vandhavaasi-vasakarvattam02

நாளைய தலைமுறையை உருவாக்கும்

     நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள்

வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் மரு.செ.வெங்கடேசன்   உரை

        வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில்   தை 24, 2046 / பிப்பிரவரி 7 அன்று நடைபெற்ற சிறப்புச்சந்திப்பு நிகழ்வில், நாளைய தலைமுறையைப் புத்தக வாசிப்பின் வழியே உருவாக்குகிற நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் ஆகும் என்று வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் மரு.செ.வெங்கடேசன் பேசினார்.
       இந்நிகழ்வில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை நல்நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். வீரம்பாக்கம் அரசு தொடக்க நல்வாழ்வுச் சித்த மருத்துவ அறிவுரைஞர் மரு.நெ.வேலாயுதம் முன்னிலை வகித்தார்.
        நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் மரு.செ.வெங்கடேசன் பேசும்போது, ” ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், சமுதாய உயர்வுக்கும் கல்வி மிகவும் அவசியம். பாடப் புத்தகங்களைப் படிப்பதோடு, குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்தமான கதை, கட்டுரை நூல்களையும் படிக்கும்போது அவர்களின் அறிவு இன்னும் விசாலமடையும். தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் பார்வைத் திறன் இளைய அகவையிலேயே பாதிப்படைகிறது. நூலகங்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் அதற்கான பலனை நம் வாழ்வில் நாம் அடைவது உறுதியாகும்.
     சிற்றூர்ப்புற நூலகங்களை மேம்படுத்த அரசு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. விலை உயர்ந்த பல புத்தகங்கள் அரசு நூலகங்களில் இருக்கின்றன. நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு ஆர்வமாய் வரும் குழந்தைகளுக்கு நான் எப்போதும் மகிழ்வோடு கையெழுத்து போட்டு விடுவேன். புத்தகம் படிக்கிற குழந்தைகளால்தான் நாளைய சமுதாயம் சிறப்பான முறையில் வளம் பெறும்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில், உரூபாய் ஆயிரம் செலுத்தி 158-ஆவது புரவலராகச் சேர்ந்த வந்தவாசி வேளாண்மை அலுவலர் தே.குமரனைப் பாராட்டினர். .
       நிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராசேந்திரன் நன்றி கூறினார்.

vandhavaasi-vasakarvattam01

[வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் மரு.செ.வெங்கடேசனுக்குக் கிளை நூலகர் கு.இரா.பழனி நினைவுப் பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில், வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு, சித்த மருத்துவர் நெ.வேலாயுதம் ஆகியோர் உள்ளனர்.]

vandhavaasi-vasakarvattam03
தரவு : முதுவை இதாயத்து
 mudhuvai hidayath01