சுதந்திர தினமா? சுதந்திர நினைவு தினமா?
இலங்கையின் 62ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ‘‘சுதந்திரம்’’ என்பதன் காற்றைக்கூட சுவாசிக்க முடியாத மக்கள் நாட்டில் இருக்கும் போது சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறுவது என்பது வெறும் சம்பிரதாயமான விடயமே அன்றி அதில் உள்ளார்ந்தமான பற்றுதல் ஏதும் இருக்க முடியாது.அதிலும் 2010ஆம் ஆண்டில் நடைபெறும் 62ஆவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.அவ்வாறாயின் இலங்கையின் 62ஆவது சுதந்திரதினத்தை ஆளும் தரப்பு மட்டுமே கொண் டாடவுள்ளது.
அப்படியானால் இலங்கையின் சுதந்திரம் என்பது அர்த்தமற்றதாகி விட்டதென்பது பொருள். குடியேற்றவாதத்தில் இருந்து 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற போதிலும் உள் நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கும், சிறு பான்மை இனத்திற்கும் இடையே‘‘சுதந்திரம்’’ தொடர்பான இழுபறி இருந்தது. குடியேற்றவாத நாடாக இருந்த இலங்கையை அந்நியர்கள் விட்டுச் செல்லும் போது அதனைப் பெரும்பான்மையினரிடம் கையளித்தனர்.
பெரும்பான்மையினர் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளவர் என்ற நம்பிக்கையிலும், நாட்டின் சுதந்திர உரிமையை எங்களிடமும் தாருங்கள் எனக் கேட்பதன் மூலம் தாய்நாட்டுக்குக் கிடைக்ககூடிய சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நினைப்பிலும், சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழ் தலைமைகள் கைதட்டி வரவேற்றன. ஆனால் ஆளும் தரப்பு தலைகீழாக நடந்து கொண்டது.
இலங்கை பெளத்த சிங்கள நாடு என பிரகடனப்படுத்தியது. சிறுபான்மைத் தமிழர்களை ஓரங்கட்டியது. காலத்திற்குக் காலம் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டனர். தமிழ்த் தலைவர்களின் அகிம்சை வழிப்போராட்டங்கள் அடக்கப்பட்டன. அதன் விளைவு முப்பது வருட ஆயுதப் போராட்டம். ஆயுதப் போராட்டம் வென்றதா? தோற்றதா? என்று மேடையேறி கேள்வி கேட்பதை விட, யுத்தத்தால் இந்த நாடு இனமத பேதமின்றி அழிவுகளை சந்தித்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதே அவசியமானதாகும்.
ஆயுதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு முப்பது வருடம் தேவைப்பட்டது என்று கூறுவதாயின், அதனை நிரந்தர சமாதானத்தின் மேடையில் ஏறிநின்றே கூறமுடியும். இல்லையாயின் அடுத்த முப்பது வருடத்தின் பின் மீண்டும் இந்த நாடு யுத்தத்தை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.எனவே இலங்கையில் ‘‘சுதந்திரம்’’ என்பது சுதந்திர தினமாக அன்றி, சுதந்திரம் கிடைத்த நினைவு தினமாக மட்டுமே உள்ளது.8
(Visited 19 times, 19 visits today)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக