7

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பரப்புரைகள்!

ராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் நிறைவுப் பகுதி இது.

  கடந்த 2005 ஆண்டளவில் இந்தியன் எக்சுபிரசு – தினமணிக் குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறக்குறைய 70 விழுக்காடு பேரும், குமுதம் கிழமை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு பேரும் என் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் அரசு முன்பு எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டது. நீதிமன்றப் போராட்டங்கள் எல்லாமும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. என் விடுதலைக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டு வந்த இதழ்கள் எல்லாம் தன் போக்கை மாற்றிக் கொண்டன.
  அண்ணல் காந்தியடிகளின் வழக்கில் வாழ்நாள் தண்டனைக் கைதியாக இருந்தவர் 16 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். அன்னை இந்திரா காந்தியின் கொலை வழக்கில் வாழ்நாள் கைதியாக இருந்தவர் 18 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். ஆனால் எனக்கு?… இந்தத் தடையும் முட்டுக்கட்டையும் யாரால் வந்ததென்றால் எங்களாலேயேதான் வந்தது என்பதை ஒப்புக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ‘எழுவர் விடுதலை’ என்று பரப்புரை, எழுவர் விடுதலைக்கான ஆதரவு, எழுவர் விடுதலைக்கான நிதி திரட்டல் என்று செய்து கொண்டே அதில் ஒருவரைப்பற்றி மட்டும் தவறாகப் பேசினால், ஒளிபரப்பினால் என்ன பொருள்? அதற்குப் பெயர் எழுவர் விடுதலையா என்கிற கேள்வியை உங்கள் முன்பாகவே வைக்கின்றேன். உணர்ச்சிவயப்படாமல் நடுநிலையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இந்த நிலையில், பிரியங்கா அவர்களுடன் திடீர்ச் சந்திப்பு நடக்கிறது. அந்தச் சந்திப்புக் கூட நான் ஏற்படுத்திக் கொண்டதில்லை. அவராக வந்தார். யாரெனவே தெரியாமல் நான் அந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கெதிராக இப்படி எல்லாம் பரப்புரை செய்யாமல் விட்டிருந்தால் ஒருவேளை என் விடுதலை 2008-க்கு முன்பே கிடைக்க ஏதுவாகி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இன்று மற்ற ஆறு பேரின் விடுதலைக்குமாக நான் உண்மையான குரலோடு பரப்புரை செய்திருப்பேன். என் ஒருத்திக்கு எதிராக உருவாக்கப்படும் பரப்புரைகள் மற்ற அறுவருக்கும் எதிராக வந்து நிற்கின்றன என்கிற உண்மையை ஒரு தரப்பு உணர மறுக்கிறது. இந்தப் போக்கு, ஒற்றுமையின்மை எல்லாம் எதிரிகளுக்குத்தான் வாய்ப்பாக முடியும் என்பதையும் அறிய மறுக்கிறார்கள். அதனால்தான், என் விரல்களைக் கொண்டு என் கண்களைக் குத்திக் கொள்ள வைத்து விட்டார்கள் எனச் சொல்கிறேன்.
  இன்னொரு செய்தி. 2011-இல் மூவரின் கருணை மனுக்கள‌ைக் குடியரசுத்தலைவர் தள்ளுபடி செய்தார். உடனே அந்த மூவருக்கான தூக்குத் தண்டனை நாள் குறிக்கப்பட்டது.  தமிழக மக்கள் கொந்தளித்தார்கள். ஆங்காங்கே போராட்டம் வெடித்தது. சட்டக் கல்லூரி, அறிவியல் – கலைக் கல்லூரி மாணவர்கள் எல்லாரும் போராடினார்கள். இன்று நாங்கள் குலத் தெய்வமாக வரிந்து கொண்டிருக்கும் மகள் செங்கொடி தீக்குளித்தாள். மகள் செங்கொடியை இழந்த வேதனையில் இருந்தே மீள முடியாமல் இருந்த எங்களுக்கு இப்படியான தம்பிகளின் உயிர் ஈக (தியாக) முனைப்பு உலுக்கி எடுத்தது.
  இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் பச்சையான ஓர் இரண்டகமும் (துரோகமும்) நடந்தது. என் கணவரையும் சாந்தனையும் வாழ்வின் கடைசிக் காலத்துக்கும் மட்டுமின்றி, இறந்த பிறகும் பழிச்சொல்லுக்கு ஆளாக்கும் இரண்டகம் அது. அந்தப் பரபரப்புச் சூழ்நிலையில் குடியரசுத்தலைவருக்கு உடனடியாக மீண்டும் ஒரு பரிவு விண்ணப்பம் அனுப்ப வேண்டும் என்று வேலை செய்தார்கள். அப்படியான விண்ணப்பம் என் கணவர் இருக்கும் சிறைக்குள் சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தன. கடைசி நாள் அன்று மாலையில்தான், “நாளைக் காலையில் இந்த விண்ணப்பம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாக வேண்டும். உடனடியாகக் கையொப்பம் இடுங்கள்” என்று கூறி சாந்தனிடமும் என் கணவரிடமும் வழங்கப்பட்டிருந்தது. படித்துப் பார்க்கக் கூட நேரம் கொடுக்கக்கூடாது எனத் திட்டமிட்டே தெளிவாகக் காய் நகர்த்தினார்கள். இவ்வளவு மும்முரப்படுத்துவது ஏன் எனச் சிந்தித்த என் கணவருக்கு ஏதோ ஐயம் வந்திருக்கிறது. படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட முடியாது, முழுதும் படித்துவிட்டு இடுகிறேன் என்று கூறி 25 பக்கங்கள் அடங்கிய அந்த விண்ணப்பத்தை வாங்கி வந்து இரவெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தில், என் கணவரும் சாந்தனும் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், தாங்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள் என்றும், ஈழப்போராட்டம் ஒரு வன்கொடுமை (பயங்கரவாத) போராட்டம் என்றும் இன்னும் என்னென்னவோ எழுதப்பட்டிருக்கின்றன. என் கணவருக்குப் படிக்கப் படிக்க ஒரே திகைப்பு.
  நம்மவர்கள்தாமே கொடுக்கிறார்கள் என நம்பிப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டிருந்தால் எவ்வளவு பெரிய இழுக்காக மாறியிருக்கும்! இந்த இனம் அந்த இருவரையும் காரித் துப்பியிருக்குமே! நினைக்க நினைக்க நெஞ்சு பதறியிருக்கிறது. இரவெல்லாம் படித்துப் பார்த்து, எங்கெல்லாம் இரண்டகச் சொற்கள் இருந்தனவோ, அவற்றையெல்லாம் அழித்து மீண்டும் அங்கேயெல்லாம் கையால் எழுதி, திருத்தப்பட்ட படிவமாக விடிகாலையில் கொடுத்திருக்கிறார். இந்தத் தகவலை சாந்தனிடமும் தெரிவித்தார்.
  சாந்தனோ, தூக்குக் கிடைத்தாலும் கிடைக்கட்டும்; படிக்காமல் விண்ணப்பத்தைக் கொடுக்க முடியாது என்று நம்பிக்கையான வேறு ஒருவரை வைத்துத் திருத்தம் செய்து, மூன்று நாட்கள் கழித்துதான் அந்த விண்ணப்பத்தை வெளியே கொடுத்தனுப்பினார். கொஞ்சம் விட்டிருந்தாலும் அதுவே அந்த இருவருக்குமான தூக்குக்கயிற்றை உறுதி செய்திருக்கும். இறப்பது ஒருபுறம் இருக்க, இன விடுதலைப் போராட்டத்தை வன்கொடுமைப் போராட்டம் எனக் கொச்சைப்படுத்திய இரண்டகர்கள் எனக் காலமும் தூற்றியிருக்குமே!  நல்லவேளை, கடவுள் அருளால் தப்பினார்கள்.
  பிறகு, இதே வழக்கறிஞர் இன்னோர் உள்ளடி வேலையையும் செய்தார். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருந்த மூவரைப்பற்றிப் புகழ் பெற்ற கிழமை ஏட்டுக்குச் செவ்வி அளித்தார். அதில் என் கணவரையும் சாந்தனையும்பற்றிக் குறிப்பிடும்பொழுது, “அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் கடுமையான ஆயுதப்பயிற்சியை மேற்கொண்டவர்கள்” என்று ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவினார். “விடுதலைப்புலி இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்பதாலோ, பயிற்சி பெற்றவர் என்பதாலோ கொலை வழக்கில் தொடர்பு கொண்டிருந்தார் எனக் கூறுவதை ஏற்க முடியாது” என்று சங்கர் என்பவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை அந்த வழக்கறிஞர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியோ, மூவரின் தூக்குக்கு எதிரான தடையாணை கிடைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதை ஒரு காரணமாகக் கூறி, அந்த வழக்கை தில்லிக்கு – உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள்.
  சிறையில் இருந்த தொடக்கக் காலம் நாங்கள் மிகவும் வறுமையில் திண்டாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் உணர்வாளர்கள் பலர் பொருள் உதவி செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகள் கூட எங்களுக்கு வந்து சேரவேயில்லை. இடையில் இருந்தவர்கள் தடுத்து விட்டிருந்தார்கள். அது கூட என் அம்மா, தம்பி உட்பட 19 பேர் விடுதலையாகி வெளியே சென்ற பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் தாமதமாக எனக்குத் தெரிய வந்தது.
  அதே போன்று பெண்கள் சிறையில் இருக்கும் என் நிலையிலும் ஒரு சிக்கல். உறவினர்களையும் குறிப்பிட்ட மூன்று தலைவர்களையும் தவிர வேறு யாருமே வந்து சந்தித்தது இல்லை. சில தலைவர்கள், முதன்மைப் புள்ளிகள் வந்திருக்கிறார்கள். அவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்துக் கடைசியாக, நான் பார்க்க விரும்பவில்லை என்று கூறியதாகத் திருப்பி அனுப்பியதும் நடந்திருக்கிறது. அடுத்த முறை அவர்கள் பார்க்க வரக்கூடாது என்ற நோக்கத்தில் நடந்திருக்கிறது. இந்தக் கொடுமைகளையெல்லாம் என்னவென்று கூறுவது? அண்மையில் கூட என் கணவர் மீதும் சாந்தன் மீதும் கொலைப்பழி சுமத்தி இணையத்தில் ஒரு செய்தி வெளியானது. வீண்பெரும் பழியால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். தாக்கியவரும், பாதிக்கப்பட்ட இருவரும் நீண்ட கால நண்பர்களாக இருந்தவர்கள். தாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். பிறகு ஏன் வடநாட்டவர் என்று திரித்துக் கூறினார்கள் எனத் தெரியவில்லை. எப்படியோ, அந்தப் பழியைப் பெரும் வலியோடு கடந்தோம். காரணம், மறுமொழி உரைப்பதாக இறங்கி யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். இப்படித் தவிர்த்துவிட்டுக் கடந்து வந்த காயங்களே பெரும்பாலும்… போகட்டும்!
– முற்றும்
கருத்தாளர்: நளினி முருகன்
எழுத்தாளர்: பா.ஏகலைவன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்