வியாழன், 4 பிப்ரவரி, 2010

தமிழக அரசு உடனடியாக ஈழ ஏதிலிகளை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கண்டனம்

பதிந்தவர்_யாழினி on February 3, 2010
பிரிவு: பிரதானச்செய்திகள்
[ஆடியோ] செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர், இதை அடுத்து தமிழக அரசு உடனடியாக ஈழ ஏதிலிகளை விடுதலை செய்ய வேண்டும், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் 60 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கியூ பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டவர்களாகும்.

இவர்கள் கடந்த புதன்கிழமையுடன் 20 ஆவது தடவையாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த முறை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் தெரிவித்து அதன் படி நேற்று உண்ணாவிரதமும் துவக்கினர். செங்கல்பட்டு ஏதிலிமுகாம்களில் உள்ளோர் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் காவல்துறை எந்தவொரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அத்துடன், வழக்குகளை கொண்டு செல்வதற்கும் அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் முகாமில் 5 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றார்கள், சிலரின் வழக்குகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், திறந்த முகாமில் இருக்கும் அவர்களின் உறவினர்களிடம் இணைந்துகொள்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு போகக்கூட அனுமதிக்கப்படவில்லை இலங்கையில் தமிழர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று, செங்கல்பட்டு முகாமிலும் கொடுமை நடைபெறுகின்றது, முகாம்களில் இருப்பவர்களில் அநேகமானோர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். சிங்கள ஏகாதிபத்தியத்தின் முள்வேலி முகாம்களை விட அதீத கட்டுப்பாட்டுடன் இங்கு எம் சக தமிழன் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்வது இங்குள்ள தமிழன் ஒவ்வோருவருக்கும் பெருத்த அவமானம் ஆகும். தமிழன் உலகின் எல்லா மூலைகளிலும் அடிபட்டான், கடைசியாய் ஆறறைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழர் தேசத்திலும் இந்த அவலம்.

இந்த நிலையில் தமிழக அரசு தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலை இருந்த எம் ரத்த உறவுகள் மீது காவல்துறை மிருகத்தனமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.தமிழக அரசு உடனடியாக எம் அனைத்து தமிழ்ச்சொந்தங்களையும் விடுதலை செய்ய வேண்டுமாயும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமாயும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

(Visited 118 times, 118 visits today)


Read more: http://meenakam.com/?p=5127#ixzz0eVuwXMAe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக