சனி, 23 நவம்பர், 2019

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா, கருத்தரங்கம்

அகரமுதல


கார்த்திகை 07, 2050 /

23-11-2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி

இந்திய அலுவலர் சங்க அலுவலகம், ஒளவை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை.

 திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில்

 திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

சிறப்புரை:
திருச்சி சிவா, நா.உ.
ஆ. ராசா, நா.உ.
திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் 
 அன்புடன் அழைக்கும்
தோழர் சுப.வீர.பாண்டியன்
பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
துரை.செ.கண்ணன் (செய்தித் தொடர்பாளர், தி.இ.த.பே)

வெள்ளி, 22 நவம்பர், 2019

குவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை

அகரமுதல

கார்த்திகை 08, 2050 ஞாயிறு 24.11.2019
மாலை 5.00 மணி
குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை
அளவளாவல் : இலக்கிய ஆர்வலர் எசு.திருமலை

புதன், 20 நவம்பர், 2019

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! – பெ. மணியரசன் அறிக்கை!


கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்!
  • தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘சிறீலங்கா பொதுசன பெரமுனா’ கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற ‘ஐக்கிய தேசியக் கட்சி’ வேட்பாளரான சயித்து பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள்.
இராசபக்சே குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய இராசபக்சே பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினார்கள். 2008 – 2009இல் இலட்சக்கணக்கான தமிழ்ப் பொது மக்களையும், விடுதலைப்புலி வீரர்களையும்  இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினார்கள்.
சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை – தமிழர்கள் மீது திணித்ததைப் போலவே, முசுலிம் மக்கள் மீதும் இராசபக்சே அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் இராசபக்சே தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால், கோத்தபய இராசபக்சே மிகப்பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது!
இலங்கையில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள் ஆவர். வரலாற்றில் தமிழர்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளை நிறுவனங்கள் வேட்டையாட வந்தபொழுது, பீரங்கிகளால் தமிழின அரசை வீழ்த்தி சிங்கள அரசையும் வீழ்த்தி ஒரே நிருவாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினார்கள். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வழியாகத் தம் மொழியை – பண்பாட்டை – தாயகப் பரப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தைப் பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.
இலங்கை மக்கள் தொகையில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ‘சிறுபான்மை’ மக்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு. மற்ற சிங்கள மாநிலங்களி்ல் சிங்களரின் மக்கள் தொகை 70 விழுக்காடு.
குடியேற்ற(காலனி) வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளர்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தேர்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்பொழுது நடந்துள்ள இலங்கைத் தேர்தல் மற்றுமோர் எடுத்துக்காட்டு!
“பெரும்பான்மையினரின் முடிவைச் செயல்படுத்துவது” என்ற சனநாயகக் கோட்பாட்டை பல்வேறு இனங்களைக் கொண்ட நாடுகளில் ஒற்றைப் பொருளில் பயன்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக உள்ள இனங்கள் நிலையான அடிமைகளாக வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.
ஏற்கெனவே, பிரித்தானியாவில் (U.K) சிக்கிக் கொண்டுள்ள அயர்லாந்து, காட்லாந்து தேசிய இனங்கள் தங்களின் மொழி மற்றும் இன உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் மூலம் வழியில்லை என்ற முடிவுக்கு வந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்த சனநாயகம் உள்ள நாடாகக் கருதப்படும் பிரித்தானியாவிலேயே இந்த இனப்பாகுபாடு நடந்து கொண்டுள்ளது.
 இதேபோல்தான், இசுபெயினில் சிக்கிக் கொண்ட ‘சிறுபான்மைத்’ தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. சோவியத்து ஒன்றியத்தில் இரசியப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தாங்க முடியாத ‘சிறுபான்மைத்’ தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொண்டன.
அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், ‘சிறுபான்மைத்’ தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்!
இந்த உண்மைக்கான இன்றைய எடுத்துக்காட்டுதான், ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேவுக்கு எதிராக வாக்களித்தும், அந்த வாக்குகள் வலிமையற்றவை – அந்தத் தேர்தல் வெறும் சடங்கு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாணய மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஊழல் மலிந்துள்ளது. இவையெல்லாவற்றுக்கும் இராசபக்சே கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் காரணங்களாக இருக்கின்றன.
போர் வெறி கொண்டு, இலங்கையின் கருவூலத்தைக் காலி செய்தவர், இராசபக்சே! அவருடைய கட்சியைச் சிங்கள மக்கள் பெருமளவு தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? தமிழர்களையும், முசுலிம்களையும் கடுமையாக ஒடுக்குவதில் – அழிப்பதில் முதல் பரிசு பெற வேண்டியது இராசபக்சே குடும்பம் என்ற சிங்களப் பேரினவாத உணர்வு பெரும்பாலான சிங்கள மக்களிடம் இருப்பதுதான் இத்தேர்வுக்குக் காரணம்!
 வெற்றி பெற்ற உடனேயே கோத்தபய இராசபக்சே, “எனக்கு வாக்காளிக்காதவர்களும் என் பக்கம் வாருங்கள், உங்களுக்கும் நான்தான் குடியரசுத் தலைவர். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று மிரட்டல் பாணியில் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள பௌத்த இன ஆதிக்கத்தை – மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையான சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, சிறுபான்மையினரே மரியாதையாக என்னோடு வாருங்கள் என்ற  இராணுவ அழைப்புதான் கோத்தபய விடுத்துள்ள அந்த அழைப்பு!
கோத்தபய இராசபக்சே ஒரே நாடு முழக்கத்தை நரேந்திர மோடியிடமிருந்து எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது.
வடக்கு – கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கும் கண்டமிருக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலப் பகுதிகளில் மணலாறு என்ற தமிழர் பகுதியில் இருந்த தமிழர்களை 1984 வாக்கில் இராணுவத்தை வைத்து வெளியேற்றிவிட்டு, வலுவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தது அன்று வலுவந்தமாக 18 கிராமங்களில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இன்றைக்கு அங்கு சிங்களக் குடியேற்ற ஊர்களின் எண்ணிக்கை சற்றொப்ப நூறு!
மணலாறு என்ற தமிழ்ப் பெயரை ‘வெலிஓயா’ என்று சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். ஏராளமான தமிழ் ஊர்களின் பெயர்களையும் சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். அப்பகுதியின் 90 விழுக்காட்டிற்கு மேல் கோத்தபய இராசபக்சேவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதே பாணி சிங்களக் குடியேற்றங்களைத்தான், இன்றைக்குள்ள வடக்கு – கிழக்கு தமிழர் மாநிலங்களில் வலுக் கட்டாயமாகக் கொண்டு வரப் போகிறது, கோத்தபய ஆட்சி! ஏற்கெனவே, இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். அப்போக்கு இன்னும் தீவிரப்படும்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மேற்கண்ட பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படித்தான் குடியேற்றங்களும், தமிழர் ஆன்மிகத்திற்குப் புறம்பான வடஇந்திய ஆன்மிகத் திணிப்பும் நடந்து கொண்டுள்ளன.
வாக்குரிமை மூலம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளையும் இன உரிமைகளையும் இன அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, இதற்கு மாற்று ஆயுதப்போர் என்று கருத வேண்டா!
 இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருங்கிணைந்து சனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்திச் சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக்  கவனத்தை ஈர்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்கான முதல் தேவை – சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களுக்கு அப்பால் உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டிச் சனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும். தமிழினத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும், பெண்களும் இதுபற்றி சிந்தித்து சரியான முடிவுக்கு வந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும்.
இவ்வாறான ஒருங்கிணைந்த மக்கள் திரள் உரிமைப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடக்கும்போது, தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும். இங்கு சொல்லப்பட்ட படிப்பினைகள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும்!
 கோத்தபய அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கும். அதனால், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் என்று நம்மில் சிலர் கதைக்கத் தொடங்குவார்கள். இந்தக் கதைப்புகளை நம்ப வேண்டா. கடந்தகாலப் படிப்பினைகள் நமக்கு உணர்த்துவது, எதிர்க்க வேண்டியது சீனர்களையா – தமிழர்களையா என்று முரண்பாடு வந்தால், தமிழர்களைத்தான் எதிர்ப்போம் என்று இந்திய அரசு நிலைப்பாடு எடுக்கும் என்பதுதான்! எனவே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் உத்திகளைச் சொல்லும் ‘சிந்தனைச் சிற்பி’களின் ஆசை வார்த்தைகளில் தமிழர்கள் பலியாகக் கூடாது என்ற படிப்பினையும் பெற வேண்டும். உரிமை மீட்பிற்கான வழி மக்கள் திரள் எழுச்சியே!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

செவ்வாய், 19 நவம்பர், 2019

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்

அகரமுதல

சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும்  தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன.
இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார்.
உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! என்னும் தலைப்பில் கவியரங்கமும் உரையரங்கமும் நிகழ்ந்தன.
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் செயலர் கவிஞர் புலவர் உ.தேவதாசு கவியரங்கத்தைத் தாெடங்கி வைத்து நெறியாளராகச் செயல்பட்டார்.
எழில்கலை மன்றம் நிறுவனர் கவிஞர் வேணு.குணசேகரன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி முதல்வர் கவிஞர் வெற்றிச் செழியன், கவிஞர் திருக்குறள் உரையாசிரியர் செம்பியன் நிலவழகன்,
பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் கவிஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்கவிஞர் மின்னூர் சீனிவாசன், கவிஞர் இராசராசன், கவிஞர் வேல் சுபராசர், கவிஞர் வே.கசுமீர் இராசா, உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கத் தலைவர் புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
தொடர்ந்து உரையரங்கம் நிகழ்ந்தது. பேரா.முனைவர் மருதநாயகம் தொடக்கவுரை யாற்றினார். பேரா.இலக்குவனாரின் ஆய்வுச் சிறப்புகளையும் அவர் குறித்த பிற அறிஞர்களின் சிறப்பு மதிப்பீடுகளையும் தம் உரையில் குறிப்பிட்டார். தமிழ்ச் சங்கப்பலகை அமைப்பின் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன், உலகத்திருக்குறள் பேரவையின் திருக்குறள் தூதர்  வெ.அரங்கராசன், ஆகியோர் உரையாற்றினர்.
இந்திய உயர் அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு இரா.கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப., கட்டுரைப்போட்டியில் வென்றவர்களுக்கான மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் & கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள் குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
முனைவர் இரா.அகிலன், திருவாட்டி அ.அரும்பொற்செல்வி ஆகியோர் முதல் பரிசுகளையும் (ஒவ்வாெருவருக்கும் உரூபாய் 1,500/-), திருவாட்டி புனிதா சிவகுமார் இரண்டாம் பரிசையும்(உரூபாய் 500/-) திருமிகு சு.இரேணுகுமார் மூன்றாம்பரிசையும்(உரூபாய் 250/-) பெற்றனர்.
பரிசுகள் வாங்க வராதவராதவர்களுக்கு அவர்கள் பகுதிகளைச்சேர்ந்த அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்கு தெரிவிக்கப்பட்டது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ  வா.மு.சேதுராமன், இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பேராட்டச் செயல்பாடுகளையும் அரசியல் பங்களிப்பையும் குறிப்பிட்டு நிறைவுரையாற்றினார்.
இலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளர் பொறி. இ.திருவேலன், தஞ்சதைத் தமிழ்ப்பித்தன்,  தமிழ் ஆர்வலர் திரு வாசுதேவன் ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு நினைவளிப்பு நூல்களை வழங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய இசைமணி சத்திய சீலனுக்குக் கவிஞர் வேணு.குணசேகரன் தம்முடைய ‘குணத்தமிழ்’ நூலையும் ‘திருத்தமிழ்ப்பாவை’ நூலையும் நினைவளிப்புகளாக வழங்கினார்.
திருப்புகழ் அறக்கட்டளைத் தலைவர் முனைவர் இரா.தேவகி நன்றி நவின்றார்.   
மூலிகைப் பானத்துடன் தொடங்கிய விழா நண்பகல் உணவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

ஒளிப்படங்களை அழுத்திப் பெரிதாகக் காணக.