சனி, 14 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் காதை 14 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கசேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட அறைகூவல்!

தமிழீழ மக்களின் தேசியச் சிக்கலுக்கு அமைதியாகவும் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் குடியாட்சியத் தீர்வு காண ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான். ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையில் ஒரே கருத்துடன் இருக்கிறோம்.

இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்றாலும், பூசல் நிலையிலிருந்து இணக்க நிலைக்கு நிலைக்குச் செல்வதற்கான நிலைமாற்ற நீதி என்றாலும் அது குற்றவியல் நீதியாக இருந்தால் போதாது, அரசியல் நீதியாகவும் இருக்க வேண்டும். குற்றவியல் நீதியின் சாறம் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதிலும் குற்றத்தால் தாக்குற்றவர்களின் தயரத்தைத் தணிப்பதிலும் அடங்கியுள்ளது.

அரசியல் நீதியின் சாறம் அதே குற்றங்கள் மீண்டும் நிகழ விடாமல் தடுப்பதற்கான கட்டமைப்பியல் மாற்றங்களில் அடங்கியுள்ளது. இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு வழிகோலிய அரசியல் கட்டமைப்பில் உரிய மாற்றங்கள் செய்வதாகும். எவ்வகையான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைத் துயருற்ற மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்கள் அடைய வேண்டிய குற்றவியல் நீதிக்கான போராட்டம் பல தளங்களில் தொடர்கிறது. இனவழிப்புக் குற்றவாளிகளான சிங்கள அரசியல் – படையியல் தலைவர்களைப் பன்னட்டுக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டிலேற்றுதல், சிங்களப் பேரினவாத அரசு இழைத்த குற்றங்கள குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி, போர்ச் சிறையாளர் விடுதலை உள்ளிட்ட நீதிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.

சிங்களத்தோடு இணக்கம் காண்பதற்காக நீதிக் கோரிக்கைகளைக் கைவிடுவது அல்லது அடக்கி வாசிப்பது என்றொரு போக்கு சில தமிழர்களிடம் காணப்படுகிறது. இது அறியமையாகவோ நேர்மையின்மையாகவோதான் இருக்க வேண்டும். சிங்களர்கள் இணக்கம் வேண்டினால் தமிழர்களின் நீதிக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்.

நீதி இல்லையென்றால் இணக்கம் இல்லை [NO RECONCILLIATYION WITHOUT JUSTICE] என்பதில் தெளிவாக இருக்கிறோம். இணக்கம் அல்லது அரசியல் தீர்வு என்பது புதிய கட்டமைப்பைக் குறிக்கும். புதிய கட்டமைப்பு என்பதைத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் வாழும் தமிழீழ மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை. இது தமிழீழத் தேசத்துக்குள்ள தன்-தீர்வுரிமையின் செயலாக்கமும், அரசியல் நீதிக்கான வழிவகையுமே ஆகும்.

பன்னாட்டுச் சட்டங்களும் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களும் ஒப்புக் கொண்டுள்ள இந்தக் குடியாட்சிய வழிமுறையை சிங்களப் பேரினவாத அரசும் இந்திய வல்லரசும் ஏற்க மறுக்கின்றன. அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால் நாம் அந்தக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்று பொருளாகாது. நாம் இன்னுங்கூட உறுதியாகப் போராட வேண்டும் என்றுதான் பொருள்.

வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட 13ஆம் திருத்தச் சட்டம் போன்றவற்றைக் காட்டித் தமிழர்களின் நீதிப் போராட்டத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் குறித்துத் தமிழர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த நோக்கில் மாநாடே நடத்தினோம். தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறோம்.

புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் இந்தியா சொல்வதைக் கேட்டு நடப்பதே அறிவுடைமை என்று “புவிசார் அரசியல்” பேசும் திறமைசாலிகள் இருப்பினும், மிகப் பெரும்பாலான மக்கள் 13ஆம் திருத்தம் விரிக்கும் வலையில் விழ மறுத்துப் பொது வாக்கெடுப்பையே விரும்புகின்றனர் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விடுதலை என்றாலும் நீதி என்றாலும் இறுதியாகத் தீர்வு செய்யப் போவது தாயகமே. பொது வாக்கெடுப்புக் கோரிக்கைக்கே தாயகத் தமிழர்களும் ஆதரவாக இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை. பொதுவாக இந்திய வல்லரசின் பகடைகளாக நகரவே அவர்கள் விரும்புகின்றனர்.

இதற்கு மாறாகத் தமிழீழத் தாயகத்தில் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதிலும் சிறிலங்கா அரசவை எனப்படும் நாடாளுமன்றத்திலேயே ஒலிக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கசேந்திரகுமார் பொன்னம்பலம்.

கசேந்திரகுமார் சிங்கள ஆளும் தரப்புக்கு அறைகூவல் விட்டுள்ளார்:
“தமிழ் மக்கள் என்ன விரும்புகின்றார்கள்? அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவது ஒற்றையாட்சி அரசா? கூட்டாட்சி அரசா? உங்களுக்கு முதுகெலும்பு இருக்குமானால், தமிழ் மக்களுக்குத் தனியரசு வேண்டுமா? என்று கேட்டுப் பொதுவாக்கெடுப்பு நடத்திப் பார்க்க அறைகூவல் விடுகிறேன்.” – 2023 சூலை 21ஆம் நாள் கசேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் பேசியது.

இந்த உரை பொதுவாக்கெடுப்புக் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாய் உள்ளது என உலகெங்கும் தமிழர்கள் பாராட்டியுள்ளனர். பொதுவாக்கெடுப்புக்கான இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் குமுதினி குணரத்தினம் பாராட்டு மடல் எழுதியுள்ளார். நாமும் அன்பர் கசேந்திரகுமாரின் இந்த உரையைப் பாராட்டுகின்றோம்.

சிங்கள அரசு நெருக்கடியில் விழுந்து இராசபட்சர்கள் ஓட்டமெடுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற போது யாருக்கும் வாக்கில்லை என்று கசேந்திரகுமார் முடிவெடுத்தார். எந்த வேட்பாளரும் கிஞ்சிற்றும் தமிழ்மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இல்லை என்பதால் வேறு வழியில்லை என்று விளக்கமளித்தார். “We are left with no choice” என்ற அவரது விளக்கம் பொருத்தமாக இருந்தது. அவரது சொற்களை ஒட்டி “Tamils have no choice but to fight on” என்ற தலைப்பில் ஆபேல் மின்னிதழில் எழுதினேன்.

இப்போதைய நாடாளுமன்ற உரை மட்டுமல்ல, தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தின் கடமைப்பியல் இனவழிப்பு முயற்சிகளுக்கு எதிராக அன்பர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வரும் அறப் போராட்டங்களும் நம்பிக்கையளிக்கும் படியாக உள்ளன.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தாயகத்தில் போராடும் உங்களோடு தோழமை கொள்கிறது. தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு ஆற்றல்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வளர உங்களோடு இணைந்து முன்முயற்சி எடுக்க விழைகிறோம்.
அன்பர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் உரைக்கு இணைப்பு:
https://twitter.com/tamilkingdom1/status/1682427840539533312?s=48&t=Bw53um4m51xaVuSC3kXD1w

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 269

வெள்ளி, 13 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 14

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 238 : உழவர் போராட்டம் வெல்க! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES)

காதை 14

என் பெயர் இமா (உ)லூரம்பம் நிகாம்பி. அகவை 72. நான் மெய்த்தி இனத்தைச் சேர்ந்தவள். இந்தப் போரில் மெய்த்தி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மீரா பைபி பெண்களை ஒரு கருவியாகக் கையாண்டு வருவது வெட்கக் கேடானது. மீரா பைபி குழுவை நிறுவிய பெண்களில் ஒருத்தி என்ற முறையில் இதற்காக வெட்கப்படுகிறேன்.

2004ஆம் ஆண்டு மணிப்பூரில் அசாம் படைப் பிரிவினரின் காவலில் மனோரமா தஞ்சாம் என்ற 32 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதும் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதும் நினைவிருக்கிறதா? அந்தக் கொடுமையை எதிர்த்து ஆடை களைந்து INDIAN ARMY RAPE US என்ற பதாகையுடன் போராடிய 12 பெண்களில் நானும் ஒருத்தி.

மீரா பைபி அமைப்பு எப்போது எதற்காக நிறுவப்பெற்றது? எப்படிப் புகழ் பெற்றது? என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பைபி என்றால் சுடரேந்தி என்று பொருள். மீரா பைபி என்றால் பெண் சுடரேந்தி! அல்லது சுடரேந்திய மகளிர்! மணிப்பூரில் மனிதவுரிமை மீறல்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் இந்த இயக்கம் வகித்த பங்கினால் மணிப்பூர் அன்னையர் என்றும் புகழ்பெற்றனர்.

இப்போதைய காக்சிங் மாவட்டத்தில் 1977ஆம் ஆண்டு மீரா பைபி இயக்கம் தொடங்கப்பெற்றது. மணிப்பூர் மக்கள் அப்போது தன்-தீர்வுக்காகவும் தன்னாட்சிக்காகவும் விடுமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். அரச வன்கொடுமைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஆய்தப்படைகள் சிறப்பதிகாரச் சட்டத்துக்கு (AFSPA) எதிராகவும், போதைப் பழக்கத்துக்கு எதிராகவும் அடித்தட்டுப் பெண்களைத் திரட்டி மணிப்பூர் சமுதாயத்தில் ஒரு புத்தெழுச்சியை மீரா பைபிகள் தோற்றுவித்தார்கள்.

மணிப்பூரில் மகளிர் இயக்கம் என்பது பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதாகும். மகளிர் போர், மகளிர் எழுச்சி என்ற பொருளில் ‘நூப்பி இயான்’ என்ற மகளிர் இயக்கம் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1939ஆம் ஆண்டு மணிப்பூரில் உணவுப் பஞ்சத்துக்குக் காரணமான அரிசி ஏற்றுமதியை எதிர்த்து மகளிர் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் மீரா பைபிக்கள் திசம்பர் 12ஆம் நாளை மகளிர் போர் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

1970களில் நிசா பந்திகள் என்ற பெண்கள் இயக்கம் வளர்ந்தது. குடிவெறிக்கும் போதைப் பழக்கத்துக்கும் எதிராக இந்தப் பெண்கள் நடத்திய போராட்டத்தால் மணிப்பூரில் மதுவிலக்குச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பெண்கள் இம்பாலிலும் மணிப்பூர் எங்கும் தெருக்களில் நடக்கும் போது கையில் விளக்கேந்திச் செல்வார்கள். மதுவெறியர்களைக் கண்டிப்பார்கள். மதுபானக் கடைகளுக்குத் தீவைப்பார்கள். விளக்கேந்திகள் தீச்சுடர் ஏந்திகளாக மாறிய போது பெண் சுடரேந்திகள் என்று பெயர் பெற்றனர். இப்படித்தான் மீரா பைபிக்கள் இயக்கம் பிறந்தது.

இந்திய இராணுவம் புரிந்த வன்கொடுமைகளுக்கு எதிராக மீரா பைபிக்கள் நடத்திய அறப் போராட்டம் உலகப் புகழ் பெற்றது. இதன் உச்சமாகத்தான் 2004ஆம் ஆண்டு 12 பெண்கள் ஆடை களைந்து போராடினார்கள். மீரா பைபி என்ற முறையில்தான் இரோம் சருமிளா ஆண்டுக் கணக்கில் நீண்டு சென்ற பட்டினிப் போராட்டம் நடத்தினார்.

எப்படி இருந்த மீரா பைபி இயக்கம் இப்படி ஆகி விட்டது என்று நினைக்க நினைக்க அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. குக்கி பழங்குடிகளுக்கு எதிராக மெய்த்தி வன்முறையைத் தூண்டுவதில் மீரா பைபிக்கள் முனைப்புடன் செயல்படுவதற்குச் சான்றாகப் பல செய்திகள் வருகின்றன. 2023 சூலை 21ஆம் நாள் இம்பால் கிழக்கில் 18 வயதுக் குக்கிப் பெண்ணை ஆய்தமேந்திய நான்கு மெய்த்தி இளைஞர்கள் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்து விட்டனர். அந்தப் பெண்ணை வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்ததே மீரா பைபி இயக்கப் பெண்கள்தாம் என்பது நம்ப முடியாத கொடுமை!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 268

வியாழன், 12 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 238 : நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13 தொடர்ச்சி)

நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

(போராட்ட அமைப்பினரின் முழக்கங்கள்)

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமே!

1) உழவர்களிடம் நிலம் பறிப்பதைக் கைவிடு!

2) கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!

3) நிலம் கொடுத்த உழவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது நிலையான வேலை கொடு!

4) மூன்றாம் சுரங்கத் திட்டத்தைக் கைவிடு!

இந்திய அரசே!

1) புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்று! புதிய சுரங்கம் தோண்டுவதை நிறுத்து! இப்போதிருக்கும் சுரங்கங்களையும் படிப்படியாக மூடு!

2) பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வால் சுற்றுச் சூழல் கெட்டுப் புவி வெப்பமாதல் வளர்ந்து கேடான விளைவுகளும் பேரழிவும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்து!

3) புதுப்பிக்கவியலா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் கூடுதலாக்கு!

4) புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டையும், கரியுமிழ்வையும், புவி வெப்பமாதலையும் கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு ஒப்பந்த நெறிகளை மதித்து நட!

5) இயற்கை வளங்கள் மீதான தமிழகத்தின் இறைமையை ஒப்புக்கொள்!

6) நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தையும், அனல் மின் நிலையத்தையும் முழுமையாகவோ பகுதியாகவோ தனியார் மயமாக்கும் முயற்சியை அறவே கைவிடு! இவற்றைத் தமிழ் நாட்டுடையாமையாக்கு!

தமிழ்நாட்டரசே!

1) நெ.ப.நி.(என்எல்சி)-இன் நிலப்பறிப்புக்குத் துணை போகாதே! போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைக் கைவிடு! பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

2) நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்பைத் தடுத்துச் சட்டமியற்று!

3) நெ.ப.நி.(என்எல்சி) முதலிய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறச் சட்டமியற்று!

4) சுற்றுச் சூழலுக்கும் மக்கள் நலனுக்கும் பொருத்தமான சுரங்கக் கொள்கை வகுத்து அறிவித்து நடைமுறைப்படுத்து!

5) புதைபடிவ எரிபொருள், பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வு, புவி வெப்பமாதல் ஆகியவை குறித்து விழிப்புப் பெறு! மக்களிடம் விழிப்புண்டாக்கு!

6) நெ.ப.நி.(என்எல்சி) நிறுவனத்தைத் தமிழ் நாட்டுடமையாக்க இந்திய அரசிடம் வலியுறுத்து! தமிழ்நாடுச் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்று!

7) தமிழ்நாட்டு இயற்கை வளங்கள் மீது தமிழ்நாட்டு மக்களின் இறைமையை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்திய அரசை வலியுறுத்து!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 267

புதன், 11 அக்டோபர், 2023

குவிகம் குறும்புதினப் போட்டி

 




குவிகம் குறும்புதினப் போட்டி

முதல் பரிசு – உரூபாய் 10,000/-

இரண்டாம் பரிசு – உரூபாய் 6,000/-

மூன்றாம் பரிசு -உரூபாய் 4,000/-

குவிகம் இதழில் வெளியிடத் தகுதி பெறும் ஒவ்வோர் படைப்பிற்கும் உரூபாய் 1,000/-

தேர்வுபெறும் படைப்புகள்    ‘குவிகம் குறும்புதினம்’ மாத இதழில் வெளியாகும். இந்த இதழ்  அங்கத்தினர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் பதிவுஅஞ்சல் அல்லது தூதஞ்சல் (Registered Post/Courier) மூலம் அனுப்பப்படும்.

படைப்புகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் kurumpudhinam@gmail.com

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்கழி 15, 2054 / 31.12.2023

அன்புடன்

சுந்தரராசன்  

(+91 9442525191 -பகிரி/WhatsApp)

கிருபானந்தன்

(+91 9791069435)

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி

 




புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை

தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள்

மாணவர்களுக்கான ஓவியப்போட்டி


புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.
தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!
( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )
எவ்வகை ஓவியமாகவும் இருக்கலாம்.
ஓவியம் வரைய வேண்டிய பொருட்களை மாணவர்கள் கொண்டு வரவேண்டும்.
போட்டியில் பங்கேற்க என்ற 9486748522 புலன எண்ணில் (வாட்சு அப் ) வரும் 18/10/2023 நாளுக்குள் பெயர், வயது, கல்வி, கல்வி நிறுவன விவரம் இவற்றுடன் புலன எண் ( வாட்சுஅப் ) உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள்- கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
75 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்படும்.
பரிசு விவரம்:-
மொத்த பரிசுத்தொகை உரூபாய் 5000/-
(தேர்வு பெறும் பத்து ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவர் ஏழுபேர்  கல்லூரி மாணவர் மூன்று பேர் என ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500/- வழங்கப்படும் .)

நிகழ்விடம்:
பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம்,
115, பெருமாள் கோயில் தெரு,புதுச்சேரி -605001.

நாள் : ஐப்பசி 17, 2054 – 03/11/2023  வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் 12.00 வரை

தொடர்புக்கு
கலைமாமணி முனைவர் கோ. பாரதி
தலைவர்,
பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி
பேசி : 86676 09521.
பங்கேற்க வருக.

“செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”-சென்னையில் கருத்தரங்கு

 


உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான

செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!

சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு!

“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 /  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆனந்தி வரவேற்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் எழுதியுள்ள “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு – தமிழர் கிராமங்கள் அழிப்பு” நூல் குறித்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் க. செம்மலர் நூல் திறனாய்வுரை நிகழ்த்துகிறார்.

இதனையடுத்து, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம்), மருத்துவர் கோ. பிரேமா (மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு), மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் தோழர் மு. செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். நிறைவாக, தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் தோழர் க. மாதவி நன்றி கூறுகிறார்.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

==============================
மகளிர் ஆயம்

முகநூல் : www.fb.com/MagalirAyam
==============================






தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12 தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் 

(MANIPUR FILES)

 காதை (13)

புது தில்லி மகாவீர் வளாகத்தில் கிறித்துவ அரசுசாரா நிறுவனமாகிய ‘இவாஞ்செலிக்கல் பெலோசிப்பு ஆஃப் இந்தியா‘ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவர்களின் கருத்தரங்கக் கூடம் இடைக்காலத் தங்கல்முகாமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 9-10 குக்கிக் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

என் பெயர் (உ)ரோசலிந்து. குக்கி இனம். அகவை 58. மெய்த்திக் கூட்டம் எங்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய போது சமையலறையில் எரிவாயு உருளை வெடிக்கக் கண்டு அவர்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள். நான் சுவரேறிக் குதித்து காலை உடைத்துக் கொண்டேன். இங்கே புது தில்லியின் மகாவீர் வளாகத்தில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்திருக்கிறேன்.

தில்லியில் தஞ்சம் பெற்று வாழ்வது தாயகத்தில் வாழ்வது போன்றதல்ல. ஆனால் உயிரோடு மட்டும் இருப்பதிலேயே மகிழ்ச்சிதான். தட்பவெப்ப நிலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லைதான். நான் பாதுகாப்பாக இருப்பதுதான் முகன்மையானது.

நான் டாக்டர் தாரா மஞ்சின் ஃகாங்குசோ, அகவை 58. இம்பாலை விட்டுத் தப்பி வரும் போது என் 87 வயது தாயாரையும், மனவளர்ச்சி குன்றிய தங்கையையும் அழைத்து வர வேண்டியதாயிற்று.

அவர்கள் கூட்டம் கூட்டமாக எங்கள் குடியிருப்புக்குள் கத்திக்கொண்டே வந்தார்கள். கையில் தடிகளும் மின்சாரக் கைவிளக்குகளும் வைத்திருந்தார்கள். குக்கிகளைக் கொல்வோம்! குக்கிகளைக் கொல்வோம்! என்று கத்தினார்கள். நாங்கள் அரண்டு போனோம், செய்வதறியாது திகைத்து நின்றோம். எப்படியோ தப்பிப் பிழைத்து வந்து விட்டோம்.

நற்பேறு பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்றுதான் சொல்ல வேண்டும். அகவை முதிர்ந்த என் தாயாருக்கும், மனவளர்ச்சி குன்றிய என் தங்கைக்கும் இது பேரதிர்ச்சியான துன்பம். மாற்று உடைகள் இல்லாமல்தான் வந்தோம். தில்லியின் சூழல்கள் எங்களுக்குத் தெரியவில்லை. பணம் எடுக்கும் பொறி எங்குள்ளது, கடைக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. இருந்தாலும் நற்பேறு பெற்றவர்கள் என்பதால்தான் இன்று உயிரோடிருக்கிறோம்.

இம்பாலில் எங்கள் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தவரும் உய்ர்தப்பி தில்லிக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது. எங்கு போனாலும் யாராவது துணைக்குப் போக வேண்டும்.

எங்களைத் துரத்தி விட்டனர், மெய்யாகவே விரட்டியடித்து விட்டனர். திரும்பி வரக் கூடாது என்று தூக்கியெறிந்து விட்டனர். ஏனென்றால் நாங்கள் அயலாராம்! 60 ஆண்டுக் காலமாக மணிப்பூரில் வாழ்ந்திருக்கிறோம். எனக்கு 58 வயதாயிற்று. வாழ்நாள் எல்லாம் இம்பாலுக்குச் சொந்தமாகவே இருந்துள்ளேன். என் தாயாருக்கு 87 வயதாயிற்று. திரும்பிப் போக வேண்டும், தாயகத்தில் உயிர் விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நான் இலால்போய் மங்குதே. அகவை 30.  எங்கள் அண்டை வீட்டார், நானும் என் குடும்பமும் அவர்களோடு அறுபதாண்டுக் காலம் சேர்ந்து வசித்திருகிறோம். அவர்களே எங்களைத் தாக்க வந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ‘இவர்கள் எப்படி நம்மைத் தாக்கக் கூடும்?’ கூட்டத்தில் சிலர் சாலையின் எதிர்ப் பக்கத்திலிருந்து வந்திருந்தனர். நாங்கள் அடிக்கடி பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரர்களும் இருந்தனர். ‘அட கடவுளே! இவர்கள் எப்படி நம்மைக் கொல்ல வரக் கூடும்?’

எதிர்காலம் பற்றிய பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. தாயக மாநிலத்துக்குத் திரும்ப முடியுமா? என்று தெரியவில்லை. ஏதோ இயல்புநிலை போன்ற சூழலில் வாழத்தான் விரும்புகிறோம்.

நான் சியார்சு தங்குகோலா. அகவை 38. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்நாட்டுப் போரில் தப்பி இந்த ஏதிலி முகாமுக்கு வந்துள்ளேன். ஆமாம், அது உள்நாட்டுப் போர்தான். ஒரு சமுதாயம் மற்றச் சமுதாயத்தையே பகையாகப் பார்த்தது. வாய்ப்புக் கிடைத்ததும் கொலை செய்யவும், வீட்டை கொளுத்தவும் தயங்கவில்லை. யாருக்கும் பாதுகாப்பில்லை. நீங்கள் குக்கி என்றால் மெய்த்திகள் உங்களுக்குத் தீமை செய்யாமல் விட மாட்டார்கள்.

முதல் தாக்குதல் அலையிலேயே பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தப்பியோடிப் பிழைத்தனர். இளைஞர் பலரும் வேலை இழந்து விட்டனர்.

நான் (இ)லல்லியன் வைப்பே. அகவை 28. போன மாதம்தான் இம்பாலில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்து தில்லிக்கு உயிர்தப்பி ஓடி வந்து விட்டதால் வேலை போய் விட்டது. இப்போது தில்லியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இம்பாலில் எனக்குக் கிடைத்த வேலை பொதுக் கணக்காயர் அலுவலகத்தில் தரவுப் பதிவு செய்யும் பணியாகும். இது மைய அரசுப் பணி, ஒரு திங்கள் மட்டுமே இந்த வேலையில் இருந்தேன். எதிர்பாராமல் வெடித்த வன்முறையால் வேலையும் இடமும் இழந்து வெளியேறி வந்து விட்டேன். நாட்டின் தலைநகரில் அதே போன்ற வேலைக்காக அலைகிறேன்.

நான் மாங்கு நிகைத்தேஎவாஞ்செலிகல் பெலோசுப்பு ஆஃப் இந்தியா ஒழுங்கு செய்துள்ள  துயர்தணிப்பு முகாமில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். காலையும் பகலும் இரவும் அவர்களே உணவு சமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் இங்கிருக்கும் காலத்தில் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியாவது கிடைக்க வேண்டும், அதே போல் தமக்குள்ள திறன்களுக்குப் பொருத்தமான வேலைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.

மேலும், இவர்களில் பெரும்பாலாரின் வீடுகளும் மற்ற உடைமைகளும் எரிக்கப்பட்டு விட்டன. இவர்கள் தில்லியிலேயே நீடித்து வாழ்வதற்கு வேலை வாங்கித்தர இயன்றதனைத்தும் செய்கிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 267