச்சி)

ஏ. எம். கே. (9)

நாங்கள்… எங்கள்…

தஞ்சையார் எனப்படும் தஞ்சை அ. இராமமூர்த்தி மாணவராய் இருந்த காலத்திலிருந்தே தமிழக அரசியல் உலகில் நன்கறியப்பட்டவர். ஆனால் வழக்கறிஞரான பிறகும் கூட சட்ட உலகில் அந்த அளவுக்கு அறியப்படாதவராகவே இருந்தார்.

சட்டப் படிப்பு படிக்கும் போதும் அது முடிந்த பிறகுங்கூட தஞ்சையார் அநேகமாய் முழுநேர அரசியல்வாதியாகவே செயல்பட்டு வந்தார்.

காமராசரின் வழிகாட்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, சென்னை தொடங்கி அடுத்தடுத்த மாவட்டத் தலைநகரங்களில் மாநாடுகள் நடத்தப்பட்ட போது சென்னை சட்டக் கல்லூரி மாணவராக இருந்த தஞ்சை இராமமூர்த்தி தலைமையில்தான் யாவும் நடைபெற்றன. குடந்தைக் கல்லூரி மாணவனாயிருந்த அடியேனும் இந்தப் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கேற்றேன். குறுகிய காலம் என்றாலும் செறிவான பட்டறிவூட்டிய அந்தக் கதையைத் தனியாகத்தான் சொல்ல வேண்டும்.

இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லலாம். எனக்கு அப்போதே (1968-69) ‘நக்சலைட்டு’ முத்திரை விழுந்து விட்டது. என் பேச்சும் எழுத்தும் அப்படித்தான் என்னை அவர்களுக்குக் காட்டிற்று. கருப்பையா மூப்பனார் வழக்கமாக என்னைப் பிரசங்கி என்பார். “நாங்கள் பிரசிங்கிகளாகவே இருக்கிறோம், நீங்கள் தலைவர்களாகவே இருங்கள்” என்று சொல்வேன், சிரிப்பார். கடைசியில் “தீவிரவாதி” என்று அழைக்கத் தொடங்கினார். இதே முத்திரையைப் பயன்படுத்தி மாவட்ட மாணவர் காங்கிரசுத் தலைமைக்கு நான் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். அந்தக் கட்டத்தில் தஞ்சையார் என் பக்கம் நின்றார். என் நிலைபாடுகளை ஆதரித்தார்.

முழுமையாக இயக்கத்துக்கு வருமுன் தஞ்சையாரை சந்திக்கச் சென்றிருந்தேன். ‘வாங்க நக்சலைட்டு” என்றார். தஞ்சாவூர் சீனிவாசநகரில் அப்போதுதான் வீடுகட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. இரவு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம். முழுக்க அரசியல்தான். என் பேச்சிலிருந்து என் சிந்தனைப் போக்கைக் கணிப்பது அவருக்கு எளிதாய் இருந்திருக்க வேண்டும். “கொள்கைதான் பெரிது என்று நினைக்கும் போது சரியெனத் தோன்றுவதைச் செய்யுங்கள். என் வாழ்த்து எப்போதும் உண்டு” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.

ஒரு முறை நான் தஞ்சையாரிடம் கேட்டேன்.

“என்னண்ணா வக்கீலாயிட்டீங்க. நீதிமன்றத்துக்கெல்லாம் போறதில்லையா?”

“ஞாயிற்றுக் கிழமையில்தான் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. அன்றைக்கென்று நீதிமன்றத்தை மூடுகிறார்களே, என்னசெய்வது?

தஞ்சையார் காலம் தாழ்ந்தே வழக்கறிஞராகத் தொழில் புரியத் தொடங்கினார் என்றாலும், வெகு விரைவில் தஞ்சாவூரில் முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவராகி விட்டார்.

சரி, கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராகத் தோழர் ஏஎம்கே தஞ்சை அமர்வு நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த வழக்கில் வாதிடும் வாய்ப்பு எதிர்பாராமல் தமக்கு வந்த போது தஞ்சையார் பெருமகிழ்வுற்றார்.

அரசியலில் நிலைப்பாடுகள் என்று இருப்பது போல் நாட்டங்கள் அல்லது மனச்சாய்வுகள் என்ற ஒன்றும் உண்டு. நிலைப்பாடுகளில் எப்படி இருந்த போதிலும் தஞ்சையாருக்கு ஓர் இடதுசாரி மனச்சாய்வு இருந்தது. அதற்கு இந்த வழக்கு ஏற்றதாய் இருந்தது.

இரண்டாவதாக,

தோழர் ஏ.எம். கோதண்டராமனைப் பொறுத்த வரை இது முழுக்கப் பொய் வழக்கு என்பது தஞ்சையாருக்குத் தெரிந்திருந்தது. வழக்கு நடத்த ஏஎம்கே ஒத்துழைக்க மாட்டார் என்பதும் அவருக்குப் புரிந்ததுதான். குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு வழக்கறிஞரால் வழக்கு நடத்தி வெற்றி காண முடியுமா? கடினம்தான்!

இருந்தாலும், இந்த வழக்கில் அது சாத்தியம் என்றே தோன்றியது. சாட்சியம் என்ற பெயரில் சாட்சிகள் உளறிக் கொட்டியதைக் கேட்டு தஞ்சையார் மட்டுமல்லாமல் ஏனைய வழக்கறிஞர்களும் கூட அப்படித்தான் நினைத்தார்கள். நீதிபதியும் கிட்டத்தட்ட அப்படி ஒரு மனநிலைக்கு வந்து விட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.

காவல்துறை வழக்கின்படியே கூட, கொலையில் ஏஎம்கேயின் பங்கு என்பது தூண்டுதலாகவும் உடந்தையாகவும் இருந்தார் என்பதுதான். ஆனால் இதற்கே கூட நம்பும்படியான சாட்சியங்கள் இல்லை. அரசுத் தரப்புச் சாட்சியத்தில் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருந்தாலும் அதை வாதுரையில் தகர்த்து விட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தஞ்சையாருக்கு இருந்தது.

இந்த நிலையில்தான் நீதிபதியின் கேள்விகளுக்கு ஏஎம்கே சொல்லப் போகும் விடைகள் முக்கியத்துவம் பெற்றன. ஏஎம்கே வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம், ‘நான் குற்றவாளி அல்ல’ என்று சொன்னால் போதும், அல்லது ‘இது பொய் வழக்கு’ என்றோ ‘இந்தச் சாட்சிகள் சொல்வது உண்மையல்ல’ என்றோ சொன்னாலே போதும், மற்றதைத் தஞ்சையார் பார்த்துக் கொள்வார்.

தஞ்சையார் கெஞ்சாத குறையாய் விடுத்த வேண்டுகோளுக்கு ஏஎம்கே எந்தப் பதிலும் சொல்லாமல் புதிராக முறுவலித்த போது, இந்த மனிதர் பதில் சொல்ல மறுக்கப் போகிறார் என்றுதான் தஞ்சையார் நினைத்தார்:

‘சரி, ஏதாவது செய்யட்டும். மெளனம் இச்சூழலில் மறுப்பின் அடையாளம் என்று வாதிடலாம்.’

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஏஎம்கே பதில் சொன்னார். அந்தப் பதிலும் யாருமே எதிர்பார்க்காதது:

ஆம், நாங்கள்தான் செய்தோம். அது எங்கள் கடமை

ஏஎம்கே அப்படிச் சொன்ன போது, தஞ்சையாருடன் சேர்ந்து நீதிமன்றமே அதிர்ந்து போனது. நீதிபதி கையிலிருந்த பேனாவைத் தூக்கிப் போட்டுவிட்டு இருக்கையில் சாய்ந்து விட, வழக்கறிஞர்களிடையே “போச்சு, போச்சு” என்ற முணுமுணுப்பு எல்லோரும் ஏஎம்கேயைத் திரும்பிப் பார்க்க, அவர் அவர்களை நோக்கி வழக்கமான புன்முறுவலை வீசினார்.

தஞ்சையார் நீதிமன்றக் கூடத்துக்கு வெளியே எழுந்து சென்று ஒதுக்குப்புறமாய் மரத்தடியில் நின்று ஒரு சேவல் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு யோசித்தார். ஏ.எம்.கே. உதிர்த்த சொற்களை மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தார். ஆங்… அப்படித்தான் இருக்க வேண்டும்…..

முறுக்கு மீசையைத் தடவிக் கொண்டு முகம் மலர நீதிமன்றக் கூடத்துக்குத் தஞ்சையார் திரும்பி வந்த போது, சிக்கலுக்கு அவர் ஒரு தீர்வு கண்டு விட்டதாகத் தோன்றியது.

இறுதி வாதுரைகளுக்கான நாளில் முதலில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டு முடித்த பின், தஞ்சையார் எழுந்து நின்றார்.

“நாங்கள்தான் செய்தோம், இது எங்கள் கடமை” என்ற ஏ.எம்.கே.யின் பதிலுக்குத் தஞ்சையார் தரப்போகும் விளக்கத்தை அறிய நீதிமன்றமே ஆவலுடன் காத்திருந்தது.

தஞ்சையார் சொன்னார்:

“என் கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார் என்று சொல்வது தவறு. நீதிமன்ற நடவடிக்கைகளை அவர் புறக்கணித்ததாலேயே, அவர் மீதான குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது எனக் கொள்வதற்கில்லை. என் கட்சிக்காரர் ‘நாங்கள்’ என்று குறிப்பிட்டது தன்னையும் அல்ல, தான் உள்ளிட்ட அனைத்து எதிரிகளையும் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் நாங்கள் என்பது யார்? இந்த வழக்கு வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதை நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன். அரசுத் தரப்பு வழக்கின் படியே கூட என் கட்சிக்காரர் எந்த ஒரு சொந்த நோக்கத்துக்காகவும் குற்றம் புரிந்ததாக தெரியவில்லை. இவர் ஒரு புரட்சிக்காரர், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை நானும் மறுக்கவில்லை. இவர் ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர். நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். இயக்கத்தில் சாதாரண உறுப்பினர் அல்ல, மாநிலச் செயலாளர். இயக்க உறுப்பினர்கள் இயக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக என்ன செய்தாலும் அதற்கு இயக்கமே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இயக்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இது தார்மிகப் பொறுப்புதானே தவிர வேறல்ல. இப்படி ஒரு தார்மிகப் பொறுப்பை (moral responsibilityஐ) என் கட்சிக்காரர் ஏற்றுக்கொள்வது நேரடியாக இந்த வழக்கில் சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக்கொள்வதாகாது. நாங்கள்தான் செய்தோம் என்று சொன்னதோடு, இது எங்கள் கடமை என்றும் என் கட்சிக்காரர் சொல்லியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நாங்கள்’ ‘எங்கள்’ என்றெல்லாம் என் கட்சிக்காரர் சொல்லும் போது, அவர் சார்ந்த இயக்கத்தைக் குறிப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும்.”

தஞ்சையாரின் வாதுரை ஏனைய வழக்கறிஞர்களையும் மற்றவர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. தன்னைப் பாராட்டியவர்களுக்கெல்லாம் அவர் ஒரே பதில்தான் சொன்னார்:

“உண்மையைச் சொன்னேன், வேறு ஒன்றுமில்லை.”

தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்துத் தஞ்சையார் எவ்வித ஊகமும் சொல்ல விரும்பவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒத்துழைக்காத நிலையிலும், தம்மால் இயன்ற வரை சிறப்பாக இந்த வழக்கை நடத்த முடிந்தது என்ற மனநிறைவு அவருக்கு இருந்தது.

அமர்வு நீதிமன்றம் அளிக்கிற தீர்ப்பே இறுதியானதன்று. அது பாதகமாக அமைந்து விட்டால் எதிர்த்து மேல்முறையீடு (அப்பீல்) செய்யலாம். கீழமை நீதிமன்றத்தில் வழக்கை நன்றாக நடத்தியிருந்தால்தான் மேலமை நீதிமன்றத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டு வெற்றி பெற முடியும். கீழே கோட்டை விட்டு விட்டு மேலே கோட்டை கட்ட நினைத்தால் முடியாது.

அமர்வு நீதிமன்றத்தில் தாம் வழக்கு நடத்திய விதம் உடனே பலன் தரா விட்டாலும் மேல்முறையீட்டில் பலன் தரும் என்ற நம்பிக்கை தஞ்சையாருக்கு இருந்தது.

இது பொய் வழக்கு என்பது தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. ஏதாவது ஒரு கட்டத்தில் இது உடைந்தாதக வேண்டும்.

சில நாள் தள்ளிப் போட்டுப் பிறகு தீர்ப்புச் சொல்லப்பட்டது. ஆயுள் சிறைத் தண்டனை!

அன்று மாலை ஏஎம்கே திருச்சி மத்திய சிறை வாயிலில் இருந்த போதே எங்களுக்குத் தகவல் வந்து விட்டது. ஆயுள் தண்டனையோடு வந்திருக்கிறார் என்ற செய்தி தந்த வருத்தத்தைக், காட்டிலும், இதோ அவர் வரப்போகிறார், இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சிப் பரவசம்தான் மேலோங்கி நின்றது.

எங்களைத் தனிக்கொட்டடிகளில் அடைத்த பிறகு, ஏஎம்கேயைக் கொண்டுவந்தார்கள். அவர் ஒவ்வொரு தோழரிடம் சிறிது நேரம் பேசி விட்டு வந்தார். நானும் இலெனினும் இருந்தவை கடைசிக் கொட்டடிகள். அவர் எங்கள் எதிரில் வரும் வரை நாங்கள் அவரைப் பார்க்க முடியாது!

தாயின் முகம் பார்க்கக் காத்திருக்கும் பிள்ளைகள் போல் அவருக்காகக் காத்திருந்த அந்த ஒருசில மணித்துளிகள்! ஆழ்ந்த அன்பிற்குரிய ஒருவருக்காகக் காத்திருக்கும் போது நேரமே முடமாகிப் போகுமோ!

வந்து விட்டார் ஏ.எம்.கே.! அன்றுதான் முதன்முதலாகக் கைதிச் சீருடை உடுத்தியிருந்தார். என்னிடம் சிறிது நேரம், இலெனினிடம் சிறிது நேரம் பேசி விட்டுத் திரும்பும் போது, ஒரு புத்தகத்தை என்னிடம் தந்து, குறியிட்ட சில பகுதிகளையும் எடுத்துக்காட்டி விட்டு நாளை விவாதிப்போம் என்று கூறிச் சென்றார்.

அது மாமேதை லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்’ [IMPERIALISM HIGHEST STAGE OF CAPITALISM] என்ற நூல்.

நாங்கள் ஏ.எம்.கே.யுடன் விவாதிக்க ஆவலுடன் காத்திருந்தது போலவே அவரும் எங்களுடன் விவாதிக்க விரும்புவதாகப் புரிந்து கொண்டோம்.

இரண்டு மூன்று நாள் கழித்து ஒரு மரத்தடியில் அமர்ந்து அந்த அரசியல் விவாதத்தை ஆரம்பித்தோம். ஏஎம்கே ஒரு பக்கம், நானும் இலெனினும் ஒரு பக்கம். மற்றத் தோழர்களில் ஒருசிலர் மட்டும் ஆர்வத்துடன் இந்த விவாதத்தைக் கேட்க வந்தனர்.

இ.பொ.க.(மா.இலெ.) [CPI(M.L.)]  திட்டமும் அதன் வரையறுப்புகளும் சரி, செயல்பாடுகள் மற்றும் போராட்ட வடிவங்களில் வேண்டுமானால் தவறு இருக்கலாம், அது பற்றி விவாதிக்கலாம் என்பது ஏஎம்கே நிலைப்பாடு!

ஒரு கட்டத்தில் ஏஎம்கே சொன்னார்:

”இப்படிப் பட்டிமன்றம் போல் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே போவதில் பொருளில்லை.

. சரி, இப்போதைக்கு உங்கள் நிலை அது, எங்கள் நிலை இது என்று வைத்துக் கொள்வோம். சிறையில் நம்மால் சேர்ந்து செய்யக் கூடியவற்றைச் செய்து கொண்டிருப்போம்.”

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 22

தோழர் தியாகு எழுதுகிறார் 30: பொ.ந.பி. இட ஒதுக்கீடும் பாண்டேயின் கவனப் பிசகும்



(தோழர் தியாகு எழுதுகிறார் 29: தொடர்ச்சி)

பொ.ந.பி. இட ஒதுக்கீடும் பாண்டேயின் கவனப் பிசகும்

பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான (EWS – பொ.ந.பி.) இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் குறித்தும், அதனை செல்லுபடியாக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய இணையவழிச் (Zoom) சிறப்புச் செய்தி அரசியல் நிகழ்வில் முன்னாள் நீதியர் அன்புக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் விரிவாக உரையாற்றியதோடு, பங்கேற்பாளர்கள் கேட்ட வினாக்களுக்கும் தெளிவாக விடையளித்தார்.

இங்கே நான் ‘பொநபி’ இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே நடைபெற்ற ஒரு விவாதம் பற்றி எழுதப் போகிறேன்.

பொநபி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பொதுவெளியில் சொல்லப்பட்ட வாதுரைகளில் ஒன்று அது ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்பதாகும். ஏழைகள் என்றால் உயர்சாதி ஏழைகளுக்கு மட்டுமா? என்று கேட்டால், அனைத்துச் சாதிகளிலும் இருக்கும் ஏழைகளுக்கு என்று விடையிறுத்தனர். இது உண்மையில்லை; அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள், ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏழைகளுக்கு இந்த பொநபி இட ஒதுக்கீடு பொருந்தாது என்பது திருத்தச் சட்டத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. ஆனால் பொநபி இட ஒதுக்கீடு அனைத்துச் சாதி ஏழைகளுக்கும்தான் என்று சிலர் விடாப்பிடியாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். இதையே பொநபி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான முதன்மை வாதுரையாகவும் முன்வைத்தனர்.

இவர்களுள் முதன்மையான ஒருவர் தமிழ்நாடு பாசக தலைவர் திரு அண்ணாமலை. பொநபி இடஒதுக்கீடு அனைத்துச் சாதி ஏழைகளுக்கும்தான் என்று அவர் கொடுத்த செவ்வி (பேட்டி) வலையொளியில் காட்டப்பட்டது. நான் இதைப் பார்த்தவுடன் மறுக்க எண்ணினேன். அவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்துக்கு வந்தால் நாமும் அதில கலந்து கொண்டு உரியவாறு மறுக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர் மாநில பாசக தலைவரான பின் எந்தத் தொலைக்காட்சி விவாதத்திலும் வரவில்லை.

பிறகு ஒரு நாள் சாணக்கியா வலைக் காட்சியில் திரு இரெங்கராசு பாண்டே சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் தோழர் ரவிந்திரநாத்தைப் பேட்டி கண்டார். இரவீந்தரநாத்து தமிழக அரசு அமைத்த நீதியர் ஏகே இராசன் தலைமையிலான பொதுத் தேர்வு((NEET) / நீட்டு ஆய்வுக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியவர். சாணக்கியா பேட்டி அதையொட்டித்தான். பேட்டி முழுவதையும் வலையொளியில் பார்த்தேன்.  

பேட்டியின் இறுதிப் பகுதியில் ‘பொநபி’ (EWS) பற்றிய பேச்சு வந்தது. ‘வருக்க நலன்’ பற்றி இரவிந்திர நாத்து பேசியதால் ஏழை வருக்கத்துக்கான பொநபி இடஒதுக்கீட்டின் தேவை பற்றி நியாய ஆவேசத்துடன் பேசத் தொடங்கி விட்டார் பாண்டே. இரவிந்திரநாத்தை அவர் பேச விடவே இல்லை. பாண்டேயின் கருத்தை இரவிந்திரநாத்து மெல்ல மறுக்க முற்பட்ட போது, பாண்டே சீறினார்: “நான் எல்லாவற்றையும் நன்றாகப் படித்துப் பார்த்து விட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும்.

“இது எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடுதான். ப.சா.  ப.ப.  பி.பி.வ.(s.c.,s.t.,obc) எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும் சாதி இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக இந்த ‘பொநபி’/EWS ஒதுக்கீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது உயர் சாதியினர்க்கான இட ஒதுக்கீடு என்பது உண்மையில்லை.”   

இந்தப் பேட்டி நான் காண்பதற்குச் சில நாள் முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். நான் வலையொளியில் பார்த்து முடித்த போது நள்ளிரவு நேரம். மறு நாள் காலை எழுந்தவுடன் இரெங்கராசு பாண்டேயைத் தொலைப்பேசியில் அழைக்க முயன்றேன். கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி: “அண்ணா, கோவை சென்றுள்ளேன். அறையில் இருக்கிறேன். சிறிது நேரத்தில் நானே உங்களை அழைக்கிறேன்.”

அவ்வாறே அழைத்தார். நான் நல வினவலுக்குப் பின் இரவிந்திரநாத்து செவ்வி, அதில் பொநபி பற்றிய அவரது கருத்து என்று பேசலானேன். அண்ணாமலையும் இப்படித்தான் சொல்கிறார், ஆனால் உங்கள் இருவர் கருத்தும் பிழை என்று சுட்டிக் காட்டினேன். அவர் அதை ஏற்க மறுத்து “இது பற்றிய அரசமைப்புச் சட்டத் திருத்தம், அரசாணை உட்பட எல்லாவற்றையும் முழுமையாகப் படித்து விட்டேன். உங்களைப் போன்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்க்கின்றீர்கள்.”

அவர் தன் கருத்துக்கு ஆதரவாக முன்வைத்த வாதுரைகள்:

1)  இந்திரா சகானி வழக்கில் மண்டல் குழு பரிந்துரையைச் செயலாக்கும் அரசாணைக்குத் தடை விதித்தது போல் இந்த பொநபி (EWS) திருத்தச் சட்டத்துக்கு உச்ச நீதி மன்றம் தடை விதிக்க வில்லை. ஆகவே இதில் ஏதோ நிறை (weight) இருப்பதாக நீதிபதிகள் கருதுகின்றார்கள்.

2)  சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவும் தனித்தனி. எனவே அது செங்குத்து இட ஒதுக்கீடு (vertical reservation) பொநபி (EWS) அப்படியில்லை, இது கிடைமட்ட இட ஒதுக்கீடு (horizontal reservation). எந்தப் பிரிவும் இதில் விலக்கப்படவில்லை.. ஒன்றே ஒன்றுதான். ஒரே ஆள் இரண்டு வகை ஒதுக்கீட்டையும் அனுபவிக்க முடியாது. எது தனக்கு நன்மையோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

3)  இது எல்லா சாதி ஏழைகளுக்கும் பயன்படக் கூடியது என்பதால்தான் சாதிக் கண்ணோட்டத்தை மறுத்து வருக்கக் கண்ணோட்டமுள்ளவர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். உயர் சாதியினர்க்கு அல்லது பிராமணர்க்கு மட்டுமென்றால் எப்படி ஆதரிக்க முடியும்? யார்தான் ஒப்புக் கொள்வார்கள்?

“நீங்கள் மீண்டும் படித்துப் பாருங்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

நீங்கள்தான் படிக்க வேண்டியுள்ளது என்றார். சரி, உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள், நான் அனுப்புவதை ஒரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லி வைத்து விட்டேன்.

அரசமைப்புச் சட்டத் திருத்தம், பொநபி தொடர்பாக இணையத்தில் வந்த சில கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பாண்டேக்கு அனுப்பி வைத்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று நண்பர் (நீதியர்) அரி பரந்தாமன் அவர்களை அழைத்து பாண்டேயுடன் நடந்த விவாதம் பற்றிச் சொன்னேன். அவர் “என்ன? ‘பொநபி’ / EWS எல்லா சாதிகளுக்குமா?” என்று கேட்டுச் சிரித்தார்.  இரவிந்திரநாத்தையும் அழைத்து சாணக்கியா பேட்டியில் நடந்த உரையாடலை உறுதி செய்து கொண்டேன்.

பாண்டே விடை சொல்லட்டும் எனக் காத்திருந்தேன். மறு நாள் மாலை தன்னுடைய சுட்டுகையைப் (tweet) படம்பிடித்துப் புலனத்தில் எனக்கு அனுப்பியிருந்தார். ‘பொநபி’ / EWS பற்றி கவனப் பிசகினால் தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன் என்று அதில் சுட்டுகையிட்டிருந்தார்.

இரவிந்திரநாத்து செவ்வி, என்னுடன் நடைபெற்ற உரையாடல் எதையும் குறிப்பிடாமல் தன் கவனப் பிசகை மட்டும் காரணங்காட்டிப் பின்னடித்துக் கொண்டார் பாண்டே. வேறு எங்காவது தன் கவனப் பிசகின் முழுப் பின்னணியையும் எடுத்துரைத்தாரா என்பதறியேன். எனக்கு அது முகன்மையும் அன்று.

என்னதான் முகன்மை என்றால், பாண்டே எதை அடிப்படையாக வைத்து பொநபி இட ஒதுக்கீட்டை ஆதரித்தாரோ அந்த அடிப்படையே தவறு என்று தெரிந்த பின் அதை எப்படி ஆதரிக்க முடியும்? பொநபி இட ஒதுக்கீட்டையும், அதை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் குற்றாய்வு செய்வாரா? அந்த அறிவு நாணயத்தை ‘சாணக்கியா’ பாண்டேயிடம் எதிர்பார்க்கலாமா?

சரி, இந்த வகையில் பாண்டேயின் வாதுரையும் அண்ணாமலையின் வாதுரையும் ஒன்றாகவே இருந்தன. யாரிடமிருந்து யார் கற்றுக் கொண்டாரோ, தெரியாது. அண்ணாமலைசி தன் கருத்தை மாற்றிக் கொண்டாரா? மாற்றிக் கொள்ள அமித்சாசி அனுமதிப்பாரா?

பாண்டே எவரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லையே?

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 22

வெள்ளி, 10 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 29: ஏ. எம். கே. (8)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 28: தொடர்ச்சி)

ஏ. எம். கே. (8)

புதிர் முறுவல் 

திருச்சி மத்தியச் சிறையில் 1974 செட்டம்பர் 25ஆம் நாள் தோழர் பாலகிருட்டிணன் தூக்கிலிடப்பட்ட போதும் அதன் பிறகும், நானும் இலெனினும் அதே சிறையின் முதன்மைக்கண்டத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்களோடு அதே கண்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ‘நக்சலைட்டு’ தோழர்களும் மற்றவர்களும் அடை பட்டிருந்தார்கள்.

நானும் இலெனினும் பாலுவை இழந்த பெருந்துயரிலிருந்து மீண்டு, எங்கள் அடுத்த பணிகள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். வரலாற்றுப் புகழ் படைத்த மேத் திங்கள் போராட்டத்துக்குப் பின் கொடிய அடக்குமுறையால் கலைந்து போன சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தை மறுபடியும் கட்டுவது உடனடி வருங்காலத்தில் சாத்தியமில்லை என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவ்வமைப்பை மீண்டும் பழைய வடிவில் கட்டுவது தேவைதானா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அடக்குமுறையினால் துவண்டு விடாமல் தொடர்ந்து போராட்ட உணர்வுடன் இருந்து வந்த தோழர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்பறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் எனக் கருதினோம். முதன்மைக் கண்டத்துத் தனிக் கொட்டடி வாசம் இதற்குச் சரிப்படவில்லை.

மரணத் தண்டனைக் கைதிகளாக இருந்த போது நாங்கள் எடுத்த முடிவு சாவதற்குள் ஒரு சாதனையாக காரல் மார்க்குசின் “மூலதனம்’ நூலை நான் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது. அப்போது கருத்துப் போராட்டம் காரணமாக ஒத்திவைத்த இம்முடிவை இப்போது செயலாக்க விரும்பினோம். இது வரை, நான், சொல்லச் சொல்ல இலெனின் எழுதுவதுதான் வழக்கம். நான் என் அறையிலிருந்தபடி கத்திச் சொல்ல, அவர் தன் அறையிலிருந்தபடி எழுதுவார். 

[திருச்சி மத்திய சிறையில் கண்டம் என்ற பெயரில் மூன்று தொகுதிகள் இருந்தன. கண்டம் என்ற சொல் CONDEMN என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்ப்புதான். CONDEMENED PRISONER என்றால் மரணத் தண்டனைக் கைதி. அவரை அடைத்து வைக்கும் அறை மரணத்தண்டனைக் கொட்டடி. இந்தக் கொட்டடிகள் வரிசையாக இருக்கும் தொகுதி மரணத் தண்டனைக் கூடம் எனப்பட்டது. நான் விசாரணைக் கைதியாக இருந்த போதே சென்னை மத்தியச் சிறையில் மரணத் தண்டனைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தேன். அங்கு கிடைத்த பட்டறிவைச் சுவருக்குள் சித்திரமாக்கியுள்ளேன். 1971 நடுவில் திருச்சிராப்பள்ளிச் சிறைக்கு மாற்றப்பட்ட போது முதலில் ‘ஓல்டு கண்டம்’ என்று அறியப்பட்ட பழைய கண்டத்தில்தான் அடைக்கப்பட்டேன். தோழர் இலெனினும் குருமூர்த்தியும் தொடக்கமுதலே அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கண்ணப்பன் (என்ற) கணேசனும் பிற்பாடு வந்து சேர்ந்தார். வழக்கமாக பழைய கண்டம் என்பது தூக்கிலிடப்படும் கைதிகளைக் கடைசியாக அடைக்கும் இடம், அதற்குப் பின்னால்தான் சக்கிக் கொட்டடி (தூக்கு மேடை) இருந்தது. தோழர் பாலகிருட்டிணனைத் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் இரவு பழைய கண்டத்தில்தான் வைத்திருந்தனர். மற்ற நேரங்களில் அது ஆபத்தானவர்களாகக் கருதப்பட்ட அரசியல் கைதிகளுக்கும், தப்பிச் செல்லக் கூடியவர்களுக்குமான (escapees) தொகுதி. பழைய கண்டத்தைக் களமாகக் கொண்டு நான் சொல்ல வேண்டிய கதைகள் பலவுண்டு. பிறகு சொல்கிறேன். பழைய கண்டத்தின் இப்போதைய பெயர் ஆறறைத் தொகுதி. முதன்மைக் கண்டத்திற்கு இருபதறைத் தொகுதி என்று பெயர். ஒவ்வொரு மையச் சிறையிலும் அடைப்புச் சிறை (Close Prison) என்று ஒரு பகுதி உண்டு. சி.பி. என்று சுருக்கமாகச் சொல்வார்கள். தூக்குத் தண்டனைக் கைதிகள் மிகையாக வந்து விட்டால் திருச்சி சிறையில் சி.பி. முதல் தொகுதியை கண்டம் ஆக்கி விடுவார்கள். அதற்கு சி.பி. கண்டம் என்று பெயர். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த வரை இந்த மூன்று கண்டங்களுக்கு இடையில்தான் குடிமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.]

ஏஎம்கேயை எங்களோடு முதன்மைக் கண்டத்தில் வைக்காமல் தனியாகப் பழைய கண்டத்தில் அடைத்து விட்டார்கள். விசாரணைக்காக அவரைத் தினந்தோறும் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய்க் கொண்டுவந்தார்கள். பொய் வழக்குதான் என்றாலும் வழக்கு விசாரணையின் முடிவில் தண்டனை உறுதி என்று நினைத்தோம். இந்தியத் தண்டனைச் சட்டம் 120-பி, 302 ஆகிய இரு பிரிவுகளுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கலாம். மரணத் தண்டனை விதிக்கப்படுமானால் அதையே காரணமாய்க் கொண்டு அவரைத் தனியாகப் பூட்டி விடுவார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்படுமானால் அவரை எங்களோடுதான் வைக்க வேண்டியிருக்கும். 

இதற்கிடையில், தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கு விசாரணை பற்றிய செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டிருந்தன.

அப்போது தஞ்சையில் அமர்வு நீதிபதியாக இருந்தவர் தூக்குத் தண்டனை விதிப்பதில் பேர்போனவர். பாலகிருட்டிணனுக்கு மரணத் தண்டனை விதித்தவரும் இவர்தான்.

திருச்சியிலிருந்து ஏஎம்கே அதிகபட்ச வழிக்காவலுடன் காவல்துறை வண்டியில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார். அது வழக்கு விசாரணையின் முதல் நாள். கைவிலங்கிட்டு, அதற்கு மேல் சங்கிலி மாட்டி ஏஎம்கேயை வண்டியிலிருந்து இறக்கி அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகமே பரபரத்தது.

ஏஎம்கே கூண்டில் ஏறி நின்றவுடன் அவரைப் பார்த்து நீதிபதி கேட்டார்:

“உம் பெயர் கோதண்டராமன்தானே?”

ஏஎம்கே பதிலேதும் சொல்லாமல் சற்று நிதானித்து விட்டு முழக்கமிடத் தொடங்கினார்:

“தலைவர் மாவோ வாழ்க!” “புரட்சி ஓங்குக!”

பிறகு, நீதிபதியைத் தவிர மற்ற எல்லார் மீதும் பார்வையைப் பரப்பி ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். பூர்சுவா நீதிமன்றத்தின் பொய்மை, ஏமாற்று பற்றியெல்லாம் சுருக்கமாய்ப் பேசினார், வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் வியப்பு! நீதிபதிக்கோ திகைப்பு!

ஏஎம்கே பேசி ஓய்ந்த பின் நீதிபதி கேட்டார்: ”நீர் வழக்கை நடத்தப் போகிறீரா? வழக்குரைஞர் வைத்திருக்கிறீரா? இல்லையென்றால், உமக்கு இந்த நீதிமன்றம் வழக்குரைஞர் வைத்துத் தரும்.”

இந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் ஏஎம்கே சொன்னார்: “நீர் ஒரு காவலர் நீதிபதி (Police udge) என்று கேள்விப்பட்டேன்.”

நீதிபதிக்குச் சுருக்கென்று இருந்திருக்க வேண்டும். மரியாதை இம்மியளவு குறைந்தாலும் பதிலடி கிடைக்கும் என்பது புரிந்திருக்க வேண்டும்.

ஏ.எம். கே.யிடம் நீதிபதியின் அணுகுமுறை உடனே மாறி விட்டது.

“திரு.கோதண்டராமன், நீங்களே ஒரு வழக்குரைஞர். நீதிமன்ற நடைமுறையெல்லாம் உங்களுக்கே தெரிந்ததுதான். வழக்குரைஞர் வைத்து வாதிடப் போகிறீர்களா என்று கேட்டேன்.”

“நான் இந்த நீதிமன்றங்களை நம்பவில்லை. வழக்கு நடத்த விரும்பவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.”

“நான் உங்களுக்கு ஒரு வழக்குரைஞர் வைத்து அவர் உதவியோடுதான் விசாரணையை நடத்தியாக வேண்டும். நீங்கள் விசாரணையில் குறுக்கிட்டுத் தடை செய்யக் கூடாது.”

“நான் குறுக்கிட மாட்டேன். எனக்கும் இங்கு நடைபெறும் விசாரணைக்கும் தொடர்பில்லை என்று இருந்து விடுவேன்.”

இதே தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் எங்கள் மீது இதே வழக்கு நடைபெற்ற போது, எங்கள் சார்பில் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவோ வாதிடவோ வழக்கறிஞர்கள் அமர்த்தப்படாது போனதால் அந்த விசாரணையை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிட்டது பற்றி முன்பே சித்திரங்களில் சொல்லியிருக்கிறேன். இந்தத் தீர்ப்பைக் கருத்திற் கொண்டுதான் இப்போது ஏஎம்கே சார்பில் நீதிமன்றத்துக்கு உதவிட நீதிமன்ற உதவியர்/ amicus curiae என்ற முறையில் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதில் நீதிபதி குறியாக இருந்தார்.

யாரை நியமிப்பது? யாராவது ஒரு வழக்கறிஞர் முன்வந்தால் அவரையே நியமித்து விடலாம். பிரச்சினையில்லை, ஆனால் யாரும் முன்வரக் காணோம்.

வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தியும் ஏஎம்கேயும் சேர்ந்து படித்தவர்களல்லர். முன்னவர் சென்னையில் மாணவர் இயக்கத்தில் முனைப்பாய் இருந்த போது, பின்னவர் தொழிற்சங்க அரங்கில் செயல்பட்டு வந்தார். அப்போது அறிமுகமும் சற்றே பழக்கமும் ஏற்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ, இப்போது நீதிமன்றத்தில் அவர் நோக்க… இவர் நோக்க… இருவரையும் நீதிபதி நோக்க, ஒரு சிக்கல் தீர்ந்தது.

தஞ்சையாரைப் பார்த்து நீதிபதி கேட்டார் : “ஏன், நீங்களே நீதிமன்றத்துக்கு உதவலாமே?”

தஞ்சையார் ஏஎம்கேயைப் பார்த்தார். ஏஎம்கேயின் புன்முறுவலுக்குப் பொருள் விளங்கா விட்டாலும், தஞ்சையார் சரி சொல்லி விட்டார்.

எட்டு நாள் விசாரணை, ஏறத்தாழ எண்பது சாட்சிகள். ஒவ்வொரு நாளும் கூண்டில் நிறுத்தப்பட்டவுடன் ஏஎம்கே எழுப்பும் முழக்கங்களையும் பிறகு அவர் ஆற்றும் சிற்றுரையையும் கேட்கப் பெருங்கூட்டம் வந்தது. நீதிபதி கன்னத்தில் கைவைத்துக் கண்மூடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார். ஏஎம்கே பேசி முடித்து அமர்ந்த பிறகுதான் சாட்சி விசாரணை ஆரம்பமாகும்.

சாட்சிகள் சொன்ன சாட்சியத்தில் முரண்பாடுகளுக்கும் செயற்கைத்தனத்துக்கும் பஞ்சமில்லை. பள்ளிச் சிறுவர்கள் பாடம் ஒப்பிப்பது போல் எல்லாரும் ஒப்பித்துத் தீர்த்தார்கள்.

சாட்சிகளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த அச்சம். காவல் துறையின் மிரட்டலுக்கும் போதனைக்கும் சான்றாயிற்று.

தஞ்சையாரின் குறுக்குவிசாரணையில் சாட்சிகள் நொறுங்க சாட்சியங்கள் கந்தலாய்க் கிழிந்தன. குறிப்பாக, ஏஎம்கேயை அடையாளங்காட்டுவதில் சாட்சிகள் தடுமாறிப் போனார்கள்.

முறுக்கு மீசையைத் தொட்டுத் தடவிக் கொண்டு தஞ்சையார் எழுந்தாலே சாட்சிகளுக்கு நடுக்கம்தான். பல நேரம் அவரின் சரமாரியான கேள்விக் கணைகளிலிருந்து சாட்சிகளைக் காப்பாற்ற நீதிபதியின் குறுக்கீடு தேவைப்பட்டது.

சாட்சியங்களையோ அவற்றின் மீதமைந்த வழக்கையோ நீதிபதி நம்பவில்லை என்பதை அவரது முகக்குறி கொண்டு தஞ்சையார் கணித்தார். மற்ற வழக்கறிஞர்களும் அவ்வாறே கருதினார்கள். விடுதலைத் தீர்ப்பை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குமுன் இன்னும் சில படிகள் ஏற வேண்டுமே!

சாட்சிகள் விசாரணை முழுவதும் முடிந்த பிறகு சாட்சியம் குறித்து எதிரியிடம் நீதிபதி சில கேள்விகள் கேட்பார். அப்போது எதிரி தன் நிலையை எடுத்துக் கூற அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘நான் குற்றவாளி அல்ல’ என்று சொல்வதற்கு அதுதான் கடைசி வாய்ப்பு.

வழக்கு விசாரணையை இது வரை புறக்கணித்து வந்த ஏஎம்கே இந்தக் கட்டத்தில் என்ன செய்யப் போகிறார்? இந்த சாட்சிகள் சொல்வது பொய், எனக்கும் இந்தக் குற்றத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவர் சொன்னால் போதும், விடுதலை கிடைத்து விடும் என்பது தஞ்சையாரின் நம்பிக்கை. ஆனால் ஏஎம்கே இப்படிச் சொல்வாரா?

தஞ்சையார் அருகில் வந்து நின்றதும் ஏஎம்கே சொன்னார்:

“என்னைத் தவறாகக் கருத வேண்டாம். நீங்கள் எவ்வளவு பாடுபட்டு இந்த வழக்கை நடத்துகிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது எங்கள் நிலைப்பாடு. இதை நான் உங்களுக்காக விட்டுத் தர முடியாது அல்லவா?”

“ஆமாம், முடியாதுதான். நான் அது பற்றித் தவறாகக் கருதுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் நிலைப்பாடு மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, எனக்கு நன்றாகப் புரிகிறது.”

“மிக்க நன்றி.”

“நீங்கள் விசாரணையில் பங்கு பெறா விட்டாலும் இங்குதான் உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்காது. அதிலும் நீங்கள் ஒரு வழக்கறிஞர்.”

ஏஎம்கே வழக்கம் போல் புன்முறுவல் பூத்ததோடு சரி. அந்தப் புதிர் முறுவலுக்குப் பொருள் விளங்கா விட்டாலும் தஞ்சையார் தொடர்ந்து பேசினார்:

“இந்த வழக்கு முழுக்க முழுக்க ஒரு பொய் வழக்கு என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. அத்தனை வழக்கறிஞர்களுக்கும் தெரிந்து விட்டது. வேடிக்கை பார்க்கிறவர்களுக்கே கூட தெரிந்து விட்டது. நீதிபதிக்கும் புரிந்து விட்டது. அவர் கிட்டதட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கட்டத்தில் …”

கொஞ்சம் நிறுத்தி விட்டு ஏ.எம். கே.யின் முகத்தை பார்த்தார் தஞ்சையார்…. அதே புதிர் முறுவல்!

“நீங்கள் உங்கள் புறக்கணிப்பைக் கைவிட வேண்டாம். எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மட்டும் சொல்லி விடுங்கள் மற்றபடி கேள்விக் கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் ஆர்க்யுமெண்ட்டில் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

நீதிபதி கேட்ட முதல் கேள்விக்கு ஏஎம்கே பதிலளித்த போதுதான் அவரது புதிர் முறுவலின் பொருள் விளங்கிற்று.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 21

பின் குறிப்பு:

தாழி அன்பர் சாமிநாதன் வினவுகிறார்:

தண்டனைக் கைதி புரிகிறது. தண்டனைக் காவலர் என்பவர் யார்?

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருப்பவர் தண்டனைக் கைதி. நீண்ட தண்டனை பெற்ற கைதிகள் சிலரைச் சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின் சிறைக் காவலர்களாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்குத் தனிச் சீருடை உண்டு. காவலர்கள் போலவே அவர்கள் சிறையில் செயல்படுவார்கள். கையில் தடியும் வைத்திருப்பார்கள். அவர்களைத்தான் தண்டனைக் காவலர் (convict warder) என்பர்.

தோழர் தியாகு எழுதுகிறார் 28: மாவீரர்களின் பெயரால்…

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 27: தொடர்ச்சி)

மாவீரர்களின் பெயரால் 

ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள்.

2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும் மாவீரர் நாளை வெற்றுச் சடங்காக இல்லாமல் போராட்டத்தைத் தொடர மீள்சூளுரை ஏற்கும் நாளாகக் கொள்வோம் என்றால், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து பட்டறிவுகளைத் தொகுத்து எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும்.

சென்ற ஆண்டு மாவீரர்களை நாம் நினைவுகூர்ந்து இந்த ஆண்டு பற்பல வழிகளில் அவர்களைப் போற்றும் வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்திலும் பன்னாட்டுலகிலும் அரங்கேறியுள்ள பொருத்தப்பாடு கொண்ட வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்துக் கொள்ளும் கடமை நமக்குண்டு.

இனநாயகம் கோலோச்சும் இலங்கைத் தீவில் சிங்கள அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களைக் கணக்கில் கொண்டு ஈழ மக்கள் உரிமைப் போராட்டத்தில் அவற்றின் தாக்கம் என்ன என்பதைக் காய்தல் உவத்தலின்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். அரியணையில் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதல்ல நாம் சுட்ட விரும்புவது. இந்த மாற்றங்களுக்கு வழிகோலிய மக்கள் போராட்டங்களையே மனத்திற்கொண்டுள்ளோம்.

இனவழிப்புச் செய்து போர்க்கள வெற்றிகளை அடித்தளமாக்கி சிங்களப் பேரினவாத அலை விளிம்பேறி ஆட்சியைப் பிடித்த அதே இராசபட்சர்கள் தம் மக்களிடமிருந்தே ஓடவும் ஒளியவும் ஒருநாள் வரும் என்று அவர்களும் அஞ்சியிருக்க மாட்டார்கள். நாமும் எண்ணியது இல்லை. தமிழர்களின் நீதிப் போராட்டத்தின் பார்வையில் ‘அறகலய’ எழுச்சியின் முதன்மை விளைவு சிங்கள அரசியல் சமூகத்தில் ஏற்பட்ட உடைப்புதான். பேரினவாத ஆளும் கும்பலின் சமூக அடித்தளமான சிங்கள வெகுமக்களே அந்தக் கும்பலை ஓட ஓட விரட்டியடித்ததை மறக்கவியலாது. ‘அறகலய’ நேராகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுப்பத் தவறியது என்பதை நாம் மறக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை அந்த மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை நமக்கும் உள்ளது என்று மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் நீண்ட நெடிய நீதிப் போராட்டத்துக்கும் சிங்கள மக்களின் அண்மைய தன்னெழுச்சிக்கும் மொழியாப் புரிந்துணர்வு ஒன்றுண்டு என்பதை வரலாற்று மாணவர்கள் உய்த்துணர்வார்கள். தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரே பன்னாட்டு அரங்கில் சிங்களத்தை அரசியல் வழியில் தனிமைப்படுத்தும் சூழலைத் தோற்றுவித்தது என்பதோடு, தாங்கவொண்ணாத படைச் செலவால் இலங்கைப் பொருளியலையும் நொடிக்கச் செய்தது. இந்த வரலாற்று ஏரணத்தைத் தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் உள்வாங்கினார்களா? இனியாவது உள்வாங்கி நீதிக்கான போராட்டத்தில் உரியவாறு கணக்கில் கொள்வார்களா?

இனி என்ன நடந்தாலும் சரி, குறிப்பிடத்தக்க அளவில் சிங்கள இளைஞர்களிடம் துளிர்த்துள்ள குடியாட்சிய உணர்வும் இனவாத எதிர்ப்பும் இலங்கைத் தீவிலடங்கிய இரு தேசங்களின் போராட்டத்திலும் ஒரு நிலைத்த காரணியாகப் பங்கு வகிக்கும். நீதிக்கான போராட்டத்தை முடுக்கி விரைவாக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்கும்.

இரண்டாவதாக, இந்த நாளில் குழப்பம் நீங்க வேண்டிய ஒன்று இந்திய வல்லரசின் வகிபாகம் பற்றியதாகும். இனவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்கு உடந்தையாகச் செயல்புரிந்த இந்தியா தமிழர்களின் நீதிக்கான போரட்டத்திலும் இனக் கொலையாளிகளைக் காக்கும் கவசமாகச் செயல்பட்டு வருகிறது. ஐநா மனிதவுரிமைப் பேரவையில் மேலைநாடுகள் முன்மொழிந்த அரைகுறைத் தீர்மானத்தைக் கூட ஆதரிக்க மறுத்து வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. ஈனக் குரலில் 13ஆம் திருத்தம் பற்றி முனகித் தன் கடமையை முடித்துக் கொள்கிறது.

ஐநா அறிக்கைகளில் குவிந்து கிடக்கும் சான்றுகள், மனித வுரிமைகளுக்கான உயராணையர்கள் அறிக்கையிடும் மெய்ம்மைகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிப்படுத்தி வரும் கோரிக்கைகள், ஆற்றல்மிகு பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகள் வெளிச்சமிடும் செய்திகள் – இவற்றில் எதுவும் இந்திய வல்லரசின் கண்ணிற்படுவதில்லை. காதில் கேட்பதில்லை. கண்ணை மூடிக் கொண்டு சிங்களம் காக்கக் காக்க கவச மந்திரம் படித்துக் கொண்டிருக்கிறது.

அடியோடு ஒதுங்கியிருந்தாலும் தாழ்வில்லை என்னும் படியாகத் தமிழீழ அரசியலை ஆட்டிப்படைக்கக் குறுக்கிட்டுக் கொண்டிருப்பதுதான் இந்தியா செய்து வரும் ஆகப்பெரும் கேடு. வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குப் போய்விட்ட பதின்மூன்றாம் திருத்தத்தை மீட்டு வந்து அதனைத் தமிழர்களின் கோரிக்கையாக மாற்றிக் காட்ட அது அருவருக்கத்தக்க தந்திரங்களைக் கையாண்டது. இந்திய வல்லரசின் எடுப்பார் கைப் பிள்ளைகளாக மாற ஒப்புக் கொண்ட தாயகத் தலைவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள்.

சிங்களப் பேரினவாதத்துக்கு ஏற்பட்ட பொருளியல் நெருக்கடி அரசியல் நெருக்கடியாக முற்றிய நிலையில், சிங்களத் தலைவர்களுக்குள் மூண்ட அதிகாரப் போட்டியில் தமிழ் அரசியல் தலைவர்கள் ‘சொந்த புத்தி’ கொண்டு ஒரு முடிவெடுக்கக் கூட விடவில்லை மோதி அரசு. இதனால் தமிழ்த் தலைவர்களில் சிலர் இனக் கோட்டின் இரு பக்கமும் மதிப்பிழந்து நிற்க நேரிட்டது. “எங்கள் முடிவை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்று பணிவுடன் தெரிவித்திருந்தால் உங்களுக்காக நாங்கள் பெருமைப்பட்டிருப்போம்.

2021 சனவரியில் ஐநா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு நீங்கள் எழுதிய கூட்டு மடல், பொத்துவில் – பொலிகண்டி பேரணி போன்றவை நீதிக்கான போராட்டத்தில் முகன்மையான நடைபடிகள். இந்த வழியை விட்டு விலகிப் போய், இந்தியாவின் கோலுக்கேற்ப ஆடவும், இரணிலோ அழகப்பெருமாவோ யாரேனும் ஒருவரை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரிக்கவும் வேண்டிய தேவை என்ன? எங்களுக்கு இதில் ஒரு தேர்வு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கலாமே? “இரணில் ஆதரவு கேட்டார், கொடுத்தேன்” என்று ஒரு தலைவர் சொன்னது போல் நகைப்புக்கிடமானது எதுவும் இல்லை.

தமிழீழத்தின் உள்ளார்ந்த இறைமையைக் கொழும்புவிடம் விட்டுக் கொடுக்க மறுத்தே வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்துப் போராடத் தொடங்கினோம். அதனை தில்லியிடமும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை நம் மாவீரர்கள் தம் செங்குருதியால் ஈழமண்ணில் எழுதி வைத்தார்கள்.

மாவீரர்களின் பெயரால் இறைஞ்சுகின்றோம்: தாயகத் தமிழ்த் தலைவர்களே! சரியோ தவறோ நீங்களாக ஒரு முடிவெடுத்து நில்லுங்கள். அதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருங்கள். தமிழ்நாடும் உங்கள் பக்கம் நிற்கும். 

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 21