சனி, 3 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல்

 


(தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சிங்களப் பேரினவாத அரசு காரணம், அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு காரணம் என்ற உண்மையை மறைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழிபோடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படிப் பழி சுமத்துகின்றவர்கள் எடுத்துக் காட்டும் ஒரு முகன்மைச் சான்று 2005ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் இரணில் விக்கிரமசிங்காவும் மகிந்த இராசபட்சேவும் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள். தேர்தல் முடிவில் இராசபட்சே வென்றார், இரணில் தோற்றார்.
“இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணிக்காமல் இரணிலை ஆதரித்திருந்தால் இராசபட்சே தோற்றுப் போயிருப்பார், இனவழிப்புப் போர் நடக்காமல் இருந்திருக்கும்” என்பதுதான் புலிகள் மீது பழிபோடுவோர் சொல்லும் கணக்கு. விடுதலைப் புலிகளின் இந்தத் தேர்தல் புறக்கணிப்புக்கு உள்நோக்கம் கற்பித்து, அவர்கள் மீது சூழ்ச்சிக் குற்றம் சுமத்தி இந்து ஆங்கில நாளேடு ஆசிரியவுரையே தீட்டியது.
உடனடியாக இதை மறுத்து தமிழர் கண்ணோட்டம் 2005 திசம்பர் இதழில் “இரு தேசங்கள் ஒரு தேர்தல்- தமிழர் புறக்கணிப்பு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின் இரணில் இதே பழியைச் சுமத்தினார். “புலிகள் 2005ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்றால் இராசபட்சே வென்றிருக்க முடியாது, போர் தவிர்க்கப்பட்டிருக்கும். புலிகள் செய்த தவறினால்தான் இறுதிக் கட்டப் போர் நிகழ்ந்தது” என்ற பொருள்பட அவர் பல ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
நக்கீரன் ஏட்டிலும் அவரது பேட்டி வெளிவந்தது. இனவழிப்புப் போரைத் தடுக்கத் தவறியதோடு அப்போருக்கான பழியில் ஒரு பகுதியையும் சுமக்க வேண்டிய நிலையில் இருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியும் புலிகள் மீது பழி போட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
“இரணிலே சொல்லி விட்டார், புலிகள் தவறு செய்து விட்டார்கள்” என்று சொல்லித் தன் மீதான பழியைத் துடைத்துக் கொள்ள முயன்றார்.
2005 தேர்தலில் புலிகள் தவறு செய்து விட்டார்கள் என்ற குற்றாய்வுக்குக் கண்காதுமூக்கு வைத்து, அவர்கள் இராசபட்சேக்கு வாக்களிக்கச் சொன்னார்கள், அதற்குக் கைம்மாறாக உதவிகள் பெற்றுக் கொண்டார்கள் என்று ‘புலிக் கடியர்கள்’ அவதூறு பரப்பவும் துணிந்து விட்டார்கள். ‘காக்கைச் சிறகினிலே‘ கட்டுரையாளரும் இதே பொய்யைச் சொல்வதாக அன்பர் சிபி நேற்று எழுதியிருந்தார். இந்த அவதூறுக்கு மறுப்பாக தமிழ்க் குரல் வலையொளிக்கு நான் கொடுத்த செவ்வியின் இணைப்பை நேற்றுக் கொடுத்திருந்தேன்.
இந்தப் பேச்சு தொடங்கிய காலத்திலேயே தமிழர் கண்ணோட்டம் 2005 திசம்பர் இதழில் நான் எழுதிய கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு! இதற்கு மேலும் யாருக்காவது குழப்பம் இருந்தால் எழுதுங்கள், தொடர்ந்து உரையாடுவோம்.

இரு தேசங்கள் ஒரு தேர்தல் தமிழர் புறக்கணிப்பு 1/2


இலங்கையின் ஏழாவது குடியரசுத் தலைவராக மகிந்த இராசபட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அவருக்கு 50.29 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளர் இரணில் விக்கிரமசிங்கரைக் காட்டிலும் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான பெரும்பான்மையே இது.
சிங்களத் தேசத்தின் அரசதிகாரத்துக்காக இரு சிங்களத் தலைவர்களுக்கு இடையே, இரு சிங்களக் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற இத்தேர்தலில் சிங்கள மக்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள். இயல்பாகவே தமிழீழ மக்கள் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்து விட்டார்கள். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஏழு இலக்கம் பதிவு பெற்ற வாக்காளர்களில் 8,525 பேர் மட்டுமே வாக்களித்தார்கள்.

தமிழர்கள் இப்படித் தேர்தலைப் புறக்கணிக்காமல் இரணில் விக்கிரமசிங்கருக்கு வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பது ஓர் எளிய கணக்கு. இந்தக் கணக்கை வைத்துக் கொண்டு இந்து ஆங்கில நாளேடு (2005 நவம்பர் 19 ஆசிரியவுரை) தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சூழ்ச்சிக் குற்றம் சுமத்துகிறது.
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராசபட்சருக்கு விடுதலைப் புலிகள் விடுத்துள்ள சவாலாம் இது! எப்படி? சிங்களக் கடும்போக்கு அரசியல் வளர்வதே தனக்கு நல்லது என்று புலிப்படை நினைக்கிறதாம்! அதுவே இலங்கையைப் பிரித்து ஈழம் அமைக்கும் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு உதவுமாம்!
இந்து சொல்கிறது:
“புதிதாகத் தேர்வு பெற்றுள்ள குடியரசுத் தலைவரும் அவருக்கு நெருங்கிய கூட்டாளியான சனதா விமுக்தி பெரமுனா (சே.வி.பி.) அமைப்பினரும் 2002இல் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை எதிர்க்கின்றனர். (நாட்டிற்குத் தெரியாமல் அவசரகோலமாய்ச் செய்த நகர்வு அது என்கின்றனர்.) மேலும் கூட்டாட்சியே சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும் என்ற கருத்தையும் பொதுவாக எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டைப் பயன்படுத்தி த.ஈ.வி.பு.(எல்.டி.டி.இ.) இந்தக் கொடிய சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது.”
கடந்த 2001 இறுதியில் புலிப்படைதான் போர்நிறுத்தம் அறிவித்தது. போரில் புலிப்படையை வெல்ல முடியாத நிலையிலும், சிங்கள மக்களே அமைதிக்குத் தந்த அழுத்தத்தாலும், உலக அரங்கில் நிலவிய பொதுக்கருத்தின் நெருக்குதலாலும் சிங்கள அரசும் வேறு வழியின்றிப் போர்நிறுத்தத்துக்கு இணங்கிற்று. சற்றொப்ப நான்காண்டு காலமாக எத்தனையோ ஆத்திரமூட்டும் நிகழ்ச்சிகளுக்கிடையிலும் புலிப்படைதான் போர்நிறுத்தத்தை நேர்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடித்து வருகிறது. புலிப்படைக்கும் தமிழீழ மக்களுக்கும் இரண்டகம் செய்து ஓடிப்போன கும்பலை (இந்துவின் மொழியில் எல்.டி.டி.இ. கிழக்குப் பிரிவு) சிங்கள அரசின் இராணுவமும் உளவுத்துறையும் பாதுகாத்து வளர்த்து வருவது உறுதியான பிறகும் தமிழீழ மக்களின் சார்பில் புலிப்படை அமைதி காத்தே வருகிறது.
ஆனால் அமைதிக்காகவே அமைதி என்பதன்று. தமிழீழ மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் வகையில் தேசிய இனச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் உண்மையான உறுதியான அமைதிக்கு வாய்ப்பில்லை. இந்த நோக்கில் அப்போதைய தலைமையமைச்சர் இரணில் விக்கிரமசிங்கரோ, அவரைத் தள்ளிவிட்டு முழுஅதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்ட அதிபர் சந்திரிகாவோ உருப்படியான (தமிழ் மக்கள் நம்பி ஏற்கும் படியான) எந்த முன்மொழிவையும் தரவில்லை என்பதே உண்மை. அடிப்படைத் தீர்வு, நிரந்தரத் தீர்வு என்பதெல்லாம் இருக்கட்டும், முறையான இடைக்காலத் தீர்வு ஒன்றைக் கூட அவர்களால் முன்மொழிய இயலவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
 94

வெள்ளி, 2 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்

 

தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்

            கங்கையிலே காவிரியிலே

           நூறு முறை மூழ்கி

கணக்கற்ற திருக்கோயில்

கால்தேயச் சுற்றி

வெங்கொடிய பலநோன்பு

ஏற்றுடலை வருத்தி

வேதங்கள் கூறுகின்ற

யாகமெல்லாம் செய்து

பங்கமிலா வேதியர் கை

பணம் அள்ளித் தந்து

பசுவதனைப் பூசித்து

அதன் கழிவை உண்டு

தங்களுயிர் மோட்சத்தை

அடைவதற்கே முயலும்

தயவிலார் சத்தியமாய்

முக்தியதை அடைய மாட்டார்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 92

வியாழன், 1 ஜூன், 2023

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம்: 04.06.2023

 


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 416)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: வைகாசி 21 , 2054 / ஞாயிறு / 04.06.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

இணையத்தமிழ்ச்சுடர் தேமொழி

இதழாளர்

முனைவர் சான் சாமுவேல்

இயக்குநர்ஆசியவியல் நிறுவனம்

எழுத்தாண்மை ஏந்தல் பவளசங்கரி

செயலாசிரியர், வல்லமை மின்னிதழ்  

நிறைவுரை :

அரசியல் வித்தகர் தோழர் தியாகு

தலைமைஇலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரைகவிஞர் தமிழ்க்காதலன்

நன்றியுரை : தமிழார்வலர் புனிதா சிவக்குமார்





தோழர் தியாகு எழுதுகிறார் 118 : கம்பிக்குள் வெளிச்சங்கள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று-தொடர்ச்சி)

அன்பர் குருநாதன் சிவராமன் எழுதுகிறார்…’கம்பிக்குள் வெளிச்சங்கள்

வசந்தத்தின் இடிமுழக்கம்” எனக் கொண்டாடப்பட்ட நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மரணத் தண்டனை வரை சென்றவர் தோழர் தியாகுகாங்கிரசு, நக்குசல் இயக்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு) எனப் பல அரசியல் தளங்களில் பயணித்தவர். தனது அரசியல் பாதையைத் தன்னாய்வு செய்து கொள்வதிலும், படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதிலும் சிறிதும் தயக்கம் கொள்ளாதவர் என்பது அவரது எழுத்துகளில் புரிகிறது. மார்க்குசியக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். தற்போது தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டக் களத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளராகச் செயலாற்றி வருகிறார்.

அவரது சிறை அனுபவங்களைத் தொகுத்து வெளியான ‘சுவருக்குள் சித்திரங்கள்‘ (வெளியீடு: விசயா பதிப்பகம்) நூலை நான்கு வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். மரணத் தண்டனை பெறுதல், நீதிமன்றப் புறக்கணிப்பு, சிறைவாசிகளின் உரிமைக்கான போராட்டம், உடன் தோழர்களுடனான அரசியல் விவாதங்கள் ஆகியவற்றைத் தொகுத்திருப்பார். அதன் தொடர்ச்சியாகவே அவரது “கம்பிக்குள் வெளிச்சங்கள்” இருக்கும் என்கிற காரணத்தினாலும், அதிக பக்கங்கள் கொண்ட நூல் என்பதினாலும் “கம்பிக்குள் வெளிச்சங்கள்” நூல் சில காலம் என்னிடம் கிடப்பில் இருந்தது.

தற்போது மகுடை(கொரோனா) தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கினால் புத்தகம் வாசிக்க நேரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் “கம்பிக்குள் வெளிச்சங்கள்” (வெளியீடு: விசயா பதிப்பகம்) நூலை வாசிக்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 600 பக்கங்கள் கொண்ட நூலை வாசித்து முடிக்க இரு வாரங்களாவது ஆகி விடும் என எண்ணினேன். ஆனால் தோழர் தியாகுவின் மிகவும் எளிமையான எழுத்துநடை நமது வாசிப்புத் திறனை அதிகமாக்கி விடுகிறது. பணிகளுக்கு நடுவிலும் ஒரு வாரத்திற்குள் இந்த நூலைப் படித்து முடித்து விட்டேன்.

அழித்தொழிப்பும் சிறைப்படுதலும்:

எப்பப் பார்த்தாலும் அழித்தொழிப்பு பற்றியே பேசிக் கொண்டிருக்கும் இளைஞருக்கு (தியாகு) அதற்கான காலம் வந்துவிட்டது. உழைக்கும் மக்களைக் கொடுமைப்படுத்தும் வருக்கப் பகைவர்களான சாதி ஆதிக்கப் பண்ணையார்கள்தான் இலக்கு. முதல் அழித்தொழிப்பு முயற்சியில் ஈடுபட்டுப் பின்னர்த் தலைமறைவு வாழ்க்கை – மேலும் சில தோழர்களுடன் இணைந்து அடுத்த அழித்தொழிப்பு நிகழ்விற்கான திட்டமிடுதல் – நக்குசல்களின் முழக்கத்தை எழுப்புதல் – வயல், காடுகளில் தப்பியோட்டம் – பொதுமக்களிடம் அகப்பட்டு அடிவாங்குதல் – பின்னர்ச் சிறைப்படுதல் இப்படித்தான் நூல் ஆரம்பமாகிறது. ஒரு விறுவிறுப்பான திரைப்படக் காட்சி போல நகர்கிறது.

அரசியல் விவாதங்கள்:

சிறைப்படுவதற்கு முன்னால் மாணவர் காங்கிரசில் பயணித்த பட்டறிவுகளைப் பகிர்ந்திருக்கிறார் தோழர் தியாகு. அதிலும் குறிப்பாக அகில இந்திய காங்கிரசு கமிட்டி உறுப்பினராக இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் தோழர் தியாகு நடத்திய விவாதம் மிகவும் முக்கியமானது. தற்போதைய காங்கிரசு நிலைக்கும் இந்த விவாதம் பொருந்தும். மேலும் மார்க்குசிசுட்டுக் கட்சி மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் ஏ.பி (ஏ.பாலசுப்ரமணியம்) அவர்களிடம் “சீனப் பாதை – இந்தியப் பாதை” குறித்து விவாதித்ததும் இந்த நூலின் முக்கியப் படிப்பினை. 1974இல் போராட்டக் கைதியாகச் சிறை சென்ற மார்க்சிசுட்டு தோழர் மணியரசனுடன் (தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்) “இந்தியப் புரட்சியின் பாதை எது? சீனப் பாதையா? அல்லது இரசியப் பாதையா?” என விவாதிக்கிறார்கள் தோழர்கள் தியாகுவும், இலெனினும். மேலும் தேசிய இனங்களின் தன் வரையறை(சுய நிர்ணய) உரிமை குறித்தும் விவாதிக்கிறார்கள்.

மார்க்குசின் மூலதனம் மொழிபெயர்ப்பு:

“மார்க்குசு என்னும் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் அவரின் பின்னால் இருக்கும் நண்பர் எங்கெல்சும் நினைவுபடுத்தப்படுவார்” என்று தோழர் தியாகு அடிக்கடி சொல்லுவார். அதே போலத் தோழர் தியாகுவின் நூல்களை வாசிக்கும் போது அவரோடு சிறையில் இருந்த தோழர் இலெனினும் கூடவே பயணிப்பதைக் காண முடியும். அப்படி ஒரு நெருக்கமான தோழமை அவர்கள் இருவருக்கும்..

மார்க்குசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் தோழர்கள் தியாகுவும், இலெனினும். சிறைவாழ்வைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் காரணமாக காரல் மார்க்குசின் மூலதனம் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்குகிறார்கள். தோழர் தியாகுவின் ஆங்கில அறிவு மொழிபெயர்ப்பிற்கு மிகவும் உதவுகிறது. ஆரம்பத்தில் சற்றுத் தயங்கினாலும் பின்னர் பல தோழர்கள் அளித்த நம்பிக்கையின் காரணமாக மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிக்கிறார் தோழர் தியாகு. 1867இல் செருமன் மொழியில் வெளியான மூலதனத்தின் முதல் பாகம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1975 இல் திருச்சி மத்தியச் சிறையில் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. சிறைக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பலர் சிறுசிறு உதவிகள் செய்கிறார்கள்.

செய்தித்தாள் வாசிப்பது, சக சிறைவாசிகளுக்குத் தமிழ், ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பது, சிறைவாசிகளுக்கு மேல்முறையீடு, கருணை மனு, கடிதம் எழுதுவதில் உதவுவது என மிகவும் பயனுள்ள வாழ்வைச் சிறைக்குள் வாழ்ந்திருக்கிறார் தோழர் தியாகு.

“கம்பிக்குள் சித்திரங்கள்” நூலில் மூன்று சிறைவாசிகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

சந்துரு என்கிற சந்திரன்:

மிகவும் ஏழ்மைச்  சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சந்துரு கோபத்தின் காரணமாக ஒரு கொலையைச் செய்து விடுகிறார். வேறு இருவர் கைது செய்யப்பட்டது தெரிந்ததும் தானே முன்வந்து கைதாகிறார். பிறர்க்குத் துன்பம் இழைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. தோழர் தியாகுவின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.

மனிதாபிமானத்தைப் போலவே போர்க்குணமும் அதிகம் இருப்பதால் தோழர்களிடம் விரைவில் நெருக்கமாகி விடுகிறார். சந்துருவையும், இன்னொரு சிறைவாசியான ஆறுமுகத்தையும் அமர வைத்துச் சிறைக் கொட்டடியில் மார்க்குசிய வகுப்பெடுக்கிறார் தோழர் தியாகு. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் எனப் பாடம் நகர்கிறது, நாமும் மாணவர்களாகி விடுகிறோம்.

பிறப்பால் கிறித்தவர் இல்லை என்றாலும் இயேசுவின் மீது அப்படி ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர் சந்துரு. அதனால் அடிக்கடி “ஆத்திகம் – நாத்திகம்” விவாதமும் எழுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் சந்துரு விடுவிக்கப்படுகிறார். அவரைத் தன் வளர்ப்பு மகனாக அறிவித்துத் தன் சகோதரியின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார் தோழர் இலெனின். சிறைக்குள்ளும் இப்படியான உறவுகள் உருவாகின்றன.

வீரையன்:

சாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் கொண்டவர் வீரையன். போதிய ஆதாரங்களுடன் அவரைக் கைது செய்ய முடியாத நிலையில், காவல் துறை மிகவும் தந்திரமாக அவரை வைத்தே அவரது கைரேகையைக் குற்றம் நடந்த இடத்திலிருந்த ஒரு பொருளில் படிய வைத்து விடுகிறது. அந்தக் கைரேகையே பின்னாளில் அவரது கழுத்தில் சுருக்குக் கயிறு ஆகி விடுகிறது. அவரின் குற்றத்திற்கு அவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை சரிதான் என்று முதலில் நமக்குத் தோன்றுகிறது. பின்னாளில் அவரது மனமாற்றத்தைக் காணும்போது அவரை ஆயுள் தண்டனையோடு விடுவித்திருக்கலாம் என எண்ண வைக்கிறது. “சிறை என்பது குற்றவாளியைத் தண்டிக்கும் இடம் அல்ல, அவனுக்குள் இருக்கும் மனிதனை வெளிக் கொணரும் இடம்” என்பதற்கு வீரையன் நல்ல எடுத்துக்காட்டு. தனது இறுதி நாட்களில் தோழர்களிடம் வீரையன் சொன்னது: “இங்க இப்பொழுது உங்களுடன் பழகியதற்கு முன்னாடியே பழகியிருந்தேன் என்றால் என் வாழ்க்கைப் பாதையே மாறிப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்”.

தனது இறுதி நாட்களைப் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதற்காக மூலதனம் நூல் மொழிபெயர்ப்பில் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறார் தனது இறுதிநாள் வரை. தனது இறுதிப் பத்து நாட்களைத் தோழர்களிடம் ஒப்படைத்து விடுகிறார். வீரையனிடம் பல இடங்களில் முரண்பட்டாலும் அவருக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள் தோழர்கள்.

வீரையன் தனது மனைவி, குழந்தை, பெற்றோருக்கு எழுதும் கடிதங்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்துபவை. வீரையன் இந்த உலகிலிருந்து நிரந்தர விடுதலை ஆகிறார்.

பூ. கருப்பையா:

சிறையில் யாருடனும் பேசாமல், தனித்து இருப்பவர் பூ. கருப்பையா. சில நாட்கள் பழக்கத்திற்குப் பின்னர் தோழர்களிடம் தனது வழக்கு பற்றிச் சொல்கிறார். கொலை வழக்கு ஒன்றில் எந்த தொடர்புமில்லாத அப்பாவி கருப்பையாவை சிலர் சூழ்ச்சி செய்து சிக்க வைக்கிறார்கள். வெளியூர்க்காரன், வேறு சாதிக்காரன் நம்ம ஊரில் நல்லா முன்னேறி வருகிறானே என்கிற பொறாமைதான் காரணம். குற்றவாளியை முடிவு செய்து விட்டு அதற்கு ஏற்ப சான்றர்களைத் தயார் செய்யும் கொடுமையைச் செய்கிறது காவல்துறைசான்றர்களும் சிறிதும் மனச்சான்று இன்றிக் கருப்பையாவின் மீது குற்றஞ்சாட்டத் துணை போகிறார்கள். நீதிபதிகளும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்காமல் பொதுப் புத்தியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

கருணை மனு கொடுக்கச் சொல்லி தோழர்கள் வலியுறுத்துகிறார்கள். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் கருணை மனு இருக்க வேண்டும் என்பதால் அதனை மறுக்கிறார் கருப்பையா. பின்னர்த் தனது பின்னணி, வெளியூரில் தான் நடத்தப்பட்ட விதம், தன் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தோழர்கள் உதவியோடு ஒரு கடிதமாக எழுதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறார். ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 15 வருடங்கள் சிறைவாழ்விற்குப் பின்னர் வீடு திரும்புகிறார் அப்பாவி கருப்பையா.

மிசாக் கொடுமை:

1975இல் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசர நிலை (emergency), மிசாக் கைதுகள், மிசாக் கைதிகள் சிறையில் சந்தித்த கொடுமைகள் பற்றி நூலின் இறுதி நூறு பக்கங்களில் விளக்கியிருக்கிறார் தோழர் தியாகு. மிசா பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூலே போதுமானது. குறிப்பாகச் சென்னை முன்னாள் மாநகரத்தலைவரும் அவசரநிலையின்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சிட்டிபாபு சிறையில் சந்தித்த கொடூரமான அடக்குமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.கருணாநிதி, அவரது மகன் தாலினைச் சிறையில் சந்தித்ததும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, கி.வீரமணி போன்ற முன்னணித் தலைவர்கள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இவை போக “மெய்வழிச்சாலை அனந்தர்கள்” என்னும் ஆன்மிகக் குழுவினர் பற்றிய அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

சிறை வாழ்வு பற்றி, சிறைக்குள் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் “கம்பிக்குள் வெளிச்சங்கள்”. 

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 87

புதன், 31 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று

      31 May 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2) தொடர்ச்சி)

ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (3)

ஆர்எசுஎசு அமைப்பில் 1990ஆம் ஆண்டு சேர்ந்து முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவர்தான் யசுவந்து சிண்டே.

ஆர்எசுஎசு ஒரு நச்சரவம் என்று சொன்னால் போதாது. அது ஒரு பத்துத்தலைப் பாம்பு போல் பல பிரிவுகள் கொண்டது. விசுவ இந்து பரிசத்து, இந்து முன்னணி, சேவா பாரதி, பசுரங்கு தள், வித்தியார்த்தி பரிசத்து என்று எத்தனையோ பிரிவுகள். ஆர்எசுஎசு-இன் அரசியல் பிரிவுதான் பாராதிய சனதா கட்சி. யசுவந்து சிண்டே பசுரங்கு தளத்தின் மராத்திய மாநிலத் தலைவராக இருந்தவர்.

சிண்டே நான்டெட்டு நீதிமன்றத்தில் கொடுத்துள்ள வாக்குமூலம் ஆர்எசுஎசு பற்றிய அதிர்ச்சிக்குரிய பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. பரவலாகத் திகில் பரப்பும் நோக்குடன் புதுமச் சுடு கருவிகளைப் பயன்படுத்தவும், குண்டு செய்யவும் ஆர்எசுஎசு தலைவர்கள் தனக்கும் ஆர்எசுஎசு செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சி கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.  

இந்தியாவெங்கும் குண்டு வெடிக்கச் செய்து முசுலிம்கள் மீது பழி போடுவதுதான் திட்டமாம்! 2003, 2004 ஆண்டுகளில் சிண்டேயும் அவருடன் பயிற்சி பெற்றவர்களும் சலுனா, பூர்ணா, பர்பானி ஆகிய மராத்திய நகரங்களிலும் மசூதிகளுக்குக் குண்டு வைத்தார்கள். தொடர்ச்சியான குண்டுவைப்புகளில் ஐந்தாண்டுக் காலத்தில் 120க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக சிண்டே சொல்கிறார். சிண்டேயின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளுக்குப் பொருந்துகின்றன. 2006 நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னைச் சாட்சியாக விசாரிக்கும் படி சிண்டே கோரியுள்ளார். ஆனால் சிபிஐ இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அது ஏற்கெனவே வழக்கை முடித்து அறிக்கை கொடுத்து விட்டது.

சிண்டே இப்போதும் இந்துத்துவக் கருத்தியலில் நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் ஆர் எசு எசு தலைமை மீது நம்பிக்கை இழந்து விட்டார். தன் சகாக்கள் பலரும் குண்டு செய்யும் முயற்சிகளிலும் குண்டு வைப்புகளிலும் கோரமாக உயிரிழந்தைக் கண்டு வேதனைப்படுகிறார். இந்து தருமத்தின் புகழுக்காக அல்லாமல் பாரதிய சனதா கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக வேண்டி அவர்கள் பலியிடப்பட்டதாக வருந்துகிறார். ஆர்எசுஎசு தொண்டர்கள் திகிலிய (பயங்கரவாத) நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது பற்றி நேராகவோ மற்றவர்கள் வாயிலாகவோ ஆர்எசுஎசு தலைவர்களிடம் எச்சரித்தும் பயனில்லை என்கிறார்.

[தொடரும்]

சொல்லடிப்போம் வாங்க!

அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்

[‘கரோனா’வுக்கான தமிழ்ச் சொல் குறித்து…]

சிபியின் கண்ணோட்டம் சரிதான். எனினும் முடிப் புழு என்பது சரியல்ல. தோழர் தியாகு குறிப்பிட்டது போல் இதற்கு முன்னர் நான் மகுடை என எழுதியதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்!

எங்குப் பார்த்தாலும் கரோனா, கரோனா என்று அச்சுறுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்குள் இஃதென்ன புதிதாக மகுடை என எண்ண வேண்டா. அதற்கான தமிழ்ச்சொல்லே இது!

கரோனா என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மணிமுடி/மகுடம். இச்சொல் மாலை, மலர் வளையம் என்னும் பொருள் கொண்ட கரோனே என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.

கரோனா என்பது வட்டவடிவத்தில் இருப்பதைக் குறிப்பதால் சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும் கரோனா எனப்படுகிறது. அதுபோல் தோற்றத்தின் அடிப்படையில் வட்டமாக மணிமுடி/மகுடம்/கிரீடம் போல் உள்ள, ஒரு தொற்று நோய்மிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கிரீடம் என்பது தமிழல்ல எனச் சொல்லப்படுகிறது. எனவே, பிற சொற்களில் எது பொருத்தமாக அமைகிறதோ அப்பெயரை இந்நோய்மிக்கு நாம் சூட்டலாம்.

நாம் நேரிடையாக மணிமுடித் தொற்றி என்றோ மகுடம் தொற்றி என்றோ சொன்னால் அவற்றில் இருந்து தொற்றப்பட்ட நோய் எனத் தவறாகப் பொருள் கொள்ளப்படும். இரவீந்திரன் வேங்கடாசலம் ஏறத்தாழ ஒத்துவரும் வகையில் மகுடம் தொற்றி என்றுதான் குறிப்பிடுகிறார். மகுடத்தின் உச்சியில் முள்முடி போல் இருப்பதால் சிலர் அப்படித்தான் முள் தொற்றி அல்லது முள்முடித் தொற்றி அல்லது முள்மூடித் தொற்றி என்கின்றனர். அப்படியானால் முள்ளில் இருந்து தொற்றப்படும் நோய் என்றுதானே பொருள் ஆகும். மேலும், முள்முடி அணிவித்தது இயேசுவின் மரணத்திற்கு முன்பு வழங்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று. சிலர் இதனை எண்ணவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, நாம் நேர்ச்சொல்லை அவ்வாறே பயன்படுத்தக் கூடாது. தோற்றத்தைக் குறிக்கும் சொல்லில் இருந்து புதுச்சொல் ஆக்குவதே சிறப்பாக இருக்கும். அவ்வாறு பார்க்கும் பொழுது மகுடத்தில் இருந்து மகுடை என்று நம்மால் சொல் உருவாக்க இயலுகிறது. எனவே, மகுடை என இத்தொற்றி நோய்மிக்குப் பெயர் சூட்டலாம்.

சிலர் மகுடம் தமிழல்ல எனத் தவறாகப் புரிந்து கொண்டு இச்சொல்லை மறுக்கின்றனர். மகிழ் > மகிழம் > முகுளம் > முகுடம் > மகுடம். மொட்டுப் போன்ற கூம்பிய மணி முடி என அறிஞர்கள் இச்சொல் தமிழ் என்பதை விளக்குகின்றனர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, இதனை, முகம் > முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி, முகடு = உச்சி, வீட்டின் உச்சி, வாணமுகடு, தலை, உயர்வு; முகடு > (முகடம்); > மகுடம். இனி, முகிழ் > முகிழம் > முகுளம் > முகுடம் > மகுடம் = மொட்டுப் போற் கூம்பிய மணிமுடி என்றுமாம் என்று விளக்கித் தமிழ்ச் சொல் என்பதை மெய்ப்பிக்கிறது. பேராசிரியர் பரோ இச்சொல்லைத் தென் சொல்லென்றே கூறுவார் எனவும் குறிக்கிறது.

அடுத்து மகுடைக்கும்  கோவிடு 19 (COVID-19) என்பதற்கும் என்ன தொடர்பு அல்லது வேறுபாடு என எண்ணுகின்றனர். Corona Virus Disease 2019 என்பதன் சுருக்கமாகவும் 2019இல் ஏற்பட்டது என்பதைக் குறிக்கவும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இத்தகைய இடங்களில் நாம் மகுடைத் தொற்றி 19 எனக் குறிப்பிட்டால் போதும்.

ஆனால் சிலர் முள்மூடி/முள்முடிக் காய்ச்சல் என்கின்றனர். மேலேவிளக்கியதன் அடிப்படையில் இவை தவறு என அறியலாம்.

சிலர் வைரசு(virus) என்பதைக் கடுநோய் எனக் குறிக்கின்றனர். உரிச்சொல்லாகவும் வரும் ‘கடு’ என்பதற்குக் கடுமை, வலி உண்டாதல், நஞ்சு முதலான பல பொருள்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் இவ்வாறு குறிப்பதாகவும் கூறி முள்மூடிக் கடுநோய் என்கின்றனர். வைரசு என்பதை நோய் நுண்மி என்பதன் சுருக்கமாக நோய்மி என்பதே சரியானதாக இருக்கும். மேலும் முதலில் சொன்னதுபோல் முள்மூடிக் கடுநோய் என்றால் முள் மூடியால் வந்த கடுநோய் எனப் பொருளாகும். இதேபோல் மகுடக்கடு என்பதும் பொருந்தி வராது.

சிபிச்சக்கரவர்த்தி என்பவர், “சிலவிடங்களில் பெயர்களுக்கான மதிப்பை வழங்க வேண்டும். மகுடக்கடு போன்ற பெயர்கள், இருக்கிறதிலே இது தான் கடுமையானது என்று பொருள் தரக்கூடும். ஆனால், அப்படி இருக்க தேவையில்லையே. ஆனால், அதன் மூலப்பெயரான கொரோனா அதன் அடையாளமாகிவிட்டது. எத்தனையோ கிருமிகளில் இருந்து இதை வேறுபடுத்திக்காட்ட இதன் பெயர் ஒன்றே போதுமானது” என்கிறார். கடு என்பது குறித்த கருத்து சரிதான். அதற்காக அயற்பெயரையே பயன்படுத்த வேண்டும் என்பது சரியாகாது. நம் மொழியில் சொன்னால்தான் அதன் கடுமை புரியும்.

 கரு, கருமம் அடிப்படையில் காரியம் உருவாகி அதில் இருந்து  கிரியம் > கிரியை > கிருமி என்னும் சொல் உருவாகி இருக்கலாம். முருகேசன் மருதாசலம் கேரளாவில் வழங்கும் பணிய மொழியில் இரி என்றால் கிருமி. இச்சொல்லே கிருமியாக மாறியிருக்கும் என்கிறார். இம்மொழி பேசுநர் உதகமண்டலத்திலும் வாழ்கின்றனர். இருப்பினும் நோய்நுண்மியான இதனை நோய்மி எனலாம்.

சொல்லாய்வு தொடர்பான முகநூல் குழுக்களில் பேரா. செ.இரா.செல்வக்குமார், பொறி. மணி.மணிவண்ணன்,  செய்(நாடார்) முதலான பலரும் தத்தம் கருத்துகளைக் குறிப்பிட்டுக் கொரானாவிற்கான சொற்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து. செயபாண்டியன் கோட்டாளம்,  “எத்தனைத் ‘தமிழார்வலர்’ இருக்கின்றனரோ அத்தனைப்  பெயர்கள் கொண்ட கரோனா வைரசு இறைவனுக்கு நிகரானது. வாழ்க!” என்கிறார். எனினும் பல்வேறு பெயர்கள் இருந்தால், படிப்பவர்கள் வெவ்வேறாகக் கருதிக் குழப்பம்தான் ஏற்படும். சுருக்கமாகவும் தவறான புரிதலுக்கு இடமில்லாததாகவும்  மூலச்சொல்லிற்கு ஏற்றதாகவும் சொல் ஒன்றையே நாம் பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் நான் COVID = மகுடை(த்தொற்றி) என்பதைச் சுருக்கமான ஏற்ற சொல்லாகக் கருதுகிறேன்.

சார்சு கொரானா, மெர்சு கொரானா,  நாவல் கொரனா என்றெல்லாம் சொல்கிறார்களே! அவற்றைப் பார்ப்போம்.

சீனாவில் 2002 இல் வெங்கடுமை மூச்சுநோய்க் குறி (severe acute respiratory syndrome) கண்டறியப்பட்டது. இதனால் ஏற்பட்ட மகுடைத் தொற்றுக்கு இதன் பெயரையே சூட்டினர். இதன் தலைப்பெழுத்துச்சொல்தான் சார்சு(SARS) என்பது. தமிழில் நாம், சுருக்கமாக வெம்மூ மகுடை எனலாம். 2002இல் 37 நாடுகளில் 8273 பேர் பாதிப்பிற்குள்ளாகி 775 பேர் மடிந்துள்ளனர்.

மத்தியக்கிழக்கு மூச்சுநோய்க் குறி மகுடை நோய்மி (Middle East Respiratory Syndrome Corona virus) என்பதன் ஆங்கிலப்பெயரின் தலைப்பெழுத்துச் சொல்லே மெர்சு (MERS) என்பது. உலக நல்வாழ்வு அமைப்பு (WHO)  இதனால் 1638பேர் பாதிப்புற்று 587பேர் இறந்ததாக் குறிப்பிடுகிறது. முழு உலகிற்கும் பெரும் அச்சுறுத்தல் எனப் பல ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது குறிப்பிட்டுள்ளனர். [யமீல் சக்கி (Jamil Zaki) உடன் பலர் 2012,  பெரியாசுலோவு(Pereyaslov)  உடன் பலர் 2013. பியாலெக்கு(Bialek) உடன் பலர் 2014, அசார்(Azhar) உடன் பலர் 2014 ].

செளதி உயிரறிவியல் இதழ் (Saudi Journal of Biological Sciences) சூலை 2016 முதலான இதழ்களிலும், நோய் கட்டுப்பாடு தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) முதலான அமைப்புகளின் அறிக்கைகளிலும் (2014)  பன்னாட்டுப் பொதுநலவாழ்வுக் களஞ்சியம் முதலான தொகுப்பு மலர்களிலும் இவை தொடர்பான கட்டுரைகளையும் செய்திகளையும் காணலாம். இவற்றில் உள்ள கருத்துகள் செவிடன் காதில் ஊதிய சங்குகளாகப் போனவற்றை விளக்கினால் கட்டுரை திசைமாறும்.

2002 இல் வந்த மகுடையைப் புதிய தொற்று என்றுதான் சொன்னார்கள். எனினும் அதற்குப் பெயர் சூட்டியதாலும் இப்போதைய மகுடையின் கொடுங்கடுமைத் தீவிரத்தாலும் இதனைப் புதிய மகுடை நோய்மி என்கின்றனர்.

மகுடையைத் திடீர்ப் பெருக்க (outbreak) நோய் எனலாம். இது கொள்ளை நோயா (epidemic)? என்றால் இத்தொற்று நோய், அதற்கும் மேலான தீங்கானது. ஒட்டுமொத்தமாகத் திருடி வாரிச்சுருட்டிக் கொண்டு செல்வதைக் கொள்ளை(யடித்தல்) என்கிறோம். அதுபோல் உயிர்களைப் பெருவாரியாகக் கொண்டுசெல்லும் நோயைக் கொள்ளைநோய் என்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது நாடு, அல்லது கண்டம், அல்லது உலகம் முழுவதும்  பாதிப்பிற்குள்ளாக்கி உயிர்களைக் கொல்லும் நோயைப் பெரும்பரவல் நோய் என்கின்றர். இவ்வாறு சொல்வதை விட அகண்ட பரப்பில் ஏற்படும் தொற்றுநோய் என்பதால் அகல் பரப்புத் தொற்றி எனலாம். பெரும்பரப்பு என்பது பேரளவிலான பரப்பைக் குறிப்பது. அகல் பரப்பு என்பது முழுமையான பரப்பைக் குறிப்பது.

மகுடை(கரோனா) நோய் பற்றிய சொற்களை அறிந்ததன் மூலம் அந்நோய் பற்றிய விளக்கங்களையும் அறிந்துள்ளோம். இவை தொடர்பான என்.95 கவசம்சமூக விலகல் முதலான பிற சொற்களை அடுத்துத் தனியாகப் பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 87