சனி, 12 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்

 
 (தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு? -தொடர்ச்சி)

இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்

இனிய அன்பர்களே!

நம் இனத்தின் துயரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழினத்தின் அமைதியும் நிம்மதியும் கேள்விக்குறியாகவே நீடிக்கின்றன. இந்தோனேசியாவிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் சுட்டி நிற்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டிலிருந்து ஈழத் தமிழர்கள் சிலர் தொலைசிபேசி வழி என்னைத் தொடர்பு கொண்டனர்:

ஈழத்திலிருந்து தஞ்சம் கோரி ஆத்திரேலியாவுக்கு அவர்கள் ஒரு விசைப் படகில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் ஆத்திரேலியக் கடற்படை அவர்களை வழிமறித்துத் திருப்பியனுப்பி விட்டது. அவர்களிடம் மிகக் குறைந்த எரிபொருள்தான் மீதமிருந்தது. அருகிலிருந்த நாடு இந்தோனேசியாவில் அவர்கள் கரையொதுங்க நேரிட்டது. இந்தோனேசியாவில் காவல்துறையினர் அவர்களைக் கொண்டுபோய் ஓரிடத்தில் அடைத்து வைத்து விட்டனர்.

ஆத்திரேலியா ஒரு காலத்தில் ஈழத்தமிழ் ஏதிலியருக்கு இடம்கொடுத்து வந்தது. ஆனால் இப்போது புதிதாக யாரையும் எளிதில் கால்பதிக்க விடுவதில்லை என்று கடுமையான நிலை எடுத்து, நடுக்கடலிலேயே வழிமறித்து விரட்டியடிக்கும் நடைமுறையை மேற்கொண்டது. அவர்கள் கடலில் மூழ்கிச் சாக நேரிட்டாலும் ஆத்திரேலிய அரசுக்குக் கவலையில்லை.

எனக்குத் தொடர்பெடுத்தவர்கள் பற்றிய செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைமைக்குத் தெரிவித்துப் பிற நாடுகளிலிருந்து சட்டத் தரணிகள் இந்தோனேசியா சென்று அவர்களைச் சந்தித்து உதவுவதற்கு ஆவன செய்தேன்.

நான் குறிப்பிட்ட குழுவினருக்கு முன்னும் பின்னுமாக அதே போல் ஆத்திரேலியக் கடற்படையால் விரட்டப்பட்டு இந்தோனேசியாவில் குடும்பம் குடும்பமாகக் கரை ஒதுங்கிய ஈழத் தமிழர்கள் மொத்தத் தொகை 650க்கு மேல் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவைப் போலவே இந்தோனேசியாவும் ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951 ஐநா உடன்படிக்கையிலோ அதற்கான 1967 வகைமுறையிலோ ஒப்பமிடவில்லை. இந்தியாவில் போலவே இந்தோனேசியாவிலும் ஈழத் தமிழர்கள் ஏதிலியராகக் கூடச் சட்டத்தால் அறிந்தேற்கப்பெறாத அவலம்!

இப்போது இந்தோனேசிய அரசு தமிழ் ஏதிலியரைக் கட்டயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இலங்கைக்கே திரும்பிச் செல்ல விரும்புவதாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் எழுதி வாங்க முயல்கிறது. அவர்கள் எழுதிக் கொடுக்க மறுப்பதால் காவல்துறையைக் கொண்டு அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. கைபேசிகளைப் பறித்துக் கொண்டு வெளித் தொடர்புகளைத் துண்டிப்பது, அடிப்படை வசதிகளைக் கூட மறுப்பது, குழந்தைகள் கல்வி கற்க விடாமல் செய்வது… இப்படிப் பல வழிகளிலும் அவர்களைத் தொல்லைப்படுத்தி வருகிறது.

உலகெங்கும் ஏதிலியர் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அடிப்படைக் கொள்கை: எந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனரோ அந்த நாட்டுக்கே வலுக்கட்டாயமாக அவர்களைத் திருப்பியனுப்பக் கூடாது என்பதாகும். இதற்குத் திருப்பி அனுப்பாமைக் கொள்கை (PRINCIPLE OF NON-REFOULEMENT) என்று பெயர். ஏதிலியர் தொடர்பான ஐநா உடன்படிக்கைகளில் ஒப்பமிடாத நாடுகளும் இயற்கை நீதியின் பாற்பட்டு இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது. சான்றாக, இந்த உடன்படிக்கைகளில் ஒப்பமிடாத நாடாகிய இந்தியாவில் ஐ.நா. ஏதிலியர் ஆணையத்துக்கு தில்லியிலும் சென்னையிலுமாக இரண்டு அலுவலகங்கள் உள்ளன. ஏதிலியர் நலன் சார்ந்த சிக்கல்களில் சென்னை அலுவலகத்தை நாம் அணுகினால் கிடைக்கும் விளக்கம் இதுதான்: எங்களுக்கு இரண்டே பணிகள்தான் – முதலாவதாக, இலங்கையிலிருந்து ஏதிலியாக வந்துள்ள எவரையும் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பாமல் பார்த்துக் கொள்வது. இரண்டாவதாக, திரும்பிச் செல்ல விரும்புகிற எவரையும் தடுத்து வைக்காமல் பார்த்துக் கொள்வது.

இந்தக் கொள்கையை மீறித்தான் சென்னையிலிருந்து ஈழவேந்தன் இலங்கைக்குக் கடத்தப்பட்டார். நாங்கள் நடத்திய ஒரு போராட்டத்துக்காக வந்து கொண்டிருந்தவரை வழிமறித்த தமிழ்நாடு காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய் கொழும்பு செல்லும் வானூர்தியில் அமர்த்தி அனுப்பி விட்டது. இந்த ஆள்கடத்தலைத் தடுக்க யாரும் நீதிமன்றத்தை நாட அவகாசம் தந்து விடக் கூடாதாம்!

தலைவரின் அன்னை பார்வதி அம்மாள் உரிய பயண இசைவுகள் பெற்றுத் தமிழ்நாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த போது சென்னை மண்ணை மிதிக்கக் கூட விடாமல் திருப்பியனுப்பப்பட்டதையும், இந்தியாவில் சிகிச்சைக்கு வர அன்றன் பாலசிங்கம் அனுமதிக்கப்படாததையும் கூட நினைவுகூரலாம்.
உள்நாட்டுப் போர் இனவழிப்பில் முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் தஞ்சம் நாடி அலைவதும், அவர்களை மற்ற நாடுகள் அலைக்கழிப்பதும் தொடர்வதுதான் பெருந்துயரம்.
இந்தோனேசியாவிலிருந்து ஈழத் தமிழர்கள் அபயக் குரல் எழுப்புகின்றனர். உதவி கோரி ஐநாவுக்கும் ஏதிலியர் ஆணையத்துக்கும் மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் முயற்சியில் வென்றால் நம் மனம் அமைதியாகும்.
(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 210

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

இந்திய விடுதலை நாள் உரையரங்கம் : “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?”

 


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

                    செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 411)

தமிழ்க் காப்புக் கழகம்

மன்னும் இமயமலை                                         எங்கள் மலையே !

மாநிலமீததுபோல்                                                  பிறிதில்லையே !

இந்திய விடுதலை நாள் உரையரங்கம்

“விடுதலையானது இந்தியா!

அடிமையானது தமிழ்நாடு?”

நாள் : ஆடி 28, 2054 ஞாயிறு 13.08.2023  காலை 10.00

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள் :

உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

இளைய ஒளவை முனைவர் தாமரை

சிறப்புரை : தமிழ்த்தேசியச் செம்மல் தோழர் தியாகு    

நன்றியுரை: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு?

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை! – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாழி மடல் 153இல் வெளியிட்ட இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையில் (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர் திரு அரி பரந்தாமன் எழுதிய மடலை நேற்று தாழியில் (எண் 156) படித்திருப்பீர்கள். அதே உரையில் மேலும் ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் எழுதியுள்ள மடலை இன்று பகிர்கிறேன். தீர்ப்புகளையும் சமூகநீதிக் குறிக்கோளின் மீது அவற்றின் தாக்கத்தையும் சரிவரப் புரிந்து கொள்வதில் அன்பர் அரி பரந்தாமன் அவர்களின் விளக்கங்கள் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவை என நம்புகிறேன். ஒரு குறைக்கு இரு முறை படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். அதன் பிறகும் ஐயமிருப்பின் அவரிடம் கேட்டுத் தெளிவு பெறத் தாழி உங்களுக்கு உதவும். சரி, அவரது மடலைப் பார்ப்போம் –

எப்படி வந்தது மருத்துவக் கல்வியில்

அனைத்து இந்திய ஒதுக்கீடு?

அன்பர் அரி பரந்தாமன் எழுதுகிறார்.    

தோழரே, 

மேலும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: மருத்துவ மாணவர் சேர்க்கையில், அனைத்து இந்திய ஒதுக்கீடு என்ற போர்வையில், 2008 முதல் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகத்  தாழி(153)இல் குறிப்பிட்டுள்ளீர்கள்.

2006இல் அர்சுன்சிங்கு மத்திய அமைச்சராக இருந்த போது,  அவரது முயற்சியால் மத்தியக் கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும், அதற்கு உச்ச நீதிமன்றம் தடை கொடுத்தது என்றும், இறுதித் தீர்ப்பில் 2008இல் கல்வியில் 27% இட ஒதுக்கீடு  சரிதான் என்று கூறிய போது, உச்ச நீதிமன்றம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு இல்லாத அனைத்து இந்திய ஒதுக்கீட்டை (All India Quota)  உருவாக்கியது என்றும் கூறியுள்ளீர்கள். 

இந்த விவரம் பிழையானது.

மருத்துவர் தினேசு குமார் – எதிர் – மோதிலால் நேரு கல்லூரி என்ற வழக்கில் 1984 முதல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பி.என். பகவதி அமர்வு தொடர்ந்து பல உத்தரவுகள் போட்டது. 1984இலேயே அளித்த தீர்ப்பில் மருத்துவக்  கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு அளிப்பது பற்றியும், எந்த அளவு அளிக்க வேண்டும் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்பைச் செயற்படுத்துவது தொடர்பாகப் பல முறை உத்தரவுகள் போட்டது.

அந்த அமர்வு 1-5-1985, 16-9-1985, 2-7-86  ஆகிய தேதிகளில் உத்தரவுகள் போட்டது.

இதில், 2-7-86 உத்தரவில் எம்.பி.பி.எசு. (MBBS) மற்றும் பல்மருத்துவ (BDS) கல்வியில் 15%, எம்டி, எம்எசு (MD, MS) பட்ட மேற் படிப்புகளில் 25% அனைத்து இந்திய ஒதுக்கீடு என்று கூறியதுதான் இறுதியானது. 

இந்த அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லைஇது ஒரு மோசடி. அரசமைப்புச் சட்டம் கூறு 15இன் படி இட ஒதுக்கீட்டைப் பற்றி அரசு ஆணையோ, சட்டமோ செய்வது மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பாற்பட்டது.  இதில் நீதிமன்றத்தின் அதிகாரம் எங்கே வருகிறது?

அப்போதைய காங்கிரசு அரசு, அனைத்து இந்திய ஒதுக்கீட்டை அரசின் ஆணையாகவோ சட்டமாகவோ போட்டால் சிக்கல் வரும் என்பதால், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் உள்ள அரசின் நிர்வாகம் வழியாக உச்ச நீதிமன்றம் மூலம் இதைச் சாதித்துக் கொண்டது.

பார்ப்பன மேலாதிக்கம் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கும் இதில் ஆட்சேபணை இல்லை.

பின்னர், 28-2-2005இல் புத்தி பிரகாசு சருமா – எதிர் – இந்திய ஒன்றியம் (Buddhi Prakash Sharma Vs Union of India) என்ற வழக்கில், MD & MS கல்விக்கு 50% என உயர்த்தியது.

பட்டியல் இனத்தவர்கள் தொடுத்த வழக்கில் (அபய்நாத்து – எதிர் – தில்லிப் பல்கலைக்கழகம்), 31-1-2007இல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பாலகிருட்டிணன் அமர்வு அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் எசுசி / எசுடி (SC/ST) இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர், 2020-21இல், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் பின்தங்கிய வகுப்பாருக்கும் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றது

இதில், 1984 முதல் 1986 வரை நடந்த மருத்துவர் தினேசு குமார் வழக்கில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு  தெரிவித்த  விவரம் தீர்ப்பில் உள்ளது. மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் இதை ஆதரித்துத் திட்டமிட்டுச் செயல்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநில ஆட்சேபணைகளைப் புறந்தள்ளியது.

மேலே குறிப்பிட்டது போல, இதைக் கொண்டுவந்தது நீதிபதி பகவதி அமர்வு!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 157

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி

 தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி

மொத்தம் 18 பரிசுகள்

 சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும்

முதல்பரிசு உரூ.5,000/-

இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /,  & மூன்றாம்  உரூ.2000/

நான்காம்  பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-)

ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-)

ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-)

கட்டுரைப்போட்டியின் தலைப்பு:

இந்தி, சமற்கிருத, ஆங்கிலத் திணிப்புகளை முறியடிப்போம்!

4 பக்கங்களுக்குக் குறையாமல் (மேல் வரம்பு இல்லை)

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆவணி 11, 2054 /

28.08.2023 தமிழக நேரம் மாலை 6.00 மணிக்குள்

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி:

thamizh.kazhakam@gmail.com

ஒன்றிய அரசு இந்தியையும் சமற்கிருதத்தையும் நாளும் திணித்துக் கொண்டு வருகிறது. அவற்றைத் திணிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் அதனை அகற்றிக் கொண்டுள்ளது. மாநில அரசு இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. ஆங்கில வழிப்பள்ளிகளில் இள மழலை வகுப்பிலிருந்தே இந்தி, இந்தி பரப்புரை அவை மூலம் இந்தி, தனிக்கல்வி மூலம் இந்தி, அஞ்சல் மூலம் இந்தி என எல்லா வகையிலும் இந்தியை வீற்றிருக்கச் செய்து விட்டு இந்தியை எதிர்ப்பதாகத் தலைவர்கள் நாடகமாடுகிறார்கள். ஊடகங்கள் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்துக் கொண்டு வருகின்றன. மொழியை இழந்தால் வாழ்வை இழப்போம் என்பதை உணராமலேயே மக்களும் மொழித்திணிப்புகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே, இந்தித்திணிப்பிற்கு எதிராகவும் தமிழ்க்காப்பிற்கு ஆகவும் இருமுறை சிறை சென்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு மேற்குறித்த தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறோம். மூன்று மொழிகளும் எவ்வாறெல்லாம் திணிக்கப்பட்டு வருகின்றன, இதனால் நாம் அடையும் இழப்பு என்ன? தமிழ் மொழி அழிப்பு, தமிழ் இன அழிப்பிற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பேரிடருக்கு முற்றுப்புள்ளி வைப்பது எவ்வாறு? எவ்வாறெல்லாம் மும்மொழித்திணிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? நாம் எவ்வாறு முறியடிக்க வேண்டும் எனக் கட்டுரைகளைப் பிற மொழிக் கலப்பு இன்றி எழுதி அனுப்ப வேண்டுகிறோம். மாணவர், மாணவரல்லாதார் , சிறியவர், பெரியவர், ஆண், பெண்,தொழிலாளி, முதலாளி என்பன போன்ற எவ்வகை வேறுபாடுமின்றி அனைவரும் பங்கேற்கலாம். எனவே போட்டியில் பங்கேற்று வாகை சூட வேண்டுகிறோம்.

ஆர்வமுள்ளவர்களைப் பங்கேற்க வேண்டுகிறோம்

இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க் காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும். ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர். வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே. வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது” – தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்

தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை!

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது தொடர்ச்சி)

ஓய்வு கொள்ள நேரமில்லை!

இனிய அன்பர்களே!

பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையத்தில் இருந்து எழுதுகிறேன். இங்கே தொலைபேசித் தொடர்பே திணறும் போது இணையத் தொடர்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நாள்தோறும் தாழி மடல் அனுப்புவதே போராட்டமாகத்தான் உள்ளது. இந்தத் திங்கட் கிழமை செய்தி அரசியல் நடத்த முடியாமற்போயிற்று. இன்று அறிவன் கிழமையில் ‘தமிழ்நாடு இனி’ அரசியல் வகுப்புக்கும் விடுமுறைதான்! எவ்வளவு இடர்ப்பாட்டிலும் அரசியல் வகுப்பை நிறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.

ஏப்பிரல் 15 கந்தர்வக்கோட்டை அருகே ஒரு சிற்றூரில் அம்பேத்துகர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு 16 காலை சென்னை வந்து விடுவேன். பிறகு வழக்கம் போல் திங்கள், அறிவன் இணைய நிகழ்வுகள் தொடரும். அது வரை பொறுத்தருள்க! இங்கிருக்கும் வரை தாழியில் முடியாமலிருக்கும் உரையாடல்களை விரைவுபடுத்தி முடிக்க இயன்ற வரை முயல்வேன்.

இரு நாள் முன்பு நானும் சுதாவும் கோவை சென்று இனிய தோழர் போத்தனூர் இராசகோபாலைப் பார்த்து வந்தோம். பல்லாண்டு இடைவெளிக்குப் பின் பார்க்கிறேன். அவரது உடல்நிலை குறித்து வினவியறிந்தேன். கிழமை மூன்று முறை கேசி மருத்துவமனையில் நீர்ப்பிரிப்பு (dialysis) செய்து கொள்கிறார். விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதற்காகப் பெயர் பதிந்து பட்டியல் வரிசையில் காத்திருக்க வேண்டும். இராசகோபால் உடல்நிலை, அவருக்கான சிகிச்சை, அடுத்துச் செய்ய வேண்டியது… அனைத்தையும் பற்றி ஒரு விரிவான மருத்துவ அறிக்கை தருமாறு அன்பர் மருத்துவர் மணிகண்டனைக் கேட்டுள்ளேன். கிடைத்தும் தாழியில் அறியத் தருகிறேன்.

ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்என் இரவிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் முதல் போராட்டத்தையே இந்த ஆளுநர் இரவியைப் பதவி விலகக் கோரித்தான் நடத்தினோம். அவரைக் கண்டித்துத் தமிழக சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்தை வரவேற்கிறோம்.

இரவிக்கு எதிரான போராட்டம் என்பது அவரை ஆட்டுவிக்கும் பாசிச மோதி கும்பலுக்கு எதிரான போராட்டமே என்பதை மறந்து விடக் கூடாது. இரவி விலகினால் அல்லது அவரை இந்திய அரசே விலக்கிக் கொண்டால் அது தமிழக மக்களுக்கு ஒரு வெற்றிதான்! ஆனால் அத்துடன் தன்னாட்சி மலர்ந்து விடாது, இறைமை வந்து விடாது. தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய பொதுத்தேர்வு (‘நீட்’) விலக்கு உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் சட்டங்களாக வேண்டும். இந்த நோக்கம் ஈடேற இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். நம் போராட்டம் மேலும் முனைப்பான வடிவங்கள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவிற்கொள்க! தமிழ் நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், தமிழ்நாட்டு முதலமைச்சரும் அடுத்தடுத்தப் போராட்டக் களங்களுக்கு அணியமாவோம்! ஒய்வு கொள்ள நேரமில்லை!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 157

புதன், 9 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது

இனிய அன்பர்களே!

இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையை (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) தாழி மடல் 153இல் வெளியிட்டிருந்தேன். உங்களில் சிலராவது சற்றே நீண்ட அந்த உரையைப் படித்திருக்கக் கூடும்.

 அந்த உரையில் காணப்படும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் திரு அரி பரந்தாமன் தாழிக்கு எழுதியுள்ளார். அவர் சுட்டியுள்ள படி என் உரையில் காணப்படும் அந்தப் பிழையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சிக்கல் குறித்து நமக்குத் தெளிவு தரும் அவரது மடலை ஈண்டு தாழியில் பகிர்கிறேன் –    

முதல் திருத்தத்திற்கு வந்த திருத்தம் –

அதன் பொருள் என்ன?

அன்பர் அரி பரந்தாமன் எழுதுகிறார்.

தோழரே,

தாழி 153இல் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றிய விவரம் சற்றுப் பிழையானது.

 நேரு தலைமையமைச்சராகவும் அம்பேத்துகர் சட்ட அமைச்சராகவும் இருந்த நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் காரணமாகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

செண்பகம் துரைராசன் வழக்கில், அரசமைப்புச் சட்டத்தில் கல்விக்கான இட ஒதுக்கீடு இல்லை என்று வாதிடப்பட்டது.  அந்த வழக்கை செண்பகம் துரைராசனுக்காக நடத்தியவர் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருட்டிணசாமி ஐயர்.

அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்திற்குக் கல்வியில் இட ஒதுக்கீடு  அளிப்பது சம்பந்தமாக உறுப்பு 15(4) சேர்க்கப்பட்டது. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்ற பதத்தை அரசமைப்புச் சட்டம் 340இல் இருந்து எடுத்துக்  கையாள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு கொண்டுவந்த திருத்தத்திற்கு ஏழு உறுப்பினர்கள் திருத்தம் கொண்டு வந்தார்கள். அதில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று இருந்தது.  அஃதாவது பின்தங்கிய சமூகத்தில் உள்ள பொருளாதார ரீதியில் வசதி படைத்தோருக்கு – creamy layer – இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்பது இந்த எழுவரின் திருத்தம்.  இந்த எழுவர் முன்னேறிய பார்ப்பனர்கள் உள்ளிட்ட சாதிக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறவில்லை.  இப்போது மோதி அரசு 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உயர் சாதியில் உள்ள ஏழைகளுக்கு (பணக்காரர்களுக்கு)  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற திருத்தத்தை முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது அவர்கள் கூறவில்லை. அந்த  எழுவரில் ஒருவர் இந்து மகாசபையைச் சார்ந்தவரும்  நேரு அமைச்சரவையில் இடம் பெற்றவருமான சியாம் பிரசாத்து முகர்சி ஆவார்.  அவர்தான் பின்னாளில் சன சங்கத்தைத் தோற்றுவித்தவர்.

பாராளுமன்றம் மறுத்தொதுக்கிய creamy layer கோட்பாட்டை நீதியற்ற முறையில் இந்திரா சகானி வழக்கில் ( மண்டல் வழக்கில்) 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்படுத்தியது.  இதனை ஏற்றுக் கொள்ளாமல் தீர்ப்பளித்த ஒரே நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் மட்டுமே. இடதுசாரி நீதிபதியான  சாவந்து கூட creamy layer-ஐ ஆதரித்துத் தீர்ப்பளித்தார்.

தாழி குறிப்பு:

என் பிழையை மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், தெருமுனைக் கூட்ட உரையில் –

“அந்தத் திருத்தம் [அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்] கொண்டுவருகிற போது ஐந்து ஆறு பேர் தனியாக ஒரு தீர்மானம் கொடுத்தார்கள். என்ன தீர்மானம் தெரியுமா?  இந்த கம்யூனல் அரசாணையில் சாதி பார்க்கிறீர்கள், மதம் பார்க்கிறீர்கள், என்ன சமூகம் என்று பார்க்கிறீர்கள்,  கம்யூனிட்டி பார்க்கிறீர்கள்; அப்படிப் பார்க்காமல் பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும். ஏழையா பணக்காரரா என்று பார்க்க வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள். அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருந்த 250 பேரில் ஆறு பேர் கொண்டுவந்த திருத்தத்தை 244 பேர் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்தார்கள். அன்றைக்குத் தோற்றுப் போன அந்தத் திருத்தத்தைதான் இப்போது  மோடியும் அமித்துசாவும் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று பேசியிருந்தேன்.

அவர்கள் ஐந்து ஆறு பேர் அல்ல, சரியாக ஏழு பேர். அந்த எழுவரில் ஒருவர் சியாம் பிரசாத் முகர்சி. அரசு முன்மொழிந்த சட்டத் திருத்தத்துக்கு இந்த எழுவரும் ஒரு திருத்தம் முன்மொழிந்தார்கள். அரசின் முன்மொழிவில் “சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்ட சமூகங்கள்” என்று இருந்தது. எழுவரின் முன்மொழிவில் “சமூக வழியிலும் கல்வி வழியிலும் பொருளியல் வழியிலும் பிற்பட்ட சமூகங்கள்” என்று இருந்தது. இரண்டுக்கும் வேறுபாடு என்ன? புரிகிறதா? சமூக வழியிலும் கல்வி வழியிலும் என்கிறது அரசின் திருத்தம். சமூக வழியிலும் கல்வி வழியிலும் பொருளியல் வழியிலும் என்கிறது எழுவரின் திருத்தம். முடிவில் அரசின் திருத்தம் ஏற்கப்பெற்று, எழுவர் திருத்தம் மறுதலிக்கப்பட்டது. எழுவரின் திருத்தம் ஏற்கப் பெற்றிருந்தால் சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்டவர்கள்   பொருளியல் வழியிலும் பிற்பட்டிருந்தால்தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். இல்லையேல் பொருளியல் வழியில் உயர்ந்து விட்டார்கள் என்று காரணம் காட்டி இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.

சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்டவர்களில் ஒரு பிரிவினர் பொருளியலில் மேலே வந்து விட்டால் அவர்கள் ‘கிரீமி லேயர்’ (creamy layer) எனப்படுகின்றனர். [கிரீமி லேயர் என்பதைக் கடந்த காலத்தில் ‘பசையடுக்கு’ என்று தமிழாக்கியுள்ளேன். வேறு சொல் பொருத்தமாக இருந்தால் முன்மொழிக!] சமூகம், கல்வி இவற்றோடு பொருளியல் அடிப்படையை நுழைக்கும் இந்த ‘கிரீமி லேயர்’ கருத்தை – முதல் திருத்தத்தின் போது நாடாளுமன்றம் மறுதலித்த இந்தக் கருத்தை – மண்டல் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது.

தனியொரு நீதியராக அதனை எதிர்த்தவர் இரத்தினவேல் பாண்டியன் மட்டுமே என்று அரி பரந்தாமன் சுட்டிக் காட்டுகின்றார்.

முதல் திருத்தத்தின் போது திருத்தத்துக்குத் திருத்தமாக முன்மொழியப்பட்ட பொருளியல் அளவுகோலைக் கூடுதலாகச் சேர்ப்பதும், இப்போது மோதி அரசு கொண்டுவந்துள்ள பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றல்ல என்பதை அரி பரந்தாமன் விளக்கியுள்ளார்.

இரண்டுமே சமூகநீதிக்கு எதிரானவை என்பதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

•        > கிரீமி லேயர் (creamy layer) – இதற்குச் சமனாய் ஒரு தமிழ்ச் சொல் வேண்டும். பசையடுக்கு என் முன்மொழிவு. இலக்குவனார் திருவள்ளுவன் என்ன சொல்கிறார்? சிபி? இரவி? யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.  

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொடரும்

தோழர் தியாகு

தாழி மடல் 156