சனி, 6 டிசம்பர், 2014

சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்


சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்


பண்ணுருட்டி நகராட்சி மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம்  ஆவணப்படக் கலைஞர்களைச் சிறப்பித்தல்
பண்ணுருட்டி நகராட்சி மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம்
ஆவணப்படக் கலைஞர்களைச் சிறப்பித்தல்

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர்

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி

  தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் எழில்வசந்தன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். தமிழறிஞர்கள், இசையறிஞர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.
  இந்த ஆவணப் படம் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுத் திரைப்பட வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வயல்வெளித் திரைக்களம் தயாரித்துள்ள இந்த ஆவணபடத்தைப் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.இளங்கோவன் திரைக்கதை எழுதித் இயக்கியுள்ளார்.
  இந்தப் படத்தில் முனைவர் ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், முனைவர் அரிமளம் பத்மநாபன், சுந்தர. இலட்சுமி நாராயணன் முதலானவர்கள் சுந்தரேசனாரின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆவணப்படத்தில் கிருத்திகா இரவிச்சந்திரன், வில்லியனூர் முனுசாமி, அறின் இடைக்கழிநாடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்து, தொகுப்புப்பணியை இராசுகுமார் இராசமாணிக்கம் செய்துள்ளார். தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் எழுதிய கையறுநிலைப் பாடலை கலைமாமணி கா. இராசமாணிக்கம் பாடியுள்ளார். வரும் திசம்பர் மாதம் மலேசியாவில் இந்த ஆவணப்படம் வெளியீடு காண உள்ளது.

தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்

தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்

55roadside_well
தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்
  தேனி மாவட்டத்தில் திறந்த வெளி சாலையோரக் கிணறுகளால் பேரிடர் ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்பொழுது கிணறுகளில் நீர் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கிணறுகள் சாலையோரத்தில் திரும்பும் இடத்தில் அமைந்துள்ளன.
  இருசக்கர வாகனங்கள், மிதியூர்திகள்(ஆட்டோக்கள்), சீருந்துகள், போன்றவை இப்பகுதியில் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இவ்வாறுள்ள சாலையோரக்கிணறுகளினால் இவ்வாறு கடந்து செல்வோர் தவறி  விழுந்து பலர் இறந்துள்ளனர்.
  இப்பொழுது பள்ளி மாணவர்கள், மாணாக்கியர்கள் மிதிவண்டிகளில் செல்கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் மீது மோதாமலிருக்க வாகனத்தைத் திருப்பும்பொழுது கிணறுகளில் உள்ள பள்ளத்தில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரத்தில் அமைந்துள்ள கிணறுகளுக்குத் தடுப்புச்சுவர் கட்ட மாவட்ட நிருவாகம் உரியவர்களுக்குஅறிவுறுத்தவேண்டும் எனவும் இதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 55vaikai aneesu
பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

55varumai_ozhippu_sangam

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

தேவதானப்பட்டி பகுதியில் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் செயல்படாமல்பூட்டியபடியே கிடக்கின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இச்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உள்ளனர். இச்சங்கம் திறக்கப்படாமல் இருக்கும்பொழுதே சம்பளம் எடுத்துக்கொள்கின்றனர். இவைதவிரப் போலி ஆவணம் தயார் செய்து அரசுப்பணத்தை மோசடி செய்கின்றனர்.
மேலும் சங்கத்திற்கு வருகின்ற ஐம்பதாயிரத்தைச் செயலாளர் இசைவில்லாமல் கணக்காளர் மற்றும் தலைவர்கள் இணைந்து பணத்தை எடுத்துப் போலி ஆவணம் தயார் செய்து அரசிற்குக் கணக்கு காட்டி வருகின்றனர்.
இதன் தொடர்பாக உதவித் திட்ட அலுவலர், ஊராட்சித்தலைவர்களிடம் முறையீடு அளித்தாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேலும் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனைக் கண்டுபிடித்து முறையீடு தருபவர்களை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் விலக்கிவிட்டு வேறுஆள்களை நியமிப்பது வாடிக்கையாக உள்ளது.  மேலும் போலி ஆவணம் தயார் செய்வதற்கு உடந்தையாகக், கணக்காளர், உ.தி.அ., நிதி நிருவாகிகள், திட்டப்பணியாளர் ஆகியோர் உள்ளனர்.
எனவே சிற்றூர் வறுமை ஒழிப்புச்சங்கத்தில் இதுவரை பணம் வழங்கிய விவரத்தை ஆய்வு மேற்கொண்டால் பல மோசடிகள் அம்பலமாகும். இதன் தொடர்பாக மாவட்ட ஆட்சியகத்தில் ஒவ்வொரு சங்கத்தின் மீதும் முறையீடு நிலுவையில் உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியகத்திற்கு புகார் மேல் புகார் அளித்து வருகிறார்கள்.
55vaikai aneesu