சனி, 15 மே, 2021

மகா வித்துவான் திரிசிரபரம் மீனாட்சிசுந்தரம்(பிள்ளை) – சிறப்புரை

 அகரமுதல




வைகாசி 02, 2052 / மே 16, 2021

மாலை 6.30

 

இலக்கிய அமுதம், குவிகம் இணைந்து வழங்கும்

மகா வித்துவான் திரிசிரபரம் மீனாட்சிசுந்தரம்(பிள்ளை)

சிறப்புரை : திரு பால சீனிவாசன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய

கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931

கடவுக் குறி / Passcode: kuvikam123  

பயன்படுத்தலாம் அல்லது

+https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09
இணைப்பைப் பயன்படுத்தலாம் .

செவ்வாய், 11 மே, 2021

வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

      11 May 2021      No Comment



வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது! 

பேரா.ப.ம.நாயகம் நடுநிலையுடன் ஆராய்ந்து தம் நூல்களைப் படைத்துள்ளார். அவர் சமற்கிருத நூற்கருத்துகள் அடிப்படையிலும் அவை குறித்த சமற்கிருத அறிஞர்களின் ஆய்வுரைகள் அடிப்படையிலுமே கருத்துகள் தெரிவித்துள்ளார். “அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!” என்பது கடந்த காலம் குறித்தக் கூற்றாக உள்ளது. கடந்த கால உண்மைகளைத் தெரிவிக்கும் பொழுது கடந்த காலச் செய்தியாகவே பார்க்க வேண்டும். பிராமணர்கள் என்பது, பொதுவாக வடபுலப்பிராமணர்களையும் குறிப்பாக வேதகாலப் பிராமணர்களையும் பற்றியே குறிப்பிடுகிறது. அவர்கள் எந்த அளவிற்குப் பெண்களை இழிவாகக் கூறியுள்ளார்களோ அவற்றின் அடிப்படையில்தான் அவர்களைப்பற்றிய மதிப்பீடும் அமையும். இழிவான செய்திகளைக் கூறிவிட்டு உயர்வாகக் கூறுவதை ஏற்றுக்கொண்டால் இவற்றையும் ஏற்றதாக அமையும். பிராமணர்களை மேல்தட்டினராகக் குறிப்பிட்டு மக்களிடையே வேறுபாட்டை விதைத்துப் பரப்புவனவாக வடபுலத்துச் சமற்கிருத நூல்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டுவதை இலக்கிய வரலாற்று உண்மையாகத்தான் பார்க்க வேண்டும்.

வட ஆரியர்களும் தமிழகப்பிராமணர்களும் வேறு என்பாரும் உள்ளனர். தமிழகப் பிராமணர்களில் சிலர் ஆரியராகச் செயல்படுவதைப் பெருமையாகக் கொள்வதாகவும் பலர் மாறுபட்டுத் தமிழ்ப்பற்றுடன் உள்ளனர் என்று கூறுவாரும் உள்ளனர். என்னதான் மக்களிடையே சமத்துவத்தைக் காணும் பிராமணர்களாக இருந்தாலும் சாதிப்பாகுபாட்டில் கருத்தாக உள்ளவர்களும் இருக்கிறார்கள் எனக் கூறுவாரும் உள்ளனர். வட ஆரியர்களை எதிர்ப்பவர்கள், “தமிழே உயர்தனிச் செம்மொழி” என்று வலியுறுத்திய பரிதிமாற்கலைஞரை ஆதரிக்காமல் இருக்க இயலுமா? “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்னும் பாரதியாரைப் புறக்கணிக்க முடியுமா? வீடுதோறும் சென்று அல்லல்பட்டும் இடர்ப்பட்டும் துன்பப்பட்டும் தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டிய உ.வே.சாவைப் போற்றாமல் இருக்க முடியுமா? எனவே, பொதுவான செய்திகளைப் பொதுவானதாகவே பார்க்க வேண்டும்.

நிறை இருப்பின்  பாகுபாடின்றிப் பாராட்டுவதையும் குறை இருப்பின் வேறுபாடின்றிச் சுட்டிக்காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டவன். எனவேதான், இலக்கிய அறிஞர் இராசம் அம்மையாரின் ‘அயலவரின் முதல் தமிழ்க்கையேடு’ என மார்ச்சு-மே 2015 ‘அகரமுதல’ இதழ்களில் வெளியிட்டிருந்தேன். பாராட்டிற்குரிய அம்மையாரின் அந்நூலை அனைவரும் அறிய  வேண்டும் என்னும் நோக்கத்திற்காகத்தான் வெளியிட்டிருந்தேன். மேலும், இராசம் அம்மையாரின் சிறப்புபற்றிய கட்டுரையை எழுதி அரசின் உயரதிகாரிகள் முதலான பலருக்கும் அனுப்பியுள்ளேன். பிராமணர்கள் எழுதும் வேறு சில படைப்புகளும் ‘அகரமுதல’ இதழில் வெளிவருகின்றது. படைப்பாளர்களில் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. தமிழ் உணர்வாளர்கள் யாவரும் தமிழர்களே! தமிழ் எதிர்ப்பாளர்கள் அனைவரும் தமிழ்ப்பகைவர்களே! அவ்வளவுதான்!

பொதுவாகப் பின்னூட்டக் கருத்திற்கு மறுமொழி அளிப்பதில்லை. அவரவர் கருத்து. அதை மறுக்க வேண்டா என எண்ணுவேன்.  என் பணிச்சூழலில் எனக்கு அவற்றுக்கான நேரமும் அமைவதில்லை.   மிகச் சிலவற்றிற்கு மறுமொழி அளிப்பதுண்டு. அந்த வகையில் என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய பேராசிரியர் இராசம் அம்மையார் மனம் புண்பட்டதாகக் கருதுவதால் இவ்விளக்கத்தை அளித்துள்ளேன்.  யாரையும் இழிவு படுத்த வேண்டும் என்றோ் காழ்ப்புணர்ச்சியிலோ எழுதப்பட்டவை அல்ல. அறிஞர்களைப் பற்றி எழுதும் பொழுது அவர்களின் நூல்களைப்பற்றியும் குறிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

பேரா.ப.மருதநாயகம் அவர்களின் நூல்கள் பல இணையத்தில் கிடைத்ததாலும் எஞ்சிய நூல்களை அவரிடமிருந்து பெற முடிந்ததாலும் அச்சிற்கு அளித்துள்ள நூல்களின் தட்டச்சுப்படி கிடைத்தமையாலும் நன்கு படித்துப் பெரு முயற்சியில் விளைந்தது இக்கட்டுரை. இவரது நூற் கருத்துகளில் எவ்வெவற்றை விடுவது, எவ்வெவற்றை  எடுப்பது என்று எண்ண முடியாத அளவிற்குச் சரளமாகப் பல்வேறு உண்மைகளை அடுக்கிச் சென்றுள்ளார். முழுமையாக அவற்றைக் குறிப்பதாயின் நூற்களையே முழுமையாக எடுத்து இயம்புவதாக இருக்கும். உண்மையை உரைக்க வேண்டும் என்னும் ஆய்வு நோக்கில் சமற்கிருத அறிஞர்கள் எழுதிய பல நூற்கருத்துகள் அடிப்படையிலேயே தம் நூல்களை வடித்துள்ளார்.

கட்டுரைத் தொடர் 69 பகுதிகளாக வருவதிலிருந்தே இதன் வினையருமை புரியும். சில நூல்களில் குறிக்கப்படும் மேற்கோள் நூல்களின் தொடர்புடைய பகுதிகளையும் படித்துப்பார்த்தே இந் நெடுங்கட்டுரையைப் படைத்துள்ளேன். 

அவ்வாறிருக்கும் பொழுது அனைத்துத் தரப்பாராலும் படிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவேனே தவிர, காழ்ப்புணர்ச்சிக் கண்ணோட்டத்தைத் திணிக்க மாட்டேன். அதே நேரம், அறிஞர்கள் கூறிய உண்மைகளை மறைக்கவும் கூடாதல்லவா?

 முனைவர் பேரா.ப.மருதநாயகம் நோபள் பரிசு பெறுவதற்குத் தகுதியான ஆராய்ச்சி அறிஞர். எனவே, அவர் குறித்த இந்நூற்கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன். நான் உள்வாங்கி எழுதியதில் அம்மையார் மனம் புண்படும்படி ஏதும் தவறிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால், யாவும் கடந்த கால உண்மைகளே என்பதைப் படிப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்