சனி, 21 மே, 2016

உதகமண்டலத்தின் உண்மையான பெயர்! – இரா.பி.சேது


தலைப்பு-உதகமண்டலத்தின் உண்மைப்பெயர் :thalaippu_uthagaiyinpeyar_ooty

உதகமண்டலத்தின் உண்மையான பெயர்!

  ஆடு மாடுகள் கூட்டமாகத் தங்குமிடம் மந்தை எனப்படும். வட ஆர்க்காட்டில் வெண் மந்தை, புஞ்சை மந்தை முதலிய ஊர்கள் உள்ளன. நீலகிரியில் தோடர் எனும் வகுப்பார் குடியிருக்கும் இடத்திற்கு மந்து என்பது பெயர். மாடு மேய்த்தலே தொழிலாகக் கொண்ட தோடர் உண்டாக்கிய ஊர்களிற் சிறந்தது ஒத்தக்க மந்து என்பதாகும். அப்பெயர் ஆங்கிலமொழியில் ஒட்டகமண்டு எனத் திரிந்தும், ஊட்டி எனக் குறுகியும் வழங்கி வருகின்றது. ஒத்தைக்கல் மந்தை(ஒற்றைக்கல்மந்தை) என்பதே இவ்வாறு சிதைந்து வழங்குவதாகத் தெரிகின்றது.

அட்டை-தமிழகம் ஊரும்பேரும், இரா.பி.சேதுப்பிள்ளை :attai_thamizhagam uurum pearum
– சொல்லின் செல்வர் இரா.பி.சேது(பிள்ளை):
தமிழகம் ஊரும் பேரும்:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய நெடுஞ்சேரலாதன் – மயிலை சீனி வேங்கடசாமி
போர்க்களத்தில் நெடுஞ்சேரலாதன் :neducneralathan

உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய

வள்ளல்  சேரவேந்தர் நெடுஞ்சேரலாதன்

  நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி செலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டு வந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.
  நெடுஞ்சேரலாதனுக்கும் இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது ‘போர்’1 என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் ‘போர்’ என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும் அழிந்தன. இறுதியில் வேந்தர் இருவரும் நேரில் வேற்போரில் ஈடுபட்டனர். கிள்ளியானவன் வேற்போரில் வல்லவன் என்பது அவனது பெயரிலேயே விளங்கும். இருபெருவேந்தரும் போரில் சாய்ந்தனர்.2
  நெடுஞ்சேரலாதன் உயிர் நீங்குகின்ற நிலையில் நெடுநேரம் போர்க்களத்திலேயே கிடந்தான். அப்போது கழாத் தலையார் என்னும் புலவர் அவனைக் கண்டு பாடி அவனது கழுத்தில் இருந்த ஆரத்தைப் பரிசிலாகக் கேட்டார். அவனும் வழங்கினான்; பின்னர் மாண்டான்.
  இவனுக்குப் பின் சேரநாட்டின் தலைமைப் பொறுப்பினைச் செங்குட்டுவன் ஏற்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரலாறு உணர்த்துகிறது.
  1. அகநானூறு 326 : 10 -11
  2. புறநானூறு 62 : 7- 8, 63 : 10
தமிழ் வரலாற்று அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி :
பண்டைத் தமிழக வரலாறு : சேரர், சோழர், பாண்டியர்
அட்டை-தமிழகவரலாறு, சேர சோழ பாண்டியர் : attai_pandaithamizhagavaralaaru_chera,chozha,paandiyar
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan

தேவகோட்டையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு


ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு! தனியார்/ பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி
தேவகோட்டை :- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார்-பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றுச் சார் ஆட்சியரிடம் பரிசு பெற்றதற்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் (இ)யோகேசுவரன்  வரவேற்றார்.
பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

காரைக்குடியில் உள்ள தனியார் -பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற அனைவருக்குமான ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் திவ்யசிரீ, புகழேந்தி, கிசோர்குமார், தனுதர்சினி, காயத்திரி, சீவா, பரத்துகுமார், தனம், வீரன்முகேசு ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் பரத்குமார், தனம் ஆகியோர் ‘என் கனவுத்தேசம்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுப் பரிசு பெற்றனர்.

அரசு விடுமுறை நாளன்று பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிறைவாக மாணவர் முனீசுவரன் நன்றி கூறினார்.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[படங்களை அழுத்தினால் பெரிதாகக்காணலாம்.]