சனி, 20 மே, 2023

(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும் - காணுரை

 




(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர்

அறிவிப்புகளும் உரைகளும்

பிரிவு 2

இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12

முனைவர் உலகநாயகி 10.13 -14.47

முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25

முனைவர் சேயோன் 19.26- 23.48

முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53

பிரிவு 1


முனைவர் மருதநாயகம் 01.-7.39

முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25

முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19

முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56

முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02

நேருரை தொடுப்பு :செல்வி செளமியா குணசேகரன்
படக்கலைஞர் : விசய்
காட்சிப்பதிவு : நம்பி

https://youtu.be/6rhjKew7IzQ
https://youtu.be/ruN1BEPRglE

தோழர் தியாகு எழுதுகிறார் 106: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)

 




(தோழர் தியாகு எழுதுகிறார்  105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)– தொடர்ச்சி)

‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)

பொதுத்தேர்வு(நீட்டு ) விலக்கு: செய்வதறியாத் தவிப்பு

நலங்கிள்ளி எழுதுகிறார்

“தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது   தலைமைக்கு  எடுத்துக்காட்ட வேண்டும்” என்று (தாழி மடல் 71இல்) நீங்கள் சொல்வது

எனக்கு உள்ளபடியே வேடிக்கையாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில், சமூக வலைதளப் பதிவுகளில் திமுக உயர் மட்டத் தலைவர்களிடமிருந்து சாதாரணத் தொண்டர்கள் வரை ஆங்கிலத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் போய்த் தலைமைக்குத் தாய்மொழிக் கல்வியின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அவர்களை மாற்றப் போவதாக நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? எனத் தெரியவில்லை. முழு திமுகவுக்கும் ஆங்கிலப் பித்து தலைக்கேறிப் போய்க் கிடக்கிறது.

“திமுகவின் பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்பு நிலைப்பாடு சரியானது. பொதுத்தேர்வு(நீட்டு) ஒழிய வேண்டும் என்பதற்காக அது எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.”

இதுவும் எனக்கு வேடிக்கையாக உள்ளது. திமுக எங்கே பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கிறது? எதிர்ப்பதாக ஊடங்களின் முன்னால் வேடம் போடுகிறது. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு) பயிற்சி அளிக்கிறது. அதுவும் கட்டாயப் பொதுத்தேர்வு(நீட்டு)பயிற்சி. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சி தருகிறேன் என்று ஓரிடத்தில் போய்பொதுத்தேர்வு(நீட்டு) சிறையில் அடைப்பது. அங்கு சென்று விட்டால் விடுதலை பெற வழியில்லை. ‘நீட் நீட் நீட்’டென்று காதில் ஓதிக் கொண்டே இருப்பார்கள். இந்தத் திமுக அரசுதான் நீட்டை ஒழிக்கப் போகிறதா? 

***

இன்றைய அரசியல் அணிவகுப்பில் திமுக பாசிச பாசகவுக்கு எதிர் அணியில் நிற்பதையும், அப்படியே தொடர்ந்து நிற்க வேண்டும் என்பதையும் அடிக்கோள்களாகக் கொண்டுதான் எந்தவொன்றிலும் திமுக பற்றிய நம் அணுகுமுறை அமைய வேண்டும் எனக் கருதுகிறேன். பெருங்கேடாகச் சூழ்ந்து நிற்கும் பார்ப்பன-பாசிச மோதி ஆட்சியை – தமிழ்நாட்டில் தமக்குள்ள தடைகளை எல்லா வழியிலும் வெல்லத் துடிக்கும் பாசிச ஆற்றலை — அலட்சியம் செய்வதாகவோ, சுற்றடியாக அதற்குத் துணை செய்வதாகவோ நம் அணுகுமுறை அமைந்து விடலாகாது.

“முழு திமுகவுக்கும் ஆங்கிலப் பித்து தலைக்கேறிப் போய்க் கிடக்கிறது” என்பது மிகைக் கூற்று. தொலைக்காட்சி உரையாடல்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் அப்பாலும் ஒரு திமுக உள்ளது என்று நம்புகிறேன். அந்த திமுக நோக்கிப் பேச வேண்டிய தேவை உள்ளது.    

எத்தனைக் குறைகள் இருப்பினும் தி.மு.கழகம் பாசிச எதிர்ப்பு அணியில் இருக்கின்ற — தொடர்ந்து இருக்க வேண்டிய — ஆற்றல், மக்கள் கையில் ஒரு கேடயம் போன்றது. கேடயத்தைக் காத்துக் கொள்வதற்கு நாம் கையாளும் உத்திகளில் ஒன்று அதன் தவறான நிலைப்பாடுகளை முறையாகக் குற்றாய்வு செய்வது. இந்தக் குற்றாய்வு முயற்சியில் இயன்ற வரை திமுக அணிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதிதான் “தலைமைக்குச் சொல்லுங்கள்” எனும் என் விண்ணப்பம். ஒரு மனமாற்றம் திமுக தலைமையிடம் ஏற்பட்டாலும் சரி, அணிகளிடம் ஏற்பட்டாலும் சரி, நம் போராட்டத்துக்கு நன்மை உண்டாகுமே தவிர தீமையேதும் விளையாது. புறநிலையில் நம் அணியில் நிற்கும் ஓராற்றலை, அகநிலையிலும் அவ்வாறே நிற்க வேண்டிய பேராற்றலைப் பகையணிக்குத் தள்ளி விடுவது திறமான உத்தி ஆகாது. திமுக ஆட்சியின் சில கொள்கைகள் பைசா எதிர்ப்பு அணிக்கு உவப்பானவையாக இல்லா விட்டாலும் அதன் பொருள் திமுகவும் பாசகவும் ஒன்று என்பதாக இருக்க முடியாது. நாம் பேசிக் கொண்டிருப்பது ஏதோ ஓர் அரசியல் கூட்டணி சேர்ப்பது பற்றியல்ல, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டுவதைப்  பற்றியே — அதற்கான கருத்தியல் அடிப்படையை வகுப்பது பற்றியே — என்பதைக் கருத்தில் கொண்டால், நமக்கு பாசக தொடர்பான அணுகுமுறையும் திமுக தொடர்பான அணுகுமுறையும் ஒன்றாக இருக்க முடியாது என்பது விளங்கும்.

திமுக பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கிறது, மொத்தத்தில் எதிர்க்கத்தான் வேண்டும் என்பதில் ஐயமென்ன? திமுக பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கும் நிலைப்பாடு சரி என்பதை அறிந்தேற்றால்தான் எதிர்ப்புக்கான வழிமுறைகளைக் குற்றாய்வு செய்ய இயலும். ஆட்சிக்கு வந்தால் உடனே பொதுத்தேர்வு(நீட்டு)ஐ ஒழித்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த உறுதிமொழியை நாம் நம்பவில்லை. மாநில ஆட்சி மற்றும் மாநிலச் சட்டமன்றத்தின் வரம்புகள் தெரிந்த யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் பொதுத்தேர்வு(நீட்டு) ஒழிப்புக்குத் தேவையான சட்ட அடிப்படையை உருவாக்கவும் தரவுத் தளம் அமைக்கவும் ஏகே இராசன் குழு அமைத்தனர். குழு தந்த அறிக்கையின் அடிப்படையில்தான் பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்குரிய சட்ட முன்வடிவு இயற்றப்பட்டது. இதுதான் சட்டப்படி முறையான வழி. இயல்பான சூழலில் இந்தச் சட்ட முன்வடிவு இந்நேரம் சட்டமாகியிருக்க வேண்டும். ஆளுநரின் இழுத்தடிப்பையும் முடக்கத்தையும் திமுக எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பின் வீச்சும் வேகமும் போத மாட்டா என்று கருத நமக்கு உரிமையுண்டு. ஆனால் இந்த எதிர்ப்பே பொய் என்று மறுதலிப்பது தன்னோக்குதானே தவிர புறம்சார் சிந்தனை ஆகாது.

பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி விலக்கு பெறும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு) பயிற்சி அளிப்பது இந்தச் சிக்கலுக்கு உடனே தீர்வு காண முடியாது என்பதை அறிந்தேற்பதன் வெளிப்பாடுதான். இப்போதுள்ள அரசமைப்புத் திட்டத்தில் மாநில அரசுக்கு நாம் என்ன அறிவுரை சொல்ல முடியும்? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு) பயிற்சி கொடுக்காதீர் என்றா? அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு(நீட்டு)ஐப் புறக்கணிப்பதும் கூட பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகப் பயன்படலாம்தான். ஆனால் அந்தப் புறக்கணிப்பு முயற்சி போதிய ஆதரவைப் பெறத் தவறினால் அதுவே பொதுத்தேர்வு(நீட்டு) விலக்கலுக்கான சட்டப் போராட்டத்தை நலிவுறச் செய்து விடாதா?         

சட்டப் போராட்டத்தின் முடிவு வரும் வரை இருக்கின்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுப்பது தவிர அரசுக்கு வேறு வழி இல்லை என்றுதான் புரிந்து கொள்கிறேன்.

மாற்று வழிகளைக் கற்பனை செய்து பாருங்கள்: பொதுத்தேர்வு(நீட்டு) தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை அனுப்பாமல் இருப்பது, அல்லது அனுப்பினாலும் பயிற்சி கொடுக்க மறுப்பது. இப்படிச் செய்வது சட்டப்படி செல்லுமா? செல்லும் என்றே வைத்துக் கொண்டாலும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்புப் போராட்டத்துக்கு அந்த விளைவுகள் உதவுமா? அல்லது மாநில ஆட்சியைத் தனிமைப்படுத்தி நலிவுறச் செய்யுமா? 

நாம் ‘ஆளுநர் உரை’ பற்றிய ஊடுநோக்குக்குத் திரும்பிச் செல்வோம். பொதுத்தேர்வு(நீட்டு) குறித்து இந்த உரையில் சொல்லப்படிருப்பதாவது:

“பொதுத்தேர்வு(நீட்டு) தேர்வு முறை வறிய ஊர்ப்புற மாணவர்களுக்கு மிகவும் பாதகமானது என்பதையும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடியது என்பதையும் கருத்தில் கொண்டு, இச்சிக்கல் குறித்து ஆய்வு செய்ய நீதியர் ஏ.கே. இராசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.   அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து விலக்களிப்பதற்கான வரைவுச் சட்டமுன்வடிவு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவு தொடர்பாகக் கேட்கப்பட்ட விளக்கங்கள் யாவும் தரப்பட்டுள்ளன என்பதால் இந்த அரசு அதற்கு விரைவான ஒப்புதல் கேட்கிறது.”

[‘ஆளுநர் உரை’யின் ஆங்கில வடிவம்தான் எனக்குக் கிடைத்தது. இங்கு நான் தந்திருக்கும் தமிழாக்கம் எனது. இது அதிகாரமுறையில் அரசு வெளியிட்டதன்று. அதிகார முறைத் தமிழாக்கம் கிடைத்தால் உதவியாக இருக்கும்.]

ஆக இதுதான் நிலவரம்: சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்துள்ளது, கேட்ட விளக்கமெல்லாம் தந்து விட்டோம். விரைவில் ஒப்புதல் தரக் கோருகிறோம். அவ்வளவுதான்.

ஆளுநர் காலங்கடத்தி வருவதைச் சொல்லிக் கண்டனம் தெரிவித்திருக்கலாம். இந்தக் கண்டனத்தையும் அவர் வாயாலேயே சொல்ல வைத்திருக்கலாம். ஆனால் கண்டனத்தோடு பொதுத்தேர்வு(நீட்டு)இன் கதை முடியாது. சட்டப்படி மாற்றுவழி என்ன? ஆளுநர் மீது அல்லது குடியரசுத் தலைவர் மீது வழக்குத் தொடரலாம் என்ற எண்ணம் உண்டா? அது பற்றி சட்ட வல்லுநர்களின் கருத்தறியப்பட்டதா? மாநில அரசு பொதுத்தேர்வு(நீட்டு) விலக்கிற்காக எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு உண்டு. ஆனால் எதுவுமே செய்யாமல் விரைவான ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம் என்று சொல்லிக் கைகட்டியிருந்தால் மக்கள் ஐயுறுவார்களா? இல்லையா? உண்மையிலேயே நீங்கள் பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கின்றீர்களா? என்று கேட்க மாட்டார்களா?

இப்படிச் சொல்லியே இந்த ஐந்தாண்டுப் பதவிக் காலமும்  கழிந்து விடும் என்றால் அது திமுகவிற்குப் பெருந்தோல்வியாக அமையும். 2024 பொதுத் தேர்தலிலேயே இது திமுகவுக்கு எதிராகப் பெரும் பரப்புரையாக அமையும். இதைப் புரட்டிப் போட்டு பாசகதான் குற்றவாளி என்பதை மக்களுக்கு உணர்த்த என்ன செய்வதாகத் திட்டம்?பொதுத்தேர்வு(நீட்டு) சிக்கலை மட்டுமல்ல, மாநில அரசின் சட்ட முன்வடிவுகளைக் காலவரம்பின்றிக்  கிடப்பில் போடும் ஆளுநர் நடவடிக்கையை (அவருக்குப் பின்னாலிருக்கும் மோதி அரசின் சூழ்ச்சியை) முன்னிறுத்திக் கடுமையான முடிவுகளை திமுக எடுக்குமா? நான் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. என்ன செய்யலாம் என்பதை அன்பர்களே சொல்லுங்கள்.  

இந்த இடத்தில் ஒன்றை மட்டும் சொல்வேன்: ‘ஆளுநர் உரை’யில் பொதுத்தேர்வு(நீட்டு) தொடர்பாக வெளியிடப்பட்டிருப்பதுதான் மாநில அரசின் கொள்கை அறிவிப்பு என்றால், அது செய்வதறியாத் தவிப்பைத்தான் காட்டுகிறது.

‘ஆளுநர் உரை’யின் மற்ற சில முகன்மைக் கூறுகளை நாளை ஊடுநோக்குவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 72

வெள்ளி, 19 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)

 




 (தோழர் தியாகு எழுதுகிறார் 104 : போக்கி – தொடர்ச்சி)

 “வீழ்வது தமிழாக இருப்பினும்…?

இனிய அன்பர்களே!

ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனமான சொல்லும் செயலும் கிளறி விட்டுள்ள சிந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டரசின் இறைமைத் தகுநிலை தொடர்பானது. ஒவ்வோராண்டும் சட்டப் பேரவையின் முதல் அமர்வில் ஆளுநர் வாசிக்கும் உரை என்பது மாநில அரசின் கொள்கை அறிவிப்பாக இருப்பதுதான் மரபு. இதில் ஆளுநரின் சொந்தக் கருத்துக்கு இடமில்லை. மாநில அரசு எழுதிக் கொடுக்கும் உரையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அந்த உரையை அப்படியே படிக்க விருப்பமில்லை என்றால் அவர் பதவி விலகிக் கொள்ள உரிமை உண்டு.

இதே ஆர்.என். இரவி சென்ற ஆண்டு என்ன செய்தார்? மாநில அரசு எழுதிக் கொடுத்ததைத்தான் படித்தார். காட்டாக, பொதுத்தேர்வு(நீட்டு) தொடர்பாக மாநில அரசின் நிலைப்பாடுதான் – அது ஆளுநரின் சொந்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறானது என்றாலும் – உரையில் இடம்பெற்றது.

எனவே இந்த முறை சிலவற்றை விட்டும் சிலவற்றைச் சேர்த்தும் அவர் படித்தமைக்குச் சொல்லப்படும் நியாயங்கள் எவையும் ஏற்புடையவை அல்ல.

ஆர்.என். இரவி ஒவ்வொன்றையும் தன்னிச்சையாகவே செய்கிறார், மோதி அமித்துசா தலைமைக்கு இதில் தொடர்பில்லை எனபதும் நம்பும் படியாக இல்லை. அவரின் நடவடிக்கைகள் யாவும் ஆர்எசுஎசு–பாசக செயல்நிரலின் படியானவையே என்பதிலும் ஐயமில்லை.

ஆர்.என். இரவியையும் அவரது அடாவடித்தனத்தையும் ஒரு கணம் மறந்து விட்டு அவர் அப்படியே வாசித்திருக்க வேண்டிய அந்த உரையை எடுத்துக் கொண்டால் அதுதான் இப்போதுள்ளவாறு மாநில அரசின் கொள்கை அறிவிப்பாகும். ஆளுநர் யார்? என்பதை மட்டுமல்ல, முதலமைச்சர் யார்? என்பதையும் மறந்து விட்டு இந்தக் கொள்கை அறிவிப்பை நாம் சீர்தூக்கிப் பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் 49 பக்கம் கொண்ட இந்த ‘ஆளுநர் உரை’யின் முதல் சில பத்திகள் மாநில அரசின் பொதுவான வளர்ச்சிச் சாதனைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சரின் ஆற்றல்மிகு தலைமையைப் போற்றுகின்றன. பொங்கலுக்கு 2,429 கோடி உருவாய் செலவில் அரிசிக்கான பங்கீட்டு அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு வழங்குவதை நான்காம் பத்தி குறிப்பிடுகிறது. மாண்டூசு புயல், வடகிழக்குப் பருவமழைச் சேதங்களிலிருந்து மக்களைக் காக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பட்டியலிடப்படுகின்றன.

இதற்குப் பிறகுதான் கொள்கைச் சிக்கல்களில் தமிழக அரசின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்படுகிறது. “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற கலைஞர் கருணாநிதியின் முழக்கம் நினைவுகூரப்பட்டு, தமிழ்மொழிக்கு உரிமையுள்ள இடம் கிடைக்கச் செய்ய அரசு அனைத்து முயற்சிகளும் செய்வதாக உறுதி சொல்லப்படுகிறது. மாநில மொழிகளின் நலன்களுக்கு எதிரான நடைபடிகளை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றிய செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தத் தீர்மானத்துக்கு என்ன மதிப்பு? மதிப்பில்லை என்றால் என்ன காரணம்? மாநிலச் சட்டமன்றம் இயற்றும் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கச் செய்ய மாநில அரசின் முயற்சிகள் என்ன? என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழிகளாக்கத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று மட்டும் சொல்லப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டுமானால் அரசமைப்புச் சட்டம் (பகுதி 17) திருத்தப்பட வேண்டும் என்று பொருள். வேறு எந்த வழியிலும் மாநில மொழிகளை ஆட்சிமொழிகளாக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உரியாவாறு திருத்த வேண்டும் என்று மாநில அரசு இதற்கு முன் கோரியுள்ளதா? இனிமேல் கோரப் போகிறதா? வலியுறுத்துதல் என்பதன் செயல்சார் பொருள் என்ன?

நடுவணரசில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சிமொழிகளாக்க வலியுறுத்துவது இருக்கட்டும், தமிழ்நாட்டில் மாநில அரசில் தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாக்க இந்த அரசு எடுத்துள்ள நடைபடிகள் என்ன?

மொழிச் சிக்கல் என்பது ஆட்சிமொழிச் சிக்கல் மட்டுமன்று. கல்வி மொழி, பயிற்றுமொழி, பயில்மொழி ஆகிய வகைகளில் தமிழுக்குரிய இடம் கிடைத்துள்ளதா? இருந்த இடமும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் மெய். நடப்பது பெரிய கொடுமை. தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அளவில் கூட தமிழ்க் கல்வி மொழியைக் காக்கவும் மீட்கவும் தமிழ்நாடு அரசு எதுவும் செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு அரசு ஒன்று செய்யட்டும்; தமிழ்நாட்டுக்  கல்வித் துறையில் தமிழை அழிப்பதே எங்கள் கொள்கை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு இப்போது செய்வதையே தொடர்ந்து செய்யட்டும். தமிழை அழித்தால்தான் சமுகநீதி பிழைக்கும் என்று மு.க. தாலின் நம்புவாராயின் அதை அறிவித்து நாடுதழுவிய விவாதத்துக்கு முன்வரும் படி அறைகூவி அழைக்கிறோம்.

புலம்பெயர் உலகத் தமிழர்களுக்குத் தமிழ் கற்றுத் தரவும், தமிழ்ப் பண்பாடு காக்கவும் தமிழக அரசு “தமிழ்ப் பரப்புரைக் கழகம்” அமைத்திருப்பதாகவும், சனவரி 12ஆம் நாளை ‘வெளிநாடுவாழ் தமிழர் நாள்’ என அறிவித்திருப்பதாகவும் ‘ஆளுநர் உரை’ சொல்கிறது. நன்று, புலம்வாழ் தமிழ்க் குழந்தைகளின் தமிழ்க் கல்வியை அழித்து விட்டுப் புலம்பெயர் தமிழருக்குத் தமிழ் கற்றுத் தருவதாகச் சொல்வது கொடிய நகைச்சுவையாகத் தெரியவில்லையா?

தமிழ்நாட்டில் தமிழ்க் கல்வியைக் காயப் போட்ட பின் புலம்பெயர் தமிழர்கள் தமிழ் கற்க எங்கிருந்து ஊக்கம் வரும்? தமிழர் தாயகத்தில் தமிழ் பிழைக்காமல் புலம்பெயர் உலகத்தில் தமிழ் வாழ்வதெப்படி?

எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். அமெரிக்காவில் சிக்காகோவில் மருத்துவராக இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் தன் மகளைத் தமிழ் பேசும் படியும் தமிழ் கற்கும் படியும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அந்தப் பெண் அமெரிக்காவிலேயே பிறந்து அங்கேயே கல்வி கற்றவர். ஒரு முறை மருத்துவர் மகளைச் சென்னைக்கு அழைத்து வந்து ஊரைச் சுற்றிக் காண்பித்தார். மகள் சொன்னார்:

“இது வரை அமெரிக்காவில் தமிழ் தேவையில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன், தமிழ்நாட்டிலும் தமிழ் தேவையில்லை என்று.

வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் கல்வி கற்க, மருத்துவம் செய்து கொள்ள, தொழில் தொடங்க, அரசுக்கு விண்ணப்பிக்க, கொடுக்கல் வாங்கல், கொள்வினை கொடுப்பினை எதற்கும் தமிழ் தேவையில்லை என்றால் அவர்கள் தமிழ் கற்க வேண்டிய ஊக்கம் எப்படி வரும்?

இந்திய அரசில் தமிழ் ஆட்சிமொழி இல்லை, தமிழக அரசிலும் முழு ஆட்சி மொழி இல்லை, இந்திய உச்ச நீதிமன்றத்திலும், தமிழ் நாட்டில் இருக்கும் ‘மெட்ராசு உயர் நீதிமன்றத்திலும்’ தமிழுக்கு இடமில்லை என்றால், வெளிநாடு வாழ் தமிழர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?

அடிமைகள் பேசும் அடிமைத் தமிழுக்கு யார் தருவார் மதிப்பு?

‘வெளிநாடுவாழ் தமிழர் என்பது முதலீட்டாளர்களுக்கான மங்கல வழக்குதானோ? தமிழுறவு என்பது வெறும் காசுபண உறவுதானோ?

பாரதிய-பார்ப்பனிய-பாசிச ஆற்றல்களை எதிர்த்து நிற்க திமுக ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க நாம் தயங்கவில்லை. இதன் பொருள் திமுக ஆட்சியானது தமிழ்க் கல்வியை அழிக்கும் போது நாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது  தலைமைக்கு  எடுத்துக்காட்ட வேண்டும். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்” என்ற நிலை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டு விடக் கூடாதே என்று கவலைப்படுகிறோம்.

திமுகவின் பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்பு நிலைப்பாடு சரியானது. நீட் ஒழிய வேண்டும் என்பதற்காக அது எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், ஆர்எஸ்எஸ் ஆளுநரும் அவருடைய ‘ரிங் மாஸ்டர்’களும் போட்டுவரும் முட்டுக்கட்டையை வெல்வது எப்படி? இவ்வகையில் மாநில அரசின் கொள்கை அறிவிப்பு என்ற முறையில் ‘ஆளுநர் உரை’ காட்டும் வழி என்ன? நாளை பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி 
மடல் 71

வியாழன், 18 மே, 2023

 

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 46,47 & 48 : இணைய அரங்கம்: 21.05.2023




செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழே விழி!                                  தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 46, 47  & 48 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: வைகாசி 07 , 2054 / ஞாயிறு / 21.05.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

போராளி முனைவர் இலக்குமி மீனாட்சி சுந்தரம், சிங்கப்பூர்

கபிலர் விருதாளர் முனைவர் இலலிதா சுந்தரம்

நனி சிறந்த ஆசிரியர்  முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை, மலேசியா

நிறைவுரை : தோழர் தியாகு

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

நன்றியுரை : தமிழாசிரியர் (உ)ரூபி

குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?

 




குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?

தமிழ்நெஞ்சங்களுக்கு,

வணக்கம்.

தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம்

நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த

 2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல்

கடந்த மூன்றாண்டுகளாக 

இலவச இணையத் திங்களிருமுறையாகத்

தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது.

எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ

எவ்வகையான பொருளிதவியோ வேண்டா.

தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும்

கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால்

உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம்.

பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறள்நெறி

குறள் முழக்கம்

குறள் விருந்து

 Thirukkural express

அனைத்து மின்னிதழ்  களுக்குமான தளம் :

www.Kuralvirtual.com

அல்லது பகிரியில் பின்வரும் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

9791861662

அல்லது பின் வரும் மின்வரி மூலம் கேட்டுப் பெறலாம்.

anjal@kuralvirtual.com

எதற்கும் கட்டணமில்லை! கட்டணமில்லை! கட்டணமில்லை!

அன்புடன்,

மறைமலை இலக்குவனார்

உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம்



தோழர் தியாகு எழுதுகிறார் 104: நலக்கேடு நல்காப் போக்கி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி)

நலக்கேடு நல்காப் போக்கி

இனிய அன்பர்களே!

பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம்.

காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது இவ்வளவு பெரிய சிக்கலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் போகியால் காற்று மாசடைவது உண்மை. போகியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமா? பழையன போக்க வேறு வழி இல்லையா? குறிப்பாக அறிவியலர், சூழலியலர் இதற்கு மாற்றுச் சொல்ல வேண்டும்.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு எல்லாம் ஏற்படுகின்றன. காசைக் கரியாக்குவதால் ‘பொருளியல் மாசும்’ தாக்குகிறது. ‘சத்தம் இல்லாத தீபாவளி’ பற்றிப் பாட்டுக்காரர்களும் எழுதுகிறார்கள். ஆனால் இந்தக் கேடு தொடர்கிறது. தீபாவளிப் பண்டிகையால் சூழலுக்கும் கேடு, வயிற்றுக்கும் கேடு, காசுக்கும் கேடு! தீபாவளிக்குச் சொல்லப்படும் புராணக் கதையால் அறிவுக்கும் கேடு! ஆனால் பொங்கல் அப்படியில்லை என்கிறோம்! பொங்கல், கரும்பு, வெல்லம், வாழை, மஞ்சள் எல்லாமே நலந்தரும் ஊட்டக் கூறுகள்! ஆனால் இந்தப் போகிப் பண்டிகை கொண்டாடப்படும் முறை (குப்பையை எரித்து மாசுண்டாக்கல்) பொங்கலுக்குக் கெட்ட பெயருண்டாக்குவதாக உள்ளது. போகி கொண்டாடுவோம்! ஆனால் காற்றை மாசுபடுத்தாமல் கொண்டாடுவோம்! அதற்கு என்ன வழி என்று நம் சூழலியலர்கள் அரசுக்கும் மக்களுக்கும் சொல்ல வேண்டும். பூவுலகின் நண்பர்கள் சொல்ல வேண்டும். சுந்தரராசன், வெற்றிச்செல்வன், பிரபாகரன் எல்லாருமே தாழி அன்பர்கள்தாம். அவர்களில் ஒருவர் சொல்லட்டும்., அவர்கள் சொல்லியிருந்து, நான் கவனிக்கத் தவறியிருந்தால் கவனப்படுத்துங்கள். தொடர்ந்து நமக்கு சூழலியல் வகுப்புகள் நடத்திய  தோழர் சமந்தா நமக்கு வழிகாட்டலாம். உங்களில் யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறோம்.

இருக்கட்டும். போக்கி நாள் வாழ்த்து! போக்க வேண்டிய பழையனவற்றில் அறியாமை, அச்சம், கொள்கையற்ற அரசியல், நானென்னும் அகந்தை, தன்னல வேட்கை, தனிமனித வழிபாடு,   அடிமையுள்ளம், சோம்பல், தான்தோன்றித்தனம், இரசிக மனப்பான்மை. பதவிப் பித்து, கட்டுப்பாடுகளை எதிர்க்கும் அனாட்சியம் [அராசகம்]… இவையும் இன்ன பிறவும் இடம்பெறட்டும். இவற்றைப் போட்டுக் கொளுத்துங்கள்! மாசு ஏதும் விளையாது. உங்களுக்கும் நம் தமிழ்க் குமுகத்துக்கும் நன்மையே விளையும்.

பொங்கல்! நமக்குத் தமிழ்ப் புத்தாண்டு! புத்தாண்டில் புதிய தமிழராய், புதிய மாந்தராய் எழுவோம்!

தாழியின் பொங்கல் வாழ்த்து:

பொங்குக பொங்கல்!

அன்பும் அறிவும் அறமும் பொங்குக!

ஆற்றல் மிகுந்து ஆளுமை பொங்குக!

இனவெறி ஒழிந்து இனநலம் பொங்குக!

ஈகையின்பம் ஈகப்பேரின்பம் பொங்குக!

உயிரினுமினிய  உரிமைகள் பொங்குக!

ஊருக்குழைக்கும் ஊக்கம் பொங்குக!

எல்லார்க்கும் கல்வி உரிமை பொங்குக!

ஏன் எனும் கேள்வி எழுந்து பொங்குக!

ஐங்குணமேவிய அரசியல் பொங்குக!

ஒற்றுமையுறுதிப் போர்க்குணப் பண்புகள் பொங்குக!   

ஓர்மை மீட்கத் தமிழினம் பொங்குக!

ஔவியம் பேசா உறவுகள் பொங்குக! பொங்குக!

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 69

ஆசிரியர் குறிப்பு; போக்கி குறித்து போக்கியின்பொழுதுதான் எண்ண வேண்டுமா?