சனி, 28 மார்ச், 2020

குவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020

அகரமுதல

குவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020

பங்குனி 16,2051 / 29.03.2020
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி

செயமோகன் சிறுகதை சோற்றுக்கணக்கு குறித்து

குவிகம் அளவளாவல் நிகழ்வு

இணையம் மூலம் நடைபெறும்.

இதில் பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் திரு சுந்தரராசன் அவர்களை 9442525191 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வெள்ளி, 27 மார்ச், 2020

நம் எண்களை அறியாமல் இருக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்


  நம் எண்களை அறியாமல் இருக்கலாமா?


தமிழ் எண்கள் என்றால் என்ன? தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா?  அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு? அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா? பிற மொழியினர் அவ்வாறு தத்தம் மொழி எண்களைப் பயன்படுத்தும் பொழுது நாம் மட்டும் தமிழ் எண்களை விலக்கி வைப்பது தவறல்லவா? இந்தியாவில் உள்ள பிற மொழியினர் அன்றாடப் பயன்பாட்டில் கூடத் தங்களுடைய மொழி எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நாம் நம் எண்கள் என்ன என்று தெரியாமல் இருப்பது நமக்கு இழுக்கல்லவா? எனவே, நம் எண்களை நாம் அறிவோம்!
தமிழ் எண்களைக் குறிப்பிடும் பாடல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் பலராலும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது கம்பர் கால ஒளவையார் பாடிய பாடல் ஒன்று. அப்பாடல்  ‘எட்டேகால் இலட்சணமே’, எனத் தொடங்கும். தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்னும் எழுத்தாலும் கால் என்பதை ‘வ’ என்னும் எழுத்தாலும் குறிப்பர். எனவே எட்டே கால் இலட்சணம் என்றால் அவலட்சணம் என்றாகிறது. பாடல்களில் மட்டுமல்ல அன்றாடப் பயன்பாடுகளிலும் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தமிழில் ஒன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களும் மேல்வாய் இலக்கம் எனப்பட்டன. கோடி என்றால் கடைசி என்று பொருள். இப்பொழுதும் கோடி வீடு, கடைக்கோடியில் என்றெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் கோடி என்பதே கடைசி எண்ணாக இருந்துள்ளது. பின்னர் மிகுதியான பல எண்கள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை எண்ணால் குறிக்காமல் எழுத்தால் குறித்துள்ளனர். அவ்வாறு பேரெண்களைத் தாமரை, வெள்ளம்,  ஆம்பல் என்ற முறையில் குறிப்பிட்டதை உணர்த்தும் வகையில் தொல்காப்பிய நூற்பாவும் உள்ளது.
சங்க இலக்கியமான பரிபாடலில் நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்கள் குறிக்கப்படுகின்றன.ஒன்றுக்குப் பிறகு 52 சுழியன்களை அல்லது சுன்னங்களைச் சேர்த்துக் குறிப்பிடும் பேரெண் பூரியம் எனப்பட்டது. இப்பொழுது 1 இற்கு அடுத்து 20 சுழிகள் உள்ள எண்ணைப் பூரியம் எனக் குறித்துக் குறிப்பிட்டு வருகின்றனர். இது தவறாகும்.
ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை கீழ்வாய் இலக்கங்கள் எனப்பட்டன.
அவை ஒன்றுக்குப் பின்னே இருப்பதால் பின்னம் எனப்பட்டன. அவை இருவகையாகப் பகுக்கப்பட்டன. ஒன்று என்னும் முழு எண்ணை இரண்டு இரண்டாகப் பகுத்துப் பயன்படுத்தும் முறைமை ஒன்று. இப்பகுப்பு, அரை – ½, கால் – ¼, அரைக்கால் – 1/8, வீசம் அல்லது மாகாணி – 1/16, அரைவீசம் – 1/32, கால்வீசம் – 1/64, அரைக்கால்வீசம் – 1/128, என்ற வகையில் அமையும்.
மற்றொரு பகுப்பு முறைமை ஒன்று என்னும் முழுமையான எண்ணை ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்வது. இதில் நான்மா – 1/5, இருமா – 1/10, ஒருமா – 1/20, அரைமா – 1/40, காணி – 1/80, அரைக்காணி – 1/160, முந்திரி – 1/320, எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும். இத்தகைய பின்னங்களும் தமிழ் எண்களால் குறிக்கப்பட்டிருந்தன. அதுவே, தமிழுக்கு உள்ள சிறப்பு.
தமிழில் கணக்கியலை விளக்கும் வகையில், ஏரம்பம், சினராலயம், கணித இரத்தினம், சிறு கணக்கு முதலிய பல நூல்கள் முன்பு  இருந்துள்ளன. இன்றும் கணக்கதிகாரம், ஆத்தான கோலாகலம், கணித தீபிகை  ஆகியவை இருக்கின்றன.
தமிழ்க்கணக்கு நூல்களில் தமிழ் எண்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பின்ன வாய்ப்பாட்டிலும்தமிழ் எண்கள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த எல்லைக் கற்களிலும் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தியர் ஆட்சியில் அவை காணாமல் போயின. ஆங்கிலேயர் ஆட்சியில் பணத்தாள்களில் தமிழ் எண்கள் இருந்தன. இன்றும் மொரிசீயசு பணத்தாளில் தமிழ் எண் உள்ளது. ஆனால் இந்தியர் ஆட்சியில் பணத்தாளில் தமிழ் எண்கள் தொலைக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழுக்கு இருந்த முதன்மை, இந்தியர் ஆட்சியில் இல்லாமல் போனது. அப்படி என்றால் இந்தியாவில் தமிழும் தமிழரும் இல்லையா?
  இருபத்து மூன்று என்றாலும் உ(இரு) ௰ (பத்து) ௩ (மூன்று) உ௰௩ என்றும் இருநூற்று இருபத்து ஏழு என்பது உ௱உ௰எ எனவும் முன்னர்க் குறிப்பிட்டனர்.
  உரோமன் முறையும் இவ்வாறுதான் ஆனால் உரோமன் முறையில் மாற்றம் செய்தால் எண்மதிப்பு மாறும். சான்றாக 15 என்பது I என்பதையும் என்பதையும் V சேர்த்து IV எனக் குறிப்பிட்டால் ‘4’ என ஆகிறது. X என்பதையும் என்பதையும் V சேர்த்து XV என எழுதினால்தான் எண் மதிப்பு சரியாக அமையும் ஆனால் தமிழில் இடமதிப்பிற்கு ஏற்க ‘கரு’ என எழுதினால் மதிப்பு மாறாது. எனவே இவ்வழக்க முறையையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பத்திரப்பதிவு முதலான ஆவணங்களில் பழைய முறைபின்பற்றப்பட்டு வந்துள்ளதை உணர்ந்து அவ்வெண்களை நாமும் அறிந்து பின்பற்ற வேண்டும்.
  ௦(0), ௧(1), ௨(2), ௩(3), ௪(4), ௫(5), ௬(6), ௭(7), ௮(8), ௯(9), ௰(10)
என்பனவே,   சுன்னம் அல்லது சுழியம் முதல் பத்து வரையிலான தமிழ் எண்கள். இவ்வெண்களிலிருந்தே இன்றைக்குப் பயன்படுத்தும் அடைப்பிற்குள் குறிப்பிட்டுள்ள 0 முதல் 10 வரையிலான அடிப்படை எண்கள் உருவாயின. பின் வரும் படம் தமிழ் எண்கள் எவ்வாறு உலக எண்களாக மாறியுள்ளன என்பதைக் காட்டும்.
பத்திற்கு மேல்,
௰௧(11), ௰௯(19), ௨௰(20), ௨௰௧(21) …..௯௰௯(99), ௱௧ (101)… ௯௱ (900), ௲ (1000), ௲ ௱(1100), ௲௯௱(1900), ௨௲(2000), …. ௯௲(9,000), ௰௲(10,000), … ௯௱௲(90,000), ௱௲(100,000) ௱௱௲(100,00,000)
என்பனபோல் எழுத வேண்டும். அஃதாவது அறுபத்து ஏழு என்றால் ஆறு பத்தும் ஏழும் என்பதுபோல் ஆறு பத்தைக்குறிப்பிட்டு ஏழைக் குறிக்க வேண்டும். எண்பதாயிரத்து எட்டு என்றால் எட்டுபத்துஆயிரமும் எட்டும்என்பதுபோல் குறிக்க வேண்டும். அறுபதில் ஆறு பத்துகள் உள்ளமையையும் எண்பதாயிரத்தில் எட்டு பத்தாயிரம் உள்ளமையையும் குறிப்பதுபோல் எல்லா எண்களையும் விரித்துக் கூற வேண்டும்.
பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது.  ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘க0’ என்றே குறிக்கின்றனர். ‘௰’ எனக் குறிப்போரும் 11 முதல் கக, உ௩, ௪அ என்பன போன்று பயன்படுத்துகின்றனர். அஃதாவது பத்து ‘௰’ வர வேண்டிய இடத்தில் ஒன்றைக்/’ க’  குறிக்கின்றனர். இருபது, முப்பது, நாற்பது முதலானவை வரும் இடங்களில் பத்து எண்ணை விலக்கி விட்டு இரண்டு, மூன்று, நான்கு என்பனபோல் குறிக்கின்றனர்.
கீழ் வாய் இலக்கம்

இவைபோன்ற பெருமதிப்பிலான எண்களும் மிகவும் குறைந்த மதிப்பிலான பின்ன எண்களும் வேறு எம்மொழியிலும் நடைமுறையில் இல்லை. இதன்மூலம் பழந்தமிழரின் கணக்கு அறிவியல் தலைசிறந்து இருப்பதை உணரலாம்.
 மேலும் சுழி என்றும் குறிக்கப்படும் ‘0’ ‘சுன்னம்’ தமிழர்களின் கண்டுபிடிப்பே; பிற மொழிகளில் ‘சுன்ன’ என்பது போன்று மாறி அளிக்கப்படுகிறது.
  பயன்பாட்டில் இல்லாத எதுவும் மறைந்தொழியும், எனவே தமிழின் வடிவங்களைப் பிரிவு எண்கள், துணை எண்கள், உட்பிரிவு எண்கள் போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.
திண்ணைப்பள்ளிக்கூடங்களிலேயே பல்வகைக் கணக்குகளும் நீட்டலளவை, முகத்தலளவை,  எண்ணிக்கை அளவை முதலலான பல வகை அளவை முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டன. அவற்றை நாம் தனியாக வேறொரு கட்டுரை மூலம் பார்ப்போம்.
அறிவியலுக்கு அடிப்படை கணக்கு என்பதால் கணக்கறிவியலில் உயர்நிலையுற்றிருந்த பழந்தமிழர் பிற அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு நாம் தாய்த்தமிழ் வாயிலான கல்வியையும் இழந்து தமிழர்க்குரிய கல்விமுறையையும் இழந்து அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். இனியேனும் விழித்தெழுவோமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, மார்ச்சு 17, 2020

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3


இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டு பண்ணுகின்றன; ஆதலால், அவற்றுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யான் எழுதியதை விட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டுகொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடையெழுதப் பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ் வுண்மையைச் சொல்வது நல்லதென எண்ணுகின்றேன். நடையெழுதக் துவங்குவோர் தாம் உயர்நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதுவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும் விட உண்மையான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப்படுதற்கு பல ஆண்டுகளின் பழக்கம் இன்றியமையாதது வேண்டப்படும்“.
(Quoted in Meikle John’s The Art of Writing Enlighs, ப, 128), என்ற ஆங்கிலமொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்தி பேசியிருக்கின்றார்.
ஆங்கிலமக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக கொள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழையநாளில், ஐரோப்பாவின் வடமேற்கு மூலையிற் றோன்றிய சுடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானிய தீவின்கண் வந்து புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில் வென்று அவர்தம்மை தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்கு பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்து படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கள் கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச்சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் வந்தகாலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்குமேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந்திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்தநிலையி லிருந்து பின்னர்க் காலந்தோறும் பலமொழிக் கலப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப் பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலாதென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கமாட்டாதது என்று எனவுந் தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பல மொழிச் சொற்களோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க.
இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்றமட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்கவேணடுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்து வருகவராயிற், பண்டைக்காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த், தாம் ஒருவர்கீழ் அடங்கி வழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கைவைத்துத், தமது செந்தமிழ்மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ்மக்களின் கால் வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்க வேண்டும்! அதற்காக நாட் எவ்வளவு எடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றை மொழிச்சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டுகின்ற தன்றோ?
பண்டைநாளில் ஆரியப் பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கியிருந்து தமிழைவளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார்போற் றம்மைத்தாமே உயர்த்துக்கொண்டு, தமிழரைக் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிகமுயன்றும் அதுமுற்றுங் கை கூடாமையின்  தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப் பெரிதும் மாசுபடுத்தி வருகின்றார். அப்பார்ப்பனர் வலையில் சிக்கிய தமிழ்ப்புலவர் சிலரும் அச்சூழ்ச்சியை பகுத்துணர்ந்து பாராது ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பு‘ போல், அவ்வாரிய பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித்தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றனர்! ஐயகோ! பண்டுதொட்ங்கி புனிதமாய் ஓங்கிநிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச்சொற்களென்னுங் கோடாரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப்புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப்புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும் எம்போல்வராது நல்வினைச்செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமையாகாதென்று உணர்மின் நடுநிலையுடையீர்!
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
தனித்தமிழ் மாட்சி

புதன், 25 மார்ச், 2020

மகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்

மகுடையில் இருந்து காத்திட…


அஞ்சுவதற்கு அஞ்சு!
ஆற்றாமை வேண்டா!
இல்லத்திலேயே இரு!
ஈட்டமாய்(கூட்டமாய்) இராதே!
உறவாயினும் விலகி நில்!
ஊருக்குள் போகாதே!
எச்சரிக்கையாய் இரு!
ஏதுமிலார்க்கு உதவு!
ஐயம் வந்தால் மருத்துவரைப்பார்!
ஒவ்வொன்றிலும் தூய்மை பார்!
ஓராது நம்பாதே!
ஒளதம்(நோய் நீக்கி) உட்கொள்!
இலக்குவனார் திருவள்ளுவன்

மகுடைக்குக் காலன்! – ஆற்காடு க. குமரன்

மகுடைக்குக் காலன்!


தனித்திருக்கிறேன்
விழித்திருக்கிறேன்
பொறுத்திருக்கிறேன்
வெறுத்திருக்கிறேன்!

காலனாக வரும்
மகுடைக்குக்
காலனாகக்
காத்திருக்கிறேன்!

என்னைத்தொற்றும் நோய்மி
என்னோடு அழியட்டும்!
என் உயிரைக் குடிக்கும் அதன்
உயிரைக் குடிக்கிறேன் நான்! 

என் தலைமுறைக்காக
என் தலை வீழத்
தயங்கேன்!

என்னுயிரோடு
இந்நோய்மி  இறக்குமாயின்
மண்ணுயிர்க்கிரையாய்
மாண்டிடத் துணிகிறேன்!

மகுடையைக்
கொல்லத் தனித்திருப்போம்
விழித்திருப்போம் காத்திருப்போம்!

இவண்

ஆற்காடு க. குமரன்

9789814114

இதுதான் தமிழர் பண்பாடா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி


இதுதான் தமிழர் பண்பாடா?

காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை.
தருமபுரியின் இளவரசன்-திவ்வியா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடத் தொடர்கதையாகி விட்டது.
போதாததற்குத், தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துகளையும் வன்முறைகளையும் பரப்பத் தவறுவதில்லை என்பது வேதனைக்குரியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும் வயதிலேயே பிள்ளைகள் காதலிப்பது போல் படம் எடுத்து அதையே பெரிய காப்பியம் போலப் பீற்றிக் கொண்டது நம் திரையுலகம். இன்று அதுவே, படிக்கும் இளைஞர்கள் கையிலிருந்து நூலைப் பிடுங்கி விட்டு “மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டு” என சாதித் துருவேறிய அரிவாளைத் திணிக்கிறது!
இப்படிக் காதலுக்கு எதிராகச் செயல்படும் அனைவருமே அதற்குப் பண்பாடு, ஒழுக்கம், கற்பு போன்றவற்றைக் காரணம் காட்டுகிறார்கள்.
அப்படியானால் காதல் தமிழ்ப் பண்பாடு இல்லையா?
காதலிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா?
காதல் திருமணம் கற்புநெறிக்கு எதிரானதா?
எனும் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன!
இவற்றுக்கு விடை காணச் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’ நமக்குக் கரம் நீட்டுகிறது என எண்ணலாம்.
சங்க இலக்கிய நூல்கள் மொத்தம் பதினெட்டு இருந்தாலும் அவற்றுள் பண்டைக் காலத் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்கள், மரபுகள், இயல்புகள், அந்தக் காலத்தின் தன்மை, இயற்கைச் சூழல் என அனைத்தையும் அறியச் சிறந்த நூலாகப் பரிந்துரைக்கப்படுவது கலித்தொகைதான்.
அப்படிப்பட்ட தமிழர்தம் காலப்பெட்டகத்திலிருந்து (time capsule) இதோ ஒரு காட்சி.
காதலனுடன் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்காகத் தாய்-தந்தையைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் தலைவி. இந்தக் காலத்தில் நாம் இதை ‘ஓடிப் போதல்’ என்கிறோம். ஆனால், சங்கத் தமிழ் இதை ‘உடன்போக்கு’ எனும் அழகிய சொல்லால் அழகு செய்கிறது. அதாவது இணைந்து வெளியேறுதல்! யாருடன் இணைந்து எங்கிருந்து வெளியேறுதல்? காதலனுடன் இணைந்து பெண் தன் வீட்டை விட்டு வெளியேறுதல்!
அப்படி உடன்போன தன் மகளைக் காணாமல் தேடிக் கொண்டு வரும் தாய், எதிரில் வரும் அறம் உணர்ந்த சான்றோர்களைப் பார்த்து, “கொள்கையும் ஒழுக்கமும் உடைய சிறந்தவர்களே! மற்றவர்களுக்குத் தெரியாமல் இதுநாள் வரை கூடி வாழ்ந்த என் மகளும் இன்னொருத்தியின் மகனும் இந்த வழியாகப் போனதைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறார்.
அதற்கு அவர்கள், “பார்த்தோம்! சிறந்த நகைகளை அணிந்த அந்த இளம்பெண்ணின் தாயே, அழகிய பெருமகனுடன் பாலைவனத்தையும் கடந்து போகத் துணிந்து இந்தக் காட்டின் வழியே செல்கிறாள் உங்கள் மகள். அவள் மிகுந்த கற்புடையவள்! சிறந்த ஒருவன் பின்னால்தான் அவள் சென்றிருக்கிறாள். அவளுக்காக நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அவள் எடுத்த இந்த முடிவுதான் சிறந்த அறவழியும் கூட!” என்று அறிவுரை கூறி அந்தத் தாயைத் திரும்பி வீட்டுக்குப் போகுமாறு வழிநடத்துகிறார்கள். (கலித்தொகை: பாலை-9).
காதலிப்பவனையே மணப்பவள்தான் கற்பில் சிறந்தவள். அப்படித் திருமணம் செய்து கொள்வதற்காகப் பெண் தன் வீட்டை விட்டு வெளியேறுவது கூடத் தவறில்லை. மாறாக, அதுவே அறம் சார்ந்த வழி” என இன்றைய சாதி வெறியர்களின் கன்னத்தில் அறைகிறது இந்தச் சங்கத் தமிழ்ப் பாடல்.
அது மட்டுமில்லை, “மற்றவர்களுக்குத் தெரியாமல் இதுவரை சேர்ந்து வாழ்ந்தவர்கள் (தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்)” என அந்தத் தாய் குறிப்பிடுவதிலிருந்து அந்தக் காலத்தில் பெண்ணும் ஆணும் திருமணத்துக்கு முன்பே கூடும் (sex) வழக்கம் இருந்திருப்பதும் தெரிய வருகிறது.
“கற்பை உடலுடன் தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள்! அது மனம் சார்ந்தது; ஒழுக்கம் சார்ந்தது” என இன்று கரடியாய்க் கத்துகிறோம். ஆனாலும், பெரும்பாலானோருக்கு அது சென்று சேரவில்லை. ஆனால் இந்தத் தெளிவு தமிழர்களுக்கு அன்று இருந்திருப்பது இந்தப் பாடலிலிருந்து புரிகிறது. அதனால்தான் உடலை ஒரு பொருட்டாகக் கருதாமல் மணம் புரியும் முன்பே கூடுவது அவர்களால் முடிந்திருக்கிறது.
மொத்தத்தில், தனக்குப் பிடித்தவனைக் காதலிக்கும் உரிமையும் காதலித்தவனையே கரம் பற்றும் துணிவும் தமிழ்ப் பெண்ணுக்கு அந்தக் காலத்தில் இருந்திருப்பதைக் கிறித்துப் பிறப்புக்கு முன்பே எழுதப்பட்ட இந்தப் பாடல் உறுதிப்படுத்துகிறது. தவிர, மக்களுக்கு அறநெறிகளை எடுத்துரைக்கும் இடத்திலிருந்த அந்தக் காலத்துப் பெரியவர்கள் – சான்றோர்கள் கூட இதை ஆதரிப்பவர்களாகத்தாம் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
இந்த ஒன்று மட்டுமில்லை, சங்க இலக்கியங்களில் பண்டைத் தமிழகத்தின் காதல் வாழ்வுமுறை பற்றி இப்படிப் பற்பல பாடல்கள் உள்ளன.
தலைவனும் தலைவியும் வீட்டுக்குத் தெரியாமல் காதலிப்பது, பிறர் அறியாமல் சந்திப்பது, அதற்குத் தோழி உதவுவது, தலைவன் பணம் ஈட்டுவதற்காக (சம்பாதிப்பதற்காக) ஊரை விட்டு வெளியேறினால் தலைவியும் அவனுடனே சென்று விடுவது போன்றவை அப்பாடல்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
உலகில் தமிழர்களைப் போலவே நீண்ட நெடிய வரலாறு கொண்ட இனங்கள் மேலும் சில உண்டு. அவர்களுடைய ஆதிகால இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் அனைத்தும் கடவுளைப் போற்றுபவையாகவும் ஏதோ ஒரு வகையில் கடவுள் தொடர்பானவையாகவும்தாம் இருக்கின்றன. கிரேக்கக் காப்பியங்கள், ஆப்பிரிக்க நாடோடிக் கதைகள், ஆரியத் தொன்மங்கள், எகிப்தியப் பழங்கதைகள் என அனைத்தும் இப்படித்தாம்.
ஆனால், தமிழர்களின் பழம்பெரும் நூல்களான சங்க இலக்கியங்களோ காதலையும் வீரத்தையுமே பெரிதும் பாடுகின்றன. மொத்தமாகவே அகம் (காதல்) – புறம் (வீரம்) என்கிற இரு பெரும் பிரிவுகளாகத்தாம் அவை பகுக்கப்பட்டுள்ளன. அதிலும் புறத்திணையை விட அகத்திணையே அதிகம்!
சங்க இலக்கியத்தின் மொத்தப் பாடல்கள் 2381. அவற்றுள் 1862 பாடல்கள் அகம் பாடுகின்றன. அதாவது தமிழர் வாழ்வியல் – வரலாற்று – பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியங்கள் அதிகம் போற்றுவதே காதலைத்தான்!
“அப்படியானால் காதல் திருமணம் மட்டும்தான் தமிழர் வழக்கமா? மாமன் மகள், அத்தை மகன் எனக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததெல்லாம் நமது பண்பாடில்லையா?” என நீங்கள் கேட்கலாம். ஆனால், சிந்தித்துப் பார்த்தால் அது கூட ஒரு வகையில் காதல் திருமணம்தான் என்பதை உணர முடியும்.
அடிப்படையில் காதல் திருமணம் என்பது என்ன? ஒருவரோடு பழகி, புரிந்து கொண்டு, அதன் பின் மணப்பதுதானே? அப்படிப் பார்த்தால் சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடி, உறவாடி, பழகிய அத்தை மகனையோ மாமன் மகளையோ கட்டிக் கொள்வதும் காதல் மணம்தானே?
இப்படிப்பட்ட மண்ணில் உட்கார்ந்து கொண்டு காதலை நம் பண்பாட்டுக்கு எதிர், கற்பு நெறிக்கு முரண், ஒழுக்கமில்லாத செயல் எனவெல்லாம் சிலர் பிதற்றுகிறார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்குத் தமிழர் வரலாறு பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிக் காதலுக்கு எதிராக மீசை முறுக்கும் அனைவரும் சொல்லும் இன்னொரு காரணம், “எங்கள் சாதியில் இதுவரை வேற்று சாதி இரத்தம் கலந்ததே இல்லை; இனியும் கலக்கக்கூடாது” என்பது.
ஆனால் சங்கக் காலத்திலோ பெண் தான் விரும்பிய எந்த ஆணையும் காதலிக்கலாம், கைப்பிடிக்கலாம் எனும் உரிமை இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சமூகத்தில் கலப்பில்லாத சாதி என்கிற ஒன்று எப்படி இருந்திருக்க முடியும்?
சொல்லப் போனால், சாதி என்பதே அன்று இல்லை! தமிழர்களை மேல் – கீழ் எனப் பிரித்து நம் இனத்தின் எல்லா வீழ்ச்சிகளுக்கும் மூலக் காரணமான சாதி என்பது ஆரியச் சாதியர் வருகைக்குப் பிறகுதான் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை தமிழ் மண்ணில் வெறும் குடிகள் மட்டுமே இருந்தன. “துடியர், பாணர், பறையர், கடம்பர் ஆகிய நான்கு தவிர வேறு எதுவும் குடி இல்லை” எனச் சங்க இலக்கியமான புறநானூறு கூறுவது இதற்குச் சான்று (பாடல் 335). ஆனால் அவரவர் குடிகளுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் அன்று கிடையாது.
இப்படிக் குடிகளாக வாழ்ந்த தமிழ் மக்கள்தாம் பின்னாளில் சாதியினராக மாற்றப்பட்டிருக்கிறார்கள் எனும்பொழுது இதில் எது கலப்பில்லாத சாதியாக இருக்க முடியும்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குடி விட்டுக் குடி காதலித்தும் மணம் புரிந்தும் வாழ்ந்த நம் முப்பாட்டன்-முப்பாட்டிகளின் அதே உதிரம்தானே சாதியாக மாறிய பின்பும் நம் உடம்பில் ஓடுகிறது? அப்படியிருக்க இதில் எதுதான் கலப்பில்லாத உதிரம் எனச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னால் அதை விட முட்டாள்தனம் வேறெது இருக்க முடியும்?
எனவே தமிழர்களே!
 உண்மையிலேயே நீங்கள் தமிழ்த் தாய்-தகப்பனின் உறவுகளெனின் காதலை எதிர்க்காதீர்கள்!
காதலர்களை வாழ விடுங்கள்! தமிழ்ப் பண்பாட்டை வாழ விடுங்கள்!
ஆம்!
காதலே நம் பண்பாடு! காதலே நம் ஒழுக்கம்! காதலே நம் கற்பு நெறி!
வாழ்க காதல்! வாழ்க தமிழ்!
    – ஊடகவியலர் இ.பு.ஞானப்பிரகாசன்
தினச்செய்தி 24.03.2020

திங்கள், 23 மார்ச், 2020

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்


திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4
1.0.0.நுழைவாயில்
            “குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை”  என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.
            இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக் கேடு.
2.0.0.வறுமை ஒழிப்பில் திருவள்ளுவரின் பெருமொழிகள்
            அலைக்கழிக்கும் வறுமைபற்றித் திருவள்ளுவர்  தொலை நோக்குப் பார்வையோடு  அன்றே ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றார்.
வறுமை என்னும் பொருள் தரும் சொற்களாக அற்றம், இன்மை, தாழ்வு, துவ்வாமை, நிரப்பு, நல்குரவு, பசி, துனி ஆகியவற்றைக்  குறிப்பிட்டதிலிருந்தே,  வறுமை பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுபற்றி அறியலாம்.
            விளவு..? வறுமை ஒழிப்புபற்றித் தெளிவாக — திருத்தமாக — விரிவாக — விளக்கமாக — அழுத்தமாக — ஆழமாக அனைத் துக் கூறுகள்சார் சிந்தனைகளையும் உலகம் தழுவிய உயர்நோக்குடன் உலக நூல் திருக்குறளில் அழகுறப் பதிவு செய்துள்ளார்.      
          பக்க வரையறை கருதிச் சிற்சில குறட் சான்றுகளே இந்த ஆய்வுக் கட்டுரையில் அளிக்கப்படுகின்றன.
3.0.0.ஆய்வுக் கட்டுரையின் நோக்கு
மேற்குறிப்பிட்ட திருவள்ளுவப் பதிவுகளை எல்லாம் கண்ட றிந்து, வகைதொகை செய்து, அலசி, ஆராய்ந்து உலகிற்கு அறி விப்பதும் அவற்றை வையம் எல்லாம் வாழ்வியல் ஆக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.
4.0.0.பொருள் உரை வரைவு முறைமை
இந்த ஆய்வுக் கட்டுரையில் எல்லாக் குறள் அடிகளுக்கும்  குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் எனும் முறைமையில் பொருள்கள் வரையப்படுள்ளன. 
5.0.0.அழிக்கும் வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்..?  குறள்கள் — 10
            “என்பு இல் அதனை வெயில்போலக் காயும் [குறள். 77]” வறுமையை — வறுத்தெடுக்கும் வறுமையை ஏன் வேரறுக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் தரும் காரணங்கள் இங்குக் கூறப்படுகின்றன.
எல்லாக் குறள் அடிகளுக்கும்  குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் என்னும் நிலையில் பொருள்கள் வழங்கப் படுகின்றன. 
5.1.0.அக்குறள்கள்:
            247,532,552, 1042, 1043, 1044, 1045, 1046, 1047, 1048. 
பேராசிரியர் வெ.அரங்கராசன்
 முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிகோவிற்பட்டி — 628 502