சனி, 26 ஜூலை, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4

(இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.)

1.       மேலாளரைக் கண்டாயா?

2.       ஆட்சியரைச் சந்தித்தேன்.

3.       ஆலையைத் திறக்க வேண்டும். 

4.       செயலரைப் பார்க்கவில்லை.

5.       அணையைத் திறந்து விடுக.    

6.       மருத்துவமனையைப் பார்வையிட்டார்.

7.       தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  

8.       தொற்று நோய்களைத் தடுக்க வேண்டும்.

9.       பதிவேடுகளைப் பேண வேண்டும்.

10.      வேலையைச் செய்யத் தவறாதே.

11.      கிடங்கினைப் பூட்டவும்.

12.      மருந்துகளைக் கொடு.

13.      சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திரு.

14.      முதலியவற்றைக் கொணர வேண்டும்.

15.      இழப்புகளைக் கணக்கிடு.

16.      அலுவலுகத்தைத் துப்புரவு செய்க.    

17.      பணிகளைச் சிறப்பாகச் செய்க.

18.      முன்கோப்பைத் தேடவும்

19.      சத்துணவைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

20.      தன்மையினைக் கருதி …  

21.      கருத்துருவினைப் பரிந்துரைக்கிறேன்

22.      அவரைப் பணியமர்த்திய நாள்

23.      ஏற்பாடுகளைச் செய்து…

24.      என்பதைக் குறிப்பிடுக.    

25.      என்பதைத் தெரிவிக்கவும்.

26.      தொகையைத் தெரிவிக்கவும்.

27.      பணிக்காலத்தைப் பணியாளர் முடித்த நாள்.

28.      பணியினைத் திறமையாக ஆற்று.    

29.      வேண்டுவதைக் கருத்தில் கொண்டு

30.      தொகையைத் திருப்பச் செலுத்தவும்.

31.      பதிவேடுகளைக் கூர்ந்தாய்வு செய்க.

32.      வேலையைத் தீர்வு செய்க.

33.      கணக்கினைச் சரிசெய்க.

34.      அறிக்கையைக்கேட்டுப் பெறுக.

35.      அஞ்சல்களைப் பிரிக்கவும்.

36.      அலுவலகத்தைத் திறக்கும்

37.      நடைமுறைப்   பணியைத் தொடங்கவும்.

38.      அவற்றைப் பற்றிய விவரங்கள்.

39.      கோப்புகளைப் பரிசீலித்தல்.

40.      கோப்புகளைக் கிழிக்காதே.

41.      சொல்வதைச் செய்வோம்.

42.      செய்வதைச் சொல்வோம்.

43.      விலைவாசியைக் குறைக்க வேண்டும்.

44.      புலவா“களைப் பாராட்டவேண்டும்.

45.      குறைகளைப்போக்க வேண்டும்.

46.      நிறைகளைப் பெருக்க வேண்டும்.

47.      திட்டத்தைச் செயலாக்கு.

48.      வழித்தடங்களைக் கூட்டுக.

49.      வழிமுறைகளைக் கூறவும்.

வேற்றுமை உருபு, வல்லினம் முதலியவற்றைத் தெரிந்திருந்தும் மறந்திருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லாவிட்டாலும் இவை போல் வரக்கூடிய பல இடங்களை அறிந்து கொண்டாலே இயல்பாகவே இவ் வொற்றெழுத்துகளைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து நீக்க வேண்டிய இடங்களில் நீக்கி எழுதும் பழக்கம் வந்துவிடும்.

மேலும், பரிசீலித்தல், பரிசீலனை என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. இவ்வாறு தமிழ்ச் சொற்கள் அல்லாதவற்றையும் நாம் பயன்படுத்தி வருகின்ற காரணத்தால் குறிப்பிடுகின்றேன். ஆனால், பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும். மேலும்,

(தொடரும்)

புதன், 23 ஜூலை, 2025

133/133. பிராமணர்கள் தமிழர்களா? அவர்கள் யார்? – சனாதனம் நிறைவு

 




(132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – தொடர்ச்சி)

முதல் வினா இன்னும் சற்றே விரிவாகக் கேட்க வேண்டியது. ஏன் தமிழர்களா? என்று மட்டும் கேட்கிறீர்கள்?

•             பிராமணர்கள் தமிழர்களா? பிராமணர்கள் மலையாளிகளா? பிராமணர்கள் தெலுங்கர்களா? பிராமணர்கள் கன்னடர்களா? பிராமணர்கள் துளுவர்களா? பிராமணர்கள் மராத்தியர்களா? பிராமணர்கள் குசராத்திகளா? பிராமணர்கள் வங்காளிகளா? ….. பிராமணர்கள் காசுமீரிகளா? …… இப்படி நீண்டுகொண்டே போகவேண்டும் உங்கள் கேள்வி.

நீங்கள் கேட்டுவிட்டீர்கள். ஏனைய மாநிலங்களில் இக்கேள்வி உள்ளீடாகத் தொக்கி நிற்கின்றது.

புலம் பெயர்ந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் சென்ற பிறகும் ஆரிய இனம் மட்டும் உலகில் இந்த அவலத்துக்கு ஆளாகியிருக்கிறது.

ஆம்! ஆரிய பிராமணர்கள் என்னும் இனத்தைத் தவிர, உலகில் வேறு எந்த இனமும் இத்தகைய கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவதே இல்லை!

முதலில் இக்கேள்வி ஏன் எழுப்பப்படுகின்றது?

•             மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன், ஆரியர்கள் புலம் பெயர்ந்து, இந்தியா வந்தபோது, இன அச்சம்(ethnic fear) காரணமாக, (குறிப்பாகத் தங்கள் இனம், பிற இந்திய பூர்வ இனங்களுடன் கலந்து கரைந்து போய்விடாமல் பாதுகாக்கவே,) தங்களைப் பிராமணர்கள் (அதாவது, விராட் புருடன் எனப்படும் பிரம்மத்தின் தலையில் பிறந்தவர்கள்) என்றும், தாங்கள் பேசும் மொழி ‘தேவபாசை’ என்றும், தங்களிடம் மனிதர்களால் உருவாக்கப்படாத வேதங்கள் (ஆரியர்களின் நாடோடி இனஇலக்கியம்) உள்ளன என்றும் பொய் கூறினார்கள்!

•            

அங்கே தொடங்கியது ஆரியர்களின் தீர்க்கவே இயலாத இனப் போராட்டமும், வாழ்வியல் போராட்டமும்!

ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, புலம் பெயர்ந்து வந்தவர்கள் மேற்கூறிய கதைகளைக் கூறிக்கொண்டு, இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று குடியேறினர்.

சிவப்பாக இருக்கும் ஆரியன் பொய் சொல்லமாட்டான்; வேள்வி செய்து கடவுள்களைக் கட்டுப்படுத்தும் சக்தியுள்ளவன், உயர்ந்தவன் என்று நாகரிகத்தில் பல படிகள் மேம்பட்டிருந்த பூர்வகுடி இந்தியர்கள் ஏமார்ந்ததால்,

•             வேதங்களைக் கொண்டு செய்யும் வேள்விகளையே தங்கள் முழுநேரத் தொழிலாகக் கொண்டனர் ஆரியர்கள்!

ஆண்களைவிடப் பெண்கள் எண்ணிக்கை குறைவாயிருந்ததால், குடியேறிய இடங்களில் இருந்த பூர்வகுடி இந்தியப் பெண்களை மணமுடித்துக் கொண்டு, தங்கள் இனவிருத்தியைச் செய்தனர்.

வேதமொழியை அழித்த ஆரியர்கள்!

•             வேற்றினப் பெண்களை திருமணம் செய்ததால், வேதக்கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது! பெண்களால் பேசப்படாததால், பேச்சு வழக்கிலிருந்து வேதமொழி அழிந்துபோக, ஆரியர்களே முழுக்காரணம் ஆயினர்!

•             ஆரியப் பிராமணக் குழந்தைகள் தங்கள் தாய் பேசிய மொழியையே பேசியதால், ஆரியர்களின் வேதமொழி சிலதலைமுறைகளுக்குள் பேச்சு-வழக்கு, உலக வழக்கு இழந்துபோய்விட்டது.

உள்ளூர் மொழிகளே ஆரியப் பிராமணர்களின் தாய்மொழி!

காலப்போக்கில், ஆண்-பெண் பேதமின்றி, ஆரியர்களின் தாய்மொழி அவர்கள் வாழ்ந்த நாட்டின் மொழியாகவே மாறிவிட்டது!

•             தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் தமிழர் இல்லை!

•             மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் மலையாளி இல்லை!

•             வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் வங்காளி இல்லை!

•             இப்படிப் பட்ட அவலம் இந்தியாவெங்கும் வாழும் ஆரியப் பிராமணர்களுக்கு ஏற்படுகின்றது!

தந்தைமொழியான வேதமொழி ஏட்டுச்சுரைக்காய் ஆனது!

•             வேதம் ஓத மட்டுமே பயன்பட்ட வேதமொழி, ஆண் குழந்தைகளுக்கு மட்டும், அவரவர் தந்தைகளால், வேள்வித்தொழில் செய்யும் பொருட்டுக் கற்றுக் கொடுக்கப்பட்டதால், வேதமொழி, தந்தைமொழி எனப்பட்டது!

•             ஆரியப் பிராமணர்களுக்குத் தாய்மொழிகள் மாறலாம்! தந்தைமொழி ஒன்றே!

•             இப்போது சொல்லுங்கள்! உலகில் எந்த மனிதனுக்காவது இப்படிப்பட்ட அவலமான இரு-மொழி – Duality நிலை இருக்குமா?

ஆரியப் பிராமணர்களின் தாய்மொழிகள் அவரவர்கள் குடியேறிய நாட்டைப் பொறுத்து, அந்தத்த நாட்டைச் சேர்ந்த பல இந்திய மொழிகள்!

•             ஆரியர்கள் முன்னோர்களின் தாய்மொழியான வேதமொழி, இப்போது வேதவேள்வி செய்து வயிற்றுப் பிழைப்புதொழிலுக்கு மட்டுமேயான தந்தைமொழி!

•             தந்தைமொழியின் எழுத்துவடிவம் பல்வேறு தாய்மொழிகளின் எழுத்து வடிவங்கள்!

வேதமொழி, எண்ணும், எழுத்தும் இல்லாமல் இருந்ததால், வேத மொழிக்கான எழுத்துமுறை இந்தியாவெங்கும் இருந்த பல்வேறு தமிழ், பிராக்ருத, திராவிட, கூர்ச்சர, வங்காள மொழிகளின் எழுத்துமுறையையும், இலக்கணத்தையும் அடியொற்றி இருந்தன.

இந்தியாவெங்கும் பலமொழிகளிலிருந்து உருவான பிராதி-சாக்கிய எழுத்துகளில் எழுதப்பட்ட வேதங்களைத் தொகுத்தவர் வேதவியாசர்!

•             இந்தியாவெங்கும் ஆரியர்களின் இன இலக்கியமான இருக்கு வேதம் பல்வேறு எழுத்து வடிவங்களில் மாறுபட்டிருந்தது. பாதராயணர் என்னும் வேதவியாசர், இவற்றை ஒன்று திரட்டி, மாறுபாடுகளைக் களைந்து, ரிக்கு, யசூர், சாம வேதங்களாகத் திட்டப்படுத்தினார்.

•            

வேதமொழிக்கான இலக்கணத்தையும், எழுத்து முறையையும், தமிழ் மொழியின் இலக்கணத்தை ஒட்டி அமைந்த கிரந்தமொழியைப் பின்பற்றி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், ‘பாசா’ என்னும் மொழியாக திட்டப்படுத்திய பாணினி என்பவர் ‘அசுடத்யாயி’ என்னும் ‘வியாக்ரண்’ இலக்கண நூலைச் செய்தார்.

               பிற்கால ஆரிய மொழியியலாளர் இவற்றை மேலும் செம்மைப்படுத்தி, சமற்கிருதம் (நன்றாகச் செய்யப்பட்ட மொழி) என்ற அரை-செயற்கை மொழியாகக், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கினர்.

இரிக்கு, யசூர், சாம என்னும் மூன்று வேதங்களும், சமற்கிருதத்தில் முறையாக மாற்றி எழுதப்பட்டன.

               கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில், சமற்கிருதத்துக்கு தேவநாகரி எழுத்துவடிவம் அறிமுகம் செய்யப்பட்டு, காலப்போக்கில் பெருவழக்காக ஆனது!

தமிழர்களின் சங்க, பக்தி இலக்கியங்களில் ‘நான்மறை’ என்று ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருட்கள் பேசப்படுவதால், தமிழர் மரபுகள், ஆரிய மரபிலிருந்து வந்தைவையே என்று காட்டும் தீய எண்ணத்துடன்,

               பில்லி, சூனியம் போன்ற தீய செயல்களைச் செய்யும் மந்திரத் தொகுப்புக்கு அதர்வண வேதம் என்று பெயரிட்டு இரிக்கு, யசூர்,, சாம, அதர்வண என்று நால்வேதம், சதுர்மறை, நான்மறை என்று பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் தமிழர் வாழ்வியல் நெறிகளைச் சற்றே மாற்றி,

தரும, அருத்த, காம, மோட்ச என்னும் நான்கு புருசார்த்தங்கள் என்று கூசாமல் புளுகினர்.

தமிழர் அறம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது!

ஆரியர்கள் மனு’தர்மம்’,

பிராமணர்களின் நலனுக்காக,

பிராமணர்களால், பிராமணர்களுடைய வாழ்வியல் நெறிகளை வகுப்பது;

பிற இன மக்களை அடிமைகளாக, சூத்திரர்களாக வரையறுப்பது!

அனைவரும் சமம் என்று இன்றைய ஆரிய தலைமுறை மக்களாவது வாழ்ந்தால், இந்தியா என்னும் நாட்டுக்கு பலம் சேர்த்திருக்கும்.

ஆனால், ஆரியர்கள், தங்களின் முன்னோர்கள் செய்த மனுதர்மக் கொடுமைகளை நியாயப் படுத்தப் பார்க்கிறார்கள்!

கீழ்த்தரமான விதிகளுக்குப் புனிதப் பொருளை ஏற்றி, நம்மை முட்டாளாக்க முயல்கிறார்கள். இங்குதான் உரசல் வருகின்றது!

அமெரிக்காவில் ஐந்தாண்டுகள் வாழ்ந்து, பச்சை யட்டை குடியுரிமை பெற்ற ஆரியர்கள் முழுமையான அமெரிக்கக் குடிமக்களாகவே மாறி, அமெரிக்கா நாட்டுக்கு உண்மையான வாழ்கிறார்கள்!

ஆனால், தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், தமிழே தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பிராமணர்கள் தமிழ் மொழியை ‘நீசமொழி’ என்று வாய்கூசாமல் சொல்வதை என் காதால் கேட்டிருக்கிறேன்! தமிழுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படுவதையும் கண்டிருக்கிறேன்!

தமிழர்களுக்கும், தமிழுக்கும் எதிராக ஏன் இந்தக் கொலைவெறி?

பள்ளி நாட்களில் பிராமணத் தோழர்களின் வீட்டுக்குச் சென்ற சமயங்களில், “கண்ட சூத்திரனையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கூட்டிண்டு வர்றே! சனியனே!” என்று நன்றாகக் காதில் விழட்டும் என்று கத்திச் சொல்லும் வயதான பிராமணப் பாட்டி-தாத்தாக்களைப் பார்த்திருக்கிறேன்!

‘கத்தாதே தாத்தா! அவன் சுத்த சைவம்தான்! காதுல விழுந்துறப் போறது!” என்று கெஞ்சும் பிஞ்சு உள்ளத்திடம், “எவனா இருந்தா என்னடா? சூத்திரன் சூத்திரன்தான்!. கூட்டிண்டு வெளில போ! ஆத்தைக் கழுவிவிடணும்”-னு எரிந்து விழுந்த தாத்தாவின் கோபத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியில் வந்து,

‘வயசான கெழம்டா! எனக்காக மன்னிச்சுக்கோ!” என்று கூனிக்குறுகும் நல்ல பிராமண நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்!

ஆரியன் என்ற இனத்தூய்மை இன்று இல்லவே இல்லை. என்று இங்குள்ள பெண்களை மணந்து, இனவிருத்தி செய்தார்களோ, அன்றே, ஆரியர்கள் கலப்பினமாக மாறிவிட்டார்கள்.

ஆரியம் என்பது இன்று கருத்தியல் சார்ந்த வன்முறை மட்டுமே!

அவற்றை புனிதப் புனுகு கொண்டு, ஏமாற்றப் பார்ப்பதுதான் இங்குச் சிக்கல்!

பன்மைத்துவத்தை மதிப்பதும், தமிழர்கள் வழிபாட்டு இடங்களின் சமற்கிருதத்தைத் திணிப்பதிலிருந்தும், ஊர்களையும், கோயில்களையும் சமற்கிருதப் பெயர்மாற்றம் செய்வதிலிருந்தும், ஆரியர்கள் மாறினால் அமைதி நிலவும்.

அதை விட்டுவிட்டு, சநாதன தருமம், இந்து தருமம் என்று பூசி மொழுகும்போதுதானே, ‘தெய்வத்தின் குரல்’ பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டியுள்ளது!

–              மாயோன் (கிருட்டிணன்) நல்லபெருமாள், தமிழ்க்கோராவில்

  • (தொடரும்)
  • இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 212-219

000

செவ்வாய், 22 ஜூலை, 2025

132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்



(131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – தொடர்ச்சி)

பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ –என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில் ஊழல்கள் என்று பேசப் பெறுகின்றவற்றுள் பெரும்பாலானவை ஆரியப் பார்ப்பனர்களால் செய்யப் பெறுவனவே! பிற இனத்தவரை அமைதியாக ஆளவிடக் கூடாது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். இவர்களுக்குப் பக்கத்துணையாக நிற்பவை அவர்களிடம் உள்ள ஆங்கில, தமிழ்ச் செய்தித்தாள்களே! அவை பொய்த்துத் தள்ளுவதற்கு ஓர் எல்லையே இல்லை.

பார்ப்பனர்களின் கையுள் வலிவான செய்தித்தாள்கள் இருப்பதாலேயே அவர்கள் பொதுமக்களிடம் தங்களுக்குச் சார்பான கருத்துகளை எளிதாக உருவாக்க முடிகின்றது. இந்து, எக்சுபிரசு, மெயில் போலும் ஆங்கில நாளிதழ்களிலும் சுதேசமித்திரன், தினமணி, தினமலர் போலும் தமிழ் நாளிதழ்களிலும், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தீபம், கலைமகள், துக்ளக் போலும் கிழமை, மாத இதழ்களிலும் அவர்கள் எழுதும் எழுத்துகளே இந்நாட்டை ஒரு நிலையான ஆட்சிக்குக் கொண்டு வரமுடியாமல் செய்கின்றன என்றால் அது மிகையாகச் சொல்லப்பெற்ற தாகாது.

இனி, அவர்களின் தந்திர முறைகளில் இரண்டாவது தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடிகளினின்று சமசுகிருதத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழ் மூலங்களை அழித்துவிட்டுப் பின்னர், அவற்றையே மூல நூல்களாகக் காட்டிக் கொள்வது.

தமிழரிடத்திருந்து பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” (பக்கம் 33).தமிழ்மொழியின் வரலாறு

இனி. இவ்வாறு தமிழர்க்குச் சார்பாகவும் வெளிப்படையாகவும் பார்ப்பனரின் ஏமாற்றுத்தனங்களை அவிழ்த்துக் காட்டிய இவரே, தமிழர்களுக்கு மாறாகவும் பல நச்சான கருத்துகளை அந்நூல் முழுவதும் தெளித்து விட்டிருப்பது ஆரியர்தம் திருவிளையாடல்களில் ஒன்று. தமிழர்களுக்குச் சார்பாகவும் நடுநிலையாளர் போலும் சில வரலாற்றுக் கருத்துகளை ஒருபக்கம் எழுதுவது; மறுபக்கம் அவர்களுக்குக் கேடானவும் முற்றும் ஆரியர்களுக்கே ஏற்றந் தருவனவுமான பல கருத்துகளை அதே நூலில் சொல்லி விடுவது. இவ்வாறு அவர்கள் எழுதுவது ஏனெனில், படிப்பவர்கள் தங்களை நடுநிலையாளர்களாகவும் உண்மையாளர்களாகவும் கருதிக் கொள்ளட்டும் என்பதே! மேலும் திரு. வி.கோ. சூ அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தருமாறு, வடமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர்; அவ்வாறு தாம் செய்வதை உண்மையென்று பிறர் நம்புமாறு தம் பெயரையே தூய தமிழ்மொழி பெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக் கொண்டவர். அதற்காகத் தமிழ் மக்கள் என்றென்றும் அவர்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்தாம்! ஆனாலும் அவர் கொட்டிய பிற நச்சுக் கருத்துகளை நாம் நினைவுகூரும் பொழுது, அவர் ஒருவேளை அக்கருத்துகளை மறைமுகமாகச் சொல்வதற்குத் தானோ அவ்வாறு நடுநிலையாளர் என்று பிறர் கருதுமாறு நடந்து கொண்டார் என்றும் கருத வேண்டியுள்ளது. அவ்வாறு அவர் அவரினத்துக்குச் சார்பாகவும் ஏற்றம் தரும் வகையிலும் அதே நூலில் கூறிய கருத்துகளையும் தெரிந்துகொள்வது நலம். (அவற்றையும் கீழே காணுங்கள்)

  • – – – – – – – – – – – – – –  –

ஐந்தாவது ஆரியத் தந்திரம், ஏற்கனவே உள்ள பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கையில் அவற்றில் உள்ள சொற்களுக்கும், கருத்துகளுக்கும் எவ்வாறாகிலும் ஆரிய வடிவம் கற்பித்து, அவர்தம் மரபோடு உரைகள், விளக்கங்கள் அடிக்குறிப்புகள் முதலியவற்றை எழுதி வெளியிடுவது ஆகும்.

  • – – – – – – – – – – –

கழக நூல்களை அவர் வெளியிடும்பொழுதெல்லாம் ‘அந்தணர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அவர் ஆரியப் பார்ப்பனர் என்றே சிறப்புரையெழுதி மக்களை மயங்கச் செய்து வந்ததுடன் அவர்களின் நடையுடை பழக்கங்களை மிகவுயர்ந்தனவாகக் காட்ட, எப்படியெப்படி இட்டுக்கட்டிச் சொல்ல முடியுமோ, அப்படியப்படி யெல்லாம் தவறாமல் சொல்லியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

புறநானூற்றில் ‘ஆன்முலையறுத்த’ என்று தொடரும் 34-ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல், யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று

உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக் கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடாதெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும், அதில் உள்ள 305-ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு சொற்கு ‘அவரவர் சாதி இயல்பு’ என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67-ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும் பார்ப்பணியையும் தலைவராகக் கூறியது – எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற் குரியது’ என்றும்.

‘அறிவுடையீரே’என்று வரும் குறுந்தொகை 206-ஆம் பாட்டின் அடியில், பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரயென்று தெரிகின்றது’ என்றும்,

ஆசில் தெருவில்’ என்று தொடங்கும் 277-ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடையென்றும் சிறப்பித்தமையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோற்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் – சிற்சில பகுதிகள்

(நடைநடையாய் நடந்து தமிழ்ச்சுவடிகளைத் தேடி அலைந்த அறிஞர் உ.வே.சாமிநாதனாரே ஆயரியப்பற்ற மேலோங்கத் தவறிழைத்துள்ளார் எனில் எளியவர்களைப்பற்றி என்ன சொல்வது?)

  • (தொடரும்)

பி.கு. இதற்கு மாறாகத் தங்களைத் தமிழராக எண்ணித் தமிழராக நடந்து கொண்ட/கொள்ளும்பிராமணர்களும் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். பிராமணரல்லாதவருக்கு உதவும் பிராமண ஆசிரியர்களும் உள்ளனர். வருணாசிரமத்திற்கு எதிராக அனைவரையும் சமமாகக் கருதும் பிராமணர்களும் உள்ளனர்.

000

திங்கள், 21 ஜூலை, 2025

131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – இலக்குவனார்திருவள்ளுவன்



(130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – தொடர்ச்சி)

“இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தசுயூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.” இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது. “இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும், படை வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.” இது (உ)ரோமேசு சந்திர டட்டு எழுதிய ‘பண்டைய இந்தியாவின் நாகரிகம்’ என்ற புத்தகத்தின் 139 – 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்” இது ‘சுவாமி விவேகானந்தா அவர்களது ‘சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்’ என்ற புத்தகத்தில் ‘இராமாயணம்’ என்னும் தலைப்பில் 587 – 589 பக்கங்களில் இருக்கிறது.“ ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக்கொண்ட பதம்” தசுயூக்கள் என்பது இந்தியப் புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும். இது 1922ஆம் வருடம் வெளியிடப்பட்ட கேம்ப்ரிட்சு ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்

இராமாயணக் கதையின் உட் பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் (அவற்றின் தலைவர்களான இராமன் – இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும். இது இராதா குமுத்து முக்கர்சு எழுதிய ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தின் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் மொழி. இது சர் சேம்சு மர்ரே எழுதிய புதிய இங்கிலீசு அகராதியின் பக்கம் 67 டி -யில் இருக்கிறது.“ ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயன்று முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடய மொழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.” இது பண்டர்காரின் கட்டுரைகள் தொகுதி  3, பக்கம் 10-இல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்”

இது கிருட்டிணசாமி (ஐயங்கார் எம்.ஏ., பிஎச்சு.டி., ) அவர்கள் எழுதிய ‘தென் இந்தியாவும் இந்தியக் கலையும்’ என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிடதேசம்) தசுயூக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

“இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்”. இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது. “திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், இராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர் களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்”. இது சோசி சந்தர் டட்டு எழுதிய ‘இந்தியா அன்றும் இன்றும்’ என்னும் புத்தகத்தில் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது. ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது” – இது எ.சி. தாசு, எம்.ஏ., பி.எல்., எழுதிய ‘(இ)ரிக்கு வேத காலத்து இந்தியா’ என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத்தில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில், திராவிடர்களைத் தசுயூக்கள் என்றும், தானவர்கள் என்றும், இராட்சசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.“ ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த அல்லலினால் இப்படி எழுதினார்கள்.” – இது சி.எசு. சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எல். , இராமசாமி (அய்யங்கார்) எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல்பாகம்’ என்னும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா’ என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது. “ஆரியர்களில் சமற்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவில் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்”

இது எச். சி.. வெல்சு எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 105ஆம் பக்கத்தில் இருக்கிறது.“ சாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.” – இது New Age Encyclopedia.( 1925) பக்கம் 237-இல் இருக்கிறது. “இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்” – இது அப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.சே. வருக்கி, எம்.ஏ., எழுதிய ‘இந்திய சரித்திரப் பாகுபாடு’ என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது. “விட்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது”

இது இ.பி. ஆவெல் 1918இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது. “பாரதத்தில் இடும்பி என்று  ஆரியரல்லாத ஒரு பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள, சாதி துவேசத்தால் இராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதர் என்கின்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்” – இது நாகேந்தரநாத்து கோசு பி.ஏ.,பி.எல் எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்’ என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கம். “இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.” – இது பண்டிதர் டி.பொன்னம்பலம் (பிள்ளை)யால் எழுதப்பட்ட ‘மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ’ என்னும் புத்தகத்தில் இருக்கிறது. “இந்திய ஐரோப்பியர்களால் (அஃதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தசுயூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது” – இது பால்மாசின் அவர்செல் எழுதிய ‘புராதன இந்தியாவும், இந்தியாவின் நாகரிகமும்’ என்ற புத்தகத்தில் 19ஆவது பக்கத்தில் இருக்கிறது. இவையும், இவை போன்றனவுமாகிய பல விசயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியினர்களுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சிலும், ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருப்பவையாகும். ஆனால், ஆரியர் வருவதற்குமுன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு இராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.

அஃதாவது, இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென்பாகத்திற்கு அனுப்பப் பட்ட அனுமானுக்கு சுக்(கு)ரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக்குறிப்புகளில், “காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து சென்றால் பாண்டியனுடைய பொற் கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்னதாக, வால்மீகியார் இராமாயணத்தில் கூறுகிறார். மற்றும் அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு, “ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்” “அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.” “பிறகு முதலைகள் நிரம்பிய தாம்பிரபரணியைக் காண்பீர்கள். பிறகு பொன்னிறத்ததாயும், முத்து மயமனதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.” “அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள். அங்கு சென்று உங்கள் காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக, வடமொழி இராமாயணத்தில் காண்கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், இராட்சதர்களாகவும் கற்பிக்கப்பட்டதோடு – சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன், என்பது போன்ற இழிமொழிகளுக்காளாகி சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதரும நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

  • (தொடரும்)

000