சனி, 22 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 78: இலெனினைப் படிப்போம்!; பயில்வோம்!

 
(தோழர்தியாகுஎழுதுகிறார் 77 தொடர்ச்சி)

இலெனினைப் படிப்போம்!

இலெனினைப் பயில்வோம்!

இலெனின் தேசத் தன்-தீர்வுரிமை குறித்து என்ன எழுதினார், எப்படி விளக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பார்ப்பது கதிரவனுக்காகவே  அன்று. அக்கறை கொண்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

பாட்டாளி வகுப்பின் நலன் பற்றிப் பேசிக் கொண்டே தேசிய இனச் சிக்கலில் இந்திய ஆளும் வகுப்பின் ஒடுக்குமுறைக் கொள்கைக்கு வால் பிடிக்கும் பாரத பக்த இடதுசாரிகள் எப்படியெல்லாம் இலெனினைத் திரிக்கின்றார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இடதுசாரிகள் இலெனினுக்குச் சிலை வைக்கிறார்கள் என்று செய்தி வந்த போது சிலையின் பீடத்தில் என்ன எழுதி வைக்கப்போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.

“தேசிய ஒடுக்குமுறை நிலவும் சூழலில் தேசங்களின் தன்-தீர்வுரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் குமுகியர்கள் ஆவது கிடக்கட்டும், குடியாட்சியரே ஆக முடியாது.”

[அதாவது ஒடுக்குண்ட தேசத்தின் தன்-தீர்வுரிமையை ஏற்க மறுப்பவர்கள் குமுகியர்கள் ஆக இருக்க முடியாது. அவ்வளவு ஏன், சனநாயகவாதிகளாகக் கூட இருக்க முடியாது]

இந்திய வல்லரசியத்தின் தேசிய இனக் கொள்கைக்கும் இந்த இடதுசாரிகள் எனப்படுவோரின் தேசிய இனக் கொள்கைக்கும் அடிப்படையான வேறுபாடில்லை என்பதைப் புரிய வைத்தாக வேண்டும். இந்தத் திரிபியர்கள் இலெனினை எப்படியெல்லாம் சீரழித்துத் தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எனக்குள்ள பட்டறிவைச் சொல்ல வேண்டும்.

இரண்டாவதாக இனவாத நிலைப்பாடுகள் எடுத்துக் கொண்டு மார்க்குசியம் சரியில்லை, இலெனினுக்குத் தெளிவில்லை என்று கயிறு திரிப்பவர்களையும் தோலுரித்தாக வேண்டும்.

மூன்றாவதாக இலெனினைப் பற்றி எதுவும் தெரியாமலே இலெனின் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று முழங்கினால் வாய்வீச்சுப் புரட்சிக்குத் தகுதி பெற்று விடலாம் என்று எண்ணிக் கொள்ளும் துணிச்சல்காரப்  பொய்யர்களிடமிருந்தும் இலெனினைக் காத்தாக வேண்டும்.

எனவேதான்

இலெனினைப் படித்தால் போதாது, பயிலவும் வேண்டும்!

கற்க கசடற! இலெனினைக் கற்க கசடற!

இலெனின் எழுதிய ஒரு நூல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நூலினைப் படிப்பதோடு பயிலவும் வேண்டும் என்பதற்காகவே! இன்னும் பேசுவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 49

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 77 : வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!

 

     21 April 2023      அகரமுதல(தோழர்தியாகுஎழுதுகிறார் 76 தொடர்ச்சி)

வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!

இனிய அன்பர்களே!

நெருக்கடிநிலைக் காலத்தில் திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா) கைதியாகத் தோழர் இடும்பையனைச் சந்தித்தோம். சிறந்த பாடகர். கட்சி மேடைகளில் பாடிப் புகழ் பெற்றவர். தோழர் ஏசிகே அவர்களுடன் பணியாற்றியவர் என்ற முறையிலும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்தோம். இடும்பையன் பாடிய படல்களில் முகன்மையான ஒன்று வெண்மணி பற்றியது. அவர் பாடக் கேட்டாலே கண்ணீர் வரக் கூடிய உணர்ச்சிப் பாடல். அவரும் பாடிக் கொண்டே அழுது விடுவார். மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்போம். இப்போது மயிலாடுதுறையில் இருக்கும் இடும்பையனை அழைத்து மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டேன். பாவலர் வரதராசன் எழுதிய அந்தப் பாடல் இதோ: [பூமாலையில் ஓர் மல்லிகை என்ற மெட்டில் பாடலாம்.]

தீயவர் தானென்று

நாம் நினைத்தோம்

அவர்  தீயிடுவாரென்று

யார் நினைத்தார்?

லாரியிலே வந்து சேரியிலே

சருவநாசம் செய்வாரென்று

யார் நினைத்தார்?

சருவநாசம் செய்வாரென்று

யார் நினைத்தார்?

(தீயவர் தானென்று,,,)

வெண்மணிக் கோரத்தைப்

போலிந்த நாடு

வன்முறைச் செய்தியை

காண்பதும் ஏது?

பெண்மணிகள் தங்கள்

பிள்ளைகளோடு

பெண்மணிகள் தங்கள்

பிள்ளைகளோடு

வெந்து மடிந்ததும்

வேறெங்கும் ஏது?

(தீயவர் தானென்று,,,)

அடியாட்கள் கைகளிலே

ஆயுதம் தாங்கி வர

திர்ச்சியுற்ற வாலிபரோ

வயற்பரப்பில் பதுங்கிருக்க

சேரிவாழ் பெண்களெல்லாம்

ஓடியே ஒளிந்திருந்த

சிறுவீட்டைப் பூட்டிவிட்டு

தீயோர் நெருப்பு வைக்க

பற்றியது கூரை

படர்ந்தது தீப்பிழம்பு

கத்தினார் கதறிநின்றார் – கதியேது

கொடியோர்க்குச் செவியேது?

பெண்ணுக்குப் பேய்கூட

ங்குமென்பரே – பேயினும்

தீயவர் தீயிலிட்டாரே

வன்முறை கூடாது

என்றுரைப்போரே என்றுரைப்போரே

வெண்மணிக் காரியம்

தான் புரிந்தாரே

     (தீயவர் தானென்று,,,)

+++

ஊமைச் சனங்களை ஊருள் எரிக்கையில் …
ஆமை நடப்பதைப்
      
போல நடந்தால் நீ
       
ஆணவம் கொல்வாயோஅடே
        
ஆண் பிள்ளை ஆவாயோ?

தஞ்சை

ஊமைச் சனங்களை
         
ஊருள் எரிக்கையில்
         
ஒடுங்கிக் கிடந்தாயே! பின்னர்
          
ஊர்வலம் போனாயே!

ஒடுக்கும் விலங்கினை
         
ஒடுக்க நினைப்பவர்
          
ஒப்பாரி வைப்பாரோவெறும்
           
ஊர்வலம் போவாரோ?
 
உம்மை

ஒடுக்கும் விலங்கினை
          
ஊர்வலம் ஒப்பாரி
          
ஓங்கிப் புடைத்திடுமோஅடே
          
உதைத்துத் துடைத்திடுமோ?

கண்ணின் மணிகளைக்
         
கத்தியால் குத்தினால்
         
கைகட்டி நிற்பாயோஅவர்
         
காலில் விழுவாரோதஞ்சை

வெண்மணி மக்களை
         
வெட்டிப் பொசுக்கையில்
        
வேடிக்கை பார்த்தாயே! அடே
         
வீணே கிடந்தாயே!

எட்டி உதைக்கிற
          
ஈனரின் கால்களை
          
எடுத்து வணங்குவையோஅடே
          
இன்முத்தம் ஈகுவையோ?

மட்டி மடையர்கள்
          
மக்களைக் கொல்கையில்
          
மங்கிக் குமைந்தனையே! மனம்
         
தொங்கித் துவண்ட னையே!

அரைப்படி சேர்த்து
          
ஆறாய்க் கொடுமென
          
முறைப்படிக் கேட்டனையே ! அடே
          
முறையிட்டு நின்றனையே! அருள்

முறையிட்ட உம்மையே
          
மூண்டசெந் தீயினில்
           
முற்றும் எரித்தாரே! தோழா
            
மோதிப் புதைத்தாரே!

தங்கம் விளைக்கிற
          
தஞ்சை மறவனே!
         
பொங்கெனப்  போவாயோவெறும்
          
பொக்கென நிற்பாயோ?  புயம்

பொங்கித் துடித்திட
          
புலிபோல் பாய்கிற
           
போர்க்குணம் கொள்ளாயோபுதர்
          
வேருடன் கிள்ளாயோ?

முட்டுக்கு மேலொரு
         
முட்டுக் கொடுத்தாலும்
          
கட்டிடம்  நின்றிடுமோஅவர்
          
காலம் நிலைத்திடுமோ?

வெட்டுக்கு மேலொரு
          
வெட்டு கொடுத்தேனும்
          
தட்டி நொறுக்காயோமுரசு
          
கொட்டி முழக்காயோ?

பாலுக்கும் காவலன்
          
பூனைக்கும் தோழனாய்
          
பாவனை செய்வோரைத் – தமிழ்ப்
          
பாமரர் நம்பிடவோ உள்ளச்

சோலையில் நஞ்சினை
           
ஊட்டிடும் நாய்களை
           
ஓட்டிப் பொசுக்காயோஅவர்
           
ஊட்டி நசுக்காயோ?

துள்ளி வருகிற
          
வேலினை மார்பினில்
          
தூள்செய்யும் நாயகனே! மறக்
          
கால்கொண்ட  தூயவனே! தஞ்சைக்

குள்ள நரிகளைக்
           
குத்திக் கிழிக்கிற
           
கோபத்தில் முன்னேறு! அடே
            
கொன்றபின் நின்றாடு!
                                                — புலவர் ஆதி

 [வெண்மணி குறித்துப் புலவர் ஆதி எழுதிப் புதிய தலைமுறையில் வெளிவந்த இந்தக் கவிதை என்னுள் கிளறிய உணர்ச்சியை என்னென்பேன்? அடுத்த சில மாதங்களில் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அவரைப் பார்த்து மகிழ்ந்து ஊக்கம் கொண்டேன். 1960களின் இறுதியில்  வசந்தத்தின் இடிமுழக்கமாய் ஆர்த்தெழுந்த  நக்சல்பாரி இயக்கத்தின் மா கவிஞன் அவர். இயற்பெயர் இராசியண்ணன். நெல்லித்துறை நடவடிக்கைக்குப் பின் கைது செய்யப்பட்டு சொல்லொணா அடக்குமுறைகளைச் சந்தித்தவர். சத்தியமங்கலம் காடுகளுக்குள்  காவல் துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமையான சித்திரவதைகளை  அனுபவித்தவர். கொள்கை மாறா குணக்குன்று.  புதிய தலைமுறை ஆசிரியர் குழுவில் ஒருவர்.  கலை இலக்கிய பெருமன்றத்தில் தோழர் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு இலக்கியப் பேரவையை நிறுவியவர். தமிழ் இலக்கியங்களை மார்க்குசிய நோக்கில் ஆய்ந்து பல நூல்கள்  எழுதியவர்.திணைக் கோட்பாடுகளை மார்க்குசிய முறையில் திறனாய்வு செய்து தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர்.] 

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 49

வியாழன், 20 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 76 : மொழியும் மொழிவழித் தேசியமும்தோழர் தியாகு எழுதுகிறார் 75 தொடர்ச்சி

வரலாற்றில் மொழியும்

மொழிவழித் தேசியமும்

[வருக்கம் என்ற சொல்லுக்குப் பழகியவர்கள் கீழே நான் வகுப்பு என்று சொல்வதை வருக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டுகிறேன். வருக்கப் போராட்டம் என்பதையே வகுப்புப் போராட்டம் என்கிறேன்.]

“தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை” என்ற தலைப்பில் இலெனின் எழுதிய நூலிலிருந்து ஒரு நீண்ட மேற்கோளை அன்பர் கதிரவன் திரைப்பிடியாக எடுத்து அனுப்பியிருந்தார். இந்த மேற்கோளின் கருத்தை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நூல் எப்பொருள் குறித்தானது? குறிப்பிட்ட மேற்கோளின் இடம்பொருள்ஏவல் என்ன? அதன் இன்றைய பயன்பாடு என்ன? என்று எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிய வேண்டும்.

 மார்க்குசு அல்லது இலெனின் கூறிய எதையும் வேதவாக்காக நாம் கருதவில்லை. அறிவியல் நோக்கில் ஒவ்வொன்றயும் பகுத்தாயவே விரும்புகிறோம். அதே போது இங்கொரு சொல் அங்கொரு வாக்கியம் உருவியெடுத்து அவர்களின் சிந்தனையைத் திரிக்கும் திரிபியத்தை மறுதலிக்கிறோம்.

தேசிய இனச் சிக்கலைப் புரிந்து கொள்ளவும் தீர்வு காணவும் நவம்பர் புரட்சியும் புரட்சித் தலைவர் இலெனினும் செய்துள்ள பங்களிப்பை மாற்றாரும் மறுக்கவியலாது. இந்தியச் சூழலில் தேசிய இன ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதில் ஆளும் வகுப்புகளோடு போட்டியிடும் மா.பொ.க.(சிபிஎம்) போன்ற கட்சித் தலைமைகள் தேசிய இனச் சிக்கலில் இலெனின் கூறிய கருத்துகளைக் கண்டு அச்சப்படுகின்றார்கள். அவர்கள் கெட்டிக்காரத்தனமாக இலெனினைத் திரிக்கிறார்கள்.

 “கட்சி அலுவலகத்தில் இலெனின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு இலெனின் கொள்கையைத் தூக்கிலிடுகிறார்கள்” என்று இந்தத் திரிபியர்களைச் சாடிக் கொண்டிருந்தவர்தான் தோழர் பெ. மணியரசன். அவரே ‘பொதுவுடைமை’யைக் கைகழுவி விட்டு இனவாதத்துக்கு மாறிய பின் மார்க்குசியத்தையும் இலெனினையும் அவதூறு செய்யக் கிளம்பி விட்டார். ஆம். ஆய்வு என்ற பெயரால் அவர் செய்வது அவதூறுதான்.

சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்குசியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையாம்! இது பெ.மணியரசன்  அவர்களின் தீர்க்கமான திறனாய்வு! அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது கார்ல் மார்க்குசு அதை ஆதரித்தார் என்று சொல்லிச் செல்வதற்கு மேல் இந்தத் திறனாய்வுக்கு வேறு எந்தச் சான்றும் அவரிடமிருந்து நமக்குக் கிடைக்கவில்லை.   

 சுருங்கச் சொல்லின், சமூக வளர்ச்சி வரலாற்றில் தேசியத்தின் பங்கு என்ன? இலெனின் இந்தக் கேள்விக்குத் தரும் விடையும் விளக்கமும் என்னவென்று பார்ப்போம். காரல் மார்க்குசு என்ற தலைப்பிலான கட்டுரையில் வகுப்புப் போராட்டம் என்ற துணைத் தலைப்பில் இலெனின்  எழுதுகிறார்:

 “குறிப்பிட்ட எச்சமூகத்திலும், அதன் உறுப்பினர்களில் சிலரின் நாட்டங்கள் மற்றவர்களின் நாட்டங்களோடு முரண்படுவதும், சமூக வாழ்க்கை முரண்பாடுகள் நிறைந்ததாக இருப்பதும், தேசங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும், அதே போல் தேசங்களுக்குள்ளேயும் சமூகங்களுக்குள்ளேயும் ஒரு போராட்டம் நடப்பதை வரலாறு வெளிப்படுத்துவதும் …

 அடுத்து, தேசங்களுக்கிடையிலும் தேசங்களுக்குள்ளேயும் … வெளிப்படுகிற போராட்டத்தில் மறைந்துள்ள வகுப்பு  நலன்களின் மோதலை மார்க்சியம் கண்டறிந்து விளக்குவதை இலெனின் எடுத்துக்காட்டுகிறார். ஆக, வகுப்புப் போராட்டத்தை ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் வகுப்புகளிடையில் நடக்கும் போராட்டமாக மட்டுமல்லாமல், தேசங்களுக்கிடையே நடக்கும் போராட்டமாகவும் இலெனின் விளக்கினார்; அதாவது வகுப்புப் போராட்டம் என்பதை நேரடியாக வகுப்புகளுக்கு இடையில் நடைபெறும் போராட்டமாக மட்டும் அவர் கருதவில்லை என்பதை அறிகிறோம்.

 இந்த அடிப்படைப் புரிதலிலிருந்து இலெனின் தேசிய இனச் சிக்கலை எவ்வாறு அணுகினார் என்று பார்ப்போம். தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை என்பதன் பொருள் என்ன என்ற வினாவிற்கு அவர் விடையளிக்கிறார்:

“இதற்கான விடையைச் சட்டத்தின் அனைத்து வகைப் “பொதுவான கருத்தாக்கங்களிலிருந்தும்” வரப்பெறும் சட்ட இலக்கணங்களில் தேடுவதா? அல்லது தேசிய இயக்கங்கள் பற்றிய வரலாற்றுப் பொருளியல் ஆய்வில் தேடுவதா?”

 உலகெங்கும் தேசிய இயக்கங்களின் பட்டறிவை (அனுபவத்தை) இலெனின் இவ்வாறு தொகுத்துரைக்கிறார்:

 “உலகெங்கிலும் பிரபுத்துவத்தின் மீது முதலியம் (முதலாளித்துவம்) இறுதி வெற்றி பெறும் காலம் தேசிய இயக்கங்களோடு தொடர்புடையதாக இருந்துள்ளது. சரக்காக்கத்தின் (சரக்குற்பத்தியின்) முழுமையான வெற்றிக்கு முதலாளர் வகுப்பு  உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றியாக வேண்டும். ஒற்றை மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட, அரசியல் வகையில் ஒன்றுபட்ட ஆட்சிப்புலங்கள் வேண்டும், அம்மொழியின் வளர்ச்சிக்கும் இலக்கிய வார்ப்புக்குமான தடைகளனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும். இதில்தான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் உள்ளது. மொழிதான் மானிட உறவாடலின் மிக முதன்மையான கருவி. மொழியின் ஓர்மையும் தங்குதடையற்ற வளர்ச்சியுமே புதுமக்கால முதலியத்துக்கு ஈடான அளவில் மெய்யாகவே தடையற்ற, விரிவான வணிகத்துக்கும், மக்கள்தொகை அதன் பல்வேறு வகுப்புகளிலும் இடையிடர் இன்றியும்  பரந்தகன்ற முறையிலும் குழு சேருவதற்கும், கடைசியாகச், சந்தைக்கும் ஒவ்வொரு பெரிய சிறிய உடைமையர்க்கும் இடையிலும், விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் இடையிலும் நெருங்கிய தொடர்பு நிறுவப்படுவதற்குமான இன்றியமையாத் தேவைகளில் மிக முக்கியமானவை.”<6>

 இலெனின்   சொல்வதை எளிமைப்படுத்திச் சொன்னால், (1) தேசிய இயக்கங்கள் கிழாரியம் (பிரபுத்துவம்) வீழ்ந்து முதலியம் (முதலாளித்துவம்) வளர்ச்சி பெறும்  காலத்துக்குரியவை; (2) சரக்காக்கம் (சரக்கு உற்பத்தி) முழு வெற்றி பெற மொழிவழித் தேசம் தேவைப்படுவதுதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் ஆகிறது; (3) மொழிதான் மனித உறவின் முதன்மைக் கருவி; (4) மொழி வளர்ச்சி இல்லாமல் முதலிய (முதாலாளிய) வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவில் வணிக வளர்ச்சி ஏற்பட இயலாது; (5) சமூகம் வகுப்புகளாகப் பிரிவதற்கும் விரிவாக உறுதிப்படுவதற்கும் மொழியின் ஓர்மையும் வளர்ச்சியும் இன்றியமையாத் தேவை; (6) சந்தைக்கும் சரக்குடையவர்க்கும் இடையே, சரக்கு விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட மொழி வளர்ச்சி தேவை. (இந்த இடத்தில் நான் தர விரும்பும் குறிப்பு: சரக்கு என்பதில் உழைப்புத் திறனும் அடங்கும்; சரக்கு விற்பவர் என்பதில் தொழிலாளியும் அடங்குவார்.)

 மொழிதான் மனித உறவின் முதன்மைக் கருவி! மொழி வளர்ச்சி இல்லாமல் வகுப்புச்  சமூக வளர்ச்சி இல்லை! மொழியும் மொழிவழித் தேசியமும் சமூக வளர்ச்சி வரலாற்றில் வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்குசியம் உரியவாறு கணக்கில் கொண்டது என்பதற்கு இதுவே தக்க சான்று என்கிறேன். “உரியவாறு கணக்கில் கொள்ளுதல்” என்பதற்கு மணியரசன் வேறு ஏதோ இலக்கணம் வைத்திருப்பார் போலும்! அந்த இலக்கணத்தை உடைத்துச் சொன்னால் உதவியாக இருக்கும்.

 மொழி, மொழிவழித் தேசியத்தின் பங்குப் பணியை காரல் மார்க்குசு உரியவாறு கணக்கில் கொண்டாரா? கொண்டார் என்பதற்கான சான்றுகளை லெனினே எடுத்துக்காட்டுகிறார். மார்க்குசு 1866 சூன் 20ஆம் நாள் எங்கெல்சுக்கு எழுதிய மடலில் சொல்கிறார்:

“நேற்று பன்னாட்டுப் பேரவையில் (அகிலம்) இப்போதைய போர் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது…. ‘இளைய பிரான்சு’ பேராளர்கள் (தொழிலாளர் அல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும், தேசங்களும் கூடக் ‘காலாவதியாகி விட்ட காழ்ப்புகளே’ என்று அறிவித்தார்கள்…. தேசிய இனங்களை இல்லாமற்செய்து விட்ட நம் நண்பர் லாஃபார்க்கும் மற்றவர்களும் நம்மிடம் ‘பிரெஞ்சு’ பேசினார்கள், அதாவது அவையில் பத்திலொரு பங்கினர்க்குப் புரியாத மொழியில் பேசினார்கள் என்று சொல்லி நான் என் உரையைத் தொடங்கிய போது ஆங்கிலேயர்கள் சிரித்து விட்டார்கள்….” 

 “அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது காரல் மார்க்குசு அதை ஆதரித்தார்” என்று மணியரசன் சொல்கிறார். தேசிய விடுதலைப் போராட்டத்துக்குரிய வரலாற்றுப் பங்கினை காரல் மார்க்குசு உரியவாறு அறிந்தேற்கவில்லை என்பதற்கு இதுதான் சான்றா?

 எங்கெல்சுக்கு 1867 நவம்பர் 2ஆம் நாள் எழுதிய மடலில் மார்க்குசு சொல்கிறார்:

 “… இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணி வந்தேன். இப்போது அது தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன், பிரிந்த பிறகு கூட்டாட்சி வரலாம் என்றாலும்.”

அயர்லாந்தின் விடுதலை என்பதையும், அயர்லாந்து இங்கிலாந்திலிருந்து பிரிந்து தனிநாடாவதையும் மணியரசன் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்கிறார் என்று தெரிகிறது. அயர்லாந்தின் விடுதலையை ஆதரிப்பதா வேண்டாமா என்பதன்று, அந்த விடுதலையின் வடிவம் அல்லது வழி என்ன என்பதே மார்க்குசுக்கிருந்த கவலை. விடுதலையின் வடிவம் அல்லது வழி  குறித்து அவரது கருத்து மாறியதே தவிர விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது குறித்தன்று. இங்கிலாந்தின் சமூக விடுதலை வழியாக அயர்லாந்தின் தேசிய விடுதலையா? அயர்லாந்தின் தேசிய விடுதலை வழியாக இங்கிலாந்தின் சமூக விடுதலையா? என்பதே அவர் முன்னிருந்த வினா. இவ்விரு வழிகளில் முன்னதற்கே  வாய்ப்பிருப்பதாக முதலில் நினைத்தார். பிறகு அதிலிருந்து மாறிப் பின்னதைப் பரிந்துரைத்தார். தனியாகப் பிரிந்த பின் கூட்டாட்சி வரலாம் என்பதன் பொருள் என்ன? தனியாகப் பிரிவதுதான் விடுதலை என்றால் கூட்டாட்சியில் இணைவது விடுதலையை இழப்பது என்றாகி விடாதா? விடுதலையை இழப்பதற்கா மார்க்ஸ் வழிசொல்வார்?

 தேசிய இனச் சிக்கலில் மார்க்குசியப் பார்வை குறித்து மணியரசன் செய்துள்ள திறனாய்வின் உச்சம் இஃதென்பேன்:

 “ஒரு தேசிய இனம் தனக்கு முரண்பட்ட பிற தேசிய இனங்களிடமிருந்து பிரிந்து போகும் உரிமையான தன்னுரிமையை ஒரு சனநாயக உரிமையாக மட்டும் இலெனின்  வரையறுக்கிறார்.”

 குடியாட்சிய (சனநாயக) உரிமையாக வரையறுத்தது போதாதென்றால் வேறென்ன உரிமையாக வரையறுக்க வேண்டும் என்று சொல்லுங்கள். குமுகிய (சோசலிச) உரிமையாகவா? பொதுமை (கம்ம்யூனிச) உரிமையாகவா? விரிந்த பொருளில் ‘சனநாயகம்’ என்பதில் தேசியமும் அடங்கும். தேசிய ஒடுக்குமுறையுடன் கூடிய குடியாட்சியம் (சனநாயகம்) குடியாட்சியமே ஆகாது. குடியாட்சிய (சனநாயக) உரிமை என்பதைக் குறுகிய பொருளில் (சட்டப்படியான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என்பது போல்) மணியரசன்  புரிந்து கொள்கிறார் போலும். இலெனின் அப்படிப் புரிந்து கொள்ளவில்லை. மார்க்குசிய நோக்கில் அப்படிப் புரிந்து கொள்ளவும் கூடாது. தேசியத் தன்-தீர்வுரிமைக்கும் குடியாட்சியத்துக்கும் குமுகியத்துக்குமான உறவு குறித்து இலெனின்  சொல்கிறார்.

 “குமுகியம் (சோசலிசம்) வெற்றி பெறும் போது முழு குடியாட்சியத்தை நிறுவியாக வேண்டும்; ஆதலால் தேசிய இனங்களின் முழு நிகர்மையை (சமத்துவத்தை) அறிமுகம் செய்வதோடு, ஒடுக்குண்ட தேசங்களின் தன்-தீர்வுரிமையை, அதாவது தடையின்றி அரசியல்வகையில் பிரிந்து செல்லும் உரிமையை மெய்ப்படச் செய்யவும் வேண்டும்.”

 ஆக, இலெனின்   பார்வையில் “தேசியத் தன்னுரிமை” என்பது “ஒரு சனநாயக உரிமை மட்டும்” என்பதன்று; அது குமுகியப் புரட்சியின்  (சோசலிசப் புரட்சியின்) செறிவான முழக்கங்களில் ஒன்று. போராட்ட முழக்கம் மட்டுமன்று, செயல்முழக்கமும் ஆகும்.

 ”சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்குசியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று மணியரசன் சொல்வது திறனாய்வு அன்று, அடிப்படை ஏதுமற்ற அவதூறே ஆகும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 48