சனி, 6 பிப்ரவரி, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010

05 February, 2010 by admin

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத் தொடக்க நிகழ்வு 25/01/2010 திங்கள் மொழிப்போர் ஈகியர் நாளன்று கோடியக்கரைக் கடற்கரையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜி.பி.இராமமூர்த்தி தலைமை வகித்தார். ம.தி.மு.க வழக்குரைஞர் காசிநாதபாரதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் தியாகு நெடுநடைப் பயணக் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் திரு சீதாராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உப்பு நீரில் கால் நனைத்துப் பயணம் தொடங்கியது.

கோடியக்கரையிலிருந்து வேதாரண்யம் வழியாக நெடுநடைப் பயணம் இரவு 8 மணியளவில் ஆயக்காரன்புலம் வந்தடைந்தது. ஆயக்காரன்புலத்தில் நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க தோழர் எல்.இளங்கோவன் தலைமை வகித்தார். உலகத் தமிழர் பேரமைப்பைச் சார்ந்த பரந்தாமன் தமிழ்த் தேச வெளியீடான ”முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பயணக்குழுத் தோழரும் பெண்ணாடம் மனிதநேயப் பேரவை அமைப்பாளருமான பஞ்சநாதன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். இறுதியாக தோழர் தியாகு நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார்.

வாய்மேடு, கரியாப்பட்டினம், ஓரடியான்புலம், தலைஞாயிறு, மணக்குடி, எட்டுக்குடி, திருக்குவளை, திருப்பூண்டி, வேளாங்கண்ணி மற்றும் பல சிற்றூர்களைக் கடந்து 30.01.2010 ஆம் நாள் மாலை நடைப்பயணம் நாகை வந்தடைந்தது. மாலை 6 மணியளவில் அவுரித் திடல் மறைமலையடிகள் அரங்கத்தில் தமிழ் சார்ந்த அமைப்புகள் சார்பில் நெடுநடைப் பயணத்தை வாழ்த்திப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடைப் பயணத் தோழர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பயணக் குழுவின் சார்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி சுதா காந்தி உரையாற்றினார். அவர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

”இந்தத் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடு நடைப் பயணத்தின் வாயிலாக தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்று எங்கள் பொதுச் செயலாளர் கூறினார். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும் என்று நாங்கள் கேட்டதற்கு, தமிழ் நாட்டில் ஆறு கோடித் தமிழர்கள் இருக்கும் போது ஏன் முடியாது என்று திருப்பிக் கேட்டார்.

”வேளாங்கண்ணியிலிருந்து, எங்கள் பயணம் நாகை வந்து கொண்டிருந்த வழியில் நான் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். எதற்காக நடந்து. செல்கிறீர்கள்? எனக் கேட்டார். நான் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கிச் சொன்னேன். தாய்த் தமிழ் பள்ளிகளுக்காகவும், தமிழ்த் தேசம் ஏட்டிற்காகவும் இயக்க பணிகளுக்காகவும் ஒரு கோடி ரூபாய் திரட்டும் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனே அந்த மூதாட்டி தன் சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்த சில்லறைக் காசுகளைச் சரிபாதியாய்ப் பிரித்தார். அவருக்கு ஆறு ரூபாய் எடுத்துக் கொண்டு என்னிடம் ஆறு ரூபாயை நன்கொடையளித்தார். என்னை மனமார வாழ்த்தியும் அனுப்பினார். தமிழ்த் தாயே என்னை வாழ்த்தி ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாக நான் எண்ணிக்கொண்டேன்.”

பயணத்தின் தலைவரும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு தனது ஏற்புரையில், மீனவர்களும் உழவர்களும் ஏனையப் பிரிவு மக்களும் தமிழர்களாக ஒன்றுபட்டு போரடுவதின் மூலமே இழந்த உரிமைகளை மீட்க முடியும் என்ற கருத்தை எடுத்துரைத்தார்.

இறுதியாக வைகோ தனது சிறப்புரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

தமிழ்நாட்டில் குறள்நெறி தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்க, காவிரி, பவானி, பாலாறு, முல்லைப் பெரியாறு, அமராவதி ஆகிய ஆற்றுரிமைகளை மீட்டெடுக்க, தமிழக மீனவர் உயிரையும் உரிமையையும் பாதுகாக்க இந்தத் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு தொடங்கியுள்ளார்.

”… உடையணியாமல் காட்டுமிராண்டித்தனமாக மனிதன் வாழ்ந்த காலத்தில் ஆடையணியும் நாகரிகத்தைக் கொண்டு வந்தவனே தமிழன்தான். இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ளி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன். இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் பதவியே பெரிதென்று இதற்குத் துணை போகிறார்.

”மரக்கலன்களைச் செலுத்திக் கடல் வணிகத்தைப் பெற்றுத் தந்தவனும் தமிழன்தான். இத்தகைய தமிழினம் ஈழத்திலே அழிந்து கொண்டிருந்தபோது இங்கு 61/2 கோடித் தமிழர்கள் இருந்தும் என்ன செய்தோம்.

”நம் தலைநகரான டெல்லிக்கே வந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராசபக்சே துணிச்சலாகக் கூறினான். ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கேடுகள் செய்து இலங்கையில் யுத்தத்தை நடத்தியதே இந்திய அரசுதான். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு இந்திய அரசுதான் காரணம்…”

31.02.2010 காலை நாகையிலிருந்து அந்தணப்பேட்டை சென்று தமிழர் தன்மானப் பேரவையின் தலைவர் தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே) அவர்களை அவர் வீட்டில் பயணக்குழுத் தோழர்கள் சந்தித்தனர். அங்கிருந்து புறப்பட்டு சிக்கல், ஆவரானி-புதுச்சேரி, வடக்காலத்தூர், தேவூர் வழியாக கீழவெண்மணி சென்றடைந்தனர்.

ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வுக் கேட்டு அதைத் தர மறுத்த நிலப்பிரபுத்துவ வர்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் சங்கம் கண்டு செங்கொடியேந்தி உறுதியோடு போராடினர். இதன் விளைவாக ஆதிக்க வர்க்கம் 44 உயிர்களை ஒரே குடிசையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. அந்த வெண்மணித் தியாகிகளின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீர வணக்கம் செலுத்தி உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வில் வெண்மணியின் மூத்த தோழர் இராமையனும் கலந்து கொண்டார். அந்தப் புனித மண்ணிலிருந்து இப்பயணத்திற்குக் கொடையாக ஒரு பிடி நெல் கேட்டோம். வசந்தா எனும் அம்மையார் ஒரு பிடி நெல் எடுத்து வந்தார். தோழர் தியாகு அதைத் துண்டேந்தி பெற்றுக் கொண்டார்.

நினைவிடம் முன்பு தோழர் தியாகு சொல்ல சொல்ல பயணக்குழுவினர் ஏற்ற உறுதிமொழி இதுதான்:

“வர்க்கச் சுரண்டலுக்கும் வர்ண சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடி உயிருடன் எரிக்கப்பட்ட வெண்மணியின் ஈகச் சுடர்களே! நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் வர்ண சாதி ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடவும் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடி தமிழ்த் தேசியச் சமூக நீதிப் புரட்சியை நடத்தித் தமிழ்த் தேசிய சமூக நீதிக் குடியரசு அமைக்கும் போராட்டத்திற்கு எம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்க உங்கள் பெயரால் உறுதி ஏற்கிறோம்.”

கீழவெண்மணியிலிருந்து புறப்பட்டு கீழ்வேளூர், சோழிங்கநல்லூர், திருமருகல், வடகரை, ஆண்டிபந்தல் வழியாக பயணக்குழுவினர் நன்னிலம் சென்றடைந்தனர். வழினெடுகிளும் அறுவடையில் ஈடுப்பட்டிருந்த உழவர்களும், உழவுத் தொழிலாளர்களும் தமிழ் மீட்பு நிதியத்திற்கு நெல் கொடுத்தனர். இன்று 03.02.2010 பயணத்தின் பத்தாம் நாள். இன்னும் முப்பத்தேழு நாட்கள் மீதம் உள்ளன. இன்னும் 800 கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருக்கும். 12.03.2010இல் குடந்தையில் பயணம் நிறைவடைவதற்கு முன் நூற்றுக் கணக்கான ஊர்களுக்குச் சென்று இலட்சக் கணக்கான மக்களைச் சந்திக்க உள்ளது தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம். பயணத்தின் வெற்றிக்கும் தமிழ் மீட்பு நிதியத்தின் வளர்ச்சிக்கும் ஒல்லும் வகையெல்லாம் உதவிட உலகத் தமிழர்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: தமிழ் மீட்பு நிதியத்திற்கு நன்கொடையளிக்க விரும்புவோர். பின்வரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

G.Natarajan, State Bank of India, Thanjavur branch, savings bank account number: 10857678873.

Contact number: 0091- 92831 10603, 0091- 97919 58888






Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1698

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக