புதன், 3 பிப்ரவரி, 2010

சான்பிரான்சிஸ்கோ: பல மாதங்களாக எல்லோரும் எதிர்பார்த்திருந்த, மேம்படுத்தப்பட்ட புதிய "ஐபேட்' விற்பனைக்கு வந்துள்ளது.இப்போது மொபைல்போனிலேயே எல்லா வசதிகளும் வந்துவிட்டாலும், வேறு சில காரணங்களுக்காக கம்ப்யூட்டரையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள "ஐபேட்', மொபைல்போனாகவும், லேப்டாப்பாகவும் செயல்படும் என்பதுதான் அதன் விசேஷம்.



இதற்கு "டேப்லெட்' என்று பெயரிட்டிருக்கின்றனர்.அரை அங்குல தடிமன், 680 கிராம் எடை , 9.7 அங்குல திரை என்று சிறப்பம்சங்களோடு சந்தையில் உலாவரப் போகிறது 'ஐபேட்'. இதன் பேட்டரி பத்து மணி நேரம் தாக்கு பிடிக்கும். எலக்ட்ரானிக் உலகில் இது ஒரு முக்கிமான சாதனையாகவும் கருதப்படுகிறது.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றில் இல்லாத புதிய பல வசதிகளுடன் "ஐபேட்' தயாரிக்கப்பட்டுள்ளது.



இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் செயல்வசதிகள் உள்ளன. 16 ஜி.பி., 32 ஜி.பி., 64 ஜி.பி., அளவுக்கு தகவல்களை வைத்துக் கொள்ளும் வகையில் பல மாடல்களில் கிடைக்கின்றன.இந்திய மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை விலையுள்ள "ஐபேட்' டில் லேப்டாப் மற்றும் மொபைல்போன்களில் உள்ள சில வசதிகள் குறிப்பாக கேமரா, வீடியோ மற்றும் அனிமேஷன் மென்பொருள் கொண்ட இணையங்களைப் பார்க்கும் வசதி போன்றவை இதில் இல்லை.



ஆனால், இ-புத்தகங்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பார்ப்பதற்கும், வீடியோ விளையாட்டுகளுக்கும் இக்கருவி பெரிதும் பயன்படும். இது பெரிய அளவிலான ஐபாட் ஆக இருந்தாலும், லேப்டாப் போன்று இடத்தை அடைக்காமல் கையடக்க அளவிலேயே இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற டேப்லெட் கருவிகளை வெளியிட்டாலும் ஆப்பிளின் மார்க்கெட்டைப் பிடிப்பது என்பது சற்றுக் கடினம்தான் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். வரும் மார்ச் மாதத்திலிருந்து இது மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக