வியாழன், 7 ஆகஸ்ட், 2025

தமிழ்க் காப்புக் கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 138 & 139; நூலரங்கம்

 




செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   

 (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௧ – 411)

 தமிழே விழி!                                                                தமிழா விழி!

இணைய அரங்கம்:

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆடி 25, 2056  ஞாயிறு 10.08.2025  காலை 10.00 மணி

இயக்குநர், இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு,

திருவரங்கம், திருச்சிராப்பள்ளி 620 006

அமைப்பாளர், தமிழ்நாடு திருவள்ளுவர் கழகம்

வழக்கறிஞர் க. இராசவேலர் செண்பகவல்லி மனைவி செண்பகவல்லி குறித்து 16 கவிதை நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் குறித்து ஆய்வுரை

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, இலக்குவனார் திருவள்ளுவன்

 




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –5 தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!  – 6

இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும்’ என உள்ளது.

 எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா.

 ‘ஆவது’ என எழுத வேண்டியதுபோல் ‘ஆம்’ என்றே எழுத வேண்டும்.

 8-ஆம் நாள்

 10-ஆம் நாள் என்றாவது

 எட்டாவது நாள்

 பத்தாவது நாள்

 என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும்.

‘பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்’ என இக்கோப்பில் உள்ளது. ‘பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும்‘ என வர வேண்டும்.

நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வின் பின்னும் வல்லினம் மிகும். அஃதாவது  ‘கு’ என்னும் 4 ஆம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லின எழுத்து தொடங்கும் சொல் வந்தாலும் வல்லின மெய்யெழுத்துக் கூடுதலாக வரும்.

சான்றாக, ‘மதுரை’ என்னும் சொல்லுடன் ‘கு’ உருபு சேரும் பொழுது மதுரைக்கு என்றாகிறது.

மதுரைக்கு + கிடைத்தது = மதுரைக்குக் கிடைத்தது.

மதுரைக்கு + செல் = மதுரைக்குச் செல்.

மதுரைக்கு + தா = மதுரைக்குத் தா

மதுரைக்கு + பெருமை = மதுரைக்குப் பெருமை

என வரும்.

இவ்வாறு வரக்கூடிய இடங்களைத் தெரிந்து சரியாக எழுதி னாலேயே  எல்லா இடங்களிலும் சரியாக எழுதலாம்.

சான்றுகள் சில:

  1. பணிமனைக்குச் செல்ல வேண்டும்.
  2. மாவட்ட ஆட்சியகத்திற்குப் போய் வந்தேன்.
  3. மதுரைக்குத் திரண்டு வருக.    
  4. குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும்.
  5. பணத்திற்குக் கணக்கு வேண்டும்.    
  6. தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க   வேண்டும்.
  7. நிரந்தப்படுத்துவதற்குத் தகுந்த சூழல்  . . .
  8. அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.
  9. அவருக்குப் பணியாளருடனான உறவு நன்றாக உள்ளது.
  10. வாங்குவதற்குக் கருதப்படும்.
  11. அரசுக்குப் பொருந்துகிறது.
  12. அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும்.
  13. நியமிப்பதற்குப் பொருத்தமானவர்.
  14. நியமனம் செய்யப் பெறுவதற்குப் பொருத்தமானவர்.
  15. குறியளவுக்கும் குறைவு.
  16. இலக்கிற்குக் குறைவு.
  17. அலுவலருக்குப் பணிந்தனுப்புக.
  18. பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுன்றனவா?
  19. நீண்ட காலங்களுக்குத் தேவையற்றது.    

இவ்வாறு செய்திகளில் 4 ஆம் வேற்றுமை உருபு இடம் பெறும் சில தொடர்கள் பின்வருமாறு அமையும் :-

  1. செயலகத்திற்குப் புதிய ஊழியர்கள் …..
  2. அரசிற்குப் பொதுமக்கள் வேண்டுகோள் …
  3. ஊழியர்களுக்குப் பதிலாக  (மாற்றாக)
  4. நீக்கப்பட்டவர்களுக்குப் பதில்  (மாற்று)
  5. அலுவலகத்திற்குப் புதிய ஊழியர்….
  6. பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  7. கோவிலுக்குச் சென்று …  
  8. ஆகியோருக்குக் கொடுத்தார்.
  9. அணைக்குச் சென்று ….
  10. வெளிநாடுகளுக்குப் பெருமளவு….
  11. விவசாயத்திற்குத் தேவையான…
  12. முன்னேற்றத்திற்குத் தடை.
  13. ஈரானியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.  
  14. பத்திரிகைகளுக்குச் செய்தி சேகரித்தவர்.
  15. அரசு வேலைக்குத் தொடர்ந்து தேர்வு
  16. கூட்டத்திற்குப் பின்னர்
  17. வீரர்களுக்குத் தீவிரப்பயிற்சி    
  18. பேச்சு(வார்த்தை)க்குப் பின்னர்
  19. இராமர் கோயில் கட்டுவதற்குச் சட்ட…
  20. செய்தியாளர்களுக்குப் பேட்டி…
  21. செயல் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு…  
  22. கட்சிகளுக்குப் பங்கு …
  23. நாமக்கல் நகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.    
  24. அவர் 20 மாவட்டங்களுக்குச் சென்று …
  25. இரகசிய இடத்திற்குச் சென்று….
  26. வீட்டிற்குச் செல்கையில்
  27. வந்தவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு…   
  28. போராட்டத்திற்குத் தூண்டிய …
  29. ரூபாய் 52 கோடி அளவிற்குச் சலுகை
  30. அவருக்குத் தொடர்பு உண்டா?
  31. பாசனத்திற்குத் தண்ணீர்..
  32. இடைவேளைக்குப் பிறகு…
  33. சிம்மராசிக்குக் குரு இடம்பெயர்தல்
  34. அவர்களுக்குப் போதிய வசதி …..
  35. …ஆலங்குடிக்குச் சிறப்பு.
  36. காவல்துறையினருக்குத் தகவல்…
  37. இதற்குக் கண்டனம்….
  38. நாமக்கல் மாவட்டத்திற்குச் செல்கிறார்.
  39. கடலுக்குச் சென்றனர்.    
  40. பயணிகளுக்குப் புதியது.

இறையாண்மை என்றால் இதுதான் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்


(
ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி)


  “தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் . . .  இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது என்றும்இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது. . . நமக்கு உயர்வு தரும் நமது பழைய வரலாற்றை மறைத்து விட்டு, மறந்து விட்டு நாம் எதற்காக வாழ வேண்டுமோ? வரலாறு மறந்த வாழ்வு வரலாற்றில் இடம் பெறாது என்பது உலகம் அறிந்த உண்மை” என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே தெரிவித்த உண்மையும் கவலையும் எச்சரிக்கையும் இன்றும் மாறாமல் இருக்கும் காரணம் நமக்கென  இறையாண்மையுள்ள அரசு அமையாததுதான். பணக்குறியீட்டில் தேவநாகரி எழுத்து புகுந்துள்ளது. கணிணி வழி கிரந்தம் புகுந்து தமிழ் எழுத்துகளை அழிக்கப் பார்க்கின்றது.  இந்திய இறையாண்மையின் எழுத்தழிப்பு முயற்சிகள் குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

  “எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது. . . . ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். . . . .இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? . . . . கூட்டரசு  என்று கூறிக்கொண்டு அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா வல்லாண்மை நெறியாகும்.”

  தமிழக அரசிற்கு இறையாண்மை  இல்லாத வரை இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு அறம் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு தனி இறையாண்மை கோருவது என்பது பிரிவினை ஆகாதா எனச் சிலர் எண்ணலாம்.  தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு. தமிழர்களுக்கென்று இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு. கூட்டாட்சி (federation govt.) முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும். கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும், ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின் குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும். இதன்படி  நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின் குடிமக்களாகவும் இருப்போம். இந்திய அரசியல் யாப்பு அதற்கு இடம் தருமா என்று ஐயம் வரலாம். நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் யாப்பு இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக் கூடாது. என்றாலும் தற்போதைய அரசியல் யாப்பின்  அடிப்படையிலேயே நமக்கு இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.

 1957 இல் சம்மு-காசுமீருக்கெனத் தனி அரசியல்யாப்பு இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்கள் முதலில் சம்மு-காசுமீர்க் குடிமக்கள்; பின்னர்தான் இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் யாப்பு (அரசமைப்புச் சட்டம்) முகவுரை, சம்மு-காசுமீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த சம்மு-காசுமீர் மாநிலத்தின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழர்க்கு இறையாண்மை நிறைந்த அரசியல் யாப்பு இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப பரதக் கண்டக் கூட்டரசின்  இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின் இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின் இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

  இவற்றால் நாட்டுத்தலைமையின் அதிகார வரம்பைத்தான் இறையாண்மை குறிக்கின்றதே தவிர, வேறு சிறப்பு இல்லை என்பதும் அந்த இறையாண்மை மாட்சிமை மிக்கதாக விளங்க வேண்டும் என்பதையும் செயற்கையாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்திய நிலப் பரப்பு தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என்பதையும் உலகில் தோன்றிய முதல் இனமான தமிழ் இனம் தனியுரிமையுடன் தன்னாட்சி செலுத்தும் வகையில் இறையாண்மையும் இறைமாட்சியும் மிக்க அரசினைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் தற்போது தமிழினத்திற்கு ஏற்பட்டு வரும் அழிவுகளுக்கெல்லாம் அதுவே அருமருந்தாய்த் திகழும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளலாம்.எனவேதமிழ் நிலத்தில் தமிழ் முதன்மை பெறதமிழர் தலைமை பெறதமிழர்க்கான இறையாண்மை அரசு அமையட்டும்!

,

– இலக்குவனார்  திருவள்ளுவன்

ஒருங்கிணைப்பாளர்தமிழ்க்காப்பு அமைப்புகள்

http://naamtamilar.org

நடபு 01.01.2011