வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு! இவரும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துக் கதிர் 1.20

அவரும் தவறு! இவரும் தவறு!

மகுடைத் தொற்றுத் தடுப்பு தொடர்பாக  அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் காணுரை மூலமாக நடத்த வேண்டும்  என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.தாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். பிற எதிர்க்கட்சியினரும் அவ்வாறுதான் வேண்டிவருகின்றனர். ஆனால் முதல்வர் தேவையில்லை என மறுத்து வருகிறார். அதற்காக அவரும் பிற அமைச்சர்களும் லும் காரணங்கள் சரியில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் இருந்தவர். சட்டமன்ற உறுப்பினர், மாநகரத் தலைவர், அமைச்சர், துணை முதல்வர்,  எனப் பல பொறுப்புகளை வகித்தவர். இப்பொழுதும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையிலும் மக்கள் சார்பாளராகச் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியினரிடமும் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசு முடிவெடுத்துச் செயல்படுத்தலாம். ஆனால், மக்களின் குறைகளை எதிர்க்கட்சியினர் மூலமும் அறிந்து குறைகளைவதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் என்ன தவறு? மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே அரசியல் நடத்தும் போக்கில் இருந்து மாறுபட்டு எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும்போக்கைப் பல நேரங்களில் வெளியிட்டுள்ளார். அவ்வாறிருக்க மக்கள் நலன் கருதி, எதிர்க்கட்சியினரைக் கலந்து பேசமறுப்பது தவறுதான்.
ஆட்சிப்பொறுப்பில் உள்ள முதல்வருக்கு அதிகாரிகளையும் தொடர்புடைய வல்லுநர்களையும் சந்தித்துப் பேசுவது கடமைதான். அதைப்பொதுக்கூட்டம் போல் கருதி எதிர்ப்பதும் எதிர்த்து வீணுரை பேசுவதும் தவறு. முதல்வர் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டாவிட்டாலும் எதிர்க்கட்சித்தலைவர் தம் தோழமைக்கட்சித் தலைவர்களைக் கூட்டினார். ஆனால் அதன் பயன் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு அரசைக் கேள்வி கேட்பதைக் குறைத்து விட்டு மக்கள் அரசைக் கேள்விகேட்கும் வண்ணம் மாற்ற வேண்டும். மகுடைத் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் மீட்கவும் நிறைவான நல்வாழ்விற்கும் ஒல்லும் வகை தொண்டாற்றிட வேண்டும்.
மகுடைத்தொற்றுக்கு(கொரானாவிற்கு) எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என நாளும் பொழுதும் சொல்லும் அரசு தானே முன்னெடுத்துக்காட்டாக இருக்க வேண்டாவா? எனவே, பிறரை – அதுவும் ஆட்சிப்பட்டறிவு உள்ள எதிர்க்கட்சித் தலைவரையும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் தலைவர்களையும் – சந்திப்பதை இழுக்காக எண்ணாமல் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் அவர்களைக் கலந்து பேசி இணைந்து பணியாற்றினால் அவருக்குப் பெருமைதான் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், பிறரின் இடித்துரைகள் கசப்பாக, ஏற்றகத்தக்கனவாக இல்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 389)
இலக்குவனார் திருவள்ளுவன்

புதன், 22 ஏப்ரல், 2020

கவனிக்கப்படாத கவிஞர் சடையப்பன் – கே.சீவபாரதி


கவனிக்கப்படாத கவிஞர் சடையப்பன்

ஊருக்குள் செருப்பு போட்டுச் செல்லக் கூடாது; தலையிலோ தோளிலோ இருக்க வேண்டிய துண்டு கக்கத்தில்தான் இருக்க வேண்டும்; உயர் சாதியினரைக் கண்டால், அவர் இளம் வயதினராக இருப்பினும் குனிந்து பணிந்து வணங்க வேண்டும்; உயர் சாதியினர் எவரேனும் இறந்து விட்டால், அந்தத் துயரச் செய்தியை இறந்தவர்களின் உறவினர்கள் வாழும் பிற ஊர்களுக்குச் சென்று சொல்ல வேண்டும். இப்படித்தான் அந்தச் சேரி வாழ் மக்களை உயர்சாதியினர் நடத்தி வந்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் ‘சக்கிலிப் பட்டி’ என்ற சிற்றூர்ச் சேரியில் வாழ்ந்த சடையன் – பேச்சியம்மாள் தம்பதிக்கு 1925 நவம்பர் 21 அன்று ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பெற்றோர் ‘சடையப்பன்’ என்று பெயர் இட்டனர்.
சடையப்பன் சிறுவனாக இருந்தபோதே பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தான். அதனால் அவனுடைய தந்தை அவனுக்கு ஒத்திசை(ஆர்மோனியம்), தாளம், மத்தளங்களை வாங்கிக் கொடுத்து, அவனுடைய கலை ஆர்வத்தைத் தூண்டினார்.
சடையப்பனின் தாயார் அந்த ஊர் சேரிப் பெண்களுக்குக் கும்மி, தாலாட்டு, ஒப்பாரி போன்ற நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக் கொடுத்து வந்தார். இந்தப் பின்புலம் சடையப்பனை நாடோடி இலக்கியங்கள் மீது ஆர்வம் கொள்ளச் செய்தது.
வீட்டிலேயே திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சிதம்பரத்தைக் கொண்டு சடையப்பனுக்குத் தமிழ், தெலுங்கு கற்றுக் கொடுத்தார் தந்தை. அதன்பின் ஊரிலிருந்த ஊராட்சிப் பள்ளியிலும், நகரப் பள்ளியிலும் கற்று 1942 – இல் நடுநிலைப்பள்ளி இறுதித் தேர்வில் சடையப்பன் வெற்றி பெற்றான்.
மேலும் படிக்க வாய்ப்பில்லாததால் படைத்துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பினான் சடையப்பன். ஆனால் அவனுடைய தந்தை அவனுக்கும் அவனுடைய தாய்மாமன் மகள் மணியம்மாளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
அதனால் எவருக்கும் தெரியாமல் நாயகம், வேங்கடராமன் ஆகிய நண்பர்களோடு வீட்டைவிட்டுச் சடையப்பன் வெளி ஏறினான். மூவரும் நடந்தே சோலார்பேட்டைகுச் சென்று படைத்துறைக்கு ஆள் எடுக்கும் போது வரிசையில் நின்று தேர்வு பெற்றனர்.
நெல்லூர், யாழ்ப்பாணம், கயா, தாய்லாந்து, கொல்கத்தா ஆகிய இடங்களில் சடையப்பனுக்கு படைப் பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்போதுதான் அவனுக்குத் தேசப்பற்று அரும்பியது.
காந்தியடிகள் படத்தைச் சடையப்பன் மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்த வெள்ளை அதிகாரிகள், எட்டு நாட்கள் சடையப்பனைச் சிறை வைத்தனர்.
பின், ஆயுதப் படையில் சடையப்பன் சேர்க்கப்பட்டான். இந்தக் காலக்கட்டத்தில் பெரியார், சீவா  ஆகியோரின் தன்மதிப்புக் கருத்துகளில் பற்று கொண்டான்.
ஆயுதப் படையில் பணியாற்றிக் கொண்டு, பொது மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளை சடையப்பன் பேசி வந்ததைக் கண்டு, வெள்ளையர் அரசு அவனை வேலை நீக்கம் செய்தது.
அதன்பின் சொந்தச் சிற்றூரில் இருந்த தொடக்கப்பள்ளியில் சடையப்பனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய அப்பாதுரை, சடையப்பனைப் பொதுவுடைமை இலக்கியங்கள் பக்கம் திருப்பினார்.
இதன்பின் பாடல் எழுதுவது; கொட்டொலி இசை(டேப் அடிப்பதன்) மூலம் இயக்க மேடைகளில் பாடுவது; நாடகம் எழுதுவது; மேடையில் அரங்கேற்றுவது; நடிப்பது, சமூகப் பணி ஆற்றுவது; உழவர் சங்கம், மாதர் சங்கம் போன்ற வெகுமக்கள் அமைப்புகளை உருவாக்குவது எனச் சடையப்பனின் பொது வாழ்க்கைப் பயணம் நடந்தது.
தேசம் விடுதலை கண்டபின் ஆளும் பேராயக்(காங்கிரசு) கட்சி பொதுவுடைமைக் கட்சிக்குத் தடை விதித்தபோது, சடையப்பனைக் கைதுசெய்து சேலம், ஏற்காடு சிறைகளில் அடைத்தது.
விடுதலையான பின் திரைப்படத்திற்குப் பாட்டெழுதும் ஆசையில் சென்னைக்கு வந்த சடையப்பன், ‘சனசக்தி’ அலுவலகத்தில் தங்கிக் கொண்டு வாய்ப்பு தேடினார். வாகினி படநிலையத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அதனால் சாலிக்கிராமத்தில் அறை எடுத்து சடையப்பன் தங்கினார்.
இந்தப் பகுதியில் வாழும் இளைஞர்களை இணைத்து ஒரு மன்றத்தை உருவாக்கினார். சீவா, இராமமூர்த்தி, கே.முத்தையா, ஐ.மாயாண்டி பாரதி, செயகாந்தன் ஆகியோரை அழைத்து வந்து இளைஞர்களுக்கு அரசியல் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்தார்.
வாகினி படநிலையத்தில் பணியாற்றிக் கொண்டு, ஓய்வு நேரத்தில் திரைத் துறை ஓவியர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஒளிப்படக் கலைஞர்கள் ஆகியோர் நலனுக்காக ஒரு சங்கத்தை சடையப்பன் உருவாக்கினார். அதனால் அவரை வாகினி நிருவாகம் வேலை நீக்கம் செய்தது.
இதன் பின் சொந்த ஊரில் தங்கிக் கொண்டு இயக்கப் பணிகளில் சடையப்பன் ஈடுபட்டார்.
‘டேப்பு சடையப்பன் கலைக்குழு’ என்ற ஓர் இசைக் குழுவை உருவாக்கி தமிழகம் முழுவதும் இயக்கக் கருத்துகளை மக்களிடத்தில் கொண்டு சென்றார்.
1961- இல் கோவையில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் மாநாட்டில் சடையப்பன் மத்தியக் குழுவிலும், பேராசிரியர் நா. வானமாமலை தலைமையில் அமைக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கும் குழுவிலும் இணைக்கப்பட்டார்.
அண்மையில் கவிஞர் சடையப்பன் எழுதி வைத்திருந்த ‘எனது வரலாறு’ என்ற கையெழுத்துப் படியைப் படிக்கின்ற வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அதில், இன்றைய உலகம், பெரும் பணக்காரன், பெரும்பாவி, சொல்லத் துடிக்குதடா, உன்னைப் போல் ஒருத்தி, மக்கள் கவிஞன், மனித தெய்வம், மக்கள் தொண்டன், ஏழைகளின் புது உலகம், வீரகாவியம், நீதி உறங்குகிறது, கொலைகாரன், கலப்பு மணம், ஒரு பிடி சோறு ஆகிய 15 நாடகங்களையும்; 865 கவிதைகளையும்; 705 இசைப் பாடல்களையும்; 50 கவியரங்கக் கவிதைகளையும்; தீண்டாமையை எதிர்த்து 75 கவிதைகளையும், 25 கட்டுரைகளையும்; 35 சிறுகதைகளையும் தாம் எழுதியிருப்பதாகச் சடையப்பன் குறிப்பிட்டிருக்கிறார்.
இறுதிநாள் வரை ஒரு முழுமையான பொதுவுடைமைவாதியாகவும் போர்க்குணமிக்க போராளியாகவும் வாழ்ந்த கவிஞர் சடையப்பன் 1991 மே 26 அன்று இறந்தார். வாழும்போது தன்னுடைய படைப்புகளை நூலாக்க அலைந்தார். எவரும் கைகொடுக்காததால் அந்தக் கவலையோடு அவர் இறந்தார்.
ஆம்! பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த எத்தனை படைப்பாளிகள் இது போன்ற கனவுகளோடு கண்மூடினரோ?
(21.04.2020 கவிஞர் சடையப்பன் பிறந்த நாள்)
கே.சீவபாரதி

பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு

அகரமுதல


பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர்

முதலாவது பரிசு –  பானுமதி கண்ணன் எழுதிய ‘அப்பா’
இரண்டாம் பரிசு –  விக்கினேசுவரன் எழுதிய ‘நிழல் படங்களும் … நிசச் சடங்களும்’
மூன்றாம் பரிசு –  புதுவைப் பிரபா  எழுதிய ‘இங்கேயும் .. இப்போதும்’    
பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன.
ஆகவே, உலக அளவில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள்!
வாழ்க தமிழ்! வளர்க வையகம்!

பானுமதி
புதுவை பிரபா
விக்கினேசுவரன்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்?

அகரமுதல

சித்திரை 06.2051 / 19.04.2020 / மாலை 06.30
குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்?
 • நெறியாளர் – மரு.பாசுகரன்

  பங்கேற்போர்

  பானுமதி + அழகிய சிங்கர் +  சதுர் புசன் + இராய செல்லப்பா + இராசேசு +  மந்திர மூர்த்தி +  எசு.வி.வேணுகோபால்
 • +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 • கூட்ட அ.எ.: 619 157 9931
  நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்.  கடவுச்சொல் (password) தேவையில்லை   
  நிகழ்வில் கலந்துகொள்ள இணைப்பு :-    https://us04web.zoom.us/j/6191579931
  1. உள் நுழையும்போது தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
  2. இந்த இணைய அளவளாவலில் நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIKE) அமைதிப்படுத்திவிடவும்
  3. எல்லாருக்கும் சுருக்கமான கருத்தினைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க விரும்புகிறோம். 
  4. கருத்து சொல்ல விரும்புபவர்கள்  கையை உயர்த்தவும் (RAISE HAND OPTION) கிடைக்கும் நேரத்தினைக் கருத்தில்கொண்டு நெறியாளர்  வாய்ப்பளிப்பார்.  
   நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்திழைப்பை நாடுகிறோம்