சனி, 17 மே, 2025

பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி)

  • 20. “சனாதன தருமம் நீண்ட தொடர்ச்சியாக இன்றுவரை நம்மிடம் இருந்து வருகிறது. இப்படியான நீண்ட பாரம்பரியத் தொடர்ச்சி உலகில் வேறு எங்கும் கிடையாது.” என்று ஆளுநர் இர.நா.இரவி கூறுகிறாரே!
  • ஒன்றின் தொடர்ச்சியோ கால இருப்போ அதன் சிறப்பை விளக்குவதாகப் பொருள் இல்லை. காலங்காலமாகச் சில தொற்று நோய்கள் இருக்கின்றன. அதற்காக அவை சிறந்தனவாகுமா? ஆகாதல்லவா? அதேபோல்தான் சனாதன தருமத்தின் தொடர்ச்சி என்பது அதன் சிறப்பைக் குறிப்பதாகாது.  சனாதனம் நிலவும் பொழுதே அதற்கான எதிர்ப்பும் தொடர்ச்சியாக இருப்பதையும் உணர வேண்டும். 

நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர்

மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால் 

என்றும்

குலமும் ஒன்றே குடியும் ஒன்றே

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

என்றும்

கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும்.

  • 21. பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா?
  • பூணூல் அணிந்து இருக்கும் போது, தவறான காரியங்கள், ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்; கோவில் சொத்தைத் திருட வாய்ப்பு கிடைத்தாலும் நம்மைச் செய்ய விடாமல் நம் மனச்சான்றே நம்மைத் தடுத்து விடும் – இவ்வாறு பரப்புரை செய்கிறார்களே!
  • பூணூல் அணிந்த பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள் என்று நம்புவதற்காக இவ்வாறு கூறுகிறார்கள்.
  • ஒருவன் ஒழுக்கமாக வாழ்வதற்கு அவன் அணிந்துள்ள நூலோ தோற்றமோ உடையோ காரணமாக அமையாது. நல்லவர்களும் தீயவர்களும் எல்லாச் சாதியிலும்தான் இருக்கிறார்கள். எனவே, சாதியின் அடிப்படையில் நல்லவன் அல்லது கெட்டவன் என்பது பொருந்தாது.

பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும். எனினும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறையில் பல பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதையும்   காமக் களியாட்டங்களில் ஈடுபட்டதையும் உலகே அறியும். பூணூல் அணிந்ததால்  ஒழுக்கமாக இருக்க அவர் மனச்சான்று வேலை செய்ய வில்லையே.

மற்றொன்றையும் சொல்லலாம். தன்னை உலகக் குரு எனச் சொல்லிக்கொண்ட பிராமணரில் ஒரு பிரிவின் தலைவர் செயேந்திரர் எவ்வளவு ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டார், இறையன்பர்களுடன் தகா உறவு கொண்டார், கொலைச்செயலில் ஈடுபட்டதாக அவரிடம் பணியாற்றிய மற்றொரு பிராமணரே வெளிப்படுத்தினார் என்பதை உலகம் மறக்க வில்லை. துறவு நிலை கொண்டதாகக் கூறிக் கொண்டாலும் காம உறவால் நாட்டை விட்டே வெளியேறிய அவருக்கு ஏன் அவர் அணிந்த பூணூல் நல்லறிவு புகட்ட வில்லை. எனவே இவையாவும் பிராமணர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காகக் கட்டவிழ்த்து விட்ட கதைகளே!

கோவிலில் நடைபெற்ற மற்றொரு கொடுமையையும் நினைத்துப் பாருங்கள்: 10.01.2018 அன்று  சம்மு-காசுமீர் மாநிலத்தின் கத்துவா நகரில் எட்டுஅகவைச் சிறுமி  காணாமல் போயிருந்தாள். பின்னர், நாடோடி குருசார்/குச்சர்(Gurjar/Gujjar) சமூகத்தைச் சேர்ந்த இச்சிறுமியைக் கடத்திக் கோயில் ஒன்றில் கட்டி வைத்துப்  போதை மருந்தைத் திணித்துப் பல நாள்களுக்கு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றமை அறிந்து உலகே அதிர்ந்தது. (பெரும்பாலான ஊடகங்கள் சிறுமி எனக் குறிப்பிடாமல் பெண் என்றே குறிப்பிட்டுக் கொடுந்துயரின் வீச்சைக் குறைக்க முயன்றன.)  கோயில் பணியாளர் சஞ்சி இராம், தீபக் கசூரியா, பர்வேசு குமார்,  ஆனந்து தத்தா, திலக்கு இராசு, சுரீந்தர் ஆகியோருடன் சேர்ந்தே இக்கொடுமையை அஞ்சாமல் புரிந்துள்ளார். கோயில் பணியாளர் சஞ்சி இராம் தன் மகன் விசாலுடன் இணைந்தே கற்பழித்துக் கொலைபுரிந்துள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது.

கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்று கலைஞர் மு.கருணாநிதி பரசாக்தி மூலம் முழங்கச் செய்தார். உயர் குலத்தவராகக் கற்பிக்கப்படுவோர் கோயில்களைத் தங்களின் காமஇச்சைக்குக் களமாகக் கொள்ளும் கொடுமை குறையவில்லை. குற்றமிழைத்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதால்(தாழ்ந்த செயல் புரிந்தோர்  உயர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்வோர் என்பதால் அதைக் குறிப்பிடவில்லை.) அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து ஏக்குசா மஞ்சு அமைப்பு கத்துவா நகரில் பேரணி நடத்தியது. இதில் சனாதன பாசக மாநில  அமைச்சர்கள் சந்திர பிரகாசு கங்கா, இலால் சிங்கு ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுள் இலால்சிங்கு `1947-இல் சம்முவில் நிகழ்ந்த இசுலாமியர்  படுகொலைகளை மறந்துவிடாதீர்கள்’ என்று  மிரட்டிப்பேசியவர்).( இவர்களுள் மூவருக்கு வாணாள் சிறைத்தண்டனையும் மூவருக்கு 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் மட்டும்தான் வழங்கப்பட்டன. மரணத்தண்டனையைத்தான் மக்கள் எதிர்பார்த்தனர்.)

இதற்காக, எல்லாப் பூணூல் அணிந்தவர்களும் ஒழுக்கக்கேடர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பூணூல் அணிவதாலேயே ஒழுக்கமானவர் என்ற ஏமாற்று  வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களிலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அதற்குக் காரணம் பூணூல் அல்ல.

நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 





(சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 – தொடர்ச்சி)

17.    நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா?

o     நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள், நல்ல / பொல்லா நாட்களில் பூணூல் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று சொல்கிறார்களே!

     சடங்குகளைப் பிராமணன்தான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சடங்கிற்குரியோர் பூணூல் அணிய வேண்டும் எனச் சனாதனம் வலியுறுத்துவதால், சடங்கு செய்யும் நல்ல அல்லது துன்ப நாட்களில் பிற சமூகத்தார் பூணூல் அணிவிக்கப்படுகிறார்கள். இதுவும் பூணூல் அணிந்தவனே சடங்குசெய்ய வேண்டும் என்னும் அடிமைத்தனத்தை உணர்த்துவதுதான்.

பின்வரும் வினாவிற்கான விடையையும் காண்க.

18.    நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் எனச் சில வேத பிரம்மாணங்கள் வலியுறுத்துகின்றனவா?. 

o     “சூத்திர, வைசிக, சத்திரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் எனச் சில வேத பிரம்மாணங்கள் வலியுறுத்துகின்றன.  தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது என வெவ்வேறு இணையத் தளங்களில் குறிக்கப்பட்டுள்ளனவே!

     ஆரியர்கள், தமிழர்களைப் பார்த்துத் தங்கள் மொழி, இலக்கியம், பழக்க வழக்கம் முதலியவற்றை யெல்லாம் அமைத்துக் கொண்டனர். அதுபோல் தமிழர்கள் உடலில் அணிந்துள்ள அம்பறாத்தூணியைப்(அம்புக்கூட்டைப்) பார்த்து ஆரியர்கள் நூல் அணிந்து கொண்டனர். அவ்வாறே பூணப்பட்ட நூலே பூணூல் ஆகும். மூன்று புரியாக உள்ளதால் இதனை முப்புரிநூல் என்றும் கூறுகின்றனர். இது தமிழர்களின் பழக்கம் இல்லை. எனினும் தங்களை இரு பிறப்பாளராகப் பிராமணர் கூறிக்கொண்டு பூணூல் அணிந்ததும் ஆசாரிகள் கடவுளின் உருவத்தையே  உருவாக்கும் தாங்களும் இரு பிறப்பாளர்கள் என்று பூணூல் அணிந்து கொண்டனர். இதுபோல் வேறு சில வகுப்பாரும் தங்களை உயர்வாகக் காட்டுவதற்காகப் பூணூல் அணிந்து கொண்டனர். எனினும் பிராமணர்கள் பிராமணர் அல்லாதவர்கள் பூணூல் அணிவதை ஏற்கவில்லை. அவர்களைச் சூத்திரர்களாகவே கருதினர்.

பூணூல் போட்டிருந்தாலும் வேதங்களில் கரை கண்டிருந்தாலும் விசுவ பிரம்ம குலம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் பிராமணர்களுக்கு இருக்கும் உயர்ந்த தகுதி மற்றவர்களுக்குக் கிடையாது என்பதுடன், அதை யார் மீறினாலும் பிராமணர்கள் கொதித்து எழுவார்கள் என்பதற்கு 1818 இல் நடந்த வரலாற்று நிகழ்வே சான்று.

அதே விசுவ பிராம்மணர்கள் என்கிற சமூகத்தினர் 1938 ஆம் ஆண்டுகளில் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி என்று போட்டுக் கொண்டனர். அப்போது சென்னை இராசதானி என்ற தமிழ்நாட்டின் முதல்வராக இராசகோபாலச்சாரி பதவியில் இருந்தார். பஞ்ச கருமார்கள் என்பவர்களும், பிராமண இராசாசியும் ஆச்சாரியார்களா? பொறுத்துக் கொள்ளக்கூடிய செயலா? இருவரும் ஒன்றாக முடியுமா?” எனக் கீற்று மின்னிதழில் கா.கருமலையப்பன் எழுதியுள்ளதும் இதற்கு விடையாகும்.

19.    பூணூல் போடுபவர்கள் எல்லாம் ஐயரா?

     அல்ல. எனினும் மேலே கூறியவாறு பூணூலில் உள்ள நூல் வேறுபாடு பிராமணர்களின் பாகுபாட்டு உணர்வைக் காட்டும். அதுமட்டுமல்ல, தலைவர் என்னும் பொருள் கொண்ட ஐயர் என்னும் தமிழ்ச்சொல்லைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டவர்கள் பிறர் அவ்வாறு குறிக்கப்படுவதற்கு விரும்பவில்லை.

சான்றாக, நாயக்கர் காலத்தில் செளராட்டிரர்கள் ஐயர், ஐயங்கார் என்று குறித்துக்கொள்ளக்கூடாது எனப் பிராமணர்கள் வழக்கு தொடுத்தனர். இராணி மங்கம்மாள் அரசு குழு ஒன்றை அமைத்து உசாவி, அதன் அடிப்படையில் செளராட்டிரர்கள் ஐயர், ஐயங்கார் என்று குறித்துக் கொள்ள உரிமையுடையவர்கள் எனத் தீர்ப்பளித்தது. அதன் பிறகு வேண்டா வெறுப்பாக அதனை ஏற்றுக் கொண்டனர்.

(தொடரும்)

 இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.39-41



பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 





பொற்காசுகளால் பொலிந்த தமிழகம்

நாணயங்கள்  பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் – உலோகங்களால் – காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க  வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
புலவர் நக்கீரர், பொற்காசுகள் பலவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட மேகலை குறித்து,
பல்காசு நிரைத்த சில்கால்                         (திருமுருகாற்றுப்படை :16)
எனக் குறிப்பிடுகின்றார்.

காவன்முல்லைப் பூதனார் என்னும் புலவர், வேனிற் காலத்தில், உகாஅய் மரக்கிளையினின்றும் அதன் கனிகள் கீழே உதிர்ந்து விழுவன  பொற்காசுகள் போல இருப்பதாக
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
   உகாஅய் மென்சினை உதிர்வன கழியும்                   (அகநானூறு : 293 : 7:8)
எனக் குறிப்பிடுகின்றார்.

குடவாயில் கீரத்தனார்  என்னும் புலவர்,
மேற்கில் இருந்து வீசும் கோடைக்காற்றால், நெல்லிக்காய்கள் உதிர்ந்து கீழே விழுவன, நூல் அறுந்து கீழே விழுந்த துளையுடைய பளிங்கு காசுகள்போல் இருப்பதாகப்,
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூல் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத்து உதிரும் அத்தம்                        (அகநானூறு : 315 : 10-13)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அள்ளூர் நன்முல்லை என்னும் புலவர், கிளியின் வளைந்தவாயில் உள்ள வேப்பம் பழம் பொற்கொல்லன்  கூரிய கைந்நகத்தில் உள்ள பொன்காசு போல் காட்சியளிப்பதாகக்
கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்                 (குறுந்தொகை : 67 : 1-4)
என்னும் பாடலில் தெரிவிக்கின்றார்.

கொன்றை அரும்புகள், செல்வச் சிறுவர்களின் காலில் கட்டப்பட்ட தவளைவாய் போன்ற பொற்காசுகள் போல் உள்ளன என்பதை   இளங்கீரந்தையார் என்னும் புலவர்,
செல்வச் சிறாஅர் சீறடிப்பொலிந்த
தவளை வாஅய பொலம்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை            (குறுந்தொகை : 148: 1-3)
எனத் தெரிவிக்கின்றார்.

மான் உராய்வதால் குமிழ் மரங்களில் உள்ள பழங்கள்  உதிர்ந்து கீழே பரவிக்கிடப்பது,
பெண் ஒருத்திப் பொற்காசுகளைக் கீழே பரப்பி வைத்துள்ளமை போல் உள்ளதாகக் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவர்,
உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்                       (நற்றிணை 274 : 3-5)
எனக்கூறுகிறார்.

மருதன் இளநாகனார் என்னும் புலவர் கைத்தொழிலால் பொலிவு பெற்ற பொற்காசுகள் இடைஇடையே வைத்துக் கோக்கப்பட்ட பொன்மணிகளை உடைய மேகலை பற்றி,
கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ் மேல்
மையில் செந்துகிர்க் கோவை                                       (கலித்தொகை :85: 3-4)
எனக் குறிப்பிடுகிறார்.

உருத்திரன் என்னும் மற்றொரு புலவர்,
புறாவின் முதுகு போன்ற அடியுடைய கொன்றை மரத்தின் பழங்கள் பொற்காசுகள் போல் இருக்கும் என்பதைப்
புறவுப்புறத் தன்ன புன்கால் உகாஅத்து
காசினை அன்ன நளிகனி உதிர                             (குறுந்தொகை : 274 : 1-2)
எனக் குறிப்பிடுகின்றார்.

பொற்காசுகள் குவிந்து கிடந்த தமிழ்நாட்டவர் வெற்றுக் குவளைகளை கையில் ஏந்தும் நிலை வந்தது ஏன் எனச் சிந்தித்தால் விடிவு பிறக்கும் அல்லவா?

வியாழன், 15 மே, 2025

தமிழ் அமைப்புகள் நடத்தும் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் – 18.05.25

புதன், 14 மே, 2025

சனாதனத்தின்படிப், பூணூல் பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 



சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!

     சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே தகுதியானவன் எனப்படுகிறது. 

“திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச் செய்யும் பொழுது  அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும் பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது. திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை ஓரளவு குறைந்துள்ளது.” என முன்பு ஒரு கட்டுரையில் (கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல 12.02.2017) குறிப்பிடப்பட்டது இங்கே நினைவு கூரத்தக்கது.

அவ்வாறே பிறர்  பூணூல் அணிந்தாலும் அவற்றிலும் பாகுபாடு காட்டுவதே சனாதனம். பூணூல்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் வருணத்திற்கேற்ப மாறுபடும். பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு சணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டும். (மனு,அத்தியாயம் 2 : சுலோகம் 44.) இதை மறைத்துவிட்டு அனைவரும் பூணூல் அணியலாம் என்பது வருணாசிரமம் எனக் கூறுவோரைச் சட்டப்படித் தண்டிப்பதுதான் முறையாகும். 

“சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு என்னும் நூலில் பூணூல் அணிவது தொடர்பான வழக்கு ஒன்று குறிக்கப் பெற்றுள்ளது.

விசுவப் பிரம்ம சங்கத்தார் தங்கள் குலத்திற்கான திருமணங்களைத் தாங்களே செய்து கொள்ளலாம் என்றும் பிராமணர்கள் செய்யத் தேவையில்லை என்றும் அறிவித்தனர். பஞ்சாங்கக் குண்டையன் முதலிய பிராமணர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் வந்தது. பஞ்சாயத்தார் பிராமணர், பஞ்சாங்கம் குண்டையன் என்பார் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணப்படி மறுமொழி கூற வேண்டும். கூறிவிட்டால் அவர்களே தங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பிராமணர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறினார்கள். பஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டுப் பிராமணப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார், “”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தருக்கித்ததும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விசுவப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று 1818 இல் தீர்ப்பு சொன்னார்கள். இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் வேறு சில பிராமணர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.

     மனுதருமம் கூறியபடி பிராமணர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை மெய்ப்பிக்க இயலாமல் சண்டையில் பிராமணர்கள் இறங்கியதைச் சித்தூர் வழக்கு எடுத்துக் கூறுகிறது.

1896இல் ஃகம்பி(Hampi) ஏம கூட மடத்தில் நடந்த விவாதத்தில் தேவாங்கர்கள் பூணுல் அணிவது தம் உரிமை என மெய்ப்பித்துள்ளனர். இவ்வழக்குகள் எல்லாம் பிராமணர்களின் ஏகபோக உரிமையாகப் பூணூல் கருதப்படுவதையும் அதன் விளைவையும்தான் காட்டுகின்றன. என்ற போதும் பூணூல்  மூலம் பிராமணர்களை உயர்ததுவதே சனாதனம்.

பூணூலின் முதன்மையைக் கூறவந்த மனு “பிராமணன், உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பிராமணர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது. பூணூல் அணிந்த பிராமணர்களுக்குக் குமுகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசுகின்ற மனு, “வைதீகமாக இருந்தாலும் உலகியலாக(இலெளகீகமாக) இருந்தாலும் நெருப்பு எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு இருந்தாலும் சகலமான சுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்ல வா! (9:319)” என அறிவிக்கிறது.

பூணூல் முதலிய பிராமணச் சாதிக்குறிகளைத் தரிக்கிற சூத்திரன் அங்கங்களை அரசன் வெட்டி விட வேண்டும். (மனு, அத்தியாயம் 9, சுலோகம் 224) எனச் சனாதனம் சொல்லும்போது யார் வேண்டுமானாலும் பூணூல் போடலாம் என்பது ஏமாற்று வேலைதானே.

(தொடரும்)



வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல! அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்! – தொடர்ச்சி)

வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல! 

இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(kometes) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே  பலர் குறிப்பிடுகின்றனர். உலகில் பஞ்சம், கொள்ளை நோய், ஆட்சி வீழ்ச்சி, தலைவர் இறப்பு முதலான துயர நிகழ்வுகளைக் குறிக்க இது தோன்றுவதாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை உள்ளது. இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே வால் போல் அல்லது முடி போல் தெரியும் பகுதி உண்மையில் வால் அல்ல என்பதை உணர்ந்தனர். இதன் முன்பக்கம் உள்ள காற்றும் பிற துகள்களும்  அழுத்தம் மிகுந்த சூரியக் கதிர்களால் எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. இவ்வாறு தள்ளப்பட்டுப் புகையாகச்  செல்லும் பகுதியே நமக்கு வால் போல் காட்சியளிக்கிறது. விண்ணில் இவை மிகுதியாகக் காணப்பட்டாலும் யார் யார் முதலில் இதனைக் கண்டு தெரிவிக்கிறாரோ அவர் பெயரே இதற்குச் சூட்டப்படுகின்றது.

ஆனால், பழந்தமிழர்கள்  வெறும் தோற்றத்தின் அடிப்படையில் பிறர் போல் வால் நட்சத்திரம் என்று சொல்லவில்லை. வால் நட்சத்திரம்  என்பது இக்காலத்தில் தவறாக வந்த சொல்லாட்சி.  மேலும் இது நட்சத்திர வகைப்பாட்டிற்குள்ளும் வராது. கழிவுப் பொருள்கள்  எரிந்து தள்ளப்படும் இயல்பை உணர்ந்து புகைக்கொடி என்றே அழைத்தனர். தூமம் என்றால் புகை எனப்பொருள். பின்னர் இதனைத் தூமகேது என்றும் குறிப்பிட்டனர்.


                கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
                 விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்        (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)

என்று  இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

முன்பு (http://natpu.in/natpu/Pakudhikal/Kural/21.php)குறிப்பிட்டவாறு

                 மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
                தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்            (புறநானூறு 117: 1-2)

எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.

மிகச் சிறந்த விண்ணியல் அறிவு இருந்தாலன்றி வெறும் தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல் – விண்ணிலுள்ள ஒளிரும் இப் பொருள் நட்சத்திரம் அல்ல என்பதை உணர்ந்து – அதன் அறிவியல் தன்மையை அறிந்து புகைக்கொடி என்று நம் முன்னோர் பெயர் சூட்டி இருக்க மாட்டார்கள்.

வானறிவியலில் தலைசிறந்து இருந்த நாம் வான்புகழ் பெற,  இன்றைக்கும் வானறிவியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் அல்லவா?