சனி, 2 ஆகஸ்ட், 2025

இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

 



(
ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி)


  நிலப்புற அரசுகளும் (States on exile)  இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன.  அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது. இப்பொழுது நிலப்புறத் தமிழ்ஈழம் (Eezham on exile) அமைக்கப்பட்டுள்ளதும் இறையாண்மை மிக்கதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையில் சிங்கள இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளை ஆராய வேண்டும்.

  ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டு மக்களுக்கு எதிராகவோ நம் நாட்டிற்கு எதிராகவோ பிற நாடு  அல்லது பிற நாடுகளுக்கு எதிராகவோ அமைந்தது எனில் அது குறித்து யாரும் பேசலாம் அல்லது எதிராகச் செயல்படலாம் என்னும் பொழுது அந்த இறையாண்மை மீறலால் துன்பங்களுக்கு உள்ளாவோர் அந்த அயல்நாட்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசுவது குற்றமே ஆகாது. மாறாகத்,  தன் நாட்டுமக்களின் உணர்விற்கு எதிராக அந்த நாட்டு அரசின் இறையாண்மையைக் காக்க முற்படும் அரசின் செயல்பாடுதான் குற்றமாகிறது. தமிழர்க்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், தமிழர் படுகொலைகள் நடைபெற்றிருக்காது. தமிழ் மீனவனைத் தாக்கினால் சிங்கள மாணவன் தாக்கப்படுவான் எனப் பேசுவதற்கே தேவையில்லாமல் அரசே உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். இறையாண்மை மிக்க அரசிற்கு எதிராகச் சிங்களம் வாலாட்டாது. இந்தியாவும் இறையாண்மை மிக்க நாடுதானே! அப்பொழுதும் சிங்களம் அஞ்சவில்லையே என எண்ணலாம். இந்திய அரசு என்பது தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. எனவே, ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றும் பொழுது இந்திய இறையாண்மை குறித்துச் சிங்கள இறையாண்மைக்குக் கவலை இல்லை. செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப் பலி கொடுத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே அச்சத்தைத் தெரிவித்துள்ளார் எனில் இந்தியா எப்பொழுதும் தமிழர் நலனில் கருத்து செலுத்தாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், நமக்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், இத்தகைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது. போர்க்குற்றங்களும் படுகொலைகளும் நடைபெற்றிருக்காது, சிங்கள அரசின் கொடுங்குற்றச் செயல்களை இறையாண்மை மிக்க தமிழக அரசு, தானே உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய சூழலில் இந்திய இறையாண்மை சிங்கள இறையாண்மைக்கு வால்பிடித்து அலையும் நிலையும் ஏற்பட்டிருக்காது.

  இத்தகைய குற்றச் செயல் நிகழ்வுகளுக்கு இந்திய இறையாண்மை உடன்படுவதன் காரணம் என்ன? இறையாண்மை மிக்க அரசுகளின் கூட்டிணைவாக ஒன்றிய அரசு அமையாமல் தனி வல்லரசாக நடைமுறையில் மாறியுள்ளதே  காரணம் என்பது எளிதில் யாவர்க்கும் புரியும். எனவே நம் நலன் காக்க நாம் இறையாண்மை மிக்க அரசாகத் தமிழக அரசு விளங்க வேண்டும் என வேண்டுவது முற்றிலும் அறவழிப்பட்டதே. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பொழுதே செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1942 இல் சங்க இலக்கியம் இதழ் மூலம் பின்வருமாறு வினாக்கணை தொடுத்தார்.

“தமிழா சிந்தனை செய்!

வீரத்தமிழா வீறிட்டெழு!

முன்னை நிலையை உன்னிப் பார்!

நாடு – பரந்த தமிழகம் குறைந்ததேன்?

மொழி – உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?

வீரம் – இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?

ஆட்சி – பாவலனைப் போற்றிய காவலனெங்கே?

வாணிகம் – கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?

கொடை – பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே?

தாய்மொழி உயரத் தாய்நாடு உயருமே!”

  இவ்வினாக்களுக்கெல்லாம் தீர்வு வேண்டுமெனில் தமிழகம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்தல் வேண்டும்.கோட்டையில் இந்தியத் தேசியக்கொடியேற்றும் உரிமையைத்தான் முதல்வரால் பெற முடிந்ததே தவிர, அவர் வேண்டியவாறு தமிழக அரசிற்குத் தனிக் கொடியைப் பெற இயலவில்லை. காவல் துறை போன்ற பல துறைகளுக்கெனத் தனித் தனிக் கொடிகள் இருப்பினும் மாநில அரசுகளுக்குத் தனிக் கொடி இருப்பதை இந்திய இறையாண்மை விரும்பவில்லை. நாம், இந்திய இறையாண்மையில் சிக்கியுள்ளதால் இந்தி மொழித் திணிப்பிற்கும் சமசுகிருதமயமாக்கத்திற்கும் ஆளாகி அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திய கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறியும் கூட அதனைச் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க்கடவுள்களுக்கான கோயில்களில் தங்கள் மொழியாகிய தமிழில் வழிபாடு நடத்த முடியவில்லை. ஓர் அரசு ஒரு நாட்டின்மீது நடைமுறை ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துகிறது; ஆனால் அந்த நாட்டின் அரசுடன் இணைந்து செயல்படவில்லை எனில் அந்த அரசு அயலக இறையாண்மை உடையதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய இறையாண்மை என்பது தமிழகத்திற்கு(ம் பிற மாநிலங்களுக்கும்) அயலக இறையாண்மையாக விளங்குகிறது எனலாம்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

http://naamtamilar.org

நட்பு இதழ்

01.01.2011

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 


2

  இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல் தனித்தனியாக இருந்தன. பின்னர் ஒவ்வொன்றாகப் பிரியவும் சேரவும் புதிய புவிப்பரப்பு உருவாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இலங்கையும் ஆப்கானிசுதானும் பிரிந்தன. 1935இல் பருமாவும் (மியான்மர்); 1947 இல் பாகிசுத்தானும் பிரிந்தன. அதேபோல் மாகி-காரைக்கால்- புதுச்சேரிப் பகுதிகளும்(1954), கோவா(1961), சிக்கிம் (1975) டையூ-டாமன்(1987) ஆகியனவும்  இந்தியாவுடன் இணைந்தன. வெவ்வேறு காலங்களில் பெரு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு இந்தியா எனப்படும் பரப்பிலிருந்து சில நிலப்பரப்புகள் பிரிக்கப்பட்ட பொழுதும் வேறு சில நிலப்பரப்புகள் சேர்க்கப்பட்ட பொழுதும் சில நிலப்பரப்புகள் மாற்றியமைக்கப்பட்ட பொழுதும் இந்நிலப்பரப்பின் பெயர் மாற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  பரப்பளவு சுருங்கியும் விரிந்தும் இந்திய இறையாண்மை என்பது இவ்வாறு மாறுதலுக்குள்ளாகும் பொழுது அதனை நிலையானதாகக் கருதி, அது பற்றிப் பேசக் கூடாது என்பது நடைமுறைக்கேற்றதல்ல. ஆளும் அதிகாரம் நாம் வாழும் நிலைக்கு ஊறு விளைவிக்கும் பொழுது அது குறித்துப் பேசித்தான் ஆக வேண்டும் என்பது  உலக நடைமுறையே. மக்களாட்சி மக்களாட்சியாகவே விளங்குவதற்கு இறையாண்மை குறித்த கருத்துப் பரவல்கள் தேவை. எனவே, இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகும் பொழுது  கருத்தாய்வுகள் எழுவது இயற்கையே. இதனை வரவேற்று உரியவாறு செப்பம் செய்யும் பொழுதுதான் இந்திய இறையாண்மை செழுமை அடையும்.நம் நாட்டமைப்பு எத்தகையது எனக் குறிப்பிடும் 26.11.1949 இல் அறிவித்து 1950இல் வெளிவந்த இந்திய அரசியல் யாப்பு  பேரரசாண்மை வாய்ந்த மக்களாட்சிக் குடியரசு   எனக் குறிப்பிட்டது. பின் 1976 இல் நடைமுறைப்படுத்திய திருத்தத்தின்படி, பேரரசாண்மை வாய்ந்த சமநலமை நெறிசார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிடுகிறது. நாம் இறையாண்மை என்பதுதான் இந்திய அரசின் தமிழ் மொழி பெயர்ப்பில் பேரரசாண்மை எனக் குறிக்கப்பட்டுள்ளது.

  இதன் முதல் விதி முதல் உட்பிரிவில் 1.1. இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக  இருத்தல் வேண்டும். எனக் குறிக்கப்பட்டுள்ளது. ‘states’ என ஆங்கிலத்தில் குறிப்பதை மாநிலங்கள் என மொழி பெயர்த்துள்ளனர். எனினும்  ‘united states of America’ என்னும் பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்வது போல் ‘அரசுகளின் ஒன்றியம்’ என்று குறிப்பிடுவதே சிறந்தது. அவ்வாறு குறிக்கும் பொழுது ஒவ்வோர் அரசும் இறையாண்மை மிக்க அரசாக இருத்தலை உணர்த்துவதாகக் கொள்ளலாம். இந்திய ஆட்சியால் ஏற்கப்பட்ட அரசியல் யாப்பின்படி  இந்தியாவை அல்லது பாரதத்தை நாடு என்று கூறுவதுகூடத் தவறுதான். பரத அரசுகளின் கூட்டமைப்பு என்று சொல்லலாம். இங்கே பரதம் என்பது பரதனின் பெயரால் வந்தது அல்ல. இந்நிலப்பகுதி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முற்றிலும் தமிழர்களால் ஆளப்பட்டு வந்த தமிழ்நிலமாக இருந்தது. கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பரதவர்கள் எனப்பட்டனர். பெரும்பான்மைப் பரதவர்களால் சூழ்ந்த நிலப்பகுதி பரதவ நாடு என்றும் பின்னர்ப் பரதநாடு என்றும் அழைக்கப்பெற்றது. இதுவே   பரதனின் பெயரால் அமைந்த நாடு என்று தவறாகவும் எண்ணப்படுகிறது. இதுவே பின்னர் பாரதநாடாகவும் குறிக்கப் பெற்றது. இந்தியா என்ற பெயர்தான் வேண்டுமென்றால் தமிழ் இந்தியா என்று அழைக்கப்படலாம். இனி, எவ்வாறு அழைக்கப்படலாம் என்பது குறித்து ஆராயாமல், தற்போதைய சூழலில் இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது தவறா எனப் பார்ப்போம்.

  இந்திய அரசியல் யாப்பு விதி 19.1.இல் பின்வருமாறு கூறுகிறது. 19.1.அ. குடிமக்கள் அனைவரும், அ.பேச்சு உரிமைப் பேற்றுக்கு மற்றும் சிந்தனை வெளிப்பாட்டு உரிமைப் பேற்றுக்கு உரிமை உடையவர் ஆவர்.இதற்கிணங்க இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது  அல்லது சிந்தனையை வெளிப்படுத்துவது சட்டப்படித் தவறாகாது. இந்திய அரசியல் யாப்பு விதி

  29.1. தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்துரு அல்லது பண்பாடு உடையவராயும் இந்திய ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருப்பவராயும் உள்ள குடிமக்களின் பிரிவினர் எவரும் அவற்றைச் சிதையாது காக்கும் உரிமை உடையவர் ஆவர். எனக் குறிக்கிறது. எனவே, நமது மொழிக்கோ எழுத்துருவிற்கோ பண்பாட்டிற்கோ சிதைவு நேரும் பொழுது அல்லது சிதைவு நேரும் வாய்ப்பு உள்ளது என அச்சம் வரும் பொழுது அது குறித்துப் பேச ஒவ்வொருவருக்கும் உரிமையை நமது அரசியல் யாப்பே தந்துள்ளது.

  மேலும் இந்திய அரசியல் யாப்பு 344.3. இந்தியாவின் தொழில், பண்பாடு, அறிவியல் ஆகியவற்றின்  முன்னேற்றத்தையும் பொதுப்பணிகள் பற்றிய வகையில் இந்தி மொழி பேசாத பரப்பிடங்களைச் சேர்ந்தவர்களின் நேர்மையான கோருரிமைகளையும் நலப்பற்றுகளையும் உரியவாறு  நாட்டத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இந்த விதி இந்தியைப் பரப்புவதால் ஏற்படும் நலக்கேடுகளைக் குறித்தாலும் வேறுவகையிலும் இவ்வாறு நலப்பற்றுகளை நாட்டத்தில் மேற்கொள்ளாமல் அரசுகள் நடந்து கொள்ளும் பொழுது அது குறித்துத் தட்டிக் கேட்கும் உரிமை, நலப்பற்றுகளை இழந்தவர்களுக்கு உரித்தாகின்றது. இருப்பினும் பின்னர்க் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவின் பேரரசாண்மை, ஒருமைப்பாடு, ஏமக்காப்பு, அயல்நாட்டரசுகளுடன் நட்புறவு முதலானவற்றிற்கு எதிராக விதி 19.1.அ. பயன்படுத்தப்படக் கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிணங்கவே அயல்நாட்டு நட்புணர்விற்கு எதிராகப் பேசுவதைக் குற்றமாக அரசு கருதும் நிலைப்பாடு வருகிறது. எனினும் நாம் ஒன்றைப்பற்றிச் சிந்திக்க  வேண்டும். இறையாண்மை என்பது அதிகாரம் உறைதலைக் குறிப்பதால் இந்த அதிகாரமானது நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக மாறும்பொழுது அதைத்தட்டிக் கேட்கும்  உரிமை மக்களுக்கு உண்டு. பலராலும் பலவகையாக விளக்கப்படும் இறையாண்மை   என்பதன் அடிப்படையில் குற்றம் சுமத்துவது நல்லரசிற்கு ஏற்றதல்ல. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சிங்கள அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதைக் குற்றம் எனக் கருதினால் இறையாண்மை இலக்கணத்தின்படி, முப்படைகளும் பொருள்களும் அமைச்சும், நட்பும் அரணும் உடைய தமிழ்ஈழ இறையாண்மைக்கு எதிராக இந்திய அரசு நடந்து கொள்வதும் தவறாகிறது.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

http://naamtamilar.org

நட்பு இதழ்

01.01.2011

மீள் பதிவு

வியாழன், 31 ஜூலை, 2025

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்



  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும் செலுத்தவும் அழிக்கவும் வல்ல மிகுஉயர் அதிகாரம் மிக்க அமைப்பை இறையாண்மை மிக்க அமைப்பு என்கின்றனர். தனியரிடம் அல்லது சிறு குழுவிடம் அல்லது கட்சியிடம் அல்லது பிற வகையில் இறையாண்மை உறைவதைப் பொறுத்து அதன் நிலைப்பாடும் மாறுபடுகிறது. ஆட்சி முறை மாறி வருவதாலும் பெரும்பாலும் இப்பொழுது மக்களாட்சி முறையே வற்புறுத்தப்படுவதாலும் இறையாண்மை பற்றிய விளக்கம் மாறுபடுகிறது.

 உரூசோ, பகுக்கப்படாத, முழுமையான, தவறெனச் சொல்ல  இயலாத, எப்பொழுதும் சரியான, பொதுநலன் சார்ந்த அதிகாரவைப்பை இறையாண்மை என்கிறார். இறையாண்மை இல்லாத சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். எனினும் 1789இல் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பின்பு இறையாண்மை என்பது ஆளுவோரிடமிருந்து நாட்டு மக்களிடம் இட மாற்றம் பெற்றது. மாக்கியவல்லி, உலூதர், போடின், ஆபெசு (Machiavelli, Luther, Bodin, and Hobbes) முதலானோர் இறையாண்மை குறித்து அரசியல் சிந்தனைகளில் முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.அரசை உருவாக்கும் அதிகார ஆளுமை என்றும் வன்முறைக்கு அஞ்சா அரச ஆளுமை என்றும்கூட இறையாண்மை பற்றிய கருத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

  இறையாண்மைக்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே பொருள் என்றும் இருந்ததில்லை எனப் பன்னாட்டுச் சட்டங்களில் வல்லுநரான இலாசா ஓபன்கெய்ம் (Lassa Oppenheim) கூறுகிறார்.சட்டப்படியும் நடைமுறைப்படியுமான (De jure and de facto) அதிகார உரிமையே இறையாண்மை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி இறையாண்மை என்பது குடிமக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளதா? நடைமுறையில் அவற்றிற்குக் குடி மக்கள் கட்டுப்படுகின்றனரா என்பவற்றைப் பொறுத்ததே. ஏட்டுச் சட்டத்தை விட நாட்டுச் செயல்பாட்டிற்கே இது முதன்மை அளிக்கிறது. நிலப்பரப்பு இருந்தால்தான் இறையாண்மை இருக்குமா என்றால் அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை என்பதே உலக வரலாறு உணர்த்தும் உண்மை. இத்தாலி  நாட்டின் வாடிகன் நகரில் அமைந்துள்ள திருத்தல ஆளுகை (Holy See) என்பது  நிலப்பரப்பற்ற இறையாண்மை மிக்கதாகும். இதே போன்ற நிலப்பரப்பற்ற மற்றொரு இறையாண்மை அமைப்பு  இத்தாலியில் உள்ள படைவீரத் துறவிகள் தொண்டகம் (Sovereign Military Order of Malta) ஆகும். பன்னாட்டு அவையிலும் இவற்றிற்குப் பார்வையாளர் தகுதி உண்டு.

  பழந்தமிழ்நாட்டில் இறையாண்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா என்று வினவலாம். அவர்கள் இறையாண்மை பற்றிக் கவலைப்படவில்லை. இறைமாட்சி குறித்துத்தான் கருத்து செலுத்தினர். அஃது என்ன இறைமாட்சி என்கிறீர்களா? இறையாண்மை மாட்சிமையுடன் – சிறப்புடன் – அமைவதைக் குறிப்பதே இறைமாட்சி. இறையாண்மை ஆளும் முறைக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் இறைமாட்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற அறவுணர்வு தமிழர்களிடம் ஓங்கியதாலே இறைமாட்சி குறித்து வலியுறுத்தினர்.தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளின் இரண்டாம் இயலான பொருளியலில் முதல் அதிகாரமாக இறைமாட்சி குறித்துத்தான் விளக்குகிறார். குடிமக்கள் நலன் சார்ந்த இறையாண்மையே இறைமாட்சி மிக்கது என்பதை அவ்வதிகாரத்தின் முதல் குறளிலும் இறுதிக் குறளிலும் குடிமக்கள் பற்றிக் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.

  இவ்வதிகாரத்தின் முதல் குறள் (381)படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்      உடையான் அரசருள் ஏறு.  பொருளியல் முதல் குறள் மூலம் குடிமக்களை அரசின் உறுப்பாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் விளக்குகிறார்.இவ்வதிகாரத்தின் இறுதிக் குறள் (340)கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்             உடையானாம் வேந்தர்க்கு ஒளிஎன்பதாகும்.

  இதன் பொருள், நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும் மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என்கிறார் கலைஞர் .இறைமாட்சி என்றால், அரசனின் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், இறை என்றார். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார் என அரசனை இறைவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார் பரிமேலழகர். காலிங்கர் உலகத்து மக்கட்கெல்லாம் நலிவற்ற ஆட்சியை வழங்க மன்னவர் மாட்சிமை முற்பட வேண்டும் என்பதே இறைமாட்சி என்னும் பொருளில் விளக்குகிறார்.எனவே, இறையாண்மை யாரிடம் உள்ளது அல்லது எவ்வாறு உள்ளது என்பதை விட அது மாட்சிமைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி எனப் புரிந்து கொள்ளலாம். இதுவே உலகோர் போற்ற வேண்டிய தலைசிறந்த நெறியுமாகும்.

  இவற்றின் அடிப்படையில் நாம்  இந்திய இறையாண்மை குறித்து நோக்கலாம்.புவிப்பரப்பில் இயல்பாய் அமைந்த நிலப்பரப்பில் கூடி வாழும் மக்களினம் தம் நலனுக்கெனத் தன்னளவில் கொண்டுள்ள அதிகாரமும் உரிமையுமே உண்மையில் இறையாண்மையாக உருப் பெருகிறது அல்லது அழைக்கப் பெறுகிறது எனலாம். இருப்பினும்  உலகின் பல பகுதிகள் குடியேற்றங்களாலும் ஆட்சிப் பரவலாலும் ஆளுகைப் பகுதிகளாக உருவாகிப் பின்னர் இறையாண்மை மிகுந்த நாடுகளாக விளங்குகின்றன. இதைப்போன்றே இந்தியா என்று இன்று அழைக்கப் பெறும் இந்நிலப் பரப்பும் இயல்பாய் உருவான இயற்கை நாடல்ல. அயலவர்  ஆட்சி வசதிக்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆளுமைப் பகுதியே.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

http://naamtamilar.org

நட்பு இதழ்

01.01.2011

மீள் பதிவு

புதன், 30 ஜூலை, 2025

அயல் எழுத்து அகற்று! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 

அயல் எழுத்து அகற்று! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 


அயல் எழுத்து அகற்று! 2/2

 சிங்களம்:

 

பொடி(சிறிய) >பொடி

பாலம்>பாலம்

அக்கா>அக்கா

குமாரன்> குமாரன்

சுதை(வெண்மை)  > சுதை

கணிகை> கணி

மலர்> மல

பாத்து(உணவு)> பாத்

தூம(ம்)(புகை) > தூம

கரம்> கர (தோள்)

மனிதன்> மனி

உயரம்-உசரம்> உச

நாதம்> நாதய

வீரன்> வீரயா

பூமி> பூமிய

தூது> தூதயா

நரி>நரியா

பெட்டி>பெட்டிய

கோப்பை>கோப்ப

பொத்தகம்>பொதக்

இரவு>இரா

  சான்றுக்கு இங்கே மிகச் சிலதான் அளிக்கப்பட்டுள்ளன. துளு,  குடகு, துதம், கோதம் ,  கோண்டு,  கூ அல்லது கோந்த், இராச்மகால் அல்லது மாலர், ஒரயான் முதலான அனைத்துத் தமிழ்க்குடும்ப மொழிகளிலும் இவைபோல்தான் தமிழ்ச் சொற்கள் உருமாறியுள்ளன. (இவை, ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாற்றி ஒலிக்கப்படல், கடைசி எழுத்து மறைதல், கடைசியில் உகரம் வருதல், தமிழ் எழுத்து கிரந்த ஒலிப்பில் ஒலிக்கப்பட்டு அந்த எழுத்தைப் பயன்படுத்தல் என மிக நீண்ட ஆய்வு விளக்கங்களை மொழிஞாயிறு பாவாணர், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான பல அறிஞர்களும் அறிஞர் காலுடுவெல் வழியில் நின்றும் அவரது ஆய்வுகளில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக்காட்டியும் சிறப்பாக விளக்கியுள்ளார்கள். அவை பற்றிய ஆய்வுரைகளை அவர்களது படைப்புகளில் இருந்து நாம் அறியலாம்.) தமிழ்ச் சொற்கள் செம்மையாக ஒலிக்கப்படாமையாலும் எழுதுவது போல் பேச வேண்டிய முறைக்கு மாறாகப் பேசுவதுபோல் எழுதும் முறையைப் பின்பற்றியமையாலும், அவ்வாறு சொற்களைச் சிதைத்தபின்பு அவற்றை எழுதப் புதிய வரிவடிவங்களை உருவாக்கியமையாலும், அவற்றில் கிரந்தத்தைப் புகுத்தியமையாலும் புதிய மொழிகளாக மாறியுள்ள கொடுமையை நாம் உணரலாம். மேற்குறித்த சொற்கள் எல்லாம் பேச்சிலும் எழுத்திலும் செம்மையான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற நிலப்பரப்பு முழுமையும் தமிழ்நிலமாகத்தானே இருந்திருக்கும். அதனை உணராமல் மேலும் நாம் தமிழ்நிலப்பரப்பைக் குறைக்கும் வகையிலும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அழிக்கும் வகையிலும் எழுத்துச் சிதைவிற்கு வழி வகுக்கலாமா?

  நஞ்சைக் கொடுத்து அமிழ்து என்று சொல்லுவோர் இன்றைக்கு இருப்பது போல் அன்றைக்கும் இருந்துள்ளனர். தமிழ் மொழியின் ஒலி வடிவ, வரி வடிவச் சிறப்பைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் நெடுங்கணக்கு குறைபாடுடையதாக எண்ணி இயல்பிற்கு மாறான வரி வடிவங்களைப் புகுத்தியுள்ளனர். எண்ணையும் எழுத்தையும் கண்களாகப் போற்ற வேண்டும் என வலியுறுத்தியதுடன் அத்தகைய போக்கு தவறு என்பதால்தான் எண்ணெழுத்து இகழேல் என்று அன்றே நம் ஆன்றோர்கள் சொல்லியிருக்கின்றனர். நம்மில் சிலர், இன்றும் அதனைப் புரிந்து கொள்ளாமல் சீர்மையும் சிறப்பும் மிக்க நம் தமிழ் வரிவடிவத்தை இகழ்ந்து குறைபாடுடையதாகப் பொய்யைப் பரப்பி வரிவடிவச் சிதைவிற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். [விளக்கமாக அறிய வரிவடிவச்சிதைவு வாழ்விற்கு அழிவு என்பது முதலான கட்டுரைகளை இவ்வலைப்பூவிலேயே (thiru-padaippugal.blogspot.com) காண வேண்டுகின்றேன்.]

  எந்த ஒரு மொழியிலும் எல்லா மொழிகளிலும் உள்ள ஒலி வடிவங்களுக்கு ஏற்ற வரிவடிவங்கள் அமையா. அந்தந்த மொழி உருவான சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும்தான் வரி வடிவங்கள் அமையும். இதனைப் பிற மொழியாளர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அனைத்து மொழிகளிலும் சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழிக்கு உரியவர்களான நாம் அதனைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டிருப்பினும் வேண்டுமென்றே தமிழ் எழுத்துகளை அழிக்க எண்ணுவோர் வலையில் வீழ்ந்தும் வரிவடிவங்களைக் காக்கத் தவறுகிறோம். எனினும் இத்தகைய அடாத போக்கிற்கு நாம் நம் காலத்திலாவது முற்றுப்புள்ளி இட வேண்டும். அயல் எழுத்து அகற்று என்பதே நம் முழக்கமாகவும் செயலாகவும் இருத்தல் வேண்டும். பிற மொழிச் சொற்களை நாம் பயன்படுத்த உதவும் கிரந்த எழுத்துகளை அடியோடு அகற்ற வேண்டும். அவ்வாறு நாம் செய்வது எந்த மொழிக்கும் அல்லது மொழியாளருக்கும் எதிரானதல்ல. ஏனெனில் கிரந்தம் என்பது மொழியல்ல. தமிழைச் சிதைக்கவும் சமசுகிருதத்தைப் படிக்கவும் உருவாக்கப்பட்ட எழுத்து வடிவங்களே. தமிழைத் தமிழாகவே அறிந்தவர்களும் சமசுகிருதத்தைச் சமசுகிருமாகவே அறிந்தவர்களும் உரிய மொழிக்குரிய வரிவடிவில் அவற்றைப் படிக்கும் வாய்ப்பே போதுமானது. தமிழுக்கு ஆக்கம் தருவதாகக் கூறிக் கிரந்த எழுத்துகளைப் புகுத்துவதும் அவற்றைத் தமிழ் எழுத்துகள் வரிசையில் பாடங்களில் சொல்லித் தருவதும் மிக மிகத்தவறாகும்.

  கிரந்தத்தைப் புகுத்தும் மற்றொரு முயற்சிதான் கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறி என்ற போர்வையில் கிரந்தத்தைப் புகுத்துவதாகும். தமிழ் எழுத்துகளில் கிரந்தத்தைச் சேர்க்கவோ கிரந்த எழுத்து வரிசைகளில் தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பதோ கூடாது என்பது மட்டுமல்ல; மேலே கூறிய காரணங்களால் கிரந்தம் என்பது சீருருவில் அல்லது ஒருங்குகுறியில் இடம் பெறத் தேவையில்லை என்பதையும் நாம் ஒன்றுபட்டு உணர்த்த வேண்டும். கிரந்தத்திற்குத் தனியாகச் சீருரு அல்லது ஒருங்குகுறி இருக்கலாம் என எண்ணுவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். கிரந்த எழுத்துகள் பட்டியலில் தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகள் என்றும் கிரந்த எண்கள் என்றும் இப்பொழுதே காட்டியுள்ளனர். பின்னர், கிரந்தத்தில் இருந்து தமிழ் வரிவடிவம் உருவானது எனக் கூறிப் பல மொழி வரிவடிவங்களுக்கு உதவும் கிரந்தமே போதும் எனக்கூறி அதனை நிலைக்கச் செய்வர். இப்பொழுதே கிரந்த வரிசையில் சில தமிழ் எழுத்துகளும் இருக்கின்றன அல்லவா? சீருரு அல்லது ஒருங்குகுறியில் அவை இடம் பெற்ற பின்பு ஒரே வகை எழுத்து  வெவ்வேறுபட்டியலில் இருக்கும் பொழுது தொழில் நுட்பச்சிக்கல் வரும். அவ்வாறு வருவதை எப்பாடுபட்டேனும் நீக்கலாம் எனச் சிலர் முயன்றாலும் அது தேவையற்ற ஒன்று.

  கல்வெட்டுகளைப் படிக்கக் கிரந்தம் தேவைப்படுகிறது என்பது சிலர் வாதம். இப்போது கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு அவற்றை எல்லாம் விரும்பும் மொழியில் மாற்றம் செய்து ஆவணமாக்கி விட்டால் போதுமானது. இதற்காகக் கிரந்தம் தேவை யென்று அனைவரும் படிக்க வேண்டிய தேவையில்லை. நஞ்சைப் பாலில் கலந்தாலும் பாலை நஞ்சில் கலந்தாலும் தீமைதான். தீமை தரும் கிரந்த நஞ்சு தனியாகவும் இருக்க வேண்டிய தேவையில்லை. இருப்பின் அறியாமை மிகுந்த சிலர் அமிழ்தமென எண்ணிப் பயன்படுத்தித் தமிழுக்கு அழிவு சேர்ப்பர்.

  கிரந்தத்திணிப்பைத் தனிமனிதச் செயலாக எண்ணக் கூடாது. மத்திய அரசின் மொழிக் கொள்கையில் ஒன்று, சிறுபான்மையர் மொழிகளைத் தேவநாகரியில் எழுதுதல் என்பது. எனவேதான், எழுத்துரு இல்லாத சௌராட்டிர மொழிக்குத் தமிழ் எழுத்துரு வடிவினை ஒட்டி எழுத்து வடிவங்களை உருவாக்கிய  பொழுது அதற்கு இடம் தராமல் தேவநாகரியைப் பின்பற்றி எழுத்துவடிவத்தை உருவாக்கச் செய்தனர். இந்த அடிப்படையில் பார்த்தால்தான் கிரந்தத் திணிப்பு என்பது இந்தியா முழுமையும் தேவநாகரியும் கிரந்தமுமே இருக்க வேண்டும் என்னும் சதிச் செயலின் பகுதி எனப் புரியும்.

  கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறியில் கிரந்தத்திற்கு இடம் வேண்டுநர் கூறும் முதன்மைக் காரணங்களில் ஒன்று கிரந்தத்தைப் பயன்படுத்தினால் தென்னாட்டு மொழிகளையெல்லாம் எழுதிவிட முடியும் என்பதும் அதனால், தென்னகம் முழுவதும் கிரந்தப் பயன்பாடே போதும் என்பதும் ஆகும். எனவே, இதன் அடிப்படையில் பார்த்தாலும் இந்தியா முழுவதும் தேவநாகரியும் கிரந்தமும் பயன்படுத்தப்பட வேண்டும்; பிற வரி வடிவங்கள் வேண்டா என்பதே மைய நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  சிலர் ஐந்து தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்ப்பதால் தமிழுக்குப் பெருமைதானே எனத் திரித்து வாதிடுகின்றனர். ஐந்து எழுத்துகளுடன் எகர, ஒகரக் குறியீடுகளும் சேர்க்கப்பட வேண்டும். கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகள் உள்ளன. ழ், ற்,ன் ஆகிய 3 எழுத்துகளைச் சேர்க்கும் பொழுது 16 உயிருடன் சேர்ந்து 48 உயிர்மெய்யாக மாறும். 35 மெய்யெழுத்துகள் உள்ளன. 2 தமிழ்க் குறியீடுகள் சேருவதால் 70  உயிர் மெய் ஏற்படும். ஆக 118 எழுத்துகள் கிரந்த நெடுங்கணக்கில் உருவாக இவை வழிவகுக்கின்றன. இப்பொழுதே சிலர் தமிழில் அறிவியல் முறையில் அமைந்த உகர, ஊகாரக் குறியீடுகளைச் சீரற்று அமைந்துள்ளதாகக் கூறி, கிரந்த உகர, ஊகாரக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். எனவே, அவர்களுக்குத் தமிழ் உகர, ஊகாரக் குறியீடுகளையும் பின்னர் வேறு சில உயிர்க்குறியீடுகளையும் மாற்றுமாறு கோருவதற்கும் ஆளுவோரிடம் செல்வாக்கு பெற்று நடைமுறைப்படுத்தச் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இளைதாக முள்மரம் கொல்க என்பது நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு இட்ட கட்டளை அன்றோ!

  கிரந்தத்தில் உள்ள ஒரு சில எழுத்துகள் தமிழில் இருந்தால் என்ன என்று சிலர் வாதிடுகின்றனர். இப்பொழுதே சில எழுத்துகள் உள்ளனவே, மேலும் சில எழுத்துகள் இருந்தால் என்ன என்றும் சிலர் வினவுகின்றனர். சில மெய்யெழுத்துகள் சேருவதால் நெடுங்கணக்கில் அவற்றின் எண்ணிக்கை கூடுகின்றது. சான்றாக ஜ் எழுத்து சேரும் பொழுது அதன் வரிசையில் உள்ள ஜ, ஜா, ஜி, ஜீ, ஜு, ஜூ, ஜெ, ஜே, ஜை, ஜொ, ஜோ, ஜௌ என உயிர் வரிசை எழுத்துகள் சேருவதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இவற்றைப் போல்தான் பிற கிரந்த எழுத்துகள் திணிப்பும் உண்மையில் பேரளவாகின்றது. ஜங்க்ஷன், ஜாம், ஜிம், ஜீன்ஸ், ஜெயில், ஜேப், ஷர்பத், ஷாமியானா, ஷூ, ஷோ, ஸ்டேசன், ஸ்டூல், ஸ்டூடண்ட், ஸர்ப்பம், ஹால், ஹீட்டர், ஹேப்பி, ஹைவேய், ஸ்ரீ, பரீக்ஷை என்பன போன்று பிற மொழிச் சொற்களை நாம் பேசக் காரணமே அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டு பயன்படுத்த முடிவதால்தான். இல்லாவிடில் உரிய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி யிருப்போம். அவ்வாறு சரியான தமிழ்ச் சொற்களை அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுதுகூட நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டே அதனை ஒலித்திருப்போம். அவ்வாறு ஒலிக்கும் பொழுது அச்சொல் அயற் சொல் என்ற உணர்வு மேலிட உரிய தமிழ்ச் சொல்லை அல்லது புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருப்போம். எனவே, அயற்சொற்களையும் அயல் வரிவடிவங்களையும் நாம் விலக்கி வைத்தால்தான் தமிழ் அழியாமல் நிலைக்கும்.

  கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாவிடில் பல அயற் சொற்களை எவ்வாறு உச்சரிப்பது என நம் மக்களுக்குக் கவலை வருகிறது. ஆனால், இவர்கள் நம் தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது குறித்துச் சிறிதும் கவலைப்படுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பான்மையன  நல்ல தமிழ்ச் சொற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெயர்ச் சொற்கள் உள்ளனவே அவற்றை எவ்வாறு எழுதுவது என்பது சிலரது கவலை. எந்த  மொழியின் பெயர்ச் சொற்களும் பிறமொழியினரால் மூல மொழியின் உச்சரிப்பிலேயே ஒலிக்கப்படுவதில்லை. ஆகவே, நாமும் அது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.  அவரவர் மொழி இயல்பிற்கேற்ப ஒலித்தால் போதும். எடுத்துக்காட்டாக இந்தியா என்பது இந்த், இந்தெ, இந்தியெ, இந்தியா, இந்தொ, இண்டியெ, இண்டியா, இண்ட் என்பன போல் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறாகத்தான் ஒலிக்கப்படுகின்றது. தமிழ் என்பது தமில், தமிரு, டமில், டமிரு, டேமில், திரமிள், திரமிளம் என்றெல்லாம் பலவகையில் அதற்குரிய சிறப்பு எழுத்தான ழ ஒலிக்கப்படாமலேயே சொல்லப்படுகின்றது. ழ என்னும் எழுத்தினை எந்த மொழியினரும் தங்கள் எழுத்து வரிசையில் சேர்த்துக் கொண்டு தமிழ் எனச் சரியாக ஒலிக்கவில்லை.

  பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறும் பலரும், ஆங்கிலம் பிற மொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதால்தான் உலக மொழியானது என்னும் தவறான வாதத்தை முன் வைப்பர். ஆங்கிலம் தன் ஆட்சிப்பரப்பாலும் அதிகாரத்தாலும் உலக மொழியானதே தவிர வேறு காரணம் இல்லை. எனினும் அப்படிப்பட்ட ஆங்கிலம்கூடத் தான் உருவான பொழுது அமைந்த எழுத்துகளைத் தவிர வேறு எந்த எழுத்தையும் சேர்த்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் இடம் தரவில்லை. நாம்தான் பிற மொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துகளையும் பிறமொழிச் சொற்களைச் சரியாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக அயல்வரிவடிவான கிரந்த வரிவடிவங்களையும் பயன்படுத்தி நம் மொழிக்கும் இனத்திற்கும் கேடு செய்து வருகிறோம். இதுவரை தமிழுக்கு நேர்ந்துள்ள கேடுகளை உணர்ந்து இனியாவது தமிழைக்காக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதை உணர்ந்து நாம் அயல் எழுத்துகளையோ அயல் குறியீடுகளையோ தமிழில் கலக்காமல் மொழித்தூய்மையைப் பேண வேண்டும்.

  இந்திய அரசியல் யாப்பு விதி 29.1. மொழிகளும் மொழிகளின் எழுத்துவடிவங்களும் காக்கப்பட வேண்டியதற்கு வழி செய்துள்ளது. எனவே, இதன் அடிப்படையில் வரிவடிவச்சிதைவு முயற்சிகளிலும் கிரந்தக் கலப்பிலும் வேறு அயல் எழுத்து அல்லது அயல்உரு கலப்பிலும் ஈடுபடுவோர்க்குக் கடுந்தண்டனை விதிக்கும் வகையில் சட்டவிதிச் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு சொல்வதை வேடிக்கையாகக் கருதக்கூடாது. எவ்வாறு  சீனாவில் ஆங்கிலச் சுருக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளதோ அதுபோல் தமிழ் மொழி காக்கப்பட தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும். தமிழ் தொடர்பான துறைகளில் தமிழில் புலமைவாய்ந்த தமிழர்களையே நியமிக்க வேண்டும். தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் அமையும் வகையில் பணியமர்த்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழர்க்குத் தேசியமொழி தமிழே என்பதையும் அதைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதையும் பாடநூல்கள் வாயிலாக வளரும் தலைமுறையினருக்கு உணர்த்தித் தமிழ்க்காப்பு உணர்வை விதைத்துப் பரப்ப வேண்டும். "மொழியின் உடல் போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்த பின்னர் மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்?" எனச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வினவி அறிவுறுத்தியதை உள்ளத்தில் கொண்டு தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும் காக்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் உணர்த்தியவாறு எங்கும் தமிழ் எதிலும்தமிழ் என்பதை வாய்உரையாகக் கொள்ளாமல் செயலாக்கமாக மாற்ற வேண்டும்.

களைக அயலொலி! காண்க தமிழ்ச்சொல்!

என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில்

அயல் எழுத்தை அகற்றுவோம்! அன்னைத் தமிழைக் காப்போம்!


இலக்குவனார் திருவள்ளுவன்

 

நன்றி : இதனை வெளியிட்ட/பதிந்த/பகிர்ந்த

தினமணி 03.08.2013

thiru-padaippugal படைப்புகள் 29.12.2010

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் சங்கம் MBHCAA

Dravidian Philosophy

Times of Tamilnadu

http://www.no1tamilnews.com

மடலாடல் குழுக்கள்

முகநூல் குழுக்கள்

அகரமுதல 24.08.2014

வலைப்பூக்கள்

செவ்வாய், 29 ஜூலை, 2025

வெருளி நோய்கள் 176 -180 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 171 -175 : தொடர்ச்சி)


துயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வது அதிர்ச்சி வெருளி.
காரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதையும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
தேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு அதிர்ச்சி வெருளிக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் தொலைவரி(தந்தி) வந்தாலே செய்தி என்ன என்று அறியும் முன்னரே துயரச்செய்தியாக இருக்கும் என்று பேரதிர்ச்சி கொள்வோர் இருந்தனர்.


தீங்கு/பொல்லாங்கு ஆகிய பொருள் உள்ள Harm சொல்லில் இருந்து Horme சொல் உருவானது. தீங்கு விளைவிக்கும் அதிர்ச்சியை இங்கே குறிக்கிறது.
00


நில நடுக்கத் தடுப்புப் பயிற்சி குறித்த வரம்பற்ற பேரச்சம் அதிர் தடுப்பு வெருளி.
பெரும்பாலும் நில நடுக்கத் தடுப்புப் பயிற்சி மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு இவ்வெருளி வருகிறது. பயிற்சியில் ஈடுபடும்பொழுது நில அதிர்வு ஏற்பட்டால் என்னாகுமோ என்று பேரச்சம் கொள்வர்.
00


தாய்வழி அத்தை மீதான அளவுகடந்த பேரச்சம் அத்தை வெருளி.
தாய்வழி அத்தை என்றால் தாயுடன் பிறந்தவரின் மனைவி.
Mater என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தாய். Matertro தாய்வழி உறவைக் குறிக்கிறது.
00


தந்தையுடன் பிறந்த அக்கா, தங்கை அல்லது தாயுடன் பிறந்த அண்ணன், தம்பி ஆகிய அத்தைமார் மாமன்மார் தொடர்பான காரணமற்ற பேரச்சம் அத்தை, மாமா வெருளி.
இவர்கள் கண்டிப்பு மிக்கவர்களாக இருந்தால் அதனாலும் ஒரு வேளை பரிவு மிகுதியாகக் காட்டினால் எரிச்சலுற்று அதனாலும் திருமணம் செய்வதற்குரிய முறைப்பையன், முறைப்பெண் என இவர்களின் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களைத் திருமணம் செய்ய வலியுறுத்தினால் அதனாலும் என இவ்வெருளி உருவாகிறது.
00


அந்தர உந்து(hover car)குறித்த அளவு கடந்த பேரச்சம் அந்தர உந்து வெருளி.
நீரின் மேல் இடைவெளிவிட்டுச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் என்பதுபோன்ற கவலைகளால் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00