சனி, 15 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 70 தொடர்ச்சி)

இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு

(BASIC STRUCTURE OF THE INDIAN CONSTITUTION)

என்றால் என்ன?

பொ,ந.பி [EWS] தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய இரு நீதியரில் ஒருவரான இரவீந்திர பட்டு எழுதிய தீர்ப்புரையைத் தமிழாக்கம் செய்து வருகிறேன். அதன் மூன்று பகுதிகளைச் சட்டத் தெளிவு கருதியும் தமிழாக்கம் கருதியும் முன்பு தாழி மடல்களில் (37, 38, 40) பகிர்ந்திருந்தேன், இதோ இன்னும் சில பகுதிகள் (தமிழிலும் ஆங்கிலத்திலும்):

[எம். நாகராசு வழக்குத் தீர்ப்பிலிருந்து சில எடுகோள்கள்:]

 “கூட்டாட்சியம், சமயச் சார்பின்மை, அறிவுக்குகந்த தன்மை, குமுகியம் (சோசலிசம்) போன்ற கொள்கைகள் ஒரு குறிப்பான வழிவகையின் சொற்களுக்கு அப்பாற்பட்டவையா என்பதையே முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இந்தக் கொள்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு வழிவகைகளுக்கும் அடிநாதமாக விளங்கி, அவற்றை இணைக்கும் படியானவை…. அரசமைப்பை முழுமையான உயிரமைப்பு ஆக்கக் கூடியவை.  ஆனால் வெளிப்படையாக விதிகளின் வடிவில் வெளிப்படுத்தப்படுகிறவை அல்ல.”

[“The point which is important to be noted is that principles of federalism, secularism, reasonableness and socialism, etc. are beyond the words of a particular provision. They are systematic and structural principles underlying and connecting various provisions of the Constitution. They give coherence to the Constitution. They make the Constitution an organic whole. They are part of constitutional law even if they are not expressly stated in the form of rules.” ]

“ஆக, அடிப்படைக் கட்டமைப்பு என்ற கருத்தாக்கம் நாடாளுமன்றத்தின் சட்டத்திருத்த அதிகாரத்துக்கு வரம்பிடுகிறது. சுருங்கச் சொல்லின், ஒரு கொள்கை அடிப்படைக் கூறாகத் தகுதி பெற வேண்டுமானால், முதலில் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி என்றும், அந்த வகையில் சட்ட மன்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதென்றும் நிறுவப்பெற வேண்டும். பிறகுதான் அது நாடாளுமன்றத்தின் சட்டத் திருத்த அதிகாரத்தையும் கூட கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு அடிப்படையானதா என்பதை ஆராய முடியும். அடிப்படைக் கட்டமைப்பின் கோணத்தில்  அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நீதித்துறை மீளாய்வு செய்யும் அளவை இதுவே ஆகும்.”

[The basic structure concept accordingly limits the amending power of Parliament. To sum up: in order to qualify as an essential feature, a principle is to be first established as part of the constitutional law and as such binding on the legislature. Only then, can it be examined whether it is so fundamental as to bind even the amending power of Parliament i.e. to form part of the basic structure of the Constitution. This is the standard of judicial review of constitutional amendments in the context of the doctrine of basic structure.}

இந்திய அரசமைப்பில் “கூட்டாட்சியம்” என்ற சொல்லே முகப்புரையில் காணப்படவில்லை. ஆனால் கூட்டாட்சியக் கொள்கை (அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருப்பது போன்ற கண்டிப்பான பொருளில் அல்ல) அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு வழிவகைகள் மீதும் படர்ந்துள்ளது. 245, 246 ஆகிய உறுப்புகளை ஏழாம் அட்டவணையில் காணப்படும் அதிகாரப் பிரிவினையுடன் இணைத்துப் பார்த்தால் இந்தக் கருத்தாக்கத்தைக் கண்டுகொள்ள முடியும்.

[“Under the Indian Constitution the word “federalism” does not exist in the Preamble. However, its principle (not in the strict sense as in USA) is delineated over various provisions of the Constitution. In particular, onefinds  this concept in separation of powers under Articles 245 and 246 read with the three lists in the Seventh Schedule to the Constitution.]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 43

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 70 : வானுயர்ந்த கனவுகள்!(தோழர் தியாகு எழுதுகிறார் 69 தொடர்ச்சி)

வானுயர்ந்த கனவுகள்!

இனிய அன்பர்களே!

காரிக் கிழமை தோறும் ‘இந்து’ போன்ற பெரிய நாளேடுகள் நிலைச் சொத்து [ரியல் எசுடேட்டு] விளம்பரங்களால் நிறைந்து வழிகின்றன. வீட்டு மனைகள், அடுக்ககங்கள் விற்பனைக்கான முழுப்பக்கப் பலவண்ண விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும், (உங்களிடமிருந்தால்) காசையும் கூடக் கவரும் படியாக வருகின்றன. அவற்றை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பார்த்து என்னவாகப் போகிறது? சில நேரம் புதுப்புது எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும்: “சார், அருமையான லொக்கேசன், உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும், ஒரு முறை வந்து பாருங்க.” சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘நன்றிங்க, என்னால் முடியாதுங்க” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விடுவேன். மனத்துக்குள் ‘எனக்குப் பொருத்தம் என்றால் என்ன? காசில்லாமலா?’ என்று சொல்லிக் கொள்வேன். 

வீட்டுமனை, அடுக்கக விளம்பரங்களை வைத்துக் கிடைக்கும் விளம்பரக் கட்டணத்தில் இந்த நாளேடுகளை விலையே இல்லாமல் கொடுத்தாலும் இழப்பில்லை – அவர்களுக்கு!  

இதெல்லாம் இருக்கட்டும், சென்ற காரிக் கிழமை ஆங்கில இந்து நாளேட்டின் சென்னைப் பதிப்பின் 40 பக்கங்களில் முகப்புப் பக்கத்தில் வெளிவந்த விளம்பரத்தைப் பார்க்காமல் நகர முடியவில்லை. ‘நீயா நானா’ கோபிநாத்து இரு கையும் நீட்டிச் சென்னையில் வீடு வாங்க அழைப்பது போன்ற விளம்பரம் என்னை ஈர்க்கக் காரணம் அதன் ஆங்கிலத் தமிழ். அதாவது ஆங்கில எழுத்துகளில் தமிழ்ச் செய்தியை எழுதுதல். இது என்ன? தமிங்கலம்? தமிங்கிலீசு? இங்தமிழ்? ஆங்தமிழ்? இந்த விளம்பரத்தைப் படித்துப் பயனடையப் போவது (ஏமாறப் போவது) யார்? அவர்களுக்குத் தமிழ் புரியும், ஆனால் தமிழ் எழுத்துகள் படிக்கத் தெரியாது எனக் கொள்ளலாமா? அல்லது ஆங்கிலம் புரியாது, ஆனால் ஆங்கில எழுத்துகள் படிக்கத் தெரியும் எனக் கொள்ளலாமா? இந்தக் கவலை நமக்கு எதற்கு? கூந்தலுள்ள மகராசி கொண்டை போட்டாலும் விரித்துப் போட்டாலும் அது அவள் கவலை!

ஆனால் என் கவலை என் மொழியைப் பற்றி! நீங்களும் எனக்காக அந்த விளம்பரத்தை ஒரு முறை படியுங்களேன்.

CHENNAILA VEEDU VANGA 50L – 1 CR AAGUM

AANAA IPPO ILLA!

2BHK APTS. FROM 34L

AT TAMBARAM

UNGAL KANAVAI NINAIVAAKKUM CASAGRAND

சென்னைல வீடு வாங்க 50 இலட்சம் முதல் ஒரு கோடி ஆகும்! ஆனால் இப்போ அப்படி இல்ல! 2 படுக்கையறை, ஒரு கூடம், ஒரு சமயலறை அடுக்ககம் தாம்பரத்தில் (சென்னையில் என்று தொடங்கி தாம்பரத்துக்குப் போய் விட்டார்கள், தாம்பரமும் சென்னைதானோ?)! இதெல்லாம் விடுங்க, அந்தக் கடைசி வரிக்கு வாங்க!

UNGAL KANAVAI NINAIVAAKKUM CASAGRAND

திரும்பப் படிங்க! உங்கள் கனவை நினைவாக்கும் காசாகிராண்டு! அது எப்படிக் கனவை நினைவாக்க முடியும்? நினைவு வேண்டுமானால் கனவாகலாம்!  கனவு எப்படி நினைவாகும்?

இதில் ஏதோ குழப்பம் உள்ளது. நனவு என்று நினைத்துக் கொண்டு நினைவு என்று எழுதி விட்டார்கள்! இரண்டும் வேறு வேறு என்று கோபிநாத்தைக் கேட்டாலே சொல்லியிருப்பார்!

நண்பர்களில் பலரிடமும் இதே குழப்பம் இருக்கக் கண்டதால்தான் இதை எழுத முற்பட்டேன். நனவு என்றால் எதார்த்தம், மெய்ம்மை, உண்மைநிலை! நினைவு அகம் சார்ந்தது, நனவு புறம் சார்ந்தது.

கனவு நனவாவது என்றால் கனவு ஈடேறுதல்! மெய்ப்படுதல்! நிசமாதல்! உண்மையாதல்!

நினைவு கனவாகி, கனவு நனவானால் நன்று! கனவு நினைவாகும் அதிசயம் காசாகிராண்டில்தான் நடக்கும்!

‘ரியலிசம்’ என்பதை ‘எதார்த்தவாதம்’ என்று சொல்லும் பழக்கம் உண்டு. எதார்த்தமும் தமிழில்லை, வாதமும் தமிழில்லை! எதார்த்தவாதம் தொலையட்டும் என்று மெய்யாலுமே விரும்பியதால் நான் அதை நனவியம் என்று ஆளலானேன். ரியலிசம் = நனவியம்.

சோசலிசுட்டு ரியலிசம் = குமுகிய நனவியம்.

உட்டோப்பியா என்பது கனவு தேசம். கனவு தேசமாக இருந்த குமுகியத்தை (சோசலிசத்தை) நனவு தேசமாக்க வழிகாட்டியவர்கள்: காரல் மார்க்குசு, பிரெடெரிக்கு எங்கெல்சு!    மா இலெனின் கூறியது போல், கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தியவர்கள்!

கனவு மெய்ப்பட வேண்டும்      கைவசமாவது

 விரைவில் வேண்டும்.”

காசாகிராண்டு கனவு மெய்ப்படுவது ஒன்றும் பெரிதில்லை. காசாகிராண்டு இருப்பது தாம்பரத்தில்! தாம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்! தமிழ்நாடே கனவாய் இருக்கும் போது காசகிராண்டு வெறும் தூசு!!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 43

வியாழன், 13 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 69 : தமிழீழத் தோழமையில் ஒற்றுமை குலைவதன் காரணம்

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 68 தொடர்ச்சி)

தமிழீழத் தோழமையில்

ஒற்றுமை குலைவதன் காரணம்

இனிய அன்பர்களே!

தமிழீழத் தோழமையைப் பொறுத்த வரை, திராவிடத்தைத் தமிழ்த் தேசியத்தால் வெல்வதோ தமிழ்த் தேசியத்தைத் திராவிடத்தால் வெல்வதோ நம் நோக்கமில்லை. தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமைக்குக் கேடில்லாமல் இந்த இரு கருத்தியல் நிலைப்பாடுகளுக்குமிடையே விவாதித்துக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவரவர் நிலைப்பாடுகளில் நிற்க வேண்டிய நேரத்தில் நின்றபடி தேவையான போது தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்தி ஒருங்கிணைந்து போராட முடியும். இது கடந்த காலத்தில் முடிந்தது, நிகழ்காலத்தில் முடிகிறது, எதிர்காலத்திலும் முடியும்.

முள்ளிவாய்க்காலுக்கு முன் இந்த ஒருங்கிணைப்பு எவ்வாறு செயல்பட்டது என்பதை நேற்று எடுத்துக் காட்டினேன். இன்றும் இந்த ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்கும் சான்றாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் மூன்று ஒருங்கிணைப்பாளர்கள் யார் தெரியுமா?

1.   கொளத்தூர் மணி; 2. பெ. மணியரசன்; 3. கோவை இராமகிருட்டிணன்.

இவர்களில் கொளத்தூர் மணி தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். எமதியக்கம் உள்ளிட்ட பலதிறப்பட்ட அமைப்புகள் இந்த ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுத் தமிழீழத் தோழமையில் கொள்கைவழி ஒற்றுமை காத்து வருகிறோம். இப்போதுள்ள சூழலில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் என்ன? இந்திய அரசிடம் கோர வேண்டியவை என்ன? தமிழக அரசிடம் கோர வேண்டியவை என்ன? ஐநா உள்ளிட்ட பன்னாட்டரங்கில் கோர வேண்டியவை என்ன? இலங்கை நெருக்கடி பற்றிய பார்வை என்ன? தாயகத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? உலகத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை காண்பதில் எங்களுக்குள் எந்தப் பிணக்கும் இல்லை. ஒற்றுமை என்பது நேற்றைய கதை மட்டுமல்ல, இன்றைய நடப்பும் இதுதான். இந்த ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்கும் திராவிடம் – எதிர் – தமிழ்த் தேசியம் என்ற முரண்பாடு எவ்விதத்தும் தடை இல்லை.

நாங்கள் ஈழம் மட்டுமே எல்லாம் என்று அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல. தமிழ்நாட்டு அரசியலிலும் இந்திய அரசியலிலும் எங்களுக்கென்று தனித் தனி நிலைப்பாடுகள் உண்டு. அவை ஒன்றுபட்ட நிலைப்பாடுகளாகவோ ஒத்த நிலைப்பாடுகளாகவோ கூட இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. 

அன்பர்கள் சிபியும் சத்தியசீலனும் இரு கருத்தியல் போக்குகளின் பேராளர்களாக இருந்து முன்வைக்கும் நிலைப்பாடுகள் குறித்து உரையாடும் முன்பு இந்தக் களத்தில் என்ன நடக்கிறது என்பது தாழி அன்பர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் இன்று வரைக்குமான தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை வரலாற்றை எடுத்துச் சொன்னேன்.

வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள்வந்த வழியை அறிந்து கொள்ளாமல் போகும் வழியைத் தீர்மானிக்க முடியாது. நமக்கான போகும் வழி என்ன? ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வழிகாட்டுகிறது.  சென்ற 16.04.2022 சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்கிறேன். இந்த மாநாட்டில் நான் நோக்கவுரை ஆற்றினேன். என் உரையை முழுமையாக வரவேற்றுப் பேசியவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன். இந்தத் தீர்மானங்களைப் படியுங்கள். இவற்றின் உட்கருத்தில் திராவிட – தமிழ்த் தேசிய முரண்பாடு ஏதும் தெரிகிறதா? பெரியார் ஆதரவும் எதிர்ப்பும் தெரிகிறதா?

ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு

                        தீர்மானங்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி காண்பதற்கும் தமிழீழத் தாயகத்தில் பாதுகாப்பான வாழ்க்கை அமைவதற்கும் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தமிழர் வேணவாவை வெளிப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்படுகின்றன.  

1.     ஈழத் தமிழர்களுக்கு எதிராக  இனவழிப்புக் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த கோத்தபய இராசபக்குசே, மகிந்த இராபக்குசே உள்ளிட்ட சிங்கள ஆட்சித் தலைமைகள், சரத்து பொன்சேகா, சவேந்திர சில்வா, கமல் குணரத்தினா, சகத்து செயசூரியா உள்ளிட்டபடைத் தலைமைகளை,  2002ஆம் ஆண்டு சூலை முதலாம் நாளுக்கு முன்னர்ப் புரிந்த குற்றங்களையும் உள்ளடக்கக் கூடியதான இலங்கை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று சிறப்பாக அமைக்கப்பட்டோ, அன்றேல் குறைந்தது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, கூண்டிலேற்ற  வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

2.     2014ஆம் ஆண்டு வட மாகாண சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படியும், 2021ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்த் தலைவர்களும் குடிமைச் சமூகச் சார்பாளர்களும் சேர்ந்து ஐ.நா. உறுப்பரசுகளுக்கு அனுப்பிய மடலின் படியும் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின் படியும்  ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட மேற்சொன்ன பன்னாட்டுச் சட்டமீறல்கள் தொடர்பில் எவ்வித உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கும் சிறிலங்கா அரசு வழிசெய்யாத நிலையிலும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில்  இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனியும் காலந்தாழ்த்தாமல் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3. இலங்கை அரசு ஐ. நா. பேரவையில் உறுப்பு வகிக்கத் தொடங்கிய 1955 ஆம் ஆண்டு திசம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாகவே, இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் சட்ட ஆளுகைக்கு அந்த நாடு 1951 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் தொடக்கம் உட்பட்டிருக்கிறது. அந்த நாளில் இருந்து இலங்கையின் ஆட்சி மற்றும் படைத் தலைமைகள் மட்டுமல்ல அந்த நாட்டிற்கு பொறுப்பான அரசும், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிராகப் புரிந்த இன அழிப்புக் குற்றத்தை பன்னாட்டு நீதிப் புலனாய்வுக்கு தவறாது உட்படுத்திட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

4.     ஐரோப்பிய வல்லரசிய ஆளுகைக்கு முன்னிருந்த  இறைமையை மீட்டுக்கொள்ளும் உரிமையின் பாற்பட்டும், பெரும்பான்மைத் தமிழீழ மக்களின் மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பாற்பட்டும், அளப்பரிய ஈகங்களுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மெய்ந்நிலை அரசொன்றை நடத்தியவர்கள் என்ற வகையிலான இறைமையின் பாற்பட்டும், இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதி என்ற பன்னாட்டு நடைமுறையின்பாற்பட்டும் இறைமையை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும்வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

5.     முள்ளிவாய்க்கால் படுகொலையோடு தமிழின அழிப்புக்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழீழத்தில் தொடர்ந்து  நடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை (Structural Genocide) தடுத்து நிறுத்துவதற்குப் பன்னாட்டுப் பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) ஒன்றை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

6.     மாந்தவுரிமைகளுக்கான ஐநா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரியில் கொடுத்த பரிந்துரைகளான – போர்க் குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாத்தல், சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்தவர்கள் மீது ஐ.நா. உறுப்பரசுகள் எல்லைகடந்த மேலுரிமைக் கோட்பாடுகளின்படி (Universal Jurisdiction) அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும்  அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல், சொத்துகளை முடக்குதல்   ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

7.     தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் பெரும்படை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

8.     போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு வழிசெய்ய பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

9.     போர்க் கைதிகள் உள்ளிட்ட  தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப் பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

10.    தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித் திட்டம், வனத்துறை, வன விலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதற்கான சான்றுகளை அழிப்பதும் தமிழ்ச் சிற்றூர்களின் எல்லைகளை மாற்றியமைப்பதும் மக்களின இயைபை (demographic composition) மாற்றிக் கொண்டிருப்பதும்  உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

11.    தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதை ஏற்று வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்து  குடியியல் ஆட்சியை அங்கு நிறுவும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

12.    இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழர்களின் மரபுவழி தாயகம் என்பதை இந்திய அரசு திட்டவட்டமாக அறிந்தேற்க வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணான தீர்வு எதையும் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

13.    தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களைத் துச்சமாக மதித்தும் சிங்கள-பெளத்த பேரினவாதம் தமிழின அழிப்பு என்ற கட்டத்தை அடைந்துவிட்டதை பொருட்படுத்தாமலும் இந்திய அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வென்று தமிழீழ மக்கள் மீது திணிப்பதற்கு செய்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இம்மாநாடு உறுதியாக மறுதலிக்கிறது.

14.    இந்திய அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்  ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் முயற்சிகள் எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15.    தமிழ்நாடு அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும்,  உலக நாடுகளிடமும் ஐ.நா உறுப்பரசுகளிடமும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16.    தமிழீழத் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் உலகத்திலும் தமிழ் மக்களும் அவர்தம் அமைப்புகளும் தலைமைகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டுநின்று உறுதியோடு போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சிறப்புத் தீர்மானம்:

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழர்கள், தமிழ் முசுலிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களர்கள் “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது. பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள-பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இன சிக்கலுக்குக் குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவடங்கலாக உள்ள மக்களினங்களின் இருப்பும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

இனிய அன்பர்களே!

இந்தத் தீர்மானங்கள் வெறும் சம்பிரதாயம் இல்லை. நீதிக்கான போராட்டமாக இன்று வடிவெடுத்துள்ள ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு மெய்யாகவே துணை நிற்கும் வழி. இதில் யாருக்கு மாறுபாடு இருந்தாலும் விவாதிக்கலாம்.

… (தொடரும்)

தோழர் தியாகு 

தரவு : தாழி மடல் 42

புதன், 12 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 68 : தமிழீழத் தோழமை

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 67 தொடர்ச்சி)

தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை

தமிழ்நாட்டில் தமிழீழத் தோழமை இயக்கம் சற்றே நலிவுற்ற நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கான முகன்மைக் காரணங்களில் ஒன்று: தமிழ்த் தேசியம் – எதிர் – திராவிடம் எனும் கருத்தியல் பிணக்காகும். இது பல நேரம் கருத்தியல் விவாதம் என்ற எல்லையைக் கடந்து கசப்பான சொற்போராகவும் மாறிவிடக் காண்கிறோம். தமிழக அரசியல் ஆற்றல்கள் தமிழக, இந்திய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழத் தோழமைக் கொள்கையில் ஒன்றுபட்டுப் போராடுவது நமக்கொன்றும் புதிதன்று.

1990ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் திலீபன் மன்றம் நிறுவிய போது “ஈழத் தமிழர் துயர்துடைக்க இயன்றதைச் செய்வோம் வாருங்கள்!” என்ற செயல் முழக்கத்தோடு, தமிழ்நாட்டு ஈழ ஆதரவு ஆற்றல்கள் முன்னெடுக்க வேண்டிய கொள்கை முழக்கங்களையும் முன்மொழிந்தோம்:

1)   தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை!

2)   இராசிவு – செயவர்த்தனா உடன்படிக்கை ஈழத் தமிழர் நலனுக்குப் பகை!

3)   தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்!

1991 செட்டம்பர் 15ஆம் நாள் திலீபன் மன்ற அறிமுகக் கூட்டத்தில் இந்த முழக்கங்களை விளக்கிப் பேசினேன். உடனே மா.பொ.க.(சிபிஎம்) கட்சியிலிருந்து என்னை நீக்கினர். செப்டம்பர் 26ஆம் நாள் மயிலை பொட்டி சிறிராமுலு அரங்கில் திலீபன் மன்றம் ஒரு தொடக்கக் கூட்டம் வாயிலாக நிறுவப்பட்டது. பேராசிரியர் சரசுவதி தலமையிலான அன்னையர் முன்னணியுடன் இணைந்து திலீபன் மன்றம் பல முன்முயற்சிகளை மேற்கொண்டது.

பிறகு (1991 இறுதி அல்லது 92 தொடக்கத்தில்) தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் மயிலை கற்பகம் விடுதியில் ஈழ ஆதரவுக் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டினார். தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திலீபன் மன்றம் சார்பில் நான் முன்மொழிந்தேன். கோவை இராமகிருட்டிணன், அருள்மொழி ஆகியோர் என்னை வலுவாக வழிமொழிந்தனர். நெடுமாறனை அமைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அடிப்படையாக மூன்று கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1)   தமிழீழ மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்குத் தீர்வு தனித் தமிழீழமே!

2)   தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம்!

3)   தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுலைப் புலிகளையும் ஆதரிப்பதால் மைய மாநில அரசுகள் எவ்வித அடக்குமுறையை ஏவினாலும் பின்வாங்க மாட்டோம்!

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் அமைப்புகள் மட்டுமே ஒருங்கிணைப்புக் குழுவில் சேரலாம். இவ்வடிப்படையில் நாற்பதுக்கு மேற்பட்ட குழுக்கள், இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்தன. 1991-92 முதல் 2008 வரை சற்றொப்ப இருபதாண்டுக் காலம் இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைத் தோழமை நெருப்பு அணையவிடாமல் காத்தன. நெடுமாறன் அவர்களின் தலைமைக்கு இதில் ஒரு முகன்மைப் பங்கு உண்டு என்பதை அறிந்தேற்கிறேன்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழீழ விடுதலைக்கு நேர்த் தொடர்பில்லாத செய்திகளை நுழைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். எனக்கு நினைவுள்ளது: ஒரு மா-இலெ குழுவைச் சேர்ந்த தோழர்கள் ந்திய விரிவாதிக்க எதிர்ப்பை நான்காவது கொள்கையாகச் சேர்க்க வேண்டும் என்று கூறிய போது நான் அதை ஏற்க மறுத்தேன். ஈழம் தவிர மற்ற வகையில் இந்தியத் தேசியத்தை எதிராகக் கருதாதவர்களும் கோட்பாட்டளவில் ஈழத் தோழமையில் இணைய இடமுண்டு என்று நான் நிலையெடுத்தேன். மொத்தமாகவே இந்திய விரிவாதிக்கத்தை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடுண்டு என்றாலும் ஒருங்கிணைப்புக் குழுவின் மீது அந்நிலைபாட்டைத் திணிக்க இயலாது என்றேன். அப்படித் திணிப்பது போராடும் தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்திச் சிந்திக்காமையைக் குறிக்கும் என்றேன். இத்தனைக்கும் இந்தியப் படையெடுப்புக்கு எதிராகப் புலிகள் வீரப் போர் புரிந்து கொண்டிருந்த காலம் அது.

ஒருங்கிணைப்புக் குழுவில் திராவிடக் கொள்கை, தமிழ்த் தேசியம், பொதுமை, இடதுசாரி என்று எல்லாச் சார்பாளர்களும் இருந்தனர். ஆனால் அந்த அடிப்படையில் எந்தப் பிணக்கும் தோன்றியதில்லை. ஒற்றுமைக்கு எந்த அச்சுறுத்தலும் எழுந்ததில்லை. குறிப்பாகச் சொன்னால், தமிழீழத் தோழமையில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற மோதல் வந்ததே இல்லை. தெருக்களில் சேர்ந்து முழங்கி சேர்ந்து நடந்தோம்.  சிறைகளில் சேர்ந்து அடைந்தோம். திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற விவாதங்கள் அப்போதும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஈழ ஆதரவு இயக்கத்தின் ஒற்றுமை அதனால் கெட்டதில்லை.

2008 பிற்பகுதியில் ஈழப் போர் தீவிரமடையும் வரை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு உயிரோட்டமாக இயங்கி வந்தது. அந்த ஆண்டு அட்டோபரில் இனவழிப்புப் போருக்கு எதிராக இந்தியப் பொதுவுடைமைக்கட்சி  போராட  முன்வந்த போது  நாங்கள் அதனை மனமுவந்து வரவேற்றோம். அந்தப் பட்டினிப் போராட்டத்தில் நானும் வாழ்த்திப் பேசினேன்.

திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் “இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரியும், இந்தியா இலங்கைக்கு ஆய்தம் கொடுப்பதை எதிர்த்தும், போரை இந்தியா நிறுத்தத் தவறினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதென்றும்“ தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி இயக்கமும் நடத்தப்பட்டது.

ஆனால் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி நேரில் வந்து சோனியா காந்தி சார்பில் வேண்டுகோள் வைத்த போது கலைஞர் வேறு எந்தக் கட்சித் தலைவரையும் கலந்து கொள்ளாமலே தற்போக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் கோரிக்கைகளையும் எச்சரிக்கையையும் கை விட்டார்.

ஆனால் போருக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும் கிளர்ந்தெழுந்தனர். மதிமுக, பாமக, இ.பொ.க. விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இலங்கைத் தமிழர் ;பாதுகாப்பு இயக்கம் பிறந்தது. இ.பொ.க. தலைமைக்கு ஒவ்வாது என்பதால் ஈழம் என்ற பெயர் தவிர்க்கப்பட்டதாம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைந்தவுடன், கிட்டத்தட்ட இருபதாண்டுக் காலம் உயிரோட்டமாக இயங்கி வந்த தமிழீழ விடுதலை ஆதர்வாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இயக்கம் முடிந்தது.

ஆனாலும் போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஒற்றுமையின் தேவை கருதி நாங்களும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எடுத்த முயற்சிகளில் விலகி நிற்காமல் செயலளவில் பங்கேற்றோம். திமுக ஒருபுறம் போரை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்த போதே, திமுக ஆட்சி, போர் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராகக் காவல் துறையின் அடக்குமுறையை ஏவியது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இந்திய அரசைத் தனிமைப்படுத்தும் படித் தீவிர மக்கள் இயக்கங்கள் நடத்த முற்படாத போது தோழர்கள் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, நான் மூவரும் கூடிப்பேசி, தமிழர் ஒருங்கிணைப்பு என்ற கூட்டியக்கத்தை நிறுவி, சென்னை வருமான வரி அலுவலக  முற்றுகை, சிங்கள அரசுக்கு இந்தியா படைக்கலன்கள் அனுப்பப் பயன்படுத்திய தஞ்சாவுர் வான் தளத்துக்கு எதிரான முற்றுகை ஆகிய போராட்டங்களை நடத்தினோம். அந்த நேரம் வெளிவந்த தமிழர் கண்ணோட்டம், புரட்சிப் பெரியார் முழக்கம், சமூகநீதித் தமிழ்த் தேசம் இதழ்களில் இந்தச் செய்திகள் விரிவாக இடம் பெற்றன.

போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க இயக்கம் நடத்தும் முடிவு தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில்தான் எடுக்கப்பட்டது.

நடந்த ஒவ்வொன்றையும் பட்டியலிடுவது ஈண்டு என் நோக்கமன்று. நான் வலியுறுத்த விரும்புகிற ஒரே ஒரு செய்தி: தமிழீழ ஆதரவு இயக்கத்தை திராவிடம்  எதிர்  தமிழ்த் தேசியம் என்ற பூசலால் பிளவுபடுத்தத் தேவையில்லை, நாங்கள் அப்படிப் பிளவுபடுத்தவும் இல்லை என்பதே.

இனவழிப்புப் போருக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையைக் கட்ட வேண்டிய கடமையை மறந்து தன்னல அரசியல் நோக்கங்களுக்காக தமிழீழத் தோழமையைச் சிதைக்கும் வேலையை யார் செய்தாலும் புறந்தள்ளும் தெளிவு நமக்கு  வேண்டும். அப்படிச் சிதைப்பது யார்? தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 41