வியாழன், 20 அக்டோபர், 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம்

 அகரமுதல

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |(திவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 06, 2053 ஞாயிறு 23.10.2022 காலை 10.00

தமிழும் நானும்

உரையாளர்கள்:

முதுமுனைவர் சத்தியவேல் முருகனார்

பேரூர் ஆதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார்

சிம்மம் சத்தியபாமா அம்மையார்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                             

வரவேற்புரை: மாணவர் திருமதி போதும் பொண்ணு

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் தமிழன் கார்த்திக்குபுதன், 19 அக்டோபர், 2022

இராசராசன் என்ன மதம்? – தோழர் தியாகு

 அகரமுதல

இராசராசன் என்ன மதம்? 

ஐப்பசி 02, 2053 / 19.10.2022 புதன் இரவு 7.00

தமிழ்நாடு இனி – தொடர் அரசியல் வகுப்பு 100

தோழர் தியாகு

கூட்ட எண் 8641368094

கடவுச்சொல் 12345
ஞாயிறு, 16 அக்டோபர், 2022

தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை- தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்

 அகரமுதல
தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை

தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்.

அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது ஐயன் திருவள்ளுவரின் கூற்று. ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சியே அச்சமூகத்தின் வளமையின் அளவீடு.

அறிவு பெறும் வாயில் கல்வி. “கல்வி சிறந்த தமிழ் நாடு” எனும் சிறப்புக்குரிய தமிழ் நாட்டுக்கென, தமிழ் நாட்டரசு, தனித்த ஒரு கல்விக் கொள்கையை. உருவாக்கி வெளியிடுவது சிறப்புக்கு உரியது மட்டுமல்ல, தேவையுமாகும்.

தமிழ் நாட்டின் கல்விக் கொள்கைக்கென, தாய்த்தமிழ், தமிழ்வழிப் பள்ளிகளின் அமைப்பான, தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் சார்பில் பின்வரும் தெரிவுகளைப் பரிந்துரைக்கின்றோம்.

 1. பள்ளிக் கல்வி

ஒரே வகையான கல்விமுறை

ஒரு சமூகத்தின் நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது, ஒருங்கிணைந்த, அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் அனைவரின் பங்கேற்பு என்பது அனைவருக்குமான சம கல்வி வாய்ப்பின் வழியாகவே அமையும். வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாகக் கல்வி முறை இருத்தல் தேவை.

எனவே, சீரான, சிறப்பான, வட்டார வாழ்வியலுக்கும் இயைந்து அமையும் ஒரே கல்வித்திட்டம் தமிழ் நாட்டுக்கு உருவாக்க வேண்டும். ஒரேவகை பள்ளி, ஒருங்கமைந்த கலைத்திட்டம், பாடத்திட்டம் என ஒரே வகையான கல்விமுறை தேவை.

பயிற்றுமொழி

தாய்மொழிவழிக் கல்வியே உலகம் ஏற்றுக்கொண்ட ஒன்று. தமிழ் நாட்டைவிடப் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடுகளும் தங்கள் மக்களுக்குத் தங்கள் தாய்மொழியில் கல்வியைத் தருகின்றன; அதனால் உயர்ந்து வருகின்றன. உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழிக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய பல மொழிகள் இன்று பயிற்று மொழியாகச் சிறந்து விளங்குகின்றன.

 1. சப்பான், சீனா, கொரியா, செருமனி, பிரான்சு, என அறிவியல் துறையில் வளர்ந்த நாடுகளில் எல்லாம் தாய்மொழியே பயிற்சி மொழியாக உள்ளது. தமிழ் நாட்டின் எழுச்சிமிகு வளர்ச்சி என்பதும் தமிழ்மொழியின் வழியாகவேதமிழ்வழிக் கல்வியின் வழியாகவே அமையும்.
 2. அயல் மொழியின் வழியில் கற்பது குழந்தைகளுக்கு இரட்டைச் சுமை; மொழியைக் கற்பது, பிறகு கருத்தை உள்வாங்கிக்கொள்வது என அமையும். அதனுடன் தாய்மொழிவழிக் கல்வியே சிந்தனையைத் தூண்டக்கூடியது. படைப்பாக்கத்திறனை வளர்க்கக்கூடியது.
 3. அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி முறையை நாம் முன்னெடுக்கின்றோம். வாய்ப்பற்றவர்கள் விடுபடாமல், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வலியுறுத்துகிறோம். மக்கள் அனைவரும் கல்வி பெற, மக்கள் மொழியில் கல்வி வேண்டும். ‘மக்களுக்கான கல்வி மக்கள் மொழியில் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டின் கல்விமொழி, கற்றலுக்கான பயிற்றுமொழி எல்லா நிலைகளிலும் தமிழே இருத்தல் வேண்டும்.
 4. இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 5 ஆம் நிலைவரை, தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறது. தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை, பள்ளிக் கல்வியில் எல்லா நிலைகளிலும், மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்நிலை, மேல்நிலை என முழுமையும் தமிழே என உறுதியாக வரையறை செய்ய வேண்டும். தொடர்ந்து கல்லூரிக் கல்விஆராய்ச்சிக் கல்வி என அனைத்திலும் தமிழை முன்நிறுத்த வேண்டும்.
 5. தமிழ்வழிக் கல்வி எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த காலவரையறை தேவை. 5 ஆம் நிலைவரையான தொடக்க வகுப்புகளில் உடனடியாகவும் பள்ளிக் கல்வியில் முழுமையாக சில ஆண்டுகளிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்த வகை செய்ய வேண்டும்.

 இரண்டாம் மொழி

தமிழ் நாட்டு அரசு, வெளித் தொடர்புகளுக்காக இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கின்றது.

 1. தொடர் கற்றலுக்கும் வெளித் தொடர்புகளுக்கும் இன்றைய நிலையில் ஆங்கிலத்தைக் கற்றல் தேவைப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ் நாட்டின் இரண்டாவது மொழி ஆங்கிலம்.
 2. இரண்டாவது மொழி எந்தச் சூழலிலும் முதல் மொழி அன்று. அது பயிற்று மொழியாக இருக்க வேண்டியதில்லை. இருத்தல் முறையில்லை.
 3. ஆங்கிலத்தை மொழியாகக் கையாளும் திறன்பெற ஏற்ற கல்வித் திட்டம் தேவை.
 4. முதல்மொழியான தமிழில் பெறும் மொழித் திறன்கள் அத்தனையும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தில் பெற வேண்டிய தேவை இல்லை. தொடர் கற்றலுக்கும் தொடர்புக்குமே ஆங்கிலத்தை முன்னிறுத்தி, அதற்கேற்ப அடிப்படைத் திறன்களைப் பெற வகை செய்ய வேண்டும்.
 5. முதல் மொழியைக் கற்றறிந்த பின்னே இரண்டாம் மொழியைக் கற்றல் என்பது கற்றலின் அடிப்படை. இந்த அடிப்படையில் தாய்மொழித் தமிழில் அடிப்படைத் திறன்களைப் பெற்ற பிறகு ஆங்கிலத்தைப் படிப்படியாய்க் கற்பிக்க வேண்டும்.
 6. மொழியியல் அடிப்படையில் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுத்தரும் கலைத்திட்டம் வேண்டும். தாய்மொழித் தமிழைப்போல் ஆங்கிலத்தில் புலமைபெறல் தேவையில்லை.
 7. மூன்றாம் மொழி பள்ளி நிலையில் தேவையில்லை

.அருகமைப் பள்ளிமுறை.

ஒரே வகை கல்விமுறை நடைமுறை படுத்தப்படுத்துவது கல்வியில் சமநிலைக்கான முதற்படி. அருகமைப் பள்ளி முறை சமத்துவத்துக்கான அடுத்த படியாகும்.

 1. இது குழந்தைகளின் கற்றல் சூழலை எளிமையாக்கும்.
 2. புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

தேர்வுகளும் மதிப்பீடுகளும்

தேர்வுகள் கற்பவரின் திறன் நிலை ஆய்ந்தறிந்து, குறை களைந்து, தொடர் கற்றலுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும், அதன் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் அடைய வேண்டிய திறன்களை அடைந்துள்ளனரா என்று ஆய்ந்தறிவதாக  இருக்க வேண்டும்.

அது அச்சுறுத்துவதாகவோ, வடிகட்டுவதாகவோ, தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாகவோ, ஒப்பிட்டு உயர்வு தாழ்வு கற்பிப்பதாகவோ அமையக் கூடாது.

திறன் நிலை ஆய்வும் தொடர் மதிப்பிடல், வளர்நிலை ஆய்வு என்று இருக்கலாம்.

தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பை உணர்ந்தும் வகையில் உயர்கல்விக்கான மதிப்பீடுகளில் தமிழ்ப் பாடத்தில் பெறும் மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஊ. தகைசால் பள்ளிகள்

பள்ளிக் கல்வியில் புதிய முயற்சிகளை முன்னெடுக்க தகைசால் பள்ளிகள் தேவை. தகைசால் பள்ளிகளை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும்.

 1. தகைசால் பள்ளிகள் வெறும் கட்டமைப்பால் அமைந்தவை அல்ல. கல்வி முறையால் அமைவன.
 2. பள்ளிக் கல்வியில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளும் இடமாக இந்தத் தகைசால் பள்ளிகள் இருக்க வேண்டும். அவை வெறுமனே எடுத்துக் காட்டாகச் சொல்வதற்கானவை அல்ல.
 3. தகைசால் பள்ளியின் பயிற்றுமொழி எந்தச் சூழலிலும் தாய் மொழியாகதமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும். இங்கே பயிற்று மொழியாகத் தாய்மொழி அல்லாத ஆங்கிலமாகவோ வேறு எந்த மொழியாகவோ இருத்தல் கல்வியியலின் எல்லா நிலைகளிலும் பிழையானதே.
 4. இப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் புதிய, நல்ல முயற்சிகளைத் தமிழ் நாடெங்கும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தொடரும் கல்வியாண்டில் எடுத்துச் சென்று, தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.
 • மழலையர் கல்வி

குழந்தைகள் தாங்கள் வாழும் சூழலோடு இணைந்து வாழ்கிறார்கள், வளர்கிறார்கள், கற்றறிகிறார்கள். மிகப் பல சூழல்களில் அவர்கள் மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். பழைய கூட்டுக் குடும்ப அமைப்பு, பெரிய குடும்பங்கள், சமூகமாக இணைந்து வாழ்ந்த ஊர்ச் சூழல் இப்போது மாறிவிட்டது. குழந்தைகளின் வாழ்வியலைத் தொலைக்காட்சி போன்றவை வழி நடத்துகின்றன. இந்தச் சூழலில்  பள்ளி செல்லும் பருவத்திற்குமுன் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைக் குழந்தைகளின் முன்பருவக் கல்வியே நிறைவு செய்கிறது. எனவே முறை படுத்தப்பட்ட, நெகிழ்வான, முன்பருவக் கல்வி குழந்தைகளுக்குக் கட்டாயம் தேவைப்படுகிறது.

.  அரசின் மழலையர் பள்ளிகள்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 5 அகவை முதல் குழந்தைகளின் கல்விக்கு உறுதி தருகின்றன. காலச்சூழலில் அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் கல்வியை / முன்பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. தமிழ் நாடு அரசு, தேவையான நிலையில் உள்ள அனைத்து மழலையரும் கல்வி பெறுவதைத் தனது கொள்கையாக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும்.

 புலன்சார் கற்றல்

குழந்தைகளின் அடிப்படை அறியும் வாய்ப்பும் புலன்சார் கற்றலும் அவர்களின் 7 அகவைக்குள் மிகப் பெரும்பகுதி நிறைவடைகிறது. போலச் செய்து கற்று மகிழ்வோர் குழந்தைகள். எனவே அவர்களின் புலன்சார் கற்றலை முதன்மை படுத்திய கல்வித் திட்டமும் கலைத்திட்டமும் மழலையர் கல்வியில் அடிப்படை.  புலனறி திறனும், புலன்வழிக் கற்றலும் நிகழ ஏற்ற வகையில் மாண்டிசோரி கல்விமுறை, செயல்வழிக் கற்றல், உடலியக்கச் செயல்பாடுகள் இணைந்த கற்றல் போன்ற பலவகைக் கற்றல் முறைகளின் ஏற்ற கூறுகளை இணைத்த தனித்த கல்விமுறை பின்பற்றப்பட வேண்டும்.

மழலையர் கல்வித்திட்டம்

மழலையர், முறைப்படுத்தப்பட்ட கல்வி முறைக்குள் நுழையும் இடமே மழலையர் பள்ளிகள். அவர்கள் அடிப்படைத் திறன்கள் பெறும் வாய்ப்பை இந்த மழலையர் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். தனியர்களான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து சமூகத்தின் உறுப்பினர்களாக வளர்ந்து, இணைந்து வாழ்கின்றனர்.. அப்படிச் சமூகத்துடன் இணைந்து வாழக் கற்பதும் எதிர்ப்படும் முரண்களை எதிர்கொள்ளப் பயில்வதும் அடிப்படை. இதற்குத் தேவையான வாழ்க்கைக் கல்வியும் அதைப் பெறுவதற்கான சூழலியல் கல்வியும் அதற்கு அடித்தளமான மொழிக்கல்வியும் (தாய்மொழிக்கல்வியும்) காரண அறிவு பெற உதவக்கூடிய கணக்கும் அவர்கள் கற்றறிய வேண்டியன.

 1. . மொழி என்பது மழலையர் நிலையில் தாய்மொழி அல்லது வாழும் சூழலில் வழங்கும் மொழியையே குறிக்கும். அவர்கள் தாய்மொழியை மட்டும் கற்றலே முறை. அந்தத் தாய்மொழியில் அடிப்படைத் திறன்களைப் படிநிலையாகக் கற்க வகைசெய்ய வேண்டும்.
 2. கணக்கு என்பது வெறும் எண்கள் எனத் தொடங்காமல், அடிப்படை கணக்கியல் தன்மையான ஒப்பிட அறியும் திறன், தொகுத்தறி திறன், பிரித்தறி திறன், என்பதில் தொடங்கித் தொடர வேண்டும்.
 3. சூழலியல் என்பது தன்னை அறிதலில் தொடங்கி, வாழ்வியலையும் வாழும் சூழலைக் கற்றறிவதாகவும், சூழலை எதிர்கொண்டு வாழ அறிதல், உடலியக்கச் செயல்பாடுகளை இணைத்ததாகவும் அமைய வேண்டும்
 4. இவற்றின் அடிப்படையில் அமைந்த கல்வித்திட்டத்தையும் கலைத்திட்டத்தையும் மழலையருக்கான நமது கல்விக் கொள்கையாக நாம் வகுக்க வேண்டும்.
 • உயர்கல்வி

உயர்கல்வி என்பது ஆய்வுகளை மேற்கொள்ளவும் புதிய படைப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தும் தளமாகவும் இருக்க வேண்டும்.

அ. இன்றைய வளரும் உலகின் தேவைக்கும் ஓட்டத்திற்கும் இயைய ஒத்தமைவதாகவும் பயன் தருவதாகவும் இருக்க வேண்டும்.

ஆ. நமது மரபின் செழுமையையும் பண்பாட்டு விழுமியங்களையும் இணைத்து ஆய்வதற்கான வாய்ப்புகள் வேண்டும்.

இ. ஆய்வும் கண்டுபிடிப்புமே நோக்கம் என்பதால் உயர்கல்வியைத் தாய் மொழியில், தமிழ் மொழியில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தாய்மொழியே கண்டுபிடிப்பின் அடித்தளம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

ஈ. உயர்கல்வியைத் தமிழ் வழியில் தருவதேதொடக்கக் கல்வியான பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் பெறுவதற்கான நம்பிக்கையைத் தரும்

 • தமிழ் நாட்டின் கல்வி மொழி

கல்வி, சமூகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல். அதில் தெளிவான தொலை நோக்கான பார்வை வேண்டும்.

அ. தமிழ் நாட்டின் எல்லா நிலைகளிலும் பயிற்று மொழியாகத் தமிழே இருக்க வேண்டும்.

ஆ. உடனடியான பயன், மக்களின் விருப்பம், கல்வி சந்தைப் பொருளாகிவிட்டது, உலகம் தழுவிய பயன், என்றெல்லாம் மயங்காமல், தமிழ் வழியில் கல்வி என்பதை உறுதி செய்ய வேண்டும்

இ. படைப்பாக்க அறிஞர்களாக நம்மவர்கள் உருப்பெறவும் எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் வேலை தேடுவதற்கானதாக இல்லாமல், மாற்றம் நிகழ்த்துவதற்கான கருவியாகக் கல்வி அமையவும்  தமிழ் நாட்டின் எல்லா நிலைகளிலும் தமிழே பயிற்று மொழி என உறுதி செய்ய வேண்டும்.

.  தமிழ் மொழியும் ஆங்கில மாயையும்

தமிழ்மொழியின் தேவையை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மக்களிடம் எழுந்துள்ள ஆங்கில் மாயையை அகற்றுவதும் அரசின் பொறுப்பே.

 1. உரிய அறிஞர்களைக் கொண்டு, மக்களிடம் உள்ள ஆங்கில மாயையை மாற்றி மொழி பற்றிய தெளிவை, தாய்மொழிவழிக் கல்வியின் இன்றியமையாத தேவையை எடுத்துச் செல்ல வேண்டும்.
 2. தமிழ் மொழியின் பெருமிதத்தை உணர்த்தும் வகையில் கல்வித்திட்டத்தை அமைக்க வேண்டும். உலகில் நிகழும் அனைத்து அறிவியல் ஆய்வுகளையும் உடனடியாகத் தமிழில் பெயர்த்து வழங்கும் திட்டம் தேவை.
 3. தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பை உணர்ந்து, உயர்கல்விக்கான மதிப்பீடுகளில் தமிழ்ப் பாடத்தில் பெறும் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் நாட்டரசின் போற்றுதலுக்குரிய வரலாற்று முயற்சியான, தமிழ் நாட்டின் கல்விக் கொள்கையில், எங்களின் இந்த ஆய்ந்தறிந்த முன்மொழிவுகளை ஏற்று,  இணைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

இவண்,

14.10.2022                                             தாய்த்தமிழ்க் கல்விப்பணிக்காக,       

         சிவ.காளிதாசன்                                        வெற்றிச்செழியன்

           (தலைவர்)                                              (செயலாளர்)

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” – சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!

 அகரமுதல
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”

சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை ஆகியன சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது.

அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதகங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச், சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்  அட்டோபர் 12 அன்று மாலை நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடிச் செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். 

முன்னதாக, அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன் அவர்கள் எழுதியுள்ள “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு – ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ஐயா பெ. மணியரசன் நூலை வெளியிட, திருக்கயிலாய வாத்தியக் குழு திரு.கோசை நகரான், ஆசீவகம் சமய நடுவத்தலைமை நிலையச் செயலாளர் திருவாட்டி. கீதா, ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் திரு. வியனரசு, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் திரு. இராமச்சந்திரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், திரளான தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் முதலான திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். 

நிறைவில், த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறினார்.

=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam