சனி, 3 பிப்ரவரி, 2018

‘விரல்மொழியர்’-பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் – அறிமுகம்

 ‘விரல்மொழியர்

பார்வையற்றோரால் நடத்தப்படும்

முதல் தமிழ் மின்னிதழ்

 அறிமுகம்

​  பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகப்  பார்வையற்றவர்களே   தொடங்கும் ம் முதல் தமிழ் மின்னிதழ்  ‘விரல்மொழியர்’. இம்முயற்சியில்  பங்கேற்க, இம்முயற்சியை ஆதரிக்க பார்வையற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் வரவேற்கிறோம்.
பார்வையுள்ளவர்களுக்கு இணையாக இன்று பார்வையற்றவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும்  படிப்பு,  பொழுதுபோக்கு அல்லது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்கிற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
  இயல்பிலேயே அதிகமான சிந்தனை ஆற்றலையும் உயர்கல்வியில்  மொழிப் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் பார்வையற்றவர்கள், எழுத்துலகில் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டாதது சிந்திக்கவேண்டிய ஒன்று. அப்படியே வெகுசிலர்  எழுதினாலும், அது  பரவலாக வாசகர்களைச் சென்றடையாததும் அவர்களுக்கு சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கும். இந்தச் சூழலை மாற்ற, பார்வையற்ற படைப்பாளிகளை ஒருங்கிணைக்க, அவர்களின் எழுத்துகளை பார்வையற்ற வாசகர்களிடம்  மட்டுமல்லாமல் பார்வையுள்ளவர்களிடையேயும் ஒரு தரமான மின்னிதழாக  கொண்டுசேர்க்க விரல்மொழியர் என்கிற எங்கள் இணைய இதழ் முயற்சியில் இணைந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இதழ் முழுக்க படைப்பாளிகளின் சொந்தப் படைப்புகளை மட்டுமே  இடம்பெறச் செய்யவேண்டும் என்பது எங்களது திட்டம். விளையாட்டு, திரைப்படம், அரசியல், தொழில்நுட்பம்,  சொந்தப் பட்டறிவுப் பகிர்வுகள்,  கவிதைகள், கதைகள்  எனப் பார்வையற்றவர்களின் சொந்த படைப்புகள் அனைத்தும் இதழில் வெளியிடப்படும். இவை தவிர, அட்டைப் படக் கட்டுரை, செவ்வி(பேட்டி)களும் இடம்பெறும் வகையில் திட்டமிட்டிருக்கிறோம். எனவே, தங்களின் அட்டைப் படக் கட்டுரையாகவும்,  நம் பார்வையற்றோர் சமூகத்தில் குறிப்பிடத்தக்கவராக நீங்கள் அடையாளம் காண்பவரின் செவ்வி(பேட்டி)யாகவும் இருக்கலாம். பார்வையுள்ளவர்களின் பார்வையற்றோரைப்பற்றிய படைப்புகளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
 எந்த நிறுவனமும் சாராமல், முழுக்க நண்பர்கள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி இது. இதில் தங்களையும் இணைத்துக்கொண்டு இதழியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வாருங்கள்.
‘விழிச்சவால்’ பிரெயில் மாத இதழின் இணையாசிரியர் திரு. இரா. பாலகணேசன், சமூக வலைத்தளங்களில் ‘அறவழிச்சாலை’ என்கிற குழுமத்தில் பார்வையற்றவர்களின் கல்வி தொடர்பாகவும்,  அரசியல் விமர்சனங்களையும், அன்றாட வாழ்க்கைப் பட்டறிவுகளையும்  பதிவிட்டுவரும், புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியின் ஆசிரியர் திரு. ப. சரவணமணிகண்டன், ‘வெளையாட்டுப்பய’, ‘பார்வையற்றவன்’ போன்ற புனைபெயர்களில் சமூக வலைத்தளங்களில் எழுதிவரும் காந்திகிராம் பல்கலையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வன். பொன். சக்திவேல், ஊடாடு விளம்பர நிறுவனமான ‘ஐஏபி’  சென்னைக் கிளையில் பணியாற்றிவரும் செல்வன். பொன். குமரவேல், இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றிவரும் செல்வன். சோ.யோகேசு, செல்வன். இரா. சரவணன் ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் படைப்புகளையும் இதழ் குறித்த தங்களின் எதிர்பார்ப்புகளையும் எங்களோடு பகிர்ந்து, பார்வையற்றவர்களுக்கான முதல் தமிழ் மின்னிதழ் முயற்சியில் இணைந்திட உங்கள் அனைவரையும் அழைக்கிறது உங்கள் ‘விரல்மொழியர்’. வாருங்கள்! நாம் உணர்ந்ததைச் சொல்வோம் உலகிற்கு!
தொடர்புக்கு:
பாலகணேசன்: 9894335053,
பொன். சக்திவேல் 9159669269.

வியாழன், 1 பிப்ரவரி, 2018

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா – பல்வழி அமைப்புப் பொழிவு

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா

பல்வழி அமைப்புப் பொழிவு

வரும் தை 27,  பிப். 9 வெள்ளி இரவு 9 மணிக்கு ;

தலைப்பு :

புராணங்களும் பொய்மையும்

மானமிகு சு. அறிவுக்கரசு,

செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்.

வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறந்த பேச்சாளர்,எழுத்தாளர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்தவர்.
அழைப்பெண் : அமெரிக்கா  &  கனடா  5157391519  குறிஎண் 890386
இந்தியா 1725199068 பிப்.10, காலை 7.30
சிங்கப்பூர் 65 31389208
ஐக்கிய இங்கிலாந்து  44 3309981254

குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக!

குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய

தொழில்லாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக!

அன்பிற்கினிய
  • தமிழக அரசே!
  • அமைச்சர்களே!
  • மாவட்ட ஆட்சியர்களே!
  • தமிழக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களே!
  • அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே!
  • ஊடக உறவுகளே!
  • சமூக சேவகர்களே!
குவைத்தில் பல மாதங்களாக ஊதியமின்றி பாதிக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் குவைத்துத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்!
குவைத்து கராஃபி தேசிய நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கராஃபி தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்வதற்காக குவைத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடந்த  புதன்கிழமை (20.01.2018) இரவு குவைத்து பாலிவுட் உணவக அரங்கில் ஒன்றுகூடி அவசரக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தின் வாயிலாகத் தமிழக அரசுக்கும், கட்சிகளுக்கும் சில வேண்டுகோள்களையும் முன் வைத்துள்ளனர்.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இணைப்பில்…  https://www.facebook.com/khaleelbaaqavee/posts/1068161479990365
தாயகம் திரும்பியுள்ள தமிழர்களுக்காகக் குரல் கொடுங்கள்!!
கருத்து முரண்பாடுகளைக் களைவோம்! களமிறங்கிச் செயலாற்ற ஒன்றிணைவோம்!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!
அன்புடன்,
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
பொதுச் செயலாளர்,
குவைத்துத் தமிழ் இசுலாமியச் சங்கம் (K-Tic)
முகநூல் (Facebook): 
இணையதளங்கள்
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic ; முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic  ; யாஃகூகுழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group ; நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live  
ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

தகடூர் கோபி நினைவேந்தல், சென்னை

தை 21, 2049 – சனிக்கிழமை – 03-02-2018

மாலை 3.30 முதல் 6 மணி வரை 

’தமிழ் இணையச் சிற்பி’

தகடூர் கோபி நினைவேந்தல் கூட்டம் 
இடம் : கவிக்கோ மன்றம், மைலாப்பூர், சென்னை 600 004

நிகழ்வில் சகாயம், இ.ஆ.ப., தமிழார்வலர்கள்,
பதிப்பாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
தொடர்புக்கு :
சீனிவாசு பார்த்தசாரதி @98843 99992 
செல்வமுரளி @99430 94945 
இரசினி இராம்கி @98414 89907 
மாயவரத்தான் கி.இரமேசுகுமார் @88388 21638 
அன்புடன்
கணிணித்தமிழ் சங்கம் 9884399992 / 044 49595631 
உத்தமம்
இரசினி அன்பர்கள் குழு <  http://www.rajinifans.com/ >

புதன், 31 ஜனவரி, 2018

அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி

பிற கருவூலம்

அனலும் புனலும் :

வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்

காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.
சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.
சட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம்.
அரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.
கடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா?
பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம்என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். புதுச்சேரியில் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினார். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]
இனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.
நாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. ஸமத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)]. குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
 கருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
ஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தானே அவர் கவலைப்படுவார்! எனவே, இதன் மூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.
தமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்திலும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.
காலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறைவன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.
சுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.
குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில் கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.
சுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.
திருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சங்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.
சங்கர மடத்தினரே! இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சிறப்பை உணருங்கள்! தமிழுக்குத் தொண்டாற்றுங்கள்! இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.
குவியாடி
இ.எ.தமிழ் / ietamil நாள் சனவரி 27, 2018