சனி, 17 நவம்பர், 2018

பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல்: வழக்கும்தேவையும் – வெற்றிச்செழியன்

அகரமுதல

பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல்

– வழக்கும் தேவையும்

   பேச்சு/உரையாடல் மொழியாக ஆங்கிலம் (Spoken English)கற்றுத்தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். நீதிமன்றமும் தமிழ்நாட்டு அரசின் கருத்தைக் கேட்டுள்ளது.
   பலநிலைப்பட்ட தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களின் எதிர்காலம்பற்றி அக்கறையோடு செயல்படுகிற மதிப்புமிக்க பலரும் ஆர்வத்துடன் இந்த வழக்கின் போக்கைக் கவனிக்கின்றனர். பலரின் உள்ளக் கிடக்கை இந்த வழக்கு எனலாம்.
   இந்த வழக்கு, இதில் நீதிமன்றத்தின் அணுகுமுறை, மக்களின் எதிர்பார்ப்பு இவற்றை எல்லாம் நோக்க இரண்டு உண்மைகள் நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கின்றன.
     முதல் உண்மை,
ஆங்கிலம். உரையாடல் மொழியாக ஆங்கிலம் கற்றுத் தரப்பட வேண்டும். உணவு, உடை, உறைவிடம் அடிப்படைத் தேவைகள் என்றது ஒரு காலம். அவற்றுடன் மனிதச் சமூகத்தில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ளத் தேவையான ஆளுமை மேம்பாட்டையும் வாழ்வியல் திறன்களையும் வளர்த்தெடுக்கிற கல்வியும், உறுதி செய்யப்பட்ட ஏற்ற பணி வாய்ப்பும் இன்றைய அடிப்படைத் தேவைகளே.
  இன்று கல்வியும் இருக்கிறது வேலையும் இருக்கிறது. ஆனால் கற்றவர்களுக்கு வேலை இல்லை. வேலைக்கு தகுதி வாய்ந்த ஆட்கள் இல்லை. உலகமயச்சூழலால் இது விரிவாய் அமைகிறது.
   வாழ்வியலுக்கான கல்வி என்பது, ‘வெறும் வேலைக்குத்தான் கல்வி’ எனப் புரிந்து கொள்ளப்பட்டு தலைமுறை கடந்து விட்டது; ஆனால் கல்வி வேலையைத் தரவில்லை.
 தற்சார்போடும் தன்னுரிமையோடு இருக்கும் நாடுகள் தங்கள் தாய்மொழியில் கல்வியைத் தருகின்றன. அவர்களின் தாய்மொழி, தாய்மொழிவழிக்கல்வி, அவர்களுக்கு வேலையைத் தருகிறது. அதைத்தாண்டி புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் படைப்பாக்கத் திறனிற்கான வழியைத் திறந்து வைத்துள்ளது.
   நமது நாடு போன்ற அரைக்குடியேற்ற நாட்டில், அதுவும் இன்றைய உலகமயச் சூழலில் நாம் தற்சார்பை எண்ணுவது பெரிய செயல். வேலை என்பது அயல்நாடுகளில் வேலை அல்லது அயல்நாட்டு நிறுவனங்களில் வேலை என்றாகிவிட்டது. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தே செயல்படும் நிலை.
 இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு மட்டுமல்ல இங்கே வேலை செய்யவும் ஆங்கிலம் முதன்மைத் தேவையாக இருக்கிறது. இதை மொழிப்பற்றாலும் நாட்டுப்பற்றாலும் சிலர் மறுக்கக்கூடும். ஆனால் அதுவே உண்மை. எனவே இங்கே நம்நாட்டு மாணவர்களுக்கு உரையாடல் மொழியாக, தெளிவாகச் சொன்னால் தொடர்பு மொழியாக (communicational language) ஆங்கிலம் கற்றுத்தரப்பட வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முதல் உண்மை.
             இரண்டாவது உண்மை
  நமது மாணவர்களுக்கு முறையான ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை. ‘Spoken English’ பயிற்சி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
 திரு.அப்பாவு கூறுவது போலத் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்பதைத் தாண்டி, ஆங்கிலவழியில் படிக்கும் மாணவர்களில் மிகப்பலர் ஆங்கிலத்தில் பேசத்தெரியாமலே இருக்கின்றனர் அல்லது தவறாகப் பேசுகின்றனர்.
 1. 10 ஆம் நிலை படித்து முடித்தவர்களில் பாதிப்பேர் ஆங்கிலவழியிலேயே 12, 13 ஆண்டுகள் படித்தவர்கள்.
 2. மற்றவர்களும் முதல் நிலையிலிருந்து 10 ஆண்டுகள் ஆங்கிலத்தைப் படித்து வந்தவர்கள்.
 3. பட்டப்படிப்பிலே பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியிலேயே படிக்கின்றார்கள்.
இவை அனைத்திற்குப் பிறகும் நம் மாணவர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்பது இரண்டாவது உண்மை.
   இவற்றிலிருந்து நம் மாணவர்களுக்குத் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுத் தர வேண்டும். நடைமுறையில் உள்ள கல்விமுறையில் நம் மாணவர்கள் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்பன தெளிவாகின்றன. இங்கே நாம் மொழியைக் கற்பது தொடர்பான புரிதலோடு சரியான தீர்வை எட்ட வேண்டும்.
    ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வது என்ற இடத்தில் முதலில் சிலவற்றில் தெளிவு பெறுவோம்.
             ஆங்கிலத்தைக் கற்பது
             ஆங்கிலத்தில் கற்பது
என்பன வேறுபட்டவை. பயிற்று மொழியைப் பொறுத்தவரை உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது தான். இங்கே ஆங்கில வழியில் படித்தால் ஆங்கிலத்தை தெரிந்துகொள்வார்கள் என்பது பொய்யாகிவிட்டது. (சில விலக்குகள் இருக்கலாம், அது அனைத்து இடங்களிலும் உண்டு). உண்மையில் ஆங்கில வழியில் படிக்கத் தொடங்கி நம் படைப்பாக்கத்திறனை இழந்துவிட்டோம்.
  சரி, ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதில் எங்கே பிழை? நம் மாணவர்கள் 10 ஆண்டுக்கு மேல் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்கிறார்கள். பிறகு ஏன் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை.
 ஆங்கிலமாக இருக்கட்டும் அல்லது அருகில் இருக்கிற மலையாளமாக இருக்கட்டும், மொழியைக் கற்பதில் சில வகைப்பாடுகள்  உண்டு.
 1. தொடர்பு மொழியாகக் கற்பது
 2. இலக்கிய இலக்கண மொழியாகக் கற்பது
 3. ஆய்வுக்காகக் கற்பது
 4. உயர்படிப்புக்காகக் கற்பது
ஒரு மொழியில் உயர் கல்வியை மேற்கொள்ளும் ஒருவர் அந்த மொழியின் அடிப்படைத் திறன்கள் பெற்று தன்துறை சார்ந்த சொற்களை, வழக்காடல்களைக் கற்றல். உயர்படிப்புக்கான கற்றல் இது.
  ஆய்வுக்காகக் கற்பது ஒருவகை. மொழிகளுக்கு இடையே ஆய்வை மேற்கொள்ளவும். இலக்கண, இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், பண்பாடு, தொல்லியல் என மொழியோடு நெருங்கியத் தொடர்புடைய ஆய்வுச் செய்யவும், இவர்கள் மொழியின் தேவையான வகைப்பாடுகளில் ஆழக்கற்பர்.
  இலக்கண, இலக்கிய மொழியாகக் கற்பது. இது பொதுவில் தாய்மொழிக்குப் பொருந்தும். நாம் நம் தாய்மொழித் தமிழில் எழுத, பேச கற்பதுடன், தமிழின் இலக்கியங்களை அவற்றின் அழகை, செழுமையைக் கற்பது இவ்வகை. இன்று இந்த முறையில்தான் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. இது தேவையற்ற, பயனற்ற வெற்றுச்சுமை, தவறான நடைமுறை.
 தொடர்பு மொழியாகக் கற்பது. ஒரு மொழியில் தொடர்பு கொள்ள அடிப்படையாகத் தேவையான மொழித்திறன்களான
  கேட்டல் – பேசுதல், படித்தல் – எழுதுதல் திறன்களைப் பெறுவது. ஒருவர் பேசுவதைக் கேட்கிறோம். கேட்டுப் புரிந்துகொள்கிறோம். ஒருவரிடம் நாம் வெளிப்படுத்த வேண்டிய கருத்தை விளங்கும் வகை சொல்கிறோம். அதேபோல் எழுதப்பட்ட ஒரு செய்தியைப் படித்துப் புரிந்துகொள்கிறோம். நாம் உணர்த்த விரும்பும் செய்தியைப் பிறர் படித்து அறியும் வகையில் எழுதுகிறோம்.
  இந்த 4 தொடர்புமொழித் திறன்கள்தான் இன்று ஆங்கிலத்தில் தேவை என்கிறோம். இதில் படிப்பது, கேட்பது இரண்டும் நாம் சார்ந்தன. நாம் புரிந்து கொள்வோமா, சரியாகப் புரிந்து கொள்வோமா என்பது சார்ந்தன. இதில் ஏற்படும் தவறுகள் வெளியே தெரியாத வரை அதை யாரும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
   அடுத்து ஆங்கிலத்தில் எழுதுவது, பேசுவது என்பன ஆங்கிலத்தில் நிறைய பகுதிகளைப் படித்து, வினா விடைகளை மனப்பாடம் செய்து, எழுதி அதன் சொற்களும் சொற்றொடர் அமைப்பும் ஓரளவு மனத்தில் பதிந்துவிடுகிறது. அதைக்கொண்டு எப்படியோ எழுதிவிடுகின்றனர் பலர். அதிலும் ஏற்படும் நிறைய தவறுகளை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. அதனால் நாம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. முதன்மையான இடங்களில் தவறில்லாமல் எழுத வேண்டிய தேவை இருக்கிறது.
   ஆங்கிலத்தில் பேசக் கற்பது. இது தான் இன்றைய தேவை. இதை எப்படி சிறப்பாக மேற்கொள்வது?
ஆங்கிலத்தில் பேசக்கற்பது தனியாக பேசக்கற்பதல்ல.   ஆங்கிலம் தாய்மொழி அன்று. அது அயல்மொழி. அதைக் கற்பது என்பது படித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல் என்றே அமையும்.
 • மொழியியல் அடிப்படையில் (linguistics method)இல் நமக்குத் தெரிந்த தாய்மொழியோடு ஒப்பிட்டு, ஒத்தமைதலை, வேறுபடுவதை, புதியதைக் கற்பது,
 • படிக்க, எழுத கற்ற பின்னால் கேட்க, பேச கற்றல்,
 • எழுத்து வடிவில் உள்ள தொடர்களை, சொற்றொடர்களில் பேசும்போது ஏற்படும் மாற்றங்களை அறிந்து பேசக்கற்றல்,
பேசும்போது சிறப்பாக
      ஆங்கில ஒலிப்பு முறை அறிந்து (phonetic) பேசுதல் (ஆங்கிலம் இரட்டை மொழி. தமிழைப்போல் எழுதுவதை அப்படியே படிக்க முடியாது).
  ஆங்கிலப்பெயர்ச் சுருக்கங்கங்கள், சொற்சுருக்கங்கள் முறையறிந்து பேசக் கற்றல்.
         ஆங்கிலம் முறைமைகளைப் போற்றும் மொழி. ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற உரையாடல் தொடக்கங்கள், தொடர்கள் உண்டு. அவற்றைக் கற்றறிந்து பேசப்பழகுதல்.
இவை அனைத்தையும் மொழியியல் அடிப்படையில், புரிந்ததில் இருந்து புரியாததைக் கற்றல் என்ற முறையில் கற்க வேண்டும்.
 எனவே இன்று நடைமுறையில் உள்ள
 1. ஆங்கிலப் பயிற்றுமொழியை நீக்க வேண்டும்.
 2. இரண்டாவது மொழியான ஆங்கிலத்தை இலக்கண, இலக்கிய மொழியாகக் கற்றுத் தருவதை மாற்ற வேண்டும்.
 3. ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மொழியியல் அடிப்படையில் கற்றுத்தர வேண்டும்.
 4. ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தை மொழிப்பாடமாக அல்லது மொழியாக கற்றவர்களாக இருந்தால் போதாது. அவர்களுக்கு மொழியியல் அடிப்படையில் பயிற்சி வழங்கிக் கற்றுத்தர வழி செய்ய வேண்டும்.
ஆம், தாய் மொழித் தமிழில் அடிப்படைத் திறன்களைப் பெற்ற பிறகு அதைக் கொண்டு தமிழோடு ஒப்பிட்டு, மொழியியல் – linguistics முறையில் கற்பிக்க வேண்டும்.
இப்படித்தான் உலகநாடுகள் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை அல்லது வேறு மொழியைக் கற்று தந்து வெற்றி பெற்றுள்ளனர். அதுவே நமக்கும் ஏற்புடையது.
கல்வியாளர் வெற்றிச்செழியன்

வெள்ளி, 16 நவம்பர், 2018

குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்

அகரமுதல

கார்த்திகை 02, 2049 / நவ.18,2018

மாலை 3.30

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்

வியாழன், 15 நவம்பர், 2018

கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

கார்த்திகை 01, 2049 சனி 

17.11.2018 மாலை 6.00

இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14

திராவிடத் தமிழர் அறக்கட்டளையின்

கருஞ்சட்டைப்பதிப்பகம்

தொடக்க விழா

4 நூல்கள் வெளியீட்டு விழா

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
‘பெல்’ இராசன்

வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் – புத்தகத்திறனாய்வுகார்த்திகை 01, 2049 சனி

17.11.2018 மாலை 6.00

தே.ப.ச. (இக்சா) மையம், எழும்பூர், சென்னை

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய
வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள்
புத்தகத்திறனாய்வு

திறனாய்வாளர்:  ப.திருமாவேலன்

அன்புடன் கூர் இலக்கிய வட்டம்

கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

அகரமுதல

கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில்

    நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார்.
  செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத்  தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
  கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தைகளுக்கான கதை நூலினைத்  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., வெளியிட்டார். இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி பெற்றுக் கொண்டார்.
   நூலினை வெளியிட்ட  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசும்போது, “இன்றைக்குக் குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின் இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை வகுப்புகளில் எங்களுக்குக் கதைகள் சொல்வார்கள். அந்தக் கதைகளில் வரும் நீதி எங்களின் மனத்தில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின் கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும் ஒழுக்கத்தோடும் இருப்பார்கள்.   இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை திருப்பப்படுகிறது. குழந்தைகள் தானாகச் சிந்திக்கவும் செயல்படவும் புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள் மனத்தில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க முடியும்.  நெகிழிப்(plastic) பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனத்தில் கொள்ள வேண்டும். மு.முருகேசு எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.
 விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமசு, பொன்.வாசுதேவன், பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருட்டிணன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
   நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு ஏற்புரையாற்றினார். விழாவில், கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த இப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ – மாணவிகளைப் பாராட்டினர்.
 விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
   நிறைவாகப், பள்ளி ஆசிரியர் பி.இரேணுகாதேவி நன்றி கூறினார்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

,அகரமுதல


 கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018
சிரீராம் குழும அலுவலகம் 
மூகாம்பிகை வளாகம்
(4, பெண்கள் தேசிகர் தெருஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004 
(
சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

தலைப்பு:  கவிதைப் படிமமும் அழகியலும்

 சிறப்புரை:  மரு. வேணு வேட்(ட)ராயன்

செவ்வாய், 13 நவம்பர், 2018

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! – தி.வே.விசயலட்சுமி

அகரமுதல

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு!

முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சைஅளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது.
இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி மக்களை வாட்டுகிறது. பொருள் வசதிபடைத்தவர் தவிர மற்றவர் அரசு மருத்துவ மனைகளையே நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிறந்த சிகிச்சை அளித்தாலும் மருத்துவச் செலவு மிக அதிகம். சிறு நோய்க்குக் கூட பல ஆயிரம் கொடுத்து சிகிச்சை பெறும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சாதாரண காய்ச்சல் என்றால் கூட தேவையற்ற இரத்தப் பரிசோதனை, அலகீட்டு வரைவி(C.T.Scan) போன்ற ஆய்வுகள் செய்த பின்னர்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகள் பொருள் வசதி படைத்தவர்கள் என்று அறிந்து விட்டால் அதிகக்கட்டணம் உள்ள சிறப்பு அறைகளைக் கொடுத்து பணம் கறக்கிறார்கள். இதில் நடுத்தர வருக்கத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். படித்தவர்கள்  காப்பீட்டு நிறுவன உதவியால் ஓரளவு நிலைமையைச் சமாளிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் இன்று வர்த்தக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
அக்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார். உடல் நலிவடைந்தால் அவரைத்தான் பார்ப்பார்கள். சிலரால் செல்ல இயலாவிடின் அழைத்தால் அவரே இல்லத்திற்கு வந்து சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்துச் செல்வார். இன்று குடும்ப மருத்துவர்கள் அருகிவிட்டனர்.
தற்காலத்தில் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், தலைவலி என்றாலே  சிறப்புநிலை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதால் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. பரிசோதனை முடிவதற்குள் ஒருமாத வருவாயை எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒருசில மருத்துவர்களே வருவாயை எதிர்பார்க்காமல் சேவையில் ஈடுபடுகிறார்கள். அப்பணி ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட வேண்டும்           விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். விபத்து வழக்குகள் குறித்து பயப்படக் கூடாது. விபத்தில் காயம் அடைந்தவர்களை எந்த இடத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்கலாம், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்டம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கட்கு மருத்துவர்கள் தயங்காமல் உதவ முன்வர வேண்டும்.
மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினால், நோயைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். செலவை எதிர் நோக்கும் அச்சவுணர்வே நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.
இந்தியாவிலேயே மருத்துவப்பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரியான மரு. முத்துலட்சுமி(ரெட்டி)தான் மருத்துவ மனைகளில் பெண் மருத்துவர்களை நியமிக்க வழிவகை செய்தார். மேலும், புற்று நோயை ஒழிக்க ஆய்வுக்கழகம் அமைத்ததும் அவர்தான். ஒவ்வொரு மருத்துவரும் அவரை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மருத்துவம் தொடர்பாக எழுதிய நூல்களை மருத்துவக் கல்லூரியில் பாடப்புத்தகங்களாக வைக்க வேண்டும்.
மருத்துவம் என்பது தொழில் அல்ல; அது ஒரு சேவை. இதனை மருத்துவர்கள் உணர வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை அன்புடன் அணுகி, அவரை சோதித்து, நோயின் தன்மை குறித்து உறவினர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். இளம் மருத்துவர்கள் தங்களைவிட மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
நோயாளிகள் மருத்துவர்களை தெய்வமாகவே நினைக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செயற்பாடு இரக்கமற்ற நிலையில் இருப்பதைப் பார்க்க நெஞ்சம் நோகிறது.
சில மாதங்கட்கு முன்னர், எண்பது வயதைக் கடந்த இதய நோயாளி ஒருவர், மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், பணம் கொண்டுவர மறந்து விட்டார். மருத்துவரின் செயலர், அம்முதியவரை மீண்டும் வீட்டுக்குப் போய்த் தொகையை எடுத்து வரவேண்டும் என்று சொல்லி அவர் மருந்துச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டார். மனம், உடல் சோர்ந்து அம்முதியவர் வீட்டுக்குப் போய்ப் பணம் கொண்டு வந்த பிறகே மருத்துவர் சிகிச்சையளித்தார்.
ஆனால், அதே சமயம்  சிகிச்சையோடு அன்பையும் ஒரு சேர அளித்துக் காப்பாற்றும் மருத்துவர்களும் இருக்கின்றனர். அத்தகைய பரந்துவிரிந்த மனம் அனைவர்க்கும் இருந்தால், எளியோரும் முதியோரும் மனச்சுமையின்றி தம் நாள்களைக் கழிப்பர். மருத்துவர்கள் தாங்கள் செய்வது தொழிலன்று; மனித உயிர்களைச் காக்கும் மகோன்னதமான சேவை என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.
சமூகம் நோய்ப்பிடியிலின்று தங்களை விடுவித்துக் கொள்ள, மருத்துவம் பற்றிய புரிதல் உணர்வுடன், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணி நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக் கேற்ற உணவு முறை உடற்பயிற்சி, யோகா, போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் சிறந்த சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை உருவாக்குவதும், மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது மருத்துவர்களின் கடமை.


–  தி.வே.விசயலட்சுமி
தினமணி நாள் 27.10.2018