சனி, 4 ஏப்ரல், 2015

செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!


அன்புடையீர் வணக்கம்!!!
 தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
  கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம்!!!!
 கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்…
 அப்படிச் செய்தால்தான் என்ன? தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ?? என்ற எண்ணத்தின் உந்துதலால்,
எங்கள் ஐயா, செந்தமிழ் வேள்விச் சதுரர், தமிழ் வழிபாட்டுப் போராளி, தமிழ் ஆகம அறிஞர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள்,
 சென்னையில் முற்றிலும் தமிழே முழங்கும் செந்தமிழ்க் கோயில்
ஒன்றை  எழுப்ப ஆய பணிகளை உலகத் தமிழர்களின் ஆதரவோடு தொடங்கி உள்ளார்…
 அதன் தொடர்பாக இதே எண்ணம் கொண்டு உலகின் பல பகுதிகளில் பரவி உள்ள தங்களை போன்ற தமிழன்பர்களிடம் அவர் விடுத்துள்ள விரிவான விண்ணப்பத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
 தாங்கள் மனமுவந்து இந்த அரிய முயற்சிக்கு உதவ வேண்டுகின்றோம். மேலும் இதனைத் தாங்கள் அறிந்த நட்பு வட்டத்தில் பகிர்ந்திடவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்…
 இப்படிக்கு,
 என்றும் மாறா அன்புடன்…
 ச.திருச்சுடர் நம்பி
(சத்தியவேல் முருகனாரின் மகன்)

Plea for Tamizh Koyil02_Page_1 Plea for Tamizh Koyil02_Page_2

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அடங்கா வெறி! – தங்கர்பச்சான்


kudi_sollathonudhu_23

 எங்கே போகிறது மன்பதை?

  பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.
  செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.
  நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள், ஒன்று மறியாத பிஞ்சுக் குழந்தைகளைப் பலியாக்கிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத இந்தக் குற்றங்களைச் செய்பவர்களின் மனம், எதனால் இப்படி மாறுகிறது? சமூகத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டவர்களாக எப்படி இவர்கள் மாறிப் போகிறார்கள்? பால் உணர்வு பற்றிய புரிதல் இல்லாமல் இவர்கள் தடம் மாறிப் போகக் காரணம் என்ன? பெருகி வரும் குற்றங்களைப் பட்டியலிடுவதும், கவலை கொள்வதும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவிப் பணத்தைக் கொடுத்துவிட்டு அரசாங்கம் தன் கணக்கை முடித்துக் கொள்கிறது. எந்தெந்தச் சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் பொதுவிதியாக இருக்கிறது.
  நான் மறக்க நினைத்தாலும் என் கண் முன்னே என் சிந்தனையை இடைஞ்சல் செய்து நிற்கின்ற இச்செய்தியை நீங்களும் அறிந்திருக்கலாம். மயிலாடு துறை அருகே ஒரு பள்ளி மாணவி சிறைக்கு அனுப்பப்பட்டதன் பின்னணியைப் படித்தபின், என் மனம் அந்த மாணவியையும் அவ்வாறு சிக்குண்டு இருக்கும் இளம் பெண்கள் பற்றியுமே சுற்றுகிறது.
  மதுக்குடிக்கு அடிமையாகிப் போன அப்பனிடம் இருந்து பருவமடைந்த தன் இரண்டு மகள்களையும் காப்பாற்ற, அந்த மாணவியின் தாய் ஒவ்வொரு நாளும் போராடியிருக்கிறார். குடித்துவிட்டு வருகிற கணவனைத்தான் அவரால் கண்டிக்க முடிந்திருக்கிறது. தெருவில் இருக்கும் அரசு மதுக் கடையை அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்தத் தாயால் முடிந்ததெல்லாம் பகலும் இரவும் தன் மகள்களிடம் அவர்களின் அப்பனை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டதுதான்.
  தொடர்ந்து வன்புணர்ச்சிக் கொடுமையை அடைந்து வந்த மூத்த மகள், யாரிடம் இதைப் பற்றி சொல்ல முடியும்? எந்த மன நிலையில் அவளால் பள்ளிக்குச் சென்று படித்திருக்க முடியும்? தன் தந்தையிடம் இருந்து தங்கையையாவது காப்பாற்றிவிடலாம் என நினைத்தவள், ஒருநாள் நஞ்சு வாங்கி வந்து மதுவுடன் கலந்து வைத்து விட்டாள். அதனைக் குடித்த அப்பன் இறந்து போனான்.
  அவளைத் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்த தந்தையின் கூட்டாளிகள் இருவரும் மீதியிருந்த மதுவைக் குடித்ததினால் இறந்து போனார்கள். வழக்கம் போலவே பெயரை மாற்றி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஒரு பெண் பிள்ளையாகப் பிறந்ததினாலேயே மனத்தையும், உடல் வதையையும் அடைந்து வந்தவள் மூவரும் இறந்துபோன காரணத்துக்காகச் சிறையில் கிடக்கிறாள். இறந்துபோன குற்றவாளிகள் மூவருக்கும்தான் அவளால் தண்டனை கொடுக்க முடிந்தது.
  மதுவைக் கொடுத்து குடிகாரர்களாக ஆக்கியவர்களைத் தண்டிக்க முடியவில்லை. கல்வி கற்று வாழ்க்கையை வாழவேண்டிய ஒரு குடிமகள், கொடுஞ்சிறையில் குற்றவாளியாகக் காலத்தைக் கழிக்கிறாள். இப்படி நாள்தோறும் நடக்கிற குற்றங்கள் ஒன்றா, இரண்டா? அந்தக் குடும்பத்தின் கதி என்ன? யாருக்காவது தெரியுமா? அது பற்றிய அக்கறை யாருக்குத் தேவை? மதுவின் விற்பனை எண்ணிக்கைக் கூட்டுத் தொகையைவிட பாதிப்புக்குள்ளாகும் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தைகளின் எண்ணிக்கை, குடும்பங்களின் எண்ணிக்கைக் குறைவுதானே என நினைக்கிறார்களா?
 புத்தகங்களையும், புத்தகப் பையையும், மிதிவண்டிகளையும், மடிகணினியையும் கொடுப்பவர்களுக்கு மதுவைக் கொடுப்பதால் ஏற்படும் சீரழிவுகளைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? என் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய வந்திருந்த ஏழைத் தாய் ஒருவரிடம் அவருக்கு உதவியாக வந்திருந்த மகளை, ‘ஏன் படிக்கிற பெண்ணை வேலைக்கு அழைத்து வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு இதையேதான் காரணமாகச் சொன்னார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை வேலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவும், கணவன் குடிகாரனாக இருப்பதால் வீட்டில் விட்டுவிட்டு வர அச்சமாக இருப்பதாகவும் சொன்னபோது அதிர்ந்து போனேன்.
 “மதுக்கடைகளை மூடுங்கள். சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது” எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால், “கடைகளை மூட முடியாது. முடிந்தால் மதுவின் கேடுகளைச் சொல்லி பரப்புரை செய்யுங்கள்” என அந்தத் துறையைச் சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சட்டமன்றத்தில் வாய் கூசாமல் சொல்கிறார். அதற்கும் மேசை உடைகிற மாதிரி தட்டி அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
  பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலையைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை. வீட்டில் இருந்து வெளியில் புறப்படும் பெண், தான் அணிந்து கொள்ளும் ஆடை முதற்கொண்டு, தான் பயணிக்கும் வாகனம், பணிபுரியும் பணிக்கூடம் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டேதான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. ‘கண்காணிக்கும் படப்பொறி வைத்துவிட்டால் கடமை முடிந்துபோகும் என நினைக்கிறார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தருவதோடு காவல் துறையின் கடமை முடிந்துபோகிறது. பாலியல் குற்றங்களும், வன்முறைகளும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திக்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை.
  இணையத்தளங்கள், வலைத்தளங்கள் எல்லாம் மனிதர்களைத் தனிமைப்படுத்தின. உறவுகளைக் கொன்றொழித்தது. பாலுறவுபற்றிய புரிதல்களைக் கற்றுக் கொடுக்காமலேயே, ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் கைப்பேசி, மடிகணினி கொடுக்கப்பட்டுவிட்டன. அதைவைத்து பொழுது விடிந்து உறங்கும் வரைக்கும் அதனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் பார்ப்பதை எல்லாம் துய்த்து விடத் துடிக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனிக்க நேரம் இல்லை.
  தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என இவர்களால் மட்டுமா இந்தப் பாலியல் வன்முறை நிகழ்கிறது? ஆசானாக இருக்கிற ஆசிரியர்களின் மனத்தையும் நச்சாக்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிற செய்திகளால் பெற்றோர்களும், குழந்தைகளும் கதிகலங்கிப் போய்தான் நிற்கிறார்கள்.
  பணவெறி பிடித்த தொலைக்காட்சிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளுக்குக் கவர்ச்சி உடை அணிவித்து, திரைப்பட நடிகர், நடிகைகள் செய்யும் அருவருப்பான அங்க அசைவுகளைக் கற்றுக் கொடுத்து ஆடவிட்டு, பாடவிட்டு மதிப்பெண்கள் அளித்து ‘கலைஞர்களை’ உருவாக்கிக் கொண்டிருக்கும் கொடுஞ்செயல்களை யார் தடுத்து நிறுத்துவது? தடுத்து நிறுத்த வேண்டிய நாமே பல் இளித்து கைத்தட்டிக் கொண்டிருக்கும்போது, பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்?
 உறவுகளின் விழுமியங்களை, அதன் மதிப்பீடுகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். அவர்களுக்கு எல்லாருமே ‘அங்கிள், ஆண்ட்டி’தான். சித்தப்பா, பெரியப்பாவுக்கும், மாமன், மச்சானுக்கும் அவர்களுக்கு வேறுபாடு தெரிவதே இல்லை. முறைப் பெண்ணுக்கும், அக்காள், தங்கை உறவுமுறைக்கும் வேறுபாடு தெரியாமல் எல்லாருமே ‘கசின்கள்தான்!’
 பணத்தாசை, பணவெறி அனைத்து மதிப்பீடுகளையும் உடைத்தெரிந்துவிட்டது. இதை அனைவரும் உணர்ந்து ஒன்றுசேர்ந்து முடிவெடுத்தால் சமுதாயம் தப்பிப் பிழைக்கும். அதுவரை நம் உயிராகப் போற்றுகிற ஒழுகலாறுகள், பண்பாடுகள் காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கும். என்ன செய்யலாம்?
 thankarbachan02
the hindu muthirai
- அகரமுதல 72: பங்குனி 15, 2046 / மார்ச்சு 29,2015

முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ


fire

முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ

விலையுயர்ந்த மரங்கள் சேதம்

  தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் கருகின.
  முருகமலை வனப்பகுதியில் உணவகங்கள், அடுமனைகள்(பேக்கரிகள்), ஓய்வுமனைகள் ஆகியவற்றுக்கு அடுப்பு எரிப்பதற்கு மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். இவ்வாறு மரங்கள் வெட்டியபின்னர் வெட்டிய மரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து வரும் கோரைப்புற்களின் மீது தீயை வைத்து விடுகின்றனர். இவ்வாறு தீ வைப்பதாலும் தற்பொழுது கோடை வெயில் உக்கிரமாக இருப்பதாலும் இந்தத் தீ அப்பகுதி முழுவதும் பரவி விலையுயர்ந்த மரங்கள், மூலிகைகள் போன்றவை பற்றி எரிந்து விடுகின்றன.
  இவற்றைத்தவிர தீயின் வெப்பம் தாங்காமல் மான், செந்நாய், காட்டெருமை ஆகியவை ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தேவதானப்பட்டி அருகே உள்ள மலைப்பகுதி ஊர்களில் தீயின் வெப்பம் தாங்காமல் காட்டெருமை, சிறுத்தை, மிளா என்ற மான், செந்நாய் போன்றவை கிணற்றுப்பகுதிகளில் விழுந்து இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  எனவே கோடைக் காலத்தில் கூடுதலான வனத்துறையினரை அமர்த்திக் காட்டுத்தீ ஏற்படாவண்ணம் பாதுகாக்கவேண்டும் எனவும் வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
72vaikaianeesu


தேவதானப்பட்டியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படாமை

fan,mixy,grinder

தேவதானப்பட்டிப் பகுதியில்

பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு

விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படாமையால்

ஏமாற்றம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் விலையில்லாக் கலவை, மின்னுரல், மின்விசிறி வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கெ.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டிப் பகுதிகளில் ஒருசார் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை.
  கடந்த தி.மு.க.ஆட்சியில் இலவச வண்ணத்தொலைக்காட்சி, இலவச வளியடுப்பு வாங்கியவர்களின் பெயர்களை மட்டும் வட்ட வழங்கல் அதிகாரிகள் கணக்கு எடுத்துப் பட்டியலை அனுப்பி உள்ளார்கள். அதன்படி விலையில்லாக் கலவை, மின்னுரல், மின்விசிறி ஆகியவை வந்துள்ளன. புதியதாகக் குடும்ப அட்டை பெற்றவர்கள், வெண்மை நிற அட்டை உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவில்லை. இதன் தொடர்பாக அனைத்துக் குடும்ப அட்டைதார்களும் வட்ட வழங்கல் அதிகாரிகள், மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். விரைவில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து அனுப்பி விட்டார்கள். ஆனால் இதுவரை விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிருவாகம் மீண்டும் கணக்கு எடுத்து விடுபட்ட குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.
72vaikaianeesu