சனி, 26 மே, 2018

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்

உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள்  இருக்கின்றன.
ஒன்று, கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக்கூறப்படாதது.
கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான்செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணைஇட்டால், நிலைமை என்னவாகும்?
ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.
கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி  தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிசுரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது கருநாடக அரசு. அது மட்டுமின்றிக், கருநாடகச் சட்டப்பேரவையைக் கூட்டித் தண்ணீர் திறந்து விட முடியாதுஎன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியது கருநாடக அரசு.
உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கருநாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!
இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பதுஉறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும்நான்கு உறுப்பினர்கள் –ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு முதலான நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர் வீதம் நான்கு பேர்.
இதில் கருநாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள்நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு  2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது  இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும்தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கருநாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்புவராது என்று நேரடியாகத் தெளிவாக உறுதி கூற நரேந்திர(மோடி) அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டுச் சரிசெய்யுமா? கடந்த காலஅனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.
இவற்றுக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிசுரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம்ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்குத் தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.
இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது  உச்ச நீதிமன்றம்.
எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில்  அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.
மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் – விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

– பெமணியரசன்

ஒருங்கிணைப்பாளர்காவிரி உரிமை மீட்புக்குழு

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 76670 77075, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
==========================

இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்



இ.ஆ.ப., இ.கா.ப.  தேர்வில்

சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்:

மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்

சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,  பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.
இப்போது குடிமைப்பணிகள் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை  இ.ஆ.ப., இ.கா.ப., முதலிய  பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும்  நீக்கிவிட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று  தலைமையர் அலுவலகம் விரும்புகிறது என மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விசய்குமார்(சிங்கு) அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூக நீதியைத் தட்டிப் பறிக்கும் செயல்.
இரவு பகலாகப் படித்துத், தேர்வு பெற்றுப், பல தடைகளைத் தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள  பேராசிரியர்கள் சிலரிடம் ஒப்படைத்துச், சமூக நீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பாசக அரசும், தலைமையர்ர் அலுவலகமும் துணிந்து விட்டது.
“நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம்”, என்று பாசகவால் போடப்பட்டு வந்த நான்காண்டுக்  காலப் பகல் வேடம் இதன்மூலம் கலைந்துள்ளது.
தலைமையர் விரும்புகிறது என்றால், தலைமையர் நரேந்திர(மோடி) விரும்புகிறார் என்றே பொருள்.  எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தைத் திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பாசக அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது  இ.ஆ.ப. முதலிய  அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் , ‘அடித்தளப் பயிற்சிமுறை’  என்ற போர்வையில், ஒருவகையிலான ” பொதுநுழைவு/நீட் தேர்வை” அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்க முயலுவதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பாசக அரசும்,  தலைமையர் நரேந்திர(மோடியும்)  புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, அடித்தளப் பயிற்சிமுறை மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களின் இ.ஆ.ப., இ.கா.ப., கனவுகளைத் தகர்க்கும் தலைமையர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும்  ஒன்றியப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் குடிமைப்பணித் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கும் தேர்வு செய்ய வேண்டும். தவறினால் சமூக நீதிக் கொள்கையைச் சீர்குலைக்கும் மத்தியில் ஆளும் பாசக அரசை எதிர்த்து இளைஞர்களைப் பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக நடத்திடும்”
என்று  தாலின் எச்சரித்துள்ளார்.

வியாழன், 24 மே, 2018

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வும்

அகரமுதல

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு
மற்றும்
குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு

‘மாறி வரும் சிறுகதைக் களம்’

சிறப்புரை :-
திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி

வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018
மாலை 6.00 மணி
சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

அரங்கம் அடைய


உரையாளர் பற்றி:-

தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான நேர்காணல்கள் கண்டவர். பல சிறுகதைப் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். தமிழ்ப்புத்தக நண்பர்கள் அமைப்பின் 2015 ஆண்டிற்கான சிறந்த திறனாய்விற்கான பரிசினைப் பெற்றவர். ஆன்மீகம், ஆராய்ச்சி. குழந்தைகள் இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்தவர்.

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’


இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு:

‘கவியரசர் கண்ணதாசன்’

வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018

மாலை 6.30  மணி

பாரதிய வித்தியா பவன்,
மயிலாப்பூர், சென்னை 600 004

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
தலைமை : இயக்குநர் எசு.பிமுத்துராமன் 
அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி 
சிறப்புரை  :  இலக்கியச்சுடர் இராமலிங்கம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்
தகுதியுரை : செல்வி யாழினி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன் 
இலக்கியவீதி இனியவன்

ஞாயிறு, 20 மே, 2018

கவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு


கவிஞர் மு.முருகேசு எழுதிய கட்டுரை நூலுக்குச்

சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு


  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ கிடைத்துள்ளது.
     கடந்த 46 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 15 ஆண்டுகளாகத்  தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.
    2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையிலுள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (மே-18) அன்று நடைபெற்றது.
   இவ்விழாவிற்கு, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்தலைமையேற்றார். சி.வி.சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார்.
         2017-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூல்களுக்கான பிரிவில் சிறந்த நூலாகக் கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் பரிசாக உரூ.5000/- பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வழங்கினார்.
         சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசினைப் பெற்ற கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்  கோட்டைத்  தமிழ்ச் சங்கத்தின்  அறிவுரைஞராகவும் இருந்து சமூகம், கல்வி, இலக்கியப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர் இலக்கியம்,  திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
 இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத்து ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம்  தார்சிலிங்கு, கருநாடகாவிலுள்ள மைசூரு, ஆந்திர மாநிலம் விசயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.
       இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.
 சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட  நூல்கள் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல்,  தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகித், தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
   விழாவில், மாண்பமை நீதியரசி பிரபா சிரீதேவன், முனைவர் சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன், முனைவர் எவர்வின் பி.புருசோத்தமன்  முதலானோர் கலந்து கொண்டனர்.
          நிறைவாக, வானதி இராமநாதன் நன்றி கூறினார்.