சனி, 3 நவம்பர், 2018

குவிகம் இல்லம் – குறும்படம் திரையிடலும் அளவலாவலும்


அகரமுதல

ஐப்பசி 18, 2049 – ஞாயிறு – 4.11.2018

மாலை 3.30 மணி


குவிகம் இல்லம் -குறும்படம் திரையிடலும்

அளவலாவலும்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை 600 017

வியாழன், 1 நவம்பர், 2018

புதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்

அகரமுதல

புதுமையான முறையில்

கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்

      கவிஞர்  சென்சி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ குறும்பா (ஐக்கூ கவிதை) நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் சாலையிலுள்ள  தலைமை மாளிகை (சுப்ரீம் மேன்சன்) தரைதளத்தில்  புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
         இவ்விழாவிற்குத் தலைமையேற்று, கவிதை நூலினைப் பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட்டார்.
 கவிஞர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். கவிதை நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “தமிழ்க் கவிதையில் இன்றைக்குச் சொல் புதிது, பொருள் புதிது என எழுதும் இளைய கவிஞர்கள் பட்டாளம் கிளம்பியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதை எழுதிய கவிஞர்கள் பலரும் இன்றைக்கு க் குறும்பா(ஐக்கூ கவிதைகள்) எழுதுவதிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். கவிதையின் கருப்பொருளும் சமூக அக்கறையுமே ஒரு கவிதையின் வெற்றியை தீர்மானிக்கும். கவிதையின் புறக்காரணியான வடிவம் ஒரு பொருட்டல்ல.
          தமிழில்  குறும்பா(ஐக்கூ ) மாக்கவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு 530-க்கும் மேற்பட்ட பலவகை  குறும்பா(ஐக்கூ) நூல்கள் வெளிவந்துள்ளன. முன்னரே தனது சிறுகதை நூலின் வழியே அறிமுகமாகியுள்ள கவிஞர் சென்சியின் கவிதையாற்றலுக்கு இந்தக் குறும்பா(ஐக்கூ) நூல் சான்றாகும்.
தன் மனத்தைத் தொட்ட எந்தவொரு சமூக நிகழ்வையும் குறைந்த சொற்களில் செறிவான காட்சிக் கவிதைகளாகப் படைத்துள்ளார் சென்சி. இந்தக் கவிதைகளிலுள்ள செறிவும் காட்சியழகும் வாசிப்பாளனை நிச்சயம் ஈர்க்கும். பக்கம் பக்கமாக வெறும்  சொல் அலங்காரத்தோடு எழுதப்பட்டு வந்த தமிழ்க் கவிதைகளுக்குச் செறிவையும் அழுத்தத்தையும் தந்த பெருமை குறும்பா(ஐக்கூ) கவிதைகளைச் சாரும். கவிஞர் சென்சி, தனது சமூக அக்கறையைச் செறிவான மொழியில் சுருக்கென ஐக்கூவாகப் படைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
  கவிஞர்கள் பிரியம், உமா சுப்பிரமணியன், கோவை நாவரசன், முருகு பாண்டியன், மேன்மை இதழின் ஆசிரியர் மு.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் சென்சி ஏற்புரையாற்றினார்.
கவிஞரின் உடன்பிறந்தார் கோவிந்தராசு நன்றி கூறினார்.

அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

“தொண்டு மனப்பான்மை இருந்தால்

புற்றுநோயையும் எதிர்த்துப்போராடி வாழமுடியும்!’’

    சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் (1988) ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கும் தொண்டு நிறுவனம் அரிக்கேன் வெட்சு என்ற நிறுவனம். இதன் மூன்றாவது ஆண்டு விழா ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை, 27-10-2018 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பல்கலைக்கழகப் பதிவாளர்  தென்சிங்கு ஞானராசுஆகியோருடன் கவிஞர் அ.வெண்ணிலா, கில்ட் ஆப் சர்வீசு அமைப்பின் இணைச்செயலாளர் மாயா(நாயர்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
   தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, புதுதில்லி  முதலான இடங்களில் கடந்த மூன்றாண்டுகளில் 26 நலப்பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. கடலூரில் வெள்ளத் துயர் துடைப்பு, ஒக்கி புயல் மறுவாழ்வு,  அண்மையில் கேரள வெள்ள மறுவாழ்வுப்பணிகள் ஆகியவையும் இந்தப் பணிகளில் அடங்கும். இன்னும் அதிகமான நலப்பணிகளைச் செய்ய தேவையான நிதிகளைத் திரட்டி வருவதாக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வில் தெரிவித்தனர்.
    நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அ. வெண்ணிலா, “தொண்டு என்பது கையில் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பது மட்டுமல்ல, தங்களைப் பிறருக்காக ஒப்படைத்துக்கொள்வதும் ஆகும். காந்தி, பெரியார், சுபாசு சந்திரபோசு, அன்னை தெரசா போன்றோரின்  தொண்டு மனப்பான்மையை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் தொண்டு மனப்பான்மைதான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கே வழிகாட்டியாக அமைந்தது.” என்றார். அத்துடன், “பல அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்துதரப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் அவை மூடப்பட்டுள்ளன. எனவே பல்வேறு தொண்டுப்பணிகளை மேற்கொள்ளும் அரிக்கேன் வெட்சு அமைப்பினர் அரசுப்பள்ளிகளில் முடிந்த அளவுக்கு நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ளவேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.
      “தமிழ் மக்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு சங்கக்காலத்தில் இருந்தே பதிவாகி உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சாத்தனூர் அருகே நிறுவப்பட்ட ஒரு நடுகல்லில் ஒரு வீரனின் உருவமும் அவனுக்கு அருகே ஒரு வேட்டை நாயின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கூடிய கல்வெட்டில் கள்வர்களுடன் மோதி இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு அந்த வீரன் பெயரைக் குறிப்பிடாமல் கோவன் என்று நாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவுக்கு நேசிக்கப்பட்ட விலங்குகளுக்குத் தொண்டு செய்யும் கால்நடைமருத்துவர்களாகிய நீங்கள் நற்பேற்றாளர்கள்” என்றார் வெண்ணிலா.
      நிகழ்ச்சியில அடுத்ததாக வாழ்த்திப் பேசிய மாயா(நாயர்) மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்தும் தன் தொண்டுப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். “இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடக்கத்தில் பாடம் எடுத்தேன். அப்போது நாற்காலியில் அமராமல் அக்குழந்தைகளுக்குச்  சமமாக மனைக்கட்டையில் அமர்ந்து சொல்லித்தந்தேன். இப்போது  நல்வாய்ப்பாக இளம்பிள்ளை வாதப் பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால் கைகால் இழந்தவர்கள், தசை, எலும்பு பலவீனம் கொண்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படித்துவருகின்றனர். அவர்களுக்குத் தொண்டாற்றுவதில் என் முகம் மலர்கிறது. நான் கடந்த பத்து ஆண்டுகளாகப் புற்றுநோயை எதிர்கொண்டு வாழ்ந்துவருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனிப் பயனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால் இதோ உங்கள் முன்பு நலமாக நிற்கிறேன். குழந்தைகளுக்கான தொண்டில் மனம் நிரம்புவதால்தான் புற்றுநோயை எதிர்த்துப் போராடமுடிகிறது” என்றவர் தொடர்ந்து விரிவாக நலப்பணிகளைச் செய்யுமாறு அமைப்பினரைக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் மருத்துவர் ஏ.கே. செந்தில்குமார் வரவேற்புரை வழங்க, இறுதியில் மருத்துவர் நிசா நன்றியுரை வழங்கினார்.
 சிறப்பாகப் பங்காற்றிய உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது

அகரமுதல


புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான

புலமைப்பரிசில் விருது

தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப்
புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி  நூறாயிரம் உரூபாய்!   
அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினிதேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று  தேர்ச்சியடைந்துள்ளார்.
இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய்,  படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் .
விழ விழ எழுந்துவரும் தமிழ் இனத்தின் இன்னுமொரு சான்றாக மக்கள் மனங்களிலும் வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பிடித்திருக்கின்றார்.
தனியார் வகுப்புக்களுக்குச் செல்ல வசதி இல்லாதிருந்தபோதும் தனது இவ்வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பாடசாலை ஆசிரியர்களான சிவகரன், துவாரகா ஆகிய இருவருக்கும் பெருநன்றி கூறுவதைக் காணொளியில் காண்கின்றோம். மேலும் தான் அவர்கள் போன்று ஆசிரியராக வருவேன் என்றும் கூறுகின்றார்
கடந்த மூன்று வருடங்களாக நாம் எடுத்துக்கொண்ட புதிய வெளிச்சச் செயற்பாடுகளில் ‘ஆசிரியர்களை வளப்படுத்தல்‘ செயல்திட்டத்தின் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிற்குமான ‘நல் ஆசிரியர் விருதினை’ அறிவிக்க இருக்கின்றோம்..
நல் ஆசிரியர் விருதிற்குத் தகுதியான ஆசிரியரை மாணவர்களின் தெரிவில் இருந்தே தெரிந்தெடுக்கக்கூடிய ஒழுங்குமுறையைச் செயற்பாட்டிற்குக்  கொண்டுவருகின்றோம்.
இந்த ஆசிரியர் விருது நிதிக்கு முதல்கட்டமாக 2 பேராயிரம்(மில்லியன்) இலங்கை உரூபா நிதியை நான் வழங்குகின்றேன்  இந்நிதி வருடத்திற்கு நான்கு இலட்சம் வீதம் ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குகின்றேன் . மேலும் நண்பர்கள் இத் திட்டத்துக்கு உதவும் பொருட்டுஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் திட்டம் மேலும் அதிகரிக்கப்படும் .
எனது தந்தையும் ஆசிரியர் அவரது விடா முயற்சியான ஆசிரியப் பணியையும் அவரது மாணவர்கள் அறிவார்கள். வட மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளராக இருக்கும் அவர் தன்னுடைய 50 வருட ஆசிரியப்பணியில் இருந்து இந்தவருடம் தனது 70 வயதில் ஓவ்வுபெற உள்ளார்.
அவரின் ஆதரவுடனும் அறிவுரைக்கிணங்கவும் இந்த “நல் ஆசிரியர் விருதினை” அறிமுகப்படுத்தி இதன் முதற்கட்டமாக விழ விழ எழும் இனத்தின் வரலாற்றுச் சான்றாகத் தடம் பதித்திருக்கும் வன்னி மண்ணின் மாணவி இராகினியின் ஆசிரியர்கள் இருவருக்கும் ஓர் இலட்சம் உரூபாக்களை வழங்குகின்றோம்.
கடந்த காலப் புதிய வெளிச்சச் செயற்பாடுகள்
1) ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
2) இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை
3) இயற்கை விவசாய பயிற்சிப் பட்டறை
உலக ஆசிரியர் நாள் வாழ்த்துகள்
#புதிய வெளிச்சம்
நவசீவன் அனந்தராசு
4162728543
வணிகத் தொடர்பிற்கு : www.Biztha.com
(படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.)

புதன், 31 அக்டோபர், 2018

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா

அகரமுதல

அனைத்திந்திய

சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா

 அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.
       இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார்.
    கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
       அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன் கருத்துரை வழங்கினார். குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் புதல்வர் அழகப்பன், அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தைத் தொடக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
      ‘இதயத் தும்பி’ சிறுவர் இதழை கவிஞர் மு.முருகேசு வெளியிட, ஆதித்தியா வித்யாமந்திர் பள்ளித் தாளாளர் பஞ்சமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
   பின்னர் நடைபெற்ற ‘சிறுவர் உலகமும் கவிதையும்’ எனும் தலைப்பிலான கவியரங்கில் கவிஞர் மு.முருகேசு தலைமையில், கவிஞர்கள் பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து, மல்லிகை தாசன், துரை.நந்தகுமார், வானவன், சென்சி, இரா.நாகராசன் ஆகியோர் கவிதை படைத்தனர்.
      கவிஞர் இராய.செல்லப்பாவின் கவிதையை அவரது மகள் அருச்சனா, பேரன் கந்தா செய், பேத்தி சம்பிரதா ஆகியோர் பாடலாகப் பாடினர்.
      குமாரராசத முத்தையா அரசு மேனிலைப்பள்ளி, பள்ளிக்கரணை ஆதித்தியா வித்யாமந்திர் பள்ளி மாணவ- மாணவிகளின் பாடல், உரையரங்கம் நடைபெற்றன.
     விழாவில், குழந்தை எழுத்தாளர் காந்தலெட்சுமி சந்திரமெளலி, புதுகை இராசேந்திரன், கு.இராமச்சந்திரன் முதலான ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
     நிறைவாகக், கவிஞர் குடந்தை பாலி நன்றி கூறினார்.

சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்

அகரமுதல

சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்

து.கோ.வைணவக் கல்லூரி – தினமணி இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்குக்கு கட்டுரைகள் வரவேற்பு
சென்னை அரும்பாக்கம் து.கோ..வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து நடத்தவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
வரும் தை 10,2050 / சனவரி மாதம் 24-ஆம் நாள் ‘தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு‘ என்ற தலைப்பில் து.கோ. வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து தேசியக் கருத்தரங்கம் நடத்தவுள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் இக்கருத்தரங்கில் பங்கு பெறலாம்.
இக்கருத்தரங்கையொட்டி கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இக்கட்டுரைகள் அனைத்தும் கீழ் வரும்  காப்பிய இலக்கியங்கள் தொடர்பான பொருண்மையில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
ஆய்வுக் களங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் மட்டும் ஆய்வுக் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
கட்டுரையை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், ஏ4 தாளில் கணிணியில் சீருரு (Unicode-Latha) எழுத்துருவில் மட்டும் தட்டச்சு செய்து  dgvcmutthamizh@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுக் கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும். கட்டுரையைத் திருத்தவோ, சுருக்கவோ பதிப்பாசிரியருக்கு முழு உரிமை உண்டு.
திசம்பர் 25-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அமையலாம். கருத்தரங்க நாளன்று நூல் வெளியிடப்பட உள்ளதால் கட்டுரையை வரும் திசம்பர் மாதம் 25-ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைகள் ஆய்வுத் தரத்துடன் அமைதல் வேண்டும். கட்டுரையாளர்கள் கருத்தரங்க அமர்வுகளில் பங்கேற்றுக் கட்டுரை வழங்க வேண்டும். கட்டுரையாளர்கள் கருத்தரங்கக் கட்டணமாக உரூ.600-ஐ “The Principal, D.G.Vaishnav College’ என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மேலும் திசம்பர் மாதம் 25-ஆம் நாளுக்குள் பதிவுப் படிவம், கட்டுரையின் அச்சிடப்பெற்ற கட்டுரை, வங்கி வரைவோலை, கட்டுரையாளரின் ஒளிப்படம் ஆகியனவற்றை முனைவர் ப.முருகன், கருத்தரங்கச் செயலர் – தமிழ்த்துறைத் தலைவர், து.கோ..வைணவக் கல்லூரி (தன்னாட்சி), அரும்பாக்கம், சென்னை -600 106 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 மேலும் தகவல்களுக்கு: பேசி எண்: 94444 10729.

திங்கள், 29 அக்டோபர், 2018

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம்

– உருத்திரகுமாரன் கண்டனம்


மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள உருத்திரகுமாரன், சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த செய்தி சரியானது என்பதை மெய்ப்பித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 இலங்கையின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு r.thave@tgte.org
நாடுகடந்த தமிழீழ அரசு
+1 614-202-3377

சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

அகரமுதல

சமூகப் புரட்சியாளர் பெரியார்

பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா. சபையின் உறுப்பாகிய ‘யுனெசுகோ’ நிறுவனம் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிசு; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்குகள்,  மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் எதிர்வாதங்களால் ஆராய்ந்து பார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பருவத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் ‘எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது’ என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த இராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் ‘எல்லாம் விதிப்படித்தான் நடக்கும்’ என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த இராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டி விட்டு அப்படியானால் ‘இதுவும் விதிப்படி தான் நடந்தது’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா? இராமசாமியைத் திட்டுவாரா? அவரது சேட்டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார்.
தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரசு கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ஆம் ஆண்டு இறுதியில் தன்மதிபபு(சுயமரியாதை) இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடி நாதமாக்கினார். 1928-இல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட முனைவர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா(முதலியார்) மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியைத் தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த தலைமையமைச்சர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்துகாப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. மிதியூர்தி(ஆட்டோ)ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும், கல்லுடைக்கும் தொழிலாளி மகள் ஆட்சியர்(கலெக்டர்) ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டியாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம்மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப் பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்எடுத்துக்காட்டாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம்மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் ‘வணக்கம்’ என்று சொல்வதை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல்வாக்கு பெற்றது. ‘வணக்கம்’ என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு தன்மதிப்பை(சுயமரியாதையை)க் காத்து மனிதர்களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்பால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந்தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும், சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்துகளைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின.
பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் பரப்பினர். ‘சிவாசி கண்ட இந்து இராச்சியம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாசியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாசி கணேசன்’ என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்தப் பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எசு.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாராட்டினார். ‘கொள்கை வேறு; நட்பு வேறு’ என்பது பெரியா ருடைய வாழ்வியல் நெறி. ஒளவை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. “என்ன சண்முகம்? என்ன ஆயிற்று? நெற்றி வெறுமனே இருக்கிறதே?” எனப் பெரியார் கேட்டாராம். “இல்லை ஐயா கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை” என்றாராம் ஒளவை டி.கே.சண்முகம். “கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது” என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கி யிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித் துள்ளது. நுழைவுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப் பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார்.
அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் ‘நீட்’ முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
  • பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
நன்றி: ‘தினத்தந்தி’ 17.9.2018 (பெரியார் பிறந்த நாள்)
விடுதலை 17.09.2018