சனி, 22 செப்டம்பர், 2012

மனமெல்லாம் தமிழ்மணம் - இமயம் தொலைக்காட்சி


"மனிதனாக இருக்கிறானா...!'

சொல்கிறார்கள்

"மனிதனாக இருக்கிறானா...!'
கலைமாமணி வீ.கே.டி.பாலன்: ஒரு மனிதன் கல்வி கற்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லை; அவன் மனிதனாக இருக்கிறானா என்பது தான் முக்கியம். கல்வி, அதிகமாகவே மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. ஆகவே, கல்வி கற்றல், மனித சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை. என் மகளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, பேசிய பின், ரிசீவரை கீழே வைத்த அவள், "ஓ...'வென, அழத் தொடங்கி விட்டாள். காரணம் கேட்க, "என்னுடன் படிக்கும் மாணவி, கெரசின் ஊற்றி, தற்கொலை செய்து கொண்டாள்' என்றாள். காரணம் உடனடியாகத் தெரியாத போதும், மறுநாள் தெரிய வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அப்பெண், கடைசித் தேர்வில், மதிப்பெண்ணில் கொஞ்சம் பின்தங்கி விட்டாள். அதற்காக, அவள் தாயும், தந்தையும் திட்டியதன் பொருட்டு, இந்தத் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தால், "பெற்றோரே... உங்கள் குழந்தைகளை வெறும் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகத் தான் பார்க்கிறீர்களா?' என்று கேட்கத் தோன்றுகிறது. அதே வேளையில், கண்டிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்பதுமில்லை. அமைதியாக அமர்ந்து, நிதானமாக, உங்களின் வாரிசுகளின் வருங்காலத்தை நிமிர்த்த, அவர்களின் சிக்கல்களை, உங்களுக்குள் அவிழ்த்துக் கொள்வது தான் வாழ்க்கை. அகம்பாவம் கொள்வது, அடாவடி நடவடிக்கைகளுடன் உயிரையே துச்சமாக மதிக்கும் முடிவை எடுத்துக் கொள்வது மாணவப் பருவத்தினருக்கு ஏற்புடையதாகுமா? கல்வி கற்றல் நல்லது என்பது உண்மையோ, இல்லையோ... அது குறிக்கோள் உடையதாக இருக்க வேண்டும் என்பது நிதர்சனம். குறிக்கோள் இல்லாத கல்வி, பாமரத்தனத்தை விட மோசமானது.

தனிமங்கள்(Chemical Elements)


தனிமங்கள்(Chemical Elements)
- இலக்குவனார் திருவள்ளுவன்
 அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா.  தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.

 இயல்பான நிலையில் தனிமங்கள்  திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா.  (அ.) மாழை: அதள்(பாதரசம்) ; (ஆ.) அல்மாழை: செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா.  உயிர்வளி) உள்ளன.

 இயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன. இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.

 அதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட  தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.

 தனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது முன்னணு(புரோட்டான்),  நள்ளணு(நியூட்ரான்),  மின்னணு( எலக்ட்ரான்) போன்ற நுண்ணிய அணுத்துகள்களாகப்பிரிக்கப்படக் கூடியது.

 இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.
 அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட  தனிமங்கள் உள்ளன. இவை  ஓரணுத் தனிமங்கள் ஆகும்.
 இவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.

 வெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.

 ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்) எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண் நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.

 தனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச் சொற்களாகும்.  கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின் பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள் அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும்.  நாம் ஏன் இவற்றைத் தமிழில் குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து  கொள்ளவும்  இயலும். தொடக்க நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்னாட்டு முறையையும் தெரிந்து கொள்வதே நலமாகும்.
தனிமங்களின் அட்டவணை
அணு  எண்
தனிமம்
குறியீடு
அணுநிறை
1நீர்வளி (Hydrogen)நீ (H)1.00797
2 கதிர்வளி (Helium) க (He)4.0026
3கல்லம் (Lithium)கல் (Li)6.94
4குருகம் (Beryllium)கு (Be)9.0122
5பழுப்பம் (Boron)ப (B)10.811
6கரிமம் (Carbon)கரி (C)12.011
7வெடிவளி (Nitrogen)வெ (N)14.0677
8உயிர்வளி (Oxygen) உ (O)15.994
9பைம்மஞ்சள்வளி (Fluorine)பை (F)18.9984
10புத்தொளிரி (Neon)பு (Ne) 20.1797
11வெடிமம் (Sodium)வெடி (Na)22.9898
12வெளிமம் (Magnesium)வெளி (Mg)24.312
13ஈயம் (Aluminium)ஈம் (Al)26.98
14கன்மம்  (Silicon )கன் (Si)28.086
15எரிமம் (Phosphorous)எ (P)30.974
16கந்தகம் (Sulfur)கக (S)32.064
17பாசிகம் (Chlorine)பா (Cl)35.453
18மடியன் (Argon )மடி (Ar )39.9
19சாம்பரம் (Potassium )சா (K )40.1
20சுதைமம் (Calcium)சு (Ca)45.0
21‘காண்டிமம்’ (Scandium )கா (Sc )44.956
22கரும்பொன்மம் (Titanium )கரு (Ti)47.9
23வெண்ணாகம் (Vanadium )வெக(V )50.942
24குருமம் (Chromium )குரு (Cr )51.996
25மங்கனம் (Manganese )மங் (Mn )54.938
26இரும்பு (iron)இரு (Fe )55.847
27வண்ணிமம் (Cobalt)வண் (  Co)58.933
28வெள்ளையம் (Nickel )வெய (Ni i )58.91
23செம்பு (Copper )செ (Cu )63.5
30துத்தநாகம் (Zinc )து (Z n)65.4
31நரைமம் (Gallium )ந (Ga) 69.72
32‘செருமம்’ (Rubidium )செரு (Rb)72.59
33சவ்வீரம் (Arsenic )ச (As)74.9
34மதிமம் (Selenium)நி (Se)78.96
35செந்நீர்மம் (Bromine)செநீ (Br)79.904
36மறைவளி (Krypton)மறை (Kr)83.80
37செவ்வரிமம்(Rubidium)செம் (Rb)85.47
38வெண்ணிமம்(Stronium)வெணி(Sr)87.62
39கருநரைமம்(Yttrium)கந (Y)88.905
40வண்மம்(Zirconium)வம(Zr)91.22
41அருமிமம்(Niobium)அரு (Nb)92.906
42முறிவெள்ளி(Molybdenum)மு(Mo)95.94
43செயற்கைத்தனிமம்(Technetium)செய(Te)97.9072
44சீர்பொன்(Ruthenium)சீர்(Ru)101.07
45திண்ணிமம்(Rhodium)திண்(Rh)102.90550
46பொன்னிமம்(Palladium)பொம்(Pd)106.42
47வெள்ளி(Silver)வெள்(Ag)107.8682
48வெண்ணீலிமம்(Cadmium)வெநீ(Cd)112.44
49நீலவரிமம்(Indium)நீவ(In)114.8182
50வெள்ளீயம்(Tin)வெஈ(Sn)118.710
51நொய்ம்மிமம்(Antimony)நொ(Sb)121.760
52ஒளிர்மம்(Tellurium)ஒ(Te)127.60
53கருமயிலம்(Iodine)கம(I)126.90447
54அயலிமம்(Xenon)அய (Xe)131.30
55நீலநீறிமம்(Cesium)நீநீ(Cs)132.90543
56மங்கிமம்(Barium)ம(Ba)137.327
57ஊக்கிமம்(Lanthanum)ஊ(La)138.9055
58நெகிழிமம்(Cerium)நெ(Ce)140.115
59வெண்மஞ்சை(Praseodymium)வெம(Pr)140.90765
60புதுமஞ்சை(Neodymium)புமNd)144.24
61கதிர்மம்(Promethium)கம்(Pm)144.9127
62வெண்நரைமம்(Samarium)வெந(Sm)150.35
63‘ஐரோப்பிமம்’ (Europium)ஐ(Eu)151.965
64காந்தனிமம்(Gadolinium)காம் (Gd)157.25
65விளர்மம்(Terbium)விள(Tb)158.92534
66உறிமம்(Dysprosium)உறி(Dy)162.50
67‘ஓல்மிமம்’(Holmium)ஓ(Ho)164.93032
68‘எர்பிமம்’ (Erbium)எர்(Er)167.26
69வடமம்(Thulium)வ(Tm168.93421
70எட்டர்பிமம்’(Ytterbium)எம் (Yb)173.04
71மஞ்சிமம்(Lutetium)மம் (Lu)174.967
72‘ஆஃப்னிமம்’(Hafnium)ஆஃப்(Hf)178.49
73வெம்மம்(Tantalum)வெம்(Ta)180.9479
74மின்னிழைமம்(Tungsten)மி(W)183.84
75அரிமம்(Rhenium)அரி(Re)186.207
76விஞ்சிமம்(Osmium)விம்(Os)190.2
77உறுதிமம்(Iridium)உறு(Ir)192.217
78வன்பொன்(Platinum)வ.பொ.(Pt)195.08
79தங்கம்(Gold)த(Au)196.95654
80இதள்(Mercury)இத(Hg)200.59
81சாம்பிமம்(Thallium)சாம்(Ti)204.3833
82காரீயம்(Lead)காரீ(Pb)207.2
83நிமிளை(Bismuth)நிமி(Bi)208.98037
84மஞ்சளம்(Polonium)மள்(Po)208.9824
85நொறுங்கிமம்(Astatine)நொறு(At)209.9871
86கதிரம்(Radon)கர(Rn)222.0176
87‘விரெஞ்சிமம்’(Francium)விரெ(Fr)223.0197
88கதிரிமம்(Radium)கதி(Ra)226.0254
89கதிர்வினைமம்(Actinium)கவி(Ac)227.0278
90சுடரிமம்(Thorium)சுட(Th)232.0381
91புறக்கதிரம்(Protactinium)புற(Pa)231.0388
92விண்ணிமம்(Uranium)விண்(U)238.0289
93சேண்மிமம்(Neptunium)சேண்(Np)237.0482
94சேணாமம்(Plutonium)சேய்(Pu)244.0642
95‘அமரிக்கம்’(Americium)அமெ(Am)243.0614
96‘கியூரிமம்’(Curium)கியூ(Cm)247.0703
97‘பெரிக்ளிமம்’(Berkelium)பெரி(Bk)247.0703
98‘கலிபோரிமம்’(Californium)கலி(Cf)251.0796
99‘ஐன்சுதீனம்’(Einsteinium)ஐன்(Es)252.083
100வெரிமம்’(Fermium)வெர்(Fm)257.0951
101‘மெந்தலீமம்’ (Mendelivium)மெம் (Md)258.10
102நோபிளம்’(Nobelium)நோ(No)259.1009
103‘இலாரன்சம்’(Lawrencium)இலா(Lr)262.11
104‘உருத்தரம்’(Rutherfordium)உரு(Rf)261

 தனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம்,   மிகுதியாய்க் கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள் சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ் அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர் ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில் குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா?  புதியன ஏன்? என்றார். அக்கையேடு கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில் உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம் பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக் கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம் என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல் நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் =  அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள்  தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில் குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம்.  மேலும் கடோலின் என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக்  god - கடவுள் எனக் கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம் கண்டு குழம்ப வேண்டா.

இங்கே 104 தனிமங்கள்குறிக்கப்பெற்றுள்ளன. இப்பொழுது 118   தனிமங்களைக் கண்டறிந்துள்ளனர். எஞ்சியன  குறித்துப்பிறிதோர் சமயம் காணலாம்.