சனி, 31 டிசம்பர், 2022

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 





நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நானிலம் சிறக்கவே

நன்னெறி காணவே

நலம் திகழவே

வளம் நிறையவே

அல்லன அழியவே

நல்லன பெருகவே

நல்லோர் உயரவே

இல்லார்க்கும் வல்லார்க்கும்

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

எல்லார்க்கும் வாழ்த்துகள்

நடைமுறை யாண்டில்

என்றென்றும் வாழிய!

– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா

 அகரமுதல




மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும்

எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர்.  இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா?

சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்..

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்…

உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும்.

அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும்.

பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வேர்ச்சொல்லின் வழியிலான சொற்பிறப்பியலையும் கண்டறிந்தார். இது இருவகைக் கண்ணறைகளின் நகரும் நகரா இயற்கை அறிவியலையும்  விளக்கியுரைக்கும் நுட்பம் வியப்புக்குரியதே.

வேர் நீரைத் தேடி நகர்கையில் முன் தட்டுப்படும் பொருளின் உறுதித் தன்மைக்கேற்ப, அதனைத் தாண்டலாம்; துளைக்கலாம்; அல்லெனில் வளையலாம். வளைந்து திரும்பலாம்.

வளைதலுக்கு முன் முட்டுப்பட்ட வேரின் நேர் நகர்வு முடங்கும், முடங்கிய நகர்வு வளைதலால் தொடரும்; ஆனால் அது வளைவு பெற்ற நகர்ச்சியாகும்.

எனவே, வளைதலால், வளைவு, வட்டம், கோணல், கோடல், நேர் எதிர் திரும்பல், வருதல் முதலானப் பல்வகைக் கருத்துகள் பிறக்கும்.

அவ்வாறு வளைதலால் எதிர் நிலைக் கருத்தை உணர்த்திப் பிறந்த சொல்லே மறை என்பது.

உல்> முல்> மல்> மறு.

வளைந்து எதிர் நிலைக்குத் திரும்பியதால் முந்தைய செல்கைக்கு எதிர்முகமாய் நிற்பது. இது முரணி மறுத்தல் கருத்தை உணர்த்தியது.

முரண் என்பதுவும் அவ்வாறு எதிர்நின்ற கருத்தை உணர்ததும் வளைவுப் பொருள் வேர் விளைச்சலே.

உல்> முல்> மல்>மறு > மறை

இங்கே மறை மறுப்புப் பொருளை உணர்த்தி நிற்கும். எதிர் நிலையில் நின்று மறுத்தலால் எதிர்மறை ஆயிற்று.

வளைவே வட்டமுமாகும். வட்டமாய்ச் சுழன்று சுழன்று வருவது சுழற்சியாகவும் சுழற்சி ஒழுங்கெனவும் கொள்ளப்பெற்றது. சுழற்சியாய் ஓர் ஒழுங்கிற்குள் அமையும் அனைத்து  வினைகளும் வட்டப் பொருளையே தந்தன.

தடவை, தாட்டி, வாட்டி, சுழற்சி , முறை என அமைந்த சொற்கள் அனைத்தும் வட்டப் பொருளைத் தந்தனவே.

உல்> முல்> முறு > முறை = சுழற்சியாய் அமைந்த ஒழுங்கு.

முறு > முறுக்கு = வளைத்து நெளித்தல்

( முருகன் எனும் பெயர்ச்சொல்லின் வேர்  வளைதல் பொருளைத் தராது. அது தோன்றல் வேர்கருத்தை அடியாகக் கொண்ட இளைமைக் கருத்துச் சொல்லாகும். )

நேர்முறை என்பது நேரியவாறு அமைந்த ஒழுங்கமைவு எனப்பொருளாகும்.

இங்கு மறையும் முறையும் ஒரே வேர் கருத்தினின்று  பிறப்பினும் ஒன்று மறுப்பையும் மற்றொன்று ஒழுங்கமைவையும் குறிப்பதாகும்..

வளைவுப் பொருளில், மறுத்தல் , திரும்பல் கருத்தில் பல்வேறு சொற்களைப் பட்டியலாய்க் காணலாம்..

மறு, மறை, மாறு, மாற்று, மற்று, மற்றை , மறுபடி, மறுக்களி, மற்றொன்று, மற்றப்படி, மற்றவர், மாற்றான் முதலியன வளைதல் கருத்தில் மறுதலைப் பொருளைத் தருவனவே.

மறை கலங்கல் கருத்து வேரிலிருந்து கருமைப் பொருளைத் தந்து இன்மைப் பொருளைத் தந்தும் இயங்கும். ஒரே சொல் ஒரே வேரில் பிறப்பினும் இரு வேறு கருத்தில் பிறந்ததுவால் இருவேறு பொருளைத் தந்து விளங்கும்.

உல் > சேர்தல் கருத்தைத் தரும் வேர்.

முன் விளக்கப்பட்டது போல்  வேர், முன்னோக்கி நகர்ந்து முட்டுப்படும் பொருளோடு ஒட்டுவதை, சேர்வதை, கலப்பதை விளக்குவதே கலத்தல் அல்லது சேர்தல் கருத்து வேராகும்.

சேரல், கலத்தல், பொருந்தல், இணைதல், கரைதல் அனைத்தும் இக்கருத்துப் பற்றியனவே.

பக்கவேரினின்று கிளைவேர்களும் சல்லி வேர்களும் பிறப்பது போல் சொற்களுக்குள்ளும் கிளைக் கருத்துகளைத் தரும் சொற்களும் பிறக்கும்.

தெளிந்த நீரில் பிற கலந்தால் அல்லது கிண்டி கலக்கினால்  கலங்கல் உருவாகுவது போல் சேர்தலால் கலங்கல் கருத்து உருவாகும். கலங்கியது கருக்கலாகும் அல்லது கருமையாகும் . கலங்கிய கருக்கலில் தெளிவற்ற இருண்மை உருவாகி உட்பொருள் தெரியாதும் போகும். தெளிவற்றுத் தெரியாது போதலே மறைதல்.

உல்> முல் > மல் = கருமை கருத்து வேர்.

உல்> முல்> மல் > மய் > மை = கருமை

உல்> முல்> மல் > மால் = கருமை நிறம், திருமால்

உல்>மல் > மால் > மார் > மாரி  = மழை

உல்> முல்> மல் > மால்> மாய் > மாயம் = மறைவு

மாய் > மாயோன்

மல்> மய்> மயக்கம் = கலக்கம், குழப்பம், தலைச்சுற்றல்

உல்> மல் > மறு > மறை = காணாதிருத்தல், ஒளித்தல்

மறை = பிறர் அறியாதவாறு  ஒளித்தல்,

கள்ளர் அறியாவண்ணம் விலை உயர் பொருட்களை மறைத்து வைத்தலால் , மறை காத்தல் பொருளையும் கிளைக்கருத்தாய்த் தந்தது.

உயர் கருத்துகளைப் பொதித்து வைத்திருப்பதால் அரிய நூல்கள் மறை நூல்கள் எனப்பட்டன. அத்தகு கருத்துகள் மறைபொருள், மறைமொழி  எனவும் கூறப்பட்டன.

மறைமொழி தாமே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியமும்

நிறைமொழி மாந்தர் மறைமொழி என வள்ளுவமும் மறை பற்றி விளக்கியுரைப்பதைக் காணலாம்.

எதிர்மறையில் அமைந்த மறையும் மறைமொழியில் அமைந்த மறையும் ஒருபொருளனவல்ல.

எதிர்மறை போல் நேர்மறை எனல் தவறே.

நேர்முறை எனல் நேரொழுங்காகும். எதிர்மறை , எதிர்நின்று மறுதலையாய் அமைவது. நேர்மமும் எதிர்மமும் நேர்மை எதிர்மை போல் அமைவன. நேரியப் பண்பு நேர்மை , மறுதலைப் பண்பு எதிர்மை.

நேர்மம் நேரிய சிந்தனை

எதிர்மம்  முரணிய சிந்தனை

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் ஓரே வேரினின்று இருவேறு கருத்தாய்த்  தெளிவுறுவதை வேர்ச்சொல் ஆய்வால் உணரலாம்.

– இரா. திருமாவளவன், மலேசியா

வியாழன், 29 டிசம்பர், 2022

உலகத்தமிழ்ச்சங்கம், நூல் அரங்கேற்றம்

 அகரமுதல


நூல்கள் அரங்கேற்றம்

மார்கழி 14, 2053 – 29.12.2022 வியாழன் முற்பகல் 10.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கவிஞர் ச.கசேந்திரன், கவிஞர் பொன்.சந்திரன், எழுத்தாளர் கா.புவனேசுவரி, எழுத்தாளர் சோ.பரமசிவம், ஆய்வாளர் சோழ.நாகராசன் ஆகியோரின் நூல்கள் அரங்கேற்றம் மதிப்புரைகளுடன்.



சனி, 24 டிசம்பர், 2022

தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை

 அகரமுதல




நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00

இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016

திப்புசுல்தான்  சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா

தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார்

துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன்

சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர்

வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர்

ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா








மாதம்பட்டி செஞ்சோலை பண்ணை துவக்க விழா

 அகரமுதல




மார்கழி 10, 2053/ 25.12.2022

ஞாயிறு காலை 9.30 – 01.30

மாதம்பட்டி செஞ்சோலை பண்ணை துவக்க விழா

நம்மாழ்வார் நினைவேந்தல்

இயற்கை விளைபொருட்கள் நேரடிச் சந்தை

சிறப்புரை: காருண்யா நடராசன்

தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்

வியாழன், 22 டிசம்பர், 2022

பழனி- குடமுழுக்கைத் தமிழில் நடத்த அரசு மறுப்பதேன்?

 அகரமுதல


 




பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத்

தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்?

சனவரி 20இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம்!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்தப் பிறகு

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு!

பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் தி.பி. 2054 தை 13 (27.01.2023) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்க் குமரன் திருக்கோயில் பழனி குடமுழுக்கை கருவறை – வேள்விச்சாலை – கலசம் வரை திருநெறிய தமிழ் மந்திரங்களை அருச்சித்துச் சிறப்பாக நடத்திடக் கோரிக்கை வைத்து, இன்று தி.பி. 2053 மார்கழி 6 (21.12.2022) அறிவன் கிழமை முற்பகல் 10.45 மணியளவில், சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களும், நானும் விண்ணப்பம் கொடுத்தோம்.

தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி – இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), ஐயா சித்தர் மூங்கிலடியார் (தலைவர் – இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம். பதினெண் சித்தர் பீடம், காரனோடை), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – சத்தியபாமா அறக்கட்டளை, தமிழ் வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம்), தோழர் கி. வெங்கட்ராமன் (தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்), வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங் கிணைப்பாளர் திரு. முருகேசன், திருவாட்டி. கலையரசி நடராசன் (தலைவர், தமிழ்ச் சைவப் பேரவை, ஆவடி. சென்னை), முனைவர் ஆசீவக சுடரொளி (நிறுவனர் – ஆசீவகம் சமய நடுவம்), திரு. சிவ வடிவேலன் (செந்தமிழ் ஆகம அந்தணர், செயற்குழு உறுப்பினர், தெய்வத் தமிழ்ப் பேரவை), வழக்கறிஞர் சுபாசு சந்திரபோசு (செயற்குழு உறுப்பினர், தெய்வத் தமிழ்ப் பேரவை, புதுச்சேரி), தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இம்மனுவை ஆணையரிடம் வழங்கினர்.

ஆணையர் அம்மனுவை மேம்போக்காகப் பார்த்துவிட்டு, தமிழ்நாடு அரசு தமிழ் அருச்சனைக்காக ஒரு குழு போட்டிருக்கிறது. அதன் பரிந்துரை வந்த பிறகுதான் செயல்படுத்த முடியும். நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பு அதுதான் என்றார்.

இதற்குரிய சட்டப்படியான மறுமொழியை நான் சொல்ல முயன்றபோது குமரகுருபரன், “உங்களிடம் நான் இதுவரை பேசியது உங்களுக்குப் புரியவில்லை. நான் பேசியது வீண்(waste)” என்றார். எங்கள் கருத்தையும் கேளுங்கள் என்றேன். சிம்மம் சத்தியபாமா அம்மையாரும், தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும் விடையளித்துப் பேசியதையும் ஆணையர் செவிமடுக்கவில்லை. “உங்களை உட்கார வைத்துப் பேசியதே தவறு; நீங்கள் வெளியே கிளம்புங்கள்” என்றார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகாரியாய் இருந்த வெள்ளைக்காரத் துரை கூட குமரகுருபரன் பாணியில் நடந்து கொண்டிருப்பாரா என்பது ஐயமே!

அதன் பிறகு, நாங்கள் அனைவரும் வெளியே வந்து, கலந்து பேசினோம். ஆணையர் சொன்ன விடையும், அவர் நடவடிக்கையும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் கருவறை – வேள்விச்சாலை – கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் இடம்பெறாது என்பது தெளிவானது. இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கை முழுக்க முழுக்க சமற்கிருதத்திலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மேற்பார்வையில் நடத்தினர். அதேநிலை தமிழ்நாடு அரசில் இப்போதும் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம்.

எங்களிடம் மேற்படி ஆணையர் கேட்க மறுத்த சட்டப்படியான பதில் கருத்தை இப்போது பொதுவெளியில் வைக்கிறோம்.

மேற்படி ஆணையர் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பு என்பது 2020 டிசம்பர் 3இல் வந்தது. கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு 04.12.2020 அன்று நடக்கப் போவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. அவ்வாறு அறிவிப்பு வந்தவுடன் நமது தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் ஐயா சித்தர் மூங்கிலடியார், 21.11.2022 அன்று உரிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பி தமிழ்வழி குடமுழுக்கு கோரினார். அவர் கோரிக்கை ஏற்கப்படாததால் மதுரை உயர் நீதிமன்றத்தில் மூங்கிலடியாரும், மற்றவர்களும் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கை விசாரித்து, 04.12.2022 குடமுழுக்குக்கு முன் 03.12.2022 அன்று நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது. (W.P. (MD) No. 19115 of 2020).

அதற்கு முன் 05.01.2020 அன்று நடந்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழிலும், சமற்கிருதத்திலும் சரி பாதியாகப் பகிர்ந்து நடத்த அப்போதிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதையே அப்போதைய நீதிபதிகள் துரைசாமி – இரவீந்திரநாத் அமர்வு உறுதி செய்து தீர்ப்பாக அளித்தது. (W.P. (MD) No. 1102, 1126 and 1644 of 2020). அது தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் ஓரளவு செயல்படுத்தவும்பட்டது. வேள்விச்சாலை, கோபுரக்கலசம், புனித நீராட்டல் நிகழ்வுகளில் தமிழ் ஓதுவா மூர்த்திகள் பங்கேற்றுத் தமிழ் மந்திர அருச்சனை செய்தனர்.

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்தக் கோரிய வழக்கில் 03.12.2020 அன்று வழங்கிய மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பு, மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்குத் தீர்ப்பு செல்லாது என்றோ, தள்ளுபடி செய்தோ தீர்ப்பளிக்கவில்லை. அதை மீண்டும் உறுதிப்படுத்தியது. தமிழ் மந்திரங்கள் கோபுரக் கலசத்தில் ஒலித்தன. ஆனால், 03.12.2020 தீர்ப்பு ஒரு பரிந்துரை செய்தது.

அதில், புதிது புதிதாக தமிழ் மந்திரங்களைச் சேர்க்கச் சொல்லி கோரிக்கை வருகிறது, இந்த மனுதாரர் (சித்தர் மூங்கிலடியார்) திருமுறைகளுடன், சித்தர் அமராவதி ஆற்றங்கரை கருவூரார் பாடல்களையும் அருச்சனை மந்திரத்தில் தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபோன்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து புதிதாக என்னென்ன தமிழ் மந்திரங்களைச் தமிழ் வழிபாட்டில் சேர்க்கலாம் என்பதற்கு, தமிழ்நாடு அரசு ஒரு வல்லுநர் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மந்திர வரிசையை முறைப்படுத்தலாம் என்று கூறியது.

ஆனால், ஏற்கெனவே தமிழ் மந்திர அருச்சனைகள் நடந்து வந்ததைத் தடுக்கவில்லை. மேலும், செழுமைப்படுத்திடத் தான் பின்னர் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியது.

இதே தி.மு.க. ஆட்சி, 2021இல் அமைந்த பிறகு 47 முதன்மையான கோயில்களில் “அன்னைத் தமிழில் அருச்சனை”த் திட்டத்தைத் தொடங்கி, அரைகுறையாகவேணும் செயல்படுத்தி வருகிறது. இப்போது, 2020 திசம்பர் 3ஆம் நாள் தீர்ப்புக்கு 2022இல் குழு போட்டிருப்பதாகச் சொல்லும் அரசும், அதிகாரிகளும் “அன்னைத் தமிழில் அர்ச்சனை”த் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்களா? அப்படி எந்த அறிவிப்பையும் இந்து சமய அறநிலையத்துறை இதுவரை வெளியிடவில்லை!

இன்னொரு கேள்வி : கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1997இல் (10.09.1997) இந்து சமய அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கை (சுற்றறிக்கை ந.க. எண் : 73848 / 97 / கே.1) அனுப்பியது. அதில், அறநிலையத்துறையில் உள்ள கோயில்களில் தமிழ் மந்திர அருச்சனை செய்ய வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. அத்துடன் தமிழ் மந்திர அருச்சனைப் புத்தகங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதெல்லாம் செல்லாது என்று இதுவரை எந்தத் தீர்ப்பும் கூறவில்லை. இவ்வாண்டு (2022) கூட, தமிழ்நாடு அரசு தமிழ் மந்திர அருச்சனை நடத்தும் அருச்சகர்களுக்குப் பயிற்சிப் பள்ளிகள் திறந்துள்ளது.

ஆனால், தமிழ்க்குமரன் கோயிலான பழனி முருகன் கோயிலில் 27.01.2023 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கையும், அதையொட்டிய நிகழ்வுகளையும் தமிழ்வழியில் இப்போது நடத்த முடியாது – வல்லுநர் குழுவின் அறிக்கை வரட்டும் என்ற ஆணையர் குமரகுருபரன் மறுப்பதன் மருமம் என்ன?

பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கை 27.01.2023 அன்றும் அதற்கு முன்பும் பின்பும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் – குடமுழுக்கு உட்பட அனைத்திலும் சரி பாதியாகத் தமிழ் மந்திரம் இடம் பெற வலியுறுத்தி, வரும் 20.01.2023 அன்று, பழனியில் காலையிலிருந்து மாலை 6 மணி வரை உண்ணாப் போராட்டத்தைத் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்துவது என்று செயற்குழு முடிவு செய்கிறது. தமிழ் மந்திரக் குடமுழுக்கு கோரும் இந்த அறப்போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்!

================================

தெய்வத் தமிழ்ப் பேரவை

முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh

பேச: 9841949462, 9443918095