சனி, 2 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்

 






(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 3/4

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் சேகரித்தது. 1993இல் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 53,000 தமிழ் ஓலைச் சுவடிகள் உலகமெங்கும் உள்ள தனிநபர்கள், மற்றும் அமைப்புகள், நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது. மேலும் இந்த 53,000 தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 30,000க்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகள் மருத்துவம் போன்ற பழைய தொன்மையான அறிவியல் துறைகளைச் சார்ந்தனவாக இருந்ததை ஆசியவில் ஆய்வு நிறுவனம் கண்டறிந்து வெளிப்படுத்தியது.

அறிவியல் துறைகளைச் சார்ந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும், தமிழனின் தொன்மைச் சிறப்பை, பழம்பெருமையைப் பறை சாற்றியது. ஆனால் இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியால் வெளிப்பட்டன என்ற தவறான தோற்றம் புகுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னரே நம் நாடு மருத்துவத்திலும், கட்டடக் கலையிலும், மிக உன்னத நிலையைப் பெற்றிருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாகக் கரிகாலன் கட்டிய “கல்லணை“ யின் தொழில் நுட்பம் அனுபவம் வாய்ந்த ஆங்கிலேயப் பொறியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடக் கலை நுட்பத்தை இன்றும் நம் நாட்டு அறிஞர்களும், பிறநாட்டு அறிஞர்களும் வியந்து பாராட்டுகின்றனர். மருத்துவக் கலை, கட்டடக் கலை, மற்றும் பிற கலைகளிலும் நாம் பெற்றிருந்த திறமைகள் உலகத்தையே வியக்க வைத்தன. ஆகவே “தமிழ் ஓலைச் சுவடிகள் காட்டும் தொன்மையான அறிவியல்” என்ற தலைப்பில் மிகப் பெரிய ஆய்வுத் திட்டத்தை உருவாக்க திரு.சான் சாமுவேல் தீர்மானித்தார். இத்தகைய தொன்மையான அறிவியல் சிறப்புகளைக் கொண்ட ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து அவற்றின் கருத்துகளை ஆராய்வது, நூல்களாக வெளியிடுவது போன்றவை கல்வி வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை திரு சான் சாமுவேல் உணர்ந்தார். மேலும் அறிவியல் சார்ந்த ஓலைச் சுவடிகளைக் குறித்த தனது ஆய்வுத் திட்டத்தை அமெரிக்கா, சப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களோடும் திரு சான் சாமுவேல் விவாதித்தார். மேலும் வெளிநாடுகளைச் சார்ந்த சில நிறுவனங்களிடம் தனது ஆய்வுத் திட்டத்திற்கு உதவுமாறு வேண்டினார். ஆனால் இத்திட்டத்தைப் பாராட்டிய அனைத்து வெளிநாட்டவர்களும், இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்வதில் சில இடையூறுகள் இருப்பதை விளக்கினார்கள். தனது ஆய்வுத் திட்டத்திற்கான நிதியுதவி வேண்டிப் பெரிய முயற்சிகளை எடுக்கத் திரு.சான் சாமுவேல் மேற்கொண்டார்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, பண்பாட்டு நிறுவனமான “யுனெசுகோ” நிறுவனத்துக்குத் தனது ஆய்வுத் திட்டத்தின் விரிவான கருத்துருவினை அனுப்பி வைத்தார். சில வாரங்களில் யுனெசுகோ நிறுவனத்திலிருந்து திரு சான் சாமுவேலின் முயற்சிக்குப் பதில் கிடைத்தது. உலகம் முழுவதிலுமுள்ள தொன்மையான நினைவுச் சின்னங்களை அடையாளங்கண்டு அந்த நினைவுச் சின்னங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வகையிலான திட்டம் இருப்பதாகவும், அத்திட்டத்தோடு இணைத்து ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்றும் யுனெசுகோ அமைப்பு தெரிவித்தது. யுனெசுகோவின் பதிலில் மிகவும் மகிழ்ச்சியடைந்த திரு சான் சாமுவேல் தனது மகிழ்ச்சியை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.

(யுனெசுகோவோடு இணைந்து தமிழ் ஓலைச் சுவடிகளைச் சர்வதேச அறிஞர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற மாபெரும் வெற்றியை நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்.)

1992ஆம் ஆண்டு போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவில் யுனெசுகோவின் வல்லுநர் குழுக் கூட்டத்திற்கு யுனெசுகோ ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரு சான் சாமுவேல் தனது ஓலைச் சுவடிகள் பற்றிய ஆய்வுத் திட்டத்தின் உட்கருத்தை வெளியிடலாம் என்று யுனெசுகோ திரு சான் சாமுவேலுக்கு அழைப்பிதழ் அனுப்பியது.

1992 செட்டம்பர் மாதம் 12ஆம் நாள் யுனெசுகோவின் கூட்டம் வார்சாவில் கூடியது. தொடக்க நாள் கூட்டத்தில் யுனெசுகோ நிறுவனத்தின் பொது இயக்குநர் தொடக்கவுரையாற்றினார். அவரது உரையில் உலகத்தின் நினைவுச் சின்னங்களைக் காக்க வேண்டிய சமுதாயப் பொறுப்பு மிகச் சிறப்பாக வலியுறுத்தப்பட்டது. இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதனின் அறியாமை, மற்றும் மனிதனின் ஆதிக்கப் போர்களினாலும் எத்தனையோ தொன்மையான நினைவுச் சின்னங்கள் அழிந்தன. இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து உயிருடன் இருக்கின்ற நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றியாக வேண்டும். என்பது அவரது பேச்சின் உட்கருத்தாக அமைந்தது.

இதன் பின்னர் சப்பானிய அறிஞர் திரு அகியோயாசு ஆசிய நாட்டுச் சுவடிகள் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். இவர் உரையாற்றி அமர்ந்தவுடன் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் திரு.சான் சாமுவேல் அவர்கள் பேச எழுந்தார்.

அவரது பேச்சில் ”1,500க்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்திய நாடு பல்வேறு மொழிகளின், இனங்களின், பண்பாடுகளின் சங்கமமாகக் காணப்படுகிறது. 1,500க்கும் மேற்பட்ட மொழிகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் 22 மொழிகள் மட்டுமே வரி வடிவங்களைப் பெற்றுள்ளன. வரி வடிவங்களைப் பெற்றுள்ள இம்மொழிகளிலும் வரி வடிவங்கள் பெறாத பிற மொழிகளிலும் காலத்தை எதிர்த்து எதிர் நீச்சலிடும் தகுதி வாய்ந்த ஏராளமான வாய்மொழி இலக்கியங்கள் உள்ளன” என்றார். இவற்றையும் உலகின் நினைவுச் சின்னங்களின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும். என்ற திரு.சான் சாமுவேல் அவர்களது வாதத்தை வல்லுநர் குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

“எழுத்து வடிவம் பெற்ற இந்திய மொழிகளில் உள்ள ”ஆபத்துக்கு இடமான ஓலைச் சுவடிகள்” குறைந்தபட்சம் (8,00,000 ) எட்டு இலட்சம் வரை இருக்கும். இவற்றுள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஓலைச் சுவடிகள் “சமற்கிருத மொழியைச் சார்ந்தவை”. சுவடிகளைக் காக்கும் முயற்சிகளைப் பொறுத்த வரையில் “சமற்கிருதச் சுவடிகளைக் காப்பதில் பல இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இம்முயற்சிகளுக்கு வெளிநாட்டு அறிஞர்களின் ஆதரவும் போதிய அளவிற்கு உள்ளது. ஆனால் சமற்கிருதம் தவிர்த்த பிறமொழி ஓலைச் சுவடிகள், குறிப்பாகத் திராவிட மொழிகளைச் சார்ந்த ஓலைச் சுவடிகள் கவனிப்பாரற்று, ஆதரவின்றி இந்திய நாட்டின் சிற்றூர்ப் புறங்களில் இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கும், மக்களின் மூடநம்பிக்கைகளுக்கும், கறையானின் கொடிய வாய்க்கும் இடையில் சிக்கிக் காலந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன.

இந்தியவியல் என்றால் சமற்கிருதவியல்” மட்டும்தான் என்று தவறாக கருதப்பட்ட நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நிலவிவந்தது. “காலப்போக்கில் திராவிடவியல் பற்றி முழுமையாக ஆய்வு இல்லையென்றால் இந்தியவியல் பற்றிய ஆய்வு முழுமை பெறாது. என்பதைப் பல அறிஞர்களும், அனுபவபூர்வமாக உணரத் தொடங்கினர். எனவே 20 ஆம் நூற்றாண்டில் அது வரை புறக்கணிக்கப்பட்டிருந்த திராவிடவியல் ஆய்வு ஓரளவிற்குப் புத்துயிர் பெற்றது. இந்தியாவின் ஒரே செவ்வியல் மொழியாகச் சமற்கிருத மொழி மட்டும் கருதப்பட்ட நிலை மாறித் தமிழும் செவ்வியல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை உலக அறிஞர்கள் ஒத்துக்கொள்ளத் தொடங்கினர்.

சான் சாமுவேல் சொல்கிறார்: கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கிய, இலக்கண வளங்களைக் குறைவறப் பெற்று இன்றும் இளமை குன்றாமல் திகழும் இந்தக் கன்னித் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமலோ, தமிழ் பற்றிய அறிவு இல்லாமலோ, இந்தியவியல் பற்றிய ஆய்வு முழுமை பெறாது என்பதை நான்.. அழுத்தமாகக் குறிப்பிட்டேன். மேலும் இந்தியவியல் ஆய்வுக்கு அடித்தளமாக அமைகின்ற தென்னிந்திய ஆவணங்கள், குறிப்பாகத் திராவிட மொழிகளின் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்று எடுத்துரைத்தேன்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்த ஓலைச் சுவடிகள் வெள்ளைக்காரப் பிரபு ஒருவனின் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுவதற்காக அடுப்பில் விறகாகப் போட்டு எரிக்கப் பயன்பட்டதையும், மூட நம்பிக்கை மிக்க இந்நாட்டு மக்கள் பொங்கல் திருநாளின் போது சுவடிகளைத் தீயிலிட்டுக் கொளுத்துவதையும், வைகை ஆற்றில் ஆடிப் பெருக்கின் போது புது வெள்ளம் வரும் போது நீரிலிட்டு ஆற்றுத் தேவதையின் பசியை நிறைவு செய்வதையும் நான் விரிவாக எடுத்துப் பேசியது பன்னாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியது. போர்களினாலும், இயற்கையின் சீற்றத்தாலும் ஐரோப்பிய நாடுகளின் ஆவணங்கள் அழியும் போது எங்கள் நாட்டின் கலைக் கருவூலங்களில் பெரும்பாலானவை மண்மூடிப் போக வேண்டிய கண்மூடிப் பழக்கங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் அழிகின்றன என்று நான் எடுத்துரைத்தேன்.

(தொடரும்)
குலோத்துங்கன்,
தோழர் தியாகு
தாழி மடல் 304

வெள்ளி, 1 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்-தெ்ாடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கிச் சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்சி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினைப் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கிச் சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் சி. சான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார். குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு சி. சான் சாமுவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள இசுகாட்டு கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க முனைவர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வேட்டியுடனும் சிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு சான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் படியாக நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு சி. சான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடிச் சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. சான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ்ப் புலவர்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. சான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனத்தில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு சான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

முனைவர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையைத் திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு சான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு சான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாகத் திரு சான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
குலோத்துங்கன்தோழர் தியாகு
தாழி மடல் 304


வியாழன், 30 நவம்பர், 2023

திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

 




ந்தாவது திருக்குறள் மாநாடு

பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024

சிகாகோ

நூற்பதிவு நாள் நீட்டிப்பு

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு

வணக்கம்.

மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம்.

தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org

எனவும் தெரிவித்துஇருந்தோம்.

பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும் சிலர்தான் பதிவிற்கான விவரங்களைத் தெரிவித்துள்ளனர். பங்கேற்பு ஆர்வலர்கள்

நவமபருக்குள் நூலை அச்சிடமுடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இங்ஙனம் கருதுகின்றனர்.

பழைய நூல்களாயின் வரும்    மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும்

புதிய நூல்களாயின்  வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024  ஆம் நாளுக்குள்ளும்   கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

எனப் போதிய கால வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதிவுதான் நவம்பர் 30 ஆம் நாளுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பதிவு நாளை கார்த்திகை 29, 2054 / 15.12.2023 வரை நீட்டித்துள்ளோம். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

thirunool50@gmail.com மின்வரிக்கு நூல் பெயர், நூலாசிரியர் பெயர் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

பொறுப்பாளர் , நூலரங்கம்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு

‘குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!



இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023, பெங்களூரு, சிறந்தநூல் போட்டி முடிவுகள்

 




இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023

பெங்களூரு

சிறந்தநூல் போட்டி முடிவுகள்

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் வருமாறு:

முதல் பரிசு: உரூ.5,000

சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்

-பேரா.பாலசுந்தரம் இளையதம்பி

இரண்டாம் பரிசு: உரூ.3,000

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனை.ப.மருதநாயகம்

-இலக்குவனார் திருவள்ளுவன்

மூன்றாம் பரிசு: உரூ.2,000

அலைவீசும் நிலாவெளிச்சங்கள்

-கவிஞர் கே.சி.இராசேந்திரபாபு

சிறப்புப்பரிசு: உரூ.2,000

கனவொளியில் ஒரு பயணம்

-செய்சக்தி

ஊக்கப்பரிசு:  உரூ.1000 வீதம்

1. 100 சிறுவர் கதைகள்-எம்.சி.ஞானபிரகாசம்

2. நிலாச்சோறு இலட்சுமி-குமரேசன்

3. வண்ணமுகங்கள்-விட்டல்ராவு

4. தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்-பேரா.சொ.மீ.சுந்தரம்

5. புலம்பெயர் தமிழர்கள் வாழ்வு-இருப்பு-படைப்பு-பேரா.ச.சீனிவாசன்

6. தமிழ் இலக்கியங்களில் பயனுள்ள சமூகச் சிந்தனைகள்-பேரா.முனை.பெ.கணேசு

7. புத்தரின் அற்புதமான அறிவுரைகள்-பேரா.முனை.பெ.கணேசு

8. தவசு-இளங்கோ. கண்ணன்

9. உலகின் முதல்மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்-பேரா.பெ.சுப்பிரமணியனார்

10. கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி-செய்சக்தி

11. எழு ஞாயிறு எழுகவே-பா.மூர்த்தி

12. நீங்கள் நிராகரித்த நான்-ஆர்க்காடு இராசா முகம்மது

13. காலத்தைச் செதுக்கிய உளிகள்-ஆ.பிரமநாயகம்

14. சொல்லழகு-தங்கவயல் தமிழ்மறவன்

15. திருவள்ளுவமாலை-எசு.(உ)லூகாசு

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

சிறந்தநூல் போட்டிக்கான பரிசுகள் திச.2ஆம் நாள்  மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

பேராசியர், முனைவர் கு.வணங்காமுடி
மதிப்புறு தலைவர்

திரு. ந.முத்துமணி
தலைவர்

திரு.ஆ.வி.மதியழகன்
செயலாளர்

க.தினகரன்வேலு
பொருளாளர்

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளை சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்ஷி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கி சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் ஜி. ஜான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார் குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு ஜி. ஜான் சாமிவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழை சிறப்பு பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வேட்டியுடனும் ஜிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு ஜான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் பிரதியாக நூலாக பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு ஜி. ஜான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடி சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. ஜான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ் புலவர்களின் ஓலைச்சுவடிகளை தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. ஜான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனதில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு ஜான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையை திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு ஜான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு ஜான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாக திரு ஜான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 304

புதன், 29 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்- தொடர்ச்சி)

கல்லூரியில் சாதி விளையாட்டு

இனிய அன்பர்களே!
தாழி (292) மடலில் நான் படித்த குடந்தை அரசினர் ஆடவர் கலை அறிவியல் கல்லூரியைப் பற்றி தேம்சு கரையில் கேம்பிரிட்சு போலக் காவிரிக் கரையில் எங்கள் கல்லூரி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

இந்த மடலின் முடிவில் இப்படி எழுதினேன்: “எப்படி இருந்த குடந்தைக் கல்லூரி இப்போது இப்படி ஆகி விட்டதே! என்ற ஆதங்கத்தால்தான் இவ்வளவு கதையும் சொன்னேன். அன்று பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதவர் என்று பிரிந்து நின்ற கல்லூரியில் இப்போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் சாதியால் பிரிந்து நிற்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.”

அக்காலத்தில் கல்லூரி மாணவர்களிடையே கட்சி அரசியல், பார்ப்பனர்-பார்ப்பனரல்லதார் அரசியல் இருந்தனவே தவிர சாதி மத அரசியல் என்று எதுவும் கண்டதில்லை. குடந்தை என்பதால் பார்ப்பன மாணவர்கள் ஒப்பளவில் கூடுதலாக இருந்தனர். அக்காலத்தில் அவர்களிடையே இராசகோபாலாச்சாரியாரின் சுதந்திராக் கட்சிக்கு ஓரளவு ஆதரவு காணப்பட்டது. அவர்களிலும் பலர் காங்கிரசு ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களிடையே கூடக் கிட்டத்தட்ட இதே நிலைதான். எப்படியும் சாதி அரசியலோ மத அரசியலோ காணப்படவில்லை. ஆர்எசுஎசு சார்புடையவர் என்று மாணவர்களிடையிலோ ஆசிரியர்களிடையிலோ யாரையும் கண்டதில்லை. முசுலிம் மாணவர்களும் இருந்த போதிலும் அவர்கள் எந்த இசுலாமியக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. காங்கிரசுக்கோ திமுகவிற்கோ ஆதரவாக இருந்தார்கள். இடதுசாரி அரசியல் என்றால் அப்போதுதான் துளிர் விட்டுக் கொண்டிருந்தோம்.

அக்கால நிலையுடன் ஒப்பிட்டால் இப்போது என்ன நடக்கிறது? அண்மையில் ஒரு வகுப்பறையில் நடந்ததாக அங்கு பயிலும் மாணவர் ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.

அது புவியியல் வகுப்பு. முது அறிவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைப் பார்த்து உதவிப் பேராசிரியர் சொல்கிறார்:

“உலகில் முசுலிம்களுக்கென்று நாடுகள் உள்ளன. கிறித்தவர்களுக்கும் நாடுகள் உள்ளன. இந்துக்களுக்குத்தான் நாடே இல்லை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.”

இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி விரிவுரை ஆற்றி விட்டு, சாதியத்தின் தேவையைச் சொல்கிறார்: “சொந்த சாதிக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்வது நல்ல நீருடன் சாக்கடையைக் கலப்பது போன்றதாகும்.”

மாணவர்களில் தணிந்தவர்(தலித்துகள்) யார் என்று அந்த உதவிப் பேராசிரியருக்கு நன்கு தெரியும். அவர்களைப் பார்த்துப் பேசுகிறார்: “நீங்கள் எல்லாம் ஏன் படிக்க வருகின்றீர்கள்? பணம் இருந்தால் படிக்கலாம். நீங்கள் ஊரில் விவசாய வேலை பார்க்க வேண்டியதுதான்.”

அந்த உதவிப் பேராசிரியர் வகுப்பறையில் மட்டுமல்ல, தொடர்ந்து பொதுவெளியில் இந்தக் கருத்துகளைப் பரப்பி வந்தார். அவர் பார்ப்பனரல்ல. சாதிப் பெருமை பேசும் இடைச்சாதிக்காரர்.

இந்த உதவிப் பேராசிரியரின் மதவாத, சாதியப் பரப்புரை தணிந்த(தலித்து) மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஈட்டியது. அவர்களும் இடதுசாரி மாணவர்களும் இந்த உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராடினார்கள். அவர் குடந்தையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அதே மதவாத, சாதியக் கருத்துகளைப் பேசப் போய் மாணவர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் அவரை மாற்றினார்கள் – பழைய இடத்துக்கே!

அவரும் அவர் சாதியத்துக்குத் துணை போகும் அதே துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதை வெற்றியாகக் கொண்டு, தணிந்த(தலித்து) மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஆசிரியர்களையும் பழிவாங்க முற்பட்டார்கள். மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்தது. உதவிப் பேராசிரியர் மீண்டும் மாற்றப்பட்டார்.

பேராசிரியர்களின் இந்தச் சாதி விளையாட்டுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககமும் உடந்தையோ? என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் சாதியப் பேராசிரியரை மாற்றினால் அவர் விரும்பும் வசதியான ஊருக்கு மாற்றுவது, அதே நேரம் தணிந்த சாதியினராகவோ(தலித்தாகவோ) தணிந்தோர்க்கு (தலித்துக்கு) ஆதரவாகவோ இருக்கக் கூடிய பேராசிரியரைத் ‘தண்ணியில்லாக் காட்டுக்கு’த் தூக்கியடிப்பது என்ற நடைமுறைதான் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குடந்தைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடர்பான பணியிட மாற்றல்கள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும், தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்துதேசப் பக்தராகிய சாதியப் பேராசிரியர் குறித்து மாணவர் இளந்தென்றல் தமிழக அரசுக்கும் மாநில எசுசி எசுடி ஆணையத்துக்கும் முறைப்பாடு செய்தார்.

எசுசி எசுடி ஆணையம் அவரை நேரில் அழைத்தும் விசாரித்தது. சாதியப் பேராசிரியர் வகுப்பறையிலும் வெளியிலும் செய்துவரும் இந்துத்துவ, சாதியப் பரப்புரை பற்றி இளந்தென்றல் விரிவாக எடுத்துரைத்தார். ஆனால் ஆணையத்தின் தலைவர் ‘நீதியரசர்’ பொ. சிவக்குமார் தமது ஆணையில் இளந்தென்றலின் முறைபாடுகளைப் பதிவு செய்து விட்டு, முடிவில் கூறுகிறார்:

“மேற்சொன்ன ஆசிரியர் மாணவர்களிடம் பிற்போக்குக் கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்பதைத் தவிர வேறு எந்த வகையில் இவ்வாணையத்தினால் மனுதாரரது மனு பரிசீலிக்கத்தக்கது? என்பதை மனுதாரரால் தெளிவுபடுத்த இயலவில்லை.”

ஆக, எசுசி எசுடி ஆணையத்துக்கு மேற்சொன்ன ஆசிரியரின் பிற்போக்குப் பேச்சு பரிசீலனைக்குரிய ஒரு முறைப்பாடாகவே தெரியவில்லை.

எசுசி எசுடி ஆணையத்தின் இந்த அணுகுமுறை கல்விக் கூடங்களில் மதவாதத்துக்கும் சாதிவெறிக்கும் உரிமம் வழங்குவதாகவே புரிந்து கொள்ளப்படும்.

இதே குடந்தை கல்லூரியில் தணிந்த(தலித்து) மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஆசிரியர்களும் சாதிய ஆசிரியர்கள் சிலரால் குறிவைத்துப் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாகப் பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டப்படுகினறன. தமிழ்க் குமுக ஓர்மையைச் சிதைக்கும் மாணவர்களின் கல்வியைச் சிதைத்து கல்விச் சூழலை நஞ்சாக்கியும் வருகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 302